இனி எந்தன் உயிரும் உனதே - 13

இனி எந்தன் உயிரும் உனதே - 13
0

இருவரின் அலைப்பேசிகளையும் ஆராய்ந்துவிட்டு தொடர்பு கிடைக்கவில்லை என்றதும் ச்சே என்றவாறு தூக்கிக் கார் சீட்டில் போட்டாள் லலிதா

“டவர்ல என்ன பிரச்சனையோ போனே போக மாட்டிங்குது. காலைல சரியாயிடும்னு நம்புவோம்” என்றான் பாரி
“ நல்லவேளை முன்னாடியே வீட்டுக்கு போன் பண்ணித் தகவல் சொல்லிட்டோம். இல்லைன்னா தவிச்சுப் போயிருப்பாங்க” ஆறுதல் பட்டுக் கொண்டாள்.

சில நிமிடங்களில் “பாரி பசிக்குது” என்றாள்

“ராத்திரி முழுசும் தூங்காம உக்காந்தது, நீ பாம்புன்னு பயமூர்த்தினத்தில் எனக்கும் சாப்பாடே செரிச்சுடுச்சு. இந்தக் காட்டில் சாப்பாட்டுக்கு எங்க போக… “ கை கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தவன் “மணி வேற மூணுதான் ஆச்சு”

“பிஸ்கட் பாக்கெட் வாங்கிருக்கேன். ஆனால் குடிக்கத் தண்ணிதான் இல்லை”

“ஒரு பக்கம் வெளிய மழை வெள்ளம். இன்னொரு பக்கம் குடிக்கக் கூட தண்ணி இல்லை. என்னே தமிழனின் நிலை”

“என்ன செய்றது சொல்லுங்க”

“கொஞ்ச நேரம் ஏதாவது பேசிட்டு இருக்கலாம். சுவாரஸ்யமான பேச்சு கூட ஒரு வகை மயக்கம்தான். நம்ம பசி தாகம் தூக்கம் துக்கம் எல்லாத்தையும் மறக்கடிக்கிற சக்தி அதுக்கு இருக்கு. அந்தத் திறமையை நம்பித்தான் அரசியல்வாதிங்க பிழைப்பே நடக்குது”

“என்ன பேச… நம்ம கல்யாணத்தைப் பத்திப் பேசலாம்”

“என்னது” வியப்போடு கேட்டாள்.

“அதாவது உன் கல்யாணத்தையும் என் கல்யாணத்தையும் பத்திப் பேசலாம்”

“நீங்க முதலில் ஆரம்பிங்க”

“அமுதாதான் எனக்கு நிச்சயம் பண்ணிருக்க பொண்ணு பேரு. சின்ன வயசிலிருந்தே பாத்திருக்கேன். ஆனால் பழகினதில்லை. அவங்க அப்பா கண்டிப்பானவர். என் மேல பிரியம் அதிகம். அவர்தான் வீட்டில் எல்லாம் தேர்ந்தெடுப்பார் போலிருக்கு. என்னையும் அவர்தான் தேர்ந்தெடுத்திருக்கார்” ஏதோ யோசனையில் சில கணம் பேசாமலிருந்தான்.

“அமுதாவுக்கு உங்க மேல காதலிருக்கா…”

“தெரியல லல்லி. ஆனால் எனக்கும் அவளுக்கும் சில வேறுபட்ட கருத்துக்கள் இருக்குனுறது மட்டும் உண்மை”

“அப்படின்னா…”

“சின்ன பொண்ணு தானே… ப்ளஸ் டூ முடிச்சுட்டு வீட்டுக்குள்ளேயே வளர்ந்தவ… அதனால சினிமா கதாநாயகன் மாதிரி நானும் இருக்கணும்னு நினைக்கிறா… விவசாயக் குடும்பத்தில் வாழ்க்கைபட்டா அவளோட எதிர்பார்ப்புகள் எல்லாத்தையும் நிறைவேத்த முடியுமான்னு தெரியல. கூலிங் கிளாசும், அடிடாஸ் ஷூஸ் போட்டுட்டா நிலத்தில் நிக்க முடியும். கல்யாணத்துக்கப்பறம் நான் ரொம்ப விட்டுக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். உன்னோட கணவர் எப்படி?”

“அவர் இன்னும் கணவர் ஆகல”

“சரி மாப்பிள்ளை எப்படி”

“எனக்கு அவங்க வீட்டை நினைச்சாலே கொஞ்சம் நடுக்கமாத்தான் இருக்கு பாரி. அவரோட அம்மா ரொம்ப சுத்தம் பாக்குறவங்கன்னு தெரியும். அதைக் கூட என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். அவரு ரொம்ப பணக் கணக்கு பாக்குறாரோன்னு ஒரு பயம் இருக்கு”

“லல்லி”

“நிஜம்தான் பாரி… எங்கம்மா அப்பாட்ட கூட இந்த உணர்வுகளைப் பத்தி ஷேர் பண்ணிட்டதில்லை. அவங்களுக்கு வருத்தமா இருக்கும்னு ஒரே காரணம்தான்”
“எதை வச்சு சொல்ற”
“ஒவ்வொரு தரம் போன் பண்ணும்போதும் ஒரு வாத்தியார் கிட்ட பேசுற மாதிரியே பயம்மா இருக்கு. அந்த கோர்ஸ் படி, இதைக் கத்துக்கோ, இந்த பரீட்சை எழுதினால் வேலை கிடைக்கும்னு ஒரே அட்வைஸ்தான். உங்க அப்பாகிட்ட கேட்டு இதை எல்லாம் வாங்கிட்டு வந்துடுன்னு ஒரு லிஸ்ட் வேற அவரோட அம்மா அனுப்பிருக்காங்க. அதை எங்கப்பாகிட்ட காமிக்கக் கூட எனக்குத் தயக்கமா இருக்கு”

