காதலின் மொழியினிலே - கதை திரி

காதலின் மொழியினிலே - கதை திரி
0

#கண்ணிமைக்கும் நேரத்திலோ
கடந்துவிட்ட காதலிலே
காத்திருக்கும் வேளையுமே
கனமாக இருந்திடுமே#

ரம்யாவின் வருகைக்காக தெருமுனையில் காத்துக்கொண்டு இருந்தான் நவீன்.

“சீக்கிரம் வாடி” என்று மனதிற்குள்ளேயே பலமுறை சொல்லிக்கொண்டே தனது வண்டியின் கண்ணாடியை பார்த்து கொண்டே இருந்தான் நவீன்.

பல வண்டிகளும் ஆட்களும் அவனை கடந்து செல்ல செல்ல இவனுக்கு பதட்டம் அதிகமாகிறது.

ரம்யாவின் தெருவை பார்த்துக்கொண்டு தன் நகங்களை கடிக்கிறான் நவீன்.

நேரம் அதிகமானது. நவீனின் இதயத்துடிப்பு அதிகமானது.

கண்களில் பயமும் மனதில் வலியும் கூடியது.

“ஃபோன் செய்ய வேண்டாம்டா” என்று ரம்யா கூறியதால் நவீன் என்ன செய்வது என்று தெரியாமல் துடித்து கொண்டிருந்தான்.

ரம்யாவின் வீட்டு கதவு திறக்கப்பட்டது. தன் காலேஜ் பேக்கை போட்டுக்கொண்டு எப்போதும் போல நடந்து வந்தாள்

பலநாள் பசியில் இருந்தவனுக்கு அறுசுவை விருந்து கிடைத்தால் எப்படி மகிழ்ச்சி கொள்வானோ! அதைவிட பல மடங்கு அதிகமாக சந்தோஷம் நவீன் கண்களில் காண முடிந்தது.

ரம்யா நடந்து வர வர நவீனுக்கு சந்தோஷம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.வானத்தில் பறப்பது போல எண்ணினான்.

ஆனால் இப்போது ரம்யாவின் இதயத்திலோ பயம் தொற்றிக்கொண்டது.

ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.அதனால் ரம்யாவும் முடிந்தவரை மெதுவாகவே சென்றாள்.

நவீனுக்கு அருகில் அவள் வந்தாள். வேகமாக சென்று பைக்கை ஸ்டார்ட் செய்தான் நவீன். ஆனால் ரம்யா வண்டியில் ஏறவில்லை.

அவள் நவீனை கடந்து சென்று கொண்டு இருந்தாள்.

நவீனுக்கு பெரிய ஏமாற்றம். அவள் ஏன் ஏறவில்லை? என்று நினைத்து வருத்தம் கொண்டு அங்கேயே சில நிமிடங்கள் நின்றான்.

அப்போது நவீனின் போன் அடித்தது. எடுத்து பார்த்தாள் ஃபோன் செய்வது ரம்யா தான்.

“ஹலோ” என்று நவீன் கூறிய அடுத்த நொடியில்,

“டேய் சீக்கிரம் வாடா. என் முன்னாடி வந்து பைக்கை நிறுத்து. நான் ஏறிக்கறேன்” என்று சொல்லிய மறுநொடியே ஃபோனை துண்டித்தாள் ரம்யா.

இதை கேட்ட நொடிப்பொழுதில் வண்டியை புயல் வேகத்தில் அவள் அருகில் சென்று நிறுத்தினான் நவீன்.

வண்டி நின்ற வேகத்தில் மீண்டும் கிளம்பியது.

ஒரு நொடியில் வண்டியில் ஏறினாள் ரம்யா. வண்டி ஏறிய மறுகணமே தன் முகத்தை துப்பட்டாவில் மூடி விட்டாள்.

காதல் எப்படியெல்லாம் தைரியத்தை தருகின்றது என்று பாருங்களேன்.

வண்டி பைபாஸ் ரோட்டில் ஏறி சென்று கொண்டு இருந்தது.

வண்டியின் வேகமும், இருவரின் இதயத்துடிப்பின் வேகமும் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்தது.

இருவரும் யார் முதலில் பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். ஆனால் நேரமும் தூரமும் நகர்ந்து கொண்டே இருந்தது.

