கண்ணாமூச்சி – 17

கண்ணாமூச்சி – 17
0

அந்த அமாவசை இரவு ஆரம்பித்த நேரத்தில், கொடைக்கானலின் ஹேர்பின் பெண்டுகளில் அனாயாசமாய்க் காரை ஒட்டிக் கொண்டு வந்தான் கோகுல். வெளியே திடீரென பேய் மழை ஆரம்பித்திருந்தது. அவன் அருகில் மாயரதி அமர்ந்திருந்தாள். கோகுல் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதாக இரண்டு நாட்கள் முன்பு சொன்னதில் மிகவும் மகிழ்ந்து போய் இருந்தாள். முதலில் கொடைக்கானலில் தேனிலவு, பின் திருமணம் என்று அவன் சொன்னதும் அவளுக்குப் பிடித்திருந்தது. மதுரையில் இருந்தே போன் போட்டு பத்திரிகையாளர் ஒருவருக்கு வேறு யாரோ பேசுவது போல் பேசித் தானும் கோகுலும் தனியே கிளம்பி வருவதைப் பறைசாற்றி இருந்தாள். அவ்வப்போது சிலர் இருவரையும் உற்று நோக்கியதைக் கவனித்திருந்தாள். தள்ளி நடந்துக் கொண்டிருந்த கோகுலிடம் அளவுக்கு அதிகமாகவே ஈஷினாள். இனி பத்திரிக்கையாளர்கள் போதும் இருவரையும் சேர்த்து வைக்க.

அவனது சொத்து விவரம் பற்றி பதமாக விசாரித்து திருப்தி அடைந்தாள். ரோஜாவின் சொத்து முழுவதும் அவன் பெயரில் எழுதி வைக்கச் சொல்லி ரோஜா சொல்லிவிட்டதால், பூபதியும் அவ்வாறே செய்ததை அறிந்து அவளுக்கு மிகவும் சந்தோஷம். முதல் வேலையாக எல்லாவற்றையும் தன் பேரில் மாற்ற வேண்டும் என்று மனதில் நினைத்துக் குதுகலித்தாள். இருந்தாலும் சூழ்நிலையின் அவசியத்தை உணர்ந்து முகத்தை சற்று சோகமாகவே வைத்துக் கொண்டாள். வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக, எல்லாம் கூடி வரும் நேரத்தில் கோகுலின் சந்தேகத்திற்கு ஆளாகி விடக்கூடாது.

“ ரதி, இவ்வளவு நேரம் உன் சந்தேகத்துக்கெல்லாம் நான் பதில் சொன்னேன். இப்ப நீ ஏன் சந்தேகத்துக்கு பதில் சொல்லப் போற” என்று நிதானமாகச் சொன்னான் கோகுல்.

அந்தக் குரல் ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அபாய அறிவிப்பு என்பதை உணர்ந்தாள் மாயரதி.

“ரோஜா வீட்டை விட்டுக் கிளம்பி வந்தன்னைக்கு என்ன நடந்தது?” காரினை நிறுத்தி விட்டுக் கேட்டான் கோகுல்.

சுதாரித்தாள் ரதி “எனக்கு எப்படித் தெரியும்?”

“உனக்குத் தெரியாது?” கோகுலின் குரல் கடினமாகியது.

“தெரியாது” தீர்மானமாக சொன்னாள்.

“உண்மையிலே உனக்குத் தெரியாது?” மேலும் உஷ்ணம் ஏறியது கோகுலின் வார்த்தைகளில்

“உண்மயிலே தெரி…”. கன்னத்தில் விழுந்த அறையின் காரணமாக ரதியின் காதில் காதில் ஞொய் என்று சத்தம் வர,

பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை நிதானமாக எடுத்தான் கோகுல்.

“உனக்கு எப்படி சாகணும் ரதி. துப்பாக்கியா இல்ல கத்தியா?”

