அரக்கனோ அழகனோ 08

அரக்கனோ அழகனோ 08
0

அழகன்8

கனவிலும் உன் கனல்
பார்வை என்னை
கொள்ளுதடி…
என் கற்பனையில்
அதில் காதல் மொழி
கலந்திட செய்கிறேன்
அது இன்னும் கொடுமையாய்
என்னை மயக்குதடி…

படம் முடிந்து சுஹீராவை அவள் வீட்டிற்கு செல்லும் தெருவின் முனையில் இறக்கி விட்டான் அகரன். அவள் இறங்கும் முன் பிரிய மனமில்லாதது போல அணைத்து விடுவித்தவன், “நாளை எங்கு எப்போது சந்திக்கலாம் என்று போனில் சொல்கிறேன் இன்று போல் நேரம் தாழ்த்தாமல் முக்கியமாய் பாடிகார்ட் இல்லாமல் வரவேண்டும் புரிகின்றதா” என்று அவள் கரம் பற்றி இதழ் ஒற்றியவன், அவள் இதழ்களை மெதுவாய் வருடிய படி நாளை பார்க்கலாம் என்று விரல்களை விலக்காமலேயே…

இனி தேன் பருக
உன் இதழ் நெருங்காது
வண்டினம்…
தெளிவாய் சொல்லிவிட்டேன்
இவள் நீ தேன் பெரும்
மலர் அல்ல
என் மதி மயக்கும்
மாது என்று…

என்று கவிதை வரிகளை உச்சரித்து தன் மதிமயங்கி இருந்தான் அகரன், “என்னை தொடாதே” என்று கோபமாய் கூறியும் கெஞ்சிக்கேட்டும் தன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மீண்டும் உரிமையாய் தீண்டும் அகரன் மீது வந்த கோபத்தில் “அவன் கைகளை சட்டென்று தட்டிவிட்டு, நாளை என்பது நம் கையில் இல்லை அரக்கா!, ஏன் நாளையே உன் மரணம் கூட நிகழ்ந்து எனக்கு விடுதலை கிடைக்கலாம்” என்று இறுகிய முகத்துடன் கூறினாள் சுஹீரா.

வாய் கூறிய வார்த்தைகளுக்கு மனம் அவளை வாட்டத் துவங்கியது “எதிரியே என்றாலும் ஒருவரின் மரணத்தில் மகிழ்பவன் மனிதனில்லை” என்று தன் மனமே தன்னை சுட குற்ற உணர்வுடன் அவன் முகம் நோக்கினாள் அது பாறையை விட கடினமாய் இறுகி இருந்தது.

“ஒருவரின் மரணத்தில் இன்பம் காண்பவன் தான் உண்மையில் அரக்கன் சுஹீ!, என் மரணத்தில் இன்பம் தேடும் நீ யார் என்று நீயே முடிவு செய்துகொள்” என்று இறுகிய குரலிலேயே பதில் தந்தான் அகரன். இன்னும் அவள் காரிலிருந்து இறங்காமலிருக்க “வேறு என்ன சொல்லி என்னை காயப்படுத்தலாம் என்று யோசித்து கொண்டு இருக்கின்றாயா” உன் வார்த்தைகள் எனக்கு தரும் வலியை விட இருமடங்கு வலி என்னால் உனக்கு திருப்பி தர முடியும் ஆனால் அதை செய்யத்தான் என் மனம் தடுக்கின்றது, “உன் குடும்ப வழக்கமே இது தானே பிறரை வார்தைகளால் காயப்படுத்துவதும் அவமான படுத்துவதும் உங்களுக்கு பழக்கம் தானே!, ஏற்கனவே ஒரு முறை அனுபவித்வன் தான் இருந்தும் அதை மறந்து நிற்பது தான் என் முட்டாள் தனம் எனக்கு என்ன தேவை நான் செய்ய வேண்டியது என்ன என்று தெளிவாய் நினைவு படுத்திவிட்டாய்” , என்று ஒரு வித மரத்த குரலில் கூறியவன் என் கட்டுப்பாட்டை இழந்து ஏதும் செய்து விடும் முன் இங்கிருந்து கிளம்பிவிடு என்று அதே குரலில் கூறினான், அகரன்.

எங்கு அவள் மீது உள்ள கோபத்தில் ஏதும் சொல்லி காயப்படுத்தி விடுவேனோ என்ற பயத்தில் வேறுபுறம் திரும்பி கொண்டவன் சுஹீரா இறங்கி அவள் வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்லும் வரை பார்த்திருந்து பின் கிளம்பி சென்றான். சுஹீரா வார்த்தைகள் அகரன் மனதை மிகவும் பாதித்தது மரணம் தரும் வேதனையை விட அதிகமாய் வலித்தது, தன்னை சமன் செய்துகொள்ள தனிமை வேண்டி எங்காவது செல்ல நினைக்கையில் அவன் கைபேசி அழைக்க அதனை எடுத்து பேசியவன் “இல்லை குகன் என்னால் எந்த மீட்டிங்கும் அட்டன் செய்ய முடியாது எனக்கு தனிமை வேண்டும் என்னை தொந்தரவு செய்யாதே” என்று மறுத்து கொண்டு இருந்தான். அகரன் குரலே அவன் மனநிலையை கூறிட அதை மாற்றும் விதமாய் குகன் பேச துவங்கினான் “பாஸ்… இங்கு எல்லோரும் உங்களை தான் எதிர்பார்த்து இருப்பார்கள், மாலை தான் மீட்டிங் நீங்கள் பொறுமையாய் வாருங்கள்”, ஆனால் “ஒரு ஜீவன் உங்கள் நினைவில் தனிமையில் வாடுவது மட்டும் நினைவில் வைத்து கொண்டு அந்த ஜீவனுக்கு கருணை காட்டி உங்கள் திருமுகத்தை ஒரு தரம் காட்டி செல்லுங்கள் இல்லை அந்த பாவம் உங்களை சும்மா விடாது” என்றான் குகன்.

“யாரது எனக்கே தெரியாமல் எனக்காக வாடும் ஜீவன்?” என்று அகரன் புரியாமல் வினவ
அந்த “அப்பாவி பாவப்பட்ட வாய்யில்லா ஜீவன் நான் தான் பாஸ்… காலையில் இருந்து உங்களை காணாமல் தவித்து கொண்டு இருக்கிறேன்”. இப்போது எல்லாம் உங்கள் முகம் காணமல் உங்கள் இனிமையான திட்டுகளை கேட்கமால் என்னால் இருக்க முடியவில்லை, ஒரு வாய் நிம்மதியாய் உண்ண முடியவில்லை என்னை அந்த அளவிற்கு உங்கள் திட்டுகளால் வசியம் செய்துவிடீர்கள்! , இப்படியே போனால் என் வீட்டை மறந்து உங்கள் தோள் மீது வேதாளம் போல் தொங்கிக்கொண்டு காலம் முழுவதும் உங்களுடனேயே இருந்து விடுவேன் என்று குகன் மிரட்ட, ஒரு நொடி எதிர் முனையில் அமைதி நிலவியது அகரன் மனம் லேசானது போல் ஒரு உணர்வு தோன்ற, குகன் கேலிக்கு பதில் தர துவங்கினான் “அலுவலகத்திலேயே உன் தொல்லை தாங்க முடியவில்லை இதில் நாள் முழுவதும் உன் இம்சையை தாங்கிக்கொள்ள என்னால் முடியாது”, உனக்கு என் முகம் பார்க்க வேண்டும் திட்டுகளை கேட்க வேண்டும் அவ்வளவு தானே “அழகாய் என் முழு உயர படம் எடுத்து தருகிறேன் உன் வீட்டில் கொண்டு போய் மாட்டிக்கொள் என் பொன்மொழியான வசை மொழிகளை ஆடியோவாய் பதிந்து வைத்து தினமும் கேட்டுக்கொள் ஆனால் கூடவே இருந்து என்னை கொடுமை செய்து கொல்லாதே”என்று பயந்த குரலில் கூறினான் அகரன்.

“இது ஒரு நல்ல யோசனை தான் படம் எடுத்துத்தருவது ஓகே” ஆனால் அது எப்படி பாஸ்… அழகாய் வரும்! “உங்களிடம் இல்லாத ஒன்று புகைப்படத்தில் மட்டும் எப்படி புதிதாய் முளைத்து வரும்” என்று விளங்காமல் வினவினான் குகன். “இதற்கான பதிலை உனக்கு நேரில் வந்து சொல்கிறேன் நீ மீட்டிங்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்” என்று உத்தரவிட்டு அழைப்பை துண்டித்தவன், அகரன்.

“சரியான ஜோக்கர் கொஞ்சமும் சீரியசாய் இருக்க விடமாட்டான்” என்று செல்லமாய் திட்டி கொண்டு மீட்டிங் ஏற்பாடு செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் அகரன். குகன் தன் மதிய உணவை எடுத்துக்கொண்டிருக்க “என் அழகில் என்ன குறை கண்டாய் குகா என்று அவன் பின் வந்து நின்ற அகரன் இது தான் என்னை காணாமல் நீ ஏங்கும் லட்சணமா ஒரு வாய்கூட நிம்மதியாய் உண்ணமுடியவில்லை என்று என்னிடம் அளந்துவிட்டு இங்கு ஒரு விருந்தையே விழுங்கிக்கொண்டு இருப்பது போல் தெரிகின்றது”, இது தான் உன் பாசமா என்று கேலியாய் அகரன் வினவ. அகரன் குரல் கேட்டு கையில் எடுத்த டிபன்னை அப்படியே வைத்துவிட்டு போச்சுடா சரியாய் சாப்பிடும் நேரம் வந்து விட்டாரே இனி இவர்க்கு விளக்கம் தருவதற்குள் வந்த பசி ஓடிவிடும், இப்போது என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தவன்,
அது வந்து பாஸ்… “உங்கள் அழகிற்கு என்ன குறை தினம் கண்ணாடி பார்க்கும் உங்களுக்கு தெரியும் தானே நீங்கள் ஆணழகன்! பேரழகன் !” என்று புகழ்ந்து தள்ளியவன் இந்த சாப்பாடு கூட எனக்கு இல்லை எனக்குள் இருக்கும் உங்களுக்கு , “உங்களுக்கும் பசிக்கும் தானே” என்று சரியாய் மழுப்பினான் குகன்.

அவன் அருகிலேயே ஒரு நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு அவன் முன் இருந்த டிபன் பாக்ஸ் கையில் எடுத்து கொண்டவன், “நீ சொன்னதும் தான் என் பசி எனக்கே நினைவு வந்தது” என்று ஒரு வாய் எடுத்து வாயில் வைத்தவன் சிறிது நேரம் ஏதோ சிந்தனையில் அமைதியானன் வாயில் வைத்த உணவை விழுங்கிக்கொண்டு “நீயே செய்ததா உனக்கு அப்டியே உன் அண்ணனின் கைப்பக்குவம் தான் ஒன்றாய் படிக்கும் போது பாதி நாள் அவனுக்காக அவனே செய்து கொண்டு வரும் உணவை நான் தான் உண்பேன்” என்றான் அகரன்.

“என் அம்மா சொல்லிக்கொடுத்தது பாஸ்… தனியாய் தங்கி இருக்கும் பையன் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு உடம்பை கெடுத்து கொள்ளக்கூடாது என்று சொல்லி கொடுத்தது” என்று அகரன் அறியாமல் தன் கண்ணில் சுரந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டவன் அகரன் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தான் குகன். “நீயும் சாப்பிடு உன்னை பட்டினி போட்ட பாவம் எனக்கு வேண்டாம்” என்று தனக்காக வாங்கி வைக்க பட்டிருந்த உணவினை அவன் புறம் நகர்த்தி விட்டு “இதில் பங்குக்கு வராதே தொலைத்து விடுவேன்” என்று ஒரு விரல் காட்டி மிரட்டி விட்டு மீதி உணவை காலிசெய்யத்துவங்கினான் அகரன்.
அகரன் சொன்ன விஷயம் குகனுக்கும் மனபாரத்தை தந்தது தான் இழந்த அண்ணனை அகரன் உருவில் பார்த்த குகன் அதற்கு மேல் அவன் பேச்சை மீற தைரியமின்றி உணவை எடுத்துக்கொண்டு உண்டு முடித்தான். மீட்டிங் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க அகரனுக்கு என்று ஒதுக்க பட்ட அறையின் ஜன்னல் வழி மீட்டிங் ஹாலில் நடக்கும் ஏற்பாடுகளை கவனித்து கொண்டு இருந்தான். அவன் நின்ற இடத்திலிருந்து பார்த்தால் அங்கு நிற்பது முதற்கொண்டு அவர்கள் பேசுவதும் தெளிவாய் கேட்கும். அன்று மகேஷ்வரன் அகரனை அவமானபடுத்தி பேசிய போது அகரன் இங்கு தான் நின்று அங்கு , நடந்த அனைத்தயும் பார்த்துக்கொண்டும் அவர் பேச்சைக்கேட்டு கொண்டுயிருந்தான்.

சுஹீரா மீது இருக்கும் மோகத்தை மறந்து  தன் திட்டத்தை செயல்படுத்த,  அவள் என் சுஹீரா என்பதை மறந்து மகேஷ்வரன் மகள் என்பது என் நினைவில் நிலைக்கவேண்டும் ,  அப்போது தான் என்னால் தடுமாறாமல் நிலையான முடிவில் இருக்கமுடியம் என்று  அன்று நடந்ததை நினைவில் கொண்டு வந்து  தன் கோபத்தின் காரணத்தை நினைவுப்படுத்திக் கொண்டான்  அகரன்.

இந்த தொழிலதிபர்கள் சங்கத்தின் தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்க கூட்ட பட்டிருந்த கூட்டம் அது. அப்போது தலைவராய் இருந்தது அகரனின் தந்தை அவர் அடிக்கடி வெளியூர் வேலைவிஷயமாக சென்று கொண்டிருந்ததால் தற்காலிகமாக அவரின் பொறுப்பினை செய்து கொண்டிருந்தான் அகரன். சங்கத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் காலம் வந்தது “ பாதி தொழில் அதிபர்கள் அகரனின் தாத்தா தேவேந்திர மூர்த்தி காலத்தில் இருந்து பழக்கமானவர்கள் அந்த நட்பு அவர் மகன் ஈஸ்வர மூர்த்திடமும் தொடர அகரனே அந்த பொறுப்பை எடுத்து நடத்த வேண்டும்” என்று விரும்பினர், பலரும் இதற்கு ஒருமனதாக சம்மதம் தெரிவிக்க, ஒரு சிலர் அகரனுக்கு எதிராக நின்ற சந்திரன் என்பவருக்கு ஆதரவாயிருந்தனர் சந்திரனின் நெருங்கிய நண்பர் மகேஸ்வரன் தன் நண்பனுக்காக பிறரின் மனதை மாற்ற எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருந்தார்.

இன்னும் “எத்தனை காலம் தான் ஒரு குடும்பம் மட்டும் இந்த சங்கத்தின் தலைவர் பதவியை வகிக்கும் இது என்ன அரசாட்சியா அவர் தாத்தா பின் அவர் தந்தை இப்போது அவர்களின் வாரிசான இந்த அகரன் நமக்கும் ஒரு மற்றம் வேண்டாமா”. திருவாளர் தேவேந்திர மூர்த்தி ஐயா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு அவர் காலத்தில் தான் இந்த சங்கம் துவங்கப்பட்டு நமக்கு நேரும் இடர்களை எல்லாம் முகம் சுளிக்காமல் நீக்கினார், அவர் மீதிருந்த மதிப்பிலும் மரியாதையிலும் அவரின் மகனை எந்த வேறுபாடும் இல்லாமல் ஏற்கவும் முடிந்தது. அதற்காக “அவர் மகனையும் தலைவராய் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை”, ஈஸ்வர் நல்ல நண்பர் அவர் குணம் தெரியும் அவர் அப்பாவை போல் அதிகார குணம் கொஞ்சமும் இல்லாமல் நட்பாய் பழகுபவர், நட்பின் காரணம் கொண்டு ஈஸ்வரை எளிதாய் ஏற்க முடிந்த என்னால் அவர் மகனான இந்த அகரனை அந்த இடத்தில் வைக்க மனம் வரவில்லை. “ஏன் இப்படி சொல்கின்றீர்கள் மகேஸ்வரன் அவருக்கு அவரின் தாத்தாவின் திறமை நிச்சயம் இருக்கும், வெளிநாடு சென்று நிர்வாகப்படிப்பு படித்தவர்”, இந்த சந்திரன் எனக்கும் நண்பர் தான், எங்கள் எல்லோருக்கும் தெரியும் அவர் உங்களின் நெருங்கிய நண்பர் என்று “அவர் தலைவர் பதவிக்கு வரத்தேவையில்லாமல் ஈஸ்வர் மகனை பற்றி இல்லாததையும் சொல்லாதீர்கள்” என்று சிலர் எதிர்த்து வாதிட.

“அமெரிக்காவில் படித்து பொழுது போகாமல் இரண்டு வருடங்கள் வெளிநாடு எல்லாம் சுற்றிவிட்டு அது அலுத்துப்போகவும் தந்தைக்கு துணையாய் இருக்கின்றேன் என்ற பெயரில் அவ்வப்போது தொழிலை கவனிக்கும் கத்துக்குட்டிக்கு இவ்வளவு பெரிய சங்கத்தை நிர்வகிக்க என்ன தெரியும்”, நமக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை தீர்த்து வைக்க இந்த தலைவரை எந்த நாட்டில் போய் தேடுவீர்கள் நாம் இங்கு பிரச்சனையில் தவித்துக்கொண்டு இருக்க இவரோ இவருடன் சேர்ந்து கிசுகிசுக்கபடும் பெண்களுடன் சேர்ந்து களித்து கொண்டு இருப்பார்” எனவும் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. “என்ன மகேஸ்வரன் உங்கள் மகளுக்கு அப்படி கிசுகிசுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கடுப்பில் பேசுவது போல் உள்ளது” என்று எள்ளிநகையாடினார் ஒருவர். அவரின் மகளும் அகரனுடன் சில தினங்களுக்கு முன்பு கிசுகிசுப்பில் சிக்கியவர் தான் பணக்கார மாப்பிள்ளை கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லவா தோன்றும் அவரும் மகளின் செயலை கண்டும்காணாமல் ஒதுங்கி கொண்டார். “என் மகள் அது போல் என்றுமே நடக்கமாட்டாள் அவளின் குணத்திற்கு இந்த அகரன் போல் மாதம் ஒரு பெண்ணுடன் சுற்றும்பொறுக்… பெண் பித்தனை, திரும்பிக்கூட பார்க்கமாட்டாள்”, என்ன இப்படியெல்லாம் பேசுகின்றார் என்று கூடியிருந்த அனைவரும் அதிர்ந்து நோக்க, அதை கண்டுகொள்ளாது மேலும் தொடர்ந்தார், மகேஸ்வரன். “அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள போகின்றேர்களா என்று பத்திரிகைகாரர்கள் கேள்வி எழுப்பினால் என் பணத்திற்காக என்னுடன் சுற்றபவர்கள் எல்லாம் திருமணம் செய்து கொள்ளமுடியுமா என்று ஏளனமாய் பதில் தந்து அவருடன் பழகிய பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தராமல் உண்மையாய் இருந்தவர்களிடமும் இழிவாக நடந்துகொள்ளும் இவனை போன்ற ஆண்களை கண்டாலே கண்ணாலேயே எரித்து விடுவாள் என் பெண் “, அவளின் கால் தூசிக்கு தரும் மதிப்பை கூட இது போன்றவனுக்கு தர மாட்டாள் எனவும் அங்கு இருந்த சந்திரன் ஆதரவாளர்கள் ஆமோதிப்பது போல் கை தட்டி கூச்சலிட்டனர்.

அவர்கள் கைதட்டும் ஓசை அடங்கியதும் பெருமையாய் தன்னை கேள்விகேட்டவரை நோக்கி “இப்போது நான் சொன்ன விளக்கத்திலேயே அவரின் வீரதீரம் தெரிந்திருக்கும் தன்னுடன் பழகும் பெண்களுக்கே கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் ஆளை மாற்றி கொண்டே திரியும் இவர் எங்கு நமக்கான வாக்கினை நிறைவேற்றுவார்”. தெளிவாய் யோசித்து முடிவு எடுங்கள் இம்முறையும் அவர்களின் குடும்ப வாரிசுக்கே இந்த பதவி கிடைத்தால் இது அவர்களின் குடும்பசொத்து என்று சொல்லாமல் சொன்னது போல் ஆகிவிடும் என்று தான் பேச வேண்டியதை பேசி அமர்ந்தார் மகேஸ்வரன்.

தன் அறையின் ஜன்னல் வழி அங்கு நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தவன் மகேஷ்வரன் பேச்சும் உடன் இருந்தவர்களின் கேலி சிரிப்பும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கோபத்தில் முதுகு விரைக்க நின்று கொண்டு இருந்தவனை குகன் வந்து அழைத்தான் பாஸ் “இப்போது நீங்கள் தான் உங்களுக்கான விளக்கம் சொல்லி ஆதரவு சேகரிக்க வேண்டும் “ எனவும் தனது முகத்தை சீர் செய்துகொண்டு தன் மனதின் உணர்வுகள் எதையும் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் அனைவரின் முன்பும் சென்றான் அகரன்.

