என் வாழ்வே நீ யவ்வனா-2

என் வாழ்வே நீ யவ்வனா-2
0

அனுஷ்யாவின் அதிர்ந்த பாவனையில் சிரிப்பு பொங்க கலகலவென சிரித்த யவ்வனா,
”ஹையோ…அனு மேடம்…நான் திருடினு சொன்னது அவங்களுக்கு தான்…நீங்க தனியா இருக்குறதால உங்கள எதாவது பண்ணிட்டு கையில் கிடைச்ச பொருளோட எஸ்ஸாகிடுவேனோனு பயப்படாதீங்க…”
என்று அவள் விம் போட்டு விளக்கியதில் இன்னும் பயம் பிடித்துக் கொண்டது.
“அடியே…எந்த நம்பிக்கையிலடி இவள உள்ளவிட்ட…அதுவும் இந்த நைட் நேரத்தில…மனோ தனியா இருக்க ஜாக்கிரதையா இருனு சொல்லுரப்போ எல்லாம் ’நா கொழந்தயானு’ வாய் கிழிய சண்டைப் போட்டுடு இப்போ இப்படி வம்ப வாசல் தொறந்து வாங்கிகிட்டேனே…”
உள்ளம் அடித்துக்கொள்ள தைரியத்தை திரட்டி சோஃபாவில் சாய்ந்து ஹாயாயை உட்கார்ந்திருந்தவளை,
“இங்க பாரும்மா…உன் பேச்சி நடவடிக்கை எதுவும் எனக்கு சரியா படல…அதான் அவனுங்க போய்டாங்கல…நீ மொதல இடத்த காலி பண்ணு…”
என்று அதட்டலாய் சொன்னாள்.
பட்டென்று யவ்வனா எழும்பவும் பயத்தில் அனிச்சையாய் இரண்ட்டி பின்னால் நகர ஆனால் அவளோ,
”என்ன மேடம்…உங்கள என்னை காக்க வந்த கொல தெய்வமுனு நெனச்சேன்…இப்படி தொறத்துறீங்க…இப்போதைக்கு உங்க வீடுதான் எனக்கு அடைக்கலம்…வெளிய போனேன்…கொன்னு கூறுப்போட்ருவாங்க…ப்ளீஸ் இந்த அப்பாவி ஜீவன காப்பாத்துங்க…”
என்றவள் குரலில் கெஞ்சல் கிஞ்சிதமும் இல்லையெனினும் கண்களில் பொய்மையும் இல்லை.
அதை உணர்ந்தாலும்,
”நீயே…உன்னை திருடினு சொல்ற…என்ன ஃபோர்ஜேரீ பண்ணீயோ…உன்னை நான் காபாத்தனும்மா…ஒழுங்கா நீயா வெளிய போ…இல்ல போலீஸ கூப்பிடுவேன்…”
என்று கையில் இருந்த அலைபேசியை காட்டி மிரட்ட எக்கி அதனை அவள் எதிர்ப்பாராவண்ணம் பிடுங்கிவிட,
”ஏய்…ஏய்…”
என்று கத்தினாள் அனு…
”ஷ்…இபோ ஏன் கத்துறீங்க…அந்த தடியனுங்க அப்படி ஒரு பழிய என்மேல போட்டு கோர்த்துவிட்டானுங்கனு சொல்லி முடிக்கிறதுக்குள்ள… நீங்க என்னை பரம்பர திருடி லெவலுக்கு கொண்டு போய்டீங்களே…இதுல போலீஸ் வேற…”
” நீ சொல்றதை நான் எப்படி நம்புவது…”
“எந்த திருடியாவது தான் திருடினு தானே ஒத்துக்குவாளா…நீங்களே முந்தி ஆப்ஷன் கொடுத்ததில் எதாவது ஒன்னை சொல்லி சமாளிச்சிருக்க மாட்டேனா… நம்புங்க அனு மேடம்…நம்பிக்கை அதானே எல்லாம்…”
என்று விளம்பர பானியில் சொன்னவள் “இந்தாங்க உங்க ஃபோன்…”
என்று கொடுக்க அதை வாங்கிக் கொண்ட அனு அவள் பேச்சில் சற்று நிதானித்திருந்தாள்.

