அரக்கனோ அழகனோ 01

அரக்கனோ அழகனோ 01
0

அழகன் 1
எல்லாம் எனக்கு தெரியும்
என்று ஆணவமாய்
அலைந்தேன் நானடி…
என்னை எனக்கே புதிதாய்
தெரியவைத்தாய் நீயடி…

அழுத்தமான காலடியுடன் ஆறடி உயரத்தில் அங்கு இருந்தவர்களை ஒரு அலட்சிய பார்வை பார்த்தபடி, அவர்கள் சொன்ன காலை வணக்கத்திற்கு பதில் ஒரு பார்வையை மட்டும் அவர்கள் புறம் செலுத்தி இந்த கோட்டையின் அரசன் நான் என்று அகந்தை செருக்குடன் உள்ளே வந்து கொண்டு இருந்தவனை இமை விலகாது ரசித்து கொண்டு இருந்தனர் அங்கு பணிபுரியும் பெண்கள். இன்றேனும் தன்னை கவனிக்கமாட்டானா என்று ஏக்கம் கலந்த குரலில் காலை வணக்கம் சொன்னவர்களை திரும்பியும் பாராது தன் அறைக்குள் சென்றவன், அந்த சாம்ராஜ்யத்தின் சிம்மாசனமான தனது இருக்கையில் சென்று அமர்ந்தான், அகரன்.

குடும்பத்தில் மூத்த வாரிசு, எதிலும் முதல் உரிமை பெற்றவன் என்று சொல்லாமல் சொல்லும் விதமாய் அகரன் என்று பெயர் சூட்டப்பெற்றவன். பெயருக்கேற்ற படி எதிலும் முதல் இடம் தனக்குரியது என்று தக்கவைத்து கொள்பவன். எல்லாம் எனக்கு தெரியும் என்ற அலட்சியமாய் ஏறி இறங்கிய புருவமும், எதிரில் உள்ளவரின் மனதில் உள்ளதை படிக்கும் கூர்பார்வையுடன், இறுகிய முகமும், அழுத்தமாய் மூட பட்டிருந்த உதடுகளும் அவன் எண்ணத்தின் தீவிரத்தை உணர்த்தின.

தன் முடிவை எதிர்த்து பேசியவன் மீது வந்த கோபத்தை முயன்ற அளவு அடக்கி கொண்டு, “நீ சொல்ல வருவது என்ன இது என்னால் முடியாது என்கின்றாயா?” குரலில் கடுமையுடன் கர்ஜித்தவன் முன் அடுத்த வார்த்தை பேச தயங்கிய கொண்டு இருந்தான், குகன்.

அப்படி சொல்லவில்லை பாஸ் “இதில் உங்கள் வாழ்வும் சம்மந்தபடும்”, என்று தான் நினைத்ததை கூற முடியாமல் திக்கி திணறினான் குகன்.

“என் வாழ்வு பாதிக்கும் அளவிற்க்கு இது பெரிய விசயமாக எனக்கு தெரியவில்லை, இன்னும் இது சம்மந்தமாக ஏதும் செய்யாமல் இருந்தால் தான் என் நிம்மதி பாதிக்கும் என்று உறுதியாய் தோன்றுகின்றது, நீ தயங்குவதை பார்த்தால் அந்த பெண்ணிற்காக பார்கின்றாய் என்று நினைக்கிறேன்”, என்று ஏளனமாய் உதட்டை பிதுக்கியவன், “என்னிடம் பேசும் முன் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து பேச வேண்டும், இல்லை அதற்கு நான் தரும் கடுமையான தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்” என்று இரக்கமற்று கூறினான், அகரன்.

