சத்ரிய வேந்தன் - 22

சத்ரிய வேந்தன் - 22
0

சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன்

மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள், ஆங்காங்கே கிடைத்த மரக்கிளைகளை கொண்டு நெருப்பு மூட்டியிருந்தனர்.

ஆற்றங்கரையின் அருகினில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் இரண்டு கூடாரங்களை நடுநாயகமாக அமைத்து, அதனை சுற்றிலும் வட்டமாக சிறிது இடைவெளியில் ஆறு கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தது.

நடுவினில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அரச குடும்பத்தினருக்கும், சுற்றிலும் அமைந்திருந்தது காவலர்களுக்குமாக இருந்தது. முதலில் நடுவில் இருந்த கூடாரங்களுக்கு முன்னால் மட்டும் நெருப்பு மூட்டியிருக்க, சிவவனத்தின் இருளினை போக்கிட அந்த வெளிச்சம் மட்டும் போதாமல் போக, மற்ற கூடாரங்களின் முன்பும் நெருப்பு மூட்டப்பட்டிருந்தது.

அத்தனை ஏற்பாட்டின் பிறகும், போதிய அளவு வெளிச்சம் இருந்ததே தவிர, அந்த இடம் பிரகாசிக்கவில்லை. அதுவே அந்த வனத்தின் பயங்கரத்தை பறைசாற்றியது.

அவ்விடம் முழுவதும் தீ ஜுவாலையினால் ஏற்பட்ட மெல்லிய மஞ்சள் வண்ண ஒளியில் ஜொலித்துக் கொண்டிருக்க, அந்த ஏகாந்த சூழலை ரசிக்க இயலாத வண்ணம், மரக்கிளைகள் காற்றினில் அசைந்து ஏற்படுத்தும் சலசலப்பும், அருகினில் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றின் சலசலப்பும், இரவாடி உயிரினங்களான ( இரவில் மட்டும் தன் இருப்பிடத்தை விட்டு வெளிவந்து இரைதேடும் உயிரினங்கள் ) ஆந்தைகள், வௌவால்களின் ஒலியும் சற்றே மிரட்சியைக் கொடுத்தது.

சமுத்திர தேவிகையை வலப்புறம் அமைந்துள்ள கூடாரத்தில் ஓய்வெடுக்க சொல்லி தீட்சண்யர் அனுப்பினார்.

அதன்பிறகு, கூடாரத்தின் முன்புறம் அமைந்துள்ள நெருப்பின் முன்னே ரூபனரோடு அமர்ந்த தீட்சண்யர், “நேற்றுதான் பட்டாபிஷேகம் முடிந்துள்ளது. அடுத்த தினமே உனக்கு கானகத்திற்குள் என்ன வேலை?” என்றார் கோபத்துடன்.

“நண்பா உன் தங்கை சென்று வெகு நேரம் ஆகிவிட்டது. நீ அவளை கண்டிப்பதைப் போன்று என்னையும் கண்டிக்க நான் என்ன சிறுபிள்ளையா?” என்றார் மென்னகையுடன்.

இவர்கள் பேசுவது தெளிவாக செவியினில் விழுந்து கொண்டிருக்க, “என்ன என்னைப் பார்த்தால் சிறு பிள்ளையாகவா இவர் கண்களுக்கு தெரிகிறது. எவ்வளவு தைரியம்?” என்று கூடாரத்தினுள் அதன் உச்சியை பார்த்தபடி படுத்திருந்த சமுத்திரா ஆத்திரப்பட்டாள்.

"அது சரிதான் நான் அவளை கண்டிக்கிறேனா? கண்டிக்க தொடங்கியதுமே எப்படி விழிகளைக் கசக்கிக் கொண்டு நின்றுவிட்டாள் பார்த்தாய் அல்லவா? அதோடு அவளுக்கு பேச்சு சாமர்த்தியமும் அதிகம், எப்படியும் நம்மை அவள் வழிக்கு கொண்டு வந்து விடுவாள்.

