கரிசல்காரனின் சிறுகதைகள்

கரிசல்காரனின் சிறுகதைகள்
0

பரண் மேல் ஒரு கடிகாரம்

ப்பொழுதும் மக்கள் கூட்டமாக திரியும் பஜார் சாலை அன்று சற்று வெறிச்சோடி ஞாயிற்றுக்கிழமை கிழமை என்பதை சொல்லாமல் சொல்லியது.

அது பங்குனி மாதமாதலால் மாரியம்மன் கோவில் திருவிழா கலை ஊரெங்கும் மஞ்சள் வர்ணம் பூசிக்கொண்டது.கோவிலுக்கு வரும் பெண்கள் குழு குழுவாக சென்றுகொண்டிருந்தனர்.அவர்கள் கைகளில் மஞ்சள் நீரால் நிறைந்த வெண்கல செம்புகள் இருந்தன.சில சிறு வயது பெண்கள் அவர்களுக்கேற்றவாறு பிளாஸ்டிக் குடங்களில் வேப்பிலையை மிதக்கவிட்டுச் சென்றனர்.

ஆங்காங்கே ‘’ ஆஹோ அய்யாஹோ ‘’ கரகோஷமும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.நான் ரோஜா பீடி ஸ்டோர்ஸ்க்கு அடுத்து இருந்த இமயன் வாட்ச் கடை வாசலில் நின்றுகொண்டிருந்தேன்.

இன்று ஏன் இன்னமும் கடை திறக்கப்படவில்லை என்ற கேள்வியை எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன்.எப்படியும் ஒன்பது முப்பதுக்குள் கடைக்காரர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை என்னை இங்கு காத்திருக்கச் செய்தது. ஒன்பது முப்பது ஆக இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கிறது என்பதை ரோஜா பீடி ஸ்டோர்ஸில் கேட்டு தெரிந்துகொண்டேன்.

இந்நேரம் என்னிடம் மட்டும் வாட்ச் இருந்தால்,ரோஜா பீடி ஸ்டோர்ஸிடம் என்ன யாரிடமும் மணி கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.மாறாக என்னிடம் தான் எல்லோரும் மணி கேட்டு செல்வார்கள்.அப்பாவிடம் கடந்த ஆறு மாதமாக வாட்ச் கேட்டுகொண்டிருக்கிறேன்.அவர் வாங்கி தருவதாய் கூறி காலத்தை கடத்தியது தான் மிச்சம்.

அந்த வாட்ச் இருநூற்று நாற்பது ரூபாய்.நான் தினமும் பஜாரை கடந்து பள்ளிக்கு செல்கையில் இமயன் வாட்ச் கடையை கவனிக்க தவறியதில்லை.கடைக்கார அண்ணாச்சி வட்டமாக சிறியதாக உள்ள பூதக்கண்ணாடியை கண்ணில் வைத்துகொண்டு,கையில் உள்ள வாட்சில் எதையோ பார்த்துகொண்டிருப்பார்.அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு முன்னால் உள்ள ஷோகேஷ் முன் புறம் கண்ணாடியாக இருக்கும்.அதில் தான் அந்த வாட்ச் இரண்டாவது வரிசையில் நான்காவதாக இருந்தது.

ஒரு முறை சனிக்கிழமை மதியமே பள்ளி முடிந்துவிட்டது.நானும் ஐயப்பனும் வீட்டிற்கு நடந்துப் போய்கொண்டிருந்தோம்.அப்போது கடை முன்னால் நின்று ஐயப்பனுக்கு அந்த வாட்சை காண்பித்தேன். ஐயப்பனுக்கும் அந்த வாட்ச் பிடித்திருந்தது.நானும் அவனும் கடைக்கார அண்ணாச்சியிடம் அதன் விலையை கேட்டோம்.அவர் ஒரே போடாக இருநூற்றி நாற்பது என்று சொல்லிவிட்டார்.