“பாஸ் அன்று ஏதோ கோபத்தில் வார்த்தையை விட்டு விட்டார், அதற்கு தான் அவர் தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளீர்களே உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, யாரும் அவருக்கு எந்த ஆர்டரும் கொடுக்க போவதில்லை, அவர் சக்திக்கு மீறி கடன் வாங்கி செய்த புது தொழிலும் உங்களால் நட்டம் தான் இன்னும் என்ன பாஸ், இப்போது நீங்கள் கொடுத்த தண்டனைக்கே அவர் மீண்டு வருவது சந்தேகம் தான்” என்று மனச்சாட்சியுடன் பாதிக்கப்பட்டவருக்கு பரிந்து பேசிக்கொண்டு இருந்தான் குகன், அகரனின் பர்சனல் செக்ரட்ரி.

“மூச்சு விடவும் முடியாமல் தொல்லை கொடுத்ததும் நிமிர முடியாமல் கடனில் மூழ்கடித்தும் என்ன பலன் இன்னும் அவர் ஆணவம் குறைய வில்லையே, பணம் புகழ் எல்லாம் வரும் போகும் என் அழிவில்லா செல்வம் என் பிள்ளைகள் அவர்களை நல்ல விதமாய் ஒழுக்கமானவர்களாக வளர்த்து உள்ளேன், எந்த நிலையிலும் தடுமாறாமல் தெளிவான முடிவு எடுக்க கற்றுக்கொடுத்து உள்ளேன்” என்று இன்னும் திமிரு குறையாமல் தானே பேசிக்கொண்டு திரிகின்றார் மனிதர்.

“மகேஷ்வரன் அன்று என்னை என்னவெல்லாம் பேசினார் என்று தெரியும் தானே நீயும் அங்கு தானே இருந்தாய், அவர் பேசிய வர்த்தைகளும், அதற்கு பிறரின் ஏளன பார்வையும், கேலி சிரிப்பும் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே என்னை நிலைகுலைய செய்கின்றன, எப்படி பழித்தீர்களாம் என்று தினமும் சிந்தித்தே என் நிம்மதியை இழக்கிறேன், இப்போது கொடுத்த அடி போதாது, இதில் எனக்கு மனநிறைவு ஏற்படவுமில்லை, யாரை சொல்லி என்னை அவமானப்படித்தினாரோ யாரை எண்ணி கர்வம் கொண்டு வாழ்கின்றாரே அவர்களை கொண்டே அவர் மானத்தை கப்பலேற்ற போகிறேன். எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, என் எதிரிக்கு இரு கண்ணும் போக வேண்டும். அவரின் இரு பிள்ளைகளை வைத்தே அவரின் கண்ணை பறிக்கப்போகிறேன் அதற்கு இது தான் வழி, இதை செய்தால் மட்டுமே அவரால் நான் பட்ட அவமானம் அதனால் ஏற்பட்ட மனவேதனையை விட இரு மடங்கு வழியை நான் அவருக்கு திருப்பி கொடுக்க முடியும்”, என்று கொடூர எண்ணங்களுடன் தன் வன்மத்தை நிறைவேற்ற திட்டம் தீட்டி கொண்டு இருந்தான், அகரன்.

“இப்போது அந்த நவயுக கண்ணகி எங்கு இருப்பாள் என்று தெரியுமா? என்ன செய்கிறாள், அவள் பெயர் என்ன என்று விசாரிக்க சொன்னேன் செய்தயா?” என்று அகரன் வினவ, அவன் யாரை குறிப்பிடுகிறான் என்று புரியாமல் குழப்பத்தில் நின்ற குகனை பார்த்து ஒற்றை புருவம் மட்டும் உயர்த்தி அதான் “என்னை போல் பொறுக்கி! பெண்களிடம் இழிவாக நடக்கும் மிருகத்தை கண்டாலே கண்களால் எரிக்கும் கற்புக்கரசி, அந்த மகேஷ்வரன் மகளை தான் கேட்கின்றேன்” என்று ஏளனமாய் கூறினான் அகரன். “அவர்களை அவசியம் பார்க்க வேண்டுமா பாஸ்”, என்று அகரன் திட்டம் அறிந்தும் அவனை தடுக்கும் வழி அறியாமல் புரிந்தும் புரியாதது போல் நடித்தான் குகன்.

