அரக்கனோ அழகனோ 02

அரக்கனோ அழகனோ 02
0

அழகன் 2

உன் கோப பார்வையில்
என் மனதுள்
கனல் வீசுதடி …
என் மனம் இதம் தேட
உன் குளிர் பார்வையை
எதிர்ப்பார்க்குதடி…

சுஹீராவை சந்தித்தது அதன்பின் நடந்த குழப்பமெல்லாம் அகரன் மனதில் படமாய் ஓட எங்கு தவறு நேர்ந்தது தெளிவு படுத்திக்கொள்ள மீண்டும் மீண்டும் அதேயே யோசித்து கொண்டு இருந்தவனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம், வீடு சென்று அம்மா கையால் ஒரு காபி குடித்தால் போதும் தலைவலி குறைந்து தெளிவாய் யோசிக்க முடியும் என்று எண்ணம் வரவும் வீடு நோக்கி கிளம்பிவிட்டான்.

மாலை வீடு வந்து சேர்ந்தவனுக்கு மேலும் தலைவலியாய் அமைந்தது அதிகாவின் செயல்கள், “அதிகா என்ற பெயரின் அர்த்தம் தாராளமாக அள்ளி கொடுப்பவள்” , அதனால் தான் என்னவோ அவளுடன் பேசுபவர்களுக்கு , தலைவலியை தாராளமாய் அள்ளிக்கொடுப்பாள், அதிகா என்ற பெயரே வெறுக்க துவங்கி இருந்தான் அகரன், “எப்போதும் கரண் கரண் என்று பின்னாடியே வந்து தொல்லை செய்பவள், பேச விருப்பம் இல்லை என்பதை தெளிவாய் முகத்தில் காட்டியும், வார்த்தைகளில் கூறியும், அதை உணராமல் அவள் இஷ்டத்திற்கு நடக்க கூடியவள்”, இதில் இவளுடன் தான் திருமணம் என்று ஒளிவு மறைவானப் பேச்சுவேறு, “ஒருநாள் கூட அவள் பேச்சை சகித்துக்கொள்ள முடியாது, இதில் காலம் முழுவதும் அவளின் இம்சையை தாங்க தன்னால் முடியாது” என்று தெளிவாய் அவன் அம்மாவிடம் கூறிவிட்டான், அகரன்.

இந்த தொல்லை எல்லாம் வேண்டாம் என்று தான் காலகாலத்தில் “உன் மனதிற்கு பிடித்த பெண்னை மருமகளாய் கொண்டுவா என்கிறேன்” என்று இதையே கராணம் காட்டி தன் மனதின் ஆசையை கூறினார் யமுனா, அகரனின் அம்மா.

நீங்களே அவளை தொல்லை என்று ஒத்துக்கொண்டீர்கள், ”எலி தொல்லைக்கு பயந்து கல்யாணம் குடும்பம் என்னும் இரும்பு சங்கிலியில் என்னை பிணைக்க பார்க்கிண்றீர்களே? அது மட்டும் முடியாது” என்று மறுப்பாக தலையாட்டி சென்ற மகனை ஏக்கமாக பார்த்துக்கொண்டு இருந்தார் அந்த வயதான பெண்மணி.

அகரன் அவனுக்கு பிடித்தமின்மையை அவர்களின் முகத்திற்கு நேராய் சொல்ல முடியும், அது தான் அவன் குணமும் கூட, சரியோ தவறோ தனக்கு சரியென்று பட்டால் பிறர் மனம் நோகும் என்றும் பாராமல் பேச கூடியவன் இருந்ததும் இவர்கள் விஷயத்தில் அமைதியாய் இருப்பதன் காரணம் அவன் அம்மா, ஏதும் கோபமாய் பேசிவிட்டு அவன் தொழிலை பார்க்க கிளம்பிச்சென்றுவிடுவான் ஆனால் “வீட்டிலேயே இருந்து அவர்கள் தரும் கஷ்டத்தை தாங்க வேண்டியது அவன் அம்மா”, என்ற ஒரே காரணத்திற்காக தான் அமைதியாய் உள்ளான். அவன் அம்மாவிற்காக என்று மட்டும் இல்லையென்றால் இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்திற்கு எப்போதோ வெளியே தூரத்திவிட்டு இருப்பான்.

வீட்டின் உள்ளே நுழையும் போதே அதிகாவின் குரல் கேட்டது “நான் தான் இந்த வீட்டின் மருமகள் என் பேச்சை கேட்டு தான் நடக்க வேண்டும், புரிகின்றதா அத்தை சொன்னார்கள் ஆட்டுக்குட்டி சொன்னார்கள் என்று ஏதாவது உங்கள் இஷ்டத்துக்கு செய்து கொண்டிருந்தால் ஒருத்தரும் வேலையில் நிலைக்க முடியாது, கரனிடம் சொல்லி எல்லோரையும் வெளியேற்றி விடுவேன்”, என்று காச்சுமூச்சு என்று கத்தி கொண்டு இருந்தாள் அதிகா.

இவளை முதலில் வெளியேற்ற வேண்டும் அதை செய்ய வழியில்லாமல் தானே இந்த ஆட்டம் ஆடுகின்றாள், எல்லாம் அப்பா கொடுத்த இடம். ஒன்றுமில்லாமல் வந்து நின்றபோதே துரத்தி அடித்திருக்க வேண்டும் பாவம் பார்த்து விட்டது பெரும் பிழையாகி போனது, “இவர்கள் குணம் தெரிந்து தான் தாத்தா வீட்டிற்குள்ளேயே சேர்க்காமல் இருந்தார் போல”, அம்மாவும் இவர்கள் செய்வதை எல்லாம் பார்த்து பொறுத்துக்கொண்டு சும்மாயிருக்கின்றார்கள் இன்று அவர்களையே எடுத்து எரிந்து பேசும் அளவிற்கு துணிந்து விட்டார்கள், என்று மனம் கசந்தது. ஏற்கனவே தான் செய்த தவறை எப்படி சரி செய்யலாம், அதானல் தன் திட்டத்தில் ஏதும் பிழை நேர்ந்துவிடுமோ என்று குழப்பத்தில் இருந்தவன், இந்த கோபமும் சேர்ந்து கொள்ள இன்று யார் தடுத்தாலும் இவர்களை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும், இன்று சும்மா விடக்கூடாது என்று தீர்மானமாய் உள்ளே நுழைந்த அகரனை கண்டதும் வாய் நிறைய புன்னகையை பூசிக்கொண்டு அம்மா மகள் இருவரும் நெருங்கி வந்தனர்.

வாங்க மாப்பிள்ளை வா கரண் என்று அன்பொழுக அழைத்தவர்கள், “மாலை களைத்து வரும் மகனை கவனிக்க கூட நேரம் இல்லாமல் வுமன்ஸ் கிளப் தான் முக்கியமா?” வர வர இந்த யமுனா நடவடிக்கை என்று கூறிக்கொண்டு இருந்தவர், அகரன் பார்வையில் அண்ணி, என்று திருத்திக்கொண்டு பிள்ளை மீது அக்கறையே இல்லை, வீட்டில் தங்குவதே இல்லை நீங்கள் காலை இந்த பக்கம் கிளம்பியதும் அவர்களும் கிளம்பி விடுகின்றார்கள், பின் மதியம் சாப்பிட்டு நன்கு குரட்டைவிட்டு தூங்கிவிட்டு மாலையும் எங்காவது கிளம்பி விடுகின்றார்கள் என்று குற்றப்பத்திரிக்கை வாசித்த கலையரசியை ஏளனமாக பார்த்து, “ஒருவேளை இப்படி இருக்குமோ வீட்டில் இருக்க விடாமல் பூதம் ஏதும் துரத்துகின்றதோ என்னமோ யார் கண்டது அதனால் தான் அம்மாவிற்கும் என்னை போலவே வீட்டில் இருக்க பிடிக்காமல் ஓடி ஒழிந்துகொள்கின்றார்கள் போல” என்று கூறவும் அவர்கள் முகம் வெளிரி போனது. இதுவரை என்ன பேசினாலும் முக சுழிப்புடன் விலகி போனவன் இன்று குதர்க்கமாய் பேசவும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். “உதவிக்கு அண்ணன் வேறு ஊரில் இல்லையே”, என்று தோன்ற அதிகம் பேசாமல் வாயை மூடிக்கொண்டர்.

அவர்கள் அமைதியானாலும் ஒருமுடிவுடன் வந்த அகரன் விடவில்லை, அரிதாய் கிடைக்கும் வாய்ப்பாய் இன்று இருவரும் தனியே சிக்கி உள்ளனர், ஒன்று அப்பாவின் பின் ஒழிந்து கொள்வார்கள் இல்லை ஏதும் பேச விடாமல் அம்மா வந்து தடுத்து விடுவார். எப்போதும் இவர்களின் வார்த்தைகளை தட்டிப் பேச விடாமல் தடுத்துக்கொண்டிருந்த அம்மாவும் இல்லாததால், ஒழிந்து கொள்ளும் அரணான அப்பாவும் இல்லாமல் இருவரும் தனியே மாட்டிவிட்ட தவிப்பில் இருக்க, இது வரை சேர்த்து வைத்த மொத்த கோபத்தையும் மனதுள் கொண்டு வந்தவன், இன்னைக்கு என் டைம் பாஸே இந்த பீசுங்க தான் நல்லா வைச்சு செய்யணும், எஞ்ஜாய் அகரா என்று தனக்குள் கூறிக்கொண்டு களத்தில் இறக்கினான்.

அப்புறம் குரலில் கொஞ்சம் சுருதி கூடி தெரிகின்றது என்ன விஷயம் அதிகாரம் கொடி கட்டி பறக்கின்றது, ஆமாம் வரும்போது என் விருப்படி தான் நடக்கவேண்டும் தவக்கவேண்டும் என்று குரல் கேட்டது, அது நீதானா அதிகா “அப்பப்பா உன் குரலில் என்ன ஒரு அதிகாரம் பழங்காலத்து மகாராணிகள் கட்டளையிடுவார்களே அது போல” என்று மெய்சிலிர்த்தவன் போல் தோள்களை குலுக்கி கொண்டு, “ஒரு நொடி நானே வேறு யார் வீட்டிற்க்கு வந்துவிட்டோம் போல என்று மிரண்டு போனேன் என்றால் பாரேன்” ,இப்படி குரலை உயர்த்தி கூட உன்னால் பேச முடியுமா என்ன? இல்லை ஏன் கேட்கின்றேன் என்றால், “அப்பா இருக்கும் போது எல்லாம் பேசவே தெரியாத பச்சைப்பிள்ளை போல் நீங்கள் என்ன சொன்னாலும் சரி மாமா என்று தலையாட்டும் தலையாட்டி பொம்மையாய் மட்டும் பார்த்துப் பழகிவிட்டேனா அதனால்தான் உன் புது அவதாரம் வியப்பாய் இருக்கிறது என்று ஆச்சார்ய பட்டு போனான் அகரன்.

அகரன் குரலில் எந்த மாற்றத்தையும் உணர முடியாமல் போக உண்மையில் அவன் தங்களை புகழ்ந்து தான் பேசுகிறான் என்று பெருமை பட்டு போன இரண்டு ஜீவன்களும் மேலும் தங்களின் ஜம்பத்தை காட்ட துவங்கியது. “பின்ன என்ன மாப்பிள்ளை வருங்கால முதலாளி அம்மா என்று மரியாதை கொஞ்சமும் இல்லாமல் நம் அதிகா சொன்னதை செய்யாமல் அவர்கள் இஷ்டத்திற்கு நடப்பதா?” இதுகளை இப்போதே தட்டிவைக்க வேண்டும் இல்லை தலையில் ஏறிக்கொண்டுத் தாளம் போடத்துவங்கிவிடுவார்கள்”, என்று மூச்சுவாங்க பேசினார் அகரனின் அத்தை கலையரசி.