அவளை கண்டிக்க நினைத்து நான் ஒவ்வொரு முறையும் தோல்வியைத்தான் தொடர முடியும். ஆனாலும், நான் கண்டிக்க தொடங்கினால் அவளால் தாங்கவே இயலாது தெரியுமா?" என்ற தீட்சண்யர் மேலும் தொடர்ந்து,

“அதோடு நீ இப்பொழுது என்ன கூறினாய்? அவளை சிறுபிள்ளை என்றா? அவள் காதில் விழுந்திருந்தால் அவ்வளவுதான்” என மிக சன்னமான குரலில் தீட்சண்யர் கூறினார்.

திடீரென்று அவர்கள் இருவரும் பேசுவது கேட்காமல் போக, “இந்த அண்ணன் ஏன் இவ்வாறு மெல்லிய குரலில் பேசுகிறார். ஒன்றுமே கேட்கவில்லையே? என்ன செய்யலாம்” என சுய அலசலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் சமுத்திரா.

“அது சரி இனி அவ்வாறு சொல்லவில்லை” என்ற ரூபனர், தொடர்ந்து இந்த கானகம் வந்தத்திற்கான காரணத்தை கூறினார். தீட்சண்யர் சமுத்திராவைப் பற்றி பேசும்பொழுது மட்டும் குரல் தாழ்த்தி பேச, ரூபனர் எப்பொழுதும் போல பேசிக் கொண்டிருந்தார்.

ரூபனர் கூறிய காரணம் முழுவதையும் கேட்டுக் கொண்டிருந்தனர் தீட்சண்யரும், கூடாரத்தினுள் இருந்த சமுத்திராவும்.

“ஆமாம் சோலையூர் மக்கள் என்னிடம் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால், நாட்டில் இருக்கும் சதிகாரர்களை ஒழிப்பதற்கே நேரம் போதாமல் இருந்ததால், தளபதியாரை அனுப்பினேன். அவர்களாலும் அந்த புலியைக் காண இயலவில்லை. சரி நீ பார்த்தாயா? நீ எப்படி படைகளை விடுத்து தனியே வந்தாய்?” என தீட்சண்யர் கேட்டார்.

"நான் சில வீரர்களோடுதான் வந்தேன். எங்கள் பார்வைக்கும் புலி தென்படவே இல்லை. சிறிது தொலைவிற்கு மேல், செல்ல வேண்டாம் என வீரர்கள் காட்டின் பயங்கரத்தை கூறி தடுக்கப் பார்த்தனர்.

ஆனால், அதில் மனம் ஒப்பாமல் கானகத்தின் உள்ளே தொடர்ந்தேன், என் எண்ணப்படியே புலியைக் கண்டு விட்டேன். ஆனால், அது தப்பித்து ஓட எத்தனித்தது. அதன் வேகத்தினால் எங்களால் புலியின் அருகே நெருங்கவே இயலவில்லை.

நான் அதனை பின் தொடர்ந்து வேகமாக காட்டிற்குள் முன்னேற, வீரர்களால் என்னை பின் தொடர இயலவில்லை. ஒரு வழியாக நான் எய்த அம்புக்கு புலி பலியாகிவிட்டது.

அதன்பிறகே வீரர்கள் என்னை பின் தொடரவில்லை என்பதை அறிந்தேன். அதிக தூரம் வந்துவிட்டதால், தாகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. நீரைத்தேடி பருகிவிட்டு திரும்பிவிடலாம் என்று எண்ணினேன். ஒரு வழியாக இந்த காட்டாற்றின் சப்தம் கேட்டு இங்கே வந்துவிட்டேன்" என்று கூறியவரின் மனக்கண்ணில் சமுத்திரா கரை ஒதுங்கி இருந்தது நினைவுகள் எழ, பெருமூச்சொன்றை வெளியிட்டார்.

அதனைக்கண்ட தீட்சண்யர் புன்னகைத்துக் கொண்டு, “கரை ஒதுங்கியவளை மீட்டுவிட்டு, நீ இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறாய் போலும்” என்றார் மென்குரலில்.

இதனைக் கேட்டதும், ரூபனர் விழி விரித்து என்ன பதில் சொல்ல என்று திகைத்துப் பார்க்க, கூடரத்தினுள் இருந்த சமுத்திரா, ‘அவர் எப்படி தெளிவாக பேசுகிறார், இந்த அண்ணன் மட்டும் ஏன்தான் மென்குரலில் பேசுகிறாரோ!’ என்று சலிப்பிடன் எண்ணிக்கொண்டாள்.