“ஹாங் அவசியம் பார்த்தே ஆகவேண்டும், அவள் பார்வையாலேயே என்னை எரித்து விடுவாள் என்றாரே, என்னை எரிக்கும் அளவிற்கு அப்படி என்னதான் அவள் கண்களில் இருக்கிறது என்று நான் பார்க்க வேண்டாமா?”, என்று ஏளனமாய் ஒற்றை புருவம் உயர்த்தி சிரித்தவன், “நீ விசாரித்த வரை அறிந்த அவள் விபரங்கள் கூறுட என்று உத்தரவிட்டான்.

“இப்போது எதற்கு அந்த விபரம் பாஸ்” என்று குகன் கேட்டு அகரனை பார்க்க அவன் கண்களில் இருந்த கோபத்தை கண்டு இல்லை “இந்த நேரம் எதற்கு என்று புரியவில்லை”, என்று தட்டுதடுமாறி வினவினான் குகன். “பல்லாங்குழி விளையாட மடையா” என்று அகரன் சொன்ன விதத்தில் அவன் கோபத்தின் எல்லை அறிய முடிந்தது, குகனால். “பாஸ் அன்று ஏதோ வேகத்தில் கூறிவிட்டார், அதை பெரிதுபடுத்த வேண்டாமே பெண் பாவம் பொல்லாதது என்று என் ஊர் பக்கம் பெரியவர்கள் சொல்லுவார்கள்”, என்று அகரன் கோபத்தை தணிக்கும் வேலையில் இறங்கினான் குகன்.

குகனின் முயற்சி புரிந்துகொண்ட அகரன், “ஆனாஊனா இப்படி ஒரு பழமொழியை சொல்லி எதையும் செய்யவிடாமல் தடுத்துவிடுவார்கள், இந்த உலகத்தில் பெண்கள் மட்டும் தான் பாவப்பட்ட இனமா என்ன?”, என்று கூறி தான் எடுத்த முடிவை இதுபோல எந்த மூடநம்பிக்கையும் மாற்றமுடியாது என்று தெளிவாய் சொன்னவன், “என் மன நிம்மதியை தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை, அதற்கு இதுதான் வழி என்று இவ்வளவு நேரம் உனக்கு விளக்கி கொண்டிருந்தேன், என் திட்டத்தின் முதல் படி அவளை என் வசப்படுத்துவது, அவள் கண்ணுக்கு நான் ஹீரோவாக தெரிய வேண்டும், எனக்காக அவள் தந்தையையும் எதிர்த்து நிற்க வேண்டும். என் மீது ஏற்பட போகும் கண்மூடி தனமான காதல் அவள் தந்தை மீது கொண்ட அன்பையும் மறக்கவைக்க வேண்டும்” என்று அழுத்தமாய் ஆனால் தெளிவாய் இனி ஒருமுறை என்னை எதிர்த்துப்பேசதே என்ற முக பாவனையில் கூறினான் அகரன்.

அகரன் கோபம் குகனை தாக்க, பேசாமடந்தையாய் மௌனிக்கவைத்தது. குகன் அமைதி ஏதோபோல் இருக்க, அகரனே தன் மனஉணர்வுகளை அடக்கிக்கொண்டு நிதானமாய் கூற துவங்கினான். “ஒரு டீல் ஓகே செய்யும் முன் அந்த இடத்தை ஒருமுறை நேரில் சென்றுப்பார்ப்பது என் வழக்கம் என்று உனக்கு தெரியும் தானே, மகேஸ்வரனின் அகந்தை அழிக்கும் என் திட்டத்தின் துடுப்புசீட்டு அவள் கொஞ்சமாவது தேறுமா” என்று பார்க்கவேண்டாமா என்று சிரித்தான் அகரன்.

அகரன் சிரிக்கவும் அப்பாடா, நம் மீது கோபம் குறைந்தது என்று நிம்மதி பிறக்க இதுவரை விசாரித்ததில் தனக்கு தெரிந்த விபரம் கூறத்துவங்கினான் குகன். “இது கல்லூரி முடியும் நேரம் தான் பாஸ் இப்போது சென்றால் பார்க்கலாம்” எனவும், துளியும் தாமதிக்காமல் இருவரும் கிளம்பினர். குகன் காரை ஓட்ட முன் இருக்கையில் அமர்ந்தான் அகரன், சில மணித்தூளி நேர பயணத்தின் பின் ஒரு இடத்தில கார் நிற்க, சிறிது இடைவெளி விட்டு அருகிலிருத்த பேருந்து நிறுத்ததைக்காட்டி “அங்கு நிற்கின்றார்கள் பாஸ்”, எனவும் எட்டி பார்த்த அகரனுக்கு அங்கு பலர் இருப்பது தெரிந்தது, அங்கு ஏதோ பிரச்சனை நடந்துகொண்டிருந்தது போலும் ஒரு பெண் மிகவும் பயந்து அருகில் இருந்த தோழியை இறுக பிடித்து கொண்டு இருந்தாள். பயத்திலிருந்தவள் முகம் மட்டும் தெளிவாய் தெரிய, அகரன் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது.

யாருக்கோ அறை கிடைத்த சத்தம் கேட்டு மீண்டும் எட்டிப்பார்க்க பயந்தவளின் தோழி வம்பு செய்து கொண்டு இருந்தவனுக்கு தான் யார் என்று காட்டிக்கொண்டிருந்தாள், அவளை மறைத்துக்கொண்டு நின்றவர் சற்று விலகவும் அவள் முகம் தெளிவாய் தெரிய அதில் நிறைந்திருந்த கோபமும் எரிக்கும் பார்வையும் அகரனுக்கு வியப்பை தந்தது. கண்களில் கோபம் நிறைந்திருக்க அவள் வார்த்தைகளில் அதன் உக்கிரம் தெரிந்தது “இப்போது என்ன சொன்னாய் தைரியமிருந்தால் மீண்டும் ஒருமுறை சொல்”, என்று எதிரில் இருந்தவனை மிரட்டிக்கொண்டிருந்தவளின் அழகனா கண்கள் மட்டும் அகரன் மனதில் ஆழமாய் பதிந்தது.

“உன்னை காதலிக்கவில்லையென்றால் யாரையும் காதலிக்க முடியாதபடி செய்து விடுவாயோ? என்ன செய்வாய், என்னடா செய்வாய் ஆசிட் ஊற்றுவாயா? இல்லை நடுரோட்டில் கத்தியால் குத்துவாயா சொல்லுடா, பெண்கள் என்றால் உனக்கு அவ்வளவு இளக்காரம்”, என்று கோபமாய் பேசிக்கொண்டே மீண்டும் அடிக்க கை ஓங்கினாள்.

“போதும்டி எல்லோரும் பார்க்கின்றார்கள் விட்டுவிடு” என்று மற்ற தோழிகள் தடுத்தனர், இம்முறை வம்புசெய்தவன் முகத்தில் பயம் தெரிந்தது, கூட்டத்தில் ஒருவர் “ஏன்டா இதுக்கென்றே வருவீர்களா நீங்கள் நல்ல அம்மாவிற்கு” என்று ஏதோ சொல்ல வர, “போதும் சார் இவன் செய்த தவறுக்கு ஏதும் அறியாத இவன் குடும்பத்தை ஏன் அசிங்க படுத்த வேண்டும்”, என்று தடுத்தாள், அந்த அழகனா கண்ணுக்கு சொந்தக்காரி.

வம்புசெய்தவன் கொஞ்சம் தைரியத்தை திரட்டிக்கொண்டு “நான் பெரியஇடம் கொஞ்சம் மரியாதையாக நடந்துகொள், நான் உன்னை ஒன்றும் காதலிப்பதாக கூறவில்லை அவளிடம் தான் சொன்னேன்” என்று பின் நின்றவளை கைக்காட்டி, “எத்தனை நாள் அவள் பின் சுற்றியிருக்கிறேன் என்று தெரியுமா?, காரணம் சொல்லாமல் பிடிக்கவில்லையென்று சொன்னால் அப்படியே விட நான் என்ன கிறுக்கானா?, எனக்கு அவள் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கோபமும் பயமும் கலந்து கூற, அவன் கூறிய வார்த்தையில் கோபம் தனியாதவள் மீண்டும் அவனை முறைத்த படி, மார்பின் குறுக்கே கைகட்டிக்கொண்டு ஏளனமாய் “இந்த மரியாதை போதுமா ஐயா, என்ன பெரிய இடம் ஒரு நாலு கிரவுண்ட் இருக்குமா?”, என்று நக்கலாய் பதில் தந்து விட்டு, “என்ன சொன்னாய் என்னை காதலிப்பதாக கூறவில்லையா, நல்லவேளை பிழைத்தாய் என்னிடம் மட்டும் சொல்லியிருந்தால், இப்போது முழுதாய் என் முன் நின்று பேசிக்கொண்டிருக்கமாட்டாய்” என்று மீண்டும் கை ஓங்க போனவள் கரத்தை ஒருகரம் தடுத்து நிறுத்தியது.

“எதற்கு இவ்வளவு கோபம், நீயே பெரிய டான் என்று தெரியாமல் உன்னிடம் தகராறு செய்து விட்டான் பாவம் பிழைத்து போகட்டும் விட்டுவிடு” என்று கையை பற்றியவன் கூறிட, அவன் முகத்தை நிமிர்ந்துபார்த்து “உன் இனம் என்பதால் வக்காலத்து வாங்குகின்றாயா? ஒரு பெண்ணிடம் வம்பு செய்தால் மீண்டும் அவள் தட்டிக்கேட்பாள் என்று பயம் வந்தால் தான் உன்னை போன்ற ஜென்மங்கள் திருந்தும்” என்று பதிலடி தந்தவள், அவன் பிடி இறுக பற்றியிருந்த இடம் வலிக்கதுவங்கியது, அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள போராடினாள், “முதலில் என் கையை விடு இதுதான் சாக்கு என்று என் கையை பிடிக்கின்றாயா?” எனவும் ஏளனமாக சிரித்து “மகாராணி மனதில் பேரழகி என்று நினைப்போ”,என்று கையை விடுவித்தான் அவன்.

உதவ ஒருவன் முன்வரவும் தப்பித்தால் போதுமென்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தான், அடிவாங்கியவன், அவன் சென்ற வேகத்தை பார்த்து மற்ற தோழிகள் சிரிக்க கனல்பார்வை சொந்தக்காரிக்கு மட்டும் தடுத்தவன் மீது கோபம் வந்தது, பயந்து போய் இருந்தவள் அருகில் சென்று “உனக்கொன்றுமில்லையே?”, என்று அக்கறையாய் வினவி அவள் கைபற்றி ஆறுதலாய் தட்டிக்கொடுத்தவன், “இதுபோல் ஏதாவது சூழ்நிலையில் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் எதிர்கொள்ள தயாராய் இருக்கவேண்டும், எதையும் பயத்துடன் பார்க்கும் போது பூதகரமாய் தான் தெரியும்”, என்று இலவச அறிவுரை கொடுத்தான்.

“நன்றாகயிருக்கின்றது சார், உங்கள் நியாயம்! பயந்து நடுங்குபவள் தைரியமாய் பேச வேண்டும், தைரியமாய் தவறை தட்டிக்கேட்பவள், உங்கள் பார்வைக்கு ரௌடி, டான் உங்கள் லாஜிக் எனக்கு புரியவே இல்லை”, என்று உதட்டை சுளித்து ஏளனமாய் சிரித்தவள் முகத்தை விட்டு பார்வையை விலக்க முடியாமல், அவள் முகம் பார்த்துக்கொண்டே, “என் லாஜிக் ரொம்ப சிம்பிள் மேடம், பயமில்லாமல் இருக்க சொன்னேனே தவிர இப்படி பஜாரி போல் நடுரோட்டில் சண்டைப்போட சொல்லவில்லை”, என்று பதில் தந்துவிட்டு இனியும் இவள் கண் பார்த்து பேசுவது அபாயம் என்று உணர்ந்து, பார்வையை வேறு புறம் திருப்பினான்.

“நான் பஜாரியா” என்று கோபமாய் அவள் துவங்கும் போதே அவர்கள் வழக்கமாய் செல்லும் பேருந்து வரவும், மற்ற தோழிகள் வம்படியாய் இழுத்துச்செல்ல, அவனை பார்த்து முறைத்துக்கொண்டே சென்றவளுக்கு, இருவிரல்கள் மட்டும் கொண்டு ஸ்டைலாய் சல்யூட் செய்தவன், பின் சென்ற பயந்தவளுக்கு கையசைத்துவிட்டு தன் கார் நின்ற இடம் நோக்கி வந்தான் அகரன்.

அகரன் அறிந்த வரை எந்த பெண்ணும் அவனிடம் இப்படி அலட்சியமாய், நடந்து கொண்டது இல்லை, முயன்றளவு அவனுடன் நெருக்கத்தையே ஏற்படுத்த விரும்பும் பெண்களை மட்டும் பார்த்து அறிந்து இருந்தவன், அது போன்ற பெண்களின் செயலில் தான் ஒரு ஆணழகன் என்று கர்வம் கொண்டு இருந்தவன், முதன் முறை ஒருவள் தன்னை அலட்சியப்படுத்தி நடந்து கொண்டதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை, அழகாயிருகின்றோம் என்ற திமிர் என்று எண்ணம் வந்தது. “பார்க்க அழகாய் தான் இருக்கின்றாள், இவளை விட பல அழகனா பெண்களை பார்த்து ரசித்த தனக்கே சிறு சலனம் ஏற்பாடுகின்றது” என்றால் அவளிடம் ஏதோ ஒரு விதமான அழகு உள்ளது என்று மனம் சொல்ல அதை ஆராயும் விதமாய் பஸ்சினுள் ஏறியவளை கண்களால் துளாவினான் அகரன். அதே சமயம் ஜன்னல் ஓரம் சென்று அமர்ந்தவள், தன்னை பஜாரி என்று மோசமாய் விமர்ச்சித்து தப்பு செய்தவனுக்கு வக்காலத்து வாங்கியவனுக்கு சரியான பதிலடி கொடுக்கமுடியாமல் வந்துவிட்டோம் என்று தன் மீதே எழுந்த கோபத்தையும் கண்களில் தேக்கிக்கொண்டு அதற்கு காரணமாய் இருந்தவனை எரிக்கும் பார்வை பார்த்தாள் அவள்.

அவள் பார்வையின் பொருள் கண்டுகொண்டவன், “நல்லவேளை இவள் பின் எவனும் காதல் என்று சுற்றவில்லை, அப்படி மட்டும் எவனுக்காவது இவள் மீது காதல் வந்தால் தன் மரணத்திற்கே அறைக்கூவல்விடும் முதல்ஆள் அந்த முட்டாளாய் தான் இருப்பான்” என்று கண்ணுக்கு தெரியாத அந்த அப்பாவி ஜீவன் மீது இரக்கப்பட்டு கொண்டிருந்தான்,அகரன்.