“நவீன் யாரும் நம்மல பாத்துருக்க மாட்டாங்களே?” என்று ரம்யா கேட்க,

“பாத்திருக்க மாட்டாங்கடி. நான் தான் வேகமாக வந்துட்டேனே” என்று நவீன் கூறினான்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. திரும்பி போயிடலாமா?” என்று ஐயத்துடன் ரம்யா கேட்டாள்.

“எதுக்குடி இப்படி பயப்படுற?. யாரும் நம்மல பாக்கல. தைரியமா இருடி” என்று நவீன் கூறினான்.

“இதுதாண்டா எனக்கு ஃபர்ஸ்ட் டைம். இதுக்கு முன்னாடி நான் இப்படி வந்ததே இல்லை” என்று அவள் சொல்ல,

“ஆமாண்டி. நான் மட்டும் இதுக்கு முன்னாடி பல பொண்ணுகளோட இப்படி சுத்திட்டு இருந்தனா?” என்று தோரணையுடன் கேட்டான் நவீன்.

“ஓகோ! துரைக்கு இந்த ஆசை வேற இருக்கோ? பிச்சுப்புடுவேன்” என்று சொல்லி கொண்டே தலையில் கொட்டினாள் ரம்யா.

“ஹேய். சும்மா சொன்னேன்டி எரும” என்று சிரித்துக்கொண்டே வண்டியை நவீன் ஓட்ட,

“என்னடா சிரிக்கற. என்னைய தவிர வேற எவளையாவது பார்த்த கொன்னுடுவேன்” என்று கோவமாக சொன்னாள் ரம்யா.

“அப்படி தான்டி பார்ப்பேன். உன்னால என்ன பண்ண முடியும்?” என்று நவீன் சொல்ல,

நறுக்கென்று அவன் தலையில் மீண்டும் கொட்டினாள் ரம்யா.

“ஹே… வலிக்குதுடி லூசு” என்று நவீன் சொல்லி கொண்டே தலையில் தேய்த்து கொண்டான்.

அந்தநேரத்தில் ஒரு கார் இடிப்பது போல வேகமாக அவர்களை கடந்து சென்றது.

உடனே பதட்டத்தில் நவீன் கைகளை ஆட்ட வண்டியும் ஆடியது…

அந்த ஒரு நிமிடம் இருவருக்கும் உயிர் பயம் வந்திருந்தது.

நல்ல வேளையாக நவீன் வண்டியை கட்டுபாட்டில் கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.

அந்த நிமிடம் ரம்யாவின் விழிகள் பரந்து விரிந்து இருந்தது.

இருவரின் இதயமும் வேகமாக துடித்தது.

சில நொடிகள் இருவரும் எதுவும் பேசவில்லை. கண்களில் பயமும் முகத்தில் பதட்டமும் நிறைந்து இருந்தது.

“டேய் என்னடா ஆச்சு. ஏன்டா முகமெல்லாம் இப்படி வேர்க்குது?” என்று பயத்துடன் கேட்டாள் ரம்யா.

“ஒன்னுமில்லடி. உனக்கு ஒன்னும் ஆகலையே?” என்று நவீன் கண்களில் காதலை கொண்டு அழுகின்ற தொணியில் கேட்டான்.

“ஏன்டா இப்படி ஆகுது? எனக்கு பயமா இருக்குடா” என்று கண்களில் நீர் நிரம்பிய நிலையில் கேட்டாள் ரம்யா.

“பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. நீ பைக்ல ஏறு செல்லம். போலாம்” என்று பதட்டத்தை மறைத்துக்கொண்டு நவீன் கூற,

"வேணாம்டா. நாம திரும்பி வீட்டுக்கு போலாம். என்று ரம்யா சொன்னாள் கண்களில் நீர் வழிய.

உடனே வண்டியில் இருந்து நொடிப்பொழுதில் இறங்கினான் நவீன்.

“ஹேய் அம்மு. ஏன்டி அழற? என்னடி ஆச்சு” என்று அவன் கேட்க,

“ஒன்னுமில்லடா. வீட்டுக்கே திரும்பி போயிடலாம்” என்று ரம்யா சொல்லிக்கொண்டே சிறிது தூரம் நடந்து சென்றாள்.

நவீன் ஓடிச்சென்று “ஏய் அம்மு. நில்லுடி” என்று சொல்லி அவளின் கையை பிடித்து நிறுத்தினான்.

யாருமே இல்லாத இடம். வண்டிகளும் அந்நேரத்தில் செல்லவும் இல்லை. இருவர் மட்டுமே அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தனர்.