“நீங்கள் சொல்வது சரிதான் ஆரம்பத்திலேயே தட்டிவைக்க வேண்டும் இல்லை இவர்களுக்கும் யார் வீட்டில் இருந்து கொண்டு யாரை அதிகாரம் செய்கின்றோம் என்ற உணர்வே இல்லாமல் தலைகால் புரியாமல் ஆட துவங்கிவிடுவார்கள்”, என்று அகரன் ஏளனக் குரலில் கூறவும். கலையரசி யாரை சொல்கிறான் நம்மை தான் சொல்கின்றானா, என்ன பேசி சமாளிப்பது என்று புரியாமல் மௌனமாய் இருக்க அதிகா பேச துவங்கினாள், நீங்கள் சொல்லுவது சரி தான் கரண் “வர வர யாருக்கும் பயம் இல்லாமல் போய் விட்டது, நான் சொன்னதையும் மீறி அவர்கள் இஷ்டத்திற்கு நடக்கின்றார்கள்” எனவும், “நீ என்ன சொன்னாய் அவர்கள் எதை மீறிநடந்தார்கள் என்று நீ இன்னும் தெளிவாய் சொல்லவில்லையே அது தெரிந்தால் தானே என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்” என்று அகரன் கேட்கவும், என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன் பின்பு நீங்களே இவர்களை வீட்டை விட்டு துரத்திவிடுவீர்கள் என்று கூற துவங்கினாள் அதிகா.

எல்லாம் உங்களுக்காக தான் கரண், இவர்களை சமைக்கச் சொல்லியிருந்தேன், உங்களுக்கு உணவில் அசைவமில்லை என்றால் சாப்பிடவே பிடிக்காது இல்லையா, அதனால் சிக்கன் சமைக்கச் சொல்லியிருந்தேன், “இன்று என்னமோ அமாவாசை விரதமாம் அதனால் சைவம் தான் என்று அத்தை சொல்லிவிட்டார்கள்” என்று மதியமே வெறும் பருப்பும் கிழங்கும் சமைத்தனர், சரி இரவு உணவவது உங்களுக்கு பிடித்தது போல் அசைவம் செய்ய சொல்லி கொண்டு இருந்தேன், “உங்களுக்காக மட்டுமே யோசித்து செய்யும் எங்கள் பேச்சை கேட்கமால் இந்த காலத்திலும் அமாவாசை விரதம் சஷ்டி விரதம் என்று பிதற்றும் உங்கள் அம்மா பேச்சை கேட்டு நடந்து எங்களை கேவலப்படுத்துகின்றனர்” என்று அவள் குரலுக்கும் செயலுக்கும் சம்மந்தம் இல்லாமல் முதலை கண்ணீர் வடித்தாள் அதிகா.

அதி செல்லத்திற்கு நீ என்றால் அவ்வளவு இஷ்டம் உனக்காக தான் அவள் பார்த்துப்பார்த்து செய்வதே, அண்ணன் வேறு ஊரில் இல்லை உன்னை கவனமாய் கவனித்து கொள்ளும் பொறுப்பு எங்களுடையது இல்லையா?, என்று மகள் காட்டிய வழியை பின் பற்றி வராத கண்ணீரை சேலை தலைப்பில் துடைத்து கொண்டார் கலையரசி.
“ஓ எனக்கே எனக்காக மட்டுமே யோசிக்கும் உங்களை போய் என்னவெல்லாம் நினைத்து விட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று துவங்கியவன். அவர்களின் கண்களில் தோன்றிய சந்தோச சாயலை ஒருநொடி கண்டு வாய்விட்டு அந்த வீடே அதிரும் படி சிரித்தவன், அவர்கள் விளங்காமல் விழிக்க தன் சிரிப்பை அடக்கி கொண்டு, “இப்படி சினிமா வசனம் பேசி உங்களை மகிழ்விக்க ஆசைதான் ஆனால் என் எண்ணம் வேறு ஆயிற்றே”, என்று அங்கிருந்த சோபாவில் அதிகாரமாய் அமர்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டவன், “என்னை கவனித்து கொள்ள எனக்கு தெரியும் நான் ஒன்றும் கைக்குழந்தை இல்லை”, அம்மா விரதம் இருக்கும் தினங்களில் வீட்டில் அசைவம் சமைக்கமாட்டார்கள் என்று தெரியும் தானே, அந்த நாட்களில் நான் வெளியில் என் உணவை முடித்து கொள்வேன் என்றும் உங்களுக்கும் தெரியும், இன்று மட்டும் என்ன திடீரென்று என் மீது அக்கறை முளைத்துவிட்டது. “எனக்காக சொன்னீர்களா இல்லை உங்கள் வாய்யைக்கட்ட முடியாமல் சொன்னீர்களா” என்று அகரன் இளக்காரமாய் கேட்டான்.

