கல்யாண கனவுகள் 24

கல்யாண கனவுகள் 24
0

கனவு - 24

ஒரு சுபயோக சுப தினத்தில், தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நெருங்கிய பந்துக்கள் சூழ, வைஷாலியின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டினான் கடம்பன்.

சஞ்சயன் தோளில் அமர்ந்திருந்த ஆயுஷ் அட்சதை தூவி வாழ்த்த அனைவர் மனமும் ஆனந்தத்தில் திளைத்திருந்தது.

கல்யாணத்தைப் பற்றி வைஷாலி கனவு காணும் போது அவள் கற்பனை செய்திருந்த எந்த விதமான கல் வேலைப்பாடுமற்ற சிவப்பும் தங்கநிறமும் கலந்த தூய பட்டுப் புடவையில் தங்கச் சிலையாக புதுப் பெண்ணாய் மின்னிக் கொண்டிருந்தவளின் காதுக்குள் அவள் ஆருயிர்த் தோழன்,

“அப்பிடியே அம்மனாட்டம் சூப்பரா இருக்கிறாய் முயல்குட்டி… நானே நாவுறு பார்த்திடுவன் போல இருக்குடி…”

என்றான். தோழனின் இனிமையான பாராட்டில் முகம் குப்பெனச் சிவக்க அழகாக வெட்கப்பட்டாள் வைஷாலி.

இரண்டாம் திருமணம் என்பது அவளால் அவ்வளவு இலகுவாக ஏற்கக் கூடிய விடயமில்லைத்தான். பழைய நினைவுகள் ஒரு நொடி வந்து செல்ல கலங்க முற்பட்ட கண்களைப் பிடிவாதமாகத் தடுத்து நிறுத்தினாள். குடும்பத்தினர் முகங்களில் தெரிந்த மலர்ந்த புன்னகை தான் எடுத்த முடிவு எவ்வளவு சரியானதென்பதை அவளுக்குத் தெளிவாகவே அறிவுறுத்தியது.

ஆயுஷுக்கு அம்மாவாக இலகுவில் ஏற்றுக் கொண்ட மனது கடம்பனுக்கு மனைவியாகக் கொஞ்சம் முரண்டு பிடித்தது தான். இருந்தாலும் வாயெல்லாம் பல்லாகத் திரியும் சஞ்சயனும் ‘அம்மா அம்மா’ என்று பூனைக்குட்டி போல அவள் காலைச் சுற்றி வரும் ஆயுஷும் அவள் மனக் குழப்பங்களைப் பின்தள்ளி அவளுக்கே ஒரு சந்தோசத்தைத் தந்தன எனலாம். எல்லாவற்றையும் விட அமைதியாய் அவள் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ளும் கடம்பன் அவளுக்குப் பெரும் நிம்மதியை அளித்தான். சடங்குகள் முறைப்படி நடந்தேற ஆரம்பத்தில் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல தளர்ந்தாள் வைஷாலி.

மாலையில் கடம்பன் தாய், தங்கை குடும்பத்தினரும், வைஷாலி குடும்பத்தினரும், சஞ்சயனும் மட்டுமே வைஷாலி வீட்டில் கூடியிருக்க பதிவுத் திருமணம் நடைபெற்றது. கண்ணுக்குக் குளிர்ச்சியான மெல்லிய செவ்விளநீர் நிறத்தில் மேலைத்தேய பாணியில் குதிக்கால் வரை நீண்ட சட்டையை அணிந்திருந்தாள் வைஷாலி. கருநீல நிற கோட்சூட்டில் கம்பீரமாய் நின்றிருந்தான் கடம்பன். வைஷாலி அருகில் ஆயுஷைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த சஞ்சயன் காதைக் கடித்தவள்,

“எனக்கு இந்தச் சட்டையைப் போட்டிருக்க வெட்கமாக இருக்குடா சஞ்சு…”

“நீதானே ரிசப்சனுக்கு இப்பிடி வெஸ்டேர்ன் ஸ்டைல்ல ப்ரொக் போட வேணும் என்று ஆசைப்பட்டாய்…”

“அடேய்…! அது சின்ன வயசில ஒரு ஆர்வக் கோளாறில ஆசைப்பட்டதுடா… இப்ப இந்த வயசில இது தேவையா…? சத்தியமா நீயும் உன்ர ப்ரெண்டும் சேர்ந்து பண்ணுற அளப்பறை தாங்க முடியலடா. சின்ன வயசில எல்லாப் பொண்ணுங்களுக்கும் தங்கட கல்யாண வீடு அப்பிடி நடக்க வேணும் இப்பிடி நடக்க வேணும் என்று ஆயிரம் ஆசைகள் இருக்கத்தான் செய்யும். நான்தான் அதை லூசு மாதிரி டயரில எழுதி வைச்சன் என்றால்… அதை வாசிச்சிட்டு இந்த வயசில நீங்கள் என்னைப் போட்டுப் படுத்துற பாடிருக்கே… அடங்குங்கடா… ப்ளீஸ்…”

கடம்பபனும் சஞ்சயனும் கல்யாணம் பற்றி அவள் கண்டிருந்த கனவுகளை ஒன்று விடாமல் நிறைவேற்றுவதாக கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். பாவம் அந்த நண்பர்கள்! கல்யாண நிகழ்வுகளை விட ஒரு பெண் கல்யாணம் செய்து வாழப் போகும் வாழ்க்கையைப் பற்றித் தான் ஆயிரம் கனவுகள் கண்டிருப்பாள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ? அதையும் நிறைவேற்றி வைப்பார்களா இவர்கள்?

சஞ்சயனோ அவள் கோபத்தையும் வெட்கத்தையும் பொருட்படுத்தாது,

“அப்பிடி உனக்கு என்ன வயசாகிட்டு வைஷூ…? எங்கட வயசில எல்லாரும் இப்பதானே கலியாணம் கட்டுறாங்கள்… உன்னை இந்த உடுப்பில பாக்க உண்மையாவே பத்து வயசு குறைஞ்சு சின்னப்பிள்ளையாட்டம் நல்ல வடிவா இருக்குடி…”

என்று சஞ்சயன் கூறவும்,

“உனக்கென்ன நீ சொல்லுவாய்…”

என்று நொடித்தாள் வைஷாலி. என்னதான் சிறு கோபம் காட்டினாலும் நண்பன் தன் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி மனம் நெகிழ்ந்து நின்றாள்.

“இனிமேல் நீ என்ன ஆசைப்பட்டாலும் உனக்கு என்ன கனவிருந்தாலும் அதை நிறைவேற்றுறதுதான்டி என்ர வேலை…”

காதுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தவனை வாஞ்சையுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ர கடவுளே…! என்னதான் கதைப்பினமோ தெரியாது… எப்ப பார்த்தாலும் ஏதாவது கதைச்சுக்கொண்டே இருக்கிறது… அத்தான்…! நீங்களாவது இவை ரெண்டு பேரையும் இனி அடக்கி வைத்து வேணும் சரியோ…? சரி… சரி… எல்லாரும் கொஞ்சம் போட்டோஸ்க்கு போஸ் குடுக்கிறியளா…?”

விசாலி மேடிட்ட வயிற்றைப் பிடித்தபடி கடுப்பாகிக் கத்தவும் சஞ்சயனும் வைஷாலியும் அவர்கள் பேசுவதையெல்லாம் ஒரு புன்முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்த கடம்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

இனிதாய் திருமண நிகழ்வுகள் முடிவுற பேச்சும் சிரிப்புமாய் மகிழ்ச்சியாகவே பொழுது கழிந்தது. சில தினங்களில் கடம்பன் மாலை தீவுக்குச் செல்லத் தயாராக சஞ்சயனும் இவர்களோடு அவனை வழியனுப்பத் துணைக்குச் சென்றான்.

