அரக்கனோ அழகனோ 06

அரக்கனோ அழகனோ 06
0

அழகன் 6

கர்வமாய் உன்னை
கவர்ந்து உன்னை
வீழ்த்திட நினைத்தேன்
நானடி…
உன் அளவில்லா
திமிரில் திசைமாறி
உன்னில் தொலைந்திட
துடிக்கிறேன்
ஏனடி…

அகரன் சுஹீரா நினைவில் இருக்க அதே நேரம் அவளும் அகரன் நினைவில் தான் இருந்தாள், ஆனால் அவனை போல் இல்லாமல் கொஞ்சம் கோபமாய் வசை மழையில் குளிப்பாட்டி கொண்டு இருந்தாள். கல்லுரியில் தோழிகள் அவள் நிலை கண்டு கேலி செய்து கொண்டு இருந்தனர், “என்னடி இன்றைக்கு நம் புலி குட்டி பூனை குட்டி போல் பம்முகின்றது” என்று அவள் இடையை ஒருவள் கிள்ளிட, “ உன்னிடம் எத்தனை முறை சொல்வது கண்ட இடத்தில் கை வைக்காதே தொட்டு பேசதே” என்று தன்னை தீண்டியவன் மீது காட்ட முடியாத கோபத்தை தன்னை சீண்டியவளிடம் சீறிக் கொண்டு இருந்தாள் சுஹீரா. “என்ன பானு அவள் குணம் தெரிந்தது தானே ஏன் அவளை வம்பு செய்து கொண்டிருக்கின்றாய்” என்று ஒருவள் வினவ, “எப்போதும் கோபப்படுவாள் தான், ஆனால் இன்று கோபம் இல்லை வெறுப்பு கவனித்தாயா இப்போது கூட பார் முகத்தை எப்படி வைத்து உள்ளாள், அருவருப்பாய்” என்று பானு கூறிட மற்ற தோழிகளும் அதனை கவனித்து என்ன என்று விசாரித்தனர் “எல்லாம் அந்த பொறுக்கி தான் காரணம்” என்று சிடுசிடுத்தாள் சுஹீரா. “யாரை சொல்கிறாய்?” என்று ஒருவள் புரியாமல் வினவினாள்.

“ இந்த இரண்டு நாட்களாக சுஹீரா, பொறுக்கி, ரவுடி, திமிர்ப்பிடித்தவன், சைத்தான் இப்படி புகழ்ந்து தள்ளும் ஒரே ஆள் ஒன் அண்ட் ஒன்லி நம் பஸ் ஸ்டாப் ஹீரோ தான்” என்று பானு விளக்கம் தந்தாள். “ஏண்டி நீ இன்னும் அவனை மறக்கவில்லையா” என்று அனைவரும் ஒருசேர கேள்வி கேட்க “எனக்கு மட்டும் அவனை நினைத்து கொண்டேயிருக்க ஆசையா என்ன?, இன்று மீண்டும் அவனை பார்த்தேன் ஜஸ்ட் மிஸ் தப்பித்து விட்டான், இல்லை உண்டு இல்லை என்று ஒரு வழி செய்து இருப்பேன்” என்று கோபம் தனியாமல் கூறினாள் சுஹீரா.

“என் ஹீரோவை எங்கு பார்த்தாய் நாளை நானும் உன்னுடன் வந்தால் அவரை பார்க்கலாமா” என்று கண்களில் கனவுகளுடன் வினவினாள் பானு என்ன உன் ஹீரோவா இது எப்போதிருந்து என்று மற்ற தோழிகள் கேலி செய்ய அன்று “எனக்காக ஆறுதல் தந்து தைரியம் சொன்னார் பார் அன்றிலிருந்து என்னை பார்த்து அழகாய் சிரிக்க கூட செய்தார்” என்று வெட்கத்துடன் பானு கூற “உனக்காக வந்தவன் என்றால் உனக்காக சண்டையும் போட்டிருக்க வேண்டியது தானே”, அதை விட்டு தவறினை தட்டி கேட்டவளை திட்டிவிட்டு உன்னை பார்த்து பல் இளித்தவன் எல்லாம் உனக்கு ஹீரோ உனக்காக பேசியவள் வில்லி “கலி காலமடா கந்தா” என்று தன் தலையில் அடித்து கொண்டாள் சுஹீரா. என்னை எதுவேண்டும் என்றாலும் சொல்லிக் கொள். ஆனால் என் ஹீரோவை ஏதும் சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் என்று பானு முறைத்தாள்.

உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்று பதிலுக்கு முறைத்தபடி “கண்டகண்ட பொறுக்கி எல்லாம் ஹீரோவா?” இன்று அவன் நடந்து கொண்ட முறையை சொன்னால் நீயே அவனை பொறுக்கி என்று தான் சொல்லுவாய் என்று காலையில் நடந்தில் சைக்கிள் மோதியது சொன்னவள், அவன் அணைத்ததை மறைத்தாள், அவன் கூறிய கவிதைக்கு தான் கொடுத்த பதிலடியை பெருமையாய் சொன்னாள் இப்படி பாதி கூறி பாதி மறைத்து ஒருவழியாய் சுஹீரா நடந்த கதையை கூறி முடிக்க சுற்றி இருந்த தோழிகள் அனைவரும் “ஓ மோதலில் மலரும் காதல் இது தானா” என கேலி செய்ய பானு முகம் மட்டும் சோகத்தில் வாடியது.

“காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை சும்மா சிவனே என்று இருப்பவர்களையும் கெடுப்பது உங்களை போல அறைவேக்காடுகள் தான்” என்று சலிப்புடன் கூற நாங்கள் கெடுக்கவுமில்லை கொடுக்கவுமில்லை நீ சொன்னதை வைத்து தான் சொல்லுகின்றோம், “அந்த ரோமியோ உன் காதல் கடலில் விழுந்து எழ முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றார்”, பார்த்த அடுத்த நாளே கவிதை சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது என்றால் எந்த அளவிற்கு முற்றிவிட்டது என்று நீயே கற்பனை செய்துகொள் என்று மீண்டும் கூற, முற்றிவிட்டது தான் அவனுக்கு இல்லை உங்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் என் கற்பனையிலும் சரி கனவிலும் சரி என்றுமே அது நிகழாது, “அவனை பார்த்தாலே தெரியவில்லை பெண்களை எந்த அளவிற்கு மதிப்பான் என்று அவன் கண்களில் பெண்களுக்கான மரியாதையே இல்லை என்னவோ பெண் இனம் எல்லாம் அவன் காலடியில் சேவை செய்து கொண்டு இருக்கவே படைக்க பட்டவர்கள் போல் எண்ணம் இந்த உலகத்தில் உள்ள கடைசி ஆண் அவன் தான் என்றாலும் இவனை திரும்பி கூட பார்க்கமாட்டேன்”, இதில் காதல் எங்கிருந்து வரும் இவனை போன்று பெண்களிடம் இழிவாக நடப்பவர்கள் எல்லாம் என் கால் தூசிக்கு சமம் என்று உதாசினபடுத்தி பேசினாள் சுஹீரா.

இவளை கட்டிக்கொள்ள போகின்றவன் பாவம் இவளிடம் என்ன பாடுபட போக்கின்றானோ அவன் கை மேலே படரும் முன் “பெண் சுதந்திரம் ஆணுக்கு பெண் சமம்” என்று பெரிய பாடம் எடுத்தே பாதி இரவை ஓட்டி விடுவாள் அப்புறம் என்ன பட்டினி தான் இவள் கட்டி கொண்டதற்கு காவிகட்டி சாமியாராய் போயிருக்கலாம் என்று வாழ்க்கையையே வெறுத்து விடுவார். என்று அனைவரும் கேலியில் இறங்கிட சுஹீராவிற்கு மட்டும் அவன் முகம் நினைவில் வந்தது, ஏனோ காலையில் அவன் கை அணைவில் நின்றது நினைவு வர அவன் தொட்ட இடம் ஏதோ போல் குறுகுறுக்க சொல்ல முடியாத உணர்வில் முகம் சிவந்தாள். இது என்ன புதிதாய் உள்ளது வழக்கமாய் இது போல கேலி செய்தால் வேறு வசனம் சொல்லி எங்களை அடக்குவாய் இன்று நீயே அடக்கமாய் முகம் சிவந்து கொண்டு இருக்கின்றாய் சரியில்லையே தப்பாச்சே என்று ஒருவள் சுஹீராவின் மாற்றம் கண்டு உணர்ந்து கேலி செய்ய முகம் கருக்க எப்போதும் இதே நினைவு தான் ஒழுங்காய் வந்தோமா படித்தோம் என்று இல்லாமல் எப்போதும் பசங்களை பற்றியே பேச்சு என்று தன் வழக்கமான வசனத்தை கூறி கோபமாய் கூட்டத்தில் இருந்து கழண்டு செல்ல முயன்றாள்.

அவள் வழி மறைத்து நின்றவள் இன்று வேண்டும் என்றால் நாங்கள் கூறியது வேடிக்கையாய் இருக்கலாம், ஆனால் ஓரு நாள் இது உண்மையாய் மாறும் என்று உன் முக மாற்றம் சொல்கின்றது என்று கூற “நீ என்ன கிளி ஜோசியம் போல முக ஜோசியம் பார்ப்பவளா” வழியை விடு என்று மிடுக்காய் மொழிந்து தன் வழியை பார்த்து சென்றாள் சுஹீரா. மாலை பஸ் ஸ்டாப்பில் யாரோ தன்னை பார்க்கும் உணர்வு தோன்ற பிறர் கவனிக்காத வகையில் தன் தோழிகளுடன் பேசிக்கொண்டே சுற்றும்முற்றும் பார்வையை செலுத்திவள் அங்கு தன்னையே கவனித்தபடி ஒருவன் நிற்க யார் இவன் தெரிந்த முகமாகவும் தெரிகின்றது பார்வையே சரியில்லையே எதாவது வம்பு செய்தால் கவனித்து கொள்ளலாம் என்று அமைதியானாள் சுஹீரா.

அவளும் தன்னை கண்டுவிட்டது புரிய மெதுவாய் அவளிருந்த பஸ் ஸ்டாப் அருகில் நகர்ந்தவன் “ஹாய் நீ சுஹீரா தானே என்னை நினைவிருக்கின்றதா?” நான் சுகன் தோழன். படிக்கும் போது அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளேன் மறந்துவிட்டதா “என் பெயர் வருண்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான் அந்த புதியவன். அதற்குள் அவனை அடையாளம் கண்டு கொண்ட சுஹீரா “ஹாய் நீங்கள்… இப்போது நியாபகம் வந்து விட்டது நீங்கள் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக அண்ணன் சொன்னன்” என்று சுஹீரா கூறவும், அவளுக்கும் தன்னை நினைவிருப்பது அறிந்து சந்தோஷத்தில் முகம் பிரகாசமாக “இங்கு ஒரு பிசினஸ் விசயமாக வந்தேன்”, இரு தினங்களுக்கு முன்பு தான் சுகனை சந்தித்தேன் அவன் தான் நீ இந்த கல்லுரியில் படிப்பதாய் சொன்னான் இந்த பக்கம் கொஞ்சம் வேலை இருந்தது அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று காத்திருந்தேன் “பார்த்து நான்கு ஐந்து வருடங்கள் இருக்குமா?”, உனக்கு என்னை நினைவு இருக்குமோ என்று பயந்து கொண்டே தான் இவ்வளவு நேரம் ஒதுங்கி இருந்தேன் என்று அசடுவழிந்த படி சிரித்தான், வருண்.

