சத்ரிய வேந்தன் - 19

சத்ரிய வேந்தன் - 19
0

சத்ரிய வேந்தன் - 19 – காட்டாறு

கரைபுரண்டு ஓடும் காட்டாறு

கன்னியவளை அழைத்துச் செல்வது

கானகம் நடுவினுலும்

துணை நிற்கும்

வீரனைக் காட்டிடவே

சிவவனம் மிகவும் அடர்ந்த வனம். அந்த வனத்தின் உட்பகுதிகள் பெரும்பாலும் மனிதக் கால்தடம் படாத பகுதிகளே ஆகும். ஆங்காங்கே ஓடும் காட்டாறுகள், பலவகை செடி கொடிகள், ஆபத்தான விலங்குகள், இதுவரை கண்டிராத பறவை இனங்கள், சூரிய ஒளியை உள்ளே அனுமதிக்காத அளவு அடர்ந்து வளர்ந்த மரங்கள் என அந்த கானகம் தனக்குள் எத்தனை அழகை கொண்டுள்ளதோ அந்த அளவு ஆபத்தானதும் கூட.

பரப்பளவில் மிகவும் பெரிய வனமான சிவவனம், மருத தேசத்தில் தொடங்கி சந்திர நாடு வரையும் பரந்து விரிந்து கிடந்தது.

முன்பொரு காலத்தில், சிவவனத்தில் வாழ்ந்த முனிவர் ஒருவர் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து, சிவபெருமானை தரிசித்ததாக வரலாறு இருந்தது.

அந்த மாமுனிவர் தவம் புரிந்து சிவபெருமானை தரிசித்த இடத்தில், அப்பொழுது மருத தேசத்தை ஆண்ட அரசர், ஒரு சிவாலயத்தை எழுப்பி இருந்தார். சந்திர நாட்டில் தொடங்கும் சிவவனத்தினுள் சில மணி நேர பிரயாணத்தில் அந்த ஆலயத்தை அடைந்து விடலாம்.

அதிகாலை சூரியனின் கதிர்கள், சிவவனத்தின் உள்ளே நுழைந்துவிட தவித்து, தமது ஆதிக்கத்தை மரங்களின் கிளைகள் தந்த சிறிய இடைவெளியில் பரப்பி, பொன்னிறமாக சிவவனத்தை மின்ன வைத்துக் கொண்டிருந்தது. கானகத்தின் உள்ளே இருக்கும் ஒற்றையடி பாதையில் சில வீரர்களுடன் பல்லக்கு ஒன்றில் சமுத்திர தேவிகை ஆலயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பொதுவாக பல்லக்கில் செல்வதை இளவரசி சமுத்திர தேவிகை விரும்ப மாட்டார். தன்னை மற்றவர் சுமந்து செல்வதில் அவருக்கு துளியும் பிரியமில்லை. எங்கு செல்வதாகினும் ரதத்தினில்தான் செல்வார்.

ஆனால், சிவவனத்தில் இருக்கும் சிவாலயத்திற்கு பல்லக்கில்தான் செல்ல முடியும். அந்த ஒற்றையடி பாதையில் ரதத்தினில் செல்ல இயலாது. ஆகவேதான் பல்லக்கில் சென்று கொண்டிருந்தார்.

இப்பொழுது கூட மற்றவர்களுடன் நடந்து வருவதற்கு அவர் தயார்தான். ஆனால், அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்படவில்லை.

தேக்கு மரத்தில் அதிக வேலைப்பாடுகள் செய்த பல்லக்கில் இருபுறமும் சிவப்பு நிற பட்டு திரைச்சீலை மறைத்திருக்க, அதன் உட்பகுதியில் அமர்ந்த வண்ணம் ஆலயத்தை அடைந்திருந்தார் இளவரசி சமுத்திர தேவிகை.

சிவாலயம் நாட்டிலிருந்து பல மைல் தொலைவில், வனத்தினுள் இருப்பதினால், அங்கே தினசரி பூஜை நடைபெறுவதில்லை. மாதந்தோறும் சிவராத்திரி தினத்தன்று அந்த ஆலயத்தை சுத்தப்படுத்தி அங்கே வழிபாடு நடைபெறும்.