“எதுக்கு உன் மேல திருடினு பழிப்போடனும்…என்ன ஆச்சு…”

”ம்ம்ம்ம்…இப்போ கேட்டீங்களே இது நியாயமான கேள்வி…”
என்று மீண்டும் அமர்ந்தவள் தன்னை பற்றி சொல்ல தொடங்கியிருந்தாள்.
”நான் என் அப்பா-அம்மாக்கு மூணாவது புள்ள… சொத்து செல்வம் எங்க அப்பாக்கு இல்லைனாலும் புள்ள செல்வம் தாராலமா அள்ளி கொடுத்துடான் கடவுள்…அதான் அஞ்சு பிள்ளைங்க நாங்க…”
‘ஹே…இப்போ என்னாச்சினு கேட்டா… நீ என்ன உன் குடும்ப வரலாறு சொல்லிட்டு இருக்க…”
என்று இடைமறித்தவளை
“இருங்க மேடம்…முழுசா சொன்னாத்தான் புரியும்”
என்று கூறிவிட்டு தான் விட்டதில் இருந்து தொடர்ந்தாள்.
”எங்க ஓட்டு வீட்டை ஒட்டு வீடா மாத்தி என் ரெண்டு அக்காவையும் கட்டிக்கொடுக்குறதுக்குள்ள என் அப்பாவோட தாவு தீர்ந்திடுச்சு…இதுல நானு எனக்கு அப்புறம் என் தம்பி தங்கச்சினு எல்லாரையும் எப்படி கர சேர்க்க போறேனோனு பொலம்பாத நாளே இல்ல…ஊருக்கே சோறுப்போடுற விவசாயி குடும்பம் தானாலும் தினமும் மூணுவேள சாப்பாடு கஷ்டம் தான்…கவுர்மெண்ட் புண்ணியத்தில் +2 வரை படிச்சிடேன்…அதுக்குமேல அப்பா-அம்மாவோட வெள்ளாம பார்த்துட்டு இருந்தாலும் சரியா விளைச்சல் இல்லாம நிலைமை ரொம்ப மோசமாக ஆரம்பிக்கவும்… நாமளாவது வெளியே எங்கயாவது வேல தேடுவோம்னு அதுக்கு முயற்சி பண்ணினேன்…இங்க பட்டதாரியே வேல இல்லாம அலைறான்…இதுல பன்னடாங்கிளாசு என்க்கு எவன் வேல தருவான்…ரொம்பவே வேலைக்காக அலைஞ்சேன்…கடைசியா தான் விநாயகம் அண்ணனை பார்த்தேன்…பிரிண்டிங் பிரஸ் கடை அவரோடது…என் குடும்ப நிலைய எடுத்து சொல்லி வேல கேட்டேன்…அவரும் பாவப்பட்டு அவர் கடையோட முன்பக்கத்துல இருந்த அவரோட ஜெராக்ஸ் கடைய பார்த்துக்க சொல்லி வேல போட்டு கொடுத்தாரு…வேல கிடைத்து அந்த பணத்தால சாப்பாடுக்கு கஷ்டம் இல்லாம ஓரளவு வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருந்துது.ஆனால்.பாக்க கூடாத ஒரு விசயத்தை பாத்து தெரிஞ்சிக்க கூடாத ஒன்னை தெரிஞ்சிக்கிட்ட ஒன்னு தான் நான் பண்ணிய ஒரே தப்பு…”
எந்த பாவனையும் இன்றி சொல்லிக்கொண்டிருந்த யவ்வனா முகம் கடைசி வரியை சொல்லும் போது இருண்டு போயிருந்தது…
*************************************************************
“அக்கா…இத ரெண்டு காப்பி போட்டு தாங்க…”
என்று ஒரு பேப்பரை நீட்டிய அந்த பையனை யவ்வனாவிற்கு எங்கையோ பார்த்தது போல் இருந்தது.அதை அவனிடமே கேட்க,
“என்ன தெரியலயாக்கா…பேச்சி மவன்….வாசு(யவ்வனாவின் தம்பி)வோட தோஸ்த்துக்கா…சின்ன வயசுல வாசுவோட வீட்டிற்கு அடிக்கடி வருவேனே…வினோத்…