விலை அதிகம் தான் என்றாலும் அதை வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. அதற்காக தினமும் அப்பா கொடுக்கும் இரண்டு ரூபாயை சேகரித்து இருநூற்றி முப்பது ரூபாய் சேகரித்து விட்டேன்.இடையில் ஒரு முறை பரீட்சை வந்தது நல்லதாகப் போயிற்று. முதல் முறையாக நான் பரீட்சை வந்ததற்காக சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

பரீட்சை நாட்களில் அப்பா தினமும் ஐந்து ரூபாய் கொடுப்பார்.செலவுக்கு இரண்டு ரூபாய்.பரீட்சைக்கு பேப்பர்,கிராப்,மேப் வாங்க மூன்று ரூபாய்.வாட்ச் வாங்குவதற்கு ஆசைப்பட்டு மூன்று ரூபாய்க்கு வாங்க வேண்டிய பேப்பரை மிச்சம் பிடித்தேன்.ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு பேப்பர் வாங்கி விட்டு மீதி ஒரு ரூபாய் ஐம்பது பைசாவை ஐந்து நாட்களுக்கு சேகரித்தேன்.

அப்படி பரீட்சை பேப்பரை மிச்சப்படுத்தி பரீட்சை எழுதியதால், சமூக அறிவியலில் பெயிலாகி விட்டேன்.பெயில் ஆகியதற்காக எனக்கு வீட்டில் பலத்த வரவேற்பு வேறு.ப்பா… காதில் ரத்தம் வரும் அளவிற்கு திட்டும்,அறிவுரையும்.

அதற்காக நான் பெரிதாக கவலைபட்டுக் கொள்ளவில்லை.அது கவலைபடக் கூடிய விஷயமும் அல்ல.என் கையை அழகூட்டும் வாட்சிற்காக நான் பெயில் ஆனதில் ஒன்றும் தவறில்லை.

ஒரு வழியாக இந்த இருநூற்று நாற்பது ரூபாயை சேர்ப்பதற்கு எனக்கு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.எப்படியாது அந்த வாட்சை வாங்கி விட்டால் போதும் என்று இருந்தது.

நான் வாட்ச் வாங்குவதற்கு முக்கிய காரணம் சாமிநாதன்.அவன் ஒரு கருப்பு நிற வாட்ச் கட்டியிருப்பான்.அதை வைத்துக் கொண்டு அவன் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை.
அவனிடம் வாட்சில் மணி கேட்பதற்காகவே சிலர் பேசுவர்.பி கிளாஸ் சந்தியா ஒரு முறை அவன் வாட்சில் லைட் எரிவதை ஆச்சிரியமாக பார்த்ததை நானே பார்த்தேன்.
அவன் கட்டியிருக்கும் வாட்சை விட நான் வாங்கும் வாட்ச் இன்னும் நன்றாக இருக்கும்.அந்த வாட்சின் இடது பக்க மேல் பட்டனை அழுத்தினால் சிறிதாக குதிரையும்,மானும் ஓடும்.
இந்த வாட்சை வாங்குவதற்காக நான்கு மாதங்களுக்கு திண்பன்டங்களை நான் தியாகம் செய்ய வேண்டியிருந்தது.ஐயப்பன் தான் அவன் வாங்குவதில் அவ்வப்பொழுது சிறிது தருவான்.பிரதர் கடை பழரசம், கேண்டீன் சக்கர அப்பளம்,குண்டண்ணன் கடை டியூப் ஐஸ் என இவற்றின் வாசம் நாசியை பதம் பார்க்கும்.இருந்தாலும் வாட்ச் என் நினைவில் வந்து என்னை கட்டுபடுத்துவதில் வஞ்சகம் பார்ப்பதில்லை.

கடைக்கார அண்ணாச்சி சைக்கிளை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார்.எதுவும் கேட்கவில்லை.கால்சட்டையில் இருந்த கொத்துச் சாவியை எடுத்துப் பூட்டை திறந்தார்.ரோலிங் ஷட்டர் மேலேறும் சப்தம் சின்னதாக எரிச்சலூட்டிச் சென்றது.நான் கடைக்குள் நுழைந்தேன்.கடை முழுதும் சுவர்க் கடிகாரங்களும்,கைக்கடிகாரங்களுமாய் இருந்தன.

‘’ என்னப்பா தம்பி ? ‘’ அண்ணாச்சி கனத்த குரலில் கேட்டார்.

‘’ இந்த ப்ளூ கலர் வாட்ச் வேணும் ‘’ வலக்கையை வாட்ச்சை நோக்கி நீட்டினேன்.

‘’ நீ மட்டும் வந்துருக்க.பெரியவங்க யாரும் வரலையா ? ’’ என வாட்சை எடுத்துக்கொண்டே கேட்டார்.

‘’ இல்ல ‘’ சிறிது நடுக்கமானேன்.

வாட்சை கையில் எடுத்தவர் சரியான நேரத்தை அமைத்து கொடுத்தார்.நான் பையில் இருந்த சில்லறையை எடுத்துக் கொடுத்தேன்.

‘’ சேத்து வச்சியா ? ‘’

‘’ ம்ம் ‘’

அவர் இரண்டு ரூபாய் நாணயங்களை ஐந்து ஐந்தாக எண்ணினார்.நான் எதிர்பார்த்ததைவிட வேகமாக எண்ணினார்.சில்லறை சரியாக இருக்கிறது என்றவுடன் அங்கிருந்து நகர்ந்தேன்.

கையில் வாட்சை கட்டிப் பார்த்தேன்.என் கரு நிற தேகத்துக்கு ப்ளூ கலர் எடுப்பாய் தெரிந்தது.இடது பக்கம் மேலிருக்கும் பட்டனை அழுத்தினேன்.மஞ்சள்,சிவப்பு நிற லைட்டுகளோடு நேரத்திற்கு மேலாக சிறிதாக குதிரையும்,மானும் ஓடியது.இதை சாமிநாதனிடம் காட்டவேண்டும்.அவன் எப்படியும் சந்தியாவிடம் சொல்லுவான்.சந்தியா என்னிடம் மணி கேட்பாள்.
இது போக ஒவ்வொரு பீரியட் முடியும் போது மற்ற மாணவர்கள் என்னிடம் மணி கேட்பார்கள்.எனக்கு நினைக்கும் போதே பெருமையாக இருந்தது.உலகமே என்னையும் என் வாட்சையும் பார்த்துக்கொண்டு இருப்பதாக தோன்றியது.
நேராக முதலில் வீட்டிற்கு போக வேண்டும்.அம்மா வேறு தேடிக் கொண்டிருப்பாள்.வீட்டிற்கு விரைந்து கொண்டிருக்கும் போது தான் அப்பாவின் ஞாபகம் வந்தது.அப்பா வாட்ச் எப்படி வந்தது ? என கேட்டால் என்ன சொல்வது.சேர்த்து வைத்து வாங்கினேன் என்று சொன்னாலும் திட்டுவார்.என்னிடம் கேட்காமல் ஏன் வாங்கினாய் என்று கடிந்துக் கொள்வார்.
போன வருடம் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது பபிள்காம் வாசம் வீசும் பேனாவை ஐந்து ரூபாவிற்கு வாங்கியதற்கே பயங்கரமாக திட்டிவிட்டார்.இந்த முறை இருநூற்றி நாற்பது ரூபாய் வாட்ச். தோலை உரித்துவிடுவார் என்ற பயம் இதய ஓட்டத்தை அதிகரிக்க செய்தது.வாட்சை கழட்டி டவுசர் பையில் போட்டுக் கொண்டேன்.
அதை ஒளித்து வைக்க புத்தகப் பையை விட சிறந்த இடம் கிடைக்காது.தினமும் வகுப்பில் கட்டிக்கொள்ளலாம்; வீடு திரும்பும் சமயம் புத்தகங்களுக்கு இடையில் வைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு செயல்படுத்தினேன்.ஒரே ஒரு நாள் மட்டும் ஐயப்பன் கேட்டான் என்று இரவல் கொடுத்தேன்.நான் எதிர்பார்த்தது போலவே சந்தியா என் வாட்சில் லைட் அமிழ்த்து பார்த்து மான் ஓடுவதை பார்த்து சிரித்தாள்.
’’ நீ கூட புள்ளிமான் மாதிரி தான் இருக்க ’’ என சொல்லவேண்டும் போல் இருந்தது.ஆனால் சொல்லவில்லை.அவள் இப்போதெல்லாம் என்னிடம் அடிக்கடி பேசுகிறாள்.சாமிநாதனுக்கு பொறாமை பொங்கியிருக்கும்.