“எ… என்ன தீட்சண்யா என்ன கூறுகிறாய்?” என திக்கித்தினறி ஒரு வழியாக தீட்சண்யரிடம் கேட்டுவிட்டார் ரூபனர்.

ரூபனரை ஆழ்ந்து நோக்கிவிட்டு, “ஒன்றும் இல்லை. நீ சமுத்திராவை மீட்காவிட்டால், அதாவது ஒருவேளை அவள் நீரினில் அடித்து வராமல் இருந்திருந்தால், நிச்சயம் இந்நேரம் நீ நாடு திரும்பியிருப்பாய் அல்லவா அதனைக் கூறினேன்.”

ஒரு வேளை அவ்வாறு நடந்திடாமல் இருந்திருந்தால் அந்த நினைவே ரூபனருக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. சில உறவுகள் அன்பை காட்டும், ஆனால் வெகு சில உறவுகளே உரிமையைத் தரும். தம்மை வேலை ஏவிய சமுத்திராவின் செய்கை இப்பொழுதும் மனம் முழுவதும் பன்னீர் பூக்களை தூவியது.

“என்ன ரூபனா! அவ்வப்பொழுது கனவுலகம் சென்றுவிடுகிறாயே?” என்று கூறிய தீட்சண்யரின் பார்வை மீண்டும் துளைக்க,

“ஒன்றும் இல்லை தீட்சண்யா. நாளை நாடு திரும்பி விடுவோமில்லையா அதனைப் பற்றி சிந்தித்தேன்” என ரூபனர் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, கூடாரத்தில் இருந்து சமுத்திரா, “அண்ணா…” என்ற அழைப்புடன் வெளிப்பட்டாள்.

“சொல் சமுத்திரா. இன்னும் உறங்காமல் என்ன செய்கிறாய்? ஆற்றில் அடித்து வந்த சமயம் அடி எதுவும் பட்டு விட்டதா? எங்கேனும் வலிக்கிறதா சமுத்திரா?” பதறியபடி கேள்விகளை அடுக்கினார் தீட்சண்யர்.

“அண்ணா பொறுமை அண்ணா. எனக்கு எதுவும் ஆகவில்லை. தங்களிடம் முக்கியமான விஷயம் ஒன்றினை கேட்க வந்தேன்” என்று தயக்கமாக இழுக்க,

“என்ன சமுத்திரா, என்ன கூற வேண்டும்? என்னிடம் ஏன் இந்த தயக்கம்?”

“நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் அல்லவா?” உள்ளே போய்விட்ட குரலில் சமுத்திரா கேட்க, எங்கே தீட்சண்யர் மறுத்து விடுவாரோ என்கிற பயம் அவள் முகம் முழுவதும் நிறைந்திருந்தது.

“என்னவென்று கூறம்மா? உன் விருப்பத்தை தடை செய்வேனா?”

“அண்ணா! நாளை நாடு திரும்பும் முன்பு சிவாலயத்திற்கு சென்று எனது வேண்டுதல்களை நிறைவேற்றி விட்டு செல்வோமா? நேர்த்திக்கடனை செலுத்தும் வரையிலும் என் மனம் ஒப்பாது அண்ணா. தயவுசெய்து அனுமதி தாருங்கள் அண்ணா.”

சமுத்திராவையே ஆழ்ந்து நோக்கியவர் மென்னகையுடன், “செல்லும் வழியினில் தானே ஆலயம் இருக்கிறது. நிச்சயம் சென்று விட்டு செல்வோம். இதற்காக வருந்துவானேன்” என்று தீட்சண்யர் ஆறுதல் கூறினார்.

“மிக்க நன்றி அண்ணா” என்றவள் முகம் இரவினில் மலரும் அல்லி மலர்களைப் போன்று பிரகாசிக்க, அவள் முகத்தில் இருந்து பார்வையை திருப்ப இயலாமல் ரூபனர் திணறிப் போனார்.