“எனக்கும் முதலில் அடையாளம் தெரியவில்லை”, நீங்கள் வந்து சொன்னதும் தான் நினைவு வந்தது என்று சுஹீரா கூறிக்கொண்டு இருக்கும் போதே, நல்லவேளை பக்கத்தில் வந்து நீங்கள் யார் என்று செல்லிவீடீர்கள் இல்லை இங்கு நடப்பதே வேறாக இருந்திருக்கும் “உங்கள் பளப்பள கன்னமும் பழுத்திருக்கும்” என்று தாங்களும் அங்கு இருப்பதை காட்டி கொண்டனர் தோழிகள். ஆனால் அவன் பார்வையோ சுஹீராவை விட்டு விலகாமல் இருந்தது உன்னை தேடி தான் வந்தேன் சுஹீரா எனக்கு உன் குணம் தெரியாதா அப்போதே உன் பின் வந்தவனை புரட்டி எடுத்தவள் அதனால் தான் பயத்தில் பத்து அடி தள்ளி இருந்தேன், “என்னால் உன்னை மறக்க முடியாமல் உனக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன் நீயும் என்னை மறக்காமல் இருக்கின்றாய்” இது போதும் எனக்கு என்று மனதில் நினைத்து கொண்டிருந்தவனை, காரின் ஹாரன் சத்தம் சுயநினைவிற்கு கொண்டு வந்தது. காரின் ஹாரன் விடாமல் ஒலித்து கொண்டிருக்க “யாரிது சரியான முட்டாளாய் இருப்பான் போல” நின்று கொண்டிருக்கும் காரில் இருந்து ஹாரன் அடிக்கிறான் என்று எதிர்திசையிலிருந்த கருப்பு நிற காரை பார்க்க அது முழுவதும் கருப்பு கண்ணாடியால் மூடபட்டு இருந்தது, “ஏதாவது சின்ன குழந்தை உள்ளிருந்து அடித்து கொண்டு இருக்கும்”, குழந்தையை தனியாய் காரில் விட்டு எங்கு சென்று இருப்பார்கள் என்று குழந்தையின் பெற்றோரை திட்டிவிட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தான் வருண்.

மீண்டும் காரின் ஹாரன் சத்தம் கேட்க இம்முறை சுஹீரா செல்லவேண்டிய பஸ் வந்திட அவள் கிளம்பி சென்றாள். வருணுக்கு ஏமாற்றமாய் போனது அவனுக்கு, “சுஹீராயுடன் இன்னும் கொஞ்ச நேரம் பேசவிடாமல்” சரியாய் அவளை கண்களால் ரசிக்கும் போது மட்டும் ஹாரன் செய்து தொந்தரவு செய்து கொண்டு இருந்தவன் மீது வந்த கோபத்தில் கார் இருந்த திசையை நோக்கி நகர்ந்தான் வருண். காரின் அருகில் சென்று காரின் கண்ணாடியை திறக்கும் படி செய்கை செய்ய கண்ணாடி திறக்கப்படவும் “உன் மனதில் என்ன பெரிய இவன் என்று நினைப்பா ஓயாமல் ஹாரன் அடிக்கிறாய் ஒரு இடத்தில கூட்டமாய் பெண்கள் நிற்ககூடாதே உடனே ஹீரோ சீன் போட காரை எடுத்து கொண்டு வந்துவிடுவான்கள்” என்று கோபமாய் கேட்டான் வருண்.

காரில் அமர்ந்திருந்தவனோ ஏதும் பதில் சொல்லாமல் காரில் இருந்து இறங்கி வந்து அவன் முன் வந்து ஸ்டைலாய் தன் கார் மீதே சாய்ந்து கொண்டு, தன் பாண்ட் பாக்கெட்டில் கைகளை நுழைந்து நின்றபடி பேச துவங்கினான் கார்காரன். “என்ன கேட்டாய் பெரிய இவன் தான் என்ன செய்யப்போகின்றாய்” என் கார் என் ஹாரன் என் கை நான் அடிக்கிறேன், உனக்கு என்ன வந்தது நான் ஹீரோ சீன் போடுகின்றேன் என்றாள் “நீ அங்கு என்ன செய்து கொண்டு இருந்தாயாம் பாணி பூரி விற்று கொண்டு இருந்தாயா?”, என்று தன் தலைமுடியை விரல் கொண்டு கோதியபடி கேள்விகேட்டான் கார்காரன். அவனின் தோரனையும் கேள்வியும் வருணுக்கு கோபத்தை தூண்ட நான் திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண் என்று அவன் கூறி முடிக்கும் முன் கன்னத்தில் கை ரேகை பதிய அடிவாங்கி வாய்யை மூடி கொண்டான் வருண்.

பலர் பார்க்க தனக்கு கிடைத்த அடியையை அவனால் பொறுத்துக்கொள்ள முடியாவில்லை அறைவாங்கிய கன்னத்தை ஒரு கையால் தடவிய படி “நான் அவளை கல்யாணம் செய்தால் உனக்கு என்ன வந்தது”, அவள் அண்ணனுக்கு கூட எங்கள் காதலை பற்றி தெரியும் கூடிய சீக்கிரம் எங்கள் திருமணம் தேதியும் குறிக்கப்போகின்றார்கள் எதையும் தெரியாமல் வீணாய் வம்பு செய்யாதீர்கள்” என்று பயம் கலந்த குரலில் வருண் கூற ஒற்றை புருவம் மட்டும் உயர்த்தி “வீண் வம்பு செய்ய நான் என்ன உன்னை போல வெத்துவேட்டு என்று நினைத்தாயா? நான் இந்த கதையின் வில்லன் இல்லை ஹீரோ சுஹீராவின் ஹீரோ இனி ஒரு முறை அவள் பின் உன்னை பார்த்தேன் என்றால் மைதாமாவை குழைத்து வைத்தது போல் இருக்கும் உன் முகத்தில் கோலம் போட்டு விடுவேன்” என்று மிரட்டினான் அவன்.