அவன் என்னிடம் எந்த கடையில் வாங்கினாய் என்று விசாரித்தான்.ஒரு வேளை அவன் இதை விட நல்ல வாட்ச் வாங்கினாலும் வாங்கிவிடுவானோ என்ற பயம் சுழன்றுகொண்டே இருந்தது.அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது அம்மா எனக்காக பள்ளி வாசலில் காத்துக்கொண்டிருந்தாள்.
அவள் கோவிலுக்கு போய்விட்டு என்னை அழைத்துப் போக வந்திருக்கிறாள்.அம்மா இது போன்று என்றாவது ஒரு நாள் திடீரென்று தான் வருவாள்.வாட்சை மறைத்துக் கொண்டே வீட்டிற்கு வருவதற்குள் எனக்கு போது போதும் என்றாகிவிட்டது.
இப்படி பயந்து பயந்து வாட்சை கட்டிகொள்வது எனக்கு வெறுப்பாக இருந்தது.ஆசையாக வாங்கியதை அணைக்கலாம்.ஆனால் அடைக்கக் கூடாது.அடுத்த வருடம்ஆறாம் வகுப்பிற்காக பெரிய பள்ளிக்கூடம் போகும் போது அப்பாவிடம் சொல்லிவிடலாம் என்று எண்ணினேன்.அவர் என்ன சொன்னாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சலும் எனக்குள் ஒட்டிக்கொண்டது.
அம்மா வெளியில் போகும் வரை காத்திருந்து,அம்மா போன பின் டவுசர் பாக்கெட்டில் இருந்த வாட்சை எடுத்தேன்.எங்கு ஒளித்து வைக்கலாம் என பாதுகாப்பான இடம் தேடினேன்.இந்த முறை நிச்சயம் புத்தகப்பை பாதுகாப்பாக இருக்காது என புரிந்தது.கடைசியாக பரணின் மேல் இருந்த பழைய பாத்திரம் ஒன்றை தூக்கி அதனுள் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தேன்.
“அங்க என்னடா பண்ற” அப்பாவின் அரட்டல் சத்தம் கேட்டு வாட்ச்சை கீழே விட்டுவிட்டேன்.அப்பா கீழே விழுந்த வாட்ச்சை கூர்மையாக கவனித்தார்.“ஏதுடா இது எங்க இருந்துடா திருடிட்டு வந்த;அங்க எதுக்குடா ஒளிச்சுவைக்குற” என அப்பா என்னை அடிக்க ஆரம்பித்தார்.என் அலறல் சத்தம் கேட்டு அம்மா ஓடி வந்தாள்.
" அடியே உன் புள்ள எங்க இருந்தோ வாட்ச திருடிட்டு வந்துருக்காண்டி.எல்லாம் உன் வளப்பு தாண்டி.உன்ன தாண்டி அடிக்கனும்." இப்போது அம்மா எகிறிக் கொள்ள ஆரம்பித்தாள்.
" சும்மா என்னையே சொல்லாதீங்க.ஏன்,அவன் உங்களுக்கு புள்ள இல்லையா? "
அவர்கள் வாதம் இன்னும் முடியவில்லை.முடிந்தாலும் அந்த வாட்ச் எனக்கு கிடைக்கப் போவதில்லை.கொடுத்து வைத்தவை என் வீட்டு குப்பைத் தொட்டி.உடைந்த வாட்சின் சில்லுகளாது அதற்கு கிடைக்கும்.அம்மா அப்பாவின் பலமான சண்டை சப்த்தத்திற்கு நடுவே என் மனதில் வந்த மெல்லிய வலி நீங்கள் உணரக்கூடியதாக இருக்கப்போவதில்லை.வாட்ச் இல்லாத என்னிடம் இனி சந்தியா எப்படியான உரையாடலை மேற்கொள்ளவாள் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

4 Likes

அருமையான கதை சகோ, ஒரு கை கடிகாரத்தில் இத்தனை இருக்கிறது என்று நீங்கள் கூறி தான் தெரிகிறது. :purple_heart:

2 Likes

நன்றி தோழர் @Gowri_Muthukrishnan

1 Like

அப்பா அம்மாவின் பலமான சண்டை சத்தத்திற்கு இடையே… அந்த கைக்கடிகாரத்தின் உடைந்த சில்லுகளைப் போலவே மெலிதாய் உடைந்து சிதறிக் கொண்டிருந்த அந்த சிறிய இதயத்தின் வலி நிச்சயம் உணரக் கூடியதாகவே இருந்தது… :cry: அருமையான பதிவு சகோ… :+1:

2 Likes

சிறு வயதில் எல்லோருக்குமே சில பொருட்கள் மீது ஆசை இருக்கும். அதை எப்படியாவது அடைந்து விடத் துடிப்போம். இந்த சிறுவன் கடிகாரத்தின் மீது கொண்ட மோகத்தில் திருட எண்ணாமல் கடினப்பட்டு காசு சேமித்து வாங்கியும் அதை அனுபவிக்க முடியாமல் போன வலி வாசிப்பவரால் நிச்சயமாக உணர முடிகிறது.

எமது பல பெரியவர்கள் விடும் தவறு இது. என்ன ஏது என்று சரியாக விசாரிக்காமல் உடனடியாக தப்பு செய்ததாகப் பிள்ளைகளைப் போட்டு அடிப்பது. பிள்ளைகளில் முதலில் நம்பிக்கை வைத்துத் தீர விசாரிக்க வேண்டும் என்பது கூட இந்தக் கதையில் கிடைக்கும் ஒரு படிப்பினை.

அருமையான கதைக்கு வாழ்த்துக்கள் சகோ.

2 Likes

Arumaiyaga irundadu sissy…

2 Likes

சிறந்த கதை நடை.

சிறுவயதில் காசு சேர்த்து வைத்து பொருட்கள் வாங்கும் ஞாபகம் படிக்கும் அனைவருக்குமே வரும்.

பயந்து பயந்து ஒளித்து வைத்த நினைவுகள் நெஞ்சினில் தோன்றும்.

கிடைக்காத பொருளுக்கு ஏங்கும் உள்ளத்தின் வலிகளை அருமையாக சொல்லியுள்ளீர்கள்

1 Like

ஜூடித் :heart:

" இது சரிபடாது ஜூடித்.இது செட் ஆகும்னு எனக்கு தோணல.உன் மேல எனக்கு லவ் தாட் இல்ல "

தருணின் மறுப்பு ஜூடித்திற்கு ஏமாற்றத்தை சேர்த்தது.ஜூடித் மனம் மெல்லிதாக படபடத்தாலும் காரணத்தை கேட்க முற்பட்டாள்.

உனக்கு ஏன் என்ன புடிச்சுருக்கு ஜூடித்?? " தருண் முந்திக் கொண்டான்

உனக்கு ஏன் என்ன புடிக்கல தருண்?? " இதற்கு மேலும் ஜூடித்தை சமாளிக்க முடியாது என்று தெரிந்துக் கொண்ட தருண்.

" உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாதா போடி அங்கிட்டு "என சத்தமாக கத்திவிட்டுச் சென்றான்.

ஜூடித்தை அவமானமும் வருத்தமும் ஏமாற்றமும் தவணை முறையில் மாற்றி மாற்றி தாக்கின.மல்லிகா அவள் கைகளை இறுக்கமாகப் பிடித்து ஆறுதல் கூறினாள்.