தங்கள் எண்ணம் அறிந்து கொண்டானே என்று கோபம் வந்தாலும் அதனைக் காட்ட முடியாது என்று புரிய, தன் கோபத்தை அடக்கி கொண்டு ஏன் மாப்பிள்ளை அப்படியே எங்களுக்காக என்றால் கூட, எங்களுக்கு இந்த வீட்டில் நினைத்ததை செய்ய உரிமை இல்லையா என்ன? உங்கள் மனைவியான என் மகளுக்கு இந்த வீட்டில் சரிபங்கு இருக்கிறது தானே என்று கூறிக்கொண்டிருந்த கலையரசி, அகரன் பார்வையில் உங்கள் திருமணத்திற்கு பின் அவளுக்கும் இந்த வீட்டில் உரிமை உண்டுதானே, என்று தெளிவாய் விளக்கினார் கலையரசி.

ஒரு புழுவை பார்ப்பது போல் அருவருப்பான பார்வையை செலுத்தியவன் அதிகா புறம் திரும்பி “என் கனவிலும் அது நிகழாது, இது போல முட்டாள் தனமான ஆசைக்களுடன் என்னிடம் நெருங்கினாய் என்றால் உன் வீண் கனவுகளுடன் சேர்த்து உன்னையும் ஒன்றுமில்லாமல் பொசுக்கிவிடுவேன், இப்போதே இந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்துவிடு, இல்லை இது போல் கற்பனை கோட்டை கட்டி அதில் தான் வாழ்வேன்என்று அடம்பித்தால் இப்போதே கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடுவேன் ஜாக்கிரதை, இது தான் என் முதலும் கடைசி எச்சரிக்கை” என்று கோபமாய் கூறினான், அகரன்.

தன் மகளை அவமான படுத்தியதும் பொறுத்து கொள்ள முடியாமல் இது வரை காத்த பொறுமை காற்றில் பறந்திட “யார் கழுத்தை பிடித்து தள்ளுவேன் என்று மிரட்டுகின்றாய் இது என் அப்பா வீடு இதில் எனக்கும் உரிமை உள்ளது அவரின் பேத்தியான என் மகளுக்கும் சரிபங்கு உண்டு”, இனி ஒருமுறை மரியாதை இல்லாமல் நடந்து கொண்டாயென்றால் கோர்ட்டில் கேஸ் போட்டு என் பங்கை பிரித்துத்தர சொல்லுவேன் என்று பதிலுக்கு மிரட்டினாள் கலையரசி.

நீங்கள் இப்படி ஏதாவது குதர்க்கமாய் யோசிப்பீர்கள் என்று தாத்தாவிற்கு ஏற்கனவே தெரியும் போல அதானல் தான் சொத்து எதையும் “என் பெயரில் நேரடியாக எழுதி வைக்காமல் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டது போல காட்டி மீண்டும் என் பெயரில் புதிதாய் வாங்குவது போல ஏற்பாடு செய்து பத்திரம் பதிந்து உள்ளார், அதானல் இது முழுக்கமுழுக்க எனக்கு மட்டுமே சொந்தமானது, நீங்கள் தலைகீழாய் நின்றாலும் இதிலிருந்து சல்லிக்காசு பெறாது, இந்த சொத்தில் உங்கள் பாசமலர் அண்ணனுக்கு கூட உரிமையில்லை நினைவிருக்கட்டும், இல்லை நான் எதையும் சட்டப்படித்தான் சந்திப்பேன் என்று பிடிவாதம் பிடித்தால் அதன் பின் உங்கள் இஷ்டம், கோர்ட்டுக்கும் போங்கள் கோட்டைக்கும் போங்கள்” உங்கள் மிரட்டலுக்கு அஞ்சுபவன் நான் இல்லை, அய்யோ பாவம் என்று உங்கள் மீது இரக்கப்பட்டு என் அப்பா அவர் சுயமாய் சம்பாத்தியத்தில் சேர்ந்த சொத்தில் சரிபாதி உங்களுக்கு எழுதி கொடுத்தார் இல்லையா?, அவருக்கு அப்போதாவது உங்கள் சுயரூபம் தெரியட்டும் அதன்பின்னாவது உங்களை எங்கு வைக்க வேண்டுமென்று அறிவு கிடைக்கின்றதா” என்று பார்க்கின்றேன், என்றான் அகரன்.