“எல்லோருக்கும் வணக்கம் நான் அகரன் என்னை தலைவராய் தேர்வு செய்தால் இதை செய்வேன் அதை செய்வேன் என்று கதை அளக்கவரவில்லை என்னை எதிர்த்து நிற்பவர் நிறை குறைகளை வாதிட்டு வாக்கு சேகரிக்கவரவில்லை”, என் சொந்த வாழ்வு வேறு தொழில் வேறு என்று வாழ்பவன் நான் என் தாத்தாவின் வாரிசு என்று நிரூபிக்கும் திறமை என்னிடம் உள்ளது. கத்துக்குட்டி என்று நினைத்து என் திறமையை கேலி செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய நிர்வாகத்தையும் சீர்குலையாமல் கட்டி காக்கும் திறமை உள்ளவன் என்று நிரூபித்து காட்டுவேன். “பிறரின் வார்த்தைகளுக்கு மயங்காமல் தன் சுய புத்திகொண்டு எடுக்கும் எந்த முடிவும் தெளிவான முடிவு என்று நம்புபவன் நான்! உங்கள் ஆதரவு இதயத்திலிருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் முடுவு எதுவாய் இருந்தாலும் ஏற்கும் மனநிலையில் இருக்கின்றேன்” என்று தனது இருப்பிடம் சென்று அமர்ந்தான் அகரன்.

ஏகபோக ஆதரவு பெற்று அகரனே தலைவராய் தேர்ந்தெடுக்கபட்டான் இருந்தும் தன்னை இழிவாக விமர்ச்சித்த மகேஸ்வரன் தன் முன் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இருப்பதை கண்டு நிம்மதி இழந்திருந்தவன் அவருக்கு தொழில் நஷ்டத்தை கொடுத்தான், “சங்கத்தின் தலைவன் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பரம்பரை பணக்கார தொழில் அதிபர்களில் ஒருவன்” என்ற பதவியே அவன் சொல்வதை கேட்டு மற்றவரை நடக்க வைத்தது அவரிடம் வந்த ஆர்டர்கள் எல்லாம் திரும்ப பெறப்பட்டன, பெரும் நஷ்டத்தை சந்தித்தார் புதிதாய் துவங்கிய தொழிலும் நஷ்டத்திலிருந்த்து அவர் கடனை அடைக்க கொடுத்த அட்வான்ஸ் பணம் திருப்பிக்கொடுக்க அவருக்கு அதிக பணம் தேவைப்பட்டது பல இடங்களில் முயல்வது தெரிந்து, அவர் மகன் சுகந்தன் மூலம் அவர்களுக்கு தேவையான பணத்தை தந்து உதவியது போல அவர்களின் பெரும் சொத்தான வீடு அலுவலக கட்டிடம் அனைத்தையும் பணத்திற்காக அடமானமாய் பெற்று கொண்டான்.

மகேஸ்வரனை பழிவாங்கிவிட்ட நிம்மதியில் அடுத்து நடந்த உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவன் அவரின் நிமிர்வு கண்டு பிரமித்து போனான் “எல்லாம் இழந்தும் எப்படி நிமிர்வுடன் இருக்கின்றார்” என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, ஒருவர் வந்து என்ன மகேஸ்வர் தொழில் பலத்தஅடி போல இதற்கு தான் பெரிய இடத்தை பகைக்ககூடாது என்பது என்று இலவச அறிவுரை தர, மெலிதாய் புன்னகை செய்து “தொழில் லாப நஷ்டம் என்பது கணக்கிட முடியாதது இன்று கோபுரத்தில் இருப்பவன் நாளையே படுகுழியில் கிடப்பான் படுகுழியில் இருந்தவன் பல்லக்கில் செல்வான் எதுவும் நம் கையில் இல்லை”, பணம் புகழ் எல்லாம் வரும் போகும் “என் அழிவில்லா செல்வம் என் பிள்ளைகள் தான் அவர்களை நல்ல விதமாய் ஒழுக்கமானவர்களாக வளர்த்துவுள்ளேன் எந்த நிலையிலும் தடுமாறாமல் தெளிவான முடிவு எடுக்க கற்றுக்கொடுத்து உள்ளேன், இதை விட பெரிய சொத்து வேண்டுமா?” என்று கர்வமாய் கூறியவர் கண்களிலிருந்த பெருமிதம் கண்டு தனக்குள் பொருமிக்கொண்டான் அகரன்.