“என்ன வேண்டுதல் என்று இன்னும் கூறவில்லையே சமுத்திரா?” ,ஏற்கனவே வரும் வழியினில், சமுத்திராவின் தோழிப்பெண் வள்ளியை சந்திக்க நேர்ந்தபொழுது, விவரம் தெரிந்து கொண்டவர், மீண்டும் ஒருமுறை அவள் வாயால் கூறட்டும் என்று துருவினார்.

தயக்கத்துடன், “அது… அண்ணா, சந்திர நாட்டிற்கு தந்தையாரின் விருப்பப்படி பொருத்தமான மன்னர் கிடைத்து, நீ நல்லபடியாக நாடு திரும்பி வந்துவிட்டால், ஆலயத்தில் இருக்கும் நூற்றியெட்டு மாடங்களிலும் நெய் தீபம் ஏற்றுவதாக வேண்டி இருந்தேன். சந்திர நாட்டு அரசரும் இருக்கிறார், நீங்களும் இருக்கிறீர்கள். உங்கள் இருவருடனும் சென்று நேர்த்திக்கடனை செலுத்தினால், எனக்கும் மகிழ்வாக இருக்கும் அண்ணா.”

இதனைக் கேட்டதுமே ரூபனரின் மனம் முழுவதும் ஒரு விதமான இதம் பரவியது. ‘தனக்கென்று யாருமில்லை என்று தான் எண்ணியிருக்க, நான் யார் என்றே அறியாத சூழலிலும், தனக்காக, தான் ஆளப்போகும் நாட்டிற்காக ஒரு பெண் கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கிறாள். நான் நல்லவனாக இருப்பேன் என்று உணர்வுப்பூர்வமாக நம்புகிறாள். பெண் இனம் என்ன மாதிரியான இனம்! அவர்கள் இருக்கும் இடத்தினில்தான் மகிழ்வுக்கு குறை ஏது? தன்னலம் மட்டும் எண்ணாமல், முன்பின் தெரியாதவர்களின் நலத்தையும் எண்ணும் உள்ளம் பெண்களிடத்தில் மட்டும்தான் இருக்கும்’ என்று எண்ணிய ரூபனரின் மனதினில் மகிழ்ச்சிக்கு இணையாக சமுத்திராவும் நிறைத்திருந்த்தாள்.

“அந்த சிவாலயம் மிகவும் சக்தி வாய்ந்தது, பொதுவாக சமுத்திரா அந்த மகேசனிடம் தான் பிரார்த்தனைகளை முன் வைப்பாள். நாளை அங்கு சென்றுவிட்டு செல்வோம் ரூபனா” என்று ரூபனரிடம் கூறியவர், சமுத்திராவை நோக்கி, “அப்படியே ஆகட்டும் சமுத்திரா. நீ சென்று ஓய்வெடு” என்று கூறி கூடாரத்திற்கு அனுப்பினார்.

அதன்பிறகு அருகினில் இருந்த கூடாரத்தில், தீட்சண்யரும், ரூபனரும் ஓய்வெடுக்க செல்ல, அன்றைய களைப்பிற்கு படுத்த உடனேயே நித்திரை ஆட்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ நித்ராதேவியின் அருள் பார்வை ரூபனரையும், சமுத்திராவையும் தீண்டவே இல்லை.

வெகுநேரம் இருவரும் மற்றவர்களைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கியிருக்க, “இனி எப்பொழுது மீண்டும் சந்திக்க இயலும்?” என்னும் பெரும் வினா மனதினைக் குடைய, மனதில் தோன்றிய புதுமையான அனுபவத்தையும், இதத்தையும் ரசித்தபடியே கண் அசந்தனர்.

அதிகாலையின் கதிரொளி அந்த கானகத்தில் உள்ளே வர முடியாமல் தினறியபடி இருக்க, சிறு பல்லக்கில் சமுத்திராவை வீரர்கள் சுமக்க, தமது வீரர்களுடன் குதிரையில் முன்னும் பின்னுமாய் பின்தொடர்ந்தனர் தீட்சண்யரும், ரூபனரும்.

பல்லக்கின் முன்புறம் ரூபனரும், தீட்சண்யரும் உரையாடியபடி சென்று கொண்டிருந்தனர். ரூபனரால் உரையாடலில் முழுவதும் கவனம் செலுத்த இயலவில்லை. இந்த அவஸ்தையை தாங்க முடியாத வண்ணம் இருந்தது. ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றம், அவருக்கு இன்பமான சுமையாகவும், அழகான தொல்லையாகவும் இருந்தது.

முயன்று தன்னை நிலைப்படுத்திக்கொண்ட ரூபனர், தீட்சண்யர் உணரா வண்ணம் தன் உணர்வுகளை மறைப்பதாக எண்ணிக்கொண்டார். ஆனால், தீட்சண்யரின் தீட்சண்யமான பார்வையில், ரூபனர், சமுத்திராவின் சிறுசிறு செய்கைகள் கூட தெளிவுற விழுந்தது.

சிவாலயத்தை சிறிது நேர பிரயாணத்தில் அடைந்திருந்தனர். முன்தினம் சுத்தப்படுத்திய ஆலயம் என்பதால், ஆலயத்தை மீண்டும் தூய்மைப்படுத்த அதிக நேரம் தேவைப்படவில்லை. அதோடு கோயிலின் மாடங்களில் ஏற்றுவதற்கான தீபங்களும், நெய்யும் முன்தினம் கொண்டு வந்து வைத்தது அங்கேயே இருந்தது.

அனைவரும் சென்று மனதார சிவபெருமானை வேண்டிக்கொண்டனர். வழிபாடு முடிந்ததும், தீட்சண்யரும், ரூபனரும் ஒரு தூணின் கீழே அமர்ந்துகொள்ள, சமுத்திரா தீபங்களில் நெய்யினை ஊற்றி, திரியினை போட்டு ஆலயத்தின் மாடங்களில் ஏற்ற தொடங்கியிருந்தாள்.

ரூபனர், தீட்சண்யரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், பார்வை சமுத்திராவை வருடுவதை தவிர்க்க முடியவில்லை. ஏனோ நேற்றுவரை இயல்பாய் இருந்த சமுத்திராவால், இன்று அவ்வாறு இருக்க இயலவில்லை. தன் மனதை உணர்ந்த பின்னர், ரூபனரின் பார்வை சிறு தடுமாற்றத்தையும், பெரும் நாணத்தையும் கொடுத்தது.

இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தினை தீட்சண்யர் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால், இது அவர்களின் வாழ்க்கை இதில் நாம் தலையிட வேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்து, கண்டும் காணாமலும் இருந்து விட்டார்.

மனதில் இந்த வேண்டுதலை வேண்டிய பொழுது ரூபனரை தெரியாதுதான். ஆனால், இதை நிறைவேற்றும் பொழுது, மனம் அத்தனை இன்பத்தில் மூழ்கியிருந்தது சமுத்திராவுக்கு.

ஏதோ ஒரு நாட்டின் நலனுக்காக வேண்டிக்கொண்டால், அந்த நாட்டினை தன்னவனே ஆண்டு கொண்டிருக்க, தன்னவனின் செங்கோல் ஆட்சி இந்த பாரெங்கும் புகழ் அடைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து, தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணிய தீட்சண்யர், வீரர்களிடம், “நீங்கள் அனைவரும் சென்று குதிரைகளை காட்டாற்றில் குளிக்க வைத்து, அதனை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லுங்கள். இனி காட்டு விலங்குகளைப் பற்றிய பயம் இல்லையென்றாலும், பாதுகாப்பு அவசியம். அதனால் குதிரைகளுடனே இருங்கள்” என்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்தில், “காலையிலிருந்து எதுவும் உண்ணாமல் இருக்கிறோம். நீ சமுத்திராவுக்கு உதவியாய் இரு. நான் வீரர்களிடம் இப்பொழுது உண்ணுவதற்கு எதையாவது ஏற்பாடு செய்ய சொல்கிறேன்” என்று கூறிவிட்டு ரூபனரின் பதிலை எதிர்பார்க்காமல், தீட்சண்யர் சென்று விட்டார்.

இந்த தனிமை ரூபனருக்கும் தேவைப்பட்டது. பிரிவை எண்ணி கலங்கிய உள்ளம், அவளிடம் பேசிவிட வேண்டும் என்று தவித்தது. ஆனால், தனிமை கிடைத்ததும் சிறிது தயக்கமும் கூடவே எழ, இந்த முரண்பாடுகள் அனைத்தும் ரூபனருக்கு புதுமையாக இருந்தது.