சுஹீராவும் உன்னை காதலிக்கிறாளா என்று மீண்டும் வருண் கேள்வி எழுப்ப “நீ இப்படியெல்லாம் சொன்னால் கேட்க மாட்டாய் போல” என்று மீண்டும் கை ஓங்கினான், மீண்டும் அறை கிடைத்துவிடுமோ என்று பயத்தில் இரு கைகளும் கன்னத்தை மறைத்து கொண்டு வேகமாய் இடத்தை காலி செய்தான் வருண். தலை தெறிக்க ஓடியவனை ஏளனமாய் பார்த்து சிரித்தபடி தனது காரில் ஏறி அமர்ந்தவன் தன் கைபேசியை எடுத்து அதில் தொடர்பு கொண்டு காத்திருந்தான். மறுமுனையில் பேசத்துவங்கவும் நீ நம் வக்கீலுடன் சென்று நான் சொன்ன படி எல்லாவற்றையும் இன்றே செய்துவிடு நாளை அவள் என் முன் இருக்க வேண்டும் என்று தன் திட்டத்தை தாமதமில்லாமல் உடனே நிறைவேற்ற உத்தரவிட்டான் அகரன்.

பாஸ் “இன்றே செய்ய என்ன அவசரம்” என்று குகன் எதிர் கேள்விகேட்க “சொல்வது புரியவில்லை” என்று அகரன் எரிச்சலில் நடந்ததை கூறி “ஒரு சைனா பொம்மை எல்லாம் என்னிடம் போட்டிக்கு வருகின்றது, அவள் அண்ணன் கிட்ட பேசிட்டேன் தேதி குறிக்க போகின்றோம் என்று என்ன குதிகுதிக்கின்றது, என் கண் முன்பே சுஹீயை ரசித்து கொண்டு இருக்கிறான், வந்த கோபத்தில் முகத்தில் இரத்த கோலம் போட்டு இருப்பேன் என்னை கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணி பொறுமையாக எச்சரித்து அனுப்பிவைத்தேன் இன்னும் இவளை விட்டு வைக்கமுடியாது என்னிடம் அப்படி முகத்தில் அடித்த மாதிரி பேசியவள் இவனிடம் சிரித்துசிரித்து பேசிக்கொண்டு இருக்கின்றாள்” என்று கோபமாய் காரணம் சொன்னான் அகரன்.

“ஓ பொசசிவ்னஸ் பாஸ்… காதல் கதையில் சூடு பிடிக்க துவங்கிவிட்டது போல இதை பார்த்தால் பழிவாங்க துடிப்பது போல இல்லையே எப்படியாவது அவர்களை உங்கள் பக்கத்தில் கொண்டுவர துடிப்பது போல் அல்லவா இருக்கிறது” என்று அகரன் பதட்டத்தின் காரணம் புரிந்து கொண்ட குகன் தனக்குள் எல்லாவற்றையும் பேசி முடித்து கொண்டு அகரன் செய்ய சொன்ன வேலையை செய்ய கிளம்பினான்.

அகரன் கட்டளை படி சுகந்தன் கையெழுத்து போட்டுபணம் வாங்கிய பத்திரத்தை எடுத்து கொண்டு வக்கீலுடன் சென்று அகரன் சொன்னபடி செய்தான் குகன். வீடு வந்து சேர்ந்த சுஹீரா, வழக்கமான தன் பணிகளை முடித்து கொண்டு தன் தாயின் திட்டுகளை தித்திப்புடன் அனுபவித்து அவர் கையால் தயாரித்த காபியை சுவைத்து கொண்டு இருந்தாள். அலுவலகம் முடிந்து வந்த மகேஷ்வரன் மற்றும் சுகந்தனை முகத்தில் புன்னகையுடன் எதிர்கொண்டவள் சுபத்ரா செய்து வைத்திருந்த மாலை சிற்றுண்டியெல்லாம் தானே செய்தது பெருமையாய் அவர்கள் முன் பரப்பினாள். மகளுக்காக முகத்தில் புன்னகையுடன் உண்டு முடித்து இருவரும் தனியே சென்று அலுவலக பணிகளை விவாதித்து கொண்டனர், மறுநாள் காலையில் தன் சொந்த வேலைகளை முடித்து கொண்டு வெளியே வர சுபத்ரா மீண்டும் அவரின் வழக்கமான வசனங்களை தொடங்கினார்.

“கல்யாண வயது பெண் காலகாலத்தில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு வீட்டு வேலைகளுக்கு ஒத்தாசையாக இருப்பதை விட்டு ஆண் பிள்ளை போல் தன் வேலைகளை மட்டும் கவனித்து கொண்டு தண்ணி தெளித்து விட்ட தறுதலை போல சுற்றி திரிகின்றாய்”, உன்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கின்றேன் நீ என்ன என்றால் யாரையோ சொல்வதை போல் உட்கார்ந்து இட்லியை வதம் செய்து கொண்டு இருக்கின்றாய் என்று தன் மகளுக்கு வசை மாலை சூடி கொண்டு இருந்தார் சுபத்ரா சுஹீராவின் தாய்.

அம்மா “திட்டுவது உன் உரிமை அதை நீ ரொம்ப அழகாக செய்கின்றாய் கேட்பது என் கடமை அதை நான் கடனே என்று கேட்கிறேன், இதன் இடையில் என் வயிறு என்ன பாவம் செய்தது உன் மீது கோபப்பட்டு இந்த சுவையான இட்லி மணக்கும் சாம்பார் கமக்கும் காரச்சட்னியை தியாகம் செய்ய சொல்கின்றாயா?, அது மட்டும் இல்லை, நீ எவ்வளவு திட்டினாலும் என் மீது இருக்கும் பாசத்தால் கோபப்பட்டு சாப்பிடாமல் போன என்னை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்தி சிந்தி நீயும் சாப்பிடாமல் இருப்பாய்!, பெற்ற தாயை பட்டினி போட்ட சாபம் எனக்கு வேண்டாம்மா” என்று தன் அன்னைக்கு பதில் தந்துகொண்டே தன் தட்டில் இருந்ததை காலி செய்தாள் சுஹீரா.

