அரக்கனோ அழகனோ 22

அரக்கனோ அழகனோ 22
0

அழகன் 22

என் வாழ்வை அழித்து
உன் சந்தோசத்தை
துலைத்து வாழும்
இந்த பிரிவு
அவசியம் தானா
நமக்கு …

என் ஆளுமையால்
மிரட்ட எண்ணினேன்
அரக்கனாய் நானடி…
உன் காதலால்
மிரண்டு நிற்கின்றேன்
அழகனாய் ஏனடி…

“இன்று உனக்கு கல்லூரியில் தேர்வு உள்ளது தானே?, இன்னும் தயாராகாமல் இருக்கின்றாய், நடந்ததையே நினைத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாள் வீட்டிற்குலேயே அடைந்து கிடைப்பாய்?, இரண்டு நாட்களாக வீட்டுவாசல் தாண்டாமல் அடைந்தே கிடக்கின்றாய்!”, என்று கேட்டபடி அவள் அணிய வேண்டிய உடையை எடுத்துக்கொடுத்தார் சுபத்ரா.

“இல்லைமா எனக்கு வெளியில் எங்கும் செல்லவே விருப்பம் இல்லை, தேர்விற்கு படிக்கவும் இல்லை, எழுதினாலும் பாஸ் மார்க் எடுப்பேன் என்ற நம்பிக்கை இல்லை, வீணாய் ஏன் எழுதிக்கொண்டு என்று விரக்தியாய் பேசினாள் சுஹீரா.

மெலிதாய் புன்னகை ஒன்றை உதட்டில் சூடிக்கொண்டு “முயற்சி தான் திருவினையாக்கும் என்பார்கள், முயலாமல் முடியாது! என்று முடிவு எடுப்பது மூடத்தனம் குட்டிமா, இத்தனை நாள் நீ வகுப்பில் கவனிதத்தை வைத்து எழுது பாஸ் மார்க் கிடைத்தால் பார்ப்போம்!, இல்லை அடுத்த முறை முயன்றுகொள்” என்றவர் மகள் இன்னும் தயங்குவதை கண்டு “வெளியில் சென்றால் அகரனை காணவேண்டி” வந்து விடுமோ என்று பயப்படுகின்றாயா? என்றதும், ஒரு நொடி உடல் அதிர, “இல்லை என்று மறுப்பாய் தலையசைத்து, “பகடு தான் சொன்னானே அம்மா நான் காணாத தூரம் நின்று என்னை கவனித்துக்கொண்டே தான் இருப்பேன், என்று அவன் சொன்னால் அதை மீறமாட்டான் அம்மா!” என்றவள் குரலில் என்னவன் குணம் நான் அறிவேன் என்று கர்வம் கலந்து இருந்தது.

இந்த இரு தினங்களில் சுபத்ராவின் அறிவுரையும் அரவணைப்பும் இது வரை இல்லாத நெருக்கத்தை இருவருக்கும் இடையில் ஏற்படுத்தி இருந்தது, அந்த நெருக்கத்தில் மனதில் உள்ளதை மறைக்காமல் தனது அன்னையிடம் பகிர்ந்து கொண்டாள் சுஹீரா.

“அவன் என் முன் வரமாட்டான் அம்மா, ஆனால் தொலைவில் இருந்து என்னை கவனிப்பான் அதில் எனக்கு விருப்பமில்லை, அவன் நினைவில் இருந்து நான் மறையவேண்டும் அது நடந்தால் மட்டும் தான் அவன் காதல் சிறையிலிருந்து, எனக்கு விடுதலை கிடைக்கும், அவன் கண் பார்வையில் நான் இருந்தால் என்னை மறக்கவேமாட்டான், இப்போது கூட என் மனம் மாறி அவன் மீது உள்ள கோபம் குறையும் வரை பொருத்திருந்து பார்ப்பான்!, பின் ஏதாவது திட்டமிட்டு நானே அவன் முன் சென்று நிற்கும்படி செய்வான்” என்றால் சுஹீரா

“அகரனை நன்கு புரிந்து வைத்து உள்ளாய்!” என்று மெச்சுதலாய் கூறியவர், “அவன் பார்ப்பான் என்று பயந்துகொண்டே எத்தனை நாள் இப்படி வீட்டின் உள்ளேயே இருப்பாய். நீ சுகனுடன் சென்று அவனுடனே திரும்பி வந்துவிடு”, என்று வற்புறுத்தலுடன் சுபத்ரா கூறிட சம்மதமாய் தலையாட்டினாள் சுஹீரா.

“புரிந்துள்ளதால் தான் இவ்வளவு வேதனை” அம்மா… என்று தனக்குள் புலம்ப துவங்கினாள் சுஹீரா . “அரக்கன் முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு காதல் அழகன் மனம் புரிந்ததால் தான் ஒவ்வொரு நொடியும் அவன் நினைவில் புழுவென துடிக்கிறேன், அவன் உன் அப்பாவை பழிவாங்கத்தான் வந்தேன்!, என்று உண்மையை முதலில் கூறியிருந்தால் இந்த அளவிற்கு அவனை விரும்பி இருக்கமாட்டேன் , உண்மை அறிந்தும் மறக்க முடியாமல் இப்படி துடிக்கவும்மாட்டேன்” என்றவள் கைபேசியில் செய்தி வந்திருப்பதை அறிவிக்கும் ஒலிவர, பரபரப்பாய் எடுத்து பார்த்தவள் வேறு யாரோ என்று வெறுமையுடன் வைத்தவள், அருகில் இருந்த டைரியை எடுத்து கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே எழுத துவங்கினாள்,

வார்த்தைகளால்
வசியம் செய்தது
நீயடா. …
உன்னால் களவாடா பட்டு
கண்ணீரில் கரைக்கிறேன்
நானடா. …

உன் கண்ணசைவில்
கள்ளுண்ட போதை
கொண்ட மனது…
இன்று கண்ணீரில்
கரைவது ஏனடா…

உன் காதலை
நான் கண்டறியும் போது
என் அருகில்
நீ இல்லை!!!
என் உணர்வுகளை
நீ உணரத்துவங்கையில்
உன் அருகில்
நான் இல்லை!!!

உன்னை பற்றி
யோசித்து யோசித்தே
அதிகம் நேசிக்க
துவங்கிவிட்டேன்…

“இதுவரை அகரன் கூறிய கவிதைகளை எல்லாம் எழுதிவைத்து இருந்த தொகுப்பில் அவனுக்காக தான் எழுதிவைத்து இருந்த கவிதைகளுடன் புதிதாய் சில கவிதை படைத்தாள் சுஹீரா. சிறிது நேரம் அகரன் நினைவில் மூழ்கி இருந்தவள் சுபத்ரா குரலில் மீண்டும் உணர்வுக்கு திரும்பி கல்லூரி செல்ல தயாராகி வந்தாள்.

சுஹீரா முகவாட்டம் அவள் மனதின் உணர்வினை உணர்த்திட , “என்ன குட்டிமா பரீட்சைக்கு படிக்கவில்லை என்று மட்டம் போடலாம் என்று நினைத்தாயா அம்மாவிடம் வசமாக மாட்டிக்கொண்டாயா?”, என்று கேலி செய்து அவள் மனநிலையை மாற்ற முயன்றான் சுகன்.

