சத்ரிய வேந்தன் - 17

சத்ரிய வேந்தன் - 17
0

சத்ரிய வேந்தன் - 17 – பட்டாபிஷேக விழா

முரசொலி விண்ணை முட்ட

மக்கள் மனதின் மகிழ்வு

முகத்தில் பிரதிபலிக்க

வண்ண வண்ண மலர்களாலும் ,

மஞ்சள் வண்ண அட்சதையாலும் ,

சபையோர்கள் வாழ்த்த

சத்ரிய வம்ச

மூதாதையர்களின் ஆசியோடும்

சந்திர நாட்டினை

ஆண்ட மன்னர்களின் ஆசியோடும்

அதர்மத்தை அழித்து

தர்மத்தை நிலைநாட்டும்

சிறந்த தலைவனாய்

பார் போற்றும் வேந்தனாய்

முடி சூடுவாய் மாவீரனே !

சந்திர நாடு தமது துயர் களைந்து, துளிர்த்து எழும் தருணமாய் அமைந்தது ரூபனரின் பட்டாபிஷேக விழா. சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்திரின் இழப்பு ஈடு செய்ய இயலாத பெரும் துயரம்தான். இருப்பினும் அவர் இரண்டு ஆண்டுகளாக படுக்கையில் பட்ட துயரத்தினை எண்ணிப்பார்க்கையில், மன்னரின் இழப்பினை ஏற்றக்கொள்ளும் நிலையில் இருந்தனர் மக்கள்.

அதோடு மன்னரின் விருப்பமே சந்திர நாட்டினை ஆள ஒரு சிறந்த அரசனை தேர்வு செய்ய வேண்டும் என்பதே. அந்த எண்ணமே இப்பொழுது நிறைவேறும் பொழுது, இதைவிட ஒரு சிறந்த தருணம் வேண்டுமா? மக்கள் விழாவினை சிறப்பாக கொண்டாட தயாராகினர்.

அன்றைய தினம் ஏகாதசி திதியில், திருவோண நட்சத்திரத்தில் அமைந்த சுப முகூர்த்த தினம். பட்டாபிஷேக விழாவிற்கு ஏற்ற நாளாக அன்றைய தினமே குறிக்கப்பட்டிருந்தது.

சந்திர நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் நலனுக்காகவும், சந்திர நாட்டினை ஆளப்போகும் ரூபன சத்ரியரின் நலனுக்காகவும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நாடே விழாக்கோலம் பூண்டது.

அரண்மனை விழா மேடையின் முன்பு முக்கிய விருந்தினர்கள் வீற்றிருக்க, மக்கள் அனைவரும் முடிசூட்டு விழாவை நேரில் காண்பதற்காக கூடியிருந்தனர்.

விழா மேடையில், செவ்வக வடிவிலான மேஜையின் மீது நீல வண்ண பளபளக்கும் பட்டாடை போர்த்தி அதன் மீது நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்தது சந்திர நாட்டின் அரச மகுடம்.

இதுவரை சந்திர நாட்டின் மன்னர்களாக முடிசூட்டியவர்களின் தலையை அலங்கரித்த மகுடம், மிக அழகாக, இத்தனை ஆண்டுகளாகியும் பொலிவு மங்காமல் பிரகாசமாக இருந்தது.

முன் நெற்றியை அலங்கரிக்கும் வண்ணம் அரைவட்ட வடிவினில் தொடங்கி, அதன் மேலே அரை அங்குலத்திற்கு அழகான வேலைப்பாடுகள் செய்யப் பட்டிருந்தது.

அரை அங்குல வேலைப்பாடுகளின் மேல், மகுடத்தின் மத்தியில் அழகான தாமரை போன்ற வடிவம் அமைந்திருக்க, அதன் மத்தியில் அழகான நீள்வட்ட வடிவிலான வெண்ணிற வைரக்கல் ஜொலித்தபடி இருந்தது.

அதற்கு மேலே கோபுர வடிவிலான சிறுசிறு வேலைப்பாடுகள் நிறைந்த வடிவம் இருந்தது. மகுடத்தின் இரண்டு பக்கங்களிலும் மணி வடிவிலான அமைப்பும், அதன் மேலே இரு புறங்களிலும் ஆதவனைப் போன்ற வடிவமுமாக மிக சிறப்பான வேலைப்பாட்டுடன் இருந்தது அந்த மகுடம்.

சுப முகூர்த்த நேரத்தில், மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் ரூபனரின் அழகான சிகையில் அந்த மகுடத்தை சூட்ட, மேடையில் வீற்றிருந்த சந்திர நாட்டு அரசவையினரும், மேடையின் முன்பு வீற்றிருந்த விருந்தினர்களும், சந்திர நாட்டு மக்களும் வண்ண வண்ண மலர்களாலும், மஞ்சள் வண்ண அட்சதையாலும் ரூபனரின் மீது தூவி, ரூபனருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி வழங்கினார்கள்.

