ஒரு தந்தையின் இரவுகள்

ஒரு தந்தையின் இரவுகள்
0

சூரியன் தனது கதிர்களை புல்வெளிகளின் பாய வைத்து கொண்டிருந்த நேரம். பறவைகள் தங்களின் உணவுக்காக கூட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் பரபரப்பாக வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கும் மனிதர்கள் சென்று கொண்டிருந்த வீதியில் குடிசை வீட்டில் இருந்து சத்தம் வந்தது.

" சீக்கிரம் சாப்பாடு கூடைய எடுத்துட்டு வாடி. நேரமாச்சு" என்று கத்திக்கொண்டே வேக வேகமாக வெளியே வந்தான் செல்வம்.

“இதோ வந்துட்டேன். நீங்களே போட்டுட்டு போனா என்னவாம் உங்களுக்கு” என்று கடிந்து கொண்டே எடுத்து வந்தாள் மேகலா.

“எல்லாம் எங்கப்பன சொல்லனும். உன்ன போயி என் தலையில கட்டி வச்சுட்டு, அந்தாளு போயி சேர்ந்துட்டாரு. இப்போ நா தானே அவஸ்தை படுறேன்” என்று சொல்லிட்டே கூடைய வாங்கிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் செல்வம்.

“ஆமா ஆமா. இவருக்கு அரண்மனைல இருந்து சம்மந்தம் வந்துச்சு. இவரு என்னமோ எனக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி பேசுறாரு?. நான் மட்டும் இல்லைனா உங்களுக்கு கல்யாணமே ஆயிருக்காது” என்று அவன் செல்லும் திசையை பார்த்து சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் மேகலா.

தினமும் வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற கஷ்டத்தில் இருவரின் வாழ்க்கை சென்றாலும், இருவருக்கும் இடையே உள்ள காதலும், இதுபோல செல்ல சண்டையும் குறைந்ததே இல்லை.

அந்த காதலின் அடையாளமாக பிறந்தவன் தான் அபிமன்யு.

அபிமன்யுவை அப்படி வளர்க்க வேண்டும் இப்படி வளர்க்க வேண்டும் என்று எண்ணியபடியே தான் அவர்களின் ஒவ்வொரு நாளும் கடந்தது.

செல்வம் வேலைக்கு சென்ற இடத்தில் புதிதாக ஒரு முதியவர் வேலைக்கு வந்து இருந்தார். அவரை பார்த்தவுடன் செல்‍‍வத்துக்கு ஒரு இனம் புரியாத ஏக்கம் அவனுள் தொற்றிக்கொண்டது.

வேலையை பார்க்க ஆரம்பித்தான். நண்பகல் வெயில் நேரம். வியர்வை வழிந்து கொண்டிருந்தது. மண்ணில் வியர்வை துளி பட்டவுடன் காய்ந்து போனது.

“எல்லோரும் சாப்பிட போங்கப்பா” என்று ஒருவர் சொல்ல, எல்லாரும் வேகமாக சாப்பாடு கூடையை நோக்கி சென்றார்கள்.

அப்போது அந்த பெரியவர் மட்டும் தனியாக அமர்ந்து கொண்டிருக்க, அவரை நோக்கி சென்று அருகில் அமர்ந்தான் செல்வம்.

“ஐயா ஏன் இங்க வந்து உக்காந்துட்டு இருக்கீங்க? வாங்க சாப்படலாம்” என்று அழைத்தான் செல்வம்.

“இல்லப்பா. பசிக்கல. நீ சாப்புடுபா” என்று அவர் கூறினாலும், அவரின் உடலில் தெரிந்த சோர்வும், கண்களில் தெரிந்த பசியும் செல்வத்திடம் அவரை காட்டிக்கொடுத்து விட்டது.

“ஐயா இன்னைக்கு ஒருநாள் என்னோடு சாப்புடுங்க” என்று செல்வம் வற்புறுத்தியும் அந்த பெரியவர் சாப்பிடவே இல்லை. தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு வேலை செய்ய தயாரானார்.

மனமில்லாமல் தன் வயிற்றை நிரப்ப தான் கொண்டு வந்த உணவை உண்டான் செல்வம்.

ஆனால் அந்த பெரியவர் மிக சோர்வுடனே வேலை செய்வதை பார்த்த செல்வத்திற்கு மனசு ரொம்ப வலித்தது.

வேலை முடிந்து சம்பளம் வாங்கும் போது முதியவர் மிகவும் கலைத்து போயிருந்தார்.செல்வமும் சம்பளம் வாங்கிய பின் முதியவரிடம் “அய்யா எங்க தங்கி இருக்கீங்க? கொண்டுவந்து விடவா?” என்று கேட்டான்.

பெரியவரின் முகத்தில் ஒரு சிறு புன்னகை. ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்களும் வலிகளும் நிறைந்தே இருந்தது.

பதில் ஏதும் கூறாமல் நகர்ந்தார் பெரியவர்.

குழப்பத்திலேயே வீட்டிற்கு சென்றான் செல்வம். அவனுள் ஏராளமான கேள்விகள் மனதை தட்டிக் கொண்டே இருந்தது.