தன் கைகளை அவன் பிடியில் இருந்து உதறினாள் ரம்யா. நவீனின் கை ரம்யாவை விட்டு விலகியது.

ஒரு நிமிடம் நவீனின் இதயம் நின்றது. தன்னை கரம்பிடிக்க காத்திருக்கும் தன் உயிர் காதலியே கையை உதறினாள் என்ற வலியில் மனம் நொந்து போனான்.

அப்போது அவனை அறியாமலேயே அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அவள் ஏன் இவ்வாறு செய்தால் என்று புரியாமல் மனதில் ஆயிரம் கேள்விகளுடன் நவீன் இருக்க,

தன்னை உயிராக நினைத்தவனின் கையை தட்டி விட்டோமே என்று எண்ணமும் சேர்ந்து கொள்ள ரம்யாவின் கண்களில் நீர் பெருகியது.

சில நிமிடங்கள் இருவரும் பேசி கொள்ளவே இல்லை. மெளனங்கள் ஆட்கொண்டது. கண்ணீர் மட்டுமே அங்கு வலிகளின் மொழிகளாக இருந்தது.

பொறுமை இழந்த நவீன், ரம்யாவின் முன் சென்று அவளை பார்த்தான். முகமெல்லாம் துப்பட்டா போட்டு மறைத்திருந்த ரம்யாவின் முகத்தில் கண்களில் வழியும் நீர் மட்டுமே நவீன் கண்களுக்கு தெரிந்தது.

அந்த நிமிடம் நவீனின் கண்களிலும் நீர் ததும்பியது.

## விழிகளின் வழிகளில்
மொழிகளும் அறுந்திடவே
காதலின் வலிகளில்
கண்ணீரும் வடிந்திடுதே
இருமனம் அழுகையில்
இதயமும் கலங்கிடவே
புரியாத புதிராக
புகுந்திடுதே அச்சமும் ##

இருவரும் அழுதுகொண்டு இருக்கும் போது பேச துவங்கினான் நவீன்.

“ஏண்டி அம்மு அழற? என்னடி ஆச்சு? எதுக்கு இப்போ இப்படி அழற?” என்று குரல் ஒடுங்க கேட்டான் நவீன்.

" ஒன்னுமில்லடா மாமா. நாம வீட்டு போயிடலாம்டா. ப்ளீஸ்டா" என்று கூறிவிட்டு ரம்யா மேலும் அழ ஆரம்பித்தாள்.

அவள் இப்படி சொல்ல என்ன காரணம் என்று அறியாமல் நவீனின் மனம் தத்தளித்தது.

“அம்மு ப்ளீஸ்டி. அழதா. என்னால உன்ன இப்படி பாக்க முடியலடி” என்று அழுதுகொண்டே நவீன் கூறினான்.

முதல்முறையாக காதலியின் கண்ணீரை கண்ட காதலனின் மனம் எப்படி கலங்காமல் இருக்கும்.

“நீ அழதடா. எப்பவுமே சிரிக்கற உன்ன இப்படி என்னால அழ வச்சு பாக்க முடியல மாமா” என்று சொல்லி விட்டு திரும்பி கொண்டாள் ரம்யா.

தன்னை நேசிக்கும் ஆணின் கண்களில் நீரை கண்டாலே பெண்ணின் இதயம் நெருங்கிவிடுமே. அதற்கு ரம்யா மட்டும் விதிவிலக்கா?

“போலாம்டி அம்மு. ஆனா சொல்லுடி. என்ன ஆச்சுனு” என்று நவீன் விடாப்பிடியாக கேட்டான்.

குரல் ஒலி குறைந்து இருந்தது ரம்யாவுக்கு.

“நாம ஃபர்ஸ்ட் டைம் வெளியே வரோம்டா. போகும் போதே இப்படி ஆகுது.எனக்கு பயமா இருக்குடா” என்று அழுது கொண்டே சொன்னாள் ரம்யா.

" லூசு. அந்த கார் நம்மல ஓவர்டேக் பண்ணி போனதுக்கா இப்படி அழற" என்று சொல்லி விட்டு, தன்னுள் இருந்த கவலையை ஒழித்தான் நவீன்.

“இல்லடா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உனக்கு ஏதாவது ஆச்சுனா என்னால தாங்க முடியாது” என்று ரம்யா மீண்டும் கண்கலங்கினாள்.

“ப்ளீஸ்டா. நாம இன்னொரு நாள் போயிக்கலாம். நான் சொல்றத கேளு” என்று மீண்டும் ரம்யா அவனை வற்புறுத்தினாள்.

“ஏய் அம்மு. நாம ஃபர்ஸ்ட் டைம் வெளியே வந்து இருக்குமோனு நீ தான சொன்ன. அப்புறம் திரும்பி போலாமுனு சொன்னா என்ன அர்த்தம்?” என்று ரம்யாவின் கைகளை பிடித்து கொண்டு தன் கண்களில் அவளின் கண்களை பார்த்து கொண்டே கேட்டான் நவீன்.

“எனக்கு மனசு சரியில்லடா. இனி நாம எங்க போனாலும் சந்தோஷமா இருக்காது. வீட்டு போயிடலாம்” என்று மீண்டும் மீண்டும் ரம்யா கூறிக்கொண்டே இருந்தாள்.

ஆனால் நவீனின் என்னமோ இன்று கட்டாயம் அவளுடன் வெளியே சென்றே தீர வேண்டும் என்பது தான்.

( இரண்டு உள்ளங்களுக்கு இடையில் ஏற்படும் போராட்டத்தில் வெல்வது யாரோ?)

“அம்மு நீ பயப்படுறது சரி தான். ஆனா இந்த மாதிரி நெறைய தடவ பஸ், கார், லாரினு பல பேரு என் வண்டிய அணைச்சு விட்டுட்டு போயிருக்காங்க” என்று அவன் சொல்ல,

“இருக்கலாம்டா. ஆனா இன்னைக்கு நீ பயந்த மாதிரி இதுக்கு முன்னாடி நீ பயப்பட்டு இருக்க மாட்டியேடா” என்று ரம்யா வாடிய முகத்துடன் கூறினாள்.

“யார் சொன்னா? இதவிட அதிகமா நான் பயந்து இருக்கேன்” என்று சொல்லி நவீன் சிரிக்க,

“பொய் சொல்லாதடா ப்ராடு. உன் கண்ணுல நான் அந்த பயத்த பார்த்தேன். எனக்கு எதாவது ஆச்சோனு நீ பயந்தத பாத்தேன்” என்று ரம்யா கண்ணீரிருடன் கூறினாள்.

“ஆமாண்டி. நீ தான்டி‌ என் உசுரு. உனக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்க முடியாதுடி” என்று நவீன் கூற,

அப்போது நவீனின் துப்பட்டாவால் மூடிய முகத்தை தன் கைகளில் ஏந்தியது.

“அப்போ என்னால மட்டும் தாங்க முடியுமாடா?” என்று அழுகையிலேயே கூறினாள் ரம்யா.

“நீ என் கூட இருக்கற வரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாதுடி என் செல்லம்” என்று நவீன் கண்களில் காதல் பொங்க கூறினான்.

இந்த வார்த்தையை கூறும் போது ரம்யாவின் முகத்தை தாங்கிய நவீனின் கைகளின் கட்டைவிரல் அவளின் கண்களில் வடியும் நீரை துடைத்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்கள் சிமிட்டாமல் பார்த்து கொண்டே இருந்தனர்.

வாகனங்கள் வேகமாக சென்று கொண்டு இருந்தன. ஆனால் இவரின் காதிலும் நிசப்தம் தான் உணர்ந்து அந்த நிமிடம்.

“நீ எனக்கு வேணும்டா.நீ இல்லன்னா செத்துருவேன். நீதான்டா என்னோட புருஷன்” என்று ரம்யா மீண்டும் கண்கள் கலங்க கூறினாள்.

" ஐ லவ் யூ டி பொண்டாட்டி" என்று நவீன் சொன்ன மறுநொடியே அவனை இறுக்கி அணைத்தாள் ரம்யா.

காற்றுபுகா இடைவெளியில்

கட்டிக்கொண்ட இரு‌ உடலும்
கண்ணீரின் வாசத்தில்
காதலை சுவாசித்திடுதே
கலங்கிய இதயத்தில்
கலவரமும் தீர்ந்துவிட
கண்களில் வழிகளிலே
மொழியில்லா வரிகளும் பேசியதே#

சாலை ஓரத்தில் நிற்கிறோம் என்று இருவரும் மறந்து இருந்தனர்.

இருவரும் இறுக அணைத்து கொண்டு இருந்த வேளையில் கண்ணீரின் வாசத்தை சுவாசத்தில் உணர்ந்தனர்.

சில நிமிடங்கள் அப்படியே கடந்தது.

