சத்ரிய வேந்தன் - 16

சத்ரிய வேந்தன் - 16
0

சத்ரிய வேந்தன் - 16 – சத்ரிய வீரன்

சந்திர நாடு மிகவும் பழமையான, பாரம்பரியம் நிறைந்த நாடு. தென்னாற்றங்கரையோரம் கோட்டையை அமைத்து பல தலைமுறைகளாக ஆண்டு வந்தனர் சந்திர நாட்டின் மூதாதையர்கள். இதுவரை சந்ததி இல்லை என்ற நிலையே வந்திடாத நாட்டிற்கு, அருள் வேந்தருக்கு வாரிசுகள் இன்றி போகவே, இப்பொழுது இப்படி ஒரு இக்கட்டான நிலையை அடைந்திருந்தது.

சந்திர நாட்டின் பாரம்பரியத்தினை தெளிவுற அறிந்த மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதர், அந்த பாரம்பரியம் சிறிதும் தொய்வடையாத வண்ணம் பொருத்தமான மன்னரை தேர்வு செய்ய விரும்பினார்.

சந்திர நாட்டு மன்னர்களின் வீரத்தையும், அவர்களின் நற்பண்புகளையும், தலைமைதாங்கும் விதத்தையும் தெளிவுற அறிந்தவராதலால் அந்த வம்ச மகுடத்தை முடிசூட பொருத்தமான மன்னரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடி வந்தார்.

விஜயபுரி நகரத்தில் ரூபனரின் வீரத்தையும், போரில் மலைக்கள்ளர்களால் விஜயபுரி மன்னர் வீழ்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், நிலைகுலையாமல், தொய்வடையாமல் படையை தலைமை தாங்கி எதிரிகளை அழித்த ரூபனரின் ஆளுமையையும் பற்றி கேள்விப்பட்டு, ரூபனர் மீது பெரும் மதிப்பு கொண்டார்.

அதன் பிறகு, மருத தேசத்திற்கு விருந்திற்காக வருகை தந்த ரூபனர், நவிரனை அழித்து, தமது வீரத்தை மீண்டுமொருமுறை நிரூபித்ததோடு, நவிரன் யுத்த விதிமுறைகளை மீறி வெல்லத் துடித்த பொழுதும் அவனை வென்று தம் வீரத்தையும், தைரியத்தையும் நிலைநாட்டியது சக்கரவர்த்தி மனதில் மகிழ்வை தந்தது.

தமது இரண்டு வருட தேடலின் பயனாய், சந்திர நாட்டிற்கு மன்னராகும் தகுதியோடு அவர் ரூபனரைப் பெற்றார். அதன்பிறகு துளியும் தாமதிக்காமல் தம் அரசவையில் முக்கிய மந்திரிகளுடனும், தலைமை குருவிடமும் தமது கருத்தினை முன்வைத்தார். அவர்களும் சக்கரவர்த்தியின் முடிவை சரியென ஆதரித்தனர். சந்திர நாட்டிற்கு மன்னர் கிடைத்துவிட்டார் என்ற மகிழ்வில் அனைவரும் இருக்க, தலையில் இடியாய் இறங்கியது அந்த செய்தி.

சந்திர நாட்டின் அரசர் அருள் வேந்தர், தம் நாட்டிற்கான பொருத்தமான மன்னர் கிடைத்து விட்டார் என்பதனை உள்மனதில் உணர்ந்தார் போலும், இத்தனை ஆண்டுகளாக தேறுவதும், குன்றுவதுமாக இழுத்துப் பிடித்து வைத்திருந்த உயிரை இறைவன் பாதத்தில் சமர்பித்திருந்தார்.

அருள் வேந்தர் இறந்த செய்தியினை, மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் கேள்விப்பட்டதும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை துரிதப்படுத்தினார்.

தீட்சண்யரை வேங்கை நாட்டிலிருந்து சந்திர நாடு திரும்பும்படி செய்தி அனுப்பிவிட்டு, அவர் கடந்து வரும் நாடுகளில் அவருக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி, சந்திர நாட்டின் எல்லையிலிருந்து அரண்மனையை அடையும் வரை மருத வீரர்களையும், ரூபனரையும் மருத தளபதியின் தலைமையில் இணைந்து செல்லும்படி கட்டளையிட்டிருந்தார்.

ஏனெனில், அருள் வேந்தர் மறைவுக்கு பின்னர், இன்னும் எஞ்சி இருக்கும் சதிக் கூட்டத்தினால், எப்பொழுது வேண்டுமானாலும் எந்த ஆபத்து வேண்டுமானாலும் நெருங்கலாம். அதனாலேயே தீட்சண்யர் தனியே பயணிக்காத வகையில் பார்த்துக் கொண்டார்.

மேலும், தீட்சண்யருக்கு தனியாக ஒரு செய்தியை படைத்தளபதி மூலம் அனுப்பி இருந்தார் வீரேந்திரர். அதில் அருள் வேந்தரின் மரணம் குறித்தும், ரூபனரை மன்னராக தேர்வு செய்ததைக் குறித்தும் அனுப்பிவிட்டு, அருள் வேந்தரின் இறுதி சடங்கை கவனிக்க சந்திர நாடு சென்று விட்டார்.

அருள் வேந்திரின் இறுதி சடங்குகளை சகல மரியாதைகளோடும், அரசகுல வழக்கப்படியும் செய்தவர், அனைத்து காரியங்களையும் முடித்த கையோடு சந்திர நாட்டின் அரசவையில் தமது முடிவைக் கூறினார். சக்கரவர்த்தி மீது அளவுகடந்த நம்பிக்கையை வைத்திருக்கும் அரசபையினரும் தங்களது சம்மதத்தைக் கூறினர். மன்னர் இல்லாத அரியணை அபசகுணம் என்பதினால், விரைவில் முடிசூட்டு விழா வைத்துக் கொள்ளலாம் என மந்திரி பெருமக்களும், மன்னரும் முடிவு செய்தனர்.

அதன்பிறகு, தீட்சண்ய மருதர் சந்திர நாடு திரும்பியதும், அவருடன் அனைத்தையும் கலந்துரையாடிவிட்டு, பட்டாபிஷேக விழா ஏற்பாட்டினை கவனிக்கும்படி கூறியவர், மேலும் சில வேலைகளையும் கொடுத்திருந்தார்.

** ரூபனருக்கு, வீரேந்திர மருதர் மூலம் சந்திர நாட்டின் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம் தெரியப்பட்டிருந்தது. ‘தமக்கு இருக்கும் தார்மீக பொறுப்பினை சரியாக செய்ய வேண்டும்’ என்கிற எண்ணம் மட்டுமே தற்பொழுது அவர் மனம் முழுவதும் நிறைந்திருந்தது.

சத்ரிய வம்சத்தில் பிறந்த ரூபன சத்ரியர், அவர்களது வம்ச வழி தோன்றலாய்… வீரத்தோடும், தைரியத்தோடும், நிமிர்வுடனும் வளர்ந்தார்.

குழந்தைப் பருவத்திலேயே அன்னையை பறிகொடுத்தவராதலால், தந்தையின் கண்டிப்பிலேயும், அவர் கற்றுக் கொடுத்த சத்ரிய தர்ம நெறிமுறைப்படியும் வளர்ந்தார்.

சத்ரியர்களுக்கே உரித்தான வாள் பயிற்சி, வில் எய்தும் பயிற்சி என அனைத்து வீரம் சார்ந்த பயிற்சிகளையும் சிறப்பான முறையில் கற்று தேர்ந்தவருக்கு விஜயபுரி நகரத்தின் படை வீரராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

ரூபனர் வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையாய் போனதினால், தாயாரிடம் மிகுந்த ஒட்டுதலுடன் வளர்ந்தார். ரூபனரின் தாயாருடைய இழப்பு அவரை மிகவும் பாதித்தது. அதன் பிறகு சிரிப்பைத் தொலைத்து, இறுக்கத்துடன் வலம்வர தொடங்கினார்.

அதற்கேற்றாற்போல், அவருடைய தந்தையின் குணமும் அவ்வாறே இருக்க, அவருடைய கண்டிப்பான வளர்ப்பு அவரை மேலும் இறுக்கமாகவே வளர செய்தது.

மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பேசுவார் என்ற நிலையில் இருந்தார். தனிமையின் சுமையை பொறுக்கமுடியாததால், நாட்டின் பணியிலேயே நாள் முழுவதிலும் மூழ்குவத்திலும் அவருக்கு சம்மதமே.

தமது தந்தையார் இருந்த பொழுதே படை வீரனாய், நாட்டின் பணியைத் தொடங்கியவர், ஒரு போரில் அவர் தந்தையார் இறந்த பின், விஜயபுரி நகரத்தின் தளபதியாக தலைமையேற்றார். மேலும் மேலும் தமக்குள் இறுகாமல், தளபதி என்கிற பொறுப்பு, அவரை பிறருடன் ஓரளவு இணக்கமாக இருக்க வைத்தது.

மிக இயல்பாய் இல்லாவிடினும், ஓரளவேனும் தமது இறுக்கத்தை தளர்த்திருந்தார்.

நாட்டின் தளபதியாய், சக படைவீரர்களிடம் இறுக்கமாக இருந்தாலும், இல்லாவிடினும் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு தளபதியாக இருக்கும்பொழுது அங்கே வீரமே பிரதானம், பிற வீரர்களிடம் கண்டிப்பும் அவசியம் என்பதால் இறுக்கமான தோற்றம் உதவியாகவே இருக்கும்.

ஆனால், இனி அரசர் என்கிற நிலை வந்தால், மக்களிடம் அவ்வாறு இருக்க இயலாதே!

‘உங்களுக்கு அணைத்துமாய் நான் இருக்கிறேன்’ என்கிற நம்பிக்கையை மக்கள் மனதினில் விதைக்க வேண்டும். மக்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப நம்பிக்கையை அவர்களிடம் விதைக்க வேண்டியது தம்முடைய பொறுப்பு என்று உணர்ந்திருந்தார்.

சத்தியத்தையும், தர்மத்தையும் கடைப்பிடித்து, மக்களின் நலனை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டு செயல்பட வேண்டும். சக்கரவர்த்தி கொடுத்த பொறுப்பினை மிக சிறப்பாக செய்ய வேண்டும்.

ஆனால், இயல்பைத் தொலைத்து, இறுக்கம் தளர்ந்து எத்தனை நாட்கள் புன்னகையுடன் வலம் வர இயலும். யாருமற்ற தனிமை தரும் இறுக்கத்தை போக்க வழி தெரியாது, தமக்குள் விடை தேடி அலைந்து கொண்டிருந்தார்.

** சந்திர நாட்டின் பிரதான அரண்மனை மிகவும் பழமைவாய்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த அரண்மனையும், அதன் கோட்டையும் இன்றும் கம்பீரம் குறையாமல் வீற்றிருந்தது.

கோட்டை சுவர்கள் நல்ல உயரத்துடனும், கோட்டையின் நுழைவாயில் அதற்கு ஈடான உயரத்துடனும் கம்பீரமாய் வீற்றிருந்தது. கோட்டையினுள் அமைந்திருந்த அரண்மனை மூன்று அடுக்குகளாக உயர்ந்திருந்தது.

நிலவின் ஆளுமையின் கீழ் பூமி வந்திருந்த நேரம் அரண்மனையில் ஏற்றியிருந்த தீபங்கள் அழகாய் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அரண்மனையின் மூன்றாம் தளத்தில், தமக்கென ஒத்துக்கப்பட்டிருந்த அந்த பிரமாண்ட அறையின் முகப்பில் தமது கைகள் இரண்டையும் பின்புறம் கட்டியபடி நிலவினையே பார்த்தபடி நின்றிருந்தார் ரூபன சத்ரியர். அவர் மனம் முழுவதும் இனி இறுக்கம் தளர்த்து இயல்பாய் வலம்வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.

பட்டாபிஷேக விழா ஏற்பாட்டுகள் துரிதமாக நடந்து வந்தது. பட்டாபிஷேக விழாவிற்கு இன்னும் மூன்று தினங்களே எஞ்சி இருந்த நிலையில், ரூபன சத்ரியரைக் காண மருத இளவரசர் தீட்சண்யர் வந்தார்.

அதனை ரூபனரிடம் தெரிவிக்க வாயிற்காவலன் ரூபனரிடம் சென்று, “தளபதியாரே! தங்களைக் காண இளவரசர் தீட்சண்யர் வந்து கொண்டிருக்கிறார்” என்றார்.

தமது சிந்தனையை கைவிட்டவர் தீட்சண்யரைக் காண அறையின் உள்ளே சென்றார்.

தீட்சண்யர் அறையினுள் நுழைந்ததும், “வாருங்கள் இளவரசே! வணக்கம். சொல்லி அனுப்பி விட்டிருந்தீர்கள் என்றால், நானே தங்கள் இடம் நோக்கி வந்திருப்பேனே!” என்றபடி இன்முகத்தோடு வரவேற்றார்.

“வணக்கம் ரூபனரே. அதனால் என்ன, நான் உங்களிடம் பேச விரும்பினால், நான் வந்து பார்ப்பதில் தவறேதும் இல்லையே! அதுதானே முறையும்” என்றபடி ரூபனரின் கேள்விக்கு பதில் கொடுத்தாலும், ரூபனர் இலகுவாக இல்லை, எதையோ எண்ணி கவலை கொள்கிறார் என்பதனை அவரது வாடிய முகத்திலிருந்து உணர்ந்து கொண்டார்.

என்னதான் ரூபனர் புன்னகை முகமாக வரவேற்றாலும், அவருடைய புன்னகை அவரது விழிகளில் பிரகாசிக்கவில்லை. அதோடு இத்தனை நேரமும் தமது இயலாமையை எண்ணி வருந்திக்கொண்டு இருந்தவரால், நொடிப்பொழுதினில் இயல்புக்கு திரும்ப முடியவில்லை. அதனால் தீட்சண்யரின் பார்வையில் அவரது வாடிய முகம் எளிதில் விழுந்தது.

“தங்களுக்கும் சக்ரவர்த்தி போலவே குணம் இளவரசே! புகழ்வதற்காக கூறவில்லை, மனதினில் பட்டதைத்தான் கூறினேன் இளவரசே” என்றார் தயக்கத்துடன். எங்கே தாம் புகழ்வதை தவறாக எண்ணிவிடுவாரோ என்கிற தயக்கம்.

“நீங்கள் தயங்க வேண்டாம் ரூபனரே. நான் உங்களை தவறாக எண்ணவில்லை. அதோடு என்னிடம் உரிமையுடன் பேசுங்கள். எனக்கும் உங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான் இருக்கும். என்னை உங்கள் நண்பனைப்போன்று எண்ணிக்கொள்ளுங்கள். பெயரை சொல்லியே அழைக்கலாம்” என்றார் தீட்சண்யர்.

தீட்சண்யரின் நட்பு வட்டம் அதிகம். ஒருவரை பிடித்துவிட்டால், நண்பனாக்கி விடுவார். அத்தனை எளிமையானவர். ஆனால் தீட்சண்யர் அவ்வாறு கூறியதும் ரூபனர்தான் அதிர்ந்து விட்டார். “நான் எப்படி இளவரசே உங்களை…” என தயங்கினார்.

“ஆம் ஆம் நீங்கள் எண்ணுவதும் சரிதான். நீங்களோ இன்னும் சில தினங்களில் அரசர். நான் சாதாரண இளவரசன் தானே! என்னிடம் எப்படி நட்பு பாரட்டுவீர்கள்” என்றார் பொய் வருத்தத்துடன்.

அதைக் கேட்டதும் ரூபனர் பதறிவிட்டார். “இளவரசே என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். நான் அப்படி எல்லாம் நினைபேனா?”

“நினைக்கவில்லை என்றால் என்னை பெயரை சொல்லி அழைத்திருப்பீர்களே”

“ஆகட்டும் தீட்சண்யா. இனி நீ என் உற்ற நண்பன். எனது முதல் நண்பனும் கூட” என்று இறுதி வார்த்தையைக் கூறும் பொழுது ஸ்ருதி குறைந்து, ஒரு சிறு பெருமூச்சினை விட்டார்.

இலகுவாக பெயரை சொல்லி அழைத்ததோடு, ஒருமைக்கும் மாறியதால் தீட்சண்யர் மிகவும் மகிழ்ந்தார். ஆனால் மேற்கொண்டு ரூபனர் கூறிய விஷயம் அவருக்கு மன வருத்தம் தந்தது. “ஏன் ரூபனா? உனக்கு இதுவரையில் நண்பர்கள் என்று யாரும் இல்லையா?”

“ஆம் தீட்சண்யா! படை வீரனாக சேர்ந்த பொழுது, தளபதியின் மகன் என யாரும் என்னிடம் நட்பு பாராட்ட மாட்டார்கள். நானும் இலகுவாக இல்லாமல் சற்று இறுக்கத்துடனேயே இருப்பேன், அதனாலும் அவர்களுக்குள் தயக்கம். தளபதி ஆன பின்பு, அனைவரும் என்னை மதித்தார்கள். தளபதி, படைவீரன் என்கிற வேறுபாடு வேறு, அதுவே அவர்களை என்னிடமிருந்து தள்ளி வைத்துவிட்டது.

குரு குலத்திலும், என்னிடம் எவரேனும் பேசினாலும் நட்பு பாராட்டும் அளவு சென்றதில்லை. எனது இறுக்கமும், ஒதுக்கமும் கூட காரணமாய் இருக்கலாம்.” இதைக்கூறும் பொழுது, ரூபனரின் முகம் சொல்லொண்ணா துயரத்தை பிரதிபலித்தது.

அறையினுள் நுழைந்த பொழுது இருந்த, ரூபனரின் வாடிய முகத்தோற்றம் தீட்சண்யர் மனதினில் எழுந்தது. ‘ஆக இவன் தனிமையை எண்ணி இத்தனை நேரமும் கலங்கி இருக்கிறான். இல்லையேல் அது தொடர்பாக… ஆகையால்தான், என்னை நண்பனாய் ஏற்றுக்கொண்டதும் இவனும் அறியாமல் இத்தனை நேரம் இருந்த மனதின் சுமையையே புலம்புகிறான் போல’ என எண்ணியவர்,

ரூபனரிடம், “ரூபனா! நீ எதை நினைத்தோ வருந்துவது போல இருக்கிறாய்? இன்னும் மூன்று தினங்களில் முடிசூட்டு விழா. உனக்கு ஏதேனும் குறை இருந்தால், தயக்கமின்றி என்னிடம் பகிர்ந்துகொள்” என்றார் உண்மையான அக்கறையுடன்.

அவர் தன்னை நண்பனாய் ஏற்றுக் கொண்டதாலோ, இல்லை அவர் மீது இருந்த நன்மதிப்பினாலோ, இல்லை மனதின் பாரம் தாங்கமாட்டாமலோ தமது மனக்கவலையை தீட்சண்யரிடம் பகிந்து கொண்டார்.

“ரூபனா! உனக்கே புரிகிறது, உன் இறுக்கத்திற்கு காரணம் தனிமை என்று. தீர்வு தெரிந்த பிறகும் குழப்பம் எதற்கு?” என்று தீட்சண்யர் நிறுத்தவும், அவரை கேள்வியாக புரியாத பாவனையுடன் பார்த்தார் ரூபனர்.

“உம் வாழ்வை, உனது துணைவியாருடன் பகிர்ந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. விரைவில் நல்ல முடிவை எடு. ஒரு நண்பனாய் உனக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராய் இருக்கிறேன்” என்றார் மாறா புன்னகையுடன்.

இதுவரை இந்த கோணத்தில் ரூபனர் சிந்தித்தது இல்லை. அதோடு எந்த பெண் மீதும் அப்படியொரு அபிப்ராயம் தோன்றியதும் இல்லை. அவர் மிகவும் தயங்கி நின்றார்.

“என்ன ரூபனா! நீ முழிப்பதைப் பார்த்தால், திருமணம் என்கிற எண்ணமே எழுந்ததில்லை போலும்” ரூபனரின் தோள்பற்றி கேட்டார்.

“ஆம் இள…. தீட்சண்யா. இதுவரை அந்த எண்ணம் இல்லை. இனி அப்படி ஒரு எண்ணம் வந்தால் நிச்சயம் சொல்கிறேன்.”

“உனக்கு எப்பொழுது தோன்றுவது? நீ எப்பொழுது தனிமைத்துயர் போக்கி இன்முகத்தோடு வலம்வருவது? கடவுளே! என் நண்பன் கொஞ்சம் மந்த புத்தி உடையவன். அவனுக்கு ஏற்ற துணையை அவன் கண்களில் விரைவில் காட்டி, அப்பொழுது அவனது புத்திக்கும் உரைத்துவிடு…” என்றார் கைகள் இரண்டையும் வான் நோக்கி நீட்டியவாறு.

வானத்து தேவதைகள் “தாதஸ்து” என கூறினார்கள் போலும். தீட்சண்யர் வேண்டுதல் விரைவில் நிறைவேற இறைவன் அருள் புரிந்தார்.

“என்ன தீட்சண்யா கேலி செய்கிறாயே!”

“பார் ரூபனா. இன்னும் சில நாட்கள் கழித்து, நீ இந்த நாட்டின் மன்னனாய் தொண்டு செய்ய தொடங்கியபின், அண்டை நாடுகளில் நடக்கும் சுயம்வரங்களில் நீ பங்கேற்க வேண்டும். புரிகிறதா?”

“அதனை அப்பொழுது பார்ப்போம் தீட்சண்யா. சரி என்ன காரணம் தீட்சண்யா இந்த இரவு வேளையில் வந்திருக்கிறீர்?”

மெலிதாக புன்னகைத்தவர் ரூபனரிடம், “ரூபனா! நான் உன்னிடம் அரச அலுவல் குறித்து சிறிது பேசவேண்டும்.”

“என்ன தீட்சண்யா? எதைப்பற்றி?”

“கார்முகிலன்…” என்றார் சிறு பெருமூச்சுடன்.

ரூபனரும் சந்திர நாடு வரும் வழியில் கார்முகிலனின் செயல்களைப் பார்த்திருந்ததால், தீட்சண்யர் சொல்ல வருவதை உணர்ந்து கொண்டார்.

“சொல் தீட்சண்யா. நாம் என்ன செய்ய வேண்டும்?”

“ரூபனா! நான் இரண்டாண்டுகளுக்கு முன்பு சந்திர நாடு வந்த பொழுது, நாட்டில் ஆங்காங்கே சதி வேலைகள் நடந்துவந்தது. ஒவ்வொரு சதியாய் போராடி முறியடித்து, அதனை செய்பவர்களை அழித்து… பெரும் போராட்டமாக இருந்தது.

குறுக்கு வழியில் நாட்டை கைப்பற்ற எத்தனை முயற்சிகள்? ஒருவழியாக சிலரை அழித்த பின்னர்தான் தெரிந்தது, இன்னும் ஒரு சதி கூட்டம் எஞ்சி இருப்பது. அவர்கள் யார் என்று கண்டறியவே வெகு காலம் ஆனது. பிறகு ஒரு வழியாக அவர்களை கண்டுபிடித்த பின்பு, தலைமறைவாகி விட்டனர்.

அவர்களின் சதிகளை ஒருவழியாக முறியடித்து விட்டோம். அதன் தலைவன் தான் கார்முகிலன், மன்னரின் உறவினர். அவன் சந்திர நாட்டை கைப்பற்ற மறைமுகமாக எவ்வளவோ முயன்றான். ஒரு கட்டத்தில் நான் அவனை கண்டுபிடித்ததும், இனி அவனால் நாட்டினை அடைய முடியாது என தெளிவுற தெரிந்து, நாட்டினை அழிக்க முயற்சி செய்து வருகிறேன்.”

“என்ன கொடுமையிது தீட்சண்யா. அவன் ஆள முடியவில்லை என்பதற்காக அழிக்க நினைக்கிறானா?”

“ஆம் ரூபனா! இப்பொழுது அந்த மனநிலையில்தான் இருக்கிறான்.

இந்த நாட்டின் மன்னனாய் நீ பொறுப்பேற்ற பின்பு, இந்த நாட்டினை வளப்படுத்துவது எத்தனை முக்கியமோ, அதே அளவு முக்கியம் கார்முகிலனின் சதி திட்டங்களால் மக்களுக்கு எதுவும் நேராமல் பார்த்துக் கொள்வது.

நீ எவ்வளவு விரைவாக அவனை அழிக்கின்றாயோ, அவ்வளவு நல்லது. உனக்கு என்ன உதவி எப்பொழுது தேவை என்றாலும் தயங்காமல் கூறு.”

“ஆகட்டும் தீட்சண்யா.”

“ரூபனா, இதில் நீ நன்கு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் கண்களுக்கு தெரியாத எதிரிகள் எப்பொழுது எங்கிருந்து தாக்குவார்கள் என்பது நமக்கு தெரியாது.”

“ஆகட்டும் தீட்சண்யா மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறேன்.”

“அதோடு நீயும் கவனமாக இரு.”

“தீட்சண்யா கவலை படாதே. நம் நாட்டு மக்களுக்கு எந்த தீங்கும் வராது. உன் நண்பனுக்கும்தான்” என்றார் புன்னகையோடு.

“உன் மீது நம்பிக்கை இருக்கிறது ரூபனா” என்று புன்னகையுடன் கூறியவர், ரூபனரிடம் விடைபெற்று சென்றார்.