யாழ் தேவியில் கொழும்பை அடைந்தவர்கள் வெள்ளவத்தையில் ஒரு ஹோட்டலில் இரண்டு அறைகளை எடுத்துத் தங்கினார்கள். ஆயுஷ், சஞ்சயனுடனும் நன்றாக ஒட்டிக் கொண்டான். அதனால் சஞ்சயன் முடிந்தவரை ஆயுஷோடு தெஹிவளை மிருகக்காட்சிச் சாலை, ஹோல்பேஸ் கடற்கரை என்று வெளியே சுற்றி புதுமணத் தம்பதிகளுக்குத் தனிமை கொடுத்தான்.

அப்படிக் கிடைத்த ஒரு தருணத்தில் கடம்பன் தன் மனம் திறந்து வைஷாலியோடு பேசினான்.

“வைஷூ…! கொஞ்ச நாளைக்குள்ள திடீரென்று உனக்கு இப்படியான ஒரு சிற்றுவேசனுக்கு அடப்ட் ஆகிற கஷ்டம் என்று எனக்கும் புரியுது. அதுதான் நான் உன்னை இங்க விட்டிட்டுப் போறன். நீ முதல்ல ஆயுஷோட சேர்ந்து பழகி இந்த புது வாழ்க்கைக்கு உன்னைத் தயார்படுத்திட்டு உனக்கு எப்ப என்னட்ட வரப் பிடிக்குதோ அப்ப வா…

ஆயுஷுக்கு அம்மா மட்டும் இல்லாமல் நீ எனக்கும் ஒரு மனைவியாக இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். உனக்கே தெரியும்… எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் என்று. ஆனால் நான் உன்னைக் கட்டாயப் படுத்தப் போறதில்லை வைஷூ… உனக்கும் என்னைப் பிடிக்கும்தானே… அந்த விருப்பம் காதலாகிற நாளைக்காக நான் நம்பிக்கையோட காத்திருக்கிறேன் வைஷூ…”

அவன் கரங்களில் அடங்கியிருந்த தனது கரங்களையே பார்த்தவாறு அமைதியாக இருந்தாள் வைஷாலி. அவள் இருதயமோ நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் ஓடி முடித்தது போலத் துடித்துக் கொண்டிருந்தது. கணவனின் மென்மையான தொடுகையில் ஒரு இதத்தையும் பாதுகாப்பையும் உணர்ந்தவள், மெதுவாய் நிமிர்ந்து அவன் கண்களை நோக்கி, சம்மதமாய் தலையசைத்தாள்.

தன்னை நோக்கி மலர்ந்த செந்தாமரையாய் இருந்த அவள் வதனத்தைக் கையிலேந்தியவன், அவள் முன்னுச்சியில் முத்தமிட்டு விட்டு,

“என்னை ரொம்ப நாள் காக்க வைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்…”

என்றான்.

கடம்பன் புறப்பட்டுச் சென்று சில நாட்கள் கடந்திருக்க, ஆயுஷ் வைஷாலி உறவு மேலும் பலப்பட்டிருக்க ஆயுஷ் அப்பாவிடம் போவோம் என்று கேட்க ஆரம்பித்தான். வைஷாலியும் சரியென சஞ்சயனின் உதவியோடு மாலைதீவிலிருந்த Vakkaru தீவை அடைந்தார்கள். வைஷாலிக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தான் பூலோகத்தில் தான் இருக்கிறேனா என்று. எங்கு பார்த்தாலும் நீல நிறக் கடலும் வெண் மணல் பரப்புமாய் இருந்த அந்த இடத்தை விட்டுக் கண்களை அகற்ற முடியவில்லை அவளால். சிறு பிள்ளையாய் ஆயுஷோடு சேர்ந்து கடற்கரையில் ஓடி விளையாடினாள்.