என்று நியாபகப்படுத்த,
“ஷ்…ஆமாடா…மறந்தே போயிட்டேன்…எப்படி இருக்க…இது உன்னோட மார்க் லிஸ்டா…”
என்றபடி அதனை பார்க்க ஆயித்தை தொட்டிருந்த்தது அவனது மதிப்பெண்…
கண்கள் வியப்பில் விரிய,
“பரவாலையே வினோத்து… நீ இவ்வளவு நல்லா படிப்பியா…வாழ்த்துக்கள்…அடுத்து என்ன படிக்க போற…”
என்று கேட்க அவள் பாராட்டில் முகம் மலர,
“ஏரோனாடிகல் இஞ்சினியரிங் அக்கா…”
என்றான் வினோத்.
”ஹோ சூப்பர் ப்பா…இந்த வாசுவையும் உன்ன மாதிரி பெருசா படிக்க வைக்க தான் ஆசை…ஆனால் என்னால ரொம்பலாம் படிக்க முடியல… +1,+2 பாஸ் பண்றதே கஷ்டமுனு சொல்லி டிப்ளமோ எடுத்துட்டான்…சரி ஏதோ அவன் விருப்போம்னு விட்டாச்சு…”
வாய் பேசினாலும் கை வேலையை முடித்திருக்க விநாயகம் இவளை நோக்கி வரவும் பேச்சை சட்டென்று நிறுத்தி விட்டாள்.
வேலை நேரத்தில் யாருடனும் நின்று கதையளந்துக் கொண்டிருப்பதை பார்த்தால் விநாயகத்திற்கு மிகவும் கோபம் வரும்…எனவே அவள் அமைதியாகிவிட நகல் எடுத்து விட்டதால் வினோத்தும் விடைப் பெற்று சென்றான்.
அவளை நோக்கி தான் விநாயகம் வரவும் தானாக எழுந்து நின்ற யவ்வனா,
“என்னண்ணே…”
என்று கேட்க,
“ஒரு முக்கியமான வேலையா இப்போ நான் வெளிய போறேன் யவ்வனா…கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்…கட பசங்க ரெண்டு நாளாக லீவுல இருக்கானுவோ…இப்ப இங்க யாரும் இல்ல…அதனால தான் போயிட்டு வரவரைக்கும் கடைய பார்த்துக்க என்ன…”
என்று சொல்லியவர் கிளம்பிச்சென்ற அரைமணி நேரத்தில் விநாயகத்தை தேடி ஒருவர் வந்தார்.
அவரிடம் என்ன வேண்டும் என்று அவள் விசாரிக்க,
“கல்யாண பத்திரிக்கை அடிக்க கொடுத்திருந்தேன் ம்மா…இன்னைக்கு வந்து வாங்கிக்க சொன்னாப்புடி…அதான் வாங்கியார வந்தேன்…”
என்று அவர் சொல்லவும்
“விநாயகம் அண்ணே இப்போ இல்லியே…சாய்ந்தரம் வந்து வாங்கிக்கோங்க…”

என்றாள்.ஏனெனில் அவள் ஜெராக்ஸ் எடுப்பதோடு சரி…உள்ளே மற்ற அச்சடிக்கும் வேலையில் எல்லாம் அவள் ஈடுபட்டதில்லை.அவள் அதிகமாக உள்பக்கம் வருவதில்லை.எப்பொழுதாவது விநாயகம் கூப்பிடால் வந்து அவர் சொல்வதை செய்து கொடுத்திட்டு செல்வாள்.
எனவே அவ்வாறு கூறினாள்.

