கவிதை பாடுங்கள்

கவிதை பாடுங்கள்
0

தங்களது அனுபவத்தையும், கற்பனையையும் கவிதைகளாகப் பகிர்ந்து கொள்ளலாம். கவிஞர்கள் தங்களது பெயருடன் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

காத்திருக்கும் வேளையிலோ
கனமான இதயத்திலே
கட்டி இறுக்கி கொண்டு
கடத்தினேன் நிமிடங்களை

வருகின்ற என்னவளின்
வசந்த முகத்தினில்
வழிகின்ற காதலின்
வாத்தியமும் நானோ

கண்களை பார்த்திட
காதலை சொன்னவளின்
கரங்களை பிடித்திட
கதறிய நொடிகளில்

கட்டிக்கொண்டு இறுக்கிட
கன்னத்தில் முத்தமிட்டாள்
காமமில்லா முத்தத்தை
காட்டினேன் நெற்றியில்

என்னுயிரும் நீதானே
என்றவளின் ஓருயிரை
என்நெஞ்சில் வாங்கிடவே
எண்ணினேன் காலத்தை

தள்ளிஇருக்கும் நாட்களெல்லாம்
தனிமையினை வெறுத்திடவே
தண்டனாய் என்னிதயம்
தண்ணீரை சிந்தியதே

அவள் கரம்பிடித்து
அமைதியாய் நடந்திட்ட
அழகிய நாட்களிலே
அள்ளித்தந்த மகிழ்ச்சிகளோ

அளவின்றி தோன்றிட
அழுகையில் என் வாழ்க்கை
ஆனந்தத்தை தேடிவிட
ஆகினேன் காதலனாய்

தன்தோள் சாய்த்தியும்
தன்மடி கிடத்தியும்
தன்னம்பிக்கை கொடுத்தாயே
தனிமையின் மணிகளில்

வழியின்றி நின்றவனின்
வாழ்க்கை பயணத்தில்
வலிகளை மறந்திவிட
வரிகளை தந்தவளே

நித்தம் ஒருபொழுதும்
நெஞ்சினிலே வாழ்ந்திடும்
நெகிழ்ச்சியான நிகழ்வுகளை
நினைவுகளின் பரிசுகளாய்

நாளொரு பொழுதும்
நானிங்கு கடத்திவிட
நாட்களை எண்ணியே
நகர்கிறது வாழ்க்கையே

என்னுடலை எடுத்துக்கொள்
என்றுசொன்ன பெண்ணவளே
என்னைவிட்டு சென்றுவிட
எப்படிதான் வாழ்வேனோ?

தந்துவிட்ட வலிகளையோ
தனிமையில் கடத்திவிட
தவழ்ந்து கிடந்தேனே
தலையணையின் உடலினிலே

சித்திரமாய் அவள்முகம்
சிதைந்துவிட்ட இதயத்திலே
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சின்னஞ்சிறு நினைவுகளால்

காலடி தடங்களை
கண்டுவிட நானெண்ணி
காலனை பார்த்துக்கொண்டு
காத்திருக்கும் கள்வனானேன்

முதுமையின் காரணமாய்
முக வரிகளும் தோன்றிவிட
முகவரிகள் தேடியே
முயல்கிறேன் முடிவினிலே…

               -சேதுபதி விசுவநாதன்
1 Like

arumai sago :purple_heart:

1 Like

பேடியே…!!
பெண்ணில் பிறந்தாயா
பெண்ணோடு பிறந்தாயா…
பெண்ணைப் பெற்றாயா…

பதரே…!
பதறுதே நெஞ்சம்
பால் மணம் மாறா
பச்சிளம் குழந்தை
பருவ அறிகுறி கூட
முளை விடா மொட்டு
மோதி கிழித்து
மூச்சு முட்ட வைத்தாயே!

மூடனே…!!
கழுகாக வட்டமிடும்
உங்களிடமிருந்து
எப்படியடா காப்பது
எதிர்கால தலைமுறையை…!