வீட்டை அடைந்தான் செல்வம். அப்போது அபிமன்யு அழுதுகொண்டு இருப்பதை பார்த்த செல்வத்திற்கு கோவம் தலைக்கேறியது.

“ஏன்டி பையன் அழறது கூட தெரியாம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கத்தி கொண்டே சமையலறை நோக்கி சென்றான் செல்வம்.

அங்கே வேண்டா வெறுப்பாக சமைத்துக் கொண்டிருந்தாள் மேகலா.

“ஏண்டி எம்புள்ள அங்க அழுதுட்டு இருக்கான். இங்க நீ எதுவும் தெரியாம சமச்சுட்டு இருக்கியா?” என்று கோபத்துடன் கேட்டான் செல்வம்.

“உம்புள்ளைக்கு பக்கத்து வீட்டு டீவில பிரியாணிய பாத்துட்டு வந்து வாங்கி கொடுனு கேட்கறான். என்ன செய்ய நானு” என்று குரலில் வலியை கொடுத்தாள் மேகலா.

பேசாமல் வெளியே வந்த செல்வம் தன் மகனை தூக்கி"ஏண்டா தங்கம் அழகுற?" என்று தனக்கு எதுவுமே தெரியாதது போல் மகனிடம் வினவினான் செல்வம்.

"அப்பா எனக்கு பிரியாணி வேணும்பா. அம்மா கிட்ட கேட்டா அடிக்கிறாங்க"என்று தேம்பி அழுதுகொண்டே சொன்னான் அபிமன்யு.

“அழுகாத டா செல்லம் நாளைக்கு அப்பா உனக்கு பிரியாணி வாங்கிட்டு வர்றேன்” என்று சொன்னான் செல்வம்.

தன் அழுத குழந்தையை சமாதானம் செய்துவிட்டு நாளை எப்படி வாங்குவோம் என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் செல்வம்.

அன்று இரவு பொழுது அவனுக்கு தூரமாய் இருந்தது. அந்த பெரியவரின் சிரிப்பும் தன் மகனின் அழுகையும் அவனுக்கு ஏதோ உணர்த்திக் கொண்டே இருந்தது.

“வாங்க சாப்பிடலாம்” என்று மேகலா கூப்பிட ஏதோ ஒரு வெறுமையுடன் வந்து அமர்ந்தான் செல்வம். பக்கத்தில் அபிமன்யு வந்தமர்ந்தான்.

தன் கணவனின் முகத்தில் இருக்கும் அந்த வருத்தத்தை மேகலாவால் உணரமுடிந்தது.

“என்னங்க ஆச்சு?ஏன் இப்படி இருக்கீங்க?” என்று மேகலா கேட்க,

“ஒன்னும் இல்லடி.நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று சாப்பாட்டை பிசைந்தான் செல்வம்.

மேகலா எதுவும் பேசாமல் தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்தாள்.

தனக்கு நாளைக்கு பிரியாணி கிடைக்கும் என்ற ஆசையில் இன்று அபியின் வயிறு நிறைந்தது.

சீக்கிரம் தூங்கினான் அபிமன்யு.

“நீங்க பாட்டுக்கு நாளைக்கு பிரியாணி வாங்கிட்டு வர்றேன் சொல்லிட்டீங்க. நாளைக்கு எப்படி வாங்கிட்டு வரபோறீங்க?” என்று கேட்டாள் மேகலா.

“தெரியலடி. என் பையன் அழும் போது பாக்க முடியல. அதான் வாங்கிட்டு வர்றேனு சொல்லிட்டேன்” என்று மெதுவாக சொல்லும் போது செல்வத்தின் மனநிலையை உணர்ந்தாள் மேகலா.

“இன்னைக்கு ஒரு பெரியவர பாத்தேன்.அவரோட வெறுமையான சிரிப்பு எதையோ சொல்லுச்சுடி” என்று செல்வம் சொல்ல,

“யாருங்க அவரு? எங்க பார்த்தீங்க? எதுக்கு சிரிச்சாரு?” என்று கேட்க மேகலா கேட்க,

“நாளைக்கு சொல்றேன்” என்று சொல்லி உறங்க சென்றான் செல்வம்.

பொழுதும் புலர்ந்தது. பரபரப்பாக வேலைக்கு கிளம்பிய வேலையிலும் செல்வம் முகத்தில் ஒரு ஏக்கம். மேகலாவை பார்த்தான். அவள் கண்கள் உடனே தூங்கி கொண்டிருந்த அபிமன்யுவை ஒருகணம் பார்த்தது.

மேகலாவின் பார்வையை உணர்ந்தவன் “இன்னைக்கு இருக்கற வைத்து சமையல் செய். நாளைக்கு சமாளிக்கவும் கொஞ்சம் எடுத்து வச்சுட்டு சமையல் பண்ணு” என்று சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினான்.

மேகலாவும் தன் அன்றாட வேலைகளை செய்ய சென்றாள்.