“ஏற்கெனவே ரெண்டு நாளா இதுக்காக அலஞ்சிட்டு இருக்கேன் ம்மா…இப்படி இழுத்து அடிக்கிறாரு…கல்யாண நாளு நெருங்கிடுச்சு…இன்னும் பத்திரிக்க வந்தப்பாடு இல்ல…இப்பவாவது வாங்கிட்டு போயிடலாமுனு பார்த்தால் இல்லேங்குற…ஊருல ஏகபட்ட வேல இருக்கு…சாய்கலாம் வர இங்க எப்படி உட்கார்ந்திருக்க முடியும்…கூடமாட உதவ கூட ஒரு பய இல்ல…நான் என்ன செய்யுறது…”

என்று அந்த மனிதர் அலைச்சல் மிகுதியில் தன்போக்கில் புலம்ப அவரை பார்க்கவும் பாவமாக இருந்தது.எனவே,

“விநாயகம் அண்ணே சொன்னா…சொன்னப்படி முடிச்சிடுவார் பெரியவரே…இந்த கடைபசங்க ரெண்டு நாளா வராததால எல்லா வேலையும் அவரே பார்க்குறாரு…அதான் இப்படி டீலே ஆகுது…”
என்று விளக்கம் கொடுக்க,

“சரி ம்மா…அதான் நீ இருக்கேல.அவர் ஃபோன்ல அச்சடிச்சாச்சு வந்து வாங்கிகோங்கனு தான் நேத்தி சொன்னாரு…செத்த நீயே எடுத்து கொடும்மா…இந்த இருக்கு பில்லு…”
என்று ஒரு சீட்டை நீட்ட சற்று யோசித்தவள் பின்பு

“சரி குடுங்க…”

என்று வாங்கிக் கொண்டு உள்ளே கதவை திறந்து சென்றாள்.

கட்டுகட்டாய் புத்தங்கங்களும் நோட்டீஸ் பேனர்களும் ஏ4 தாள்களும் அறை முழுதும் அடிக்கியிருக்க மேலும் அச்சடிக்கும் இயந்திருங்களுக்கு அருகில் எல்லாம் பல பேப்பர்கள் ஆங்கொன்று இங்கொன்றுமாய் சிதறிக்கெடுக்க பார்க்கவே குப்பை மேடுப்போல் காட்சியளித்தது.
‘இதுல எங்கேனு போய் தேடுவேன்…’
என்ற மலைப்போடு அடுக்கி வைக்க பட்டிருந்த அலமாரியில் அவள் இரசிதில் உள்ள எண்ணிற்கான கட்டு எங்கே இருக்கிறது என்று தேடினாள்.

கீழ் வரிசையில் இருந்த ஒரு ட்ராவல் பேக்கை திறந்து பார்க்க அதில் ஏதோ ஹோமியோபதி மருத்துவத்திற்கான விளம்பர நோட்டீஸ் கட்டு இருக்க எரிச்சலோடு அதனை மூடி வைத்த யவ்வனா மேல் தட்டில் தேடலை தொடர்ந்தாள்.

ஒரு ஸ்டூல் போட்டு மேலேயேறியும் மேல் தட்டு எட்டாததால் கையை மட்டும் உயர்த்தி துழாவ ஏதோ அகப்படவும் பிடித்து இழுத்தாள்.
ஆனால் அது சற்றும் அசையாததால் தம்கட்டி இழுக்க பொத்தென்று கீழே விழுந்து மற்றும்மொரு ட்ராவல் பேக்.

“ச்சே…ஆண்டவா இதிலாவது இருக்கனும்…”
என்றபடி அதனை திறந்தவள் கைகள் ஸ்தம்பிக்க பார்த்தவிழி பார்த்தபடி நின்று விட்டாள்.

இதயம் பக்பக்கென்று அடித்துக்கொள்ள கைகள் நடுநடுங்க அந்த பையின் ஜிப்பை முழுவதும் திறந்தவள் அதிர்ச்சியில் பிளந்த வாயை கையால் மூடினாள்.

