அரக்கனோ அழகனோ 03

அரக்கனோ அழகனோ 03
0

அழகன் 3

கர்வமாய் உன்னை
கவர்ந்து விழ்த்திட
நினைத்தேன் நானடி…
உன் கண் அசைவில்
உன்னுள் வீழ்ந்து
கிடக்கிறேன் ஏனடி …

காலை எழும்போதே, அகரன் மனதில் இனம் புரியாத புது வித உணர்வு எழுந்தது, அலுவலகம் கிளம்பி கண்ணாடி முன் நின்று தன்னை சரிபார்த்து கொண்டவன், “அழகாய் தானே இருக்கின்றோம் ஆனால் அவள் கண்களில் அதற்கான பாராட்டு ஏன் தெரியவில்லை அவள் தோழிகள் கூட என்னை ஆர்வமாய் பார்த்த போது இவள் மட்டும் கோபமாய் ஏன் முறைத்தாள்” அது சரி அவளை ரௌடி, பஜாரி என்று மோசமாய் திட்டிவிட்டு ஏன் முறைத்தாள் என்று கேள்வி வேறு. யாராய் இருந்தாலும் முறைக்க தான் செய்வார்கள் என்று அவள் புறம் நியாயத்தை மனம் வாதாட, நேற்று நடந்ததை நெஞ்சம் அசைப்போட துவங்கியது இறுதியாய் அவள் பார்வை நினைவில் வந்தது.

எவ்வளவு முயன்றும் அவள் கோப பார்வையை மறக்க முடியாமல் அவள் கண்கள் எவ்வளவு அழகென்று மனம் சொல்ல அவள் கண் அழகில் தன்னை மறக்க அது கோபத்தை விடுத்து காதலாய் பார்க்கும் போது எப்படி இருக்கும் என்று கற்பனையில் ஆழ்ந்தான். கற்பனையிலும் அவள் கண்கள் கோபத்தையே காட்ட என்ன இது இன்று முழுவதும் அவள் நினைவிலேயே இருக்கின்றோம். தன் திட்டம் நிறைவேறினால் மட்டுமே தன்னால் அவளை முழுதாய் மறக்க முடியும் என்று தோன்ற, அதற்கான வழிகளை யோசிக்க துவங்கினான், அகரன்.
அகரனின் யோசனையின் இடையில் வந்து நின்றார் யமுனா “என்ன அகரா ஏதோ தீவிரயோசனையில் இருக்கின்றாய் எந்த கோட்டையை பிடிக்க” என்று உள்ளே வந்தவர் குரலில் இருந்த ஏளனம் அகரன் முகத்தில் புன்னகையை பரவ செய்தது.

“என் தாத்தா திருவாளர் தேவேந்திர மூர்த்தி உருவாக்கிய இந்த கோட்டையின் முடிசூடா இளவரசன் இந்த அகரன் எதற்கு வேறு கோட்டையை பிடிக்க வேண்டும், கவிழ்க்க வேண்டுமென்ற எந்த அவசியம் இல்லை” என்று தலை நிமிர்த்தி கர்வமாய் கூறிய மகனை கவலையுடன் பார்த்தார் யமுனா.

அப்படியே தன் மாமனார் தேவேந்திர மூர்த்தியின் குணம் தன் மகனுக்கும் வந்து விட்டதை எண்ணி காலம் கடந்து கவலை கொண்டது தாய் மனது. இந்த கர்வத்தில் தான் பிறர் மனம் நோகும் என்று கவலையும் இல்லாமல் தனக்கு தோன்றியதை பேசி விடுகிறான் என்று மனதில் நினைத்து கொண்டவர், அதை மகனிடம் வெளிக்காட்ட தைரியமின்றி அமைதிக்கத்தார்.

தன்னிடம் ஏதோ பேச வந்த அன்னை பேச மறந்து தீவிர சிந்தனையில் இருப்பதை கண்டவன், “என்ன அம்மா என்னை சொல்லிவிட்டு நீங்கள் எந்த கோட்டையை பிடிக்க திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்” என்று அகரன் வினவவும். இன்று ஏதோ நல்ல மனநிலையில் இருக்கின்றன் போல என்று மனதில் தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்து கொண்டு, பேச துவங்கினர் யமுனா.

