கதையல்ல நிஜம் - திகில் சம்பவங்கள்

கதையல்ல நிஜம் - திகில் சம்பவங்கள்
0

படித்ததில் பிடித்தது(திகிலடையச் செய்தது) என்ற ரகத்தில் சில உண்மை திகில் சம்பவங்கள் உங்களுக்காக இங்கே!

எழுந்திரு நித்யா - ஹாரர் ஸ்டோரி (உண்மை சம்பவம்)

நான் பிறந்து வளர்ந்தது சிறிய டவுன். படித்து முடித்ததும் பெங்களூரில் வேலை கிடைக்க, வேலையில் சேர்ந்தேன். சிறிது நாட்களுக்குப் பிறகு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். என் ஒருத்திக்கு ஒரு படுக்கை அறை கொண்ட வீடே தாராளம். நான் இப்போது வாடகைக்கு இருப்பது எல்லா வசதிகளும் நிறைந்த இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு. வாடகையும் அதிகம். அதனால் கூடுதலாக இருக்கும் ஒரு படுக்கை அறையை வாடகைக்கு விட்டுவிடலாம் என்று முடிவு செய்து தெரிந்தவர்களிடம் சொன்னேன். பெங்களூரைச் சேர்ந்த இணையதளம் ஒன்றில் விளம்பரமும் செய்தேன்.

வீடு வாடகைக்குக் கேட்டு பலர் தொடர்பு கொண்டனர். அதில் ஒரு பெண்ணை இறுதியாகத் தேர்வு செய்தேன். அவள் எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் மற்றொரு டவுன் பகுதியைச் சேர்ந்தவள். வேலை தேடி பெங்களூருக்கு வந்திருக்கிறாள் என்று அறிந்து கொண்டேன். அவளது பெயர் நித்யா. நித்யாவின் தோழமையான முகமும் சிரிப்பும் என்னைக் கவர்ந்தன. நீண்ட நாட்கள் பழகியதைப் போன்ற ஒரு உணர்வு அவளுடன் பேசும்போது ஏற்பட்டது.

நித்யா எனது பிளாட்டில் குடியேறினாள். இருவரும் எங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். அப்போதுதான் என் நெருங்கிய தோழி அவளுக்கும் தோழி என்று அறிந்து கொண்டேன். இருவரும் அந்த வார இறுதியில் சினிமா சென்றோம், மாலில் உணவு உண்டோம். அருமையாகப் பொழுதைக் களித்தோம். இரவு களைப்பாக குட் நைட் சொல்லிவிட்டு என் அறைக்கு வந்து படுக்கையில் விழுந்ததுதான் தெரியும் மறுநாள் காலை ஏழு மணிக்கு அலாரம் அடித்ததும் தான் எனக்கு உணர்வே வந்தது.

நான் அலுவலகத்திற்கு ரெடியாகி வந்தபோது ஹால் சோபாவில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் நித்யா. டிவி வேறு ஓடிக் கொண்டிருந்தது. நான் டிவியை நிறுத்திவிட்டு அவளுக்கும் சேர்த்து காலை உணவு தயாரித்துவிட்டு அலுவலகத்திற்கு சென்றேன்.

அதன் பிறகு சென்ற சில நாட்களில் நான் தினமும் கவனித்தது என்னவென்றால் இரவு நித்யா ஹாலில் இருக்கும் சோபாவிலேயே தூங்குகிறாள். அதுவும் டிவியை போட்டபடியே தன்னை மறந்து களைத்து உறங்குகிறாள். நான் டிவியை நிறுத்துவது கூட அவளுக்குத் தெரியவில்லை. அவளை அறையில் சென்று தூங்குமாறு சொன்னாலும் மறுத்துவிடுகிறாள். ஒருவேளை தனியாகத் தூங்க பயம் போலிருக்கிறது. அதனால்தான் தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு சத்தத்தில் உறங்குகிறாள். பேசாமல் நம் அறையில் அவளை உறங்க சொல்லலாம் என்று முடிவு செய்து அவளிடம் சொன்னேன்.

ஹாலிலேயே உறங்குகிறேன் என்று மறுத்தவளைக் கட்டாயப்படுத்தி அந்த வாரம் இறுதியில் எனது அறையில் உறங்க சொன்னேன். இருவரும் பிளாட் காசிப்களைப் பேசிவிட்டு உறங்கவே நள்ளிரவாகிவிட்டது. மணி மூன்று இருக்கும் நித்யா கத்தும் ஒலி கேட்டுப் பதறி எழுந்தேன் "ஹேய் எதையும் தொடக் கூடாது. இங்கிருந்து போ. " என்று அறையின் மூலையைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தாள். அவளை உலுக்கிய வண்ணம் “நித்யா முழிச்சுக்கோ அங்கே யாருமே இல்லை பார்” என்று எழுப்பினேன். அவள் ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்தாள். “தூங்கு நித்யா” என்று அவளை உறங்க வைத்துவிட்டு பின்னர் நான் உறங்கினேன்.

மறுநாள் காலை நான் எழுந்த போது நித்யா தனது உடமைகளைப் பேக் செய்து கொண்டிருந்தாள். “அக்கா உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பல நான் ஊருக்குப் போறேன்” என்றவளைத் தடுத்து நிறுத்தி வீட்டில் தங்க வைத்தேன்.

“நான் இருந்தா உங்களுக்குத் தொந்தரவு தான் அக்கா” என்றவள் பையைப் பிடுங்கி என் அறையில் வைத்தேன். இருவரும் வெளியே சென்றோம். இரவு உணவை முடித்ததும் எனது அறைக்கு சென்று உறங்கினோம். அன்று இரவு மூன்றரை மணிக்கு நித்யாவின் அலறல் கேட்டு விழித்தேன். “அந்தப் பையைத் தொடாதே. ப்ளீஸ் இங்கிருந்து போய்டு” என்று கத்திக் கொண்டிருந்தாள்.

அவளை உலுக்க அவள் என்னிடம் திரும்பி “நான் தூக்கத்தில் உளறலை அக்கா” என்றாள் தெளிவாக. பின்னர் மீண்டும் கப்போர்டை நோக்கிக் கத்தத் துவங்கினாள்.

“நித்யா அங்க யாருமே இல்லயே”

“அந்த கப்போர்ட கிட்ட நிக்கிறான்” என்றாள்.

அவளது உளறலை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது அவளது பை தானாகத் திறக்க அங்கிருந்த துணிகள் அனைத்தும் தன்னால் வெளியே வந்து விழுந்தது கண்டு என் இதயமே நின்றுவிட்டது போல உணர்ந்தேன். மறுவினாடி வேகமாய் படுக்கை அறையை விட்டு வெளியே ஓடினேன். அங்கிருந்து நித்யாவை வெளியே வருமாறு அழைத்தேன். அதற்கு அவளோ

“யூஸ் இல்லக்கா அவன் எங்க போனாலும் வருவான்” என்றாள் பின்னர் எனது அறைக் கதவு வேகமாக டமாரென சாத்த அந்த ஓசையைக் கேட்டபடி நான் மயங்கி விழுந்தேன்.

மறுநாள் காலை விழித்து எழுந்ததும் முதல் நாள் இரவு சம்பவங்கள் நினைவுக்கு வர, எனது அறையைத் திறந்து பார்த்தேன். நித்யா அசந்து போய் உறங்குவதைக் கண்டால் நான் முதல் நாள் கண்டது கனவோ என்ற எண்ணம் எனக்கு மேலிட்டது. எனது போனை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த நான் எனக்கும் நித்யாவுக்கும் பொதுவான எனது தோழியை அழைத்து முதல் நாளிரவு நடந்த சம்பவத்தை விவரித்தேன்.