கடலை ஊடறுத்து தனித் தனிக் குடில்களாய் அமைந்திருந்த காட்டேஜ்கள் உள்ளே அனைத்து நவீன வசதிகளுடனும் சேர்ந்து சொர்க்கலோகத்தை சிருஷ்டித்திருந்தன. இவர்கள் வீடும் கடற்கரையை ஒட்டியே இருந்தது. வீட்டுக்குப் போனதுமே வைஷாலி கடம்பனிடம் சொன்ன முதல் வார்த்தை,

“இங்கையப்பா… கண்ணா பள்ளிக்கூடம் போற வரை நாங்கள் இங்கேயே இருப்பம்… பள்ளிக்கூடம் போற நேரம் பார்த்து வேற இடம் போகலாம்…”

கடம்பனுக்கு அவள் வார்த்தைகள் காதில் தேன் வார்த்தன. சஞ்சயனும் அங்கு சில தினங்கள் தங்கி நன்றாக நீந்தி விளையாடி விட்டுக் கடலுணவு வகைகளையும் நன்றாக வெளுத்து வாங்கி விட்டு இலங்கைக்குப் புறப்பட்டான்.

அவன் அங்கிருந்து விடைபெறும் முன்னர் கிடைத்த தனிமையில் வைஷாலியை அமர வைத்துப் பேசினான்.

“வைஷூ…! நான் சொல்லுறதைக் கொஞ்சம் கோபப்படாமல் பொறுமையாகக் கேளுடி…”

“வைஷூ…! கடம்பன் நல்லவன்… வல்லவன்… ஆயுஷுக்கு அம்மா மட்டுமில்லாமல் அவனுக்கும் நல்ல பொண்டாட்டியா இருந்து ஆயுஷுக்கு ஒரு தங்கச்சியைப் பெத்துத் தா… எனக்கும் இன்னும் ரெண்டு, மூணு மருமகப் பிள்ளையயள் வேணும்… இதைத்தானேடா சொல்லப் போறாய்…”

சிரிக்காமல் சொன்னவளைச் சிரிப்புடன் நோக்கினான்.

“ம்… அதே தான்டி… ஆனால் கடைசித் தரமா ஒரு விசயம் சொல்லப் போறன். இனிமேல் இதைப் பற்றிக் கதைக்கப் போறதில்ல நான்…”

“ஓவர் பில்டப் குடுக்காமல் சொல்லுடா…”

“வைஷூ…! நீ ஒரு விசயம் நல்லாப் புரிஞ்சு கொள்ள வேணும். முரளி மேல உனக்கு வந்தது லவ்வே கிடையாது. அது ஒரு அட்ராக்சன். அவன் திறமைகள்ல, அவன் தோற்றத்தில உனக்கு வந்த ஒரு கிரஸ்… கண்மூடித் தனமாக நீ அதைக் காதல் என்று ஒரு மாயவலையை உன்னைச் சுற்றிப் பின்னிட்டாய். முரளியும் ஒரு ஈகோவில உன்னைக் கல்யாணம் செய்திட்டான். ஆனா உங்களுக்கு இடையில கொஞ்சம் கூட இல்லாத காதல் தான் உங்களைப் பிரிய வைச்சுது. நீ உண்மையிலேயே முரளியைக் காதலிச்சிருந்தால் அவனோடேயே கடைசி வரை வாழ்ந்து முடிக்கத்தான் யோசிச்சிருப்பாய்.

இனிமேல் நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் பழசைப் பற்றி நினைக்காமல் கடம்பனோட சந்தோசமாக வாழுறதுக்கு முயற்சி எடு. எல்லாம் மனசு தான்டி… உனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு. அவனைக் கண்டாலே ஒதுங்கிப் போகாமல் முதல்ல அவனோட நல்லாக் கதைச்சுப் பழகி அவனைப் புரிஞ்சு கொள்ளு… நீங்க ரெண்டு பேரும் சந்தோசமாக வாழுறது தான் ஆயுஷுக்கும் ஆரோக்கியமான ஒரு சூழலைக் கொடுக்கும்டி… உன்ர பிடிவாதங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைச்சிட்டுப் பொறுப்பா நட… ஆனா உனக்கு என்ன பிரச்சினை என்றாலும் நான் இருக்கிறன் என்றதை மறக்காதை… அது கடம்பனோட ஒரு பிரச்சினை என்றாலும் கூட… சரியா…?”

ஒரு நண்பனாய் மட்டுமன்றி ஒரு அன்னையாய், தந்தையாய் அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு அவனும் தாய் நாட்டை நோக்கிப் பயணித்தான்.

ஆயுஷோடு விளையாடிக் கொண்டே நண்பன் சொன்னதையே மனதில் திரும்பத் திரும்ப அசை போட்டவாறிருந்த வைஷாலி, கடம்பனோடு நெருங்கிப் பழகி நல்லதொரு வாழ்க்கையை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அன்றே அதன் ஆரம்பமாய் மாலை ஆயுஷ் தூங்கி எழுந்ததும் மகனோடு சேர்ந்து சிறு குக்கிஸ் பல உருவங்களில் செய்தவள் கடம்பனின் வருகைக்காய் காத்திருந்தாள். வேலை முடித்து வீட்டுக்கு வந்தவன், ஓடி வந்து காலைக் கட்டிய மகனை தூக்கித் தோளில் இருத்திக் கொண்டே புன்னகை முகத்தோடு அவனைப் பார்த்திருந்த மனைவியை மகிழ்ச்சியாக நோக்கினான்.

அவள் முகத்தில் தெரிந்த தெளிவு, புதிய வாழ்க்கைக்கு நல்லதொரு ஆரம்பம் பிறந்து விட்டதை அவனுக்கு உணர்த்தியது.

“என்ன கண்ணா… அம்மா முகத்தில பல்பெரியுது…? என்ன விசயம்?”

என்று மனைவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு மகனிடம் கேட்டான். வைஷாலி எதுவும் பேசாது தலையைக் குனிந்து கொண்டு சமையலறைக்கு விரைந்தாள்.

நாட்கள் அதுபாட்டில் நகர்ந்தன. வைஷாலிக்கும் இந்த மாலைதீவு வாழ்க்கை பழகி விட்டிருந்தது. கடம்பனோடு அன்னியோன்யமானதொரு நல்லுறவு ஏற்பட்டிருந்தது.

அன்றிரவு மகனைக் கதை சொல்லித் தூங்க வைத்து விட்டு, தனது மடிக் கணணியில் கதை வாசித்துக் கொண்டிருந்தவளைக் கடம்பனின் தொடுகை திடுக்கிட வைத்தது. பயந்து போய் நிமிர்ந்து பார்த்தவளை கடம்பனின் காதல் பார்வை தாங்கி நின்றது.

வாயில் விரல் வைத்து சத்தமின்றி அவளை வெளியே வருமாறு அழைத்தான். இவளும் கணணியை அணைத்து வைத்து விட்டு எழுந்து சென்றாள்.

கடம்பனுக்குச் சூடாகப் பாலை எடுத்துக்கொண்டு அவன் அறைக்குச் சென்றவளை எதிர்பாராத விதமாக தனது அணைப்பிற்குள் கொண்டு வந்தான். அவள் திகைத்து நிமிரவும்,

“எனக்கு நீ வேணும் வைஷூ… இப்பிடி உன்னை பக்கத்திலயே வைச்சுக் கொண்டு மாசக் கணக்கில காத்திருக்க விடுறியே… இது உனக்கே கொடுமையாகத் தெரியேல்லையா…?”

என்று அப்பாவியாக அவன் கேட்ட பாவனையில் இவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது.

“விடுங்கோப்பா… பால் ஊத்தப் போகுது…”

என்றவளிடமிருந்து பால் குவளையை வாங்கி மேசையில் வைத்தவன்,

“ஐ லவ் யூ வைஷூ…”

என்று அவள் கன்னத்தில் தன் இதழ்களைப் பதிக்க அவளோ,

“ஐ நோ கடம்பா…” என்றாள்.

அதைக் கேட்டவன் அவள் கன்னத்தை விடுத்து கண்களை நோக்கியவன்,

“அடியே பொண்டாட்டி…! ஐ லவ் யூ சொன்னால் ஐ லவ் யூ டூ சொல்ல வேணும்… அதை விட்டிட்டு இது என்ன புது ரிப்ளை…”

என்றவன் அவளை விடுத்து கட்டிலில் சென்று அமர்ந்தான். அவன் முகம் வாடியதை உணர்ந்த வைஷாலி, அவன் அருகில் சென்றவள் அவன் தாடி கரகரத்த கன்னத்தில் முத்தமிட்டவள்,

“ஐ சின்ஸியர்ளி லவ் யூ கடம்ப்ஸ்…” என்றாள்.

கடம்பன் மகிழ்ச்சியும் ஆர்வமுமாக அவளைப் பார்க்க அவன் வலது கரத்தைத் தனது கரத்தில் பிணைத்துக் கொண்டவள்,

“எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்குமப்பா… ஆயுஷோட சேர்த்து என்னையும் ஒரு சின்னப் பிள்ளை போல பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீங்க… எனக்கு சின்னதா ஒரு தலையிடி காய்ச்சல் வந்தாலே பதறிப் போய் துடிக்கிறீங்க… வீட்டை விட்டால் வேலை, வேலை விட்டால் வீடு என்று உங்க நேரம் முழுதும் என்னோடயும் கண்ணாவோடயும் தான் செலவளிக்கிறீங்க… நான் வாய் விட்டு எதையும் கேட்காமலேயே எனன் தேவையென்றாலும் நீங்களாவே தேடி வாங்கி வந்திடுறீங்க… என்ர முகம் கொஞ்சம் வாடினால் கூட நீங்களும் கவலைப் படுறீங்க… இதெல்லாத்தையும் விட எனக்கு வேறென்ன வேணும் வாழ்க்கைல?

சின்ன வயசில கதைகள் வாசிக்கும் போது எனக்கென்று ஒரு ராஜகுமாரன் வந்து என்னை உள்ளங்கையில வைச்சுத் தாங்குவான்னு கனவு காண்பன். ஆனா நான் நினைச்சது ஒன்று நடந்தது ஒன்று. இத்தனை வருசங்கள் கழிச்சு இப்போ என் கனவுகள் நிஜத்தில் நடக்கிற நேரம் என்னால எதையும் நம்ப முடியேல்லப்பா…

உண்மையில இப்பிடி ஒரு வாழ்க்கையை எனக்குத் தந்ததுக்கு நான் எப்பிடி நன்றி சொல்லப் போறனோ தெரியேல்ல… ரியலி தாங்ஸ்பா…”

என்று கண்கள் கலங்கக் கூறியவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்,

“ஹேய்… என்னம்மா இது… தாங்ஸ் எல்லாம் சொல்லிக் கொண்டு… நீ கண்ணாவையும் என்னையும் எவ்வளவு அக்கறையோட பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறாய்… அப்பிடிப் பார்த்தால் நானும் தான் உனக்குத் தாங்ஸ் சொல்ல வேணும்…

சரி அதை விடு… நீ எனக்கு நன்றி சொல்லுறதுன்னா ஒரு முறையில சொல்லலாம்…”

கூறியவன் குறும்புச் சிரிப்போடு தனது உதடுகளை ஒற்றை விரலால் சுட்டிக் காட்டினான். அதைக் கண்டவள்,

“அதுக்கென்ன தந்திட்டால் போச்சு…”

என்றபடி அவன் வாயில் மெதுவாய் ஒரு அடி போட முயல அவள் கரத்தை அப்படியே தனது உதடுகளில் இறுகப் பதித்து முத்தமிட்டவன் அவளையும் தன் மீது சாய்த்துக் கொண்டான். அங்கே இனிதாய் ஒரு சங்கமம் உதயமாயிற்று.

இனி அவர்கள் வாழ்வில் எல்லாம் சுகம் என்று நம்புவோம்.

1 Like