“எப்படி எடுத்துதெரிந்து பேசுகின்றாய், என் அண்ணன் வரட்டும் யார் இருக்கின்றார் யார் கிளம்புகின்றார் என்று பார்க்கலாம்” என்று கலையரசி சபதம் மேற்கொள்ள, “நீங்கள் பேச வேண்டியதை பேசி முடித்துவிடீர்களா, நீங்கள் இப்போது நின்று பேசி கொண்டு இருப்பது என் வீடு, எனக்கு மட்டுமே சொந்தமான வீடு”, இங்கு யார் இருக்க வேண்டும் வேண்டாம் என்பது என் முடிவு. இங்கு என் இஷ்டப்படியும் என் அம்மா விருப்படியும் தான் எல்லாம் நடக்கும், அவர்கள் செய்யச் சொன்னதை மாற்றி செய்யவைக்க யாருக்கும் உரிமை இல்லை, இனியும் இங்கு இருக்க வேண்டும் என்றால் “நீங்கள் இந்த வீட்டில் யார், உங்கள் இடம் என்ன என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள், அப்படி இல்லை எங்கள் இஷ்டபடி தான் நடப்போம் என்பது தான் உங்கள் முடிவென்றால் இப்போதே வீட்டை விட்டு வெளியே நடையை கட்டுங்கள்” என்று மிரட்டினான் அகரன்.

இதற்கு மேலும் அங்கு நின்று அவர்கள் முகம் பார்க்க விருப்பமின்றி, தன் அறை நோக்கி படி ஏறி சென்றவன் முதுகை கோபமாய் பார்த்து கொண்டு இருந்தனர், தாயும் மகளும்.
“என்னமா இவன் இப்படி சொல்கிறான்?” என்று புரியாமல் குழம்பிய மகளை எச்சரித்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்த கலையரசி, “நல்லவேளை வேறு யாரும் பார்க்கவில்லை, வேலையாட்கள் காதில் இந்த பேச்சு விழுந்து இருக்காது” என்று நிம்மதி அடைந்தார்.

என்னமா புதிதாய் யோசிக்கின்ரீர்கள், “இந்த வீட்டில் தான் எஜமானர்கள் பேச துவங்கியதும் வேலை ஆட்கள் விலகிச்சென்று விடுவார்களே, அது இங்கு எழுத படாத சட்டம் ஆயிற்றே, மற்ற விஷயத்தில் அத்தை பிள்ளைப்பூச்சி தான் ஆனால் இந்த விஷயத்தில் ரொம்ப கண்டிப்பு என்று தெரியாதா என்ன? கரண் நம்மிடம் பேச துவங்கியதும் எல்லாம் இடத்தை காலி செய்துவிட்டார்கள், கவலைப் படாமல் சொல்லுங்கள்” என்றாள் அதிகா. “அது எல்லாம் நன்றாக தெரியும், இருந்தும் பகலில் பக்கம் பார்த்து பேச வேண்டும் என்பார்கள் நீ என்னுடன் வா” என்று அவள் அறைக்கு அழைத்துச் சென்றதும் தான் பேசவே துவங்கினார், கலையரசி.