"நீ பார்த்தது எல்லாம் உண்மை. நித்யா கூடவே அந்தப் பையன் இருக்குறது உண்மைதான்.

ஒரு நாள் நித்யா ஹைவேஸ்ல போய்ட்டு இருந்தப்ப ஒரு ஆக்சிடென்ட்டைப் பார்த்திருக்கா. கணவன் மனைவி அவங்க ஆறு வயது மகன். நித்யா ஆம்புலன்ஸ் ஏற்பாடு பண்ணி அவங்களைக் கூட்டிட்டுப் போற வழியில் இரண்டு பெரியவர்களும் இறந்து போக பையன் மட்டும் கோமாவுக்குப் போயிட்டான். அப்பறம் டாக்டர் எல்லாம் பெருமுயற்சி செஞ்சு அவனைப் பிழைக்க வச்சாங்க. அந்த சமயத்தில் நித்யா தினமும் அவனைப் பாக்கப் போவா. அவனும் பிழைச்சு கிட்டான். நித்யா தினமும் அவன் கூடத்தான் இருந்தாள் . அவனும் அவளை அக்கான்னு கூப்பிட்டான். ஆனால் திடீருன்னு ஒருநாள் யாருமே எதிர்பாராத விதமா அவன் இறந்துட்டான். அவனை நினைச்சு நித்யா கதறி அழுதுட்டு இருந்தப்ப ஒரு குரல் அவகிட்ட “அக்கா அழாதிங்க நான் உங்க பக்கத்தில் தான் நிக்கிறேன்” சொன்னதைக் கேட்டு அவ அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தா அங்க அந்தப் பையன் நின்னுட்டு இருந்திருக்கான்.

அன்னைல இருந்து அவன் தினமும் ராத்திரி ஆனால் நித்யாவை எழுப்பி விட்டு விளையாடக் கூப்பிடுறான். இதனால் அவளுக்கு ராத்திரிகளில் தூக்கமே இல்லை. அவ சில சமயம் எரிச்சலில் கத்தினா பக்கத்தில் இருக்கும் பொருள் எல்லாத்தையும் தூக்கி எறியிறான். இவனுக்கு பயந்துட்டுத்தான் பெங்களூர் வந்தாள் இருந்தும் அவனும் கூடவே வந்துட்டான் போலிருக்கு. அவன் என்னைக்கு அவளை விட்டுப் போறானோ அன்னைக்குத்தான் அவளுக்குத் தூக்கம்" என்றான் அவன்.

அவளது கதையைக் கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. இப்போதுதான் நித்யாவிற்கு எனது துணை கண்டிப்பாகத் தேவை. நித்யாவிடம் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நீ இங்கு தங்கலாம் என்று சொன்னேன்.

இன்றும் நித்யாவின் தாய் அவளது பிரச்சனையின் தீர்வைத் தேடி மருத்துவர்களிடமும், மாந்த்ரீகர்களிடமும் அலைந்துக் கொண்டிருக்கிறார். நித்யாவும் இரவு ஷிப்ட் வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறாள் நான் என்று இவளது பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியான இரவு உறக்கம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

1 Like

இ.கிட்டத்தட்ட இதே மாதிரி கதை ஒன்று படித்த நினைவு. கிராமத்தை சேர்ந்த. இளைஞன் தான் காதலித்த. பெண்ணுடன் திருமணம் என்ற சந்தோஷத்துடன் டவுனுக்கு செல்லும் வழியில் விபத்தில் இறந்து அந்த பெண்ணை ஒரு தலையாய் காதலித்த இன்னொரு பையைனின் உடலில் புகுந்து விடுவான். அவனும் அந்த விபத்தில் இறந்து விடுவான். நித்யா கடவுள்அருளால் அந்த குட்டிப்பையன் சீக்கீரம் அவளை விட்டு விலகிடுவான்.

2 Likes

இது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே! :cold_sweat::smiley: