சத்ரிய வேந்தன் - 18

சத்ரிய வேந்தன் - 18
0

சத்ரிய வேந்தன் - 18 – சிவவனம்

எதிலிருந்தோ தப்பிப்பதாய்

மனம் எண்ணுகிறது

விதி உன்னை நோக்கி

என்னை பயணிக்க வைப்பதை

என்று உணரும்

மருத தேசத்து அந்தப்புர மாளிகையில் உணவருந்தி முடித்துவிட்டு, வானத்து நிலவையே வெறித்து பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார் மருத தேசத்து இளவரசி சமுத்திர தேவிகை. நிலவின் ஒளி பூமகள் மேனியில் பட்டு, அவள் வதனத்தை மேலும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது.

“என்ன இளவரசி! சரியாக உணவருந்தவில்லை. கொண்டு வந்த பாலையும் குடிக்காமல் சிந்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? வேங்கை நாட்டிலிருந்து பிரயாணம் செய்த களைப்பு இன்னும் நீங்கவில்லையா?” சமுத்திராவின் தோழிப்பெண் அவரிடம் கேட்டாள்.

“இல்லை வள்ளி. நான் நலமாகத்தான் இருக்கிறேன். இன்று பட்டாபிஷேக விழா நிறைவடைந்திருக்கும், நாளை அண்ணனும் தந்தையும் சந்திர நாட்டிலிருந்து திரும்பி வந்துவிடுவார்கள்” லேசாக வருத்தம் இழையோடிய குரலில் சமுத்திரா கூறினார்.

“என்ன இளவரசி அவர்களை பல நாட்கள் கழித்து பார்க்கப்போகிறீர்கள். ஆனால், தங்கள் முகத்தில் ஆனந்த ரேகை தெரியவில்லையே? பொதுவாக நீங்கள் எந்த பிழையையும் செய்ய மாட்டீர்கள். இம்முறை வழக்கம் போல ஏதேனும் சேட்டை செய்து விட்டீர்களா?”

இளவரசியின் துருத்துருப்பும், விளையாட்டுத்தனமும் நன்கு அறிந்தவள் என்பதால், சமுத்திராவின் வருத்தத்தை இந்த அளவே கணிக்கத் தோன்றியது. ஆனால், அந்த கணிப்பும் ஓரளவு சரியாகவே இருந்தது.

“என்ன வள்ளி எதுவும் தெரியாததைப்போல கேட்கிறாய். இன்று என்னை வேங்கை நாட்டு இளவரசர் அருளோன் இங்கே கொண்டு வந்து விட்டாரே, அப்பொழுது இளவரசி தோகையினியின் ஜாதகத்தை அன்னையாரிடம் தந்து, சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் உங்களிடம் சேர்க்கச் சொன்னார் என்று கூறினார்களே… அப்பொழுது நீயும் என்னுடன் தானே இருந்தாய்” இப்பொழுதும் வருத்தம் மாறா குரலில் இளவரசி சமுத்திர தேவிகை கூற, வள்ளி மேலும் குழம்பினாள்.

“இதனால் நீங்கள் மகிழத்தானே வேண்டும் இளவரசி. எதற்காக வருத்தம்?” உண்மையில் அந்த தோழிப்பெண்ணுக்கு இளவரசியின் வருத்தத்திற்கான காரணம் புரியவில்லை.

“உனக்கு இன்னும் புரியவில்லையா? தந்தையார் ஜாதகம் கொண்டு வர சொல்லி இருக்கிறார் என்றால், அவர் அண்ணனின் விஷயத்தை கணித்துவிட்டார் என்றுதானே அர்த்தம்.

அன்றே அண்ணன் கூறினார், ‘அரச அலுவலில் இருக்கும் தருணம் என்னை அழைத்திருக்கிறாய், நிச்சயம் தந்தையார் கணித்து விடுவார்’ என்று, நான்தான் அப்பொழுது இருந்த பிரச்சனையில் அண்ணன் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இனி நாளை இருவரும் வந்துவிடுவர். என்னதான் தந்தையாருக்கு இதில் மறுப்பு ஏதும் இல்லை என்றாலும், அவரிடம் கூறாமல், நானாகவே ஏதேதோ செய்து விட்டேனே.