ஆலயம் கானகத்தின் நடுவினில் இருப்பதினாலும், தினசரி பராமரிப்பு இல்லாததாலும் ஆலயத்தை சுத்தப்படுத்தவே சில மணி நேரங்கள் ஆகும்.

பணியாளர்கள் ஆலயத்தை சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்க, கோயிலின் ஒரு புறத்தில் ஓடும் காட்டாற்றில் நீந்தி விளையாட தொடங்கினார் இளவரசி சமுத்திர தேவிகை.

காட்டாற்றில் நீராடியபடி, கோயிலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார் சமுத்திர தேவிகை. முழுக்க முழுக்க கருங்கல்லினால் கட்டப்பட்ட கோயிலில், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் தூண்கள் இருந்தது. தூண்களின் அழகை எத்தனை முறை ரசித்தாலும் சலிப்புத்தட்டாது. அத்துடன், ஆலயத்தில் செதுக்கியுள்ள சிலைகளும், கோபுர வேலைப்படுகளின் அழகும் வர்ணிப்பில் அடங்காத அழகுடையது.

ஆலயத்தில் தீபம் ஏற்ற நூற்றியெட்டு மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆலயம் மட்டும் நாட்டிற்குள் இருந்திருந்தால், தினசரி பூஜை நடைப்பெற்றிருக்கும் என்று எப்பொழுதும் போல இன்றும் எண்ணி மனம் சோர்ந்தார் இளவரசி.

காலையில் இருந்தே காரணமேயின்றி மனம் சஞ்சலப்பட்டபடி இருக்க, இந்த ஆலயமும், ஆறும் சிறிதே மனதை சமன்படுத்தியது.

ஆலயத்தை ரசித்ததிலும், மன சஞ்சலத்திற்கான காரணத்தை ஆராய்ந்ததிலும் ஆற்றின் ஆபத்தான பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதை இளவரசி சமுத்திரா கவனிக்கவில்லை.

திடீரென்று ஆற்றின் ஓட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இளவரசி நகர்ந்திருக்க, இதனை சற்றும் எதிர்பாராத இளவரசி நிலைமையை சுதாரிக்கும் முன்பு, காட்டாறு அவரை இழுத்துச் செல்ல தொடங்கியது.

இதனைக் கண்டு கொண்டிருந்த தோழிப்பெண்கள் சிலர், கணப்பொழுதும் தாமதிக்காமல் இளவரசியை நோக்கி நீந்த, இன்னும் சிலர் ஆலயத்தை தூய்மை படுத்திக் கொண்டிருந்த பணியாளர்களை அழைக்க, அவர்களும் ஆற்றினுள் குதித்து காட்டாறு செல்லும் வழியில் செல்ல, காட்டாற்றின் வேகத்தின் முன் யாராலும் ஈடுகொடுக்க முடியாமல் இளவரசியை தவற விட்டிருந்தனர்.

ஆற்றில் குதித்த அனைவரும் கரையேற, அனைவர் மனதிலும் அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்கிற குழப்பமே மிஞ்சியது. “இளவரசிக்கு எதுவும் நேரக் கூடாது. அவரை பத்திரமாக மீட்க வேண்டும்” என்ற பிரார்த்தனையே அனைவரின் மனதிலும் நிறைந்திருந்தது.

அங்கே இருந்த காவலர்களில் ஒருவரான குலசேகரன், நிலைமையை உணர்ந்து, உடனடியாக தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டு விரைந்து செயல்பட்டார்.

இளவரசியாரின் துணைக்கென வந்திருந்த தோழிப்பெண்களை இரு வீரர்களுடன் மருத தேசத்திற்கு அனுப்பி வைத்தார். மறுப்பு தெரிவித்த தோழிப்பெண்களிடமும், “இந்த வனம் ஆபத்தானது. இளவரசியை மீட்க வனத்தின் உள்ளே பயணிக்கப்போகிறோம். இது போன்ற தருணத்தில் உங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது” என நிலைமையை புரிய வைத்து அனுப்பி வைத்தார் அந்த வீரர்.

இளவரசியை எண்ணி ஒருபுறம் கவலை எழுந்த போதிலும், அவரை மீட்கும் பணியில் உதவியாக இல்லாவிடினும், உபத்திரவமாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே தோழிப்பெண்கள் நாடு திரும்பினர்.

