அம்மாயி

அம்மாயி
0

அம்மாயி

இந்த உலகத்தில் பேய் இருக்கா இல்லையா? நீங்க பார்த்து இருக்கீங்களா? நல்ல சக்தி இருந்தா தீய சக்தியும் இருக்கும் தானே? அப்போ பேய் இருக்குன்னு தான் சொல்லணும். அதிலும் நல்ல பேய், கெட்ட பேய் எல்லாம் இருக்குன்னு சொல்றாங்க.

இது நான் எங்க ஊருக்கு போன அப்போ என் மாமா வீட்டில் நடந்தது. இன்னும் பயம் இருக்கு அதை நினைத்து. தனியா ஒரு நாளும் நான் அங்க இருக்க மாட்டேன். சரியா கதையை சொல்றேன் நீங்களும் கேளுங்க, அட இது கதை தானே அலட்சியமா கேட்காதீங்க. இது உண்மையான கதை.

எங்க ஊரு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் இருக்கும் சோரனுர். அங்கு தான் என் அம்மா, மாமா, அத்தை என அனைவரும் பிறந்து வளர்ந்தது. அப்போ எனக்கு பதினாறு வயது. எப்பொழுது அங்கு சென்றாலும் நான்கு நாளில் திரும்பி விடுவோம். வருட இறுதியில் நடக்கும் கோவில் பூஜை இரவு பனிரெண்டு மணிக்கு (வெளிச்சப்பாடு)
ஆடுவார்கள் அங்கு அதை காண செல்வோம்.

பின் புது வருட கொண்டாட்டம் முடித்து கிளம்பி வந்து விடுவோம். அப்போது நான் பத்தாம் வகுப்பு என் அக்கா பனிரெண்டாம் வகுப்பும் முடித்து இருந்தோம். படித்து களைத்து போன எங்களுக்கு எங்களின் மாமா வீடு சொர்க்கம் போல, அங்கு செல்லலாம் என்று கிளம்பி ஊருக்கும் வந்துவிட்டோம்.

இரண்டு மாதம் அங்கு தான். என் மாமன் மகன்கள் மற்றும் என் அத்தை பெண்களும் அங்கு தான். வீடே ஒரே சத்தமும் விளையாட்டும் தான். குளம், கிணறு, என் மாமாவின் வயல் என்று சுற்றி திரிவோம். மாலை வாசலில் கபடி, கோகோ என விளையாட்டு.

என் அத்தை இருவரும் பெண் பிள்ளைகள் எங்களை வெளியில் அதிக நேரம் இருக்க கூடாது என்று கூறி உள்ளனர். அங்கு வழி எல்லாம் காடு தான். வழி மாறி போனால் பின் உங்களை தேடி அலைய வேண்டும். உன் அம்மாயி இருந்தால் இதற்கு எல்லாம் உனக்கு அனுமதி கிடைக்காது என்று கூறுவார்.

நாங்கள் அங்கு சென்று ஒரு மாதம் முடிந்து இருந்த வேளை. ஒருநாள் படம் பார்க்க சென்றோம். எனக்கு படத்தின் பெயர் சரியாக நினைவு இல்லை. ஆனால் அது மாமுட்டி படம். தம்பிகளுக்காக அண்ணன் உழைத்து காப்பாற்றுவார், அவரின் அருமை புரியாது அவர்கள் தம்பி செய்யும் தப்பும் அதற்கு அவரின் அன்பான வழிகாட்டுதலும் தான் படத்தின் கதை. படம் முடிந்து வீடு வந்து சேர மணி எழு. அத்தைக்கு மிகவும் கோவம். பின் எங்களை சாப்பிட சொல்லி தூங்க வைத்தார்.

அன்று இரவில் இருந்து தான் ஆரம்பம். மாடியில் யாரோ நடப்பது போல சத்தம். கேரளா இல்லங்களில் அதிகம் மர வேலைப்பாடுகள் தான். மாடிபடிகள் எல்லாம் மரத்தில் செய்த பலகைகள் தான். நானும் என் அக்காவும் சத்தம் கேட்டு அத்தையை எழுப்ப எல்லோருக்கும் உறக்கம். என் அத்தை பெண் மஞ்சு மட்டும் விழித்து இருந்தாள். அவளுக்கு மாடியில் இருந்து வந்த அதே சத்தம் கேட்டு பயம். மூவரும் பயந்து கொண்டு படுத்து இருந்தோம். அப்போது யாரோ மாடி படிகளில் இறங்கி வருவது போல சத்தம். நாங்கள் மூவரும் கண் மூடி படுத்து கொண்டோம். யாரோ அறையின் வாசல் வரை வந்து விட்டு திரும்பி சென்று விட்டனர்.

பின் எப்போது தூங்கினோம் என்று நினைவு இல்லை. அடுத்த நாள் காலை மஞ்சு எழுப்பி விட காலை கடன் முடித்து, குளித்து, சாப்பிட்டு வாசலில் உள்ள மாங்காய் மரத்தில் காய்களை பறித்து கொண்டு இருந்தோம். என் மாமா வந்தார். அவருக்கு கோவையில் வேலை வார இறுதியில் தான் வருவார். அவரோடு பேசி விட்டு, படத்திற்கு சென்று வந்ததை பற்றி கூறினோம்.