அது ஒன்றும் இல்லை அகரா நேற்று நடந்ததை பற்றி என்று அவர் துவங்கும் முன் “என்ன உங்கள் கணவர் திரு. ஈஸ்வரமூர்த்தி காலையிலேயே என்னை பற்றி புகார் மனு படித்து விட்டாரா? லைவ் ரிலே கொஞ்சம் டிலே நேற்று நடந்ததற்கு இப்போது வந்து விளக்கம் கேட்கின்றீர்கள் அப்படித்தானே”, என்று அகரன் கேலி செய்யவும். அப்படி இல்லை அகரா நமக்கென்று இருக்கும் சொந்தம் அவர்கள் தான், அவர்களின் மனதை நோகடித்து விட்டு அதில் இன்பம் காண்பது தவறு அகரா என்று மகனுக்கு நினைவுறுத்தினார், யமுனா.

எனக்கு சொல்லும் அறிவுரை அவர்களுக்கும் பொருந்தும் தானே, இத்தனைக்கும் நம்மை நம்பி நம் நிழலில் பிழைப்பவர்கள், அந்த எண்ணம் சிறிது கூட இல்லாமல் இந்த வீட்டின் எஜமானி போல் ஆட்டம் போட்டால் இந்த வீட்டின் உண்மையான உரிமையாளன் நான் தட்டி வைக்கத்தான் செய்வேன், “எனக்கு சொல்லும் அறிவுரை கொஞ்சம் உங்கள் அண்ணிக்கும் அவர்கள் அருமை மகளுக்கும் சொல்லுங்கள்” அப்போதாவது எங்கு இருக்கின்றோம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புரிகின்றதா என்று தனக்கு இருந்த இனிமையான மனநிலை கெட்டு விட்ட கடுப்பில் சிடுசிடுத்தான் அகரன்.

மகனின் சிடுசிடுப்பை விட அவன் வார்த்தைகள் தான் அதிக வேதனை தந்தது, இருந்தும் அவன் கொண்ட எண்ணத்தை மாற்றும் விதமாய் தன் விவாதத்தை தொடர்ந்தார் தேவகி, “உன் அத்தை இந்த வீட்டில் மிகவும் செல்லமாக வளர்ந்தவர்கள் ஏதோ கோபத்தில் அவர்கள் செய்த தவறை மாமா மன்னிக்காமல் போனதால் வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டார்கள், அந்த விரத்தியில் ஏதும் கடுமையாய் நடந்து கொண்டாலும் பொறுத்து கொள்ள வேண்டியது நம் கடமை” என்று யமுனா நிதானமான குரலில் விளக்கிக்கொண்டு இருக்க, அவருக்கு நேர் எதிர் மனநிலையில் அகரன் தொடர்ந்தான், “அவர்கள் செய்த தவறுக்காக தாத்தா தண்டனை தந்தார், நீங்கள் இரக்கப்படுவதை பார்த்தால், தவறே செய்யாமல் தண்டனை மட்டும் அனுபவித்த அப்பாவிகள் போல் அல்லவா இருக்கின்றது”. நீங்கள் காட்டும் கருணையும் இரக்கத்தையும் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தான் இந்த ஆட்டம் போடுகின்றார்கள், உங்களுக்கு வேண்டும் என்றால் அவர்கள் செய்வதை பொறுத்து கொள்ளும் சகிப்புத் தன்மை இருக்கலாம், என்னிடம் அதை எதிர்பார்க்காதீர்கள் அவர்கள் செய்வதை எல்லாம் பார்த்து கொண்டு பொறுமையாயிருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று அகரன் தன் தாத்தாவின் வாரிசு என்று தெளிவாய் காட்டி கொண்டான். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல இடத்தை காலி செய்தவன், காலை உணவிற்காக வந்து அமர்ந்த போது நேற்று ஒன்றுமே நடக்காதது போல அருகே வந்து உணவை பரிமாறினாள் கலையரசி, நன்றாக சாப்பிடுங்கள் மாப்பிள்ளை வரவர சரியாய் சாப்பிடாமல் மெலிந்து கொண்டே போக்கின்றீர்கள் என்று அக்கறையாய் பேசியவளை பார்க்கும் போது கோபம் வந்தாலும் அம்மா சொன்னதற்காக பேசாமல் இருந்தான், வேறு ஏதும் பேசி இருக்கும் மனநிலையை கெடுத்து கொள்ள விருப்பம்யின்றி ஏளனமாய் ஒரு பார்வையை மட்டும் அவர் புறம் செலுத்தி விட்டு உணவு உண்ண துவங்கினான், அகரன்.