பின் இருக்கையிலிருந்து புன்னகை செய்தவள் முகத்தில் பயம் விலகி மெல்லிய புன்னகை குடி கொண்டது, அவளின் சிரித்த முகமே அவள் மனதில் அகரன் இடம்பெற்றான் என்று சொல்லாமல் சொல்ல, பதில் புன்னகை சிந்தியவன் “இப்போது அந்த மகேஷ்வரன் பெண்ணுக்கு நான் ஹீரோ ஆகிவிட்டேன் பார்த்தாயா? என் வேலை இவ்வளவு எளிதில் முடியும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை”, என்று தன் செயலை நினைத்தே கர்வம் கொண்டவன், அவளுக்கு முன் இருக்கையில் இருந்து முறைத்து கொண்டு இருந்தவளை பார்த்து, “ இன்னும் முறைத்துக்கொண்டு தான் இருக்கின்றாள் பாரேன் கோவில்பட்டி வீரலட்சுமி” என்று சளைக்காமல் பதிலுக்கு முறைத்தான், அகரன்.

அருகில் குகன் மௌனமாய் குலுங்கி சிரிப்பதைக்கண்டு “என்ன ஒரு நக்கல் சிரிப்பு, நான் அசிங்கப்பட்டதில் இந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம் இந்த மாதம் உனக்கு சம்பளம் கட்டுடா எங்கே இப்போது அந்த மந்தகாசப் புன்னகையை சிந்து பார்ப்போம், ஏன் சிரிப்பை நிறுத்தினாய் குகா , இன்னும் சிரி வாழ்நாள் முழுவதும் என்னிடம் சம்பளம் இல்லாமல் தான் வேலை பார்க்க போகின்றாய்” என்று அகரன் மிரட்டவும், “பாஸ் ப்ளீஸ்… நீங்கள் கோவில்பட்டி வீரலட்சுமி என்றதும் சிரிப்பை அடக்க முடியவில்லை, பாஸ் அவர்கள் பெயர் வீரலட்சுமியும் இல்லை ஊர் கோவில்பட்டியுமில்லை”, என்று அப்பாவியாய் குகன் கூறவும், “பரவாயில்லையே என் துடுப்புசீட்டின் தோழி பெயர் வரை விசாரித்து வைத்து இருக்கின்றாய், பயங்கர வேலைக்காரன் தான் போ” என்றவன் அவள் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், “அந்த ராங்கிகாரி பெயர் என்ன” என்று விசாரித்தான் அகரன்.

“அந்த பெண்ணின் பெயர் சுஹீரா, அவள் தந்தை பெயர் மகேஷ்வரன்” எனவும் முதல் முறை தவறாய் போன தன் செயலை எண்ணி அகரன் முகத்தில் திகைப்பு பரவியது “இவள் தான் சுஹீரா மகேஷ்வரன் மகள் என்றால் முகத்தில் இருந்த அதிர்ச்சி குரலிலும் தெரிய அப்படியென்றால் நான் யாரிடம் ஹீரோவாக வேண்டுமோ அவளிடம் வில்லனாகவும் தேவையே இல்லாத ஒருவளின் ஹீரோவாக மாறிவிட்டேன்” என்று சொல்ல வருகின்றாயா? என்றான்.

“சொல்ல கஷ்டமாய் தான் இருக்கின்றது பாஸ்… ஆனால் உண்மை அது தான், அந்த பயந்த எலி உங்கள் டார்கெட் இல்லை அந்த பாயும் புலி தான் உங்களின் டார்கெட், இன்று உங்கள் கோல் கொஞ்சம் மிஸ்ஸாகி விட்டது”, என்று என்ன தான் முயன்றும் சிரிப்பை அடக்க முடியாமல் குரலில் அது தெரிந்து விடாமல் கவனமாய் கூறினான் குகனின் குரலில் மறைக்க முயன்ற கேலியை கண்டுகொண்ட அகரன், “இதை முதலிலேயே தெளிவாய் சொல்வதற்கு என்ன எல்லாம் நடந்து முடிந்த பின் வந்து விளக்கம் சொல்லிக்கொண்டு நிற்கின்றாயா” என்று அகரன் கோபமாய் துவங்கவும். சாரி பாஸ் “மகேஷ்வரன் சார் அன்று அவர் மகளை பற்றி கொடுத்த பில்ட்அப்பில் உங்களுக்கே தெரிந்து இருக்கும் என்று நினைத்து விட்டேன்” என்று மன்னிப்பு வேண்டிவிட்டு அப்படியென்றால் இந்த டீல் கான்செல் தானே பாஸ் என்று ஆர்வமாய் வினவினான் குகன்.

