அரக்கனோ அழகனோ 20

அரக்கனோ அழகனோ 20
0

“எல்லாம் உங்களுக்கு தெரிந்தவர்களின் பெண் தான், நேற்று கூட வரவேற்பு விழாவில் பார்த்தோமே… உங்கள் நண்பர் மகேஸ்வரன் என்பவரின், மகள்” என்று செய்தி “சொல்லிட யார் மகேஷ் மகளா, உண்மையில் உன் மகன் அந்த பெண்னை காதலிக்கின்றானா? இல்லை அவள் அப்பா மீது உள்ள கோபத்தில் பழிவாங்க காதலிப்பது போல நடிக்கின்றானா?” என்று ஐயமாய் வினவினார் ஈஸ்வரன்.

“ஏதாவது உளராதீர்கள் அந்த பெண்னை உண்மையாய் தான் காதலிக்கின்றான் அதை அவனே என்னிடம் கூறினான், அது மட்டும் இல்லை அந்த பெண்ணும் நம் அகரனை காதலிக்கின்றாள், அதை நேற்று நான் சரியாய் கண்டுபிடித்துவிட்டேன்” என்று யமுனா விளக்கம் கொடுத்தார்.

“உண்மையாய் இருந்தால் சந்தோசம் தான் , நானே மகேஷிடம் பேசி அவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பேன்” என்று தீர்க்கமாய் கூறினார் ஈஸ்வரன்.

கோவிலில் பூஜை முடிந்து வீடு திரும்பும் வழியில் “பூஜை எல்லாம் சிறப்பாய் முடிந்ததுஎல்லாம் சுபசகுணமாய் இருக்கிறது என்று தானே! பூசாரி கூட சொன்னார் இன்னும் என்ன யோசனை பேசாமல் நாளை உங்கள் நண்பர் குடும்பத்தை விருந்திற்குவர சொல்லுங்கள், சுஹீரா மறுக்க மாட்டாள்” என்று கூறினார் சுபத்ரா.

“எனக்கு என்னவோ அவள் சரி என்று சொல்வதை விட நீ கட்டாய படுத்தி ச்சொல்ல வைப்பாயோ? என்று தான் பயம். “இப்போதே உன்னிடம் கூறி விடுகிறேன் குட்டிமாவை நீ எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தக்கூடாது என்ன புரிகின்றதா?” என்று கட்டளை பிறப்பித்தார் மகேஸ்வரன்.

என்ன தான் வெளியில் சம்மதம் சொன்னாலும் அவர் மனதில் சிறு உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது அவ்வளவு எளிதில் தனது மகள் யாரிடமும் பழக மாட்டாள், ஆனால் அகரனை பார்த்ததும் அவனிடம் பேசிய விதமும் அவர்களுக்கு ஒருவரைஒருவர் ஏற்கனவே தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளதோ என்று யோசிக்க வைத்தது, அகரனை தாங்கள் ஜாக்கின் செல்லும் போது அங்கங்கே கண்டதாக நியாபகம், “ஒரு வேலை சந்திரன் சொன்னது போல இது அகரனின் பழிவாங்கும் திட்டம் என்றால், தனது மகள் வாழ்வு வீணாக தானே காரணம் என்ற உறுத்தலே என்னை கொன்றுவிடும் என்று நினைத்தவர் அதற்கு சிறு வாய்ப்பும் தரக்கூடாது, சுஹீராவிற்குள் இருப்பது, சிறு சலனம் என்றால் அதை மாற்றியே ஆக வேண்டும்” என்று நினைத்தவர். ஒரு வேலை அன்று தப்பு செய்து விட்டேன் என்று புலம்பியது, அகரன் பற்றிய உண்மை அறிந்ததால் இருக்குமோ என்று எண்ணம் வரவும் அப்படி உண்மை தெரிந்து அது தவறு என்று உணர்ந்து இருந்தால் நேற்று எப்படி சகஜமாய் பேசுவாள் என்று குழம்பி போனார் மகேஸ்வரன்.

“இன்னும் உங்கள் யோசனை முடியவில்லையா என்ன? இப்போதே உங்கள் நண்பரை அழைத்து நாளை விருந்திற்கு வர சொல்லுங்கள்” என்று சுபத்ரா கூறிட அதன்படியே செய்தார் மகேஸ்வரன்.

“உதய் உன் விருப்ப படியே மகேஸ்வரன் மகளை உனக்கு பேசி முடித்துவிட்டேன்… இப்போது சந்தோசம் தானே?” என்று சந்திரன் சந்தோசமாய் தனது மகனிடம் கூறிட , உதயன் மகிழ்ச்சியில் தந்தையை கட்டிக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் டாடி” என்று மகிழ்ந்து போனான்.

என்
இதயத்தில்
மெல்லத் திருடனாய்
புகுந்து கொண்டு
கள்ளச் சிரிப்பு சிரிக்கிறாய்
இதயம் பறிபோனதை கூட
இன்பமாய் ரசிக்கிறேன் நான்…

அழகன்20

இரும்பை போல்
இறுகி இருந்தேன் நானடி…
உன் காந்த பார்வையில்
கிறங்கி போனேன் ஏனடி…

“குட்டிமா இதோ நம் வீட்டு பத்திரம் பத்திரமாய் மீட்டுவிட்டேன், அகரன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் சொன்னது போலவே, அலுவலகத்திற்கு அப்பாவும் நானும், கையெழுத்திட்டு தந்த அனைத்து பத்திரங்களையும் அனுப்பிவைத்து விட்டார்” என்று பத்திரங்களை காட்டிட அதை வாங்கி பிரித்து பார்த்தவள் இது தான் வீட்டின் பெயரால் வாங்கிய பணத்திற்கான பத்திரம் என்றால் அன்று அகரன் என்னிடம் கொடுத்தது எது?” என்று குழப்பத்துடன் நின்றாள் சுஹீரா
“என்ன அப்படி பார்கின்றாய் அதை கொடு அப்பாவிடம் கொடுக்க வேண்டும் வீட்டை மீட்டது தெரிந்தால் தான் அவர் நிம்மதி அடைவார்” என்று சுஹீரா கையில் இருந்த காகிதங்களை வாங்கி சென்றான் சுகந்தன்.

இது தான் உண்மையான பத்திரங்கள் என்றால் அன்று நான் கிழித்து எரிந்தது எது? என்று குழப்பத்துடன் அகரனை தொடர்பு கொண்டாள் சுஹீரா.

அகரன் எடுத்ததும் சிறிதும் தாமதிக்காமல் “அன்று என்னிடம் கொடுத்தது, அண்ணன் பெயரில் இருந்த கடன் பத்திரங்கள் தானே அதை நான் கிழித்து எரிந்தேன், ஆனால் சுகன் இன்று ஒரு பத்திரத்தை காட்டினான் அது தான் அவன் கடன் வாங்கும் போது எழுதிக்கொடுத்தது என்கின்றான்”, என்றவள். யோசனையாய் நிறுத்தி “அண்ணன் எழுதிக்கொடுத்த பத்திரத்தை என்னிடம் கொடுத்தாய் தானே! பின் எப்படி இன்று சுகன் பணம் கொடுத்ததும் பத்திரத்தை கொடுத்தாய் ?, அப்படி என்றால் அன்று என்னிடம் கொடுத்தது போலி பத்திரமா என்று கோபமாய் வினவினாள் சுஹீரா.

ஒரு நொடி எப்படி சொல்வது என்று தடுமாறியவன் பிறகு மெதுவாய் “போலி என்று இல்லை, நீயே பார்த்தாய் தானே அதில் உன் அண்ணன் மற்றும் அப்பா கையெழுத்துகள் இருந்தது, அது ஒரு காரணத்திற்காக பணம் திருப்பி தரவேண்டிய கால அவகாசத்தை என் எண்ணப்படி மாற்றி எழுதியபத்திரம் அதிலும் அவர்களின் கையெழுத்தை வாங்கி வைத்து இருந்தேன், அது சுகனுக்கு தெரியாமல் தயாரித்தது, இன்று உன் அண்ணனிடம் கொடுத்தது பணம் வாங்கினேன் என்று மட்டும் எழுதியிருந்தது, அதில் திருப்பி தரும் கால அவகாசம் எவ்வளவு பணம் எதுவும் குறிப்பிட்டு இருக்காது”, என்று அகரன் பாதி உண்மை பாதி பொய் கலந்து கூறி முடித்தான்.