நாகமே…!
நீ கக்கிய விஷம்
நாசமாக்கி விடுமடா
நகர்ந்து மேலே
வரத் துடிக்கும்
நசுங்கி கிடக்கும்
பெண்ணினத்தையே…

ஏங்கித் துடிக்குதடா
என் இதயம்
உங்களை எரித்து விட

இறைவா…!
நீ கண் திற
இல்லை எனில்
இந்தப் பெண்
எரிமலையாய் மாறி
இப்புவி எரிப்பாள்…:exclamation:

வை. சிதம்பரம்

வரமாய் வந்தவளே…

காலசூரியன் உதிக்கும்முன்னே
கால்வயிறு கஞ்சி குடிக்க
கட்டிக்கொண்டு பொறப்புட்டேன்
கட்டுனுவல காப்பாத்த

மிஞ்சி போட்டு வந்தவளுக்கு
மிஞ்சுனத கொடுக்காம
மொச்ச சோறு தந்திடவே
உச்சம் வெயிலில் நின்றேனே

உழைக்குறவன் பாவமுன்னு
பொழைக்குறவ நினைச்சுப்புட்டு
அழைக்கறாலே சோத்துக்கு
இழைச்ச உடம்பு மேனியோட

கலைச்சுபோயி நானிருக்க
சேலைதுணி தொடச்சிவிட
வேலைச்சும தெரியலயே
சோலைமர நிழலினிலே

பாதிசோத்த எடுத்துவைக்க
மீதிச்சோறு போதுமென்றாள்
பீதிகூட வந்திடுதே
பாதியிலே போவேனேனு

பெரும்பேச்சு பேசாதன்னு
கருப்பழகி சொல்லிமுடிக்க
கரும்புகாட்டு இடையினிலே
குருவிச்சத்தம் கேட்டிடுதே

வெயில்தொல்ல தாளலைன்னு
துயில்கொள்ள நானெண்ண
மயில்தோகை கூந்தலிலே
உயிலொன்னு எழுதிபுட்டா

மடிமீது தலைவைக்க
அடிமனதில் அமைதியடா
கோடிகாசு கொடுத்தால்
தேடிச்சுகம் கிட்டிடுமோ

செங்கதிரும் மறையுமுன்னே
சீக்கிரமா வந்துடுங்கனு
சேலையுதறி அவநடக்க
சேத்துலதான் காலவச்சேன்

காடுமேடு திரிஞ்சுபுட்டு
வீடுதேடி வருமுன்னே
நெடுந்நேர களைப்புலதான்
கடுப்புவலி வந்துருச்சே

இருட்டுநேரம் வரும்போது
நெருப்புச்சட்டி கொதிக்குதடா
மருந்துசோறு போதுமுனு
இரும்பு மீசை சொல்லுதடா

கத்தரிக்காய் குழம்போட
ராத்திரிக்கு கம்பஞ்சோறு
பெத்தவளுக்கு இணையாக
அத்தவளும் சமைக்கறாலே

சோறுருசி தூக்கிடவே
வெறுந்தண்ணி நான் குடிக்க
சிறுதுளியும் சிந்தவில்ல
குறுநகையில் புரிஞ்சுகிட்டா

பானை கழுவி வந்தவுடனே
பாயி போர்வை விரிச்சுபுட்டேன்
பார்வையிலே அழைத்திடவே
பாதசண்டை முடிஞ்சிருச்சு

முந்தானை விரிக்க மட்டும்
முடிபோட்டு வரவில்ல
முடிவுவரை இருந்திடவே
முழுமனசா அழைச்சுவந்தேன்

என் உசுரு போகும்முன்னே
பெண்ணுரசுரு போவேணும்
நான் இல்லா உலகத்தில
என்செய்வ என்பாதி…

        - சேதுபதி விசுவநாதன்
1 Like