“அம்மாகிட்டயாவது காமிச்சிங்களா”

“ம்… மாசாமாசம் மளிகை சாமானை வாங்கி அனுப்ப வேண்டியது எங்க அப்பா பொறுப்பாம். எனக்குத்தான் அருவருப்பா இருந்துச்சு. எங்கம்மாட்ட சொன்னா குடுத்தனம் வைக்கும்போது வருஷ மளிகை சாமான் வாங்கித் தரது சில இடத்தில் பழக்கம்தான். இதைப் போயி பெருசாக்காத்தேனு எனக்கே அட்வைஸ் பண்றாங்க”

உள்ளூரிலிருந்தால் பரவாயில்லை. வெளிநாட்டுக்கு அனுப்ப சொல்வது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றியது பாரிக்கு. இத்தனை நாள் யார் அவனுக்கு மளிகை அனுப்பினார்களாம். ஒரு பெண்ணுக்கு சாப்பாடு கூடப் போட முடியாத கருமிக்கு எதுக்குக் கல்யாண ஆசை. இப்படியெல்லாம் மனதில் எண்ணினாலும் அவளது மணவாளனைப் பற்றி இவன் தப்பாகப் பேசக் கூடாது. அதுவும் என் மேல் உனக்கு நாட்டம் இருக்கிறது என்று மறுக்க முடியாமல் லலிதா நிரூபித்த பின்பு.

“உனக்குத் தெரியாததில்லை லல்லி. குறையில்லாத மனுஷங்க ஏது?”

“உண்மைதான் பாரி. ஆனால் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படும் இந்த மனசு என்னைப் பிரச்சனையில் கொண்டு போய் விடும்னு தோணுது”

“ஓவரா எதையும் நினைச்சு குழப்பிக்காதே. வாழ்க்கையை அது போக்கில் ஏத்துக்குறது பல சமயங்களில் நல்லது”

“அதைத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்” வாயில் பிஸ்கட்டைத் திணித்துக்கொண்டே சொன்னாள்.
“இலு…ந்தாலும் என் சந்தோஷம் எத்தனை நாலோ…”
“எண்ணமே வாழ்க்கைன்னு சொல்ற பொண்ணா இப்படி பேசுறது”

பிஸ்கெட்டை விழுங்கிவிட்டு அவனிடமும் நீட்டினாள் “அவங்களைப் பார்க்கும்போது மனசு முழுவதும் ஒரு குளிர் பரவுது பாரி. ஆறு முழுசும் நல்ல தண்ணி இருந்தாலும் கடலில் கலந்ததும் அதன் தன்மையே மாறி உப்பாகுதே. அதுமாதிரிதான் மனசில் நெகட்டிவ் எண்ணங்கள் மிகுந்தவங்களோட எண்ணம் நம்ம பாஸிட்டிவையும் அப்படியே சுருட்டிட்டு போயிடும்.

அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருக்கு. மறுக்கக் காரணம் இல்லைன்னு நினைச்சு தவறான முடிவெடுத்துட்டேனோன்னு தினமும் என்னைக் கேட்டுக்குறேன். ஆனால் நான் யோசிக்கும் ஒவ்வொரு நொடியும் திரும்ப முடியாத ஒரு பாதைக்குள் கொஞ்ச கொஞ்சமா இறங்கிட்டு இருக்கேன்னு புரியுது. ஐ அம் கன்பியூஸ்ட் அண்ட் ஹெல்ப்லெஸ்”

மின்னல் ஒளியினில் கண்கள் பறித்திடும் லலிதாவின் முகத்தையும் தேன் சிந்தும் இதழ்களையும் காணும்பொழுது தானே அவள் தன்னவளாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் எழுவதைத் தடுக்கவே முடியவில்லை பாரியால்.

அவனது பார்வையால் கட்டுண்டவளின் குரல் அப்படியே சத்தம் குறைந்து கிசுகிசுப்பானது“என்ன பாரி… எதுக்கு இப்படிப் பாக்குறிங்க”

“வந்து… வந்து… “ அவளுக்குப் பின்னே வெகு தூரத்தில் மினுக் மினுக் என்று தெரிந்த வெளிச்சத்தை சுட்டிக் காண்பித்தான்.

4 Likes

Super akka. ரெண்டு பேருக்குமே தங்கட வாழ்க்கைத் துணை ஒத்து வராதுன்னு புரியுது. பார்ப்போம் என்ன செய்யப் போறாங்க. எப்படி திருமணம் தடைப்படப் போகிறது என்று.

2 Likes

Super… waiting for next ud :heart_eyes::two_hearts:

1 Like

Arumai. Ud chinnatha irukku

1 Like

Hmm.ரொம் நாள் காழீத்து இரண்ணடு பேரையும் சந்தித்தது ஹாப்பி. அனால் இன்னும் பாவம் மழையின் பிடியில்.மனசு ரெண்டும் சேர்ந்தாச்சு. ஆனால் குடும்பநிலவரம் குழப்பங்கள் நீர்க்குமழிகளாக மனசில் அலையடிக்கிறது.

1 Like

நன்றி சத்யா. நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

1 Like

நன்றி விஜயா போஸ்ட் பண்ணியாச்சு.

நன்றி பத்மா. இன்றைய பதிவு பெரிதாகப் போட்டிருக்கேன்.

1 Like

நன்றி ஷாரதா. மழையின் பிடியில் சேர்த்த இந்த மனசு இரண்டும் தங்கள் நிலை உணர்ந்தவுடன் என்ன முடிவெடுக்கும்?