ஜூடித்தின் வாட்ஸ்அப் குறுஞ்செய்திக்கும்,அழைப்புகளுக்கும் தருணிடமிருந்து பதில் இல்லை. அன்றிரவு ஜூடித் இரண்டு மணி வரை தூங்காமல் தருண் சொன்ன வார்த்தைளை திரும்ப திரும்ப நினைவுகளில் கோர்த்துக் கொண்டாள்.பின் அவளை அறியாமல் தூங்கிப் போனாள்.காலை எழுகையில் மணி எட்டு முப்பதை தாண்டியிருந்தது. புதினாவின் புத்துணர்ச்சியை தரும் பற்பசையால் பற்களை சுத்தம் செய்துகொண்டே கண்ணாடியைப் பார்த்தாள். அரைத் தூக்கத்திலும் முழுதாக களைந்த கூந்தல் அவளுக்கு அழகாகவே இருந்தது. அதை ரசிக்கத் தொடங்கிய சில நொடிகளுக்குள் தருண் நினைவில் வந்து குட் மார்னிங் சொன்னான்.இந்த முகத்தைத் தானே பிடிக்கவில்லை என்று சொன்னான்.ஒரு நிமிடம்,இது சரிப்படாது என்று தானே சொன்னான்.பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே என தருண் சொன்னவற்றை நினைவுப் படுத்திக் கொண்டாள்.

அலுவலகத்திற்கு கிளம்பி நடந்து சென்றிருக்கும் போது அவளை உரசினவாக்கில் ஒரு பைக் நின்றது.கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்த தருண்,ஜூடித்தை பைக்கில் ஏறி அமருமாறு சைகை செய்தான்.பூத்த மலர் மீண்டும் மொட்டானது போலும் ! ஜூடித் ஆச்சர்யர்மும் மகிழ்வும் ஒருங்கே கொண்டு,இந்த உலகிலே தனக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் பயணிப்பதாய் எண்ணிக் கொண்டாள்.எதற்காக இன்று என்னை பைக்கில் ஏற்றிக் கொண்டான்.என் காதலை ஏற்றுக் கொண்டுவிட்டானோ?? அப்படியானால் ஏன் இன்னமும் ஏதும் பேசாமல் இருக்கிறான் ?? ஜூடித்திற்கு தலையே வெடித்துவிடும் போலிருந்த து.மனத்தில் இருந்த புன்னகையை மறைத்து விட்ட என்ன தருண் மூச்சு விடுற சத்தத்த கூட காணோம் ?? என சாதாரனமாக ஜூடித் கேட்கும் போது அவர்களிருவரும் அலுவலக வாயிலை அடைந்திருந்தார்கள்.

ஜூடித்தின் இறங்குதலுக்காக காத்திருந்த தருண்,ஜூடித் இறங்கியதும் அவள் பக்கம் தலையை திருப்பாமலேயே பார்க்கிங்கிற்கு சென்று பைக்கை நிறுத்திவிட்டு அவனுடைய இருக்கையில் சென்று அமர்ந்தான்.ஜூடித் சில நிமிடங்களுக்கு ஒரு முறையென பல முறை பார்த்துவிட்டாள்.ம்ஹூம்,தருண் அவளை தவிர எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தான். தனக்காக ஒரே ஒரு முறை தருணிடம் பேசிவருமாறு மல்லிகாவிடம் ஜூடித் கேட்டுக்கொண்டாள்.மல்லிகா தருணிடம் சாதரணமாக இரண்டு வார்த்தை பேசிவிட்டு ஜூடித்தை பற்றி பேச்சு எடுத்தாள். தருண் முடியவே முடியாது என்பது போல் தலையசைத்ததை ஜூடித் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.ஜூடித் அவனை ஏன் காதலித்தோம் என தன்னையே நொந்துக் கொண்டாள்.

இந்த உலகில் காதலை விட காயப்படுத்துவதென்று எதுவும் இல்லை.மகிழ்ச்சியும் எதுவும் இல்லை.காதலுக்கு மட்டும் ஏன் இரண்டு முகங்கள் இருக்கின்றன.அது பெரும்பாலவர்களுக்கு தோற்றுப் போன முகத்தையே காட்டுகிறது.அந்த முகம் அழகானது.எத்தனையோ காயங்களைக் கொண்டிருக்கும் அந்த முகம் யாருடனும் அதை பகிர்ந்துக் கொள்வதில்லை. அத்தகைய முகங்களை கொண்டவர்களில் இப்போது ஜூடித்தும் ஒருவள்.