ஏனெனில் கட்டு கட்டாய் பணம்!!அனைத்தும் இரண்டாயிரம் நோட்டுக்கள்.அந்த பை முழுவதும் அடைத்து நிரம்பியிருக்க அவ்வளவு பணத்தை பார்க்கவே மூச்சு முட்டியது யவ்வனாவிற்கு…
அந்த பணக்கட்டின் நடுவில் ஒரு இளைஞனின் புகைப்படம்…முகத்தை மட்டும் சிவப்பு வண்ண மையால் வட்டம் செய்யப்பட்டிருந்தது.

'நிச்சயம் ஏதோ தவறான பணம்…’
என்று அவள் மனம் அடித்துச் சொல்ல அதிர்ந்த சிலையாய் எத்தனை மணித்துளிகள் இருந்தாலோ திடீரென சுற்றம் உரைத்து அவசரவசரமாய் எழுந்தவள் அந்த பேக்கை முடி இருந்த இடத்திலே வைக்க முனைய ஆனால் ஒரு இஞ்ச் கூட தூக்க முடியவில்லை.அத்தனை கணமாக இருந்தது.

அவள் இங்கே பாடுபட்டு தூக்க முற்பட வெளியே விநாயகத்தின் குரல் கேட்கவும் இதயத்துடிப்பே நின்றுவிட்டது போல் ஆனாது.தான் எந்த தவறும் செய்யவில்லை எனினும் இந்த பணத்தை பற்றி தெரிந்துக் கொண்டதே பெரிய ஆபத்து என்பது புரிய என்ன செய்வது என்று சிந்தித்தவள் யோசனை வந்தவளாய் துரிதமாய் செயல்ப்பட்டாள்.

பணமுல்ல பையை இழுத்து சென்று அலமாரியின் கீழ் தட்டில் வைத்தவள் அதே போல் இருந்த அந்த மற்றொரு ட்ராவல் பேக் சற்று கணம் குறைவாக இருந்ததால் அதனை தூக்கி மேல் தட்டில் வைத்துவிட்டு ஸ்டூலை நகர்த்திச் போட்டு கதவின் அருகில் வரவும் விநாயகம் கதவை திறந்து வரவும் சரியாக இருந்தது.

முகம் முழுவதும் வேர்வையில் நனைந்திருக்க பேய் முழி முழித்த யவ்வனாவை கூர்மையாய் பார்த்த விநாயகம்,

“என்னாச்சு யவ்வனா…”

என்று கேட்க குரலே எழும்பவில்லை அவளுக்கு… இத்தனை நாள் இல்லாத பயம் இன்று விநாயகத்திடம் ஏற்பட தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,

“அது ண்ணே…இதோ இந்த பில்லுக்கான பத்திரிக்கை இன்னைக்கே வேணுமுனு அந்த பெரியவரு சட்டமா நிற்கவும் சரினு எடுத்து கொடுக்க வந்தேன்…”
என்றாள் இயல்பு போல்…

“அதுக்கு…என்னானு ஒரு வார்த்தை என்னிடம் ஃபோன் பண்ணி கேட்காம நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எடுத்து கொடுப்பியா…ஆமா ஏன் உன் முகம் இப்படி வேர்க்க விறுவிறுக்க இருக்கு…”

என்று அதட்டி பேச உள்ளே நடுங்கினாலும் வெளியே அதை துளியும் காட்டாது பாவமாய் முகத்தை வைத்தவள்,

“உங்களுட்ட கேட்காதது தப்பு தான்…சாரீ ண்ணே… மறுபடியும் இப்படி பண்ண மாட்டேன்…இந்த ஏ4 சீட்டெல்லாம் கலஞ்சி கிடந்துச்சா…எல்லாத்தையும் பொறுக்கி அடுக்கி வைக்கிறதுக்குள்ள இப்படி வேர்த்திடுச்சு…”

என்றாள் தயங்காமல்…

அவளை மீண்டும் அதே கூர்பார்வை பார்த்தவர்,

“இனி மறுபடியும் நான் சொல்லாமல் இங்கெல்லாம் வரக்கூடாது…”

என்று கண்டிப்பாய் சொல்ல வேகமாய் மண்டையை ஆட்டியவள் விட்டால் போதும் என்பது போல் வெளியே வந்துவிட்டாள்.