அதோடு அண்ணன் வேறு, அவரே தந்தையாரிடம் கூற வேண்டிய விஷயத்தை, அவர் கூறும்முன் நான் செய்த காரியத்தால் தந்தையாரே தெரிந்து கொள்ளும்படி ஆகிவிட்டது. அண்ணனை அழைக்காமல் நானே வேங்கை நாடு சென்றிருக்க வேண்டுமோ?

நாளை இருவரும் வந்துவிடுவார்கள். தந்தையார் வெளி இடங்களில் குடும்ப விஷயத்தை பேச மாட்டார். ஆகவே நாளை நாடு திரும்பியதும்தான் அண்ணனிடமும் என்னிடமும் தாயார் முன்னிலையில் இதனைப்பற்றி பேசுவார். அவர் பேசும் பொழுது இங்கு இல்லாமல் இருக்க வேண்டுமே. அதற்குத்தான் என்ன செய்வது என்று சிந்தனையாக இருக்கிறது.”

“இளவரசி நாளை ஒரு நாள் இல்லாமல் இருந்தால் மட்டும் தப்பிவிட முடியுமா? மறுபடியும் அவர்களைக் காணும் சமயம் உங்களை எதுவும் சொல்லாமல் விட்டுவிடுவார்களா?”

இளவரசி சமுத்திர தேவிகை இதுபோல பலமுறை ஏதேனும் சேட்டைகள் செய்து மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், சேட்டை செய்யும் அத்தனை தருணங்களிலும் மன்னரிடமோ, இளவரசரிடமோ கண்டிப்பாக மாட்டிக் கொள்வார், இதுவரை தப்பியதே இல்லை.

“இல்லை வள்ளி. நாளை தாயாரும், தந்தையாரும் அண்ணனிடம் பேசி முடிவெடுத்த பிறகு, அண்ணனே ஓரளவு சமாளித்து விடுவார். பிறகு அண்ணனையும், தந்தையையும் தனித்தனியே சமாளிப்பது ஓரளவு எளிதாக அமையலாம்.”

சமுத்திரா கூறி முடித்ததும் தன்னையும் அறியாமல் தோழிப்பெண் சிரித்திருக்க,

“வள்ளி நீ சிரிப்பதன் காரணம் புரிகிறது. எப்படி ஆகினும் அண்ணன் வசை பாடுவதில் இருந்து தப்பிக்க இயலாது. கொஞ்சம் குறையட்டுமே.”

“சரி இளவரசி உங்கள் விருப்பப்படி செய்யலாம். எங்கு செல்வதென்று சிந்தியுங்கள்.”

“வள்ளி இப்படி செய்தால் என்ன, சிவவனத்தில் இருக்கும் ஈசன் ஆலயத்திற்கு சென்றால் என்ன? அங்கு சென்றும் வெகுநாட்கள் ஆகிவிட்டது. எப்படியும் மாலை ஆகிவிடும் திரும்புவதற்கு.”

“ஆனால், அது மிகவும் அடர்ந்த, ஆபத்தான வனம் ஆயிற்றே இளவரசி. அங்கே செல்ல அனுமதி கிடைக்குமா? அதோடு அங்கு செல்வதற்கு பதில், இளவரசர் கடிந்து கொள்வதே மேல் இல்லையா இளவரசி.” அத்தனை ஆபத்தான வனத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டுமா என்கிற எண்ணமே வள்ளியின் மனதை தவிக்கச் செய்தது.

“நான் அதற்காக மட்டும் கூறவில்லை வள்ளி. சந்திர நாட்டிற்கு பொருத்தமான மன்னர் கிடைத்து, அண்ணன் சென்ற வேலை நல்லபடியாக முடிந்து நாடு திரும்பினால், ஆலயத்தில் உள்ள நூற்றியெட்டு மாடத்திலும் நெய் தீபம் ஏற்றுவதாக வேண்டி இருந்தேன். அதை நிறைவேற்ற வேண்டும் அல்லவா?”