“யாரை எண்ணி கர்வம் கொண்டு இருக்கின்றாரோ அவர்களை கொண்டே தலை குனிய வைக்க வேண்டும்” என்று முடுவு எடுத்தான், “சுகந்தன் ஏற்கனவே தன்னிடம் கடன் வாங்கி வசமாய் சிக்கி கொண்டான் மீதம் இருப்பது அவரின் மகள் தான் தன்னை கால் தூசியாக கூட மதிக்கமாட்டாள் என்று ஏளனமாய் பேசிய அந்த மகளை தன் காலடியில் கிடக்க வைத்து அவர் முகத்தில் கரியை பூச வேண்டும்” என்று முடிவு எடுத்தான். தன் திட்டத்தின் முதல் படியாக சுஹீராவை பற்றிய முழுவிபரம் சேகரிக்க வைத்தான் தன் திட்டத்தை நிறைவேற்ற, அவளை சந்திக்க சென்றதும் தவறாய் வேறு ஒரு பெண்ணுக்கு பரிந்து பேசி அவளின் வெறுப்பை சம்பாதித்த பிறகு இது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று தோன்றியது, இருந்தும் அதையும் ஒரு சவாலை எடுத்து செய்து முடிக்க நினைத்தவன் மறு முறை சந்தித்த போது நல்லவிதமாய் பேசி அவள் மனதை மாற்ற முயன்றான், அன்றும் தோல்வியே கிடைத்தது, இவள் தான் நினைத்தது போல் இல்லை இதுவரை தான் சந்தித்த பெண்களை போல் இல்லை என்று தெளிவாய் புரிந்தது கொஞ்சம் பொறுத்திருந்து அவள் மனம் மாறும் வரை காத்திருக்கலாம் என்று நினைக்கையில் வருண் என்பவன் உள்ளே வந்தான் “எந்த ஆண்களிடமும் அவ்வளவு சகஜமாய் பேசாதவள் இவனுடன் மட்டும் சிரித்து பேசி கொண்டு நிற்கின்றாள் அவனை கேட்டால் காதல் கல்யாணம்” என்று கதை விடுகிறான், “எங்கு தான் போட்டு வைத்த திட்டம் வீணாய் போகுமோ” என்ற பயத்தில் அதிரடியாய் முடிவு எடுத்து சதிசெய்து அவளை அதில் சிக்கவைத்து காதல் நாடகம் நடத்த முடிவு எடுத்தான், அகரன்.

அன்றில் இருந்து நடந்ததை நினைவில் கொண்டு வந்தவன் அதற்கடுத்து தன் திட்டங்கள் முழுவதையும் நினைத்து பார்த்து கொண்டான், “என்ன பாஸ் இன்னும் அதையே நினைத்துக்கொண்டு இருக்கின்ரீர்களா அது தான் எல்லாம் உங்கள் திட்டப்படித்தான் நடக்கின்றதே பிறகு என்ன” என்றான் குகன்.

குகனின் கேள்விக்கு இல்லை என்று மறுப்பாய் தலையாட்டியவன் “என் திட்டம் தெளிவாய் தான் இருக்கிறது என் மனது தான் தெளிவில்லாமல் அலைபாய்ந்து கொண்டு இருக்கிறது” அவள் முன் நின்றதும் பகை எல்லாம் மறந்து அவளின் பாசம் கிடைக்காதா என்று ஏங்கத் துவங்கிவிடுகின்றது, இந்த தடுமாற்றம் எனக்கு வரவேக்கூடாது என்றால் பழையதை எல்லாம் நான் நினைத்து பார்த்து என் பகையை மறந்திடாமல் இருக்கவேண்டும் என்றான் அகரன்.

“உண்மைதான் நீங்கள் இது காதல் என்று உணராமல் தெளிவில்லாமல் தான் தடுமாறி கொண்டு இருக்கின்ரீர்கள் உங்களுக்கு சுஹீரா மீது காதல் வந்து விட்டது பணம் வந்தால் மட்டும் இல்லை, இந்த காதல் வந்தாலும் பத்து மட்டும் இல்லை பகையும் மறந்து போகும்” என்று குகன் அகரனின் தடுமாற்றத்தின் காரணம் விளக்கினான். “என்ன காதலா அதுவும் அந்த திமிர் பிடித்தவள் மீதா என் மரணத்தில் தான் சந்தோசம் என்பவள் மீது எனக்கு எங்கிருந்து காதல் வரும்”, இது வரை நான் கண்ட பெண்கள் போல் இல்லாமல் இவள் வித்தியாசமாய் இருப்பதால் வந்த ஈர்ப்பு இதற்குப்போய் காதல் என்று கதைக்கட்டி என் காதில் பூ சுற்றி கொண்டு இருக்கின்றாய் என்று சிடுசிடுத்தான் அகரன்.

“உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை பாஸ் சுஹீரா என்ற பெயரையே இதமாய் உச்சரிக்கின்றீர்கள், அவர்கள் முன் இல்லாத நேரம் அவர்களை பழிவாங்க நினைக்கின்றீர்கள் அவர்களை கண்டதும் உங்களையே மறந்துவிடுகிண்றீர்கள் பகையையும் சேர்த்து தான்” என்றான் குகன். “எனக்கும் தான் என்னை புரிந்து கொள்ளவே முடியவில்லை அவள் என் அருகிலிருக்க வேண்டும் ஏதாவது பேசி அவளை சீண்டிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று தோன்றுகின்றது அவள் என்னை கோபமாய் முறைக்கும் போது அவளை ரசிக்க வேண்டும் இப்படி சிறிது காலம் காதல் நாடகம் அரங்கேற்றினால் உண்மையில் அவளுக்கு என் மீது காதல் வந்து நிரந்தரமாய் என்னுடன் இருந்து விடமாட்டாளா என்று ஒரு ஏக்கம் வருகின்றது. “சில நேரங்களில் இவள் தான் பழிவாங்க துடிக்கும் மகேஸ்வரன் மகளாய் இல்லாமல் இருந்து, இப்படி ஒரு சூழ்நிலை இல்லாமல் வேறு மாதிரி சூழ்நிலையில் சந்தித்து இருந்தால் ஒரு வேலை எனக்குள் காதல் என்பது வந்து இருக்குமோ” என்று நடக்காத ஒன்றை எண்ணி மனம் தவிக்கின்றது. என்றான் அகரன்.