அவன் பார்வையின் பொருள் புரிந்தும் அதை பெரிது படுத்தாமல் அவர் பணியை தொடர்ந்தார், அகரன் உண்டு முடித்து கிளம்பும் போது மாப்பிள்ளை, அதி செல்லம் அவளின் தோழியை பார்க்க செல்வதாய் சொன்னாள் போகும் வழியில் இறக்கி விட்டுவிடுங்கள் எனவும் எத்தனைமுறை சொன்னாலும் இவர்கள் திருந்தவேமாட்டார்களா என்று வந்த எரிச்சலில் இதுவரை காத்து வந்த பொறுமை காற்றில் பறக்க, “உங்களுக்கு எடுபிடி வேலை செய்ய வேற ஆளைப் பாருங்கள், உங்கள் வெட்டி வேலைக்கு சேவை செய்ய நான் ஒன்றும் உங்கள் வீட்டு வேலைக்காரன் இல்லை”, என்று அகரன் கோபமாய் கூறிக்கொண்டு இருந்த போதே யமுனா அங்கு வந்து அவனை தடுத்தார், அண்ணி அதிகாவிற்கு வேறு கார் நான் ஏற்பாடு செய்கிறேன் அகரனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதாய் சொன்னான், அவன் கிளம்பட்டும் என்று அகரனுக்கு விடைகொடுத்து அனுப்பிவைத்தார் யமுனா.

அவர்கள் குணம் அறிந்தும் உதவும் அன்னையை ஒரு முறை முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் அகரன். யமுனா அகரன் கோபத்திலிருந்து காத்து தனக்கு உதவிதான் செய்கின்றார் என்று கூட உணராமல், “எங்கு மாப்பிள்ளை என் மகளோடு பழகி, பிடித்துபோய் இவளை தான் மணப்பேன் என்று கூறிவிட்டால் உங்கள் கதி அவ்வளவு தான் என்று ஏதேதோ கூறி அவரை அனுப்பிவைத்து விட்டு உங்கள் திட்டம் நிறைவேறி விட்ட நிம்மதியில் இருக்கின்ரீர்களா” என்று விஷமாய் வார்த்தை விட்டார் கலையரசி.

தன் மீது சுமத்த பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை என்று விளக்க யமுனா முயலும் போதே நீ என்ன சென்னனும் நான் நம்பப்போவது இல்லை என்ற தோரணையில் நின்ற கலையரசியை பார்த்து தன் முயற்சி எந்த அளவிற்கு வெற்றிப்பெறும் என்று புரிந்துவிட அதற்கு மேல் வாதம் செய்து பலனில்லை என்று புரிந்துவிட தன் வழியை பார்த்து கிளம்பினர், யமுனா. “நீங்கள் என்ன சதி திட்டம் தீட்டினாலும் அது பலிக்காது, அதிகாவின் பொறுப்பு தன்னுடையது என்று என் அண்ணன் எனக்கு வாக்கு கொடுத்து உள்ளார், வாக்கு தவறி நடக்கும் பரம்பரை எங்களுது இல்லை” என்று வீண் ஜம்பம் பேசிய கணவன் தங்கையை பார்த்து புன்னகை மட்டும் செலுத்தி விட்டு, விலகி சென்றார் யமுனா.

வீட்டை விட்டு கிளம்பிய அகரனுக்கு மனம் கொதிநிலையில் இருந்தது நேற்று தான் அவ்வளவு அவமானப்படுத்தினேன் இன்று மீண்டும் வழிந்து கொண்டு முன் வந்து நிற்கின்றார்கள், இவர் தாத்தாவின் மகள் என்று சத்தியம் செய்து சொன்னால் கூட யாரும் நம்பவே மாட்டார்கள், ஒருவரின் ஏளனபார்வைகூட தன்னை அவமான படுத்திவிட்டதாய் கருதும் அவர் குணம் எங்கே நேரடியாக சொல்லியும் அதை மறந்து பேசும் இவர்கள் குணம் எங்கே என்று தனக்குள் கடுத்து கொண்டே இருந்தவனுக்கு, இதுவரை தன் நினைவில் இருந்து ஒதுங்கி இருந்த தன்னை கோபமாய் முறைத்தவளின் முகமும் கண்களும் நினைவிற்கு வந்தது, இப்போது பார்த்தாலும் அப்படித்தான் முகத்தை தூக்கிவைத்து கொண்டிருப்பாளா என்று எண்ணம் தோன்றவும், அதன் பின் அவள் நினைவே முழுவதுமாய் ஆட்கொள்ள மீண்டும் சந்திக்கும் ஆவல் எழுந்தது, ஒரு முடிவு எடுத்த பின் அதில் பின் வாங்குபவன் அகரன் இல்லையே தன் நினைவில் நிறைந்தவளை காண கிளம்பிவிட்டான்.