பாருங்கள் எல்லாம் நீங்கள் கொடுக்கும் இடம் தான் வீட்டில் எந்த வேலையும் செய்வது இல்லை கேட்டாள் பதிலுக்கு பதில் தருக்கின்றாள், இப்படியே போனால் இவளை கட்டிக்கொடுக்கும் இடத்தில் பெண்ணை வளர்த்து வைத்திருக்கும் லட்சணத்தை பார் என்று என்னை தான் கரித்து கொட்டுவார்கள் என்று காலை உணவிற்கு வந்த மஹேஸ்வரனிடம் அவர் மகளின் செயல் குறித்து முறையிட்டார் சுபத்ரா.

மகள் முகம் வாட பொறுக்காமல் அப்படி திட்டும் குடும்பத்தில் எல்லாம் என் பெண்ணை கட்டி கொடுக்கமாட்டேன், என் மகளை ராணி போல் தங்க தட்டில் வைத்து தங்குபவனுக்கு தான் கொடுப்பேன் என்று பெருமை பேசிக்கொண்டார், மகேஸ்வரன். “விடுங்கள் அம்மா இங்கு இருக்கும் வரை சுதந்திரமாய் இருப்பாள்” பின் கணவன் வீட்டில் எல்லா வேலைகளையும் இவள் தானே செய்யவேண்டும். இங்கு இருக்கும் வரை நிம்மதியாய் இருக்கட்டும் என்று தன் தங்கைக்காகபரிந்து பேசினான் சுகந்தன். “ஷ் எருமை வலிக்குதுடி” உனக்காக பேசியதற்கா இப்படி கிள்ளினாய் என்று வலி தாங்க முடியாமல் அவள் கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டே சுகன் கேட்க, “அது தான் அதே தான் நீ எனக்காக பேசினாய் பார் அது கனவா இல்லை, நினைவா என்று குழப்பம் அதான் கிள்ளி பார்த்தேன்” இது என் கனவு இல்லை நிஜமாக நீ எனக்காக பேசினாயா? என்று ஆச்சர்யத்தில் விழிவிரித்து வினவினாள் சுஹீரா. எனக்கு வேண்டும் உனக்காக பேசினேன் பார் இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று சுகந்தனும் காலை உணவு முடிக்க, இருவரும் இப்படியே ஒருவரை ஒருவர் கேலி செய்தால் படி கிளம்பினர் சுஹீராவை கல்லூரியில் விட்டு சுகன் அலுவலகம் வந்து விடுவான், மகேஸ்வரன் தனியாய் அலுவலகம் செல்வார் இது அங்கு வழக்கமாய் நடைமுறை படுத்த பட்ட செயல். சுஹீராவிற்கு தனியாய் ஸ்கூட்டி உள்ளது ஆனால் ஒருமுறை அதில் சென்று எதிரில் வந்த வண்டியில் மோதி காயத்துடன் வந்தவளை கண்ட பின் அதை யாரும் அவளை தொடவிட்டது இல்லை ஆயத பூஜைக்கு மட்டுமே வந்து தலை காட்டி செல்லும், காலையில் சுகன் கல்லுரியில் விட்டு மீண்டும் அழைத்து வருவது தான் வழக்கமாய் இருந்தது. நடுவில் தோழிகளின் “சிறைபறவை கைப்பிள்ளை என்று கேலிகள் அதிகரிக்கவும்” மாலை மட்டும் தோழிகளுடன் பஸ்ஸில் வர கஷ்டப்பட்டு உண்ணாவிரதம் போராடி பெற்றோரின் அனுமதியுடன் பஸ் பயணத்தை தொடர்ந்தாள் சுஹீரா.

கல்லூரி செல்லும் வழியில் சுகன் நேற்று உன் நண்பன் வருணை பார்த்தேன் எனவும் மும்பையில் இருந்து வந்து விட்டான் போல என்று சுஹீரா கேட்க, ஆமாம் என்னை வந்து பார்த்தான் உன்னை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தான், அவனுக்கு உன்னை பிடித்து உள்ளது போல உனக்கும் பிடித்திருந்தால் சொல் அம்மா அப்பாவிடம் பேசி நான் சம்மதம் வாங்கி தருகிறேன் என்றான் சுகன்.

நீ எனக்கு அண்ணன் அந்த வேலையை மட்டும் பார் கல்யாண பிரோக்கர் வேலை செய்யாதே என்று சுஹீரா சிடுசிடுத்தாள். “உன் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல் நான் உனக்கு நல்ல தோழனும் கூட அதை மறந்துவிடாதே” என்று குகன் வலியுறுத்த. “அந்த தயிர் சாதத்தை பிடிக்கவில்லை” போதுமா யாராவது ஓங்கி பேசினாலே போதும் அம்மா என்று அலறியோடும் பச்சை பிள்ளைடா அவன், என்று சுஹீரா உச்சுக் கொட்டி சொன்ன விதத்தில் இருவரும் சிரிக்க கல்லூரி வாசலில் இறக்கி விட்டு தன் வழி சென்றான் சுகன்.

கல்லூரி துவங்கி சில மணி நேரத்திலேயே சுகந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது சுஹீராவிற்கு விபரம் அறிந்து அவசர அவசரமாய் சுகன் சொன்ன காவல் நிலைய வாசலில் நின்றாள் சுஹீரா. புது வித பயம் தன்னை சூழ்ந்து கொள்ள காவல் நிலையத்தின் ஒரு ஓரத்திலிருந்த பெஞ்சில் சுகந்தனை கண்டதும் இதுவரை கட்டுப்படுத்தி வைத்து இருந்த கண்ணீர் வழிய அவனிடம் ஓடி விபரம் என்ன வென்று கேட்டாள், சுஹீரா.