ஆனால் தயக்கம் எழுந்த மறுகணமே அதனை புறந்தள்ளியவர், சமுத்திராவின் அருகினில் சென்று, “ஏதேனும் உதவி செய்ய வேண்டுமா இளவரசி?” என இளவரசி என்கிற வார்த்தையில் சற்றே அழுத்தம் கொடுத்து கேட்க,

“அரசரிடம் வேலை ஏவும் அளவு, நான் பெரியவள் இல்லையே!” என்றாள் ரூபனரின் முகம் நோக்காது.

‘நீ ஒரு இளவரசி என்பதை என்னிடம் மறைத்து விட்டாயே’ என்கிற குற்றச்சாட்டை தாங்கி ரூபனரும், அதேபோல ‘என்னிடம் நீ மட்டும் அரசன் என்பதை மறைத்தாய் தானே!’ என்கிற குற்றச்சாட்டோடு சமுத்திராவும் பேசிக்கொண்டனர்.

சமுத்திரா கூறியதும், “நான் உனக்கு அரசன் இல்லையே சமுத்திரா. தங்கள் சாம்ராஜ்யத்தின் கீழ் கப்பம் கட்டி வாழும் ஒரு சிற்றரசன். இந்த அடியேன் தாங்கள் இடும் கட்டளையை நிறைவேற்ற சித்தமாய் இருக்கிறேன்” என்க, அடக்கமாட்டாமல் சிரித்தாள் சமுத்திர தேவிகை.

“ஏன் சிரிக்கின்றாய்?” என்றார் விழிகள் கூர்மைபெற,

“பின்னர், மருத தேசத்தை ஆளும் என் தந்தையிடம் பேசுவதைப் போல பேசினீர்கள் என்றால், சிரிக்காமல் என்ன செய்வேன்?”

“ஆனால், நீ இட்ட கட்டளைகளை, நேற்று நான் நிறைவேற்றியவன் தானே? இன்று செய்ய மாட்டேன் என சந்தேகம் கொள்கிறாயா?” அழுத்தமான பார்வையுடன் ரூபனர் கேட்க, அப்பொழுதும் அவர் முகம் காணாமல் தன் வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

சமுத்திராவுக்கும் அந்த எண்ணம்தான், நேற்று ரூபனர் சந்திர நாட்டின் அரசர் என்று தெரிந்ததிலிருந்து அதே சிந்தனைதான். ‘ஒரு நாட்டின் மன்னர், அவர் ஏவிய பணிகளை செய்ய பலர் இருந்திருப்பார்கள். இதன் முன்னர் படைத்தளபதியாக இருந்த பொழுதிலும், அவர் வேலை ஏவும் தலைமையில் தானே இருந்திருப்பார். நான் ஒரு இளவரசி என்று கூட என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை, இருப்பினும் நான் கூறிய அத்தனை வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்தாரே? ஏன்?’ என்கிற சிந்தனை மட்டும் தான் மனம் முழுதும் ஆக்கிரமித்து இம்சித்தது.

“இன்னும் பதில் கூறவில்லையே” என்று கேட்டபடி, அவள் செல்லும் ஒவ்வொரு தூணிற்கும் அவளுடன் நடந்தபடியே கேட்க, என்ன பதில் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

“அந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது. தாங்கள்தான் தெளிவு படுத்த வேண்டும். நான் ஏவிய வேலைகளை செய்தீர்களே? ஏன்?”

இப்படி ஒரு வினாவினை ரூபனர் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. என்னவென்று பதில் கூற, ‘உனக்கு சேவைகனாக காலம் முழுவதும் இருக்கவும் தயார்தான். சில நாழிகை இருப்பதில் எந்த கடினமும் இல்லை’ என்ற உண்மையையா கூற இயலும்.

என்ன சொல்வதென தெரியாமல் சில நொடிகளை கழித்தவர், அதன்பின், “உதவி தேவைப்படும் சமயம், உதவி புரியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் ரகம் என்று என்னைப்பற்றி எண்ணிக்கொண்டாயா?” என்றார் மிடுக்குடன்.