ரதியுன் கண்களில் மரண பயம் தெரிய, பற்கள் தந்தி அடித்தபடியே சொன்னாள்

“உண்மைய சொல்லிடுறேன் கோகுல். கொடைக்கானலுக்கு வந்த ரோஜாகிட்ட வழில காரை மறிச்சு, அவள மிரட்டி டைவோர்சுக்குக் கையெழுத்துத்தான் வாங்கச் சொன்னேன். ஆனா அந்த ரவுடிங்க வேற ஏதாவது செய்ய ட்ரை பண்ணி இருப்பாங்க போல இருக்கு. அவ காரை வேகமா டிரைவ் பண்ணிட்டு பாதை தெரியாம மலைல இருந்து கீழ விழுந்து செத்து போய்ட்டா. இதுல ஏன் தப்பு எதுவுமே இல்ல”

“ச்சீ நீயும் ஒரு பெண்ணா? நீயும் நானும் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாம, உடம்பு சரியில்லாத என்னோட பிள்ளைங்களோட கண்காணாத இடத்துக்கு ஓடி வந்தவளைப் போய் ரவுடிங்கள விட்டு மிரட்டி இருக்க. பயந்து போய் பழக்கம் இல்லாத இந்த இடத்துல வேகமா காரை ஓட்டிட்டு தடுமாறிப் போய் அதலபாதாளத்துல ஏன் பிள்ளைங்களோட விழுந்துட்டா. ரோஜாவைக் கொலை பண்ணிட்டு, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம அவளோட புருசனையும் சொத்தையும் அனுபவிக்க ஆசைப்பட்ட உனக்கு என்ன தண்டனை தெரியுமா? நான் வரும் போதே கல்யாணத்துக்கு நான் சம்மதிக்காட்டி என்ன கொன்னுடுவேன்னு மிரட்டுறதா போலீஸ்ள கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்திருக்கேன். இப்ப எனக்கு ஏதாவது ஆனா இனிமே நீ காலம் பூரா ஜெயிலுல களி திங்கணும். ஒரு வேள நீ ஏதாவது கோல்மால் பண்ணி தண்டனைல இருந்து தப்பிசுட்டா? அதுனால… ”

சொல்லிக் கொண்டே மாயரதியைக் காரில் இருந்துக் கீழே தள்ளினான். ரோட்டில் விழுந்த அவள் காலின் மீது வேகமாகக் காரை ஏற்றினான். இரண்டு காலும் சக்கரத்தில் நசுங்கிப் போக “ஓ… “என்று ஓலமிட்டாள் ரதி.

“உனக்கு இப்ப வலிக்குறாப்புல தானேடி என்னோட ரெண்டு சின்ன பிள்ளைங்களுக்கும் வலிச்சிருக்கும். நீ சீக்கிரம் சாகக் கூடாது. வாழ்க்கை பூரா நீ செஞ்ச தப்ப நெனச்சுகிட்டே புழுங்கனும். நான் ஏன் பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட போறேன். வாழ்க்கைல கடவுள் தந்த சொர்க்கத்தை தொலைச்சுட்டு நிக்குற ஆம்பளைங்களுக்கு ஏன் வாழ்கை ஒரு பாடம். ப்ளீஸ் இங்கேயே செத்து கித்துப் போய் நான் போற இடத்துக்கும் வந்து எனக்குத் தொல்லை கொடுக்காதே ”

ரிவர்ஸ்சில் பின்னே போனவன், பின் போன வேகத்தோடு பத்து மடங்கு வேகத்தில் அந்த ஹேர்பின் பெண்டை நோக்கிக் காரை செலுத்தினான். ரோஜா குழந்தைகளோடு காரில் இருந்து விழுந்த அதே இடத்தில், கிட்டத்தட்ட அதே நேரத்தில் கோகுலின் காரும் அவனோடு சேர்ந்து ரோஜாவனத்தில் இருந்து பார்க்கும் தொலைவில் இருந்த அந்த ஹேர்பின் பெண்டில், கீ…ழே விழுந்து வெடித்து சிதறியது.

ரோ ஜாவனத்தில் இருந்து சற்று தூரத்தில் தீபாவளிப் பட்டாசாய் கீழே விழுந்து சிதறிய அந்தக் காரைப் பார்த்த ரோஜாவுக்கு நடுங்கியது. அவள் இருபுறமும் ராகுலும், ரம்யாவும் இருக்க அவள் முன்னே மரியா, கண்ணுசாமி, அன்னம், வள்ளி.

“இந்த மாதிரிதான் நாங்க வந்த காரும் வெடிச்சிருக்கும்னு நினைக்குறேன். கொஞ்சம் தாங்க முடியாத வலி இருந்துச்சு. அப்பறம் என்ன நடந்ததுன்னே தெரியல. கண் முழுச்சுப் பார்க்கும் போது ஏன் பக்கத்துல நின்னு இவங்க ரெண்டு பேரும் முழுச்சுட்டு இருந்தாங்க. நான் கடவுள் எங்களக் காப்பாத்திட்டாருன்னு ரொம்ப சந்தோஷப் பட்டேன். கண்ணுக்கு இந்த வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியல. நாங்க மூணு பேரும் இங்க வந்தோம். அப்பறம் உங்களைப் பார்த்தோம்”

ஆதரவாக அவளருகில் வந்த மரியா “நாங்களும் மண் சரிவுல ஒரே நாள்ல இங்க வந்தவங்கதான். நீ வந்தப்ப உன்னப் பார்க்க நாங்க வந்தோம். ஆனா உனக்கு நீ உயிரோட இல்லைன்னே தெரியல. இது வழக்கம் தான். நிறையா பேர் தாங்க செத்துட்டது தெரியாம வழக்கமா செய்யுற வேலைங்க எல்லாத்தையும் செய்வாங்க. அவங்களோட மனநிலமையப் பொறுத்துத்தான் அவங்களுக்கு நடந்தது பத்தி தெரியவரும். நம்மள மூடி இருக்குற மாயை அப்படிங்குற கட்டு கொஞ்சம் கொஞ்சமாத் தான் நம்ம விட்டுப் போகும். உனக்கு மெதுவா சொல்லனும்னு நாங்களும் காத்திருந்தோம். அதுக்குள்ளே இந்த வீட்டை விலைக்கு வாங்க வந்த அந்தக் கும்பலோட நடவடிக்கை அதிகமா போச்சு. நீங்க வந்த கார் விழுந்தது தெரிஞ்ச உடனேயே வாரிசில்லாத சொத்த குடும்பத்தோட ஆக்ரமிப்பு பண்ண வந்துட்டாங்க. சில சமயம் மனுஷங்க நம்மள மாதிரி ஆவிங்கள விட கொடூரமானவங்க. அவங்க வீட்டு பையன் ராமுக்கு இயற்கைலையே ஆவிங்களைப் பார்க்குற சக்தி உண்டு. சில மனிதர்களுக்கு அப்படித்தான்.நம்மளப் பார்க்கவும், நம்ம கூட பேசவும், தேவைப்பட்டா நம்மளை அடக்கவும் கூட முடியும். அந்த மாதிரி அபூர்வ சக்தி அவனுக்கு இருந்ததால தான் அவனுக்கு இங்கிருக்குற நடமாட்டம் எல்லாம் தெரிஞ்சு, இந்த வீட்டை விட்டு போகணும்னு அவசரப்பட்டான். பிற்காலத்துல அவன் ஒரு ஆவிங்களோட பேசுற மீடியமா வருவான்.ஆனா அவங்க அம்மா அப்பாவுக்கு அந்த சக்தி கம்மியா இருந்ததால, அவங்களால நம்மள உணர முடியல. அவங்க நீங்க மூணு பேரும் இருக்குறத உணர்ந்து உங்கள அடக்க மந்திரவாதிய ஏற்பாடு பண்ணாங்க. அன்னைக்கு உன் முதுகுல என்னமோ தீய வச்சு சுட்டாப்புல இருந்ததுன்னு சொன்னேல்ல. அது வேற ஒண்ணுமில்ல, அவங்க போட்டிருந்த சாமிப் படம். அது உன் மேல பட்டு உன்னத் தீயா சுட்டிருக்கு. உன்னால அதை உணர முடியல. ஆனா அன்னைக்கு நீ போட்ட அலறல்ல பயந்து போய் வீட்டை விட்டு ஓடிப் போனவங்க மந்திரவாதியக் கூப்பிட்டு உன்னக் கட்டிபோட ட்ரை பண்ணாங்க. ஆனாலும் பூஜய அந்த மந்திரவாதி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே அதைத் தடுக்குற சக்தி உனக்கு மட்டும் தான் இருந்தது. ஏன்னா அகால மரணம் காரணமா இன்னும் சாந்தி ஆகாம இருக்குற ஆத்மா நீ. உனக்குத்தான் எங்களை விட வேகமும் , சக்தியும் அதிகம். அதுனால அவனால ரொம்ப நேரம் உன்னைக் கட்டிப் போட முடியல. உன்ன வச்சு அவங்கள விரட்டினோம். அவங்களோட நடமாட்டம் முன்னாடியே ரம்யாவுக்கும் எனக்கும் தெரிஞ்சது. ஏன் இங்க நம்மள மாதிரி அலஞ்சுட்டு இருக்குற மத்த நண்பர்கள் கூட ரம்யாவுக்குத் தெரிய ஆரம்பிச்சாங்க. என்ன, அவள் ஆடுன கண்ணாமூச்சி ஆட்டத்துல அவளுக்குக் கண் கட்டு சீக்கிரமா அவிழ்ந்து போச்சு. உனக்கு கொஞ்சம் லேட்”

“ஆனா எனக்கு ஒண்ணும் புரியல, நான் மத்த மனுஷங்க மாதிரி சமச்சேன், சாப்பிட்டேன் எல்லா வேலையும் செஞ்சேனே”

“அது அப்படித்தான். தொட்டில் பழக்கம் சில சமயம் சுடுகாடு தாண்டிக் கூட வரும். நீயா சமச்ச? இல்லை. அன்னமும் சமைக்கல, இங்க சமையல் செஞ்சது, இந்த வீட்டை விலைக்கு வாங்க நெனச்சு, அப்பறம் ஆக்கிரமிச்சு இங்க குடி வந்த அந்தக் குடும்பம். நீ சுத்தம் பண்ணி வச்சுட்டு போன உங்க அறைகளை யூஸ் பண்ணது, தினமும் சமையல் செஞ்சது, ராகுல் பெட்ல படுத்துத் தூங்கினது எல்லாமே அவங்கதான். நல்லா யோசிச்சுப் பாரு நீ தினமும் சாப்பிட்டது ஒரு கனவு போலத்தான் தோணும. மத்தபடி நீ ஒழுங்கா சப்புக் கொட்டி இங்க உட்கார்ந்து சாப்பிட்டது, உனக்கு வீட்டுல படைச்ச பத்தாம் நாள் சப்பாட்டத்தான். அன்னைக்குத்தான் உனக்கு உண்மையிலே பசி. அதுவரைக்கும் தாகம் மட்டும்தான். ”

எனக்கும் பிள்ளைகளுக்கும் மாத்திரை எதுவும் தேவைல்லாமல், அவங்களோட மூச்சுத் திணறலும், என்னோட தலைவலியும் போனது அதுனாலதானா? அப்ப நானும் ஏன் பிள்ளைங்களும் உயிரோட இல்லையா? நான் பேய்னு நெனச்சு பயந்தவங்கதான் உண்மையிலையே மனுஷங்களா? என்னோட கோகுலை விட்டு நான் நிஜமாவே பிரிஞ்சு ரொம்ப தூரம் வந்துட்டேனா? கோகுல் வீட்டுல ஏன் போட்டோவுக்கு முத்தம் கொடுத்தாப்புல தோணினது, எங்களுக்குப் பிடிச்ச சாப்பாட்டை அம்மா அழுதுகிட்டே சமைச்ச மாதிரி தோணினது, கோகுல் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டு அழுதது, நான் கோகுல் கன்னத்துல இருந்து வழியுற கண்ணீரைத் துடைச்சது எல்லாம் கண்டிப்பா என்னோட கனவு இல்ல. அப்ப அன்னைக்கு ரதி மேல கோவத்தோட பார்த்தப்ப ஒவ்வொரு தட்டா உடஞ்சதுக்குக் காரணம் என்னோட கோவம்தானா? அந்த அமானுஷ்யமான சக்தி கடைசீல நான்தானா? யோசித்துப் பார்த்த ரோஜா, புரிந்து விட்டதற்கு அடையாளமாய்த் தலையாட்டினாள்.

மெலிதாக சிரித்தனர் அனைவரும். “ காலம் இப்படித்தான். நாம கடவுளை அடயுற வரைக்கும். இந்த இடம் நமக்குப் புகலிடம். இங்க நம்மள மாதிரி நிறையா பேர் வருவாங்க. மனுஷங்களும் வருவாங்க. சில பேர் நம்ம கண்ணுக்குத் தெரிவாங்க. சில பேர் தெரியமாட்டாங்க. அவங்க பாட்டுக்கு அவங்க வேலையைப் பார்க்கட்டும். நாம பாட்டுக்கு நம்ம வேலையைப் பார்க்கலாம். சரியா ராகுல்” சிரித்துக் கொண்டே கேட்டாள் வள்ளி.

“நானும் உங்க கூட சேர்ந்துக்கலாமா?” என்ற குரல் கேட்டு திரும்பினர் அனைவரும். அங்கே கோகுல் ரோஜா அவனுக்கு முதன் முதலில் வாங்கித் தந்த சாம்பல் நிற சூட்டைப் போட்டுக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான்.

“ரோஜா நான் தப்பு செஞ்சுட்டேன். நீயும், ராகுல் ரம்யாவும் என்னைய மன்னிக்கணும். என்னாலதான உங்களுக்கு இவ்வளவு கஷ்டம். நான் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா நாம உயிரோட சந்தோஷமா இருந்திருக்கலாம். நீ இருக்குறத நான் நேத்து ராத்திரி இங்க வந்தப்பயே உணர்ந்தேன். ஆனா உன்கிட்ட நான் வரதுக்கு முன்னாடி செய்ய வேண்டிய சில வேலைகளும், கொடுக்க வேண்டிய சில தண்டனைகளும் இருந்தது. எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்துட்டேன். நான் இன்னும் ராமன்தான் ரோஜா. என்னோட சீதையக் கஷ்டப்படுத்தினதுக்கு தண்டனையா இப்பத்தான் தீக்குளிச்சேன்”

“அப்ப இப்ப கீழ விழுந்த அந்த காருல இருந்தது”

“என்ன செய்யுறது ரோஜாவுக்கு வாழ்க்கைபட்டா ரோஜாவனதுக்கு வந்துதானே ஆகணும். என்னைய ஏத்துக்குவியா?”

தங்களது தந்தையிடம் ஓடிச் சென்றனர் குழந்தைகள் இருவரும். தன்னுடைய ராமனை நோக்கி சீதையும் சென்றாள்.

“அவள் உங்கள எப்படி ஏத்துக்காம இருப்பா. அவ உயிரோட இல்லைங்குறது தெரியாம போனதே உங்களோட ஞாபகத்துலதானே” என்று வள்ளி சொல்ல அங்கு கலகலவென சிரிப்பொலி எழுந்தது. பின்னால் இருந்த புளியமரமும் அந்த சிரிப்பில் சேர்ந்துக் கொண்டது.

தூ ரத்தில் இருந்து ரோஜாவனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முனியாண்டி கோவில் பூசாரிக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது .

“நாளுக்கு நாள் அந்த வீட்டைப் பார்க்க பயம்மா இருக்கப்பா. எத்தன ஆவிங்க அங்க அகாலமா வந்து பசியோட காத்துகிட்டு இருக்கோ” என்று சொல்லியபடி கையில் இருந்த படையலை ரோஜாவனதுக்கு சற்று தூரத்தில் வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டார். அந்த வாழை இலையில் இருந்த படையல் பதார்த்தங்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போக ஆரம்பித்தது.

கோவிலுக்கு வந்த பூசாரியிடம் காட்டு வேலைக்கு சென்று பயந்து போன ஒரு இளம்பெண்ணை கூட்டி வந்திருந்தனர். பயந்து போய் முகம் வெளுக்க ஏதோ திசையிலே வெறித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவாறே உடுக்கையை அடித்தபடிப் பாடத் தொடங்கினார்

சங்கு முழங்குதப்பா தவமுனி வருகையிலே

ஈர உடல் நடுங்குதப்பா வீரபடை வருகையிலே

முனியாட்டம் ஆட்டம் முனியாட்டம்

பஞ்சமுனி சேர்ந்தாடும் ஒரு ஆட்டம்

ஊரு சனம் காத்திடவே போடு இந்த ஆட்டம்

ஊறும் பிணிகளை சுட்டெரிச்சே ஓட்டும்

மெதுவாக இலைகள் அசைய, முழித்துப் பார்த்த ரோஜாவனத்துப் புளியமரம் தனது ஆட்டத்தைத் தொடங்கியது.

கண்ணாமூச்சி ஆட்டம் முடிந்தது

1 Like

மிக விறுவிறுப்பான திகில் கதை. கதையின் முடிவு அற்புதம். வாழ்த்துக்கள்