பெயர் அளவிற்கு சிரித்தவள் உணவை முடித்துவிட்டு “நான் என் பொருட்கள் எடுத்து வந்துவிடுகிறேன்” என்று அவள் அறை சென்றநேரம் , “இதுவே பழைய சுஹீரா என்றால் என்னை உண்டு இல்லை! என்று செய்து இருப்பாள், “பழைய குட்டிமா தொலைந்துவிட்டாளே! அம்மா என்று வேதனை குரலில் கூறினான் சுகன்.

“தொலையவில்லை சுகன் பழைய சுஹீ அவள் அகரனிடம் சிறைப்பட்டு இருக்கின்றாள் அவளை மீட்க முடியாமல் தான் உணர்வுகள் இன்றி நடமாடுகின்றாள், இவ்வளவு அன்பை வைத்து கொண்டு இவளுக்கு எதற்கு இந்த பிடிவாதம்” என்று மகேஸ்வரன் புரியாமல் வினவினார்.

“அவள் நிலையையும் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள் இது காதல் தான் என்று அவள் சரியாய் உணரும் முன்பே ஒரு காரணத்திற்காக தான் காதல் நாடகம் நடத்தி தன்னை ஏய்த்தான் என்ற உண்மை தெரிய வரும் போது அவள் வேறு எப்படி உணர்வாள், அவளிடம் பேசியதை வைத்துசொல்கிறேன் அகரன் அவள் மனதில் ஆழ்ந்து பதிந்துவிட்டார் அவரை பற்றி பேசும் போது அவள் குரலில் அவ்வளவு அன்பு தெரிகின்றது அவர் என்ன செய்வார் என்ன யோசிப்பார் என்று நன்கு தெரிந்து வைத்து உள்ளாள், உண்மையான அன்பு பூண்ட இடத்தில் சிறு பொய்யும் பாரமாய் தான் இருக்கும் நமக்கு திருமணம் முடிந்து இத்தனை வருடம் கடந்துவிட்டது இருந்தும் நீங்கள் எதையாவது என்னிடம் மறைந்தால் அதை என்னாலும் பொறுத்து கொள்ளமுடியாது தான் அவர்கள் இப்போது தான் புரிந்து கொள்ளவே துவங்கி இருந்தார்கள் அதற்குள் இந்த விரிசல் கொஞ்சநாள் ஆனால் அகரன் தான் தனக்கு எல்லாம் என்று புரிந்துகொள்வாள்” என்று சுஹீராவிற்காக பரிந்து பேசினார் சுபத்ரா.

“இவள் புரிந்து கொள்ளும் வரை உங்கள் மருமகனுக்கு பொறுமை இல்லையே! அம்மா அவர் தான் காலையிலேயே போனில் அழைத்து தேர்வை நினைவு படுத்தியவர், அதன் பின் அவள் கிளம்பிவிட்டாளா? என்று தெரிந்துகொள்ள பத்து தடவைக்கு மேல் போன் செய்துவிட்டார்” என்று சுகன் கூறியதும் பெற்றோர் முகத்தில் மகிழ்ச்சி புன்னகை கூடியது.

“அவருக்கு அவர் மனைவி மீது அக்கறை அதில் உனக்கு என்ன வந்தது?” என்று மகேஸ்வரன் கேலி செய்ய, “ஆஹா அடுத்த முறை உங்களை அழைக்க சொல்கிறேன் பேசுபவர் சும்மா பேச மாட்டார் மூச்சுக்குமூச்சு என் சுஹீ! என் சுஹீ! என்று மந்திரமாக உச்சரிப்பவர் என் மனைவியை நான் வந்து அழைத்து செல்லும் வரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று கட்டளை வேறு” என்று அகரன் போல் சொல்லி காட்டினான், சுகன்.

சுகன் முதுகில் செல்லமாய் தட்டியவர் “அவருக்கு அவர் மனைவி மீது அக்கறை, ஆனால் அதை இந்த பெண் தான் புரிந்து கொள்ளமாட்டேன் என்கின்றாள், யார் தான் தவறு செய்வதில்லை அவர் கொண்ட அன்பை நினைத்தாவது மன்னிக்க முயற்சி செய்யலாம்” என்று கவலையுடன் சுபத்ரா கூறி கொண்டு இருக்கும் போதே சுஹீ வர அத்துடன் பேச்சை நிறுத்தியவர். “குட்டிமா கூடவே இருந்து தேர்வு முடிந்ததும் நீயே அழைத்து வந்துவிடு அவளை கஷ்டப்பட்டு சம்மதிக்க வைத்து உள்ளேன்” என்று சுபத்ரா கூற இடைவரை குனிந்து “உத்தரவு மகாராணி” என்று சுகன் கூறிட, மற்றவர்களுடன் சுஹீராவும் சிரித்தாள்.

சுகன் தனது வண்டி சாவியை எடுத்ததும் சற்று தயங்கியவள் “அண்ணா இன்று காரில் செல்வோம்” என்றாள் சுஹீரா. யோசனையாய் தந்தையை பார்த்த சுகன் அவர் சம்மதமாய் தலை அசைக்க “சாரி அப்பா நீங்கள் இன்று அலுவலகம் செல்ல வேறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு இருவரும் காரில் கிளம்பினர்.

“பைகில் வந்தால் அகரன் உன்னை பார்த்து விடுவார் என்ற பயமா? பைத்தியம் உன்னை விட காதல் பைத்தியம் தலைக்கு ஏறி திரிகின்றார் உன் காதல் கணவன்” என்று தனக்குள் சிரித்து கொண்டவன் வேகமாய் தனது போனில் இருந்து கிளம்பிவிட்டோம் ஆனால் வருவது காரில் என்று செய்தி அனுப்பி வைத்தான் சுகன். அழும் முக உருவத்துடன் கார் கண்ணாடியை திறந்து வை என்று பதில் வர சரியான கேடி என்று நினைத்து கொண்டு காரின் ஏ.சி யை நிறுத்திவிட்டு கண்ணாடியை திறந்து வைத்தான், சுகன்.

“அண்ணா ஏ. சி இல்லை என்றாலும் பரவாயில்லை நீ கண்ணாடியை மூடு” என்றாள் சுஹீரா. “இல்லை முடியாது கண்ணாடியை மூடினால் அவர் என்னை சும்மா விடமாட்டார்” என்று சுகன் கூறியதும் “எவர்?” என்று அழுத்தமாய் வினவினாள் சுஹீரா. “எவர் எவர் என்றால் எவரை சொல்வது இந்த கார் எவருடையதோ அவர் நம் அப்பா” என்று ஒரு வழியாய் சமாளித்தான் சுகன்.

சிக்னலில் நிற்கும் போது ஏதாவது காரோ பைக் ஒட்டி வந்து நின்றால் கையில் உள்ள புத்தகம் கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு வந்தாள் சுஹீரா. “அவள் செயலை கண்டு சரியான கேடி நீ குட்டிமா நீ கேடி என்றால் உன் கணவர் உனக்கு மேல் அல்லவா? இருக்கின்றார் “ என்று தன் பக்கம் காரை ஒட்டி நின்ற பைக்காரனை பார்த்து கட்டை விரல் உயர்த்தி செய்கை செய்தான் சுகன்.

அவள் பக்கம் வந்த வண்டிகளை மட்டும் கவனித்துகொண்டு வந்தவள், வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து ஒரு பைக் தங்களை பின் தொடர்வதையும் ஒவ்வொரு சிக்னலிலும் காரை ஒட்டி நின்றபடி தன் செயல்களை கவனிப்பதையும் கவனிக்க மறந்தாள் சுஹீரா. கல்லூரியின் உள்ளே சென்று இறங்கியவள் ஒரு முறை சுற்றி பார்வையை சுழற்றிவிட்டு “சரி நீ கிளம்பு சுகன் தேர்வு முடியும் நேரம் கணக்கிட்டு வந்துவிடு” என்றாள். “இல்லை நான் இங்கேயே இருக்கின்றேன் அம்மா உன்னை கூடவே அழைத்து வர சொன்னார்கள் மறந்துவிட்டதா?, நீ சொன்னாய் என்று போய்விட்டு பின் உன் அப்பாவிடம் வாங்கிகட்ட முடியாது” என்று சுகன் மறுக்க ஒருவழியாய் அவனை சரி என்று கிளம்ப சம்மதிக்க வைத்துவிட்டு தேர்விற்கு சென்றாள் சுஹீரா.

அருகில் இருந்த கல் பெஞ்சில் முதுகு காட்டி அமர்ந்து இருந்தவன் அருகில் சென்று அமர்ந்த சுகன், “சுஹீரா என்ன செய்வாள் என்று சரியாய் யோசித்து, உள்ளீர்கள்” என்று பராட்டுத்தலாய் கூறி சிரித்திட, “மனைவியை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் பிரச்சனை, முன்பே அவள் என்ன செய்வாள் என்று கணித்து விட்டால் கிடைக்கும் அடியில் இருந்து தப்பிக்கலாம் இல்லையா?” என்று கூறி கொண்டே தனது தலையில் இருந்த ஹெல்மெட்டை கழற்றி ஓரமாய் வைத்தான் அகரன்.

“அடியை பற்றி எல்லாம் எனக்கு முன் அனுபவம் இல்லை, மாப்பிள்ளை நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது நீங்கள் நிறைய அனுபவித்து இருப்பீர்கள் போல” என்று சுகன் கேலியில் இறங்கினான்.

முதன்முறை முத்தமிட போது சுஹீ அடித்தது நினைவில் வர, அன்றைய நினைவில் முகம் மலர்ந்தவன் “உங்கள் தங்கை தனியாய் கைகளால் வேறு அடிக்கவேண்டுமா, என்ன?, அவள் கண்ணால் முறைத்தாலே போதுமே பத்து அடி தள்ளி நிற்கவேண்டும்” என்று சுகன் கேள்விக்கு பதில் தந்தான் அகரன். “இத்தனை வருடம் நீங்கள் வாங்காத அடி உதையா? உங்களிடமே உங்கள் தங்கை பெருமையை புகழ்கின்றேன் பாருங்கள், என்ன மச்சான் நான் சொல்வது சரிதானே” என்று கைகுலுக்கி விசாரித்த அகரனை விசித்திரமாய் பார்த்தவன், “முதலிலேயே நீங்களே மறைக்காமல் உண்மையை சொல்லி இருந்தால் இந்த அளவிற்கு பிரச்சனை பெரியதாய் மாறியிருக்காது இல்லையா?” என்று ஐயமாய் வினவினான் சுகன்.

“இப்போது தான் உன் தங்கையை புரிந்து வைத்துள்ளதாய் புகழ்ந்தேன் அதற்குள் இப்படி சொதப்பிவிட்டாயே! மச்சான் நான் முதலில் சொல்லியிருந்தால் என்னை நெருங்கவே அனுமதித்து இருக்கமாட்டாளே, பின் எங்கு காதல் இந்த மோதல் எல்லாம்” என்று சிரித்தவன் குரலில் வலிமிகுந்து இருந்தது. “சரி நீ அலுவலகம் கிளம்பு மறுபடியும் தேர்வு முடியும் நேரம் சந்திப்போம்” என்று கூறி இருவரும் தங்கள் வழியை பார்த்து கிளம்பினர்.

சுஹீரா சொன்னது போல தேர்வு முடியும் நேரம் முன்பு வந்து காத்திருந்த சுகன் “என்ன மச்சான் இன்னும் வரவில்லையா?” என்று செய்தி அனுப்பிட, “உனக்கு முன் வந்து காத்திருக்கிறேன் “ என்று பின் வந்து நின்றான் அகரன். கையில் இருந்த பார்சலை சுகன் கையில் கொடுத்து, “இது சோட்டுவிற்கு, இது என் மனைவிக்கு” என்றான் அகரன்.

“உங்களுக்கு சோட்டுவை தெரியுமா?” என்று சுகன் ஆச்சர்யமாய் வினவிட, “அவன் தானே உன் தங்கையை என்னிடமிருந்து பாதுகாக்கும் பாடிகார்ட்! என்றவன் எல்லோரும் வர துவங்கிவிட்டார்கள் சுஹீ வந்து விடுவாள்” என்றவன் தூரம் விலகி சென்றான்.

சுஹீரா வரவும் அகரன் கொடுத்ததை அவளிடம் நீட்டினான் சுகன். அதை பிரித்து பார்த்தவள் முகம் வாட கண்களில் கோபம் தெரிய “இது என்ன?” என்றாள் சுஹீரா. “ஆஹா இந்த சின்ன ரசகுல்லா உள்ளே பெரியரகசியம் இருக்கும் போல முன்னெச்சரிக்கை விடுக்கமால் இப்படி மாட்டிவிட்டாயே! மச்சான்” என்று திருதிருவென விழித்தான் , சுகன்.
“ என்ன இப்படி விழிக்கின்றாய். இதை அந்த பகடு கொடுத்தானா?” என்று கோபமாய் வினாவியபடி சுற்றி பார்வையில் தேடியவள் “அகரனை பார்த்தாயா” என்று மீண்டும் வினவினாள் சுஹீரா .

“இப்போது எதற்கு திடீரென அகரன் பற்றி விசாரிக்கின்றாய், அது என் அலுவலகத்தில் ஒரு ஸ்டாப் அவர் குழந்தை பிறந்தநாள் என்று கொடுத்தார் உனக்கு தான் ரசகுல்லா பிடிக்குமே என்று கொண்டு வந்தேன் இதற்கு எதற்கு இத்தனை கேள்வி” என்று கூர்மையாய் கவனித்தபடி கேள்வியாய் நிறுத்தினான் சுகன்.

“ஒருவழியாய் சமளித்தோம் இனி அகரன் என்ன கொடுத்தாலும் என்ன ஏது என்று கேட்கமால் வாங்கி வைக்ககூடாது இல்லை இவளிடம் வாங்கி கட்டிக்கொள்ளவேண்டும் போல” என்று தனக்குள் தீர்மானம் எடுத்து கொண்டான் சுகன். சுஹீரா முகம் சிவக்ககண்டு “இது என்ன முகம் இப்படி சிவக்கின்றது கோபம் வந்தால் கண்கள் தானே சிவக்கும்?” என்று புரியாமல் தலையை சொரிந்தபடி கேட்டான் சுகன்.

முகத்தை சரி செய்த படி “அடுத்து நீ அவனை பார்க்கவேஇல்லையா ?, தான் செய்தது தவறு என்று உன்னிடம் கூட மன்னிப்பு கேட்கவில்லையா?” என்று ஆர்வமாய் கேட்டாள் சுஹீரா. “அவர் எதற்கு என்னை வந்து பார்க்க போகின்றார் அவரிடம் வாங்கிய பணத்தை கூட திருப்பிக் கொடுத்துவிட்டோம் இனி அவருக்கும் நமக்கும் என்ன இருக்கிறது?” என்றான் சுகன்.

தனது மார்பில் தொங்கிய தாலியை உடையின் மேலேயே தொட்டு பார்த்தவள் “எதுவும் இல்லையா? எதுவும் இல்லை தான்” என்று வாய் முணுமுணுக்க மீண்டும் சுற்றி ஒரு பார்வையில் அலசிட, “வந்ததில் இருந்து பார்க்கின்றான் யாரை தேடுகின்றாய்?” என்று சுகன் கேட்டதும் பகடுவை என்று தன்னை மறந்து கூறினாள் சுஹீரா.

“அப்படியென்றால் நீ பகடு என்று செல்லமாய் அகரனை தான் சொல்கின்றாயா?, அவருக்கு வேறு வேலைவெட்டி இல்லையா? என்ன வெட்டியாய் உன் பின் சுற்றுவதற்கு அவர் உண்டு அவர் வேலைஉண்டு என்று இருக்கின்றார், நீ தான் எந்தநேரமும் அவரையே நினைத்து கொண்டு இருக்கின்றாய்!” என்றதும் அதற்கு மேல் எதையும் பேசாமல் சுகனுடன் கிளம்பி சென்றாள்.

என்னிடம் கோபமாய் இருப்பது போலவும் என்னை வெறுப்பதாகவும் உன்னை நீயே ஏமாற்றி கொண்டிருக்கின்றாய் செல்லப்பொண்டாட்டி, உன் மனம் என்ன என்று தெளிவாய் அறிந்துகொண்டேன் இனியும் உன்னை தனியாய் விட்டுவைக்கமாட்டேன் என்று தனது திட்டத்தை செயல்படுத்த நாள் குறித்தான் அகரன்.

மாலை வீட்டிற்கு வந்த சோட்டுவிடம் லட்டுவை சுபத்ரா கொடுக்க அவன் அதை ஆசையாய் வாங்கி உண்டபடி, சுஹீரா அருகில் வந்து “ஹீ அகி கூடுத்தானா?, அகி ஏன் என்னை பாக்க வரல ஓ இனிமே நீ எங்க கூட விளையாட வரமாட்டேன்னு சொன்னேன் அதனால தான் வரலையா?, நாமா போய் பார்க்ல பாப்போமா ? என்றான் சோட்டு.

மனதில் அடைத்து வைத்து இருந்த வலி மீண்டும் பேரலையாய் வெளியில் வர , “அவன் இனி வரமாட்டான், நானும் போய் பார்க்கமாட்டேன், நீயும் அகிஅகி என்று அவன் பெயரை சொல்லிக்கொண்டு என்முன் வராதே!” என்று கோபமாய் கத்திவிட்டாள் சுஹீரா.

நடப்பது விளங்காமல் “ஏன் ஹீ உனக்கு என்னையும் அகியையும் பிடிக்கலையா?, பாவம் அவன் அன்னைக்கு நீ வேறவங்க கூட விளையாடப்போறேன்னு சொன்னதும் அழுதுட்டான் தெரியுமா?, அவன் கண்ணுல இருந்து தண்ணி வந்துச்சு நான் பார்த்ததும் தொடைச்சுட்டு சிரிச்சான், அம்மா சோட்டு குட் பாய்யா! இருக்கும் போது அடுச்சுட்டா அழுவேன் பாரு அது மாதிரி” என்றவன் சுஹீரா முகத்தை தன் புறம் திருப்பி “ஹீ அகி குட் பாய், குட் பாய்ய அழவச்சா சாமி கண்ண குத்தும் ஹீ அப்புறம் உனக்கு கார்ட்டூன் பார்க்க முடியாது அம்மம்மமா… சொல்லுவாங்க” என்று குழந்தை அதற்கு தெரிந்த மொழியில் அறிவுரை கூறியது.

இருவரின் உரையாடலை கேட்டு கொண்டு இருந்த சுபித்ராவிற்கு சோட்டுவை கட்டியணைத்து “சபாஷ்” சொல்லவேண்டும் என்று தோன்றியது சிறுவனுக்கு தெரிவது உனக்கு தெரியவில்லை என்று குற்றம் சாட்டுவது போல சுஹீராவை பார்த்தார்.

சுபத்ராவின் பார்வை சுஹீராவை உறுத்தியது, சோட்டுவை அழைத்து அருகில் அமர்ந்திக்கொண்டு மெதுவாய் பேச துவங்கினாள். “அந்த பகடு பேட் பாய் சோட்டு உன் ஹீயை பொய்சொல்லி ஏமாற்றி அழவைத்துவிட்டான், நானும் அவனும் விளையாடிய விளையாட்டில் கள்ளாட்டம் செய்து விட்டான் நீயே சொல் அது தப்பு தானே?, அதனால் ஹீ இனிமேல் அவனுடன் பேச போவதில்லை, நீயும் அவனை பார்த்தால் பேசதே” என்று கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி கூறினாள், சுஹீரா.

“அகியும் ஹீயும் பெஸ்ட் பிரின்ட்ஸ் தானே பெஸ்ட்பிரின்ட்ஸ் தப்பு பண்ணுனா இனிமே அத பண்ணாதனு அட்வைஸ் பண்ணிட்டு சாரி சொல்லசொல்லிட்டு அடுத்து சேந்து விளையாடனும் உனக்கு தெரியாதா?” என்று மழலை மொழியில் சோட்டு கூறிய ஒவ்வொரு வார்தையும் சுஹீராவிற்கு வலியை கொடுத்தது. தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைக்ககூட மனம் இல்லாமல் சோட்டுவை கட்டிஅனைத்து கொண்டவள், “நீ சொல்வது போல மன்னிக்க உன் ஹீ குட்கேர்ள் இல்லை சோட்டு” என்றிட, “அழாத ஹீ அகி உன்ன அடிச்சுட்டான நான் அவன அடுச்சுடுறேன்” என்று கண்ணீரை துடைத்து விட்டான் சோட்டு.

“குட்டிமா இது என்ன சிறுவன் முன் அழுதுகொண்டு, பார் அவனும் கலங்குவதை” என்று சுபத்ரா கூறியதும், தனியாய் தனது அறைக்கு சென்று கதவை சாற்றியவள் உணவிற்கு கூட வெளியில் வராமல் கண்ணீரில் கரைந்தாள்.

நான் கொண்ட காதலை விட நீ என்மீது கொண்ட காதல் தான் உன்னை விட்டு விலகவிடாமல் என்னை வதைக்கின்றன!, எனக்கு அளவிற்கு அதிகமாய் காதலை கொடுத்ததும் நீ தான் பிரிவின் துயர் கொடுத்தும் நீ தான் பகடு…

கானல்நீராய் உன்
காதல் காற்றில் கலந்திட
என் மனம் கண்ணீர் திரைமூடி
கணக்கின்றது ஏனடா…

எத்தனை முறை அழைத்தும் சுஹீரா வெளியில் வராமலிருக்க நடந்த அனைத்தையும் சுபத்ரா கூற கேட்டு கொண்ட மகேஸ்வரனுக்கு சுகனுக்கும் இவ்வளவு அன்பை வைத்துக்கொண்டு எதற்கு இந்த பிடிவாதம் என்று கோபப்படுவதை தவிர வேறு என்ன செய்ய என்று புரியவில்லை.

அகரனிடம் நடந்ததை சுகன் கூறவும் அகரனும் வேதனையில் துடிக்கதுவங்கினான், “விலகி இருந்து என்னை தண்டிப்பதாய் நினைத்து கொண்டு உன்னை நீயே வதைத்து கொள்கின்றாய் நான் செய்த தவறுக்கு நீ ஏன் தண்டனை அனுபவிக்கவேண்டும்” என்று தவித்தவன், “விலகி இருந்து வதைக்காமல் என் அருகில் இருந்துகொண்டே எனக்கு தண்டனை கொடு சுஹீ” என்று மனதால் மனு போட்டான் அகரன்.

அடுத்து வந்த இரு தினங்களும் இதே போல வலியை கொடுக்க சுற்றி உள்ள ஒவ்வொரு பொருளும் அகரன் நினைவை பரிசாய் தந்தன. சோட்டு வரும் போது எல்லாம் அகரனை பற்றி பேசியே வேதனையை கொடுத்தான், இந்த துன்பத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி இந்த இடத்தை விட்டு வெகுதூரம் விலகிச் செல்வது, அப்போது தான் அகரன் நினைவை துறக்கமுடியும் என்ற முடிவிற்கு வந்தாள். அதற்கான வழியாய் கேம்பஸ் இன்டெர்வியூவில் அவளுக்கு கிடைத்த வேலையை ஏற்று கொள்ளமுடிவு செய்தாள் சுஹீரா.

இது தான் தனது முடிவு என்று, எண்ணத்திற்கு வந்தவளுக்கு வீட்டில் உள்ளவரை சம்மதிக்கவைக்க பெரும்படாய் போனது, “முதலில் நீ தான் தூரமாய் உள்ளது, என்று இந்த வேலையேவேண்டாம் என்று முடிவு எடுத்தாய்!, இப்போது இப்படி செல்கின்றாய்” என்று அனைவரும் ஒரு குரலில் முறையிட , “நான் கொஞ்ச நாட்கள் இந்த இடத்தை விட்டுவிலகியிருக்க விரும்புகின்றேன்” என்று பிடிவாதமாய் முடித்தாள் சுஹீரா.

சுகனுடன், சுஹீரா கல்லூரிக்கு கிளம்பி சென்றதும் மகேஸ்வரிடம் வந்த சுபத்ரா “அவளே தன்னை மாற்றிகொள்வாள் என்று நினைத்தது பெறும் தவறு போல இப்படியே விட்டால் இவள் பிடிவாதம் கூடிக்கொண்டே போகின்றது” என்று முறையிட்டார் சுபத்ரா. “நீ சொல்வதும் சரிதான் இன்று மாலை சங்கத்தில் ஒரு மீட்டிங் உள்ளது அங்கு வைத்து மாப்பிள்ளையிடம் பேசி விடுகிறேன்” என்றார் மகேஸ்வரன்.

மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்த மகேஸ்வரனை “வாழ்த்துக்கள் மகேஷ் பிடித்தாலும் பிடித்தாய், பெரிய இடமாக தான் பிடித்து விட்டாய்”, என்று சிலர் ஏளனமாய் பார்த்தும் சிலர் உண்மையில் அருகில் வந்து வாழ்த்தியும் சென்றனர்.

“என்ன மகேஸ்வர் அகரனின் மோசமான கோபபார்வையிலிருந்து தப்பித்துக்கொள்ள உன் மகளை சரியாய் பயன்படுத்திக்கொண்டாயே!, உன் கஷ்டத்தை போக்க இந்த கல்யாணத்தை உனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டாய் அப்படித்தானே?, இல்லை இது ஒருவேலை உன் திட்டம் தானா? ஏன் கேட்கிறேன் என்றால் நான் கூட முதலில் உண்மை தெரிந்ததும் உனக்கு தெரியாமல் உன் மகளே உன்னை ஏமாற்றிவிட்டாள், என்று தான் உன் மீது அனுதாபப்பட்டேன் ஆனால் உனக்கு உண்மை தெரிந்தும் நீ அமைதியாய் இருப்பதை பார்க்கும்போது எனக்கு அப்படி தான் தோன்றுகின்றது பார்க்க அப்பாவியாய் இருந்தாலும் சரியான சுயநலவாதி நீ” என்று ஏளனமாய் கூறி சிரித்தார் சந்திரன்.

தன் பேச்சுக்களை கேட்டு மனம் ஒடிந்துபோவான் என்று நினைத்ததற்கு மாறாய் “நான் சுயநலவாதி தான் என் மகள் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து, ஒரு அப்பாவாக அவள் விருப்பத்தை நிறைவேற்ற நினைக்கும் நான் சுயநலவாதி தான் நீ சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், நீ அடுத்தவர் நலனுக்காகவே உழைக்கும் நல்லவன் ஆயிற்றே!, நீ தேர்தலில் ஜெயிக்க, அகரனை பற்றி நேரடியாக நீ ஏதும் கூறினால் உன் சுயலாபத்திற்காக பேசியது போலயிருக்கும், யாரும் உன்னை நம்பமாட்டார்கள் என்று உன்னை பற்றிய பொது நலத்திற்காக அகரன் பற்றி வேண்டாததையும் என்னிடம் கூறி உனக்கு சாதகமாக பேசவைத்தாய், நானும் உன் மீது கொண்ட நட்பின் காரணமாய் பேசி அவரின் கோபத்தை சம்பாதித்து கொண்டேன் நான் சுயநலவாதி தான்!, எனக்கு என்ன அவரிடம் சொந்தபகையா ? எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவரை இத்தனை பேர் முன் இழிவாக பேசியது என் மனதை உறுத்திகொண்டேயிருந்தது, நான் செய்த தவறுக்கு தண்டனையாய் தான் அவர் எனக்கு கொடுத்த இடர்களை ஏற்றேன், இப்போது சொல் யார் சுயநலவாதி என்று மகேஸ்வரன் குரலை உயர்த்த மற்றவரும் அவர்கள் வாதத்தை கேட்டுக்கொண்டு அமைதியாகி நின்றனர்.

“இதில் என்ன சந்தேகம் மாமா சாட்சாத் திருவாளர் சந்திரன், தான் சுயநலவாதி பட்டம் வெல்கின்றார்!” என்று அகரன் பின்னிருந்து கூறிக்கொண்டே அவன் இடத்தில் வந்து அமர மற்றவர்களும் தங்கள் இருப்பிடத்தில் வந்து அமர்ந்தனர்.

“மிஸ்டர் சந்திரன் இந்த மீட்டிங் அறிவித்தது நீங்கள் அதற்கான காரணம் என்ன?” என்று அதிகாரமாய் வினவினான் அகரன். “இந்த சங்கத்தின் துணைத்தலைவன் நான் மீட்டிங் அறிவிக்க எனக்கு எல்லா அதிகாரமும் உள்ளது”, என்று கர்வமாய் துவங்கியவர், அகரன் பார்வையில் வாயடைத்து “விரைவில் என் தொழில் நிறுவனம் புதிதாய் தொடங்கயிருக்கும் தொழிலுக்கான அறிவிப்பு கொடுக்கவே அனைவரையும் அழைத்தேன்” என்றதும் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.