“ஆனாலும் இளவரசி…”

“தயங்காதே, ஆபத்து இருக்கும் இடத்திற்கு ஏன் செல்லப்போகிறோம்? ஆலயம் செல்லும் வழியில் எந்த அச்சமும் இல்லை. நல்லபடியாக சென்று நல்லபடியாக திரும்பி விடுவோம்… நானே அன்னையாரிடம் கூறி அனுமதி பெற வேண்டும் என்ற கவலையில் உள்ளேன். நீ வேறு? சரி வா அன்னையை காண செல்வோம்.”

வள்ளிக்கும், இளவரசி சமுத்திர தேவிகைக்கும் நன்கு தெரியும், மருத மகாராணி லலித்தாம்பிகை தேவியார் கோயில் கைங்கரியம், வேண்டுதல் என்று கூறினால், நிச்சயம் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று.

அவர்கள் எண்ணப்படியே, கடவுள் மீது அதிகம் பற்று கொண்ட, மருத மகாராணி லலித்தாம்பிகை தேவியார், ஆலயம் செல்வதற்கு அனுமதி அளித்துவிட்டார். தகுந்த பாதுகாப்புடன் செல்லவேண்டும் என்று திரும்ப திரும்ப வலியுறுத்திய பிறகே அவரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டது.

“கண்டிப்பாக நாளையே செல்ல வேண்டுமா? தந்தையும், அண்ணனும் நாடு திரும்பும்பொழுது நீ இங்கே இருக்க வேண்டாமா சமுத்திரா?”

“அம்மா! அவர்கள் இருவரும் வந்துவிட்டால், எனது வேண்டுதலைக்கூட மறந்துவிடுவேன். நான் வேண்டியது நிறைவேறிய பிறகு கால தாமதம் செய்யலாமா?”

“நானும் நாளை உன்னுடன் வரலாம் என்றால், உன் அண்ணனைப் பார்த்தே இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அவன் சந்திர நாடு சென்ற சமயம் கூட, நான் நமது குலதெய்வ கோயிலுக்கு சென்றிருந்ததால், அவனை வழி அனுப்பக்கூட இயலவில்லை.

சரி சமுத்திரா. நீ விடியலில் புறப்பட வேண்டும் அல்லவா. நீ சென்று உறங்கு. நல்லபடியாக போய் வர வேண்டும் மகளே” என தலையை ஆதுர்யத்துடன் தடவிக் கொடுத்தார்.

“நன்றி அம்மா. கவலைப்படாதீர்கள் அண்ணன் நல்ல படியாக இருக்கிறார். நானும் நல்லபடியாக சென்று வந்துவிடுவேன்” என்று புன்னகையுடன் கூறி விடைபெற்றாள்.

** “ரூபனா! எதற்காக என்னை அழைத்தாய்? ஏதேனும் முக்கியமான விஷயமா?” என்றபடி ரூபன சத்ரியரின் அறையினுள் நுழைந்தார் தீட்சண்யர்.

“வா தீட்சண்யா. உன் உதவி தேவைப்பட்டது” என்று கூறியபடி தீட்சண்யரின் முன் விஜயமானார் ரூபனர்.

ரூபனர், அரச உடைகளைக் களைந்து மிக சாதாரணமாக உடை அணிந்து, தலையில் தலைப்பாகையும், நீண்ட பெரிய முறுக்கு மீசையுமாக ஆளே மாறி அடையாளம் தெரியா வண்ணம் இருந்தார்.

“என்ன ரூபனா இது? நீ பேசவில்லை என்றால், இது வேறு யாரோ என்று எண்ணியிருப்பேன்”

“அப்படியானால் பொருத்தமாக மாறு வேடம் போட்டிருக்கிறேன் அல்லவா?”

“மிக பொருத்தமாக. ஆனால், இந்த வேளையில் எதற்காக?”

“தீட்சண்யா நீ கற்றுக்கொடுத்ததை செயல் படுத்த வேண்டாமா?”

“அதற்காக இந்த வேளையில் இதைபோட்டு பார்க்க வேண்டுமா? களைப்பாக இல்லையா? ஓய்வெடுக்க வேண்டாமா?”

“நான் இதை சொல்லவில்லை தீட்சண்யா”

“பிறகு…”

“நகர்வலம்” என்றார் அர்த்தம் பொதிந்த பார்வையுடன்.

“ரூபனா, இன்றே தொடங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.”

“கட்டாயம் இல்லைதான். ஆனால், அவசியம் இருக்கிறதே. மக்களின் மனநிலை தெரிந்து கொள்ள வேண்டும் தீட்சண்யா.”

“சரி எனக்கு புரிகிறது. நாளை விடியலில் நான் தந்தையாருடன் மருத தேசம் புறப்பட வேண்டும். இல்லையேல் நானே உன்னுடன் வந்திருப்பேன்.”

“புரிகிறது தீட்சண்யா நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னிடம் அபிப்பிராயம் கேட்பதற்காகத்தான் வர சொன்னேன்.”

“பொருத்தமாக இருக்கிறது ரூபனா.”

“சரி தீட்சண்யா. நீ உறங்கச் செல். நான் ஏற்பாடு செய்தவர்களுடன் நகர்வலம் சென்று வருகிறேன்” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

தீட்சண்யர் ரூபனரிடம் சந்திர நாடு பரிட்சயம் ஆகும் வரையிலும் தகுந்த பாதுகாப்புடனேயே அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதோடு ரூபனருடனே இருந்து, அவருடைய அனைத்து செயல்களிலும் உதவி புரியும்படி கதிரவன் என்கிற வீரனையும் நியமித்திருந்தார்.

அதன்படி ரூபனரும், கதிரவனும் நகர்வலம் செல்ல மாறுவேடத்தில் கிளம்ப, அவரை சற்று தொலைவில் சாதாரணமான உடையில் பின் தொடர்ந்தனர் சந்திர நாட்டு வீரர்கள் சிலர்.

அரண்மனையின் வெளியே மன்னரும், கதிரவனும் மாறுவேடத்தில் வர, அவர்களைத் தொடர்ந்து வீரர்கள் வெளி வர, தொலைவில் இருந்து கவனித்த இரு விழிகள் குரோதத்துடன் மலர்ந்து, அவர்களை பின்தொடர்ந்தது.

வெளிவந்தவர்கள் மன்னர்தான் என்பதை கார்முகிலனும், பின் தொடர்ந்த வீரர்களும் உறுதிப்படுத்தினர். அதற்கு மகுடம் வைத்தாற்போல் அவர்கள் ஆங்காங்கே நின்று மக்கள் பேசுவதை கவனிக்க, அவர் மன்னர் ரூபன சத்ரியர் என்பதை உறுதிப்படுத்தி விட்டு அங்கிருந்து மறைந்தது அவ்வுருவம்.

நகரத்தில் இருந்த சில இடங்களில் பட்டாபிஷேக விழா சிறப்பினைப்பற்றியும், மருத சக்கரவர்த்தி புகழையும், ரூபனரின் வீரதீர செயல்களைப் பற்றியும், சிலர் இந்த பொன்னான தருணத்தில் அருள் வேந்தர் உடன் இல்லையே என்கிற கவலை கொண்டும் பேசிக்கொண்டிருந்தனர்.

“அரசே! மக்கள் அனைவரும் உங்களுக்கு சிறந்த வரவேற்பினை தருகின்றனர். அவர்கள் மனதில் உங்களுக்கான மரியாதையும், அன்பும் நிறைந்து இருக்கிறது என்பதற்கு இன்று நாம் பார்த்தவைகளே சாட்சி” என்று அகம் மகிழ சந்திர நாட்டு அரசர் ரூபனரிடம் கதிரவன் கூறினார்.

“ஆம் கதிரவா நீ கூறியதும் சரிதான். இவை எல்லாம் மருத சக்கரவர்த்திக்கு அளிக்கும் மரியாதை. இந்த நற்பெயரையும், மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும்.”

மேலும் இருவரும் நகர்வலத்தில் பார்த்ததைப் பற்றியே பேசிக்கொண்டு அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

செல்லும் வழியில் இரண்டு வாலிபர்கள் ஒரு மரத்தின் அடியில் நின்றவாறு பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு வாலிபன் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தெரிந்தது, மற்றொருவன் அவனுக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான்.

ஏனோ மனம் உந்த, கதிரவனை கண்களால் சமிக்ஞை செய்தபடி மெல்ல சென்று அந்த மரத்தின் மறுபக்கம் நின்று கொண்டு அவர்கள் இருவரும் பேசுவதை கவனிக்கலானார்.

“நீ அழுவதை நிறுத்து. இன்னும் எத்தனை நாட்களுக்கு சொந்த இல்லம் செல்ல தயங்கி அழுது புலம்புவாய்? முதலில் உன் இல்லம் செல்வோம் வா” என்று சமாதானம் படுத்திக்கொண்டிருந்தான் ஒருவன்.

“உனக்கென்ன எளிதாக கூறி விடுவாய். என்னைப் போல யாருமே இல்லாத வீட்டில் தனித்திருக்கும் கொடுமை உனக்கும் வாய்ப்பின், என் கஷ்டம் புரியுமோ என்னவோ?” என்றான் மற்றவன்.

இதைக்கேட்கும் பொழுது ரூபனரின் மனமும் கனத்தது. பல காலமாக அவரும் அதே கொடுமையைத்தானே அனுபவிக்கிறார்.

“விதி அவ்வாறென்றால் என்ன செய்ய இயலும்?” என்றான் முதலாமவன்.

“ஒரு வேளை விதி முடிந்து அவர்கள் சென்றிருந்தால், நானும் சமாதானம் அடைந்திருப்பேன். ஆனால் எனது தந்தையும், வாழ்வை அனுபவித்து வாழ வேண்டிய வயதில் என் தங்கையும் அந்த புலிக்கு பலியாகியது என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. எத்தனை மக்கள் அந்த புலியினால் உயிர் துறந்தனர். அதனைக் கொன்று அழித்தாலே நான் நிம்மதி அடைவேன்.”

“அது அத்தனை சுலபம் இல்லை. அது வீரர்களால்தான் முடியும். உன்னை அந்த கானகம் செல்லாது காப்பதே எனக்கு வேலையாகி விட்டது. முதலில் வா உன் இல்லம் செல்வோம்” என்று கூறியபடி அவ்விடம் விட்டு நகர்ந்தனர் இருவரும்.

அவர்கள் சென்றதை உறுதிப்படுத்தி விட்டு, “அவர்கள் பேசிக்கொள்வது உண்மையா?” என ரூபனர் கதிரவனிடம் கேட்டார்.

“ஆம் அரசே! வனப்பகுதியை ஒட்டியுள்ள சோலையூரில், வனத்திலிருந்து வரும் புலிக்கு பலரும் பலியாகி வருகின்றனர். காட்டிலிருந்த புலி எப்படியோ தவறி எல்லைக்கு வந்திருக்க வேண்டும்.”

“தீட்சண்யரிடம் இதனைப்பற்றி தெரிவிக்கவில்லையா?”

“ஏற்கனவே தெரிவித்தாகி விட்டது அரசே. அன்று கார்முகிலனின் கூட்டத்தினரால் கொல்லப்பட்டாரே சந்திர நாட்டின் தளபதி, அவரிடம் தான் இந்த பொறுப்பினை ஒப்படைத்திருந்தார் இளவரசர் தீட்சண்யர். தளபதியாரும், என்னுடன் இன்னும் சில வீரர்களும் இருமுறை கானகத்திற்கு அந்த புலியை வேட்டையாட சென்றிருந்தோம்.

ஆனால் பலன்தான் கிட்டவில்லை. இரண்டு முறையும் அந்த புலி தப்பிவிட்டது. அதன் ஓட்டத்திற்கு, எங்களால் அதனை தொடரமுடியவில்லை. அதோடு அது அடர்ந்த காடு, ஒரு பகுதிக்கு மேல் முன்னேறவும் முடியவில்லை.”

“சரி நாளையே நாம் வேட்டையாட புறப்படுவோம். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்” என்று அரண்மனை நோக்கி திரும்பினார் ரூபன சத்ரியர்.

வீரம் சார்ந்த செயல்களில், ரூபன சத்ரியர் எப்பொழுதும் பொறுமை காக்க மாட்டார். உடனே தீமையை அழித்துவிடும் வேகம் அவரிடம். மன்னராய் முடிசூடிய பொழுதே, ‘பொறுமை அவசியம் அனைத்தையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்’ என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்த விஷயங்கள் அனைத்தும், மக்களின் துயரங்களை கேள்விப்பட்டதும் அவரையும் அறியாமல் மறைந்திருந்தது…

உடனே மக்களின் துயர் போக்கும் வேகம் அவரிடம். அதனாலேயே முடிசூட்டிய அடுத்த நாளே வேட்டைக்கு கிளம்ப உத்தரவு பிறப்பித்து விட்டார்.

மன்னர் ரூபன சத்ரியரும், கார்முகிலனும் அவ்விடம் விட்டு அகன்ற சில நிமிடம் அங்கே நிசப்தமே நிலவியது. சிறிது நேரம் கழித்து சில வீரர்கள் மன்னரை பின் தொடர்ந்து அருகில் இருந்த சாலையில் பின்தொடர்ந்தனர். அவர்கள் கடந்த பின்பு மீண்டும் நிசப்தம்.

அனைவரும் அந்த சாலையை கடந்து சில நிமிடங்கள் கரைந்த பின்னர், அந்த மயான அமைதியை கிழிக்கும் வண்ணம் மரத்திலிருந்து இருவர் இறங்கினர்.

ஆண்களுக்கே உரிய பிரத்யேக உடையில், தலையில் தலைப்பாகையுடன் இருந்த இருவரும் தாங்கள் எண்ணி வந்த செயல் வெற்றி அடைந்த திருப்தியில் அங்கிருந்து நகர்ந்தனர்.

இருவரும் அங்கிருந்து கிளம்பி, சில தூரம் நடந்தனர். அங்கே அவர்கள் கட்டி வைத்திருந்த தத்தம் குதிரைகளை எடுத்துக்கொண்டு, சில தூரம் பயணித்து ஒரு பாழடைந்த மண்டபத்தை அடைந்தனர்.

ஏற்கனவே இருள் முழுவதுமாய் ஆக்கிறமித்திருந்த இரவு பொழுதில், அந்த ஆள் அரவமற்ற கானகத்தில் அமைந்திருந்த மண்டபத்தில், மேற்கூரை ஆங்காங்கே இடிந்து இருந்ததினால், நிலவின் ஒளி அந்த கோட்டையின் இடிந்த பாகங்கள் வழியே வந்து ஓரளவு வெளிச்சத்தை கொடுத்தது.

அந்த இரண்டு ஆடவரும், நிலவொளியில் ஓரளவு நிதானத்தில் நடக்க, மண்டபத்தின் உள்ளே இருக்கும் குப்பைகளின் மீதும், சருகுகளின் மீதும் நடக்க, அவர்களது கால்கள் பட்டு, அந்த இடத்தின் நிசப்தத்தை களைத்துக் கொண்டிருந்தது.

இந்த சப்தம் கேட்டு மண்டபத்தின் உட்பகுதியில் இருந்து ஒரு வினோதமான ஒலி வர, இவர்கள் இருவரும் ஒரு விதமான ஒலியை பதிலுக்கு எழுப்பினர். அந்த ஒலியை கேட்ட பின்னர், கோட்டையின் உள் அறையினில் மறைந்திருந்த ஒரு உருவம் கையில் ஒரு தீப்பந்தத்துடன் அவர்கள் எதிரினில் வந்தது.

மூன்றாமவன் கொண்டு வந்த தீப்பந்தத்தின் உதவியினால், மூவரும் கோட்டையின் உட்புறம் செல்ல, அந்த பாழடைந்த கோட்டையின் உட்புறம் ஒரு ஆலமரம் ஓங்கி வளர்ந்து கிளைகளை பரப்பி அந்த மண்டபத்தின் உடைந்த மேற்கூரை வழியே வளர்ந்து செழித்து இருந்தது.

மிகவும் பெரிய ஆலமரம் துளியும் அசையாது, சப்தம் எழுப்பாது இருக்க அதுவே அந்த இடத்திற்கு மிகவும் பயங்கர தோற்றத்தை அளித்தது.

அந்த மரத்தைப் பார்ப்பவர்களுக்கு அதுவே அந்த மண்டபத்தின் எல்லை என எண்ண வைக்கும். ஆனால், அந்த மூவரும் அந்த இடத்தின் பயங்கரத்தை துளியும் பொருட்படுத்தாது, அந்த மரத்தின் பின்னால் செல்ல அங்கே மிக சிறியதாக ஒரே ஒருவர் நுழையும் அளவு ஒரு வழி இருக்க, அதன் வழியே மூவரும் சென்றனர்.

மண்டபத்தின் மேற்பகுதியில் இருக்கும் சேதாரம், கீழ் தளத்தில் இல்லை போலும், கருங்கல் தூண்கள் மேல்பகுதியைத் தாங்கி பிடித்திருக்க, மேல்தளம் இருக்கும் அளவு மிகவும் விசாலமாக இல்லாவிடினும் கிட்டத்தட்ட ஐம்பது பேர் கூடும் அளவு, சேதாரங்கள் பெரிதும் இல்லாமல் நல்லவிதமாக அவ்விடம் இருந்தது.

நிலவின் ஒளி துளியும் தீண்டாத கீழ்தளத்தில், ஆங்காங்கே தீப்பந்தங்கள் சுடர் விட, அந்த இடமே மஞ்சளும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒளிர்ந்தது.

அங்கே ஏற்கனவே சற்று முன்னர், மன்னர் ரூபன சத்ரியர் நகர்வலம் வரும் பொழுது, மரத்தின் அடிப்பகுதியில் மன்னர் ரூபனர் பார்வையில் படும்படி பேசிக்கொண்டிருந்த இருவர்களும் இருக்க, அவர்களோடு இணைந்து கொண்டார்கள் இந்த மூவரும்.

“சென்ற காரியம் என்னவாயிற்று” மிக ஆளுமை நிறைந்த குரல் கேட்க, குரல் வந்த திசையில் ஐவரும் திரும்பினர். தூண்களின் பின்புறம் இருக்கும் ஒரு மறைவான பகுதியிலிருந்து மூவர் வெளி வந்தனர்.

அதில் இருவர் நல்ல உடற்கட்டுடன் இருக்க, அவர்களை விட வயதில் சிரியவராக தோன்றிய மூன்றாமவன், மிகுந்த ஆளுமையுடன் இருந்தான்.

“உங்களைத்தான் கேட்டேன்” என அந்த ஆளுமையான மனிதன் கம்பீரமான குரலில் வினவ, மிக தீர்க்கமாய் வெளி வந்தது வார்த்தைகள்.

“நல்ல படியாக முடிந்தது தலைவா. நாங்கள் இருவரும் மரத்தின் மீது அமர்ந்து அரசர் பேசியதைக் கேட்டோம். அவர்கள் நாளையே வேட்டைக்கு புறப்படுவதாக கூறினார்கள்” என்றான் மிகுந்த மகிழ்வுடன்.

“தம்பி உன் யோசனை மிகவும் சரி. நீ சொன்னது போலவே நடந்து விட்டது” என்றான் தலைவர் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

“ஆம் தம்பி. அவன் புலியிடம் தன் உயிரை தொலைக்கக் கூடும். இல்லையேல் அவனுக்கு இருக்கும் வேகத்திற்கு அந்த கானகத்திற்குள் மாட்டிக் கொள்ள வேண்டும். இரண்டில் ஒன்று உறுதி” என்று கூறினான் இரண்டாம் தலைவன்.

அந்த கூடத்தின் தலைவனாய் செயல்பட்ட இளையவன் மெலிதாக புன்னகைத்தான்.

“ஆனால் தம்பி இன்றே அவன் நகர்வலம் வருவான் என எப்படி கணித்தாய்?”

“என்றாவது ஒரு நாள் வருவான் என்றே கோட்டை வாயிலில் காவலுக்கு ஆளை நியமித்திருந்தேன். நம் நல்ல நேரம் இன்றே வந்தவிட்டான்” என்றான் ஏளனமான சிரிப்போடு.