நேற்று சந்தித்த பஸ் ஸ்டாப்பிற்கு வந்ததும் சிறிது நேரம் அவளை தேடியவன், அவள் இல்லாமல் போக அவளை தேடி இவ்வளவு தூரம் வந்த தன் மீதே கோபம் வந்தது, “என்ன அகரா இது அவளை மயக்குகிறேன் என்று நீ மயங்கிவிட்டாய் போல” என்று உள் மனம் கேலி செய்ய, காரை கிளப்பிப் கொண்டு அலுவலகம் சென்றான். என்ன சார் இன்று தாமதமாக வந்திருக்கின்ரீர்கள் என்று சிரித்த குகனை நோக்கி, “இது என் அலுவலகம் தானே நான் தானே உனக்கு பாஸ், ஏன் கேட்கிறேன் என்றால் என்னை நீ கேள்வி கேட்டு கொண்டு இருந்தாயா அதான் கொஞ்சம் குழம்பிவிட்டேன்” என்று அகரன் கூறவும், இவர் கோபத்திற்க்கு முதல் போணியே நான் தான் போல வசமாய் மாட்டி கொண்டேன் என்று மனதினுள் நினைத்து கொண்டே, பாஸ் ரொம்ப சூடா இருக்கீங்க போல என வாய் விட்டு கூறிட, ஆமாம் இப்போது தான் அடுப்பில் இருந்து குதித்து வந்தேன் அதான் கொதித்து போய் இருக்கிறேன், தூக்கி பிரிட்ஜ்யில் வை கூல் ஆகிவிடுவேன்” என்று அகரன் கடுப்பில் கத்தினான்.

சிறிது நேரம் அங்கு பெரும் அமைதி நிலவியது, யார் மீதோ இருக்கும் கோபத்தை இவன் மீது ஏன் காட்டுக்கின்றோம் என்று தன் தவறு புரிய அகரனே மௌனத்தை கலைத்து பேச்சை துவங்கினான் , “கொஞ்சம் டென்ஷன் அதை உன்னிடம் காட்டி விட்டேன்” எதற்காக என்னை தேடினாய் எனவும், அந்த ஏ.கே காம்பெனியில் இருந்து ஆர்டர் வந்துள்ளது அது விசயமாக பேச தான் உங்களுக்காக காத்திருந்தேன் என்றான் குகன்.

“ஹ்ம் நாம் சொன்ன டீல் அவர்களுக்கு ஓகே தானே என்று விசாரித்து அவன் கூறிய விபரங்களை கேட்டு கொண்டு இருந்தவன், மீண்டும் அவள் சிந்தனையில் கையில் இருந்த பேனாவை கொண்டு ஏதோ கிறுக்கி கொண்டு இருந்தான், குகன் கூறிக்கொண்டு இருந்த விஷயத்தில் கவனம் இல்லாமல் இருக்க, விபரங்கள் கூறிக்கொண்டே கவனித்த குகனுக்கு ஏதோ சரியில்லை என்பது தெளிவாய் புரிந்தது, வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வருகிறார், சிறு வேடிக்கை பேச்சிற்கும் கோபம் வருகின்றது, பிசினஸ் விஷயம் பேச துவங்கினால் வேறு சிந்தனையே இல்லாமலிருப்பவர், இன்று அவர் ஆவலாய் எதிர்பார்த்த ஆர்டர் கிடைத்து தொழில் விஷயம் பேசிக்கொண்டிருக்கும் போது கவனிக்காமல் கையில் பேனாவை வைத்து கிறுக்கிக்கொண்டு இருக்கின்றார் என்று யோசித்தவன் என்ன கரண் சார் ஏதும் பிரச்சனையா என்று வினவினான்.
கையில் கிறுக்கி கொண்டு இருந்த காகிதத்தை உயர்த்தி பிடித்து பார்த்த படி, இன்று என்ன கல்லூரி விடுமுறையா ஏன் பஸ் ஸ்டாப்பிற்கு வரவில்லை என்று அகரன் ஐயமாய் கேட்க, “எந்த கல்லூரி விடுமுறை நான் எதற்கு பஸ் ஸ்டாப் வர வேண்டும்” அகரன் கேட்க வருவது என்ன என்று புரியாமல் குகன் விழிக்க, உனக்கு என்ன வேலை கொடுத்தேன் சுஹீயை பற்றிய முழுவிபரம் வேண்டும் என்று கேட்டேனே சேகரித்தயா என்று விசாரிக்கவும் தான் அகரன் எதை பற்றி கேட்கிறான் என்று புரிய “என்ன சுஹீயா!! அதற்குள் செல்ல சுருக்கமா?” அந்த அளவிற்கு வந்து விட்டதா என்று அகரன் நிலை புரிந்து தனக்குள் சிரித்த படி அவன் கேள்விக்கு பதில் தந்தான் குகன்.