அவன் சொன்ன செய்திகேட்டு மேலும் தடுமாற்றி என்ன செய்வது என்று புரியாமல் குழப்பம் வர அதை மறைத்து அண்ணனுக்கு ஆறுதல் கூறினாள் சுஹீரா. “கொஞ்ச நாட்களாக நம் தொழிலில் பயங்கரநட்டம் புதிதாய் யாரும் ஆர்டரும் தருவதில்லை தந்தவர்களும் திரும்ப பெற்று கொண்டனர்” இரண்டு வருடத்திற்கு முன் அப்பா புதியதாய் துவங்கிய தொழிலிலும் இதே நிலை தான் ஒருபார்ட்டி கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுக்க அப்பாவால் அவ்வளவு பணம் உடனே பிரட்ட முடியவில்லை, எனவே நான் ஒருவரிடம் நம் வீட்டையும் அலுவலக கட்டிடத்தையும் அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்துகொடுத்தேன் இப்போது அவர்கள் தான் பணம் தராமல் நான் ஏமாற்ற நினைப்பதாய் என் மீது புகார் செய்து உள்ளனர் என்று நடந்தவற்றை விளக்கினான், சுகன்.

அவன் கூறியதில் சில விபரங்கள் புரியாமல் மீண்டும் விளக்கம் கேட்டாள் சுஹீரா. “அது சரி இதை அப்பாவிடம் சொல்லி அவரை வர வைத்து இருக்கலாம் இல்லையா நான் என்ன செய்ய முடியும்” என்று புரியாமல் சுஹீரா வினவ. “அது அது வந்து குட்டிமா அப்பாவிற்கு நான் பணம் வாங்கியவர் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை” அவரிடம் தான் நான் வாங்கினேன் என்று தெரிந்தால் அவர் மிகவும் கோபப்படுவார் அதுமட்டும் இல்லை அப்பாவிற்கு இது தெரியவந்தால் இப்போது அவர் இருக்கும் மனநிலையில் அவர் உடலுக்கும் ஏதாவது வந்து விடும் என்று பயமாய் உள்ளது என்றான் சுகன். அதுவும் சரியென்று தோன்றியது சுஹீராவிற்கு இப்போது எல்லாம் “அப்பா மிகவும் சோர்வாக தெரிக்கின்றார்” என்று நினைத்தவள் தன் அண்ணனை விடுவிக்க என்ன வலி என்று காவல் அதிகாரியை அணுகி விபரம் கேட்டாள்

பணம் கொடுத்தவர்களுக்கு பார்ட்டி மீது நம்பிக்கை இல்லை என்று புகார் கொடுத்து உள்ளார்கள் அவருக்காக அவர் சொந்தம் யாராவது ஜாமீன் கையெழுத்து போட்டால் ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூற, புகார் கொடுத்தவர்களின் விலாசம் பெற்றுக்கொண்டு சுகனுக்கு ஆறுதல் கூறி நம்பிக்கை தந்து அதே நம்பிக்கையுடன் புகார் தந்தவனை காண கிளம்பினாள் சுஹீரா.

அதிகாரி சொன்ன அலுவலகம் வந்து சேர்ந்தவள் வரவேற்பில் தன்னை யார் என்று கூறுவது என்று குழம்பி போனால் தன் பெயர் சொன்னாலும் தெரியாதே என்று குழப்பத்தில் நிற்க, வரவேற்பில் இருந்த பெண்ணிற்கு போன் கால் வந்தது, அதனை எடுத்து மிக பவ்வியமாய் பேசியவள் தன்னை ஒரு மாதிரி பார்ப்பது உணர்ந்து தன்னையே குனிந்து ஒரு முறை சரி பார்த்து கொண்டாள் சுஹீரா. போன் பேசி முடித்தவள் அழைத்துச்செல்ல அவளை பின் தொடர்ந்து சென்று அவள் காட்டிய அறையில் காத்திருக்கதுவங்கினாள் சுஹீரா.

தன் அறையிலிருந்து கண்காணிப்பு கேமரா மூலம் அவள் வந்ததில் இருந்து அவளின் நடவடிக்கையை கவனித்து கொண்டு இருந்தவன், வெகு நேரம் கடந்தும் யாரும் வராமல் இருக்க தவறுதலாய் இங்கு அழைத்து வந்து விட்டார்கள் போல் என்று எழுந்து செல்ல நினைக்கையில்,
“சரியான இடத்திற்கு தான் வந்து உள்ளாய் சுஹீரா அதில் சந்தேகமே வேண்டாம்” என்று குரல் கேட்டு திரும்ப இந்த அறைக்கு வரும் வேறு வழியில் நின்று கொண்டு இருந்தவனை கண்டு நீயா?என்று அதிர்ச்சியடைந்தால் சுஹீரா.

சாட்சாத் “நானே தான் உலகம் எவ்வளவு சிறிது என்று பார்த்தாயா? நாம் மீண்டும் மீண்டும் சந்தித்து கொண்டே இருக்கின்றோம்” இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது என்று அகரன் ஆர்வமாய் கேட்க, “உன் திமிர் தான் தெரிகின்றது” என்று ஆணவமாய் பதில் தந்தாள் சுஹீரா.
அகரன் கண்களிருந்த ஆர்வம் மறைந்து கோபம் தெரிய அதை கட்டுபடுத்ததன் கை முஷ்டியை இறுக்கமாய் மூடி கொண்டான், அவன் நிலை உணராமல் இது எல்லாம் உன் வேலை தானா அன்று “உன்னை நாய் என்றதை ஒழிந்திருந்து கேட்டுள்ளாய் சுகந்தன் என் அண்ணன் என்று தெரிந்ததும் என்னை பழிவாங்க ஏதும் அறியா அப்பாவி அண்ணனை பயன்படுத்தி உள்ளாய்” என்று தொடர்ந்து கோபமாய் பேசினாள், சுஹீரா.