தருண் மேல் எப்போது எப்படி காதல் வந்த்து என்று அவளுக்கு தெரியவில்லை.ஆனால்,அவனுடனான காதல் சுகமாய் இருந்தது. இதுவரையில் எந்தவொரு பாடலும் கொடுத்திராத மகிழ்வைத் தந்த்து.அவனுடன் கோவிலுக்கு செல்வது,மீன் வாசம் வீசும் உப்புக் காற்றின் துணையோடு கடற்கரையில் அமர்ந்து பேசுவது.இதுபோல் இன்னும் சில காட்சிகளை மனதில் இயக்கிக் கொண்டிருப்பாள்.இவையெல்லாம் நடக்காத காரியங்கள் தான்.இருந்தபோதும் மணிரத்னமும்,கௌதம் மேன்னும இயக்கிராத தன் காதலை அவள் ஒத்திகைப் பார்ப்பதில் அவளுக்கொரு ஆனந்தம்.ஆனால், தருண் தன்னை இப்படியொரு சோகத்தில் தன் காதலை முறித்துவிடுவான் என தெரியாமல் கூட ஜூடித் நினைக்கவில்லை. அலுவலகம் முடிந்த வெளியேறும் வேளையில் ஜூடித் என குரல் கேட்டதும் திரும்பினாள்.

ஜூடித் முன்னே நின்ற தருண்,கடற்கரைக்கு அவளை அழைத்தான்.ஜூடித்திற்கு என்ன பதில் சொல்லவது என்று தெரியவில்லை.போகலாம் என்று தோன்றினாலும் ஒரு பக்கம் ஏதோ ஒன்று உள்ளுக்குள்ளே பயத்தை ஏற்படுத்தியது.சரி போகலாம் என்றவள் துப்பட்டாவை சரி செய்தவாறு பைக்கில் ஏறி அமர்ந்தாள். அவள் நினைவில் வந்த அதே கடற்கரை,அதே மீன் வாசம். “இப்ப நம்மள பாத்தினு போறவங்க நமக்குள்ள என்ன ரிலேஷன்ஷிப்னு நெனப்பாங்க ??” நாணத்துடன் மணலை உலப்பிக் கொண்டிருந்த ஜூடித்தைப் பார்த்து கேட்டான்.

"கண்டிப்பா லவ்வர்ஸ்னு தான் நெனப்பாங்க " பதிலை சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நான்கு நொடியில் தருண் தன்னை காதலிக்க ஆரம்பித்ததாக எண்ணிக் கொண்டாள்.

" ஆனா அது உண்ம இல்ல ஜூடித்" தருண் ஜூடித்தைப் பார்த்தான்.

ஜூடித்திற்கு இப்போது மீன் வாசம் கருவாடு வாடை போல் இருந்த்து. இந்த மணல் எல்லாம் சுடுவது போல் இருந்தது. ஜூடித்திடம் இந்த கேள்விக்கான பதிலை சொல்ல பலம் இல்லை என்பதை புரிந்துக்கொண்ட தருண் தொடர்ந்தான். தனக்கு பெங்களூரில் புதிய வேலை கிடைத்திருப்பதாகவும்,இரண்டு நாட்களில் கிளம்ப போவதாகவும் சொன்னான்.ஜூடித் எதுவும் பேசவில்லை.தான் ஏற்கனவே ஒருவளை காதலித்ததாகவும், அதன் ஏமாற்றத்திலிருந்தே இன்னம் மீள முடியாமல் தவிப்பதால் உன் காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும், என்னுடைய உடைந்த மனதை உன்னால் ஒட்ட வைக்கும் முடியும் என்றாலும்,அதிலிருக்கும் விரிசலை உன்னால் சரி செய்ய முடியாது என்றான்.ஜூடித்தின் மௌனம் கலையாமல் இருந்தது. தருணும் அவள் மௌனத்தில் கலந்து கொண்டான்.

இருபது நிமிடங்களாக பொறுத்திருந்த தருண் கிளம்பலாமா என ஜூடித்திடம் கேட்டான். எழுந்து நின்ற ஜூடித் தருணை கட்டிக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்தாள்.

" உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் தருண்.நீ இல்லாம என்னால இருக்க முடியாது.நீ எங்க வேணும்னாலும் போ.ஆனா என்ன புடிக்கும் சொல்லிட்டு போ" என்றபோது தருணின் சட்டையில் ஜூடித்தின் கண்ணீர் துளிகள் அடங்கியிருந்தன. இப்படித்தானே அவள் மடியில் படுத்து நான் அழுதேன்.அதே வலியை உனக்கு நானே கொடுத்துவிட்டேனே.என்ன செய்வது அவளிடம் இருந்தும் என்னை மீட்க முடியவில்லை.உன்னிடமும் அடைக்கலமாக முடியவில்லை என தருண் தன்னையே நொந்துக்கொண்டான்.

நாட்கள் ஓடின.தருண் பெங்களூர் போனான்.ஜூடித் நொந்து போனாள்.தருண் சிறிது நாள் ஜூடித்தை சமாதானம் செய்தான். அவள் அவனின் சமாதானத்தை ஏற்பதாய் இல்லை.அவனிடம் கெஞ்சினாள்.காலில் கூட விழுவதாய் கேட்டாள்.அவளது கெஞ்சல்களும்,அழுகையும் தருண் மனதின் கல்லை கரைத்தாலும் மீண்டும் காதலிக்க அவனால் முடியாது.அவனுடைய உறவுக்கார பெண் ஒருத்தியை அவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.இதை ஜூடித்திடம் சொல்லிவிட்டு,இனி தன்னிடம் இது போன்று பேசுவதை நிறுத்திவிடவும் என்றான்.இதைக் கேட்ட ஜூடித் எதுவும் பேசவில்லை. அழைப்பைத் துண்டித்தாள்.

இரவெல்லாம் தூக்கம் இல்லை.அலுவலகப் பணிகளில் கவனம் இல்லை.தருணை தன்னிலிருந்து தூக்கி எறிய மிகவும் சிரமப்பட்டாள்.அவள் அதிலிருந்த்து மீளுவதற்கு ஒரே ஒரு சக்தி தான் கைக் கொடுத்தது.
காதல் சாதாரமானது தான்.காதலை புனிதப்படுத்தும் இடத்தில் தான் பிரச்சனையாகிறது.அதுவும் துக்கம்,மகிழ்வு போல ஒன்று தானோ.ஒரு பின்னிரவில் ஜூடித் யோசித்தாள். எதற்காக அவன் பின்னால் இப்படி ஓடுகிறேன்.அவனிடம் இப்படி கெஞ்சுகிறேன்.இது காதல் தானா? வேறு எதுவும்? அவனைப் பிடிக்கும் தான்.அவனைக் காதலிக்கிறேன் தான்.ஆனால் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறேதே அது எங்கே போனது? இப்போது ஜூடித்திற்கு ஒரு சக்தி வந்தது.அந்த சக்தியோடுத் தூங்கிப் போனாள்.

ஆனால் அந்தக் தூக்கத்தின் இடையில் வந்த கனவில் அதே கடற்கரை,அதே மீன் வாசம்,உப்புக் காற்றின் துணையோடு தருணுடன் அமர்ந்து காதல் பேசிக் கொண்டிருந்தாள்.அவளது காதலில் இப்போது சுயமரியாதையும் கலந்திருந்தது.

  • கரிசல்காரன்.
1 Like

அருமையான கதை! ஒருதலைக் காதலில் பெண்ணின் மனவோட்டம் எப்படியிருக்கும் என்பதைத் தெளிந்த நீரோடையாய் அலசியிருக்கிறீர்கள்…
“ரணம் கொண்ட இதயத்தின் விளிம்பில் ஒரு சுயமரியாதை பூ பூக்கும்!”… இருப்பினும் தருணை இறுதிமூச்சு வரை ஜூடித் மறக்கப் போவதில்லை! காதல் வலி தந்தாலும் சுகமே! :heartpulse:

1 Like

அருமையான படைப்பு சகோ, பெண்ணின் ஒரு தலை காதலையும், அதற்காக அவள் படும் துயரங்களையும் அழகாக சூலி இருக்கிறீர்கள். அதனுடன் அவளுள் இருக்கும் சுய மரியாதையும் எழுப்பப்பட அந்த காதலை அவள் சுயமரியாதையோடு அணுகுவது இன்னும் சிறப்பு. :purple_heart: