சத்ரிய வேந்தன் - 15

சத்ரிய வேந்தன் - 15
0

சத்ரிய வேந்தன் - 15 – தகர்ந்த தடைகள்

மாதவமோ ! யாகமோ !

பிரார்த்தனைகளோ ! வேண்டுதல்களோ !

என்ன செய்தேன் நினைவில்லை

எப்பிறவியில் செய்தேன் நினைவில்லை

இருந்தும் வரமாய் நீ கிடைத்தாய்

அதிகாலை சூரியன் தமது பயணத்தை தொடங்க, பறவைகளின் கீதம் சங்கீதமாக இசைத்திட, வேங்கை நாட்டின் பிரமாண்ட அரண்மனையின் விருந்தினர் அறையினில், இறைவனின் துதியினைப் பாடிக் கொண்டிருந்தாள் சமுத்திர தேவிகை.

சமுத்திராவைக் காண இளவரசி தோகையினியும், அவருடன் சேயோனின் மனைவி வருணதேவியும் விருந்தினர் அறைக்கு வந்தனர். அதிகாலை ஆதவனின் பொன்னிற கதிர்கள் அந்த அறையின் அழகை மேலும் அழகாக்க, தங்கத்தினால் செய்யப்பட்ட நடராஜர் சிலைக்கு வண்ண வண்ண மலர்களை தூவியபடி, இறைவனின் துதியினை பாடியபடி அமர்ந்திருந்த சமுத்திராவின் அழகினில் ஒரு கணம் மெய்மறந்து நின்றனர் இருவரும்.

அறையின் அழகே தனி பொலிவாய் ஜொலிக்க, சமுத்திராவின் அழகை வர்ணிக்க பைந்தமிழ் வார்தைகளுக்கே பஞ்சம் வந்துவிடும் போல இருந்தது. அந்த நிலவு முகத்தின் பொலிவிலும், அவளின் விழிகளில் இருக்கும் ஒளியிலும், செவ்விதழ்களின் மென்மையிலும் இமைக்க மறந்து ரசிக்கத் தோன்றியது இருவருக்கும்.

சிறு புன்னகையோடு வருணதேவி தோகையினியை நோக்க, அவளும் சமுத்திரையின் எழில் வதனத்தையே ரசித்துக் கொண்டிருப்பது புரிந்தது.

“என்ன தோகையினி! சமுத்திரை மிகவும் அழகாய் இருக்கிறாள் அல்லவா!” என்ற வருணதேவியின் குரலில், மென்னகை புரிந்த வண்ணம் அவரைப் பார்த்தார் தோகையினி.

“ஆம் மதனி! அவள் எப்பொழுதுமே கொள்ளை அழகுதான். அதோடு இதுவரை சிறுபெண்ணாய் கண்களுக்கு தெரிந்தவள், இன்று குமரியாக தெரிகிறாள்.”

“நீ அவளை இரண்டு ஆண்டுகள் முன்பு பார்த்தாய், இன்னும் வளராமல் இருப்பாளா? அதோடு நேற்று இவளைக் காணும் போதும் நெசவு தொழில் செய்யும் தேவாங்கர் குல பெண்ணைப் போலவே வேடமிட்டு வந்திருந்தாள். இப்பொழுதுதானே அவளுடைய சுயதோற்றத்தில் காண்கிறாய் ஆகையால் இந்த மாற்றங்கள் தெளிவாக தெரிகிறது போலும்.

நீ கவனித்தாயா தோகையினி, அவள் உடுத்தி இருக்கும் பச்சை பட்டாடை அவளின் எழிலை இன்னும் அதிகப்படுத்தி காட்டுகிறது. அதற்கு பொருத்தமான தங்க ஜரிகையிலான மேலாடை அவள் முகத்தின் பொலிவை பன்மடங்காக்குகிறது.”

“ஆம் மதனி. அவளிடமிருந்து என்னால் விழிகளை விலக்கவே இயலவில்லை” என்றவளின் குரலில் மறந்தும் பொறாமை உணர்வு இல்லை, மனம் முழுவதும் பெருமை மட்டுமே நிறைந்திருந்தது.

“நமக்கே இவ்வாறு இருக்கிறது என்றால், புலவனும், சிற்பியும் கண்டால்…”

“மதனி அவர்கள் சமுத்திராவை இன்னும் காணாமலா இருப்பார்கள்… மருத இளவரசியின் புகழ் பாட எவராக இருப்பினும் சுதந்திரம் இருக்கலாம். ஆனால், மருத தேசத்து இளவரசியின் அழகினை வர்ணிக்கவோ, சிலை வடிக்கவோ நிச்சயம் அனுமதி இருக்காது. சரிதானே?”

“சரிதான். உனக்கு மருத நாட்டின் பட்டத்துராணி ஆகும் முழு தகுதியும் வந்துவிட்டது” என்று புன்னகையுடன் கூறியவர், சற்று உள்ளார்ந்த குரலில் ஏக்கம் இழையோட, “உன்னை மீண்டும் பழையபடி பார்ப்பதில் எத்தனை நிறைவாக இருக்கிறது தெரியுமா…” என்றார்.

“மன்னித்து விடுங்கள் மதனி. சிறுபிள்ளைத் தனமாக என்னையும் வருத்தி உங்கள் அனைவரையும் வருத்தி விட்டேன்” என கூறியவளின் முகம் வாடிவிட்டது.

“என்ன மருத மகாராணியாரே! உமக்கு மருத இளவரசர் கூறிய புத்திமதிகள் அனைத்தையும் காற்றினில் கலக்க விட்டுவிட்டீர்கள் போலும்” என்று வருணதேவி கேலி பேசினார். தீட்சண்யருக்கு தோகையினி எதற்காக வருந்தினாலும் அதில் பிடித்தம் இல்லை என்பதனை வருணதேவியும் நன்கு அறிந்திருந்தவர் ஆயிற்றே!

தீட்சண்யரைப் பற்றி கூறியதும், நொடிப்பொழுதினில் மலர்ந்த தோகையினியின் முகம், லேசாக சிவந்து, “என்ன மதனி. அது எல்லாம் ஒன்றும் இல்லை” என்றவளின் குரல் காற்றில் கரைந்து மிக மெலிதாக ஒலித்தது.

அதற்குள் பூஜையினை முடித்த சமுத்திரா அவர்கள் இருவரிடமும் வந்தாள். தோகையினியின் சிவந்த முகத்தை ரசித்துவிட்டு, “என்ன அக்கா எனது தமையனைப் பற்றி ஏதோ பேச்சு நடக்கிறது போலும்?” என வருணதேவியிடம் கேட்டாளும் ரசனையான பார்வையை தோகையினியின் மீது செலுத்தினாள்.

“என்ன சமுத்திரா பூஜை முடிந்ததா? ஆமாம் நீ இப்பொழுது தானே வந்தாய், உன் தமையனைப் பற்றி பேசியதை எப்படி கணித்தாய்?”

“இதில் என்ன இருக்கிறது அக்கா. இதோ இவரின் சிவந்த முகமே உணர்த்தி விடுகிறதே!” என்றாள் கட்டுப்படுத்திய புன்னகையோடு.

“என்ன சமுத்திரா. நீயும் சேர்ந்து விட்டாயா?” என்றபடி பொய் கோபத்தினைக் காட்டிய தோகையினி, மேலும் தொடர்ந்து சற்று இலகுவான குரலில், “அது போகட்டும் சமுத்திரா நாம் புறப்படலாம் இல்லையா?” என கேட்டார்.

“நான் தயாராக இருக்கிறேன். புறப்படலாம் வாருங்கள்” என்றபடி அவர்களுடன் இணைந்து சென்றாள்.

அரண்மனை வாயிலில், வெண்ணிற குதிரைகளைப் பூட்டி, அழகான ரதமும், அந்த ரதத்தினைத் தொடர்ந்து குதிரை பூட்டிய வண்டி ஒன்றும், அவ்விரு வண்டிகளுக்கு முன்னேயும் பின்னேயும் பாதுகாப்பிற்காக சில காவலர்கள் தத்தம் குதிரைகளிலும் தயார் நிலையில் இருந்தனர்.

அங்கே வீற்றிருந்த ரதமானது, அதன் முன்னே இரண்டு குதிரைகளை பூட்டி, அதன் கடிவாளங்கள் இரண்டும், ரதத்தினை ஓட்டுவதற்காக முன் இருக்கையில் அமர்ந்திருந்த சாரதியிடமும் (ரதம் ஓட்டுபவர்), சாரதியின் பின்புறம் சிலர் அமரும் அளவு போதிய இடைவெளியும், அதற்கு மேலே வெயிலில் இருந்து காக்கும் பொருட்டு அழகிய கோபுரமுமாக ரதம் முழுவதும் வெள்ளி முலாம் பூசப்பட்டு கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தது.

அரசகுல பெண்கள் மூவரும் ரதத்தினில் ஏற, தோழிப்பெண்கள் பின்னால் இருந்த வண்டியில் ஏறிக்கொள்ள, அவர்கள் அனைவரும் கோட்டையில் இருந்து இரண்டு காத தொலைவினில் அமைந்துள்ள பொன்னேரிக்கு சென்றனர்.

பொன்னேரி வேங்கை நாட்டின் இயற்கை வளம் நிறைந்த பகுதிகளில் அதிமுக்கியமான இடம். வேங்கை நாட்டிலேயேயும், அதன் சுற்று வட்டாரத்திலும் கொள்ளளவின் அடிப்படையிலும், ஆழத்தின் அடிப்படையிலும் மிகப்பெரிய நன்னீர் ஏரி பொன்னேரி மட்டுமே. இங்கே பலவகையான பறவைகள் மனதினைக் கொள்ளை கொள்ளும்படி இருக்கும்.

அரச குலப்பெண்கள் ஏரியை அடைந்ததும், அனைவரும் ஏரி நீரின் அழகிலும், அங்கு இருந்த பறவைகளின் அழகிலும் மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், சமுத்திர தேவிகை மட்டும் அனைவரின் பார்வைக்கும் அந்த ஏரியின் அழகை ரசிப்பது போல காட்டிக் கொண்டாலும், அவளது ஆராய்ச்சியான பார்வை, ஏரியின் அருகினில் வளர்ந்திருந்த செடிகளில் விழுந்தது.

வேங்கை நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றபொழுது, பொன்னேரியின் நினைவு அவளுக்கு சுத்தமாக இல்லை. ஆனால், வேங்கை நாட்டிற்கு வந்த பிறகு, வருணதேவி அவளிடம் வேங்கை நாட்டில் இருக்கும் முக்கியமான இடங்களை குறிப்பிட்டு அவளை அழைத்துச் செல்வதாக கூறியபொழுதே, பொன்னேரியின் பெயரைக் கேட்டதும் அவளுக்கு அந்த சிந்தனையே உதித்தது.

‘இதை எப்படி நான் மறந்தேன். வேங்கை நாட்டில் இவ்வளவு பெரிய ஏரி இருக்கிறது. இதன் நினைவு எப்படி இல்லாமல் போனது?’ என மனதிற்குள் எண்ணிக்கொண்டவள், அப்பொழுதே, “விரைவில் பொன்னேரிக்கு அழைத்துச் செல்லுங்கள் அக்கா. வேறு எங்கும் வேண்டாம்” என்று வருணதேவியிடம் கூறிவிட்டாள்.

தற்பொழுது ஏரியினை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம், 'வைத்தியர் கூறிய பொழுது, மருத தேசம் முழுவதும் உள்ள ஏரிகளின் அருகே உள்ள இடங்களை ஆராய்ந்தாயிற்று. எந்த பலனும் கிடைக்கவில்லை. அப்பொழுதே இந்த ஏரியின் நினைவு எப்படி இல்லாமல் போனது. இதுதான் மிகப்பெரிய ஏரி என தந்தை அடிக்கடி கூறியுள்ளாரே. அப்படி இருந்தும் இந்த ஏரியை எப்படி மறந்து விட்டேனோ?

எவ்வாறோ இப்பொழுதேனும் இங்கே வர முடிந்ததே. வைத்தியர் கூறிய மூலிகை மட்டும் இங்கு கிடைக்குமாயின்…’ அதை எண்ணும்பொழுதே அவளது மனம் மகிழ்ந்தது.

வைத்தியர் கூறிய மூலிகை தெரிகிறதா என்ற சமுத்திராவின் ஆராயும் பார்வை மலர்ந்தது. ஏரியின் அருகில் வளர்ந்திருந்த செடிகளில் அந்த மூலிகையும் இருக்கவே, ‘கிடைத்து விட்டது. நிச்சயம் இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அந்த பெண்ணின் வைத்தியத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்’ என்று சமுத்திரா அகம் மகிழ்ந்தார்.

உடனடியாக தம்முடன் வந்த மருத தேசத்து காவலர் ஒருவரை அழைத்து, கரடு மலை வைத்திய சாலைக்கு ஒரு ஓலையை அனுப்பினார். கூடவே அந்த மூலிகை செடியையும், செடியின் விதைகளையும் சுட்டிக் காட்டி இதனையும் பத்திரமாக கொண்டு சேர்க்கும்படி கூறினார்.

“ஆகட்டும் இளவரசி” என்றபடி அந்த காவலர் அவர் சொன்ன வேலைகளை செயல்படுத்த தொடங்கினார்…

வெகுநேரமாக சமுத்திராவின் செயலை ஆராய்ந்தவர்கள், அவளின் அருகே வந்து, “என்ன இளவரசி இங்கு வந்தும் அரச அலுவல்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!” எனக் கேலிப் பார்வையில் வருணதேவி கேட்டார்.

“இல்லை அக்கா. மன்னித்து விடுங்கள். வைத்திய சாலைக்கான உதவி இது. இதனை தள்ளிப்போட இயலவில்லை. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று தவிப்புடன் சமுத்திரா கூற,

“நான் வேடிக்கைக்காக கூறினேன் சமுத்திரா. இதற்கெல்லாம் விளக்கம் தேவையே இல்லை. நீ நாட்டின் பணியில் பெரிதும் உதவுகிறாய் என்கிற செய்தி எங்களுக்கும் அவ்வப்பொழுது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. உன்னை நினைத்தால் மிகவும் சந்தோசமாக இருக்கிறது” என்றார்.

பிறகு அனைவரும் அந்த இடத்தை நன்கு சுற்றி பார்த்துவிட்டு, அரணமனைக்கு திரும்பினர். அங்கே அவர்களுக்கான மற்றுமொரு சுபசெய்தி காத்திருந்தது.

அரண்மனைக்கு சென்றவர்களை சேயோனும், அருளோனும் வரவேற்றனர்.

அருளோனை சில மாதங்கள் கழித்துப் பார்க்கும் தோகையினி, அகமும் முகமும் மலர்ந்து, “வாருங்கள் அண்ணா. நலமாக இருக்கிறீர்களா?” என தமையனிடம் நலம் விசரிக்கலானாள்.

“நலம் தோகையினி. உன்னை இப்படி பொலிவுடன் காண்பது எத்தனை நிறைவாக இருக்கிறது தெரியுமா?”

“நன்றி அண்ணா. நீங்கள் சென்ற காரியம் வெற்றி தானே?”

“எங்கே அம்மா. புவனகிரி நாட்டிற்கு உதவுவதற்காக சென்றோம். சென்ற சில நாட்கள் போரில் ஏதிரி அணியை பின்னோடச்செய்தோம். அப்பொழுது பதுங்கிய சௌந்திர நாட்டினர் இதுவரை எவ்வளவு தேடியும் கிட்டவில்லை.

புவனகிரி மன்னருடன் சேர்ந்து இத்தனை நாட்களும் அவர்களைத் தேடினோம். பிறகு மன்னர், இனி அவர்களே பார்த்துக் கொள்வதாக கூறி, எங்களை அனுப்பி விட்டார்.”

“மகிழ்ச்சி அண்ணா. உணவருந்தினீர்களா? நான் பரிமாறவா?”

“நான் பசி ஆறிவிட்டேன் தோகையினி. உனக்காக இன்னும் ஒரு சுபசெய்தி காத்திருக்கிறது” என்றார் மகிழ்வுடன்.

“என்ன அண்ணா?” என்று ஆர்வமுடன் கேட்ட தோகையினியின் விழிகளும் பேசி நின்றது.

பல நாட்கள் இல்லையில்லை இல்லையில்லை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து, இதழோடு முகமும் பேச நின்றாள் தோகையினி. அதனை சகோதர்கள் இருவரும் ஆதுர்யத்துடன் பார்த்தனர்.

“சந்திர நாட்டிலிருந்து செய்தி வந்துள்ளது” எனக்கூறி சேயோன் இடைவெளி விடவும்,

“அவர் பத்திரமாக போய் சேர்ந்துவிட்டார் தானே அண்ணா” என்றவள் முகம் நிமிரவே இல்லை, தமது வெக்கப்பூச்சினை மறைப்பதற்காக.

“ஆம் தோகையினி. அது மட்டுமல்ல சந்திர நாட்டிற்கான மன்னரையும் மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் தேர்ந்தெடுத்து விட்டாராம்” என சேயோன் கூறினார்.

இந்த செய்தி பெண்கள் மூவருக்குமே புதிது. அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகை தெளிவாக தெரிந்தது.

“யார் இளவரசே?” ஆர்வம் மேலோங்க சமுத்திரா கேட்டாள். அவளுக்கும் தெரியும்தானே கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்திர நாட்டிற்கு பொருத்தமான மன்னரை தந்தையார் தேடிக்கொண்டிருப்பதும், எவரும் பொருத்தமாக கிடைக்காததால் தந்தையார் மனம் வருந்துவதும். அப்படி இருக்க இப்பொழுது வீரேந்திர மருதரே ஒருவரை தேர்வு செய்திருக்கிறார் என்றால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? என்னும் ஆர்வம்.

ரூபனரைப் பற்றியும், அவர் ஜீவசுடர் நதியோரம் மலைக்கள்ளர்களை அழித்த கதையினைப் பற்றியும், மருத சேதத்தில் நவிரனை அழித்தது பற்றியும் சேயோன் கூறி, ரூபனரை மன்னராய் நியமிக்கப்போவதையம் கூறி முடித்தார்.

சேயோன் கூறக்கூற, அனைவருக்கும் ரூபனரின் மீது பெரும் மதிப்பு வந்தது.

“என்ன நவிரனையே அழித்து விட்டாரா? அப்படி என்றால் மாவீரர்தான். வாள் பிடித்து போர் செய்யும் வீரன், ஆயுதமின்றியும் வெல்கிறார் என்றால் அவர் வீரம் போற்றுதற்குரியதே.

அவரால் நாட்டிற்கு வெளியே வரும் பிரச்சனைகளையும், நாட்டின் உள்ளேயே முளைக்கும் எதிரிகளையும் அழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். அதனாலேயே தந்தையார் அவரை தேர்வு செய்திருப்பார்” என சமுத்திரா கூறவும்,

அனைவரும் சமுத்திராவை பெருமையாக பார்த்தனர். “உம்முடைய தந்தையாரின் எண்ணங்களுக்கு நீ சொற்றொடர் அமைப்பாய் போல சமுத்திரா” என்றார் அருளோன்.

“என்ன இளவரசரே எதுவும் பிழையாக கூறிவிட்டேனா?”

“இல்லை சமுத்திரா. நீ மிகச் சரியாகத்தான் கணித்திருக்கிறாய்?” என்றார்.

“ஆகட்டும் இளவரசரே பட்டாபிஷேக விழா எப்பொழுது?” சமுத்திராவிற்கு அத்தனை ஆர்வமாக இருந்தது.

“அழைப்பு வந்தது விட்டது சமுத்திரா. இன்னும் ஐந்து தினங்களில் ஏகாதசி திதியில், திருவோண நட்சத்திரத்தில் ஒரு முகூர்த்த தினத்தை குறித்திருக்கின்றனர்.”

“நல்லது இளவரசே! எப்படியோ சந்திர நாட்டிற்குரிய பிரச்சனை தீர்ந்தது. இனி அந்த அரசர் நல்லாட்சி புரிந்து மக்கள் துயரை தீர்க்க வேண்டும்.”

“சரி சமுத்திரா, சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் உன்னை மருத தேசத்தில் சேர்த்து விடும்படி ஓலை அனுப்பி இருக்கிறார். நாளை அதிகாலையில் புறப்படத் தயாராயிரு.”

“ஆகட்டும் இளவரசே.”

“என்ன அதற்குள் புறப்பட வேண்டுமா?” சற்றே வருத்தத்துடன் வருணதேவி கேட்டார்.

“நான் இங்கு வந்து பல நாட்கள் ஆகி விட்டதே அக்கா. விரைவில் மீண்டும் வருகிறேன். தற்பொழுது தந்தையின் சொல்லை நிராகரிக்க இயலாது. அவர் புறப்பட சொல்கிறார் என்றால் நிச்சயம் காரணம் இருக்கும்” என சமுத்திரா பதில் தந்தாள்.

“ஆகட்டும் சமுத்திரா. நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆமாம், இப்பொழுது தோகையினிக்கு எந்த தடையும் இல்லை அல்லவா?” என்றார் சற்றே கேலியான குரலில்.

அவர் கூறியதன் பொருள் உணர்ந்த சமுத்திரா, “ஆமாம் ஆமாம். இனி தமையன் நாடு திரும்பிவிடுவார். இந்நேரம் தந்தையாருக்கு இவர்கள் இருவரைப்பற்றிய செய்தி கிடைத்திருக்கும். இனி விரைவில் திருமண வைபவம்தான். ஒரு வேளை திருமண ஏற்பாடுகளை கவனிக்கத்தான் தந்தையார் என்னை உடனே வர சொல்லியிருப்பார் போல” என்று சமுத்திரா மகிழ்வோடு கூறினார்.

திருமணத் தடைகள் தகர்ந்ததாலும், இனி விரைவில் தீட்சண்யரின் கரம் பிடிக்கப்போகிறோம் என்ற எண்ணத்தாலும், முகம் முழுவதும் சிவந்திட மிகுந்த மகிழ்ச்சியில் தோகையினி இருந்தார்.

1 Like