வேலை செய்யும் இடத்திற்கு வந்த உடனே செல்வத்தின் கண்கள் அந்த முதியவரை தான் தேடியது. அவர் இருக்கும் இடத்தை அறிந்து அவர் அருகில் சென்றான்.

பெரியவரும் செல்வத்தை பார்த்துவிட்டு ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்த, அதில் ஒரு நம்பிக்கை தெரிந்தது.

வேலை தொடங்கியது. பெரியவரை அடிக்கடி பார்த்தான் செல்வம். நேற்றைவிட கொஞ்சம் தெம்பாகவும் மகிழ்ச்சியாகவும் அவர் இருப்பதை உணர்ந்தான்.

மதிய உணவு நேரம். அந்த பெரியவர் செல்வம் இருக்கும் இடத்திற்கு கையில் ஒரு உணவு பொட்டலத்துடன் வந்தார்‌.

ஒரு சிறு புன்னகையுடன் இருவரும் அமர்ந்து உண்ண தொடங்கினர்.அப்போது பெரியவரை பார்த்து, “ஐயா நீங்க எங்க இருந்து வர்றீங்க? நேத்து ஏன் சாப்பிட கூப்பிட அப்போ வரலை?” என்று கேட்க,

பெரியவரோ சிரித்துவிட்டு, “தம்பி நான் நாலு பசங்களுக்கு அப்பா. இன்னைக்கு அனாதை” என்று சொல்லி விட்டு சாப்பிட்டார்.

“ஐயா பசங்க இறந்துட்டாங்களா?” என்று செல்வம் கேட்க, “கிட்டத்தட்ட அப்படி தான்” என்று பெரியவரின் பதிலில் வாயடைத்து போனான்.

“தம்பி மன்னிச்சுக்க. நேத்து நீ சாப்பிட கூப்பிட.ஆனா இதுவரைக்கும் நான் அப்படி சாப்பிட்டது இல்லைப்பா” என்று பெரியவர் சொல்ல, செல்வத்திற்கு புரிந்தது.

சாப்பிட்டு பின்னர், வேலை தொடங்கியது. உச்சி வெயிலிலும் உழைக்கும் வர்க்கம் தன் குடும்பத்தின் பசியை போக்க வெந்து கொண்டு இருந்தது.

மாலை நேரத்தில் சம்பளத்திற்காக காத்திருந்த அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி.

ஆம். சம்பளம் தரும் மேஸ்திரி வண்டியில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று செய்தி மட்டும் வந்தது.

அனைவருக்குமே அவருக்கு அடிபட்டதை நினைத்து வருத்தம் கொள்ளவில்லை. காரணம் அனைவருக்குமே இன்று இரவும் நாளைய பொழுதும் உணவுக்காக தேவைப்படும் சம்பளமே.

செல்வத்தின் மனம் அப்போது தனது மகனுக்கான இன்றைய ஆசையை எப்படி தீர்ப்பது என்பது தான்.

மற்றவரின் முகத்தில் தெரிந்த கஷ்டத்தை விட செல்வத்தின் முகத்தில் ஏற்பட்ட கவலையின் வலியை அந்த பெரியவர் கண்டுகொண்டார்.

“ஏன்பா? என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு கவலைபடுற?” என்று பெரியவர் கேட்க,

“இல்லைங்க ஐயா. என் மகனுக்கு இன்று பிரியாணி வாங்கிட்டு வர்றேனு சொல்லி இருந்தேன். ஆனா இப்போ…??” என்று இழுத்தான் செல்வம்.

“இவ்வளவு தானா விசயம். இந்தா பிடி” என்று இன்றைய உணவுக்காக தான் வைத்திருந்த பணத்தை செல்வத்தின் கைகளில் திணித்தார் பெரியவர்.

“வேண்டாமுங்க ஐயா” என்று செல்வம் மறுக்க,

“ஏன்பா தம்பி?. இந்த புடி. குழந்தை பொக்குனு போயிடும்” என்று கூறினார் பெரியவர்.

“இல்லைங்க ஐயா. இந்த காசு நீங்க சாப்பிட வச்சு இருக்கறதுங்க” என்று செல்வம் சொல்ல,

“அட போப்பா. எனக்கு ஒரு பேரன் இருந்தா தர மாட்டனா?. நீங்க முதல இத புடி” என்று மீண்டும் அவன் கைகளை மீறி சட்டைப்பையில் திணிக்க முயன்றார் பெரியவர்.

“உங்களுக்கு நான் மகனாக இருந்தால், என் பசியை விட உங்கள் பசியையே முக்கியமாக நினைப்பேன் ஐயா. ஒரு தந்தையாக மகனுக்கு வாங்கி தர முடியாததற்கு நானே வலிகளை ஏற்க வேண்டும்” என்று செல்வம் கூறினான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. சொன்னா கேளுப்பா” என்று பெரியவரும் வீம்பாய் இருந்தார்.

“ஐயா உங்களை பட்டினி போட்டுவிட்டு என் மகனின் ஆசையை நிறைவேற்றினால், என் மனசு என்னை நிம்மதியாக இருக்க விடாது. மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லி விட்டு வேகமாக நடையை கட்டினான் செல்வம்.