குகன் என்ன சொல்லி அகரன் காதலை அவனுக்கு புரியவைப்பது என்று குழம்பிப்போனான் “தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவதை போல் நடிப்பவர்களை என்றுமே எழுப்ப முடியாது” தானாய் எழுந்து கொண்டால் தான் உண்டு என்று மனதில் நினைத்தவன் சரி உங்கள் அடுத்த திட்டம் என்ன என்று சொல்லுங்கள் என்றான். “பெரிதாய் ஒன்றும் இல்லை என்னுடன் சில நாள் சுற்றவைப்பேன் பின் ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்வேன் அவர்கள் வந்து என்ன செய்வார்கள் வழக்கம்போல இப்போது உங்களுடன் பழகும் பெண்னை பற்றி சொல்ல சொல்வார்கள், நானும் வழக்கம் போல என் பணத்திற்காக சுற்றும் பெண்ணை மணக்கமாட்டேன், என்று பதில் தருவேன் அதில் அந்த மகேஸ்வரன் மானம் கப்பல் ஏறும் என்னை என்ன சொல்லி ஏளனம் செய்தாரோ அதேநிலை அவருக்கு திரும்பும் என்று சாதாரணமாய் தனது திட்டத்தை விளக்கி விட்டு இன்றைய மீட்டிங்கான ஏற்பாடு முடிந்ததா வா போகலாம் என்று முன்னே நடந்தான் அகரன். “கடவுளே இவர் திட்டத்தை முழுமையாய் நிறைவேற்றும் முன் இவர் காதலை இவருக்கு உணர்த்திவிடு இல்லை முடிவு விபரீதமாய் போகும்” என்று தன் இஷ்ட தெய்வத்திற்கு வேண்டுதல் வைத்தபடி அகரனை பின் தொடர்ந்தான் குகன்.

அன்றைய மீட்டிங் நல்லவிதமாய் முடிந்தது மாலை வீடு வந்த அகரன் அங்கு அவன் தந்தை ஈஸ்வரை கண்டதும் வெகுநாட்கள் கழித்து சந்தித்த தந்தையை கட்டி அனைத்து கொண்டான் “இதோ அதோ என்று இழுத்து அடித்து ஒருவழியாய் வந்து சேர்ந்தீர்களே ஊட்டி எஸ்டேட் உங்களை விட்டுவிட்டதா” என்று அகரன் கேலி செய்ய, “வரவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதான் வந்தேன்” இன்னும் அங்கு ஏற்றுமதிக்கு தேவையான வேலை உள்ளது அதற்கு முன் இங்கு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது என்று சந்தோசமாய் தன் தங்கை மகள் முகம் நோக்கினர் ஈஸ்வர்.

அகரன் வந்தது அறிந்து அவனுக்கு குடிக்க டீயுடன் மாலை சிற்றுண்டி கொண்டு வந்த யமுனா முகம் வாடியிருக்க அதை கவனித்த அகரன் அப்பாவை பார்த்ததும் இவர்கள் ஆட்டம் அதிகரிக்கும் என்று கவலை படுகின்றார்கள் போல என்று நினைத்து கொண்டான். “அப்படி என்ன தலை போகின்ற பெரிய விஷயம்” என்று அலட்சியமாய் அகரன் விசாரிக்க. “நம் அதிகாவிற்கு திருமணம் செய்யலாம்” என்று யோசித்தேன் அதான் உடனே கிளம்பி வந்துவிட்டேன் என்றார் ஈஸ்வர்.

தன் கையில் இருந்த டீயின் மனத்தை நுகர்ந்தவன் ஒரு மிடறு ருசி பார்த்து “ஹம் செய்யலாம் மாப்பிள்ளை பார்த்தாகிவிட்டதா இல்லை இனி மேல் தான் பார்க்க வேண்டுமா என் உதவி ஏதும் வேண்டுமா” என்று சர்வசாதரணமாய் வினவினான்,அகரன். ஈஸ்வர் அதிர்ச்சியானர் கலையரசி எப்படியும் அண்ணன் தன் மகனை சரிக்கட்டி சம்மதிக்க வைத்துவிடுவார் என்று நம்பிக்கையிலிருக்க இது தான் நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்ற முக பாவனையில் அதிகா இருந்தாள்.

“என்ன இப்படி சொல்கின்றாய் அகர் உனக்கும் அதிகாவிற்கும் தான் திருமணம்” அது தான் உன் விருப்பம் என்று கேள்வியாய் கலையரசியை பார்த்தார் ஈஸ்வர், “என்ன மாப்பிள்ளை விளையாடுகின்றீர்கள், அன்று கூட அதிகாவை உங்கள் அறைக்கு வரச்சொல்லி தனியாய் பேசவில்லை பிடிக்காமலா இதை எல்லாம் செய்வார்கள் அப்பா முன் எப்படி சொல்வது என்று தயங்குகின்றார் போல் சின்னசிறுசுகள் சொல்ல கூச்சப்படும் நாமே புரிந்து கொண்டு அவர்கள் மனம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்” என்று என்னவோ உண்மையில் அகரனுக்கும் அதிகாவிற்கும் நடுவில் ஏதோ இருப்பது போலவே கதைக்கட்டி கொண்டு இருந்தார் கலையரசி.

“போதும் நிறுத்துங்கள் அன்று என் அறைக்கு டீ கொண்டு வரச்சொன்னேன் கொஞ்சி குழவ வரச்சொல்லவில்லை” அன்றே என் எண்ணம் என்ன என்று தெளிவாய் சொல்லிவிட்டேன் இதற்கு மேலும் இதை பற்றி பேசி என் கோபத்தை அதிகரிக்காதீர்கள் என்று எச்சரித்தான் அகரன்.

அகரன் மறுத்த கோபத்தில் இதுவரை மாப்பிள்ளை என்று பன்மையில் அளித்து கொண்டு இருந்தவர் ஒருமையில் பேச துவங்கினார், “நீ பிறந்த போதே உனக்கு என் மகளை தான் உனக்கு கட்டி வைப்பது என்று முடிவு செய்தோம் அகரன் என்ற உன் பெயருக்கு பொருத்தமாயிருக்க வேண்டும் என்று தான் என் மகளுக்கு அதிகா என்று பெயர் வைத்தேன் “ இது நீங்கள் பிறந்த போதே எடுத்த முடிவு”, உங்கள் திருமணத்தில் தான் அப்போது பிரிந்து இருந்த நம் குடும்பம் ஒன்று சேரும் என்று நினைத்திருந்தேன் அதற்கு முன் எண்னென்னவோ நடந்து என் நிலைமை உங்களிடம் கையேந்தும்படி வந்துவிட்டது நானும் உங்களுக்கு சரி சமமாய் இருந்திருந்தால் அப்போது இந்த திருமணத்திற்கு இப்படி யோசித்து கொண்டு இருப்பாயா என்று புடவை தலைப்பில் தன் கண்ணீரை ஒற்றி எடுத்து கொண்டார், கலையரசி.

தங்கை கண்ணீர் கண்டு கலங்கியவர், மகனிடம் பொறுமையாய் பேச துவங்கினார், “சரி அகர் இது வரை அது போல் யோசனை இல்லை என்றால் என்ன இனிமேல் இதை பற்றி யோசித்து பதில் சொல்” என்கிறார் ஈஸ்வர். “உங்கள் அருமை தங்கை பேசுவதை மட்டும் கேட்க உங்கள் காதுகளை திறந்து வைத்திருக்கும் நீங்கள் இந்த வீட்டிலும் என்ன நடக்கின்றது என்று கண்ணைத்திறந்து பார்த்தால் நன்றாகயிருக்கும்”, என்றவன் தன் அன்னை கைகளை ஆதரவாய் பற்றிய படி, “என் கனவிலும் இது போன்ற எண்ணம் எனக்கு இல்லை அந்த இடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது” என்று கூறி கொண்டே சென்றவன் ஏதோ ஒன்று புரிவது போலயிருக்க கண்களை மூடி நின்றான் மூடிய இமை நடுவே சுஹீரா வந்து அழகாய் சிரிக்க “என் சுஹீயை தவிர வேறு யாரையும் என்னால் கற்பனையும் செய்து பார்க்க முடியாது” என்று தனக்குள் தெளிவாய் கூறி கொண்டவன், “இனி இந்த பேச்சை எடுக்காதீர்கள்” என்று தன் முடிவினை தெளிவாய் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான் அகரன்.

என்ன அண்ணா உன் மகன் இப்படி சொல்லிவிட்டு செல்கிறான் “என் மகளின் வாழ்வு உன் பொறுப்பு என்றாயே அதை மறந்துவிட்டாயா” என்று ஈஸ்வர். பலவீனத்தை புரிந்து கொண்டு சரியாய் தாக்கினார் கலையரசி. “வெளியிலிருந்து வந்த அலைச்சல் டென்ஷன் நாமும் சட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டோம் அந்த அதிர்ச்சியில் இப்படி பேசிவிட்டு செல்கிறான் கொஞ்சம் தனிமையில் யோசிக்கட்டும்” அதன் பிறகு பேசி பார்க்கிறேன் என்று ஆறுதல் சொன்னார் ஈஸ்வர்.

தன் அறைக்கு வந்த அகரன் சுஹீரா புகைபடத்தை எடுத்துப்பார்த்து தனக்குள் சிரித்து கொண்டவன் எனக்கு புரிந்து விட்டது, “எனக்குள் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தின் காரணம் புரிந்துவிட்டது நான் கொண்டது ஈர்ப்பு அல்ல சுஹீ உயிர் காதல் என் மனம் கவர்ந்த உன் மீது கொண்ட உயிர்காதல் யெஸ் I love you சுஹீ “ என்று தன் குழப்பம் தீர்ந்த நிம்மதியுடன் மனம் நிறைந்த உணர்வுடன் தன்னவள் புகைபடத்திற்கு முத்தமிட்டான், அகரன்.

“நீ யார் மகளாய் இருந்தால் என்ன! இனி என் காதலி உன்னை யாருக்காகவும் விட்டுத்தரமாட்டேன், உன் இடத்தை யாருக்கும் விட்டுதரவும் மாட்டேன்” சுஹீ நீயே மறுத்தாலும் நான் இனி உன்னை விலகமாட்டேன் நானே நினைத்தாலும் அதுமுடியாது என்று தன் காதலை உணர்ந்த சந்தோஷத்தில் இருந்தான் அகரன்.

பழிதீர்க்க உன் வழி
வந்தேன் நானடி…
உன் அழகில் தடுமாறி
திமிரில் திசைமாறி
உன்னிடம் வீழ்ந்தேன் ஏனடி…