“இது இவனாய் பேசவில்லை, இவன் அம்மா பேச வைக்கிறாள், நம்மிடம் அடங்கி இருப்பதுபோல நடிப்பவள் மகனிடம் சென்று வைத்திவைக்கிறாள் போல, இந்த பையன் சொல்வதும் உண்மையாய் இருக்க வாய்ப்பு உண்டு, என் அப்பாவை பற்றி எனக்கு தெரியாத என்ன?, அவர் பேச்சை மீறி அவரை எதிர்த்துக்கொண்டு உன் அப்பாவை திருமணம் செய்து கொண்டேன் என்று என்னை சாகும் வரை மன்னிக்க மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தவர், முதலில் நானும் எவ்வளவு நாள் பிடிவாதமாய் இருப்பர்களென்று நினைத்து கொண்டு இருந்தேன், நீ பிறந்த பின்பும் என்னை வந்து பார்க்காதவர்கள், நானாக தேடிவந்த போதும் வீட்டின் வாசலை கூட மிதிக்கவிடவில்லை, உனக்கு ஐந்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் உன் அப்பா தவறிவிட்டார், கையில் குழந்தையுடன் நாதியற்று இங்கு வந்தேன் அப்போதும் இரக்கமே இல்லாமல் விரட்டி அடித்தார்கள்” என்று அன்றைய நினைவில் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்து கொண்டார், கலையரசி.

“உன் மாமாவும் மனைவி பேச்சை கேட்டுக்கொண்டு எங்கு தந்தையை எதிர்த்து பேசினால் தனக்கும் இதே நிலைமை தான் என்று அப்பாவை எதிர்த்து பேச தைரியம் இல்லாதது போல் நடித்து வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார், பின் உன் பாட்டி இறந்த ஒரு வருடத்தில் உன் தாத்தாவும் இறந்து விட, அதன் பின் நம்மை தேடி கண்டுபிடித்து நாம் தங்கியிருந்த ஆதரவற்றோர் மையத்தில் இருந்து அழைத்து வந்து அவர் செய்த பாவத்தின் பரிகாரமாய் அவர் சொத்தில் ஒரு பகுதியை எழுதி கொடுத்தார், சொத்தை கொடுத்தால் போதுமா? இது வரை நாம் பட்ட கஷ்டத்திற்கும், சிந்திய கண்ணீருக்கும் யார் பதில் சொல்வது, அகரனின் சில நடவடிக்கைகள், செயல்கள் எனக்கு அப்பாவை நினைவு படுத்தும் அப்படியே சின்ன தேவேந்திர மூர்த்தி தான். நான் இங்கிருந்த வரை அவன் அதிகமிருந்தது என் அப்பாவுடன் தான்” வீட்டின் முதல் பேரன் ஆயிற்றே!, அவன் குணமும் அவரை போல் தான் இருக்கும் அதனால் இவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நான் தான் முட்டாள் தனமாய் அந்த வயதில் காதல் பெரிதென்று எனக்கு பார்த்து வைத்த பெரிய இடத்தை மறுத்துவிட்டு மாத சம்பளம் வாங்கும் உன் அப்பாவின் பின் சென்றுவிட்டேன், முன் பின் யோசிக்காமல் நான் எடுத்த முடிவாள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, சுக போகங்களில் பழக்கப்பட்டு வாழ்ந்தவள், வசதி இழந்து வாழ்வதே கொடுமையாக இருக்க, உன் அப்பா இறந்ததும் எங்கு பெண் குழந்தையான உன் பொறுப்பு தங்கள் தலையில் விழுந்து விடுமோ என்று பயந்து அவர் சொந்தங்களும் நம்மை துரத்திவிட்டனர், ஆதரவாய் தேடிவந்த அப்பாவும் விரட்டிவிட உன்னை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு வேலை சோற்றுக்கு என்ன பாடுபட்டோம் தெரியுமா? உனக்கு ஒரு நாள் மூன்றுவேலை சாப்பாடு கிடைக்க நாள் முழுவதும் நான் உழைக்க வேண்டும்” என்று பழைய நினைவில் கோபம் குறையாமல் கூறினார் கலையரசி.

“அதானல் தான் சொல்கிறேன் கொஞ்சம் பொறுமையாய் இரு நீயும் முன், கோபத்திலும், அவசரத்திலும் அகரனை கைநழுவி விட்டு விடாதே என் அண்ணன் மகனுடன் உனக்கு திருமணம் நடந்து முடியட்டும். இந்த சொத்தை முழுதாய் எழுதி வாங்கி கொண்டு நாம் பட்ட கஷ்டத்திற்கான தண்டனையை உன் மாமா ஈஸ்வர் குடும்பத்திற்கு அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் கொடுப்போம்” என்று தாயும் மகளும் திட்டம் தீட்டி கொண்டனர்.