“இல்லை இப்போதுதான் இன்னும் இருமடங்கு ஆர்வத்துடன் இதில் இறங்கப்போகிறேன், ஒரு வீரனுக்கு அழகே கட்டுக்கடங்காத காளையை அடக்குவதில் தான் உள்ளது, ஏற்கனவே பயந்து பதுங்கும் பசுவை அடக்குவதில் இல்லை, இந்த கட்டுக்கடங்காத கன்னியை அடக்கி என் வீரத்தை பறைசாற்றுகிறேன் பார்” என்று தீர்மானம் எடுத்து கொண்டான் அகரன். பாஸ் இது “நீங்கள் நினைப்பது போல் எளிது என்று எனக்கு தோன்றவில்லை, இந்த சுஹீரா கொஞ்சம் விதியாசமானவர்களாக தெரிக்கின்றார்கள்”,அதனால் நீங்கள் கொஞ்சம் யோசித்து கொள்ளுங்கள்” என்று குகன் கூறவும், அவனை கோபமாய் முறைத்தான் அகரன்.

“என்ன வித்தியசமானவள் அதே கண், காது, மூக்கு, வாய் தானே!, என்ன பார்க்க கொஞ்சமாய் கொஞ்சமேகொஞ்சமாய் அழகாயிருக்கின்றாள் இதில் வித்தியாசமாய் உணர என்ன உள்ளது” என்று அலட்சியமாய் பதில் தந்தவன், “இங்கு நான் தான் உன் பாஸ் நான் சொல்வதைக் கேட்டு நடக்கத்தான் உனக்கு வேலை கொடுத்து உள்ளேன் என்னை கேள்விக் கேட்கவோ அறிவுரை சொல்லவோ இல்லை. எனக்கு அவளை பற்றிய முழு விபரம் வேண்டும், பிடித்தது பிடிக்காதது என்ன செய்வாள் எங்கு செல்வாள், என்று முழு விபரமும் அதிலிருக்க வேண்டும் புரிகின்றதா? வழக்கமான துப்பறிவு நிறுவனத்திடம் பொறுப்பை கொடு” என்று கட்டளையிட்டு கொண்டிருந்தவன், எதிரில் இருந்தவன் முகத்தில் இருந்த உணர்ச்சியை கண்டு, நிறுத்தி “அவர்களுக்காக இரக்கப்பட்டு உன் வேலையை இழந்து விடாதே யாருக்காகவும் நான் இரக்கம் காட்ட மாட்டேன் அதை மறந்துவிடாதே”, என்று அழுத்தமாய் கூறினான் அகரன்.

அகரனின் அந்த குரல் குகனுக்கு அவன் எண்ணத்தின் தீவிரத்தை சொன்னது இதற்கு மேலும் மறுத்து பேசிக்கொண்டு இருந்தால் அவன் கோபம் இன்னும் அதிகமாகுமென்று அறிந்திருந்ததால், “யார் யாரிடம் அடங்குவர் யார் யாரை அடங்குவர் என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும், அடங்காத கன்னியை அடக்கி இந்த காளை அவளை ஆளப்போகின்றதா, இல்லை அந்த கன்னியிடம் அடங்கி வாழப்போகின்றதா ,என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்” என்று தனக்குள் கூறிக்கொண்டே அகரனை பின்தொடர்ந்தான் குகன்.

நான் எனும் அகந்தையில்
அலைந்தேன் நானடி…
உன் ஒற்றை பார்வையில்
என்னை அலட்சியம்
செய்து என் ஆனவத்திற்கு
அடிகொடுத்தாய் நீயடி…

1 Like

அடங்குவதும் அடங்க வைப்பதுமே அடிப்படையாய் முளைவிட்ட காதல்…

1 Like