என் வாழ்வே நீ யவ்வனா-1

என் வாழ்வே நீ யவ்வனா-1
0

அவள் கால்கள் பலம் இழந்து இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பது போலிருக்க முகத்தில் வழிந்த வேர்வையை தோள்பட்டையினால் துடைத்து கொண்டாள்.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றவளுக்கு மயங்கி விழுந்துவிடுமோ என்று எண்ணுமளவு தலையை சுற்றியது…!!

பின்னே இருக்காதா…கிட்டதட்ட இரண்டு மணி நேரமாக ஓட்டத்திலேயே இருந்தால் தலை சுற்ற தானே செய்யும்…!!மொத்த திருச்சியையே சுற்றி வந்தவள் போல் உடல் சோர்ந்து போனது.

இப்பொழுது எங்கே போவது என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள்.

அவளை சுற்றி எங்கும் இருள்!!

அந்த அழகிய நிலா கூட விடுப்பில் இருந்த அமாவாசை அன்று…!!

அவளுக்கு பக்கத்தில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாத அளவு இருள்!!

என்ன செய்வது என்று புரியாமல் நின்றவளை அதற்குமேல் யோசிக்க விடாமல் பின்னால் சில காலடி சத்தம் கேட்க மீண்டும் தன் ஓட்டத்தை எடுத்தாள்.

முசுமுசுவென மூச்சுவிட்டபடி ஓடி வந்தவளுக்கு வலது புறத்தில் தூரத்தில் விளக்கொளி தெரிய அதை நோக்கி ஓடினாள்.

அருகில் வரவர தான் அது தெருவிளக்கு என்பது புரிய அங்கே நிறைய வீடுகள் இருப்பதை கண்டதும் கொஞ்சம் நிம்மதி எழுந்தது.

கால் போனாபோக்கில் ஏதோ ஒரு வீட்டின் அருகில் சென்றவள் அந்த கருப்பு நிற கேட்டை திறக்க முயற்சித்தாள்.

அது முடியவில்லை எனவும் சுற்றும் முற்றும் பார்த்தவள் கொஞ்சம் நகர்ந்த காம்பௌன்ட் சுவரை தொற்றி ஒரே தாவில் மறுபக்கம் குதித்தாள்.

பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டபடி அந்த வீட்டின் கதவை தட்டினாள்.

எந்த பதிலும் இல்லை…!!

அங்கே தூரத்தில் அவர்களது தலை தெரியவே இன்னும் பலமாக கதவை தட்டினாள்.

இம்முறை யாரது என்று ஒரு பெண் குரலோடு அருகில் உள்ள ஜன்னலின் பாதி திறக்கப்பட ஒரு இளம்பெண்ணின் முகம் தெரிந்தது.

“ப்ளீஸ்…க…தவை திற…ங்க…”

என்று பதட்டதோடு கூறினாள்.

அதற்குமேல் பேச முடியாமல் மூச்சிறைத்தது.

வீட்டில் இருப்பவள் அவளது குரலில் என்ன கண்டாளோ கதவை திறக்க மறுநொடி அவளை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தவள் கதவை சாற்றி அதிலேயே சாய்ந்தபடி மூச்சு வாங்கினாள்.

இவளை காண ஒரு புறம் பரிதாபமாக இருந்தாலும் அதனை விட நிறைய கேள்விகள் எழ அவளையே குழப்பமாக பார்த்தாள் வீட்டுக்காரி.

“எ…ன்ன பார்த்துகி…ட்டே இரு…க்கீங்க…அந்த தண்ணீய எடுத்த தரலாமில்ல…!!”

என்று அங்கே மேஜையின் மீது இருந்த ஜக்கை சுட்டிக்காட்ட சொல்லியவள் அவள் பதிலுக்கு காத்திறாது அந்த ஜன்னல் வழி வெளியே பார்த்தாள்.

அதே தடியர்கள்…!!!அந்த தெருவில் நுழைவதை அவள் திகிலுடன் பார்க்க சுற்றி பார்த்தவர்கள் பின் எதிர் திசையில் ஓடவே ‘ஹப்பாடா’
என்றிருந்தது அவளுக்கு.

அவளது தோள்பட்டையை யாரோ தட்டவும் திருப்பியவள் அந்த பெண் கையில் தண்ணீரோடு நிற்கவும் நன்றி கூறி அதை வாங்கி குடித்தாள்.

தண்ணீர் பருகுபவளின் தோற்றத்தை அப்பொழுது தான் கவனித்தாள் மற்றொருவள்.