அவர்களை அழைத்து செல்லும் வீரர்களிடம், மன்னரிடம் தனிமையில் இங்கு நடந்த விஷயத்தை தெரிவிக்கும் படி கூறினார்.

அதோடு அந்த வீரர்களிடம், “நாங்கள் தெற்கு நோக்கி காட்டாற்றை ஒட்டி செல்கிறோம். நாங்கள் செல்லும் வழியில், அடையாளத்திற்காக இடதுபுறம் இருக்கும் கொடிகளை பிணைத்தும், செடிகளை ஒடித்து விட்டும் செல்கிறோம். அதனையும் மன்னரிடம் தெரிவித்து விடுங்கள். எங்களை பின்தொடர ஏதுவாக இருக்கும்” என கூறிவிட்டு, மற்ற வீரர்களுடன் தெற்கு நோக்கி பயணப்பட்டார்.

வழியில் சொல்லி சென்றதைப் போன்றே அடையாளத்தை ஏற்படுத்தி விட்டே சென்றனர். எங்கும் இளவரசி கரை ஒத்துங்கவில்லை என்றதும் மனம் சோர்ந்து போனது வீரர்களுக்கு.

** காட்டாற்றின் பிடியில் சிக்கிய இளவரசி சமுத்திர தேவிகைக்கு ஆற்றின் போக்கிலிருந்து தன்னை மீட்டெடுப்பது பெரும் சிரமமாக இருந்தது. இருப்பினும் தமது போராட்டத்தை கைவிடாமல், முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

அதிக முயற்சிகளின் பின்னர் மிகவும் சிரமப்பட்டு ஒரு இடத்தில் கரை ஒதுங்கியவரால், இத்தனை நேரமும் போராடியதால் ஏற்பட்ட உடல் சோர்வினால் கரையினிலேயே மயங்கி சரிந்திருந்தார்.

அரை மயக்க நிலையில், அருகினில் எங்கேயோ குதிரையின் காலடி சப்தம் கேட்பதைப்போன்று உணர்ந்த சமுத்திரா, ‘அதற்குள் வீரர்கள் பின்தொடர்ந்து வந்து விட்டனரா? நம் நாட்டு வீரர்களுக்குத்தான் எத்தனை வேகம்?’ என மனதிற்குள் எண்ணியவரால் விழிகளைக்கூட பிரிக்க இயலவில்லை.

உடல் சோர்வு மேலும் மேலும் அதிகரிக்க, வெகு நேரம் நீரிலேயே இருந்ததினால் உடல் முழுவதும் விரைத்ததைப் போன்ற உணர்வு. தம்மையும் அறியாமல் முழு மயக்க நிலைக்கு சென்றிருந்தாள் இளவரசி சமுத்திர தேவிகை.

சமுத்திராவிற்கு தமது பாதங்களிலும், உள்ளங்கைகளிலும் லேசாக வெது வெதுப்பான உணர்வு தோன்ற, உடல் முழுவதும் பரவிய குளிருக்கு சற்றே இதமாக இருந்தது. இறுதியாக ஆற்றின் கரையில் மயங்கியதைப் போன்ற உணர்வு, ஆனால் இப்பொழுது தரையினில் படுத்தபடி இருக்கிறோம் என மூளை தெளிவுற உணர்த்தியது.

“எங்கு இருக்கிறோம்? என்ன ஆனது? என அறிந்து கொள்ள மனமும், மூளையும் உந்தினாலும், விழிகளை திறக்க இயலவில்லை. சிரமப்பட்டு முயன்றதில், மூடிய இமைகளுக்குள் கருவிழிகள் இரண்டும் வலப்புறமும் இடப்புறமும் அழகாய் அசைந்தாடியது.

பென்னவளின் முகம் சில மாற்றங்களைக் காட்டவும், கைகளை சூடேற்றும் வேலையை தற்காலிகமாக கைவிட்டு, அவளது முகத்தினை மடியினில் தாங்கினார் சந்திர நாட்டு அரசர் ரூபன சத்ரியர்.

பால் நிலா போன்ற முகத்தில், செதுக்கி வைத்தாற் போல இருந்த செவ்விதழ்களும், கூர் நாசியும், அழகாய் வளைந்த புருவங்களும், பளபளக்கும் கன்னங்களும் அவனுள் எதையோ அசைத்துப் பார்த்ததைப் போன்ற உணர்வு.