நேற்று போனது அவர்கள் கல்லூரி அருகில் இருந்த பஸ்ஸ்டாப் பாஸ் காலையில் அவர்கள் அண்ணனுடன் பைக்கில் சென்றுவிடுவார்கள், இன்று மாலைக்குள் விபரம் தருவதாய் அந்த பிரைவேட் டீடெக்டிவ் சொன்னார் எப்படியும் அலுவலக நேரம் முடியும் முன் கொடுத்து விடுவார் என்று நினைக்கிறன், “அது சரி நீங்கள் எதற்கு பஸ் ஸ்டாப் போனீர்கள் உங்கள் வீட்டில் இருந்து வரும் வழி என்று கூட சொல்ல முடியாது, இது ஒரு திசை அது ஒரு திசை” ஓ அண் என்று எதையோ கூற துவங்கியவன் பாதியில் திருத்தி அந்த பெண்னை பார்க்கவேண்டும் போல இருந்ததா அதனால் தான் வர தாமதமா? இதை முதலிலேயே என்னிடம் கேட்டு இருந்தால் முழு விபரம் கூறியிருப்பேன் இல்லையா? என்று குரலில் எதையும் காட்டாமல் குகன் கேட்க, “அது என் விருப்பம் இங்கு நான் தான் பாஸ் உன்னிடம் கேட்டு கேட்டு தான் எதையும் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, நான் சொன்னதை மட்டும் செய்தால் போதும் அவள் விபரம் அறிந்ததும் எனக்கு தெரிய படுத்து”, என்று அதிகரமாய் பதில் தந்தான் அகரன்.

பதில் சொல்ல முடியாத கேள்வி வந்தால் உடனே கோபமாய் கத்தி சமாளிப்பது யார் கிட்ட நீங்கள் சொல்லவில்லை என்றால் எனக்கு தெரியாத என்ன? “கோபமாய் பார்த்து உங்கள் மனதை கொக்கி போட்டு இழுத்து விட்டார்கள் உங்கள் சுஹீ மனம் பறிபோன நீங்களோ தொலைத்த இடத்தில் தேட சென்று இருப்பீர்கள் அங்கு மனதை களவாடிய கன்னியை காணாமல் வந்த கோபம் என்மீது பாய்ந்தது ஒரு இளைஞன் இளைஞியை பார்த்து மயங்கிவிட்டான் இது வாலிப வயசு கோளாறு பாஸ் எனக்கு புரியாத என்று அகரன் மனநிலையை கனித்தவன்”, அவர்களின் விபரம் அறிய நீங்கள் ஏன் பாஸ் இவ்வளவு ஆர்வமாய் இருக்கின்ரீர்கள் என்று தன் கேள்வியை மாற்றி கேட்டான் குகன்.

அவளை பற்றி முழு விபரம் தெரிந்தால் தானே என்னால் சுலபமாய் பழிவாங்க முடியும் என்று தயங்காமல் அகரனிடம் இருந்து பதில் வர, “பழிவங்கவா? இன்னுமா பழிவாங்க மட்டும் தான் அவர்களிடம் நெருங்குவதாய் என்று உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டு இருக்கின்ரீர்கள்”, அதுவும் நல்லது தான் காதல் உங்கள் மனக்கதவை தட்டி விட்டது, இது உங்களுக்கு புரிய துவங்கினால் அதன் பின் அவர்கள் இருக்கும் திசைக்கே பெரிய கும்பிடுபோட்டு விடுவீர்கள் அதானல் நீங்கள் உணராமல் இருப்பது தான் நல்லது என்று தனக்கு தெரிந்த ரகசியத்தை கூறாமல் மறைந்தான் குகன்.