“ஸ்ஷ் என்ன ஷார்ப் அப்படியே கத்தி போல் வார்த்தைகளும் அப்படியே குறிபார்த்து இலக்கை அடைந்து காயப்படுத்துகின்றது” என்னை காயப்படுத்திய வார்தைகளுக்காக உன்னை பழிவாங்க உன் ஏமாளி அண்ணனை உபயோகப்படுத்திக் கொண்டேன் என்று ஏளனமாய் அகரன் கூற, “ஏமாளியா என்னுடன் நேரடியாக மோத பயந்து கொண்டு என் அண்ணன் பின் ஒழிந்து கொண்டு சண்டை போடும் ஒரு பேடி” நீ என் அண்ணனை ஏமாளி என்கின்றாயா என்று பதிலடி தந்தாள் சுஹீரா.

அவள் வார்த்தைகளில் கோபம் கொண்டவன் வேகமாய் அவள் கரம் பற்றி இழுத்து தன் இரு கை சிறையில் அடைத்தவன் “நான் பேடியா நீ நிற்பது என் இடம் இங்கு நான் உன்னை என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை அது தெரிந்தும் எவ்வளவு தைரியமாய் போசுகின்றாய்” என்று தன் கைக்குள் இருந்தவளின் நெருக்கம் தந்தகிறக்கத்தில் கோபம் மறந்து புன்னகையுடன் கூறினான், அகரன். “ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை தொடும் அனைவரும் வெறி பிடித்த நாய்கள் தான்” அன்று நான் உன்னை நாய் என்றது தான் உனக்கு தவறாய் தெரிகின்றது, முன் பின் அறிமுகம் இல்லாத பெண்ணை, நீ என்னை பார்த்த விதமும் பேசிய வார்த்தைகளும் தவறு என்று இன்னும் கூட உனக்கு தோன்றவில்லை இதில் இருந்தே தெரிகின்றது உன் லட்சணம் என்று அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றாள், சுஹீரா.

“நீ கூறிய வெறிநாய் போல் உன்னை உருத்தெரியாமல் குதறி எரிய எனக்கு சில நிமிடங்கள் போதும் ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை “உன் ஆணவம், கர்வம் இதனுடன் கொஞ்சம் விளையாடி பார்க்க ஆசையாய் உள்ளது” என்றவன், தன் பிடியில் இருந்து விலக போராடிக்கொண்டு இருந்தவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டு “நான் தொடுவது பார்ப்பது, பேசுவது தான் உன் பிரச்சனை என்கின்றாய் அல்வா உனக்கு நான் தரப்போகும் தண்டனையே இது தான்”, உன் அண்ணனை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால் நீ என்று அகரன் கூறி முடிக்கும் முன் தன் பலம் கொண்டு முழுதாய் போராடி அவன் பிடியில் இருந்து விலகி நின்றவள், “உன் பொறுக்கி தனத்தை என்னிடம் காட்டாதே நீ சொல்வது போல் தரம்கெட்டு என்றுமே நான் நடக்க மாட்டேன்” என்று கோபமாய் பதில் தந்துவிட்டு அங்கிருந்து வெளியேற வாசல் நோக்கி சென்றாள் சுஹீரா.

அவளுக்கு முன் சென்று வழி மறித்து நின்றவன் தமிழ் சினிமாக்கள் பார்த்து நீ ரொம்பகெட்டு போய் விட்டாய் சுஹீ நீ நினைப்பது போல உன்னை நான் நினைக்கவேயில்லை என்று கூறி வாசல் கதவை திறக்க குகன் உள்ளே வந்தான் கையிலிருந்த காகிதங்களை அகரன் கையில் கொடுத்து விட்டு மீண்டும் வெளியேறினான்.

“இது என்ன தெரிகின்றதா உன் அண்ணன் பணம் வாங்க கையெழுத்து போட்டு தந்த பத்திரம்” இதை முதலில் படித்துபார் பின் என் நிபந்தனைகளை சொல்கிறேன் என்று சுஹீரா கையில் அந்த காகிதங்களை கொடுத்துவிட்டு அருகில் இருந்த சேரில் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டான், அகரன்.

கைகளில் இருந்த காகிதங்களில் இருந்த விசயத்தை நம்ப முடியாமல் திணறினாள், சுஹீரா
இந்த அகரனிடம் இருந்து “ஒரு பெரும் தொகை பெற்றுக்கொள்ளும் பணம் வட்டியும் முதலுமாய் திருப்பி தர கால அவகாசம் ஒரு மாதம் மட்டுமே” , குறிப்பிட்ட கால கெடுவில் பணம் திரும்பி செலுத்தப்படாவிட்டால் வீடு மற்றும் அலுவலக கட்டிடம் முழுவதும் எடுத்துக்கொள்ளும் படியும் அதற்கு மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கும் உரிமை உள்ளது என்று தன் முழு சம்மதத்துடன் ஒப்புத்தலுடனும் கையெழுத்து போட்டுக்கொடுத்து இருந்தான், சுகன். பத்திரத்தை படித்து முடித்த சுஹீராவிற்கு என்ன் செய்வது என்றே புரியவில்லை குறிப்பிட்டிருந்த தேதி கடந்து ஒரு மாதத்திற்கும் மேலானது ஒரு நொடி என்ன செய்வது என்று புரியாமல் நின்றவள், மறு நொடி தன் கையில் இருந்த காகிதத்தை சுக்கு நூறாய் கிழித்து எரிந்து ஏளனமாய் உதட்டை சுளித்து இப்போது என்ன செய்வாய் பிரச்சனை முடிந்தது, உன் நிபந்தனை கேட்கும் அவசியம் இல்லை என்று சிரித்தவள் அழகை சிறிது நேரம் ரசித்தவன், “உண்மையான பத்திரத்தை உன் கையில் கொடுத்து அதை நீ கிழிக்கும் வரை வாயில் விரல் வைத்து வேடிக்கைப்பார்க்க நான் என்ன முட்டாளா” சுஹீ நீ கிழித்தது நகல் தான் இன்னும் வேண்டும் என்றாலும் கேள் தருகிறேன். நன்றாக கிழித்து விளையாடு, கப்பல் செய்து விளையாடு என்று வாய்விட்டு சிரித்தவன் அவள் நிற்கும் நிலை கண்டு தன்னை கட்டுபடுத்தி கொண்டு, சரி அதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் இருவரும் சேர்ந்தே கிழி கிழியென கிழித்து விளையாடுவோம், அதற்கு முன் என் நிபந்தனையை கேள் என்று அதிகாரமாய் கூறினான் அகரன்.

தன் முட்டாள் தனத்தை எண்ணி தனக்குளேயே திட்டி கொண்டவள் அவன் முன் சென்று என்ன உன் நிபந்தனை என்றாள், சுஹீரா. அவன் சொன்னதை கேட்டவள் குழப்பமான முகத்துடன் “உன்னை திமிர்பிடித்தவன் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் இவ்வளவு பெரிய பைத்தியகாரனாய் இருப்பாய் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை” உன் நிபந்தனைக்கு நான் யோசித்து பதில் தருகிறேன் நீ என் அண்ணனை விடச்சொல் என்றாள், சுஹீரா. மறுப்பாக தலை அசைத்தவன் எனக்கு சாதகமான பதில் வரும் வரை அவன் அங்கேயே அரசாங்க உபசரிப்பில், இருக்கட்டும் என்று இத்துடன் பேச்சுவார்த்தை முடிந்தது என்று கிளம்பும் படி செய்கை செய்தான் அகரன்.

அதற்கு மேல் அங்கு நின்று அவனிடம் கெஞ்ச மனம் இல்லை இருந்தும் அண்ணன் இன்னும் சிறையில் இருப்பதை தாங்க முடியாமல் தயங்கிய படி “நான் நாளை பதில் தருகிறேன் இன்று சுகனை விட்டுவிடு” என்று கெஞ்சலாய் பார்த்தாள், சுஹீரா. இது வரை கோபமாய் மட்டும் பார்த்துப்பழகிய விழிகள் முதன் முறை தன்னிடம் கெஞ்சுவது கண்டு அகரனுக்கு மகிழ்ச்சி தான் ஏற்பட்டிற்க்கவேண்டும் அதற்கு நேர் எதிராய் மனம் கசந்தது, சரி என்று தலையாட்டி அவளுக்கு சம்மதம் சொல்லி அனுப்பி வைத்தவன் குகனை அழைத்தான். சுகனை விட்டுவிடும் படி சொல்லச்சொல்ல குகனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை அதற்குள் உங்கள் நிபந்தனைக்கு அவர்களை பணிய வைத்துவிடீர்களே பாஸ்… நீங்கள் கிரேட் தான் என்று குகன் பெருமை பேச, “நாளை அவள் முடிவை சொல்கிறேன் என்றாள்” அவள் அண்ணனை விடும் படி கெஞ்சிக்கேட்டு கொண்டாள் அதானல் விடச்சொன்னேன் என்று அகரன் மறைக்காமல் கூற, அப்படியென்றால் அவர்கள் இன்னும் பணிய வில்லை நீங்கள் தான் பணித்துவிடீர்ககள் என்று சொல்லுங்கள் என்று குகன் கேலி செய்தான். இதில் எங்கு நான் பணிந்து போனேன் நாளை எப்படியும் எனக்கு சாதகமாய் தான் பதில் தருவாள் என்றான் அகரன் தீர்மானமாய்.

உங்கள் நிபந்தனையே வித்தியாசமாய் உள்ளது பாஸ்… உங்களை சில காலம் காதலிக்கவேண்டும் அதாவது உங்கள் பாஷையில் காதலிப்பது போல் நடிக்க வேண்டும் இது புது வித தண்டனையாய் உள்ளது, உங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை கரும்பு தின்ன கூலியா என்ன அனுபவியுங்கள் என்று மனதில் உள்ளதை கூறினான் குகன்.

“ மகேஸ்வரனின் ஆணவ பேச்சுக்கு பதிலடி என்ன தெரியுமா? அவர் மகள் என் மீது காதலில் கரைந்து என் காலடியில் கிடப்பது தான் சில காலப்பழக்கத்தில் உண்மையில் அவளுக்கு என் மீது காதல் வந்து விட்டால் எனக்கு இரட்டை லாபம் தானே இவள் வார்த்தைகளுக்கும் சேர்த்து பழிவாங்கிவிட்ட திருப்தி கிடைத்துவிடும்” என்று செருக்குடன் பதில் தந்தான் அகரன்.

“ம்… நீங்கள் காதல் கணை தொடுத்தவுடன் அதில் கட்டுண்டு கிடக்க அவர்கள் என்ன புள்ளிமானா என்ன சீறிவரும் அம்பை கொண்டே எய்தவனை வேட்டையாடும் வேங்கை” அவர்கள் என்று புரியாமல் இப்படி பிதற்றிக்கொண்டு இருக்கிண்றீர்களே பாஸ்… என்று அக்ரானுக்காக அனுதாபப்பட்டான் குகன்.

மீண்டும் மீண்டும் உன்னை
காண தவிக்கிறது கண்கள்
கண்ட நொடி என்னை
மறந்து உன்னிடம்
தஞ்சம் அடைகிறது
எந்தன் நெஞ்சம்…