“நான் அவ்வாறு கூறவில்லையே. ஒரு நாட்டின் அரசர், சாதாரண பெண் கூறும் வேலைகளை முகம் சுளிக்காமல் செய்தால் ஏன் என்று கேள்வி எழும் தானே?”

‘இவள் இப்படி கேள்வியாய் கேட்பாளானால், என் மனதை தெளிவுற உணர்ந்து கொள்வாளே. சாமர்த்தியமாக சமாளிப்போம்’ என்று மனதினில் எண்ணிக்கொண்டவர்,

“எனக்கு அரச பதவி கிடைத்தது நேற்றில் இருந்துதான். அதன் முன்பு நானும் சாதாரண குடிமகன் தான்.”

“சாதாரண குடிமகனா? படைத்தளபதி என்றல்லவா கேள்விப்பட்டேன்.”

“நேற்று உன்னை நான் கேள்வியாய் கேட்டேன் என்பதற்காக இன்று என்னிடம் சொற்போர் புரிகிறாயா தேவி?” மனம் மிகவும் இளகும் பொழுதும், மனம் கடினமாய் மாறும் பொழுதும் தன்னையும் அறியாமல் தேவி என்றழைப்பதை, ரூபனரும் உணரவில்லை, சமுத்திராவும் உணரவில்லை.

சற்றே விழிவிரித்து அவனை நோக்கியவள் பதில் கூறும்முன்பே, “பரவாயில்லையே. என்னைப் பார்க்கவே மாட்டாய் என்று நினைத்தேன். ஒரு வழியாக உன் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டதே!” என்றார் போலியான வியப்புடன்.

மெல்ல புன்னகைத்தவள், “தீபங்களை ஏற்றிக் கொண்டிருந்த காரணத்தினால், உங்களைப் பார்க்காமல் பதில் கூறினேன். அது ஒரு குற்றமா?” என்றாள் ஆம்பல் மலர்களைப் போன்று மலர்ந்த விழிகளால் ரூபனரை நோக்கியபடி.

அவள் விழிகளையே சிறிது நேரம் அசையாது பார்க்க, அந்த பார்வையை எதிர்கொண்டவளும் ரூபனரையேதான் பார்த்துக் கொண்டிருந்தாள். விழிகள் இரண்டும் மௌனமாய் பல கதைகளைப் பேச, யாரோ வரும் அரவம் உணரவும், இருவரின் பார்வையும் விலகிக் கொண்டது.

சமுத்திரா யார் வருகிறார்கள் என்று பார்க்க முன்நோக்கி நடக்க, ரூபனரும் பின்தொடர்ந்தார். அந்நேரம் தீட்சண்யரும் இவர்களை எதிர்நோக்கி ஆலயத்தின் வாயில் வழியே உள்நுழைந்து கொண்டிருந்தார்.

தீட்சண்யர் சமுத்திராவை நோக்கி, “உணவு தயாராகி விட்டது சமுத்திரா. உன் வேண்டுதலை நிறைவேற்றி விட்டாய் தானே?” என்று கேட்க,

“ஆயிற்று அண்ணா. சொல்வோம்” என்று கூறியபடி மூவரும் சென்றனர். காலை உணவை உண்டு முடித்து மருத தேசம் திரும்பினர்.

அனைவரும் மருத தேசம் திரும்ப, வீரேந்திர மருதர் ரூபனரை சிறப்பாக வரவேற்று உபசரித்தார். அங்கேயே விருந்துக்கு ஏற்பாடு செய்ய, அதை மறுத்த ரூபனர், உடனடியாக நாடு திரும்ப விரும்புவதாக கூறினார்…

‘பட்டாபிஷேக விழா முடிந்தவுடனேயே, மன்னரைக் காணவில்லை என்கிற செய்தி மக்களை வருத்தம் கொள்ள செய்யும்’ என்று உணர்ந்த மருத அரசர் வீரேந்திர மருதரும், ரூபனர் கிளம்புவதற்கு எந்த தடையும் கூறாமல், ரூபனருடன் சில படைவீரர்களோடு சந்திர நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.