“உங்கள் சொந்த விபரம் சொல்ல மற்றவர்கள் நேரத்தை வீணாக்குவது தவறு என்று நீங்கள் உணராமல் இருக்கலாம் ஆனால் எனக்கு இவர்களின் பொன்னான நேரம் வீணானது வருத்தமாய் உள்ளது, சரி எல்லோரும் வந்துவீட்டீர்கள் இதை எனக்கு சாதகமாக உபயகமாய் பயன்படுத்தி கொள்கிறேன்” என்றவன், “இப்போது புதிதாய் அறிவிக்க இருக்கும், வரிவிளக்கு பற்றி அது சம்பந்தமாக என்ன நினைக்கின்ரீர்கள்” என்றதும் ஆளுக்கொரு யோசனை சொல்லத் துவங்கினர். “நானும் இது சம்மந்தமாக கொஞ்சம் விபரம் சேகரித்து கொண்டு இருக்கின்றேன், உங்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் அது எந்தவிதத்தில் உதவும் என்ற ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தால் எனக்கு உபயோகமாய் இருக்கும்” என்றவன், “இது சம்பந்தமான விபரம் சேகரித்து விட்டு அதை சமர்ப்பித்துவிடுங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தாருங்கள், அப்போது தான் சட்டம் இயற்றும் முன் எதிர்ப்போ ஆதரவோ தர வசதியாயிருக்கும்” என்று பேச வேண்டியது முடிந்து என்று எழுந்தான் அகரன்.

“அப்படியே கிளம்பினால் எப்படி உங்களை பற்றி கூறப்படும் வதந்தி உண்மையா? உண்மையில் உங்களுக்கு திருமணம் முடிந்ததா? மகேஸ்வரனை பழிவாங்க அவர் மகளை திருமணம் செய்து கொண்டீர்களா? என்று ஒருவர் கேட்க, “எனக்கு திருமணம் முடிந்தது உண்மை தான் ஆனால் நீங்கள் கூறுவது போல பழிவாங்க திட்டமிட்டு நடத்த பட்டதில்லை இருவரின் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் விரைவில் திருமணத்திற்கான வரவேற்பு நடக்கும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்” என்றான் அகரன்.

இதாவது உண்மை திருமணமா? இல்லை இதுவும் உங்களை பற்றி வரும் கிசுகிசுப்பு போல தானா?” என்று ஒருவர் ஏளனமாய் நிறுத்திட, கோபமாய் அவர் புறம் திரும்பியவன் “இதுவரை எந்த கிசுகிசுப்புக்கும் நான் பதில் தந்தது உண்டா?, எந்த பெண்ணுடனும் காதல் என்று நேரடியாக நான் கூறியது உண்டா?”, என்று ஒற்றை புருவம் உயர்த்தி அகரன் வினவிட, அவன் குரலிலிருந்த கோபம் இல்லை என்று மறுப்பாய் தலையசைக்க செய்தது. “இப்போது சொல்கின்றேன் என்றால் இதுதான் உண்மை, என் மனைவி தான் சுஹீரா எங்களுக்கு சட்டப்படி திருமணம் முடிந்தது” என்றவன் “மீட்டிங் முடிந்தது கிளம்பலாம்” என்று உத்தரவு போல கூறிட கூட்டம் களைந்து சென்றது.

சந்திரன் போன் அடிக்க அதை எடுத்துப்பேசியவர் “என்ன?” என்று கேட்டபடி அதிர்ந்து நிற்க, அவர் அருகில் வந்த அகரன் “என்ன மிஸ்டர் சந்திரன் புயல் வீசியதுபோல் மிரண்டு நிற்கின்கிறீர்கள், வருமானவரி சோதனையாசுச்சுசுச்சு… உங்கள் சோதனை காலம் துவங்கிவிட்டது போல மோசமான பார்வை உங்கள் பக்கம் திசைதிரும்பி விட்டது” என்றவன் “பார்த்து இந்த புயல் டெல்லியையும் தாக்க போகின்றதாம், உங்கள் மகன் உதயனை பத்திரமாய் இருக்கும்படி புயல் எச்சரிக்கை அறிவித்துவிடுங்கள்” என்று சிரித்தான் அகரன்.

“எல்லாம் உன் வேலை தானா?, உன் வேலையை என்னிடம்காட்டாதே உனக்கு பயந்து அமைதியாய் இருக்க நான் ஒன்றும் மகேஸ்வரன் இல்லை” என்று கோபமாய் சந்திரன் கத்திட, “என் வேலை தான் சந்திரன் இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் இத்தனை நாள் அம்பு எய்தவனை விட்டுவிட்டு அம்பினை தண்டித்துக்கொண்டு இருந்தேன் இப்போது தான் எய்தவனை சரியாய் தாக்கியது என் குறி” என்றவன் மகேஸ்வரன் காத்திருப்பது அறிந்து, “என் மாமனார் என்னிடம் பேசுவதற்காக காத்திருக்கின்றார், நம் கதையை பிறகு பேசலாம் நீங்களும் வேகமாய் செல்லுங்கள் வருவாய்த்துறை அதிகாரி உங்கள் வருவாயை எல்லாம் உறிஞ்சிவிட போகின்றார் கருப்பு பணம் பதுக்கிய இடத்தை போய் பூதம் போல பாதுகாத்திடுங்கள் இல்லை எல்லாம் சட்டத்தின் கையில் சிறைப்பட்டு விடும்” என்று கூறி சென்றான் அகரன்.

சந்திரன் அவசரமாய் வெளியேறுவதை கண்டு “என்னவாயிற்று?” என்று மகேஸ்வரன் விசாரிக்க, “அது ஒன்றும் இல்லை சார், எல்லாம் அண்ணன் கொடுத்த ஷாக் அதான் இந்த அதிர்ச்சி” என்று குகன் கூறிட “நான் என்ன செய்தேன் அவர் மடியில் கணம் அதனால் வந்த பயம் இது” என்று சாதாரணமாய் கூறினான் அகரன்.

“என்ன மாமா எனக்காக தான் காத்திருப்பது போலயிருந்த்து” என்று விபரம் விசாரிக்க துவங்கினான் அகரன். “ஈஸ்வர் உங்கள் திருமணத்தை பற்றி பேசினான் நானும் யோசித்து சொல்வதாய் சொல்லிவிட்டேன், நீங்கள் கேட்டு கொண்டதால் குட்டிமாவை எந்தவிதத்திலும் கட்டாயப்படுத்தாமல் இருக்கின்றோம், ஆனால் அவள் பிடிவாதம் குறைந்த மாதிரி தெரியவில்லை இப்போது கூட எங்கோ வேலைக்கு செல்ல போவதாய் பிடிவாதம் பிடிக்கின்றாள்! என் மகளின் பிடிவாதம் அறிந்ததால் ஒன்று சொல்கிறேன் பேசாமல் நீங்கள் அவள் சொன்னது போல அவளை பற்றிய நினைவுகளை மறந்துவிடுங்கள் இது ஒன்று தான் வழி!” என்று யோசனை சொன்னவரை விசித்திரமாய் பார்த்தான் அகரன். “கொஞ்சம் நிதானமாய் யோசித்தால் உங்களுக்கே புரியும்” என்று புதிர் போட்டார் மகேஸ்வரன்

` “எங்கு என் மீது உள்ள காதல் அவள் கர்வத்தை வென்று, என்னிடம் இழுத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் அவள் ஓடி ஒழிய நினைப்பது நீங்கள் கவலைப்படாதீர்கள், அவள் கர்வத்தை என் காதல் வெல்லும் அவளே எங்களுக்கான திருமண ஏற்பாட்டை செய்ய சொல்லுவாள்” என்று அகரன் உறுதியாய் கூற, கவலை அகன்றவராய் கிளம்பி சென்றார் மகேஸ்வரன்.

“என்ன அண்ணா அண்ணி இப்படி திடீரென வெளியூர் கிளம்புவதற்கு தயாராகின்றார் இப்போது என்ன செய்ய போகின்றீர்கள்?” என்றான் குகன். யோசனையாய் உதட்டை சுழித்து மறுப்பாய் தலையசைத்தவன், “என்ன செய்வது என்று புரியாமல் இருக்கின்றேன் ஆனால் எதாவது செய்து என் சுஹீயை அடைந்தே தீருவேன்” என்றவன் குகனை யோசனையாய் பார்த்த படி, “காதல் இவ்வளவு கொடுமை என்று புரிந்தும் ஏன் இந்த காதல் வலையில் விழுகின்றார்கள், காதலை அனுபவிக்கும் போது இன்பமாய் இருப்பது, பிரியும் போது எப்படி இருக்கின்றது தெரியுமா? உயிருடன் நெருப்பில் இட்டதுபோல அவள் விரல் பட்ட இடம் எல்லாம் வேதனையில் துடிக்கின்றது அவள் அருகாமை வேண்டும் என்று மனம் நச்சரிக்க விரகதாபத்தில் இரவு உறக்கம் துறந்து பித்தன்போல நடக்கவைக்கின்றது உணவு உண்ணும் வேலை மட்டும் இரு மடங்கு வேதனை நெஞ்சை அழுத்த தொண்டைக்குள் இறங்கும் உணவை நெஞ்சம்தாண்டி வயிற்றுக்கு அனுப்ப மறுக்கின்றது, அவளுடன் இருந்த நொடிகள் எல்லாம் மனதில் வந்து சந்தோசம் தந்துகொண்டு இருக்கும் போதே பிரிவு வேதனை உணர்ந்து பல மணிநேரம் என்னை மறந்து ஆண் எனும் கர்வம் அழிந்து அழுதுவிடுகின்றேன்” என்றவன் கண்களில் துளிர்த்த கண்ணீரை குகன் அறியாமல் துடைத்து விட்டு அவள் வேண்டும் என்று துடிக்கும் மனது அவளை அடைந்திட வழி தெரியாமல் தவிக்கின்றது, காதலுக்காக ஏங்கும் ஒவ்வொரு மணமும் நரக வேதனையை தான் அனுபவித்துக்கொண்டு இருக்கும் குகா அந்த வேதனை என்ன என்று நானும் உணர்ந்து கொண்டு இருக்கின்றேன், வேதனையில் துடிக்கும் போது எல்லாம் எனக்கு எப்படி இருக்கின்றது தெரியுமா?, நான் அடைந்த வெற்றியெல்லாம் உன் காதலை காத்துகொள்ள தெரியவில்லை! நீ எங்களை அடைந்தது எண்ணி கர்வம் கொள்ளாதே! என்று என்னை பார்த்து கை தட்டிசிரிப்பது போல உள்ளது” என்றான் அகரன்.

கவலையாய் எங்கோ பார்த்து நின்ற குகனை பார்த்து வெற்றிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன், “எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது குகா மரணம் ஒரு நொடி வேதனை இறந்த பின் துன்பம் மறைந்துவிடும், ஆனால் காதல் வலி ஒவ்வொரு நொடியும் மரணவேதனை தருகின்றது இதை அனுபவிக்க முடியாமல் தான் நளன் அவன் முடிவை தேடி கொண்டான் போல ச்சீ வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் என்ன வாழ்கை இது” என்று விரக்தியாய் பேசினான் அகரன்.

அகரன் பேசப்பேச குகன் நினைவில் நளன் எண்ணம் படர்ந்தது மெதுவாய் அது அதிகா பக்கம் திசைதிருப்ப “அதிகாவும் தினம் இப்படி தானே துடிப்பாள்?” என்று மனம் கேள்வி கேட்க, அதிகாவை காணும் எண்ணம் நச்சரிக்கத்துவங்கியது, அகரன் வார்த்தையில் குகன் கண்களிலும் கண்ணீர் வர, அதை கண்ட அகரன் “ஏய் என்ன?” என்று வினவினான். “நீங்கள் அனுபவிக்கும் வேதனையை தானே என் அதியும் தினம் அனுபவிப்பாள் இதை புரிந்து கொள்ளாமல் இத்தனை நாள் அவளுக்கு வேதனையை கொடுத்து விட்டேன் அண்ணா” என்று கலங்கினான் குகன். அவன் வருந்துவது பொறுக்காமல் குகனை கட்டியணைத்து “நீ கலங்காதே அதிகா உன்னை புரிந்துகொள்வாள்” என்று ஆறுதல் கூறினான் அகரன்.

“அவள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நான் புரியவைப்பேன்” என்றான் குகன். “அப்பாடா இப்போதாவது இந்த மரமண்டைக்கு அதிகா அனுபவிக்கும் வேதனை புரிந்ததே? இதற்கு தான் இத்தனை வசனம்” என்று அகரன் சிரிக்கவும். “பொய் சொல்லாதீர்கள் நீங்களும் அண்ணி நினைவில் தான் வருந்துனீர்கள் என்று எனக்கு தெரியும்!” என்றான் குகன் . “வருத்தம் உண்டு தான் ஆனால் அதிகா அளவிற்கு இல்லை எனக்கு தான் திருமணம் முடிந்துவிட்டது, சுஹீ காதல் என் மீது தான் என்று உறுதியாய் தெரிந்துவிட்டது, என்ன அவளை அடைய கொஞ்சம் கஷ்டப்படவேண்டும் அவ்வளவு தான் ஆனால் அதிகாவிற்கு அவள் காதல் கிடைக்குமா என்றே தெரியாமல் அல்லவா இருக்கின்றாள்?” என்று அதிகவிற்காக பரிந்து பேசினான் அகரன்.

“ஓ அப்படியென்றால் அண்ணியை பிரிந்திருப்பது உங்களுக்கு வருத்தம் இல்லை” என்கின்றீர்கள் என்று குகன் கேலிவாய் பேசிட, பிரிந்து இருப்பது கஷ்டம் தான் அதற்கும் சேர்ந்து என்னிடம் வந்த பின் உன் அண்ணியிடம் வசூலித்துக்கொள்வேன்” என்று அகரன் சிரிக்கவும் குகனும் உடன் சேர்ந்து சிரித்தான்.

“இன்னும் என்ன யோசனை போய் உன் அதிகாவை பார்” என்று அகரன் உத்தரவிட “அண்ணா நீங்கள்?” என்று தடுமாறினான் குகன். “உன் அண்ணிக்காக ஒரு திட்டம் யோசித்து வைத்து உள்ளேன் நீ உடன் இருந்தால் சரிப்பட்டு வராது நீ கிளம்பு” என்ற அகரன், குகன் கிளம்பும் நேரம் தடுத்து மீண்டும் ஒரு முறை கட்டியணைத்து “சரி சரி இன்னும் நேரம் கடத்தாமல் அதிகாவை காணக்கிளப்பு” என்று வழியனுப்பிவைத்தான் அகரன்.

குகன் சென்றதும் தனது காரில் ஏறி அமர்ந்தவன் போனில் அழைப்பு வர அதை எடுத்து பேசியவன், “எல்லா ஏற்படும் சரியாய் உள்ளதா?, யாரும் இல்லை நான் மட்டும் தான் தனியாக தான் வருவேன் எந்த இடம் சொன்னீர்கள்?” என்று வினவினான்அகரன்.

“இந்த ரிஸ்க் எடுக்க வேண்டுமா? அகர், இதில் பிழை நேர்ந்தால் உன் உயிருக்கு கூட ஆபத்து வரலாம்” என்றான் சூர்யா. “சுஹீ இல்லாமல் வாழ்வதற்கு பதில் அவளை அடைவதற்கு என் மரணத்தை தொட்டுப்பார்க்கவும் நான் துணிந்துவிட்டேன் அவள் பிடிவாதத்தை தளர்க்க இதை தவிர வேறு வழி இல்லை”, என்றான் அகரன்.

“குகனுக்கு கூட சொல்லாமல் இந்த விபரீத திட்டம் அவசியம் தானா?” என்றான் சூர்யா. “குகனுக்கு தெரிந்தால் ஒத்துக்கொள்ளமாட்டான், உன்னால் உதவ முடியும் என்றால் சொல் இல்லை நான் வேறு ஆளை பார்த்து கொள்கிறேன்” என்று பேச்சை முடித்தான் அகரன்

“சரி சரி உடனே கோபம் கொள்ளாதே பக்கத்திலேயே அம்புலன்ஸ் உடன் காத்திருப்பேன் வேகத்தை மட்டும் குறைத்துக்கொள்” என்று அறிவுரை வழங்கினான் சூர்யா. “பயப்படாதே என் உயிர் மீது எனக்கும் அக்கறை உள்ளது அது சுஹீக்கு சொந்தமானது இல்லையா?” என்று அகரன் தனது திட்டத்தை செயல்படுத்த முனைந்தான்.

அகரனிடம் சொல்லி கொண்டு வந்த குகன், அதிகாவை அழைத்து தனியாக சந்திக்கவேண்டும் என்று கூறியதும் அவளும் அருகில் இருந்த பார்க்கில் வந்து காத்திருக்க துவங்கினாள். குகன் வந்ததும் “என்ன காற்று இந்த பக்கம் வீசுகின்றது அதிசயமாய் உள்ளது!” என்றதும் தயங்காமல் அவள் அருகில் சென்று அமர்ந்தவன் காயம் பட்ட கையைப்பற்றி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் கவனிக்கவில்லை என்று தெரிந்து கொண்டு, மென்மையாய் இதழ் ஒற்றியவன், “என்னை மன்னித்துவிடு அதி உன் காதலை புரிந்து கொள்ளாமல் உன்னை ரொம்ப நோகடித்துவிட்டேன்” என்று மன்னிப்பு வேண்டியவன் பற்றிய கையை விடாமலே இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டு, “நீ என் மீது வண்டிக்கொண்டு மோதியதும் என் மனதில் காதல் விதை முளைத்துவிட்டது, ஆனால் என்னை எப்போதும் திட்டிகொண்டே இருக்கும் கலையரசி அம்மாவின் மகள் நீ என்று தெரிந்ததும் முளைத்த செடியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு உன்னை கண்டும் காணாமல் தவிர்த்து வந்தேன்” என்று தன் மனத்தில் காதல் விதைவிழுந்த கதையை அளந்துகொண்டே கைகளில் விரல் கொண்டு கோலம் போட்டவன், “இனி உன்னை விலகமாட்டேன் இது அகரன் அண்ணா மீது சத்தியம்” என்று உணர்வுபூர்வமாய் கூறினான் குகன்.

“இந்த சத்தியம் சக்கரை பொங்கல் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் திடீரென்று உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது இப்போது மட்டும் என் அம்மாவை பார்த்து பயம் இல்லையா?” என்ன என்று கேலியாய் வினவினாள் அதிகா. “என் அகரன் அண்ணனையும் என் அதி செல்லத்தையும் தாண்டி என்னை என்ன செய்து விடமுடியும்” என்று கூறியவன் நெருக்கத்தில் இருந்தவளின் இடையில் கைபோட்டு “இன்னும் நெருங்கிவாடி” என்று உரிமையாய் அழைத்திட, “பாரடா இவ்வளவு தைரியம் வந்து விட்டதா?, நீ வேற அன்று விருந்தில் வைத்துதொட்டேன் பார் அன்றில் இருந்து உறக்கமில்லாமல் தவிக்கின்றேன்” என்றவன் பற்றிய இடத்தை அழுத்தமாய் வலிக்கும் படி கிள்ளிவிட, “குகா வலிகின்றது” என்று சிணுங்கினாள் அதிகா. என் உறக்கத்தை களவாடி என் உணர்வுகளுக்கு இடைஞ்சல் தந்த இந்த மெல்லிய இடைக்கு இந்த தண்டனை கூட தரவில்லை என்றால் மீண்டும் என் உறக்கம் பறிபோகிவிடும்” என்று சிரித்தவனை விழி விலகாமல் ரசித்தவள் “உன் மனதை மாற்றியதற்கு அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றாள் அதிகா.

“கடவுளுக்கு இல்லை, என் அண்ணனுக்கு” என்று நடந்ததை கூறி திருத்தினான் குகன், “அகரன் சுஹீராவை காதலித்ததிலிருந்து ரொம்ப மாறிவிட்டான் என்ன?” என்று அதிசயமாய் கூறினாள் அதிகா.
“ உண்மை தான், அண்ணி தான் அண்ணனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை வெளியில் தெரியும்படி செய்தது, காதல் எல்லாவற்றையும் அழகாய் மாற்றிவிடுகின்றது தானே!” என்றவன் அவள் கன்னம் வருடிய படி “அதி என் தங்கைக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டு தான் நம் திருமணத்தை பற்றி யோசிப்பேன் உனக்கு சம்மதம் தானே ?” என்று மென்மையாய் வினவினான் குகன். “ உன் காதல் எனக்கு தான் என்று உறுதியாய் தெரிந்து விட்டது இனி என் காலம் முழுவதும் உனக்கான காதலை நெஞ்சில் சுமந்து கொண்டே காத்திருப்பேன்” என்று உறுதி தந்தாள் அதிகா.

“நேரம் ஆயிற்று நீ கிளம்பு” என்று அதிகா கூறியதும் “எங்கு கிளம்ப செல்கின்றாய்?, வரும் போது ஆட்டோவில் வந்தேன் நீ என்னை என் வீட்டில் இறக்கிவிடு” என்றான் குகன். “அந்த வீட்டின் வசதி எதையும் அனுபவிக்க மாட்டேன்! என்றது மறந்துவிட்டதா?” என்று மீண்டும் அதிகா நினைவுறுத்த. அவளின் அளவில்லா அன்பில் நெகிழ்ந்தவன் “ஐ லவ் யூ அதி” என்று முதன்முறை தனது காதலை வெளிப்படையாக சொன்னவன், அவள் விரல் கோர்த்துக்கொண்டே நடந்து வீடு வரை அழைத்து சென்றான். இருவரும் ஜோடியாக கை கோர்த்து வருவதை மாடியில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த இரு கண்களில் கோபம் அனலென பறந்தது.

என் இதழ் கொண்டு
உன்னை இம்சித்தேன்
நானடி
உன் இதழ் கொண்டு
உயிர்பித்தேன்
என்னை தானடி.

நீ ஆம் என்றால்
என் உயிரையும்
உனக்கு உயில்
எழுதிவைப்பேன்.
இல்லை என்றால்
என் மரணத்தின் செய்தி
செல்லிவைப்பேன்