எல்லை(யின்)யற்ற அன்பினில்

எல்லை(யின்)யற்ற அன்பினில்
0

safe_image

(அனைத்து இராணுவ வீரர்களுக்கும் சமர்ப்பணம்)

ஒரு தாய் தன் மகனுக்கு எழுதும் கடிதம். அதில் அவன் பிறப்பும், அதுவரை அவள் கண்ட இன்ப துன்பத்தை விளக்கமாக எழுதும் வரிகள்.
தன் வாழ்நாளின் பல சம்பவங்களை ஒற்றை கடிதத்தில் எழுதும் பகுதி.

ஒரு தொடர்கவிதையாய்.

எல்லை(யின்)யற்ற அன்பினில் - 1

நாள்தள்ளி சென்றதையும்
நான் சொல்லும் நேரத்தில்
என்னவரும் அருகிலில்லை
என் கண்ணை பார்ப்பதற்கு

நாணம் கொண்ட முகத்தினிலே
சிறுமுத்தம் பெறவில்லை
கைவைக்கும் வயிற்றுசுகம்
கண்டதில்லை என் உடலும்

கடிதத்தில் சிறுபகுதி தான்
காதலின் வரிகளாக
கட்டுப்பாட்டுடன் இருந்திடனும்
கணவர் உறவுகளும் படித்திடுமென

உப்பிய வயிறுனிலே
உற்சாகம் தோன்றியதே
உடையவனின் பிரிவையெண்ணி
உளைச்சலும் வந்ததடா

இருமாத ஒரு முறையில்
இருபது நிமிடத்திலே
சிலநேரம் பேசிடுவோம்
சிதறவிட்ட மகிழ்ச்சிகளை

விழிநீரும் மண்தொட்டு
விம்பிநிற்கும் வேளையிலே
கண்துடைக்க மாமியாரும்
கருத்துசொன்ன மாமனாரும்

வயிற்றுதைத்த நேரத்தில்
வருடிபார்க்க அவருமில்லை
துடிக்கும் சத்தம் கேட்டிடவே
அவர் காதுக்கும் வரமில்லை

சீமந்தம் என்றுசொல்லி
சீர்வரிசை நிரம்பியதே
வளையல் சத்தம் உனக்காக
வரிசையாய் கூடியதே

வலிவந்த நேரத்திலே
வந்ததே அவரின் முகம்
ஆறுதல் தேடி கதறிவிட
கேட்கவில்லை அவருக்கும்

மூன்றுநாள் உதிரம் நின்று
முன்னூறு நாள் சுமந்து
முடியாத வலி பொறுத்து
மூச்சிரைக்க உனை பெற்றேன்

தாயமுது கொடுத்துவிட
தலையோடு அழுத்திக்கொண்டேன்
தாயகத்து போர்வீரனின்
தந்தையாக கொண்டவனை

எல்லையிலே பதற்றமென
எட்டுத்திக்கும் செய்திவர
என்னுள்ளம் பதறியதே
என்னவரின் நிலையெண்ணி

உனை ஈன்ற இன்பத்தில்
உள்ளத்தில் அவர் நினைவு
உயிரோடு வந்திடவே
உயிரைபிடித்து நானுமிங்கே

உன் செய்தி சொல்லிவிட
காத்திருந்தேன் முன்பு வரை
அவரின் நற்செய்தி கேட்டடிவே
நானுமிங்கு உறைகின்றேன்…

    - சேதுபதி விசுவநாதன்

**தொடரும்

1 Like

எல்லை(யின்)யற்ற அன்பினில்-2

பால்மனம் மாறாத நீயும்
பாலகனாய் என்மடியில்
பாலுக்கு அழுதாயே
பதற்றங்கள் அறியாமல்

அன்னையென அறிந்தபின்னே
அழுதுகொண்டே பாலூட்ட
ஆளுக்கொரு பக்கமாய்
ஆறுதல்கள் குவிந்ததடா

பிரசவவலி அனுபவித்து
சிலமணி நேரத்தில்
பெரும்வலியும் தோன்றியதே
பச்ச உடம்பு மனதினிலே

பலபேர் மரணமென
பல செய்தி வந்திடவே
பாவிநெஞ்சம் கதறியதே
பாதியானவனை நினைத்துருகி

துப்பாக்கி சத்தங்கள்
தூக்கத்தை கெடுத்திடவே
துக்கத்தில் என் மனதும்
துணிவற்று போனதடா

என்னவரின் குரல் கேட்க
ஏங்கியே தவித்தேனே
என் உடலும் அசதிகொள்ள
என்னிதயம் நிறுத்தவில்லை

வருத்தத்தின் வலிகளிலே
அடிமனமும் அடங்கவில்லை
விதியென்று நினைத்தாலும்
விழிநீரும் நிற்கவில்லை

நிசப்தமான நேரத்திலே
நிம்மதியும் போனதடா
நிலைகுலையும் நேரமெல்லாம்
நிழலாக நீயிருந்தாய்

என்னவரும் உன்முகத்தை
பார்த்திடவே துடிக்கிறேன்
தவழ்ந்திட எண்ணுகிறேன்
தந்தையின் கைகளிலே

உந்தன் குறுநகையில்
அவருள்ளம் உருகிடவே
ஆனந்தத்தின் உச்சியிலே
அழுதிட வேண்டுமென

முத்தமழை பொழிந்திடவே
ஆண்டவனை வேண்டுகிறேன்
குண்டுமழை நின்றிடவே
குறையின்றி வந்திடவே

நாட்கள் நான்கு சென்றிடவே
போரும் அங்கு நின்றதடா
எந்தன் உயிரும் தேடியதே
என்னுயிராவன் குரலினை…

        - சேதுபதி விசுவநாதன்

**தொடரும்