“எவ்வளவு மோசடி செய்கின்றாய் நீ நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் செல்கின்றாய் உன்னை நினைத்தாலே எனக்கு இனம் புரியாத பயம் தான் வருகின்றது” மிரட்டி காதலிக்க சொல்கின்றாய், பத்திரத்தை திருப்பி க்கொடுப்பது போல கொடுத்து திருமணத்திற்கு கேட்டாய், இப்போது கேட்டால் அது வேறு பத்திரம் என்கின்றாய், எதை நம்புவதுஎதை நம்ப கூடாது என்று புரியவில்லை, நீ இப்போது என்னிடம் காட்டும் காதல் முகம் உண்மையா? இல்லை முதலில் பார்த்த அரக்க முகம் உண்மையா?” என்று கலக்கத்துடன் சுஹீரா குழப்பமாய் வினவிட

“சுஹீ எது உண்மை? எது பொய்? என்ன நடந்தது என்பதை இப்போது உனக்கு விளக்கம் சொல்லி புரியவைக்க முடியாது , எது மாறினாலும் எது பொய்யாய் போனாலும் இது மட்டும் என்றும் மாறாத உண்மை சுஹீ, நான் உன்னை காதலிக்கின்றேன் என் உயிருக்கும் மேலாய் காதலிக்கின்றேன், உன் மீது கொண்ட அளவில்லா காதல் தான், யாரின் மனதை பற்றியும் யோசிக்காமல் பிறரை காயப்படுத்தும் நான், பிறர் உணர்வுகளுக்கும் மதிப்புத்தர துவங்கி இருக்கின்றேன்” என்றவன் “சுஹீ உன் காதல் தான் என்னை மாற்றியது, நீ தான் என் காதல், வாழ்வு எல்லாம் என் காதலை மட்டும் சந்தேகிக்காதே!” என்று உண்மையை கூறாமலேயே குழப்பத்தை தீர்க்க முனைந்தான் அகரன். அகரன் குரலில்லிருந்த காதல் அவனை அதற்கு மேல் சந்தேகிக்க விடவில்லை, “ஒரு காரணம் என்றாயே என்னை காதலிக்கவைக்கவா நான் உனக்கு வேண்டும் என்று தான் நீ இதை எல்லாம் செய்தாயா?” என்று வினவினாள் சுஹீரா.

“இல்லை இது வேறு காரணம் அதை இன்னோரு நாள், விளக்கமாய் சொல்கின்றேன்” என்றவன் பேச்சை திசை மாற்றும் முயற்சியாய் வேறு பேச துவங்கினான் அகரன்.

உன் கால் வலி எப்படி உள்ளது, நேற்று நன்றாக உறங்கினாயா? என்று அகரன் வினவிட. அவனே பின் ஒரு நாள் விளக்கம் தருவதாய் கூறிவிட்ட பிறகு இன்னும் அதை பற்றியே பேசிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது என்று உணர்ந்து அகரன் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினாள் சுஹீரா.

“இப்போது கொஞ்சம் பரவாயில்லை, அது சரி என் உறக்கத்திற்கு என்ன குறை? இந்த வலியெல்லாம் என் உறக்கத்தை எதுவும் செய்ய முடியாது காலையில் கூட எழ முடியாமல் உருண்டுகொண்டிருந்தேன் இந்த சுகன் வந்து, என் தூக்கத்தை களைத்துவிட்டு சென்று விட்டான், இப்போது கூட அரைத்தூக்காத்தில் தான் கண்னைக்கூட திறக்க முடியாமல் உன்னிடம் பேசிக்கொண்டு இருக்கின்றேன்!, நீ போனை வைத்தால் விட்டயிடத்திலிருந்து என் தூக்கத்தை தொடர்வேன்” என்று சுஹீரா பதிலில் கடுப்பானான் அகரன் .

இருக்காதா பின்னே முதல் முறை தன்னவள் சம்மதத்துடன் அடைந்த முத்தங்கள் மொத்தமாய் அவன் உறக்கத்தை அள்ளி செல்ல இரவு முழுவதும் விரகதபாத்தில் துடித்தவன், காலையில் தூக்கத்தை கெடுத்தவளே அழைத்திட அவளும் தன்னை போல தான் துடித்து இருப்பாள் என்று ஆசையில் இருந்தவனை தேவையில்லாத கேள்விகளில் தினறடித்து விட்டு, நன்றாக உறங்கினேன் என்று வேறு வெறுப்பேற்றினால் வேறு எப்படி இருக்கும்.

“ஆஹா உறங்கு உறங்கு உன் வீட்டில் இருக்கும் போதே நன்றாக ஆசை தீர உறங்கிக்கொள் சுஹீ!, என்னிடம் வந்த பின் நீயும் உன் தூக்கங்களை தூர எறிந்துவிட்டு, என் தொல்லைகள் அனுபவிக்க வேண்டும்” என்று அகரன் எச்சரிக்கை விடுத்தான். “உனக்கு என்னை பற்றி தெரியாது, நான் ஒரு பெண் கும்பகர்ணி கண் மூடி உறங்க துவங்கிவிட்டாள் உலகமே வந்து சத்தமிட்டாலும் சலனமே இல்லாமல் உறங்குவேன்” என்று தனது வீர தீரம் பற்றி சுஹீரா பெருமையாய் கூறினாள்.

“சத்தமிட்டு எழுப்பினால் உறக்கம் களையாது சரி, முத்தமிட்டு எழுப்பினால்? எழுந்து தானே ஆகா வேண்டும்“ என்று அகரன் சரசம் பேசவும், சுஹீராவிற்கு மூச்சு திணறி போனது. “என்ன சத்தத்தையே காணோம், முத்தம் என்ற வார்த்தைக்கே இத்தனை வலிமையா?” என்று அகரன் கேலியாய் சிரித்திட

“சிரிக்காதே விசர் நீ என்ன செய்தாலும் எழுந்து கொள்ளமாட்டேன் போ” என்று சிறு பிள்ளை போல் கோபம் கொண்டாள் சுஹீரா. “அது எனக்கு இன்னும் வசதியாய் போனது வெறும் முத்தத்தோடு முடிக்காமல் மொத்தமாய் உன்னை அள்ளிக்கொள்ளாம் இல்லையா?”

காதலெனும் போர்க்களத்தில்
முத்தமெனும் யுத்தம் செய்வோம்…
யுத்தம் முடியும் முன்
சத்தமின்றி ஒரு
சகாப்தம் படைத்திடுவோம்…
என்று அகரன் மயக்கும் குரலில் கிறக்கமாய் கூறிட… “இது போல் பேசிப்பழக்கப்படாத சுஹீராவால் என்ன பதில் சொல்வது?” என்று புரியாமல் அவன் பேச்சுக்கு முகம் சிவக்க மெனமானாள். “மறுபக்கம் அமைதி நிலவிட கண்ணம்மா வெட்கத்தில் கன்னம் சிவக்க நிற்கின்றாயா?” என்று அகரன் வினவவும்.

“ஆமாம் என்று தலையாட்டி கொண்டே வாய் இல்லை என்று பதில் தந்தது” சுஹீராவின் பொய்யை உணர்ந்தவன் உன் அறை கண்ணாடியிடம் கேட்டு பார் அது கூறும் உண்மையை என்று நிறுத்தியவன் பின், நீ வெட்கத்தில் சிவந்து நிற்கும் போது உன்னை இறுக அனைத்து இன்னும் உன்னை சிவக்க வைத்து ரசிக்க சொல்லி கொல்லுதடி என் மனம் … என்றான் அகரன்.