தன்னை சுற்றி பின்னப்படும் சதிவலை பற்றி அறியாமல் சந்தித்து வந்தவளை பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தான்,அகரன். தவறாய் புரிந்து கொண்டு எல்லாம் சொதப்பி விட்டு வந்தவனுக்கு தன் மீதே இருந்த கோபம், இதுவரை அத்தை, மீதும் அவர் மகள் மீது சேர்த்து வைத்த கோபம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து விட்டு வந்ததால் மனம் கொஞ்சம் தெளிவுற சிந்திக்க துவங்கினான்.

குகன் சொன்னது சரிதான் அந்த மகேஸ்வரன் தன் மகளை பற்றி சொன்ன விதத்திலேயே யோசித்து இருக்க வேண்டும் அதை விட்டு இது வரை தான் சந்தித்த பெண்களை கொண்டு அந்த சுஹீராவை கணித்து தவறு என்று அகரனுக்கு புரிய துவங்கியது, “இவள் இது வரை தான் சந்தித்த பெண்கள் போல் இல்லை கொஞ்சம் வித்தியசமானவள்” என்று காலம் கடந்து புரியத்துவங்கியது. “அவள் கண்கள் என்னை நிலைகுலைய செய்கின்றன இவளிடம் அதிகம் நெருங்குவது ஆபத்து எச்சரிகையாகவே இருக்க வேண்டும்” என்று யோசித்தான், அகரன்.

இன்று முன் யோசனை இன்றி நடந்து கொண்டது போல் இனி நடக்க கூடாது என்று தனக்கு தானே உறுதி எடுத்து கொண்டவன். அவளை எப்படியும் தன் காதல் வலையில் விழவைத்து அவள் வாயாலேயே, அகரன் இல்லாமல் வாழ முடியாது என்று சொல்ல வைக்க வேண்டும், என்னை காதலிப்பதாய் சொல்ல வைக்க வேண்டும் என்று தனக்கான சதி திட்டத்தை தீட்ட துவங்கினான், அகரன்.

“இந்த காலத்திலும் நாத்தனார் கொடுமையை சகித்து கொள்ளும் அம்மா, தன் முகத்திற்கு முன் பேச பயந்து கொண்டு ஒதுங்கி செல்லும் அதிகா,கலையரசி தன்னிடம் நெருங்க எந்த எல்லைக்கும் செல்ல துணிந்த பெண்களை மட்டும் கண்டிருத்தவனுக்கு”,பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் வலுப்பெற்று போனது.

“பெண்கள் பயந்தவர்கள் இல்லை எதற்கு பிரச்சனையென்று ஒதுங்கி செல்பவர்கள்” என்று அவனுக்கு புரியவில்லை, “புலியை முரத்தால் அடித்து விரட்டிய பெண்களும், வெள்ளையனை வேரோடு அறுக்க, கையில் வாளுடன் போராடிய பெண்களும், நியாயம் காக்க ஒரு நகரையே நெருப்புக்கு இறையாக்கிய பெண்ணும். எமனுடன் போராடி தன் கணவன் உயிர் காத்த பெண்ணும், வலுக்கட்டாயமாக கடத்த பட்ட போதும் தன் கற்பு நெறி தவறாது இருந்தவள்தன் கற்பினை உலகிற்கு நிரூபிக்க நெருப்பில் இறங்கிய பெண்ணும், வெறும் கற்பனை கதைகளில் வரும் கதாபாத்திரம், என்று எண்ணி இருந்தவனுக்கு, இது போன்ற வீரமான பெண்கள் வெறும் கற்பனை அல்ல, இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்று காலம் பதில் சொல்லும் காலம் நெருங்கிவிட்டது.

கண்மூடி திறந்தால்
கண் முன் மின்னலாய்
வந்து போகிறாய்
கனவில்கூட கோபத்தை கட்டுகிறாய்
எப்போது என் வானில்
நிலவாய் மலர்வாய்
என் யதுமானவளே !!