வீட்டுக்கு செல்லும் வழியில் கனத்த மனதுடனே இருந்தான் செல்வம்.

அதேநேரத்தில் வீட்டில் அபிமன்யு ஆனந்தமாக இருந்தான்.

“அம்மா!!! அம்மா!!!. எப்போமா அப்பா வருவாரு?” என்று அபிமன்யு கேட்க,

“கொஞ்ச நேரத்தில என் செல்லக்குட்டிக்கு பிரியாணி வாங்கிட்டு சீக்கிரம் வந்துருவாருடா செல்லம்” என்று சொல்லி அபிமன்யுவின் கன்னத்தை கிள்ளி சிரிக்க,

“ஹைய்யா. ஜாலி ஜாலி” என்று துள்ளி குதித்து கொண்டு இருந்தான் அபிமன்யு.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.

“அம்மா இன்னும் அப்பாவ காணல. எப்போ வருவாரு” என்று மீண்டும் கேட்க,

“உனக்கு பிரியாணி வாங்கிட்டு வரதுனால தான்டா செல்லம் அப்பா வர நேரமாகுது” என உண்மை தெரியாமல் தன் மகனின் ஆசையில் மேகலாவும் மூழ்கி இருந்தாள்.

வீட்டினுள் நுழைந்தான் செல்வம்.

“அம்மா… அப்பா வந்துவட்டாரே…” என்று கத்திகொண்டே செல்வத்தின் அருகில் சென்றான் அபிமன்யு.

அந்த சத்தம் கேட்டவுடன் செல்வத்திற்கு மனதில் இடி விழுந்தது போல தோன்றியது.

தன் மகனின் ஆசையை எப்படி இல்லை என்று சொல்வது, அவனை எப்படி சமாளிப்பது என்று ஏராளமான கேள்விகளை அந்த நொடியில் நினைத்தான் செல்வம்.

செல்வத்தின் தொடைகளை இறுக்கி அணைத்து பிடித்த அந்த பிஞ்சு கைகளுக்கு தெரியவில்லை தன்னை அப்பா இன்று ஏமாற்றிவிடுவாரென்று.

முகத்தில் மகிழ்ச்சியுடன் செல்வத்தின் அருகில் நெருங்கிய மேகலாவின் பார்வை, செல்வத்தின் கண்களை கவனிக்க தவறவில்லை.

“என்னங்க ஆச்சு?” என்று அவள் கேட்கும் முன்பே, “அப்பா பிரியாணி எங்கப்பா?” என்று அபிமன்யுவின் ஆனந்த குரல் செல்வத்தின் நெஞ்சில் முள்ளாய் இறங்கியது.

கீழே அமர்ந்தான் செல்வம். தன் மகனின் கைகளை பற்றி, அந்த பிஞ்சு விரல்களில் முத்தம் கொடுத்தான். அப்போது செல்வத்தின் கண்களில் குளம் போல கண்ணீர் தேங்கியது.

அதன் காரணம் தெரியாமல், “சீக்கிரம் பிரியாணி எடுப்பா.!!. பசிக்குது” என்று சொல்லும்போது அவன் கண்களில் நீர் வழிந்தது.

தன் மகனின் கைகளில் செல்வம் முத்தம் கொடுக்கும் போதே நடக்க இருப்பதை உணர்ந்து கொண்டாள் மேகலா.

எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்த செல்வத்திற்கு தொண்டைகுழி வறண்டது. பேச்சு வரவிடாமல் அடைத்தது.

மேகலா அபிமன்யுவை தூக்க முற்பட்டாள். ஆனால் செல்வம் விடவில்லை. அபிமன்யுவும் விடவில்லை.

திக்கி திக்கி, “அப்பானால இன்னைக்கு பிரியாணி வாங்கிட்டு வரமுடியலப்பா” என்று கண்கள் கலங்க சொன்ன செல்வத்திற்கு அடுத்த இடி தயாராக இருந்தது.

அதை கேட்டவுடன் அபிமன்யு பேசவில்லை. கண்கள் கலங்கியது. முகம் வாடியது.

அதை பார்க்க பார்க்க செல்வத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேகலாவிற்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டு இருந்தாள்.

பாவம் மேகலா. தன் கணவனை சமாதானம் செய்வதா! இல்லை தன் குழந்தையை சமாதானம் செய்வதா! என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள்.

சில நொடிகளில் சீறி பாய்ந்தது அபிமன்யுவின் வார்த்தைகள். “போ. பேசாத. நீ ஏமாத்திட்டில. இனி உன்கூட பேசமாட்டேன். உன் பேச்சு க்காா” என்று சொல்லி சத்தமாக அழ ஆரம்பித்தான்.

எந்த தந்தைக்கும் வரக்கூடாத நிலைமை. சத்தமில்லாமல் அழுதுகொண்டு இருந்தான் செல்வம்.

அழுத குழந்தையை தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் சென்று சமாதானம் செய்ய ஆரம்பித்தாள் மேகலா.

ஆனால் பிஞ்சு மனதில் ஏற்பட்ட வலி ஆயிற்றே. சமாதானம் ஆக மறுக்கிறது.

“செல்லம் இன்னைக்கு அப்பா கடைக்கு போறதுக்குள்ள கடைக்காரன் வீட்டுக்கு போயிட்டானாம்” என்று மேகலா சொல்ல அபிமன்யுவோ சமாதானம் ஆகவில்லை.

“அப்பா உன்ன ஏமாத்துவாரா? கடைக்காரன் போயிட்டான் சாமி” என்று சொல்லி கொண்டே அவன் கண்களில் இருந்த நீரை துடைத்தாள்.

மேலும் ஏதேதோ சொல்லி மகனின் அழுகையை நிறுத்திவிட்டாள் மேகலா.

ஆனால் வெளியில் கலங்கி நிற்கும் கணவனை சமாதானம் செய்வது எப்படி என்று தெரியவில்லை.

“இன்னைக்கு அப்பா வாங்கிட்டு வரல. நாளைக்கு கட்டாயம் வாங்கிட்டு வருவாரு” என்று சமாதானம் சொல்லி விட்டு ஆக்கி வைத்த சோறை வைத்து அபிமன்யுவின் வயிற்றை நிறைத்தாள் மேகலா.

அதற்கு இரண்டு மணிநேரம் தேவைப்பட்டது.

மேகலா அபிமன்யுவை தூங்க வைத்துவிட்டு, செல்வத்தின் அருகில் வந்து போது இன்னுமும் அழுதுகொண்டு இருந்தான் செல்வம்.

“என்னங்க நீங்களும் குழந்தை மாதிரி அழுதுகிட்டு இருக்கீங்க!” என்று தனது கணவனை சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

ஆனால் செல்வத்தின் மனமோ வலிகளில் இருந்து மீள மறுத்தது.

“என்னங்க என்ன ஆச்சு? ஏன் வாங்கிட்டு வரல?” என்று மெதுவாக கேட்டாள்.

தொண்டை வறண்டு இருந்தது. பேச முடியவில்லை. அவனின் வாடிய முகமும், சிவந்த கண்களும் வலியின் அர்த்தங்களை கூறியது.

சமையலறை சென்று தண்ணீர் எடுத்து கொண்டு வந்தாள் மேகலா. தண்ணீர் குடித்துவிட்டு சொம்பை கீழே வைத்துவிட்டு மேகலாவின் முகத்தை பார்த்தான். கண்களால் மன்னிப்பு கேட்டான்.

இன்று மாலை நடந்தவற்றை அனைத்தையும் மேகலாவுக்கு சொன்னான் செல்வம்.

இங்கே இவைகள் நடக்கும் வேளையில், அங்கே பெரியவரின் மனதில் செல்வம் பற்றியும், அவன் மகன் பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

செல்வத்திற்கு மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய்விட்டது மேகலாவிற்கு.

“சாப்பிட வாங்க. சாப்டுட்டு தூங்குங்க. நாளைக்கு வாங்கிட்டு வாங்க” என்று அழைத்தாள் மேகலா.

“எனக்கு பசிக்கல. நீ சாப்டுட்டு தூங்கு” என்று சொல்லிவிட்டு படுத்தான் செல்வம்.

அவனின் கைகளை பிடித்து உலுக்கி, “என்ன ஆச்சுன்னு இப்போ பட்டினியோட தூங்க போறிங்க” என்று வலுக்கட்டாயமாக சாப்பிட அழைத்தாள் மேகலா.

“பசிக்கலனு சொன்னா உனக்கு புரியாதா? நீ தின்னுட்டு தூங்கு. என்னைய விடு” என்று கத்திவிட்டு படுத்தான் செல்வம்.

இதை கூறும் வேளையில் கண்களில் கண்ணீரோடு கூறினான்.

“அதைவிடுங்க. இன்னுமும் ஏங்க அழறீங்க?. நாளைக்கு சம்பளம் வந்துடும். நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று தேற்றினாள் மேகலா.

“நாளைக்கு வாங்கிக்கலாம் தான். ஆனால் இன்று என் மகனுக்கு கொடுத்து வாக்கை காப்பாற்ற முடியாத ஒரு அப்பனா அவனை பார்க்கும் போது இதயத்தில ஈட்டி இறங்குற மாதிரி இருந்துச்சு” என்று செல்வம் கூறினான்.

தன் கணவனின் வலிகளை நன்றாக உணர்ந்தாள் மேகலா.

“சின்ன வயசுல எங்கப்பா சந்தைக்கு போயிட்டு நைட்டு லேட்டா தான் வருவாரு. அப்போ வீட்டில கரண்ட் கிடையாது. நானும் என் தங்கச்சியும் அவருக்காக காத்துகிட்டு இருப்போம்” என்று தனது சிறுவயது நினைவுகளை மேகலாவிடம் கூற ஆரம்பித்தான் செல்வம்.

ஏற்கனவே கூறியவைகள் தான்.ஆனால் தற்போது அவனின் வலிகளில் அவை புதிதாக வேறொரு கோணத்தில் இருந்தது.

“சந்தையில இருந்து வரும்போது எதாவது வாங்கிட்டு வருவாரு. அது எதுவா இருந்தாலும் சாப்பிடுவோம்” என்று அவளின் முகத்தை பார்த்து கூறினான் செல்வம்.

“சில நாட்கள் எங்களுக்கு ஊட்டி விடுவாரு எங்கப்பா. அந்த நேரத்தில மட்டும் எங்கப்பாவோட முகத்தில அப்படி ஒரு சந்தோசம் இருக்கும்” என்று சொல்லிவிட்டு மேகலாவின் கண்களை ஏக்கத்துடன் பார்த்தான் செல்வம்.

மேகலாவிற்கு செல்வத்தின் வலியும் ஆசையும் இப்போது மேலும் கஷ்டத்தை கொடுத்தது.

அழுதுகொண்டே, “விடுங்க. நாளைக்கு வாங்கிட்டு வாங்க” என்று கூறி தனது கண்களை துடைத்துக் கொண்டாள் மேகலா.

“அதில்லடி. சில நாட்கள் எங்கப்பா கிட்ட எதாவது சொல்லி விடுவோம். ஆனா வாங்கிட்டு வர மாட்டாரு. அப்போ நாங்க மூஞ்சிய தூக்கி வச்சுக்குவோம். அப்போ தெரியல அப்பாவோட கஷ்டம். இப்போ தெரியுது” என்று கூறும்போது செல்வத்தின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

“என்னங்க. அதில இருந்து வெளிய வாங்க. அபி சாப்டு தூங்கிட்டான். இப்போ நேரமாச்சு. நீங்களும் சாப்டுங்களே” என்று அழுதுகொண்டு கேட்டாள் மேகலா.

“சில நாட்கள் அப்பா காசில்லபானு சொல்வாருடி. அப்போ தெரியல. இப்போ அதை என் மகன் கிட்ட சொல்ல கூட என்னால முடியலடி” என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான் செல்வம்.

தன் கணவனின் கண்ணீரை துடைத்து விட்டு தன் தோளில் சாய்த்து கொண்டாள் மேகலா.

“என்னங்க. சொன்னா கேளுங்க. நம்ம பையனை நல்லா வளர்க்கலாம். அவனுக்கு எல்லாமே நீங்க கொடுப்பிங்க” என்று கூறி தனது கணவனை தேற்றினாள் மேகலா.

நள்ளிரவை தாண்டி செல்வத்தின் குமுறலும் மேகலாவின் ஆறுதலும் சென்றது.

மனதின் வலியில் வயிற்றின் பசியை மறந்தான் செல்வம்.

கணவனின் வலியில் தன் பசியை மறைத்தாள் மேகலா. காலையில் வேலைக்கு செல்லும் போதே இரண்டு நாட்கள் சமாளிக்க வேண்டும் என்று செல்வம் கூறியதால் மதிய உணவை துறந்தாள் மேகலா.

வீட்டுக்கு வெளியே போயி கஷ்டப்படுற கணவனுக்கு தானே அதிகமாக உணவு வேண்டும் என்று மதியம் சாப்பிடாமல் இருந்துவிட்டாள்.

இவர்களின் வலியிலும், காதலிலும் சாப்பாட்டு பாத்திரத்தின் கனமும் குறையாமல் இருந்தது.

பொழுதும் புலர்ந்தது. அபிமன்யு செல்வத்திடம் சரியாக பேசவில்லை.

இரவு மிஞ்சிய சாப்பாட்டை தண்ணீர் ஊற்றி சாப்பிட்டுவிட்டு மகனின் செயலில் மனமுடைந்து வேலைக்கு சென்றான் செல்வம்.

செல்வம் பணியை துவங்கினான். உணவு வேளையில் பெரியவரை தேடினான்.அவரும் செல்வத்தை தேடினார்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

செல்வத்தின் முகத்தில் தெரிந்த வாட்டத்தை வைத்தே நடந்தவற்றை ஊகித்தார் பெரியவர்.

“என்னப்பா. நேத்து பையன் கோவுச்சுக்கிட்டானா” என்று பெரியவர் கேட்க,

“ஆமாங்க ஐயா. நேத்து அவனை பார்க்கவே முடியல” என்று சோற்றை பிசைந்து கொண்டே கூறினான் செல்வம்.

“தெரியும்பா.அதான் உன் கையில காசை கொடுத்தேன். உன் பையன விட உனக்கு தான் வலி அதிகமாக இருந்திருக்கும்” என்று பெரியவர் சொல்லும் போது நிமிர்ந்து அவரின் முகத்தை பார்த்தான் செல்வம்.

“என்னப்பா அப்படி பாக்குற. நாலு பசங்களுக்கு அப்பா நான். உன்னோட இந்த வலியை கூட புரிஞ்சுக்க முடியாதா என்னால?” என கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.

“நேத்து என் அப்பாவோட வேதனையை உணர்ந்தேனுங்க ஐயா” என்று செல்வம் கூறும்போது அவனின் அப்பா மீது இப்போது வரும் பாசத்தை உணர்ந்தார் பெரியவர்.

“இன்னைக்கு சம்பளம் கொடுத்தா பாருப்பா. இல்லையினா என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு. வேற எதாவது சாப்பிட வாங்கிட்டு போ. இன்னைக்கு நீ அழுதா!” என்று சொல்லி விட்டு தன் கைகளை கழுவ எழுந்து சென்றார் பெரியவர்.

நாலு பசங்களுக்கு அப்பா. இன்னைக்கு ஒருவேளை சாப்பிட்டுக்கு வேலை செய்து சாப்பிட வேண்டிய நிலைமை என்று நினைத்து கொண்டு தன் வயிற்றை நிரப்பினான் செல்வம்.

மதியம் வேலை செய்யும் போது அவனுக்கு தன் தந்தையின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.

“டேய் செல்வா. நீ சம்பாதிச்சு எனக்கும் உன் ஆத்தாளுக்கும் சோறு போட வேண்டாம். உன்னை நீ காப்பாத்திகிட்டாலே போதும்” என்று தன் தந்தை அடிக்கடி கூறுவதை எண்ணினான் செல்வம்.

தன் தந்தை அப்படி கூறும் போதெல்லாம் “யோவ் இப்படி பேசிபுட்டு சோறு கேட்டு வீட்டுக்கு வந்தா? உனக்கு ஒரு பருக்கை சோறு கூட போட மாட்டேன்” என்று கூறிய வார்த்தைகளால் தன்னையே நொந்து கொண்டான் செல்வம்.

வேலை முடிந்தது. சம்பளத்திற்காக காத்திருந்தனர் அனைவரும். செல்வமும் பெரியவரின் அருகில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

மேஸ்திரி வந்தார்.அவரை பார்த்த பின்புதான் செல்வத்தின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

அனைவரும் வரிசையாக நிற்க, இரண்டு நாட்கள் சம்பளமும் கொடுக்கப்பட்டது.

காசை கையில் வாங்கிய பின் செல்வத்திற்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அவன் முகத்தில் கண்டார் பெரியவர்.

“ஐயா. இன்னைக்கு என் பையன ஏமாத்த மாட்டேன்” என்று சொல்லிவிட்டு விரைந்தான் பிரியாணி கடைக்கு.

“அன்னே ஒரு பிரியாணி” என்று சொல்லி செல்வம் காசை நீட்ட,

பிரியாணி கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.

கைகளில் பிரியாணி பொட்டலம் வாங்கிக்கொண்டு ஆனந்தத்தில் சில தூரம் நடந்தான் செல்வம்.

தீடிரென்று நின்று திரும்பி கடையை பார்த்தான்.

நேத்து நாமாலும் சாப்பிடல. மேகலாவும் சாப்படல. முந்தா நேத்தே சொன்னோம் " இன்னைக்கு சமாளிக்கனுமுனு" என்று நினைத்து பார்த்தான் செல்வம்.

“அண்ணே இன்னொரு பிரியாணி கட்டுங்க” என்று சொல்லி வாங்கிக்கொண்டு தன் ஆசை மனைவிக்கு கொடுக்க சென்றான் செல்வம்.

செல்லும் வழியில் செல்வத்தின் மனதில் அச்சம் குடிகொண்டது.

“அபிமன்யு சாப்டுருப்பானோ? தூங்கி இருப்பானோ?” என்ற பயமே அது.

கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தான். “சாமி கடவுளே. எம்புள்ள இந்நேரம் சாப்பிட்டு இருக்க கூடாது. மேகலா அவனுக்கு ஊட்டி விட்டுருக்க கூடாது” என்று வேண்டிக்கொண்டே நடையை துரிதப்படுத்தினான் செல்வம்.

நேரம் செல்ல செல்ல நடையும் பயமும் அதிகமாகியது. கிட்டத்தட்ட ஓடும் நிலையில் நடந்தான் செல்வம்.

வீட்டினுள் நுழைந்தான் செல்வம். தன் மகனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள் மேகலா.

“பையனுக்கு சாப்பாடு கொடுக்காத!” என்று கத்திகொண்டே வேகமாக வந்து தட்டை புடுங்கினான் செல்வம்.

“என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்துறீங்க?. புள்ளைக்கு சோறு ஊட்ட போகும் போது தான் தட்டை புடுங்குவீங்களா?” என்று கடிந்து கொண்டாள் மேகலா.

மூச்சிரைக்க பேசினான் செல்வம், “ஏய் நேத்து தான் எம்புள்ளைய ஏமாத்திட்டேன். இன்னைக்கு வாங்கிட்டு வந்துட்டேன்” என்று சொல்லி பிரியாணி பொட்டலத்தை நீட்டினான்.

“ஹைய்யா. சூப்பர் அப்பா” என்று சொல்லி எழுந்து தன் தந்தை கழுத்தை இறுக்கி முகத்தில் முத்தமழை பொழிந்தான் அபிமன்யு.

தன் மகனின் முத்தத்தின் மகிழ்ச்சியில் செல்வத்தின் மனதில் அமிர்தம் உண்டது போல இருந்தது.

இந்த மகிழ்ச்சிக்காக தானே காத்திருந்தான் செல்வம். கண்கள் குளமாகியது ஆனந்தத்தில்.

பொட்டலத்தை பிரித்து தன் கைகளால் மகனுக்கு ஊட்ட ஆரம்பித்தான் செல்வம்.

அந்த நிமிடங்கள் அவன் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இருவரின் முகத்தையும் மகிழ்ச்சியையும் ரசித்து கொண்டு இருந்தாள் மேகலா.

சாப்பிட்டு முடித்ததும் தன் கைகளால் மகனின் வாயை துடைத்துவிட்டு அபிமன்யுவின் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தேன் செல்வம்.

ஆகா!!!. என்ன ஒரு சந்தோசம். இது தான் தந்தையின் பாசமா? என்று நினைத்தான் செல்வம்.

வயிறு நிறைய உண்ட அபிமன்யுவை தூங்க வைத்துவிட்டு செல்வத்திற்கு சாப்பாடு எடுத்து வைத்தாள் மேகலா.

“என்னங்க சந்தோஷப்பட்டது போதும். வந்து சாப்புடுங்க” என்று அழைத்தாள் மேகலா.

வந்து அமர்ந்தான் செல்வம். அருகில் தனக்கு கொஞ்சமாக சாப்பாட்டை போட்டுக் கொண்டு அமர்ந்தாள் மேகலா.

இருந்ததே கொஞ்சம் தான் அவளுக்கு.

செல்வம் மேகலாவை பார்த்தான்.அவளும் பார்த்தாள்.

அவளின் தட்டை எடுத்து சாப்பாட்டை தன் தட்டில் கொட்டி பிசைந்தான் செல்வம்.

மேகலா கோவம் கொள்ளவில்லை. தன் கணவனுக்கு பசிக்கிறதோ என்றே எண்ணினாள்.

சில நொடிகளில் அவள் முன் பிரியாணி பொட்டலத்தை நீட்டினான் செல்வம்.

“என்னங்க இது” என்று மேகலா கேட்டாள்.

“உனக்கும் ஒரு பொட்டலம் வாங்கிட்டு வந்தேன். சாப்புடுடி” என்று கண்களில் காதல் வடிய கூறினான் செல்வம்.

“எனக்கு எதுக்கு பிரியாணி?. நீங்க சாப்புடுங்க” என்று சொல்லிவிட்டு செல்வத்தின் தட்டை இழுத்தாள் மேகலா.

“ஏய். இத நான் சாப்புட்டுகறேன்டி. நீ நேத்தும் சாப்படல. இன்றைக்கும் ஒழுங்கா சாப்டு இருக்க மாட்ட. அதனால நீ பிரியாணி சாப்டு” என்று சொல்ல,

“நீங்க தான் வேலைக்கு போறீங்க. நீங்க நல்ல சாப்பாடு சாப்புடுங்க” என்று மேகலா கூறினாள்.

இருவருக்கும் காதல் சண்டை மலர்ந்து கொண்டு இருந்தது.

இறுதியில் மேகலாவே வென்றாள்.

செல்வம் பிரியாணி பொட்டலத்தை பிரித்தான்.

ஒரு கை சோறு எடுத்து மேகலாவின் முன்பு நீட்டினான் செல்வம்.

“சாப்புடுடி. நான் ஊட்டிவிடுறேன்” என்று சொல்லி கொண்டே அவள் வாயருகே கைகளை கொண்டு செல்ல,

மேகலாவின் கண்களில் நீர் தளும்பியது.

திருமணமான புதிதில் கூட மேகலாவிற்கு செல்வம் ஊட்டியதில்லை.

முதல்முறையாக தன் கணவனின் கைகளால் உணவு சாப்பிட போவதை நினைத்து மகிழ்ச்சியில் கண்கள் கலங்க, பிரியாணியை சாப்பிட்டால் மேகலா.

அப்போது செல்வத்தின் மனதில் தோன்றியது. இது தான் காதலோ என்று.

தானும் உணவை எடுத்து தன் கணவனுக்கு ஊட்டினாள் மேகலா. சற்றும் தாமதிக்காமல் வாங்கினான் செல்வம்.

தன் மகனின் ஆசையில் இன்று எத்தனை ஆனந்தங்கள் செல்வத்திற்கும் மேகலாவிற்கும்.

இருவரும் அன்று தன் கைகளால் சாப்பிடவில்லை.

அன்றைய இரவு காதலிலும் மகிழ்ச்சியிலும் முடிந்தது.

‘தன் மகனின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியும், தன் மனைவிக்கு ஊட்டிய மகிழ்ச்சியும், தனக்கு தன் மனைவி ஊட்டிய மகிழ்ச்சியும்’ செல்வத்தின் இதயத்தில் சிற்பமாக பதிந்தது.

1 Like

தந்தை பாசம். தொடர்ந்து அழுத்தமான கதைகளைத் தர வாழ்த்துக்கள் சகோ

1 Like