தன் எண்ணங்களின் பயணத்திற்கு விரைந்து தடை போட்டவர், அவள் முகத்தில் படர்ந்திருந்த முடிகளை ஒதுக்கி மெதுவாக கன்னங்களை தட்டி, அந்த பெண்ணை எழுப்பும் முயற்சியில் இறங்கினார்.

நா வரண்டது போன்ற உணர்வில், உமிழ்நீரை முழுங்கியவளின் செயலில் அவளது தொண்டைக்குழி ஏறி இறங்க, அதனை கவனித்த ரூபனர், அவள் முகத்தில் தெளிப்பதற்காக வைத்திருந்த நீரை அவளுக்கு புகட்டினார்.

அத்தனை நேரமும் இமைகளை திறப்பதற்கே சிரமப்பட்டவள், தொண்டைக்குழிக்குள் தண்ணீர் இறங்கியதும் சற்றே வலிமை பெற்றவளாய் இமைகளை மெல்லமாய் திறந்தாள். இமைகளைத் திறந்தும் கண்களுக்கு அனைத்தும் மங்களாய் தெரிவதைப் போன்ற உணர்வு.

கண்களை கைகளால் அழுந்த தேய்க்க வேண்டும் போன்று இருந்தது. இருப்பினும் உடலின் சோர்வால் அதனை துளியும் செயல் படுத்த முடியவில்லை. அப்பொழுதுதான் உணர்ந்தால் தலை மட்டும் தரையில் இருந்து சற்று உயரத்தில் இருப்பதை, கூடவே கதகதப்பான உணர்வும். மீண்டும் ஒரு முறை விழிகளை அழுத்த மூடி திறந்தவளுக்கு, காட்சிகள் மெல்ல மெல்ல தெளிவாகியது.

முகத்தின் நேராக சற்றே கவலையும் எதிர்பார்ப்புமாக பார்த்து இருந்தவனின் முகத்தை இதற்கு முன்பு பார்த்ததேயில்லை எனினும், அந்த முகத்தில் இருக்கும் கவலை அவளையும் கலங்கச் செய்தது.

“பெண்ணே! உனக்கு ஒன்றும் இல்லையே. நீ நலமாகத்தானே இருக்கிறாய்?” என்றபடி அவளது முகத்தையே ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தான்.

மீண்டும் ஒரு முறை விழிகளை அழுத்த மூடி திறந்தவள், உமிழ்நீரை மீண்டும் ஒருமுறை தொண்டைக்குழிக்குள் விழுங்கிவிட்டு, அவன் மடியிலிருந்து எழ முயற்சி செய்தாள். அவளது முயற்சியை உணர்ந்து அவள் அமர்வதற்கு தோள்பற்றி எழுப்பி உதவி செய்தான்.

எழுந்தவள் அவனிடமிருந்து விலகி அமர, ரூபனர் அவளது பதிலுக்காக அவள் முகத்தையே ஊன்றி கவனிக்க, அவள் “நீங்கள்…?” என்றாள் கேள்வியாக.

“கேள்வி கேட்டால் பதில் கூற வேண்டும். அதை விடுத்து மறு கேள்வி கேட்கிறாயே?” என்று சலிப்புடன் கூறிவிட்டு, உடையில் இருந்த சருகுகளை தட்டி விட்டபடி எழுந்து நின்றார்.

தன்னைக் காப்பற்றியவரின் மனதை நோகடிக்கிறோமே என வருத்தம் கொண்டாள் சமுத்திரா. அதோடு தம்மை தவறாக புரிந்து கொண்டாரோ என்கிற எண்ணம் ஒருபுறம் இருக்க, ரூபனரிடம், “நீங்கள் தவறாக புரிந்து கொள்கிறீர்கள். இந்த கானகத்திற்குள் யாருமே வர மாட்டார்கள். நீங்கள் எப்படி… இங்கே… ” என ஏதோ திக்கித் தினறியவள், பிறகு ஏதோ நினைவு வந்தவளாய், “அது வந்து… நான் நன்றாகத்தான் இருக்கிறேன். ஆற்றில் நீராடிக்கொண்டிருக்கும் பொழுது, ஆற்று நீரில் அடித்து வந்ததினால் உடல் சோர்வு மட்டும்தான் இருக்கிறது” என அவனது கேள்விக்கும் பதில் அளித்தாள்.

நீராடுவதற்காக நகைகளைக் களைந்து, சாதாரண ஆடையில் இருந்த பெண்ணை இளவரசி என ரூபனரால் யூகிக்க இயலவில்லை. அதேபோல, மிக சாதாரணமாக வேட்டைக்கு செல்லும் உடையினில் இருந்தவரை ஒரு நாட்டின் மன்னர் என்று சமுத்திராவினாலும் யூகிக்க இயலவில்லை.

“ஆற்றில் நீராடினாயா? ஏனம்மா பார்த்து நீராடுவதில்லையா. பார் எத்தனை தூரம் அடித்து வந்திருக்கிறது. நான் இங்கு வரவில்லையெனில் காட்டு விலங்குகளுக்கு இரையாகி இருப்பாய்” என்றார் கண்டிக்கும் குரலில்.

“இது எதிர்பாராமல் நடந்த விபத்து. ஆமாம் நீங்கள் எப்படி இந்த வனத்திற்குள்?”

“வேட்டையாட வந்தேன். வழி தவறி இங்கே வந்துவிட்டேன். உடன் வந்தவர்களும் எங்கே என்று தெரியவில்லை. தாகம் அதிகரிக்கவே, இந்த ஆற்றின் சலசலப்பு சப்தத்தில், ஆற்றில் நீர் பருக வந்தேன். நீர் பருக வந்த இடத்தினில், கரையில் ஒதுங்கியபடி நீ இருந்தாய், உன்னை மீட்டெடுத்தேன்.”

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை” என்றவள் முகத்தில் கவலை படர்ந்தது.

“ஆமாம் பெண்ணே நீ எந்த நாட்டை சேர்ந்தவள்?”

“நான் மருத தேசத்தில் வசிக்கிறேன்” என்றாள் சமுத்திரா.

“ஆகட்டும். உன்னை உன் வீட்டில் சேர்த்து விட்டு நான் நாடு திரும்பிக் கொள்கிறேன்” என்று கூறிய ரூபனரை விசித்திரமாக பார்த்தாள் சமுத்திரா.

பின்னர் நடுக்காட்டில் கிழக்கு, மேற்கு திசையைக்கூட கணிக்க முடியாத இடத்தில், எந்த வழியாக சென்றால் எங்கு சேர்வோம் என்பதே தெரியாது. இப்பொழுது இருக்கும் இடத்தில் என்னென்ன விலங்குகள் வருமோ தெரியாது. இந்த சூழலில் வீட்டில் சேர்த்து விடுகிறேன் என்று சொல்பவரை வேறு எப்படி பார்ப்பது.

அவள் ஏன் இவ்வாறு பார்க்கிறாள் என புரியாது, “என்னவாயிற்று?” என்றார் கேள்வியாக.

“இல்லை நீங்களே வழிதவறி வந்து விட்டதாக இப்பொழுதுதான் கூறினீர்கள். திக்கு தெரியாத காட்டில் என்னை எப்படி அழைத்து செல்லப்போகிறீர்கள் என யோசித்தேன்.”

“அதற்காக இங்கேயே இருக்க இயலுமா? இங்கிருந்து திரும்பத்தானே போகின்றோம்.”

இதுவரையில் சரியாக கவனித்துப் பார்க்கத்தவரை, ஒரு முறை ஆழ்ந்து நோக்கினாள். எதிரில் நிற்பவரின் உடற்கட்டு அவருடைய ஆறடிக்கு மிகவும் பொருத்தமாய் இருந்தது. ஆறடிக்கு பொருத்தமான உடற்கட்டும், முகத்தில் இருந்த சிறு சிறு தழும்புகளும் அவரை ஒரு வீரன் என்று தெளிவுற உணர்த்தியது.

இத்தனை பெரிய வீரன், எதையும் சிந்தனை செய்யாது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசுவது அவளுக்கு வியப்பாய் இருந்தது.

அவளுடைய மனதிற்குள், 'இங்கிருந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறாரே தவிர, எப்படி செல்ல முடியும்? அதில் உள்ள சாதக பாககங்களைப் பற்றி யோசிக்க மறுக்கிறாரே?