“டேய் மச்சி அங்க பாருடா. ஒருத்தன் ரோட்டுலயே என்ன பண்றானு?. கொடுத்து வச்சவன்” என்று ஒருவன் சொல்லி கொண்டே தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றான்.

நவீன் அதை கவனிக்க தவறவில்லை. அதே நேரத்தில் தன் உயிராய் இருப்பவளின் அன்பான அழுகையின் இறுக்கத்தை விடவும் முடியவில்லை.

“கருமம் கருமம். இதுக தொல்லை தாங்கல. எங்க பாத்தாலும் இப்படி கட்டிக்கிட்டு. ச்சீ” என்று ஒரு முதிர் பெண்மணி காரில் இருந்து பார்த்து சொல்ல,

“அட இப்பத்து புள்ளைங்க எல்லாமே இப்படி தான் திரியுதுங்க” என்று அந்த பெண்ணின் கணவர் சொன்னார் காரை ஓட்டி கொண்டே.

அவர் சொல்லவும் கார் அவர்களை தாண்டவும் சரியாக இருந்தது.

இதை கேட்ட அவரின் மனைவி,“அதுக்குனு இப்படியா? ரோடுனு கூட பாக்காம கட்டி புடுச்சுட்டு திரியறது. இதுகல பெத்தவங்க சரியில்ல” என்று பொரிந்து தள்ளினார்.

“நாம எதுக்கு இதபத்தி பேசிக்கிட்டு” என்று சொல்லிக்கொண்டே காரில் பேசிக்கொண்டனர்.

ரம்யாவின் இறுக்கமும் தேம்பலும் குறைந்த பாடில்லை. ஏனெனில் அவளின் மனதில் ஏற்பட்ட வலிகள் அப்படிப்பட்டது.

நவீனுக்கு சூழ்நிலை உணர்த்தியது இது சாலை என்றும், பலர் பார்த்துவிட்டு செல்கின்றனர் என்றும்.

ஆனால் அவனால் ரம்யாவின் இறுக்கத்தை விட மனதில்லை. அவனின் கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது.

அந்த காரில் சென்ற முதியவர்களுக்கும் வண்டியில் சென்றவருக்கும் இவர்கள் நிலை தெரியாது.

தன் காதலியின் அழுகையில் கட்டியணைக்கும் வரம் அந்த வண்டியில் சென்ற இளைஞருக்கு தெரியாது.

ரம்யா மெல்ல மெல்ல ஆசுவாசமடைந்தாள்.

“மாமா சாரிடா. சந்தோஷமா இருந்த உன்ன அழ வச்சுட்டேன். நீ எனக்கு வேணும்டா” என்று தேம்பி கொண்டே ரம்யா சொல்ல,

அவளின் இறுக்கத்தை விடுவித்து, அவளின் கண்களை பார்த்து, “நீ தான்டி என் பொண்டாட்டி” என்று சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட்டான் நவீன்.

“மச்சி அங்க பாருடா. இளமையான காதல் ஜோடி. நடு ரோட்டில சும்மா எப்படி என்ஜாய் பண்ணுதுங்கனு” என்று ஒருவன் சொல்ல,

“அதுகல பாத்தா காதல் ஜோடி மாதிரி தெரில. தள்ளிட்டு வந்த மாதிரி தெரியுது. கார ஸ்லோவ் பண்ணு மச்சி” என்று இன்னொருவன் சொன்னான்.

“எதுக்குடா?” என்று சொல்லி கொண்டே அவனும் காரை அருகில் சென்று ஸ்லோவ் பண்ண,

குறைக்க சொன்னவன், “ச்சீ. ******* ஓரமா போங்கடா. கருமம் புடிச்சவங்களா” என்று சத்தமாக சொன்னான்.

உடனே காரை ஓட்டியவன் வேகத்தை கூட்டினான்.

அந்த நிமிடம் ரம்யாவும் நவீனும் பிரிந்தார்கள்.

அந்த நேரத்தில் சாலை கடந்த அனைவருமே ரம்யா நவீன் கட்டிபிடித்து இருந்ததை பார்த்திருப்பார்கள்.
அனைவருக்குமே தப்பாக தான் தோன்றியிருக்கும்.

ஆனால் அங்கு நடந்த பயமும், அழுகையும், காதலும் யாருக்குமே தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

இன்று காதல் என்றாலும், கட்டியணைப்பது என்றாலும் காமம் மட்டுமே என்று தானே நினைத்து கொண்டு இருக்கிறோம்.

“ஹேய் சாரிடி. கோச்சுக்காதடி” என்று நெற்றியில் முத்தம் கொடுத்ததை நினைத்து நவீன் பயத்துடனே கேட்க,

“நான் தான்டா சாரி சொல்லனும். நான் தானே உன்ன கட்டி புடுச்சேன்” என்று ரம்யா கூறினாள்.

“போதும்டி. மாறி மாறி சாரி கேட்டுட்டே இருக்கலாம். இப்போ ப்ளான் படியே படத்துக்கு போலாம்” என்று நவீன் கூறினான்.

அப்போது தான் ரம்யாவும் சுதாரித்தாள். நாம இன்னைக்கு படத்துக்கு தான் போறோமுனு.

நவீன் வண்டியை எடுக்க, ரம்யா வண்டியில் ஏறினாள்.

மீண்டும் வண்டி அந்த இடத்தில் இருந்து புறப்பட்டது.

எவ்வளவு தான் அழுதாலும், வலித்தாலும் தன் காதலியின் முதல் அரவணைப்பு என்றுமே இனிமையானது தான்.

இருவருமே சில நிமிடங்கள் பேசாமல் அந்த சாலையில் பயணித்து கொண்டு இருந்தார்கள்.

தன் நெற்றியில் அவன் பதித்த முத்தத்தை எண்ணி நானம் கொண்டாள் ரம்யா.

“எப்படி டி அவனை கட்டி புடிச்ச?. எங்க இருந்து வந்துச்சு இந்த தைரியம்?” என்று தனக்குள்ளேயே கேட்டு கொண்டாள் ரம்யா.

தன் காதலியின் அரவணைப்பில் இருந்த நிமிடங்கள் கஷ்டமானதாக இருந்தாலும், நினைக்கும் போது சுகமாக இருந்தது நவீனுக்கு.

அதை நினைத்து சிரித்துக்கொண்டே வண்டியை வேகமாக ஓட்டினான் நவீன்.

“டேய் மெதுவா போ. ஏன் இவ்வளவு வேகமா போற?” என்று ரம்யா கேட்க,

“மெதுவா போனா இன்டர்வெல்க்கு தான் போயி சேர முடியும். இப்படி போனா தான் சீட் கிடைக்கும்” என்று சொன்னான் நவீன்.

“இவ்வளவு நேரம் என்ன நடந்துச்சுனு மறந்துட்டியா லூசு” என்று ரம்யா அதட்ட,

அதற்கு நவீன், “நீ முதல் முறையா என்னை கட்டி புடுச்சத எப்படி செல்லம் மறப்பேன்” என்று சிரித்துக்கொண்டே…

அந்த நிமிடம் ரம்யாவின் முகத்தில் வெட்கம் தொற்றிக்கொண்டது. ஆனால் அவள் வெளிக்காட்டமால்,

“அப்போ நான் அழுததுக்கு வறுத்தப்படல” என்று கோவமாக கேட்பது போல நடித்தாள்.

“என்னடி செல்லம் இப்படி சொல்லிட்ட. நீ அழுதப்ப என் கண்ணில கண்ணீர் வந்துச்சு. பாத்தில. அப்புறம் ஏன்டி இப்படி கேட்குற?” என்று நவீன் பயந்தது போல கேட்டான்.

“அப்புறம் என்னடா. உனக்கு நான் கட்டி புடுச்சது தான் ஞாபகம் வந்துச்சோ?” என்று ரம்யா மீண்டும் கேட்க,

"ஆமாடி அம்மு. அப்போ உன் கஷ்டம் தான் தெரிஞ்சது. இப்போ நீ கட்டி புடிச்சது தான் ஞாபகம் வருது"ன்னு சிரிச்சுகிட்டே நவீன் சொன்னான்.

“பொறுக்கி… பொறுக்கி… பொறுக்கி…” என்று சொல்லிக்கொண்டே நவீனின் முதுகில் செல்லமாக அடித்தால் ரம்யா.

அப்போது வெட்கத்தை ரம்யாவால் மறைக்க முடியவில்லை.

அவள் அடித்ததை நினைத்து மகிழ்ச்சியில் வண்டியின் வேகத்தை கூட்டினான் நவீன்.

வண்டி இப்போது 100கி.மீ வேகத்தை தாண்டி சென்று கொண்டு இருந்தது…

வேகம் தொடரும்…