மண்ணும் சேரும் படிந்த ஜீன்ஸும் ஆங்காங்கே மெல்லிய கீறாய் கிழிக்கபட்டிருந்த சிகப்பு நிற குர்த்தியும் போனிடைலில் போட்டிருந்த கூந்தலில் பாதி முகத்தில் விழ பயங்கரமாக இருந்தாள்.இன்னும் உற்று நோக்கியவளுக்கு அந்த சிகப்பு குர்த்தியோடு கையில் குருதி வழிந்ததை பார்த்ததும்,

“ஹேய்…எப்படி ஆச்சு…?”

என்று பதற பதறவேண்டியவளோ “அதை விடுப்பா…சண்டனா சட்டை கிழிய தானே செய்யும்…”

என்று கூறியபடி அந்த பெரிய கூடத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தவள்

“ஆமா… வீட்டில் யாரும் இல்லையா…? இவ்வளவு அமைதியா இருக்குது…”

என்றவளை வினோதமாக பார்த்தாள்.

“இந்த பொண்ணு லூசோ…நான் என்ன கேட்கிறேன்…இவள் என்ன பேசுகிறாள்…”

என்று எண்ணம் தோன்றினாலும் அந்த இரத்த காயமே இப்போது அவளுக்கு முக்கியமாக பட உள்ள
சென்றவள் கையில் சில பொருட்களோடு திரும்ப அதற்குள் அவள் சோஃபாவில் நல்ல வாகாக சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

அவளது கையை பிடித்து வழியும் ரத்ததை சுத்தம் செய்தவள்,

“ஏதோ கம்பி கிழித்ததுப் போல் இருக்கே…ஓடி வரும் போது கிழிச்சுகிட்டியா…?”

“ஹே…ஆமாப்பா… எப்படி கண்டு பிடிச்சீங்க…”

என்றபடி பார்த்தாலே தெரிகிறதோ என்று அவளும் காயத்தை ஆராய்ந்தவள் தானே,

“அப்போ நீங்க டாக்டரா…”

என்று ஆச்சரியமாய் வினவியவள் அவள் பதில் கூறும்முன் கையை வானை நோக்கி ஏஉயர்ந்தி,

“கடவுளே…நான் தப்பிக்க ஒரு வீட்டையும் காட்டி…என் காயத்திற்கு மருந்து போட அதில் ஒரு டாக்டரையும் வைத்தாய் பார்…யு ஆர் ரியலி க்ரேட்…”

என்றாள்.இதே வாய் தான் சற்று முன்,

“என்னை இப்படி கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்குறீயே…இது நியாயமா…தர்மமா…உனக்கு கருணையே இல்லையா…”

என்று புலம்பியது குறிப்பிடத்தக்கது.

அவளது பாவனையில் சிரிப்பு வர,

“எம்மா…நான் டாக்டர் இல்ல சாப்ட்வேர் என்ஜினியர்… ஃபர்ஸ்ட் யெட் பண்ண டாக்டரா இருக்கனுனு அவசியம்…இல்ல…"
என்று கூற “ஓ…” என்று உதட்டை குவித்தாள் மற்றவள்.

“சரி சொல்லு…யாரு நீ…”

“நான் யவ்வனா… உங்களை பார்த்த என் வயசு மாதிரி தான் தெரிகிறது…உங்கள் பேரு…”

“அனுஷ்யா…”

“நைஸ் நேம் அனு… உங்கள் உதவிக்கு ரொம்ப நன்றி…நல்ல நேரத்தில் கதவை திறந்தீங்க…இல்லை என்னை கைமா பண்ணிருப்பாங்க…”

கட்டைபோட்டு முடித்து நிமிர்ந்தவள்,

“அதெல்லாம் இருக்கட்டும்…நீ எப்படி அவங்களிடம் மாட்டினாய்… ரோட்டில் தனியாக வரும்போது மாட்டிகிட்டாயா…”

“நானா போய் ஏன் மாட்டுறேன்…எல்லாம் விதி…அதான் இந்த ரன்னிங்…ச்சேசிங்…”

“எப்படி…” என்றவள் “ஒருவேளை ஜேனர்லீஸ்ட் ஆ…? எதாவது கடத்தல் கும்பலை மாட்டிவிட எண்ணி மாட்டிக்கிட்டியா…”

தானே ஒரு யூகத்தை முன் வைக்க

“அதெல்லாம் இல்லைப்பா…”

என்று கண்மூடி சோஃபாவில் தலைசாய்த்தாள் யவ்வனா.

அனுஷ்யாவிற்கோ குழப்பத்தோடு ஆர்வமும் சேர்ந்து கொள்ள,

“அப்புறம் யாரு தான் நீ…?”

என்று கேள்வியாக நிறுத்தியவளிடம்

“திருடி…”

என்று அசால்ட்டாக பதிலளித்து அனுஷ்யாவை அதிர வைத்தாள் யவ்வனா.நம் கதாநாயகி…!!

1 Like