இவரே இங்கு வழி தவறி வந்து இருக்கிறார். பின்னர் இப்பொழுதும் அவ்வாறே சிந்தனை செய்கிறாரே?

முதலில்தான் அப்படி பேசினார் என்றால், இருக்கும் சூழலை தெளிவுற எடுத்துரைத்த பின்னரும் இப்படியே பேசுகிறாரே?’ என எண்ணிக்கொண்டு இருந்தாள் சமுத்திர தேவிகை.

அவள் முகம் தன்னை உற்று நோக்கியதையும், இப்பொழுது பலவித பாவனைகளைக் காட்டுவதையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர், “என்ன சிந்தனையிலேயே மூழ்கி விடுகிறாய்? இன்னும் சோர்வாக இருக்கிறதா? பொறு ஏதேனும் பழங்கள் கிடைக்கிறதா என பார்த்து வருகிறேன்” என்ற ரூபனர் அவளுடைய பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து சென்றார்.

“இவர் என்ன ஆலோசனை கேட்பது தான் தெரியவில்லை என்று பார்த்தால், அடுத்தவர் பதில் கூறும் வரை பொறுமை காக்கவும் மாட்டார் போலும். கேள்வியும் இவரே பதிலும் இவரே என்பதன் உதாரணம் இவர்தான் போலும்” என வாய் விட்டே புலம்பினாள்.

சென்றவனை பார்வையால் தேட, ஒரு மரத்தின் மீது வேகமாய் ஏறிக்கொண்டிருந்தார். விழி விரிய அவரைப் பார்த்தவள் மனதில் அழகான திட்டங்கள் அடுக்கடுக்காய் கண்முன்னே விரிந்தது.

இங்கிருந்து எப்படி தப்பிப்பது, எவ்வாறு செல்வது என தன் மனதிற்குள் திட்டம் வகுத்தவளுக்கு இத்தனை நேரம் முகத்தில் படர்ந்திருந்த கவலை மறைந்து நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவியது.

சிலவகை கனிகளுடன் திரும்பிய ரூபனர், அவளுக்கே அனைத்தையும் கொடுக்க, அவள் இருவருக்குமாய் பகிர்ந்து எடுத்துக் கொண்டு அவனுக்கும் கொடுத்தாள்.

“எனக்கு பசிக்கவில்லை. நீ சாப்பிடு” என ரூபனர் கூற,

“தங்கள் பெயர் என்ன?” என்று சம்மந்தமே இல்லாது பதில் கேள்வி கேட்டாள் சமுத்திரா.

‘அது சரி. இவளுக்கு கேட்பதற்கு பதில் கூறும் பழக்கம் துளியும் இல்லை போலும்’ என மனதிற்குள் சலித்தவன், அவளிடம், “என் பெயர் ரூபன சத்ரியர். உன் பெயர் என்ன?” என கேட்டான்.

“நான் சமுத்திர தேவிகை” என்றவள் சிறிது இடைவெளி விட்டு, “நீங்கள் ஏன் பழங்களை உண்ணாமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது நிறைய வேலைகளை கொடுக்கப் போகிறேன். அதற்கான பலம் வேண்டாமா? பழங்களை உண்ணுங்கள்” என்று சாவதானமாக கூறி அவளிடம் இருந்த பழங்களை உண்டு கொண்டிருந்தாள்.

“என்னது எனக்கு வேலையா? அதுவும் நீ ஏவுவாயா?”

“ஆமாம் பின்னர் இங்கிருந்து செல்ல வேண்டாமா? இங்கிருந்து செல்வதற்கான யோசனையை செயல்படுத்த வேண்டாமா?"

“அப்படியானால் இந்த காட்டினில் இருந்து வெளியேற உன்னிடம் திட்டம் இருக்கிறதா?” என ரூபனர் ஆச்சர்யமாக கேட்க, மெல்ல புன்னகைத்து தலையசைத்தாள் சமுத்திரா.

அப்பொழுதுதான் கவனித்தார், அவளுடைய முகத்தில் இருந்த கவலை முற்றிலும் அகன்று, முகம் மிகுந்த மலர்ச்சியுடன் இருப்பதை.

வனத்தில் இருந்து தப்பிக்க மேலும் சில வியூகங்களை யோசித்தபடியே பழங்களை உண்டு முடித்தாள் சமுத்திரா.