என் மீதான
காதலை எங்கு
மறைத்து வைத்துள்ளாய்
உன்னுள்
தெரிந்துகொள்ள
ஆவலாய் உள்ளேன் …

என்றவன் “உன்னை முழுதாய் திறந்து அறிந்திடும் நாளுக்காக காத்திருக்கிறேன் கண்ணம்மா காலம் தாழ்த்தாமல் என் கை சேர்ந்திடு!? என்று அகரன் ஏக்கமாய் கூறினான்.

“காலையில் எழுந்ததும் இதே நினைப்பு தானா? முதலில் அலுவலகம் கிளம்பும் வழியை பார்” என்று தனது கணவனுக்கு கட்டளையிட்டு கொண்டு இருந்தாள் சுஹீரா. “இன்னும் எத்தனை நாள் என்னை இப்படி புலம்பவைப்பாய் சுஹீ பேசாமல் உன் வீட்டில் உண்மையை சொல்லிவிட்டு, என்னுடன் வந்து விடு உனக்கு சொல்ல பயம் என்றால்? , நான் வந்து பேசுகின்றேன்” என்று அகரன் கெஞ்சலாய் வினவிட

“எனக்கு என்ன பயம் என் அம்மா தான் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள் மற்ற படி எந்த பிரச்சனையும் இல்லை என்றவள், வீட்டில் சீக்கிரம் சொல்லித்தான் ஆக வேண்டும், இன்னும் இரண்டு தேர்வு மட்டும் தான் உள்ளது அதன் பின் அம்மா நிச்சயம் திருமண பேச்சை எடுப்பார்கள் அதற்குள் நானே சொல்லிவிட வேண்டும் “ என்று தீர்மானமாய் கூறினாள், சுஹீரா.

“மாலை வரும்போது சோட்டுவை அழைத்து வந்துவிடு, அவனுக்கு பிடித்த சோட்டா பீம் லட்டு வாங்கிவருகிறேன் நேற்று வேற அவனை பார்க்க வில்லையா? அவன் நினைவாகவே இருக்கின்றது” என்றான் அகரன்.

“ஓ… சோட்டு நினைவு தான் உள்ளதா? அப்படியென்றால் அவன் மட்டும் வருவான் , நன்றாக லட்டு ஊட்டி விட்டு அவனுடனே விளையாடி விட்டு கிளம்பு நான் வர மாட்டேன் என்று கோபமாய் கூறினாள் சுஹீரா.

“சுஹீ இது என்ன சிறு குழந்தை போல சோட்டுவுடன் போட்டி போடுகின்றாய், சோட்டுக்கு லட்டு என்றால், என் செல்ல பொண்டாடிக்கு தித்திப்பான ரசகுல்லா” என்று அகரன் சிரித்திட , “எனக்கு ஒன்றும் தேவையில்லை நான் உன்னை பார்க்க வரப்போவதுமில்லை என்றவள் அழைப்பை துண்டித்தாள் சுஹீரா.

அடுத்து பலமுறை முயன்றும் சுஹீரா அழைப்பை ஏற்காமல் போக
காதலுக்கு கண்
இருக்கின்றதா இல்லையா
அதை நான் அறியேனடி…
ஆனால் உன் கண்களை
கண்ட பின்தான்
காதல் என்ற ஒன்று
இருப்பதையே அறிந்தேனடி…

என்று செய்தி அனுப்பிவைத்து சமாதானம் செய்ய முயன்றான். அகரன் கவிதையில் கோபம் மறைந்தாலும் அதை அவனிடம் காட்டிட மனம் இன்றி…

உன் கிறுக்களுக்கு
கிறங்கும்
சிறு குழந்தை
நானில்லை
என்று பதில் அனுப்பிவைத்து விட்டு மீண்டும் அகரன் அனுப்பும் கவிதைக்கு ஆவலாய் காத்திருக்க துவங்கினாள்…

என் தவறை
உணர்ந்து தண்டனை
கேட்கிறேன்
முத்தமாய் கொடுத்துவிடு
மொத்தமாய் ஏற்கிறேன்…

அகரன் பதில் வரவும் தன்னவன் நினைவில் நிறைந்து நின்றவள் அப்படியே கண்களை மூடி அவன் நினைவில் காற்றில் முத்தமிட்டவள் போலி கோபத்துடன்…

மொத்தமாய் தருகின்றேன்
முத்தம் இல்லை
உன் முதுகில் மொத்து…

என்று முறைத்த படி இருக்கும் உருவ முகத்தை அனுப்பிவைத்தவள். இனியும் கவிதை கூறி என்னை கொல்லாதே, என்று உடன் சேர்த்து அனுப்பி வைத்தாள் சுஹீரா.

எவருக்கும்
அடிபனியாதவன்
நானடி.
உன் அன்பிற்கு
அடிமையானேன்
ஏனடி…

“என் காதல் இளவரசியின் கட்டளை, இந்த காதல் அடிமையின் கடமை, என் தேவதைக்கு ஒரு வேண்டுதல்! தினம் ஒரு முறையேனும் உன் தரிசனம் வேண்டும் இல்லை இந்த அடிமையின் காதல் மனது கனக்க துவங்கிவிடும்” என்று அகரன் வரிகளை படித்தவள் தான் தான் இந்த உலகத்தின் மகாராணி போல உணர்ந்தாள். “சரி சரிவிட்டால் தரையில் படுத்து காலை உதைத்து அழத்துவங்கி விடுவாய் போல, பெரிய மனது வைத்து உன் வேண்டுதலை ஏற்கின்றேன் மாலை சந்திக்கலாம்” என்று தன்னை வெளிப்படுத்தமலேயே சம்மதம் தந்தாள் சுஹீரா.

மாலை அகரனை சந்திக்கச்செல்லும் ஆசையில் கிளம்பி வந்தவளை “எங்கு கிளம்பிவிட்டாய்?, இன்று நீ எங்கும் செல்லக்கூடாது, வீட்டிற்கு விருந்தாளி வருகின்றார்கள் போய் பெண்ணாய் லட்சணமாய் புடவையை மாற்றிக்கொண்டு வா” என்று கட்டளையிட்டார் சுபத்ரா

“வீட்டிற்கு விருந்தாளி வந்தால் நான் ஏன் வெளியில் செல்ல க்கூடாது?, ஏன் புடவை கட்ட வேண்டும்?” என்று மறுத்து கொண்டு இருந்தவள் மகேஸ்வரன் வீட்டின் நுழைய கண்டதும் அவரிடம் சென்று நியாயம் கேட்க துவங்கினாள். “பாருங்கள் அப்பா விருந்தாளி வருவதற்கு எல்லாம் இந்த அலப்பறையா நான் என் தோழியிடம் இன்று வருவதாக வாக்கு கொடுத்துவிட்டேன் இப்போது போய் வரமுடியாது என்று சொன்னால் அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள்” என்று வாதாடினால் சுஹீரா.

“அப்படியென்றால் வருபவர்கள் முன் எங்கள் மானம் போனால் பரவாயில்லை என்கின்றாயா?” என்று சுபத்ரா கோபமாய் துவங்க கை நீட்டி அவரை அடக்கிவிட்டு, “கோபம் எதற்கும் தீர்வு தராது சுபத்ரா,” என்றவர் மகள் புறம் திரும்பி “நம்மை மதித்து நம்மைத்தேடி வருபவர்களுக்கு நாம் மரியாதை தர வேண்டும் தானே குட்டிமா? , நீ ஒன்று செய் உன் தோழியிடம் வர தாமதம் ஆகும் என்று கூறிவிடு. அவர்கள் வந்து சென்றதும் நீ உன் தோழியை காண கிளம்பி செல்” என்று இருவர்க்கும் சாதகமாய் பேசி சுஹீராவை சம்மதிக்க வைத்தார் மகேஸ்வரன்.

“போய் நல்ல புடவையை மாற்றிக்கொள்” என்றார் சுபத்ரா . “அது முடியாது அது என்ன பெண்ணாய் லட்சணமாய் அப்படியென்றால் புடவை கட்டாதவர்கள் எல்லாம் பெண்களே இல்லை என்கின்றீர்களா?, நீங்கள் சொன்னதும் போய் மாற்றிக்கொண்டு வந்து நின்றால் நானும் நீங்கள் சொல்வதை ஒத்துக்கொண்டது போல் ஆகிவிடாது, யாருக்கும் உறுத்தாத சலனப்படுத்தாத எந்த உடையும் இழிவானது இல்லை” என்று மீண்டும் சுபத்ரா கூறியதற்கு மறுப்பு தெரிவித்தாள் சுஹீரா.

“எப்படி பேசுக்கின்றாள் என்று பாருங்கள் வருபவர்கள் முன் இப்படியா? ஜீன்ஸ் டாப்புமாய் நிற்பாள், வளர்ந்த பெண் அடுத்தவர் முன் வரும்போது எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னாலும் புரிவது இல்லை” என்று சுபத்ரா புலம்ப துவங்கினானர். “அம்மா சேலை நம் பாரம்பரியம் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை, அதற்காக எந்த நேரமும் அதை சுற்றிக்கொண்டு இருக்க முடியாது, உங்கள் காலம் வேறு சூழ்நிலை வேறு எங்கு எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் புலம்பாமல் போய் ஆகின்ற காரியத்தை பாருங்கள்” என்று தெளிவாய் தனது மறுப்பை கூறினாள் சுஹீரா.
வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே சென்றிட, அங்கு சந்திரன் தனது குடும்பத்துடன் வந்து இருந்தார். விருந்தாளி என்றதும் யாரோ இதுவரை வராதவர்கள் வருகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்த சுஹீரா சந்திரன் குடும்பத்தை பார்த்ததும் “இவர்களுக்கு தான் இந்த பில்ட்அப்பா இந்த குடும்பத்தை தான் அன்று விழாவில் பார்த்தோமே !“ என்று யோசனையாய் நின்றாள் சுஹீரா. “உள்ளே வந்தவர்கள் சுஹீரா நிற்க கண்டு என்ன சுஹீரா படிப்பு எல்லாம் முடிந்து விட்டதா? என்று சந்திரன் விசாரிக்க , இன்னும் இரண்டு தேர்வு எழுத வேண்டியுள்ளது என்று பதில் கூறிக் கொண்டு இருந்தவள், உதயன் வந்து கை நீட்டி “ஹலோ” என்றிட பதிலுக்கு கரம் குவித்து வணக்கம் என்றாள்.

உதயன் பார்வையை கவனிதவளுக்கு கண்னை நோண்ட வேண்டும் என்று ஆங்காரம் வந்தது வாய்க்குலேயே முணுமுணுத்த படி திட்டி தீர்த்தவள். “நான் இதோ வருகிறேன்” என்று கூறி தனது அறைக்கு சென்று கதவை அடைத்த பின் கோபம் தனியாமல் பார்வையை பார் பார்வையை சரியான பொறுக்கி இவனை எல்லாம் வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்கவில்லை என்று யார் அழுதது, வேகமாய் கைக்கு கிடைத்த சுடிதார் எடுத்து அணிந்தவள் எத்தனை முறை இது போல் உடையணிந்து அகரனின் முன் நின்று இருக்கின்றேன், சில நேரங்களில் அவன் பார்வை திசை மாறி சென்றாலும் உடனே தவறு உணர்ந்து தன்னை சரி செய்து கொள்வான், அதன் பின் அவன் பார்வை கண்ணையும் முகத்தையும் தாண்டி செல்லாது !” ஆனால் அகரன் உரிமை பார்வையை ரசிக்க முடிந்தவளுக்கு இந்த உதயனின் திருட்டுப் பார்வை எரிச்சலை தான் தந்தது, என்று தன்னவன் எண்ணத்தில் மூழ்கியவள் அவனின் கண்ணியத்தில் கவர்ந்து இழுக்கபட்டு காதல் எண்ணத்தில் இருந்தவளின் சிந்தனையை களைத்தது போன் அழைப்பு மணி சத்தம்.

சுஹீரா போன் அடிக்க எடுத்து பார்த்தவள் அகரன் என்று வர “இப்போது தான் நினைத்தேன் அதற்குள் அவனே அழைத்து விட்டான்” என்று நினைத்தபடிவேகமாய் எடுத்து “உனக்கு நூறு ஆயுசு இப்போது தான் உன்னை பற்றி நினைத்து கொண்டு இருந்தேன்” என்று சுஹீரா நிறுத்த. “என்ன வெறும் நூறு தானா எனக்கு அது போதாதே”, என்று அகரன் சோகம் காட்டிட, “உனக்கு இவ்வளவு பேராசை கூடாது” என்று கேலி செய்தாள் சுஹீரா.

நூறு ஆண்டு வாழும்
பேராசை உன்னை காணும்
வரை எனக்குள்
எழுந்தது இல்லை
உன்னிடம் காதல்
உணர்ந்ததில் இருந்து
உன் காதலில் வாழ்ந்திட
ஒரு யுகமும் போதாது
என்ற எண்ணம் என்னை
உறங்கவிடுவது இல்லை

அகரன் சொன்னதையே தானும் உணர்ந்தவள், ஆமாம் “என்னை முதல் நாள் கண்ட போது என்னை பிடிக்காதது போல தானே பேசினாய் பின் உனக்கு எப்படி எங்கிருந்து இவ்வளவு காதல் என் மீது வந்தது” என்று சுஹீரா தனது இத்தனை நாள் சந்தேகத்தை கேட்டிட

இதற்கு என்ன பதில் சொல்வது நீ என்று நினைத்து உன் தோழிக்கு ஹீரோ ஆகிவிட்டு உனக்கு வில்லனாக மாறி போனேன் என்று உண்மையை சொன்னால் என்னை எதற்கு இம்ப்ரஸ் செய்ய நினைத்தாய் என்றால் என்ன பதில் சொல்வது? என்று யோசித்தவன். “காதல் எங்கிருந்து வந்ததா? நல்ல கேள்வி வருகிறேன் என்று லெட்டர் போட்டுவிட்டு கொரியர் மூலம் பறந்து வந்தது” எதற்கு இப்போது இந்த விளக்கம் எல்லாம்… “பார்த்தேன் பிடித்தது காதலித்தேன் உன் சம்மதத்துடன் மணந்தும் கொண்டேன்… இப்போது உனக்காக வழக்கம் போல காத்திருக்கின்றேன் வா” அவசரமாய் கூறினான் அகரன்.

“அப்படியா நீ காரணம் சொல்லவில்லை என்றால் நான் உன்னை பார்க்க வரவில்லை” என்று சுஹீரா பதில் தர, “சரி நீ வரவில்லை என்றால் என்ன உன் அப்பா வந்து விட்டார் போல! உன் அண்ணன் கூட இப்போது என்னை கடந்து தான் செல்கின்றான், வீட்டில் எல்லோரும் இருக்கின்ரீர்கள் இது தான் சரியான தருணம் நானே வந்து என் மாமானாரிடம் நடந்ததை கூறி உன்னை கடத்திக்கொண்டு வந்து விடுகின்றேன்” என்று அகரன் சிரித்து கொண்டே மிரட்டினான்.

“நீ திருந்தவே மாட்டாய் அப்படி எதுவும் செய்து தொலைக்காதே வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து இருக்கின்றார்கள் கொஞ்ச நேரம் பொறு அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு, தப்பி வந்து விடுகின்றேன் நீ எப்போதும் போல அந்த இடத்திலேயே காத்திரு” என்று கூறியவள் அழைப்பை துண்டித்து விட்டு கீழ் இறங்கி சென்றாள்.

எப்போது இறங்கி வருவாள் என்று காத்திருந்தது போல கையில் காபி ட்ரேயை கொடுத்து வந்தவர்களுக்கு கொடுக்க சொன்னார் சுபத்ரா “இது ஒன்று தான் குறை” என்று தனக்குள் முணுமுணுத்த படி , அதனை பெற்று கொண்டு வந்தவர்களுக்கு கொடுத்து விட்டு சுகன் அறையில் இருந்து வர அவனிடம் ஒன்றை கொடுத்து விட்டு , உள்ளே செல்ல திரும்பும் போது இங்கே வந்து உட்கார் என்று சந்திரன் மனைவி வேணி அழைத்தார். “இது என்ன அதிகாரமாய் அழைக்கின்றார்கள்?” என்று யோசனையாய் நிமிர்ந்தவள், போய் உட்கார் என்பது போல சுபத்ரா செய்கை செய்ய அன்னையை முறைத்த படி அருகில் சென்று அமர்ந்தாள் சுஹீரா.

“இப்போது பார்க்க எப்படி இருக்கின்றது அதை விட்டு பசங்க போடுவது போல ஜீன்ஸ் டாப் என்று அசிங்கமாய் பெண்கள் இப்படி உடை அணிவதால் தான் ஆண்கள் மனம் சபலம் அடைகின்றது இனி இது போல் உடை உடுத்ததே” என்று முகம் சுளித்தப்படி வேணி கூறிட…
வந்த கோபத்தில் முதலில் உங்கள் பையனை திருத்திவிட்டு வந்து என்னை திருத்துங்கள் என்று சொல்லலாம் என்று தோன்றியது விருந்தாளியாய் இல்லாமல் இருந்திருந்தால் சொல்லி இருப்பாள் விருந்தோம்பல் தடுக்க முகத்தில் எதையும் காட்டாமல் “நீங்கள் சொல்வதும் சரிதான் , ஆனால் பாருங்கள் சிறுகுழந்தை அணியும் உடையில் கூட என்ன சபலத்தை உணர்வார்களோ பிஞ்சுக்குழந்தைகள் மீதே கைவைக்கும் கயவர்கள் நிறைந்த நாடு இனி இது போல் பொறுக்கிகள் முன் பொறுப்பாய் இருக்கின்றேன்” என்று உதயனை ஒரு பார்வை பார்த்த படி கூறி விட்டு காது வரை இளித்தாள் சுஹீரா.

“யார் வீட்டிற்கு வந்து யாரை குறை சொல்வது” என்று முகத்தை உர்… என்று வைத்து இருந்தவன் சுஹீராவின் பதிலில் எழுந்து கைதட்ட வேண்டும் போல இருந்தது, சுகனுக்கு. “அப்படி சொல்லுடா செல்ல குட்டி ஒரு பெண்ணின் உடையை வைத்து அவளை கணித்து விடுவார்களா?” என்று மனதில் தங்கைக்கு சபாஷ் போட்டு கொண்டான் சுகன்.

தந்தை அருகில் குனிந்து மெதுவாய் “குட்டிமா சரியான பதிலடி கொடுத்தால் இல்லையா?” அப்பா என்றான் சுகன். “கொஞ்சம் அமைதியாய் இரு சுகன் அவர்கள் நம் குட்டிமாவை பெண்கேட்டு வந்து இருக்கின்றார்கள்”, என்று மகேஸ்வரன் உண்மையை கூறவும் “இது அவளுக்கு தெரியுமா குட்டிமா சாதாரணமாய் இருப்பதை பார்த்தால் அவளுக்கு தெரியாது போல?, ஏன் இப்படி எல்லா விதத்திலும் சுதந்திரம் கொடுத்த நீங்கள் அவள் திருமண விசயத்தில் இப்படி அவளை கேட்கமால் முடிவு எடுப்பது சரியில்லை” என்று தந்தையை எச்சரித்தான் சுகன்.

“கவலை படாதே திருமண முடிவு உன் தங்கை கையில் தான் நல்ல இடம் வரும்போது ஏன் தயங்க வேண்டும்” என்று மகேஸ்வரன் மகனுக்கு தனது செயலுக்கான விளக்கம் கொடுத்தார்
“நல்ல இடம் என்றுவிட்டு இவர்களை எதற்கு வரச்சொன்னீர்கள் இவர்களுக்கு தொழில் முறையில் அவ்வளவு நல்ல பெயர் இல்லை இந்த உதயன் கூட அவன் அப்பாவை போல் தான், என்று கேள்வி பட்டேன்” என்று கிசுகிசுத்தான் சுகன். “சந்திரன் என் நண்பன் என்ன கொஞ்சம் சுயநலவாதி இந்த காலத்தில் யார் தான் அப்படி இல்லை சொல், உதயனிடம் பேசிவிட்டு உன் தங்கை எடுக்கும் முடிவே இறுதியானது” என்று தெளிவாய் கூறினார் மகேஸ்வரன்.

“குட்டிமா நிச்சயம் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள்!” என்று நம்பிக்கையுடன் அமர்ந்து இருந்தான் சுகன். “சமைக்க தெரியுமா? வீட்டு வேலை என்னென்ன தெரியும்?” என்று வேணி கேள்வியை அடுக்கிட, சுஹீராவிற்கு ஏதோ ஒன்று உரைப்பது போல இருந்தது வழக்கத்திற்கு மாறாக ஒரு குடும்பமே விருந்து என்று வந்து இருக்கின்றார்கள் இவர்கள் வருவதால் வெளியே எங்கேயும் போகக்கூடாது, புடவைகட்டு என்று கட்டுப்பாடு வேறு இதில் இந்த அம்மா வேறு சமைக்கத்தெரியுமா, கோலம்போடத்தெரியுமா? என்று கேள்வியாய் அடுக்குவதை பார்த்தால் என்னவோ இடிக்கின்றதே!, அப்பா முகம் வேறு சரியில்லை தப்பாச்சே, என்று சுஹீரா மூளை அதன் வேலையை துவங்கியது.

“என்ன அம்மா நீங்களே பேசி கொண்டு இருந்தால் எப்படி நானும் கொஞ்சம் பேசிக்கொள்கிறேன்” என்று உதயன் வாய்யை திறக்க, “நீ மட்டும் எதாவது ஏடாகூடமாய் பேசு பின் உன்னை நான் கொல்கிறேன்” என்று தனக்குள் கூறி கொண்டாள் சுஹீரா. “நீ பேசவேண்டுமா பேசு பேசு நானும் உன்னிடம் பேசித்தான் ஆக வேண்டும் .என் காதல் அரக்கனை பற்றி உன்னிடம் கூறியே ஆக வேண்டும், என் செல்ல பகடு பற்றியும் அவனின் பொல்லாத கோபம் பற்றி மட்டும் நீ அறிந்து இருந்தால், இந்த பக்கமே தலை வைத்து படுத்து இருக்கமாட்டாய் “ என்று அகரனை பற்றி தெரிந்ததும் இந்த குரங்கு முகம் எப்படி கொடுறமாய் மாறும் என்று எண்ணி பார்த்து சிரித்து கொண்டாள் சுஹீரா.

சுஹீராவின் புன்னகையின் பொருள் உணராமல் அவளுக்கு விருப்பம் என்று தவறாக புரிந்து கொண்டனர் அனைவரும், “வாசலில் விளையாடி கொண்டு இருந்த சோட்டு அகரன் கார் நிற்க க் கண்டு “அகி அகி” என்று அழைத்து கொண்டே காரை நோக்கி வந்தான்.

சோட்டு குரல் கேட்டு அகரனும் . வேகமாய் காரை விட்டு இறங்கி வந்து “என்ன சோட்டு நீ மட்டும் வருகின்றாய், ஹீ எங்கே?” என்று கேட்டு கொண்டே, அவனுக்கு கொண்டு வந்த லட்டுவை கொடுத்திட, ஆசையாய் அதை வாங்கி வாயில் போட்டு கொண்டவன் “உனக்கு தெரியாத இனிமே ஹீ நம்ம கூட விளையாட வர மாட்ட அவ வேற வீட்டுக்கு போகப்போறா அவளுக்கு அங்க நிறைய பிரின்ட்ஸ் கிடைப்பாங்களாம்” என்று வாயில் உள்ளதை விழுங்கமல் உதப்பிக்கொண்டே கூறிட, “என்ன சொல்கின்றாய் சோட்டு கொஞ்சம் புரியும் படி சொல்” என்று மீண்டும் வினவினான் அகரன்.

தன் பிஞ்சு கை கொண்டு தனது தலையில் அடித்து கொண்டவன் “இன்னும் புரியலையா? எனக்கும் என் அம்மாம்மா சொல்லும் போது புரியவே இல்ல, நீ குட்டி பையன் உனக்கு புரியாதுன்னு சொன்னாங்க நானே குட்டி பையன்னா, பீம் கூட தெரியாத நீ என்னைவிட குட்டி பையன் தானே?” என்று கேட்டுக்கொண்டே சீட்டின் மீது எழுந்து நின்றவன் நானும் உன்ன மாதிரியே புரியலனு கேட்டேன் “அம்மம்மமா இப்படி பக்கத்துல வந்து என் தலைல கொட்டி ஹீக்கு கல்யாணம் ஆக போகுதுன்னு சொன்னாங்க” என்றவன் அதை போலவே அகரன் தலையில் கொட்டி கூறிட, அகரன் உலகமே இருண்டது போல உணர்ந்தான், “இல்லை சுஹீ உன்னை யாருக்கும் விட்டுத்தரமாட்டேன்” என்று தனக்குள் கோபமாய் கூறி கொண்டவன் சோட்டுவை தூக்கி சென்று அவன் வீட்டு கதவை திறந்து உள்ளே இறக்கி விட்டுவிட்டு நேராய் சுஹீரா வீட்டை நோக்கி நடந்தான் அகரன்.

தனியாக பேசட்டும் என்று பெரியவர்கள் அனுமதி தர, சுஹீரா முன்னே நடக்க யாரும் அறியாமல் சுஹீராவின் நடையின் அழகை ரசித்து கொண்டே பின் தொடர்ந்தான் உதயன். அகரன் வீட்டிற்குள் நுழையும் போது கண்டது இதை தான் ஏற்கனவே கோபத்தில் வந்தவனுக்கு தன்னவளை வேறு ஒருவன் ரசிப்பதை கண்டு கோபம் கொலை வெறியாக மாறியது.

ஆவேசமாய் உள்ளே வந்தவன் சுஹீ பின் சென்று கொண்டு இருந்த உதயனை படி ஏறும் முன் பிடித்து இழுத்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்தினான், “எவ்வளவு தைரியம் இருந்தால் என் சுஹீயை பார்ப்பாய் ?” என்று கோபம் கொஞ்சமும் குறையாமல் கர்ஜித்தான் அகரன் .

“என்ன உன் சுஹீயா! உனக்கு என்ன அவளை பட்டாவா போட்டு கொடுத்து உள்ளார்கள்?, முதலில் சட்டையில் இருந்து கையை எடு” என்று அகரன் கோபம் பற்றி அறியாமல் பிதற்றி கொண்டு இருந்தவன், உளறி முடித்த அடுத்த நொடி வாயில் கை வைத்து கொண்டு நின்று இருந்தான், உதயன்.

என்ன நடக்கின்றது அகரன் எப்படி இங்கு வந்தான் என்று அனைவரும் தடுமாறி நிற்கும் நேரம் உதயன் முகத்தில் தனது கோபத்தை இறக்கி இருந்தான் அகரன் . தனது மகனுக்கு கிடைத்த அடியில் பதறி போன சந்திரனும் வேணியும் ஓடி வந்து உதயனை தாங்கி கொள்ள , அடுத்த அடிக்கு கை ஓங்கி கொண்டு இருந்த அகரனை சுகன் வந்து தடுத்து நிறுத்தி இருந்தான், அகரன் கோபத்தின் எல்லை அறிந்தவள் சுகன் கட்டுக்குள் நிச்சயம் அகரன் அடங்க மாட்டான் என்று புரிந்து, அகரன் அருகில் வந்து அகரன் கையை பற்றி “என்ன அகர் எதற்கு இத்தனை கோபம்” என்று மென்மையாய், வினவிட சுஹீராவின் நெருக்கமும் இதமான வருடலும் அகரன் கோபத்தை குறைக்கும் பணியை செய்தது.

“என்னிடம் இருந்து உன்னை யாரும் பிரிக்க முடியாது சுஹீ அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்” என்று உறுதியாய் அகரன் கூறிட , “என்ன ஒரு கனவு உனக்கு! இதோ இப்போதே உன் கண் முன்னே நிச்சயத்தை முடிக்கின்றோம், அடுத்த முகூர்த்தில் திருமணத்தை முடிக்கின்றோம், நீ என்ன செய்வாய் மணமேடையில் வந்து பெண்னை குதிரையில் தூக்கி செல்வாயா?” என்று நேரம் காலம் அறியாமல் ஏளனம் செய்தார், சந்திரன்.

குறைந்த கோபம் மீண்டும் தலைக்கு ஏற “குதிரையில் வந்து தூக்கி செல்ல மாட்டேன், என் சுஹீயை நெருங்க நினைப்பவனை கொலை செய்து விட்டு அவன் பிணத்தின் மீது நடந்து செல்வேன்” என்று ஒரு கையை நீட்டி அகரன் மிரட்டிட, “அவன் கையை விடாமல் பற்றியவள் அய்யோ அங்கிள் நீங்கள் கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன்”, “அகர் அகர் இங்கு பார் என்னை பார் கோபம்கூடாது புரிகின்றதா?” என்று கன்னம் வருடி சுஹீரா அகரனிடம் பேசிட “உன்னை யாருக்கும் விட்டு தரமாட்டேன் சுஹீ” என்று அவள் கை பற்றி தனது நெஞ்சில் வைத்து அழுத்தி கொண்டவன் கொஞ்சம் கொஞ்சமாய் கோபத்தை விடுத்து நின்றான்.

“சுகன் நீ விடு அவரை என்று உரிமையாய் அகரன் கையை பற்றி அழைத்து சென்று சோபாவில் உட்கார வைத்து விட்டு அம்மா கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள்” என்று சுபத்ராவை பார்க்க.
“அடிபட்டது அவருக்கு நீ இங்கு வந்து அடித்தவனை தாங்கி கொண்டு இருக்கின்றாய் முதலில் அவன் கையைவிடு இங்கு என்ன நடக்கின்றது?” என்று கோபமாய் வினவ , தண்ணீர் நிறைந்த டம்ளர் கொண்டு வந்து அகரன் முன் நீட்டினார் மகேஸ்வரன்.

நிமர்ந்து அவரை பார்த்து நீரை வாங்கி குடித்து விட்டு, “ என் சுஹீயை வேறு ஒருவனுடன் சேர்த்து பார்த்ததும் கோபம் வந்து விட்டது” என்று குரலை தனித்து மன்னிப்பு வேண்டும் குரலில் அகரன் பேசினான்.

“நீங்கள் சுஹீராவை உண்மையில் காதலிக்கின்றீர்களா?” என்று அகரன் அருகில் அமர்ந்திருந்த சுஹீராவை பார்த்தபடி மகேஸ்வரன் வினவ, அகரன் “ஆமாம்
என்பதற்குள், சுஹீரா “ரொம்ப ரொம்ப அப்பா அகரனுக்கு நான் என்றால் உயிர் எங்கு என்னை இழந்து விடுவானோ? என்ற பயத்தில் தான் இப்படி கோபப்பட்டு விட்டான்” என்று அகரானுக்காக பேசினால் சுஹீரா.

“பார்த்தாயா மஹேஸ்வரா நான் சொன்னது சரி தான், பார்த்தாயா? அவன் நினைத்தது இது தான் எந்த பெண் கால் தூசியாய் கூட அவனை மதிக்கமாட்டாள் என்று அவமான படுத்தினாயோ!, அந்த பெண் வாயாலேயே அவனுக்காக உன்னிடமே பேச வைத்து விட்டான், இது தான் அவன் திட்டம் உன்னை தொழிலில் வீழ்த்த நினைத்தான், கடன் மேல் கடன் வாங்கும் படி இக்கட்டான நிலைக்கு உன்னை கொண்டு வந்து விட்டான் அதற்கு எல்லாம் நீ அசரவில்லை என்று உன் நம்பிக்கையின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்க நினைத்து விட்டான்” என்று அகரன் செயல்களை வரிசையாய் அடுக்கினார் சந்திரன்.

“நீ அமைதியாய் இரு சந்திரா, உன் மகனுக்கு அடிபட்டு உள்ளது பார் அழைத்து கொண்டு மருத்துவமனை செல் மற்றதை நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று மகேஸ்வரன் அவரை அங்கிருந்து அகற்ற முயன்றார்.

“அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட சந்திரன் நீ ஏன் இன்னும் இந்த அகரனுக்கு பயப்படுகின்றாய்! மகேஸ்வர் இவன் சங்கத்தின் தலைவன் என்றா? நம் சுஹீரா புத்திசாலி உண்மை தெரிந்தால், அவளே இந்த முரடனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுவாள்” என்று விடாமல் பேசிக்கொண்டே சென்றார் சந்திரன்.

அகரன் முகத்தில் குற்ற உணர்வு படர்ந்தது அதை கவனித்து கொண்டு இருந்த சுஹீரா அகரன் கைபற்றி இருந்ததை விலக்க முயல, அதை தாங்கமுடியாமல் துடித்து போன அகரன் அடிபட்ட வலியுடன் அமைதியாய் இருந்தான்.

அகரன் செயலியிலும் கோபத்திலும் சுஹீராவின் மீது உள்ள அளவில்லா காதல் வெளிப்படையாய் தெரிய தான் கொண்ட சந்தேகம் மெய் என்று உணர்ந்து கொண்ட மகேஸ்வரன், “போதும் சந்திரா என்று மகேஸ்வரன் தடுத்தார்.

“சங்கத்து தேர்தலில் என்னை தோற்கடித்ததும் இல்லாமல் என் மகன் விரும்பும் பெண்ணையும் அபகரிக்க நினைக்கின்றாயா? அதில் விட்டு கொடுத்தேன் ஆனால் என் மகன் விசயத்தில் விட்டு தர மாட்டேன்” என்று தனக்குள் தீர்மானம் எடுத்து கொண்டவர் மகேஸ்வரன். தடுத்ததையும் பொருட் படுத்தாமல், “உதயா உனக்கு இன்னும் வலிக்கின்றதா என்று மகனிடம் அக்கறையாய் விசாரித்தவர், பார்த்தாயா? இது தான் இந்த அகரனின் சுயரூபம் யாரவது இவனை காயப்படுத்தினால் அவர்களுக்கு இருமடங்கு வலி கொடுத்து அதை கண்டு ரசிக்கும் இரக்கம் அற்றவன், சங்கத்து தேர்தலில் எனக்காக என் நண்பன் இந்த அகரனின் உண்மை முகத்தை வெளிப்படையாக யாருக்கும் பயப்படாமல் பேசினான் , அதற்கு பழிவாங்க தான் இந்த காதல் நாடகம்!, நீ நினைப்பது போல இவன் நல்லவன் இல்லை இவனுக்கு உன் மீது உள்ளது உண்மை காதலும் இல்லை, பல பெண்களுடன் பழக்கம் உள்ளது என்று துவங்கி அன்று நடந்ததை முழுதாய் கூறி முடித்தவர், அன்று நடந்ததை மனதில் வைத்து உன் அப்பாவிற்கு தொழிலில் கஷ்டத்தை கொடுத்தான் கடன் பட வைத்தான்” என்று ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி முடித்தார் சந்திரன்

ஏனோ சந்திரன் சொன்னதை உண்மை என்று நம்பமுடியவில்லை, சுகந்தனால் அவன் அறிந்த அகரன் அப்படி இல்லை அதை உணர்த்திவிடும் வேகத்தில் “நீங்கள் சொல்வது போல தொழிலில் எங்களுக்கு தொந்தரவு கொடுத்தது அவர் தான் என்றால், எங்கள் பணத்தேவைக்கு எதற்கு அவர் பணம் தந்து உதவ வேண்டும், இப்போது கூட பல ஆர்டர் அவர் தான் கொடுக்கின்றார்” என்று இதுவரை மகேஸ்வரனும் அறியாத உன்மையை உளறினான், சுகந்தன்.

மகேஸ்வரன் போல சந்திரனும் புரியாமல் குழம்பி நிற்க முதலில் தெளிந்த சந்திரன், “ஓ… அதனால் தான், அடுத்து அகரன் எடுத்த எந்த நடவடிக்கைக்கும் நீ எதிர்ப்பு சொல்லாமல் இருந்தாயா? அவன் உதவி உனக்கு தேவை பட்டது. அப்படி தானே?” என்று சந்திரன் மகேஸ்வரனை குற்றம் சொல்ல. “என்ன சொல்கின்றாய் சுகன் உன் நண்பன் பணம் தந்தான், ஆர்டர் கொடுத்தான் என்று தானே சொன்னாய்” என்று மகேஸ்வரன் மகனை கேள்வி கேட்டார்.

“அகரனும் என் நண்பன் தான் அப்பா என்றவன், பணம் திரும்பி கொடுத்து விட்டேன் பத்திரத்தை மீட்டுவிட்டேன் “ என்று சோர்ந்து சொன்னான் சுகந்தன்.

நடக்கும் விவாதத்தை எல்லாம் வேணி, சுபத்ரா, வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க தனது வாயில் வடிந்த இரத்தத்தை துடைத்து கொண்டு, “உங்களிடம் பணத்தை திரும்பப்பெற்று கொண்டதில், இருந்தே அவன் எண்ணம் என்னவென்று உங்களுக்கு புரியவில்லை அவனுக்கு சுஹீராவின் காதலைவிட பணம் தான் முக்கியம் “ என்று அந்த வலியிலும் முயன்று சிரித்தான் உதயன்.

“நாங்கள் தேவைக்கு தான் பணம் வாங்கினோமே தவிர, எங்கள் சுஹீராவை விற்க பணம் வாங்கவில்லை!, அதானல் அவரே பணத்தை வாங்க மறுத்து இருந்தாலும் நான் அதற்கு சம்மதித்து இருக்கமாட்டேன்” என்று சுகந்தனும் கோபமாய் பதில் தந்தான். “நானாக இருந்து இருந்தால் காதலைவிட பணமா முக்கியம் என்று, என் சுஹீராவிற்காக பணத்தை வேண்டாம் என்று மறுத்து இருப்பேன் என்றான் உதயன்.

இதுவரை என் அகரன் அப்படி இல்லை என் மீது கொண்ட காதலால் தான் இப்படி நடந்து கொண்டான், என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் இருந்தவளுக்கு அந்த நம்பிக்கை கொஞ்சமா கொஞ்சமாய் தளர்ந்து இப்படி ஏமாந்தோமே என் அப்பாவை பழிவாங்க என்னையே பயன்படுத்தி கொண்டானே, இது தெரியாமல் இவன் காதல் உண்மை என்று நம்பி தானும் உருகி காதலிக்க துவங்கிவிட்டோமே என்று தன் மீதே வெறுப்பு வர, இதுவரை புரியாத பல கேள்விக்கு விடை கிடைக்க துவங்கியது, அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தவள் அகரன் கைகள் தன்னை சுற்றியிருக்க, காலை சுற்றிய பாம்பின் நினைவு வந்து பயம் கொள்ள செய்தது அகரன் பிடியில் இருந்து விடுபட போராடினாள்.

சுஹீரா தன்னை விட்டு விலகவிடாமல் கைபிடித்து அமர்த்தி கண்களால் தனது காதலுக்காக, இது வரை யாரிடமும் கேட்டு பழக்கம் இல்லாத மன்னிப்பை வேண்டி கொண்டு இருந்தவன்… உதயனின் “என் சுஹீரா” என்ற வார்த்தையில் சினம் துளிர்க்க எழுந்து சென்று அவள் “என் சுஹீ எனக்கு மட்டுமே சொந்தமானவள் இன்னொரு முறை உன் சுஹீரா என்று கூறினால், இந்த அகரனின் வேறு ரூபத்தை நீ காணவேண்டி வரும்”, “என்ன சொன்னாய் பணம் தான் முக்கியம் என்று நினைத்தேனா?, எனக்கு பணம் முக்கியம் இல்லை என் சுஹீயின் சுயகௌரவம் தான் முக்கியம் தனது அப்பா, அண்ணன் யாரிடமும் கடனாளியாக தலை குனிந்து நிற்க என் சுஹீ என்றுமே சம்மதிக்க மாட்டாள், அது நானாக இருந்தாலும் தான்” என்று உதயன் சட்டையை பிடித்து உழுக்க, அவனை தடுக்க முன்வந்தான் சுகந்தன்

“நீ சொன்னது சரி தான் சுகன் நீ உன் தங்கையை விற்க விரும்பவில்லை நான் என் காதலை விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை” என்றவன் உதயனை விடுத்து சுகனை கட்டி கொண்டு நன்றி நண்பா என்றிட சுகந்தனும் அகரனை ஆரத்தழுவி கொண்டான்.

“உன் நாடகம் முடிந்தது என்றால் இங்கிருந்து வெளியே போய் விடு” என்று சுஹீரா கோபமாய் கத்தினாள். “சுஹீ என்ன நடந்தது என்று எனக்கு விளக்கம் சொல்ல வாய்ப்பு கொடு என்று கெஞ்சும் பார்வையில் அகரன் வாய்ப்பு வேண்டி கெஞ்சிட, “இதுவரை உன் வார்த்தை கேட்டு முட்டாளாய் இருந்தது போதாதா?, என் அப்பாவின் முதுகில் குத்த என்னையே கத்தியாய் பயன்படுத்தி கொண்டாய் அல்லவா?” என்று கண்களின் நீர் கன்னம் வடிந்திட அதை துடைக்கவும் மனமற்று வேதனையில் துடித்த படி வினவினாள் சுஹீரா.

“சுஹீ ப்ளீஸ் அழுகாதே எனக்கு ஒரு வாய்ப்பு கொடு நான் சொன்னதை கேட்ட பின்பும் உனக்கு என்மீது கோபம் குறையவில்லை என்றால், என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்” என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டு கன்னங்களை கையில் ஏந்தி கொண்டு அகரன் காதலாய் பார்த்திட… இந்த பார்வையில் தான் என்னை தொலைத்து நிற்கின்றேன் என்று ஏமாற்றம் அதிகரிக்க அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்து இமை மூடி கொண்டு “நான் கேட்கும் ஒரு கேள்விக்கு மட்டும் உண்மையான பதில் சொல்” என்றவள் அகரன் சம்மதமாய் “ம்” என்றிட, “அவர்கள் சொன்னது உண்மையா?, என் அப்பாவை பழிவாங்கத்தான் என்னை காதலிப்பது போல நடித்தாயா ?” என்று சுஹீரா வலி மிகுந்த குரலில் வினவினாள்.

அகரன் மௌனமாய் நிற்க “சொல் உன்னிடம் தான் கேட்கின்றேன்” என்று சுஹீரா மீண்டும் குரலில் அழுத்தம் கொடுத்து வினவிட , “நடித்து ஏமாற்ற தான் நினைத்தேன் ஆனால் எப்படி உன்னை உண்மையில் காதலிக்க துவங்கினேன் என்று புரியவில்லை, உன் மீதான காதலை உணர்ந்த நொடியிலிருந்து, ஒவ்வொரு நொடியும் உன்னை உண்மையாக மட்டுமே நேசிக்கின்றேன், அதன் பின் என்னால் உன் அப்பாவை கூட வெறுக்க முடியவில்லை, அவருக்கு தொந்தரவு கொடுத்தால் உனக்கு வலிக்கும் என்று என் கோபத்தை மறந்து அவர்களுக்கு உதவிட துவங்கினேன்” என்று தனது செயலுக்கு அகரன் விளக்கம் கொடுத்தான்.

மூடிய இமைகளை திறவாமலேயே “இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இன்னும் உன் காதல் நாடகம் அரங்கேற்ற என்னைத்தேடி வாரதே” என்றவள், மறைத்து வைத்து இருந்த தாலியை கையில் ஏந்தி கொண்டு உனக்கும் எனக்குமான எல்லா பந்ததையும் இதனோடு சேர்த்து அறுத்து எரிகின்றேன் என்று தாலியை கழட்ட போனாள் சுஹீரா.

திடீரென சுஹீரா கழுத்தில் தாலியை கண்டவர்கள் அது அகரன் காட்டியது என்று அறிந்து அதிர்ந்து போய் நின்று இருந்தனர், “அவள் கையை இறுக பற்றி தடுத்தவன், என் காதல் நடிப்பு முடிவிற்கு கொண்டு வர வேண்டியது என்று நான் நினைத்திருந்தால் இதை உன் கழுத்தில் கட்டியிருக்க மாட்டேன், இதுவரை உன்னை ஏமாற்றி விட்டோம்!, என்ற குற்ற உணர்வில் தான் நீ பேசியதை கேட்டுக் கொண்டு அமைதியாய் இருந்தேன், எப்போது என் செயலுக்கான விளக்கம் கொடுத்தேனோ! என் குற்ற உணர்வு போய் விட்டது, இனி என்னிடம் இரக்கத்தையோ அனுதாபத்தையோ யாரும் எதிர்பார்க்காதீர்கள்” என்றான்.

“என்னிடம் பேசும் போது யோசித்து பேசு, என்று உன்னிடம் பல முறை கூறி இருக்கின்றேன் எனக்கு வலி கொடுக்காதே நான் திருப்பி வலிக்க அடித்தால் தாங்க மாட்டாய் என்று எச்சரித்தவன், நீயே என்னை விலக நினைத்தாலும் நான் அதற்கு அனுமதிக்க மாட்டேன், இந்த பிறவியில்! நீ தான் என் மனைவி நான் தான் உன் கணவன்! இது முடியும் பந்தம் இல்லை ஜென்ம ஜென்மாய் தொடரும் பந்தம்” என்றவன். “என் காதல் உண்மை அதை அடைய எந்த எல்லைக்கும் செல்வேன் என்று ஒரு விரல் காட்டி மிரட்டிட அகரன் கண்ணில் இருந்த கோபம் கண்டு சுஹீரா உடல் வெளிப்படையாகவே அதிர்ந்தது.

“நல்ல குடும்பம் திருமணம் ஆனதையே மறைத்து வைத்து இருக்கின்றாள், நம் மகனுக்கு நல்ல இடம் பார்த்தீர்கள் ஏன்டா? ஊர் உலகத்தில் நீ விரும்ப வேறு பெண் கிடைக்கவில்லையா? பெண் பார்க்க வரச்சொல்லி விட்டு பெண்ணின் திருமணம் விருந்து போடுவார்கள் போல, இன்னும் என்ன இங்கு நின்று கொண்டு அவர்கள் வாயை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்ரீர்கள் கிளம்புங்கள் என்று வேணி தலையில் அடித்து கொண்டுநிற்க வந்தவர்கள் கிளம்பிச்சென்றனர்.

அதுவரை அமைதியாய் நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சுபத்ரா சுஹீராவை நெருங்கி “உன்னை உன் விருப்பத்திற்கு விட்டு சுத்ததிரமாய் வளர்த்த மனிதனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தாய் போதுமா?, உனக்கு இதை கட்டிக்கொண்டு இத்தனை நாள் மறைத்து கொண்டு நல்லவள் போல் நடித்து ஏமாற்றியதற்கு பதில் இதை கழுத்தில் வாங்கிய அன்றே எங்காவது சென்றிருந்தால் உன்னை தலை முழுகிவிட்டு நிம்மதியாய் இருந்திருப்போம் இல்லையா?” என்று கேட்டு கொண்டே சுஹீராவை அடிக்கத்துவங்க அகரன் இடையில் வந்து சுபத்ரா கை பற்றி தடுத்து நிறுத்தினான்.