என்ன யோசிகின்றாய் என்று அகரன் வினவவும் அடாடா இப்போது நான் யோசித்து கொண்டு இருந்தது மட்டும் இவருக்கு தெரிய வந்தால் “என் இரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி விடுவார்”, என்று புரிய அது ஒன்றும் இல்லை பாஸ் இந்த மகேஸ்வரன் சாருக்கு ஒரு மகன் வேறு இருக்கின்றார், என்று சொன்னேன் இல்லையா, அவரை உங்கள் டார்கெட்டாக வைத்து ஏன் பழிவாங்க கூடாது, “நமக்கு அந்த மகேஸ்வரன் சாரை கஷ்டப்படுத்தி அதில் சந்தோச பட வேண்டும்”, அதற்கு எதற்கு தலையை சுற்றி மூக்கை தொட வேண்டும், நேரடியாகவே செய்து விடலாம் இல்லையா, வீணாய் பழைய முறைப்படி காதலித்து ஏமாற்றி அதனால் கஷ்டம் கொடுத்து பாருங்கள் சொல்லும் போதே மூச்சுவாங்குகின்றது, தேவையில்லாமல் நேரம் செலவழித்துக் கொண்டு, “உங்க ரேஞ்சுக்கு அந்த பையன் கூட நேருக்கு நேர் மோத வேண்டியது தானே கொஞ்சம் கெத்தாவும் இருக்கும் என்று யோசனை சொன்னான், குகன்.

ஏதும் பேசாமல் உதட்டில் புன்னகை பூசிக்கொண்டு எழுந்து வந்தவன், குகன் அருகில் சென்று அவன் சட்டை காலரை சரிசெய்து கொண்டே, “ உடம்பு எப்படி இருக்கு” எனவும், இந்த நிமிடம் வரை நன்றாக இருந்தது, இனி எப்படி என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று பயந்து போய் குகன் கூற, இல்லை கொஞ்ச நேரம் பேசியதற்கே இப்படி மூச்சுவாங்குகின்றது என்று அவன் சொன்ன வார்த்தையையே அகரன் திருப்பி படிக்க. “அடடா சும்மா இல்லாமல் ஓரமாய் போன பிரச்சனையை வம்படியாய் இழுத்து என் தலை மீது போட்டுக்கொண்டேன்” அகரனை கோபப்படுத்தி விட்டது புரிந்து அவனிடம் சமாதான பேச்சுவார்த்தை துவங்கினான், குகன்.

“அது வந்து பாஸ் நான் விசாரித்த வரை சுஹீரா மேடம் கொஞ்சம் கொஞ்சம் என்ன நிறையவே பிடிவாதம் பிடித்தவர்கள் மாதிரி தெரிகின்றது, அப்படியே உங்களை போல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்” இன்று என்னடா இப்படி பயத்தில் உண்மையை உளறிக்கொட்டி கொண்டு இருக்கிறேனே, என்று மனதில் நினைத்த படி, அகரனை பார்க்க அவனோ கொஞ்சமும் அசையாமல் பழைய இடத்தில் நின்று கொண்டு இருந்தவன் கண்களில் மட்டும் கூர்மை கூடியிருந்தது, புலியின் வேட்டை பார்வையை அது நினைவுறுதியது, “புலி பாய்ந்தால் கூட ஓடி ஒழியலாம் ஆனால் பதுங்கினால் இன்னும் ஆபத்து தான்”, அகரன் அமைதியும் புலியின் பதுங்களும் ஒன்று தான் சமயம் பார்த்து, தப்பிக்க முடியாமல் பாயும் இவன் கோபமும் அது போல் தான் என்று புரிந்திருந்தவன், இருந்தும் கூற வந்ததை பாதியில் நிறுத்தினால் இன்னும் கோபம் அதிகமாகும் என்று தான் சொல்ல வந்ததை முழுதாய் சொல்ல துவங்கினான் குகன், ஆனால் “அவர் அண்ணன் சுகந்தன் அப்படி இல்லை பாஸ் சாதுவானவர் ஈஸியா நம் வழிக்கு கொண்டு வந்து விடலாம் நம்ம வேலையும் சீக்கிரம் முடிந்து விடும், எப்படி என் யோசனை என்று அப்பாவியாய் கேட்டான் குகன்.

“வரவர உனக்கு என் மீது இருந்த பயம் போனது வாய் கொழுப்பு கூடி விட்டது யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசிவிடுகின்றாய்”, இப்போது கூட பார் முன் யோசனை இன்றி தான் நினைத்ததை மட்டும் சாதிக்கும் பிடிவதகாரன் என்கின்றாய், நேரடியாக மோத தைரியம் இல்லாமல் ஒரு பெண்னை வைத்துக் காய் நகர்த்தி காரியம் சாதிக்கும் கோழை என்று என்னை சொல்லாமல் சொல்கின்றாய், அதுமட்டும் இல்லாமல் சாதுவான பிள்ளை பூச்சியிடம் என் பலத்தை காட்ட சொல்கிறாய், அந்த அளவிற்கு தான் என்னால் முடியும் என்று என் முன்பே நின்று எவ்வளவு தைரியமாக பேசுகின்றாய், உன்னை என்ன செய்யலாம் என்று அகரன் வினவ,
“இன்னைக்கு யார் முகத்தில் முழித்தேன் என்று தெரியவில்லை நானே வாய்யை கொடுத்து வசமாய் மாட்டி கொள்கிறேன்” என்று தனக்குள் புலம்பி கொண்ட குகன். “நீங்கள் இது வரை எதிலும் தோற்றது இல்லை, இதில் தோற்றுவிட்டால், அதான் சொன்னேன்” அய்யய்யோ முறைக்கிறாரே மறுமடியும் உண்மைய உளறிவிட்டேனா, என்று பயம் கொள்ள துவங்கினான் குகன்.

அகரன் தோற்றுவிடுவானா என்று கோபமாய் துவங்கியவன் அன்று அவர் யாரை வைத்து என்னை அவமான படுத்தினார் என்பது மறந்து விட்டதா, அவர் கூறிய வார்த்தை என்ன அதற்கு நான் “அவர் மகளுக்கு என் மீது காதல் வரவைத்தால் தானே சரியாய் இருக்கும் அவர் மகனை எப்படி மயக்குவது, நான் அந்த ரகம் இல்லையே”, என்று உதட்டை பித்துகியபடி குகன் கன்னத்தை மெதுவாய் தட்டுவது போல கொஞ்சம் வலிக்கும் படியே அடித்து, தொலைத்த இடத்தில் தேடாமல், வேறு இடத்தில் தேட நான் என்ன முட்டாளா? என்று தன் கோபத்தை அடக்கிய குரலில் கூறினான் அகரன். “இதற்கு மேல் தாங்காது தலைவா உங்கள் பாதம் சரணடைகிறேன் நீங்கள் நல்லவர், நினைத்ததை சாதிக்க கூடிய வல்லவர், உங்களால் முடியாதது எதுவும் இல்லை”, என்று முழுதாய் சரணடைந்தான் குகன். அவன் கூறிய தினுசில் வாய்விட்டு சிரித்தவன் அந்த பயம் இருக்கட்டும், “ என்னிடம் பேசுமும் யோசித்து பேசு இல்லை உனக்கும் ஒரு ஸ்கேட்ச் போட வேண்டி வரும்”, என்று மிரட்டி விட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தான் அகரன்.

அதன் பின் தங்கள் வேலையில் கவனம் செலுத்தியவர்கள் மாலை வரை வேறு நினைவின்றி இருக்க. மாலை சரியாய் அலுவல் முடிந்து கிளம்பும் நேரம் ஒரு பைலை கொண்டு வந்தார் ஒருவர், அதை பெற்றுக்கொண்டு அகரனை சந்திக்க சென்றான் குகன். தன் முன் இருந்த கம்ப்யூட்டரை கவனமாய் பார்த்து கொண்டு இருந்தவன், குகன் உள்ளே வர அனுமதி கேட்க அதில் இருந்து பார்வையை திருப்பி ம் வா குகா நீ இன்னும் கிளம்பவில்லையா என்று விசாரித்தான், அகரன். பாஸ் நீங்கள் கேட்ட விபரம் என்று அந்த பைலை நீட்டியவனிடம் இருந்து அதனை வாங்காமல் இதை நாளை பார்த்து கொள்கிறேன் வைத்து விட்டு கிளம்பு என்றான் அகரன். பாஸ் இது சுஹீரா பற்றிய விபரம் அடங்கிய பைல் இப்போது தான் அந்த பிரைவேட் டீடெக்ட்டிவ் கொண்டு வந்து கொடுத்தார் குகன் கூறி முடிக்கும் முன் அதனை பெற்று கொள்ள கையை நீட்டியவன் குகன் முகத்தில் இருந்த கேலி சிரிப்பில் சுதாரித்து நீயே படித்து தேவையான விபரங்களை மட்டும் கூறு என்று உத்தரவிட்டான், அகரன்.

அவள் படித்த பள்ளி கல்லூரி என்று விபரங்கள் வரிசையாய் வாசிக்க பட, அவள் விருப்பு, வெறுப்புகளை, நினைவில் நிலையிருத்தி கொண்டான், அகரன். “பாருங்க பாஸ் நல்ல மார்க் எடுத்தும் ஒரு சாதாரண கல்லுரியில் படிக்கிறார்கள்” என்று மெச்சுதலாய் குகன் கூற “படிக்கும் எண்ணம் இருப்பவர்கள், எங்கு வேண்டும் என்றாலும் நல்ல படியாக படிக்கலாம் புரிந்ததா” என்று அகரன் கூற குகனுக்கோ அகரன் செயலில் சுஹீரா மீது பழிதீர்க்கும் எண்ணம் மட்டும் இல்லாமல் கொஞ்சம் காதல் ஈடுபடும் வந்து விட்டது என்ற உண்மை தெளிவாய் புரிந்தது. பாஸ் “அவர்களுக்கு தினமும் காலையில் ஜாக்கிங் போகும் பழக்கம் வேறு உண்டு போல உங்களை போல சில நேரம் சைக்கிளிங் வேறு உண்டு கடற்கரை ரோட்டில் அடிக்கடி பார்க்கலாம்” பாஸ் உங்களுக்கு செம லக்கு இன்று பார்க்க முடியவில்லை என்று வருத்தப்படீர்கள் தானே, இதில் மேடம் போட்டோ உள்ளது என்று குகன் கூற “சரி சரி அந்த பைலை என்னிடம் கொடுத்துவிட்டு நீ கிளம்பு என்று அதனை பெற்று கொண்டு குகனுக்கு விடை கொடுத்தான் அகரன்.

“அதானே காரியம் முடியவும் கழட்டிவிட்டுவிடுவீர்களே!” என்று முணுமுணுத்தபடி மேஜை ஓரமாய் கசக்கி கிடந்த காகிதத்தை அகரன் அறியாமல் எடுத்துக்கொண்டு வெளியேறி சென்றவனை கண்டு கொள்ளாமல், தன் கைக்கு கிடைத்த காகிதங்களில் அவளை அறியும் முயற்சியில் இறங்கினான், அகரன். காலையில் சைக்கிளிங் செல்லும் போது அவளுக்கே தெரியாமல் எடுக்க பட்டது ஒரு கால் தரையில் இருக்க காற்றில் களைந்த முடியை ஒரு கை கொண்டு கோதிவிட்ட படி எதிரில் இருந்தவரை ஏளனமாய் பார்த்து சிரித்த படி, அவள் வீட்டு பால்கனியில் நின்று போன் பேசிக்கொண்டு இருந்தவள் சந்தோஷத்தில் அழகாய் கன்னத்தில் குழி விழ சிரித்த படி என்று புகைபடங்கள் இருந்தன. இரண்டு புகை படத்தையும் கையில் ஏந்தி அவள் சிரிக்கும் கண்களை ரசித்த படி “ ம் சிரிக்கும் போது கூட அழகாய் தான் இருக்கின்றாள் இந்த கண்களும் கன்னகுழியும் கூட கொள்ளை கொள்ளும் அழகுதான்” என்று அந்த புகைப்படத்தை எடுத்து பத்திரப்படுத்தி கொண்டவன், தன் அறையை விட்டு வெளியே வர குகனும் கிளம்பி கொண்டு இருந்தான். அகரனை கண்டதும் அவன் முகத்தில் பரவிய புன்னகையில் ஏளனம் பரவி இருக்க “என்ன சிரிக்கிறாய் என்று வினவியனிடம், அது வந்து கண் என்று துவங்கியவன் கண்ணில் தூசி” என்று கூறி முடிக்க, இன்று காலையில் இருந்து நீ சரியில்லை கழண்டது போல் தான் உளறிக்கொண்டு இருக்கின்றாய் நாளை வரும்போது தெளிவாய் இல்லை வேறு அகரனை பார்க்க வேண்டிவரும் என்று அகரன் எச்சரித்து விட்டு சென்றான்.

அகரன் சென்றதும் அவன் முதுகை பார்த்து மீண்டும் சிரிப்பை தொடர்ந்தவன், தன் கையில் இருந்த கசங்கிய காகிதத்தை பார்த்து நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும் இன்றே அகரனின் புது அவதாரத்தை கண்டுபிடித்து விட்டேன் “புது அவதாரம் காதல் அவதாரம்”,
காலையில் நான் கூட ஏதோ கிறுக்கிகொண்டு இருக்கின்ரீர்கள் என்று நினைத்தால் உங்களை கிறங்கடித்த கண்களை வரைந்து கொண்டா இருந்தீர்கள், என்று அகரன் மனதில் உண்டான மாற்றத்தை எண்ணி மீண்டும் தனக்குள் சிரித்துக்கொண்டான் குகன்.

ஆணவம் கொண்டு
அலைந்தேன் நானடி…
ஒரு அலட்சியபார்வையில்
என்னை அடிமை
செய்தாய் நீயடி …