என் மாமா மகன் விஷ்ணு படம் அருமை. மீண்டும் பார்க்க வேண்டும் என்று கூற, அவனை கூட்டி செல்வதாக கூறிவிட்டு ஓய்வு எடுக்க சென்றார். நாங்கள் மதியம் வரை மாங்காய்களை சுத்தம் செய்து அறுத்து கொடுத்து விட்டு, அத்தைகள் உடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தோம். அப்போது அத்தை மாடிக்கு சென்று சில பத்திரம் எடுத்து வருவோம் என்று கூறினார். எங்களுக்கு பயம் பிடித்து கொண்டது.

அத்தை எங்களை உடன் அழைக்க நாங்களும் வேறு வழி இன்றி மேலே சென்றோம். படியில் கால் வைக்க இரவு கேட்டது போல அதே சத்தம். எனக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. மேலே செல்ல செல்ல அதே சத்தம். மாடிக்கு சென்றால் மூன்று அறைகள் இருந்தது. சுத்தமாக நல்ல வெளிச்சம் கூட இருந்தது. அத்தை மேலே பத்திரம் எடுக்க, நாங்கள் பக்கத்து அறைக்கு சென்றோம். அங்கு ஒரு கட்டில் மட்டும் இருந்தது. அடுத்த அறையில் பலகைகள். எங்களின் வழக்கப்படி வீட்டில் பெரியவர்கள் இறந்தால் அவர்களுக்கு ( இரண்டு பக்கம் கால் வைத்து) பலகை போல செய்து அவர்களை நினைத்து வழிபடுவோம். அங்கே ஆறு பலகைகள் இருந்தது. அதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தோம்.

தீடீர் என எங்கள் அத்தை, எங்களை அழைத்தார். நாங்கள் அறை விட்டு வெளியே வர, அத்தை மாடியில் இல்லை. பயந்து கீழே வந்து பார்த்தால் அங்கு நின்று கொண்டு இருந்தார். கீழே வாங்க என்று கூறினார். மூவரும் அவசரமாக கீழே போனோம். ஆனாலும் அந்த கட்டில் இருந்த அறையில் யாரோ இருப்பதாக உளுணர்வுகள் சொல்லியது.

மாமாவுடன் பேசி மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் தூங்கி எழுந்து பின் மாலை வேலைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு டிவி பார்த்தோம். விஷ்ணுவும் மாமாவும் இரவு காட்சிக்கு படத்திற்கு சென்றனர். திரும்பி வர ஒரு மணி ஆகும் சாப்பிட்டு தூங்குங்கள் என்று கூறி விட்டு சென்றார்.

நாங்களும் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டோம். இரவு ஒன்று முப்பது இருக்கும் விஷ்ணு வாசலில் அலறும் சத்தம். சத்தம் கேட்டு பயந்து நாங்கள் எழுந்து வெளியில் வர அவன் என் மாமாவை கட்டி கொண்டு மயங்கி விழுந்தான்.

எல்லோரும் பயந்து என்ன ஆனது என்று கேட்க, மாமா எங்க அம்மா வாசலில் உக்காந்து இருந்தாங்க என்று கூற, அப்போது தான் விஷயம் புரிந்தது. அவரை பார்த்து திட்டி இருக்கிறார். பெண் பிள்ளைகளை வீட்டில் ஆண் துணை இல்லாமல் விட்டு போய் இருக்கியே, தப்பு இல்லையா? அதும் வர நேரமா இது? என்று மாடிப்படியில் அமர்ந்து கொண்டு கேட்டு இருக்கிறார். வெள்ளை வேட்டி கட்டி மேல வெள்ளை முண்டு (துண்டு) அணிந்து, தலை விரித்து மாடிப்படியில் அமர்ந்து பேசவும். விஷ்ணு சைக்கிள் நிறுத்தி வந்து பார்க்க அவனுக்கு மயக்கம் வந்துவிட்டது. அனைவரும் வீட்டின் உள்ளே சென்றோம். விஷ்ணு அரை மணி நேரம் கழித்து எழுந்தான். மீண்டும் அழுது அழுது தூங்கி போனான். வீட்டில் யாருக்கும் உறக்கம் இல்லை.

காலையில் வீட்டில் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் காய்ச்சல். மாடிப்படியில் அவர் அமர்ந்து இருந்த இடம் லேசாய் குழி விழுந்து இருந்தது. அது இன்னும் பயமாக இருந்தது. வீட்டிற்கு கோவிலில் இருந்து நம்பூதிரி வந்தார். அம்மாயி காவல் தெய்வமாக வீட்டில் இருப்பதாக கூறினார். அன்றும் வாசலில் அமர்ந்து எங்கள் அனைவரையும் காவல் இருந்து காத்து இருக்கிறார் என்று கூறினார். வீட்டில் அவர் இனி பிள்ளைகள் கண்ணுக்கு தெரியக்கூடாது என்று பூஜை செய்தனர்.

இன்று அந்த வீடு இல்லை. அதை இடித்து மாற்றி விட்டனர். எங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதால், அதை கோவிலாக மாற்றி விட்டனர். எங்கள் புது வீட்டிலும் பலகைகள் உள்ள அறை உள்ளது. அங்கு மட்டும் எப்போதும் சுத்தமாக, வெளிச்சமாக இருக்கும் காரணம் தெரியாது.

ஆனால் எங்கள் அம்மாயி எங்களோடு தான் இருக்கிறார். நல்ல ஆன்மாவாக எங்களை காத்து கொண்டு இருக்கிறார். அவரின் அன்பு பிரமிக்க கூடியது தான்.

பேயில் நல்ல பேய்யும் இருக்கு மக்களே, இவ்வளவு நேரம் பொறுமையாய் படித்த அனைவருக்கும் நன்றி.

  • கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:
4 Likes