ரூபனரின் அழகான ஆங்காங்கே சுருண்டு, தோள்பட்டை வரை நீண்டிருந்த, ஆழ்ந்த கருமை வண்ண சிகையில் சந்திர நாட்டு வம்ச மகுடம் இருக்க, காதினில் குண்டலம் அணிந்து, பிரகாசமான பொலிவான முகத்தில் வீரத்திற்கு அடையாளமாய் சிறுசிறு தழும்புகள் இருக்க, அவரது அகன்ற நெற்றியின் மத்தியில் அரை நிலா வடிவிலான சிகப்பு நிற பொட்டு இருந்தது.

கழுத்திலும், கையின் மணிக்கட்டிலும் பொறுத்தமான நகைகள் அணிந்து, அடர் நீல வண்ண அங்கவஸ்திரம் மேனியில் தவழ, தங்கமும் மஞ்சளும் கலந்த ஆடை இடையிலிருந்து கால் வரை அலங்கரித்திருக்க கம்பீரமாக இருந்தார்.

ரூபனரின் சிகையில் மகுடம் சூட்டியபிறகு, அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் தமது வாழ்த்தொலிகளை எழுப்பினர்.

“மாவீரர் ரூபன சத்ரியர்
வாழ்க!!! வாழ்க!!!”

“சந்திர நாட்டு வேந்தர் ரூபன சத்ரியர்
வாழ்க!!! வாழ்க!!!”

முரசொலி அந்த கோட்டையையே அதிரச்செய்ய, மக்களின் ஆரவாரம் கோட்டையின் மதில்சுவரில் அழகாய் எதிரொலித்தது.

மக்களின் ஆரவார ஒலியோடு, சர்வ அலங்காரத்தோடு நின்றிருந்த குதிரைகள் பூட்டிய ரதத்தினில் நகர்வலம் சென்றார் ரூபன சத்ரியர். மக்கள் அனைவரும் மன்னரின் வருகைக்காக நகர்வலம் வரும் வீதியினில் காத்திருக்க, மன்னரின் ரதம் வரும்பொழுது வண்ணமும், வாசனைகளும் நிறைந்த மலர்களை அவர்மீது தூவி,

“சந்திர நாட்டின் வேந்தர் ரூபன சத்ரியர்
வாழ்க!!! வாழ்க!!!”
என வாழ்த்துப்பாடி தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.

மக்களின் மகிழ்ச்சியை கண்குளிர கண்டு மகிழ்ந்தார் சந்திர நாட்டின் வேந்தர் ரூபன சத்ரியர். நகர்வலம் சென்று கொண்டிருந்தவரை குரோதத்தோடு நோக்கின சில விழிகள்.

“மன்னர் மகுடத்தை சூடி விட்டாயா… சூடிய தலையை விரைவில் கொய்கிறோம்” என தமக்குள் சூளுரைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றனர் அக்கூடத்தினர்.

அரசர் ரூபன சத்ரியர் தமது நகர்வலத்தை முடித்து அரண்மனைக்கு திரும்பினார். அரச விருந்தினர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து, பரிசுகளை வழங்கினார்கள்.

தீட்சண்ய மருதர், ரூபனரை ஆரத்தழுவி தமது மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்.

நம்மீது மரியாதை செலுத்த நம்மைச்சுற்றி பலர் இருந்தாலும், நம்மீது அன்பு செலுத்தும் ஜீவன்கள் நமது வாழ்வையே உயிர்ப்பாய் வைக்கும். இதனை தீட்சண்யரின் அன்பினால் உணர்ந்தார் ரூபனர்.

இதுவரை தந்தையின் அன்பைக்கூட கண்டிப்பில் உணர்ந்தவர், ஓரளவு விவரம் தெரியும் முன்னரே அன்பு செலுத்திய நெருங்கிய உறவுகளை பிரிந்திருக்க, பலகாலமாக மரியாதையை மட்டும் பெற்று வந்தவர், முதன்முறை, நீண்ட நெடிய கொடுமையான காலத்திற்கு பிறகு, நண்பன் என்ற உறவின் மூலம் மனம் நிறைய மகிழ்வை பெற்று வருகிறார்.

தமது மனதினில் இருந்ததை தீட்சண்யரிடம் தனிமையில் இருக்கும் தருணம் தெரிவிக்க, உண்மையில் உறவுகள் சூழ வாழ்பவர்கள் இதனை வேடிக்கையாகவே பார்ப்பர்.

ஆனால், ஆழ்ந்து யோசித்தால் ரூபனரின் தனிமைத்துயர் புரியும். சில தினங்களிலேயே ரூபனரை நன்கு புரிந்து கொண்ட தீட்சண்யர், ரூபனரின் தனிமைத்துயரை உணர்ந்து கொண்டார்.

தீட்சண்யர் ரூபனரை ஆரத்தழுவி, “ரூபனா! இனியும் இப்படி வருந்தாதே. விரைவில் உன் தனிமைத்துயர் விலகும். உன்னோடு உறுதுணையாய் என்றும் நான் இருப்பேன். சரிதானே!” உண்மையான அன்புடன் ஆழ்மனதில் இருந்து கூறினார் தீட்சண்யர்.

"தீட்சண்யா! என்னை எண்ணி கவலை கொள்ளாதே. எனக்கு உற்ற தோழனாய் நீ இருக்கையில் இனி தனிமை எண்ணம் வரவே வராது.

அதோடு என் குடும்பமாய் சந்திர நாட்டு மக்கள் இருக்க நான் எதற்கு தனிமையை எண்ணி வருந்த போகிறேன்" இன்முகத்தோடு ரூபனர் கூறினார்.

ரூபனர் சொல்லி முடித்ததுதான் தாமதம், தன்னிலை மறந்து சிரிக்கத் தொடங்கினார் தீட்சண்யர்.

என்னதான் தமக்கென்று ஒரு பெரிய நட்பு வட்டம் பெற்றிருந்தாலும், நட்பிலும் ஒரு எல்லையுடனேயே பழகுபவர் தீட்சண்யர். உயிர் நண்பர்கள் என்பது வெகுசிலரே. மிகக்குறுகிய காலத்தில், ரூபனரும் உள்ளுணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் நண்பனாக மாறியிருந்தது விந்தையிலும் விந்தை.

“என்ன தீட்சண்யா எதற்காக சிரிக்கிறாய்?”

“ரூபனா நான் என்னையே மறந்து இப்படி சிரித்து எத்தனை காலங்கள் ஆகிறது தெரியுமா? எனது இயல்பை மறக்கச்செய்யும் கடமைகளுக்குள் சுழன்று கொண்டிருந்தேன். உன்னாலேயே எனது இதழ்கள் பல காலம் கடந்து மலர்ந்தது. உன்னிடம் அதிக உரிமை தோன்றுகிறது. எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது.”

“அது சரி. இது வேங்கை நாடு இல்லை தீட்சண்யா. அதோடு நான் தோகையினியும் இல்லை. நான் கேட்டதற்கு பதில் கூறுகிறாயா?”

“ரூபனா போதும் போதும் கேளிக்கை பேச்சுக்கள் வேண்டாம். நானே சிரித்ததற்கான காரணத்தை கூறிவிடுகிறேன்.” தோகையினியை பற்றிய பேச்சினை தொடங்கியதும் சரணாகதி அடைந்து விட்டார் தீட்சண்யர்.

“சொல் தீட்சண்யா”

"அது பெரிதாக ஒன்றும் இல்லை ரூபனா. பொதுவாக மங்கள நாணை சூட்டியபிறகு, ஒரு பெண்ணிற்கு புதிதாய் கிடைக்கும் சொந்தங்களை தம் குடும்பமாய் பாவித்துக் கொள்வார்கள் என்பதை அறிவேன்.

ஆனால், ராஜ மகுடம் சூட்டி முடிசூட்டு விழா நடந்த பின்னர், நாட்டு மக்களையெல்லாம் சொந்த குடும்பமாய் பாவிப்பர் என்பதை முதன்முறை நேரில் பார்த்து உணர்கிறேன் அல்லவா? ஆகையால்தான் என்னையும் மீறி, கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க தொடங்கிவிட்டேன்" என்றார் சிறிப்பினூடே.

“ஆனால் ரூபனா, உன் உயரிய குணத்தை எண்ணி உண்மையில் மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் ஆழ்ந்த குரலில்.

அவருக்கு பதிலாய் சிறு புன்னகையை உதிர்த்த ரூபனர், மேலும் தொடர்ந்து, “தீட்சண்யா இன்றைய பட்டாபிஷேக விழா ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தாய். உன் திருமண வைபோக விழா ஏற்பாடுகளை முன்னின்று செய்ய வேண்டும். எனக்கு எப்பொழுது சந்தர்ப்பம் அமையும்?”

“மறுபடியும் தொடங்கி விட்டாயா? இந்நேரம் தந்தையாருக்கு தெரிந்திருக்கும் எப்படியும் விரைவினில் திருமணம்தான்” என்று வெளியில் கூறியவர், மனதிற்குள் “எல்லாம் இந்த சமுத்திராவினால் வந்தது” என்று எண்ணிக்கொண்டவர் தங்கையின் நினைவில் முகம் மலர்ந்தார்.

“பார் திருமணம் என்றதும் உன் முகம் பிரகாசிக்கிறதே.”

“போதும் போதும் உனக்கும் விரைவினில் நடக்கத்தானே போகிறது! அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன்” என தீட்சண்யர் கூறினார்.

மகிழ்வோடு இன்றைய தினம் ரூபனருக்கு கடந்து கொண்டிருக்க, அவரை அழிப்பதற்கான சதி திட்டங்களை இன்றே தீட்டத் தொடங்கிவிட்டனர் சதி கூட்டத்தினர்.

1 Like