அதன் பின் அவளால் சாதாரணமாய் இருக்க இயலவில்லை.
கண்முன்னே அந்த பணமும் அந்த புகைப்படமும் வந்து வந்து போக இரண்டு நாட்களாக விநாயகத்தின் வித்தியாசமான நடவடிக்கை,கடையில் வேலை செய்யும் பசங்களின் விடுப்பு,சில புரியாத விநாயகத்தின் தொலைபேசி பேச்சிக்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பது போல் இருக்க ஏதோ பெரியதாக நடக்க போவதை அவள் உள்மனம் உணர்த்தியது.

அன்று வீட்டிற்கு சென்று படுத்தபின்பும் உறக்கமில்லை.

மறுநாள் விடுப்பு எடுக்கலாமா…என்று யோசித்தவள் பின் அந்த எண்ணத்தை கைவிட்டு கடைக்கு கிளம்பினாள்.

ஏதோ சிந்தனையிலே இயந்திரகதியில் பஸ்ஸை விட்டு இறங்கி கடையை நோக்கி நடந்து வந்தவள் தன் முன்னால் வந்த பைக்கை கவனியாது தன் போக்கில் நடக்க ஒரு இஞ்ச் இடைவெளியில் சடன்ப்ரேக் போட்டு நிற்க கடைசி நொடியில் சுதாரித்து துள்ளி விலகினாள்.

“ஏய்…ரோட்ல பார்த்து போக மாட்ட சாவு கிராக்கி…”

ஹெல்மட் அணிந்திருந்த பைக்காரன் கத்த,

“நீ பார்த்து ஓட்டிட்டு போடா மெட்டல் மண்டையா…ஆளையும் வண்டியையும் பாரு…”

என்று பதிலுக்கு கத்திவிட்டு பதிலை எதிர்பார்க்காது கடந்து வந்தவள்,

“நாள் தொடக்கமே அருமையா இருக்கு…விலங்கிடும்…”

என்று தலையிலே தட்டிக்கொண்டு கடைக்குள் நுழைந்தவளை

“ஹே…அடி எதுவும் படலைல…பாத்து வரக்கூடாதா…”

என்று கேட்டபடி முன்னால் வந்தான் ராஜ்.

“நான் சரியா தான் வந்தேன்…அந்த கேனையன் அப்படி ஓட்டிட்டு போகுது…”

என்று அவள் சமாளிக்க,

“ஹாஹா…கேனையனா…!! நம்ம கஸ்டமர் மா…”
என்று அவன் சிரிப்போடு சொல்ல,

“அப்போ நிச்சயம் கேனையன் தான்…”
என்று முணுமுணுத்தவள் பின்,

“அதை விடுங்க…ஏன் ரெண்டு நாளா உங்க யாரையும் பார்க்கவே முடியல…சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் லீவு…”
என்றாள்…

“அதுவா…விநாயக அண்ணா தான்…ஏதோ பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு…அதுக்கு ட்ரீட்டா எங்க எல்லாருக்கும் பணம் தந்து ரெண்டு நாள் லீவும் கொடுத்து அனுப்பிவச்சார்…தங்கமான மனுஷன் இல்ல…”
என்று பெருமையாய் அவன் சொல்ல யவ்வனாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

“ஹோ…அதான் எல்லார் முகத்திலயும் பல்ப் எரியுதோ…”
என்றவள் அதற்குமேல் பேச்சை வளர்க்கவில்லை. மனதில்,

'இங்க பாரு…நீ எதுவும் பார்க்கல…உனக்கு எதுவும் தெரியாது…என்ன நடந்தால் உனக்கென்ன…கண்ணமூடிட்டு வந்தோமா கொடுக்குற காசுக்கு வேலை பார்த்தோமானு இரு…’
என்று தனக்குள்ளே சொல்லி தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு யவ்வனா இயல்பு நிலைக்கு மீண்டிருந்தாள்.

ஆனால் அது அன்று மாலை வரையில் மட்டுமே நீடித்தது.

1 Like