சத்ரிய வேந்தன் - 23

சத்ரிய வேந்தன் - 23
0

சத்ரிய வேந்தன் - 23 – ஆலமர மண்டபம்

சந்திர நாட்டின் அரசபையில் வீற்றிருந்த மந்திர பெருமக்களும், உயர் அதிகாரிகளும், தலைமை குருவும் மிகுந்த கலக்கத்தோடு இருந்தனர். நேற்றைய முன்தினம் தான் பட்டாபிஷேகம் முடிந்திருந்தது, அதற்குள்ளாக மன்னரின் நிலை தெரியவில்லை எனில் கலங்காமல் யாரால் இருக்க முடியும்.

‘நாடு எங்கே சதிகாரர்களின் கைக்கு போய்விடுமோ? இல்லை நாட்டினை சதிகாரர்கள் அழித்து விடுவார்களோ?’, என்கிற கவலை மனம் முழுதும் ஆக்கிரமித்து இம்சித்த காலத்தில், விடிவெள்ளியாய், ஆபத்பாந்தவனாய் வந்து சந்திர நாட்டு வம்சத்தின் முடிசூடி, அனைவருக்கும் பெரும் நம்பிக்கையை ஊட்டியவர் ரூபன சத்ரியர்.

ஆனால், பதவியேற்ற அதே நாளில், வனப்பகுதியை ஒட்டியுள்ள சோலையூரில் வாழும் மக்களின் துயர் துடைக்க, ‘நாளை விடியலிலேயே கானகத்திற்கு, அவர்களுக்கு தொல்லையைத் தரும் புலியினை வேட்டையாட செல்வதாக…’ ரூபனர் கூற தலைமை குருவும், மந்திரிப் பெருமக்களும் மிகவும் பதறிப்போயினர். இருப்பினும், அந்த இரவு வேளையில் தீரக்கமாய் முடிவெடுத்து, அதனை அறிவித்த மன்னரிடம் தென்பட்ட உறுதியில், அவர்களால் மறுக்க இயலவில்லை.

மக்களின் துயர் கண்ட மறுநிமிடமே துயர் துடைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள மன்னர் மாபெரும் வரம் அல்லவா… சந்திர நாட்டின் இரண்டாண்டு தவத்தின் பயனாய் ரூபன சத்ரியர் வரமாய் கிடைத்திருந்தார்.

மந்திரி பெருமக்கள் மறுக்காமல் ஒப்புக்கொண்டதற்கு வேறு காரணங்களும் இருந்தது. ஒன்று, ரூபனரின் வீரத்தின் மீது வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கை, மற்றொன்று என்னதான் ரூபன சத்ரியர் மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதரின் தேர்வாக இருந்தாலும், அவரை சந்திர நாட்டினை ஆளும் அளவு சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவருக்கும் ரூபனர் ஒரு சிறந்த அரசர் என்பதனை இந்த செயல் மூலம் நிரூபணம் செய்துவிடலாம் என்று எண்ணினார்கள்.

மக்கள் துயர் போக்க, முடிசூடிய மறுதினமே, தம் உயிரையும் துச்சமென நினைத்து, புலிவேட்டைக்கு சென்று வெற்றி வாகை சூடி வந்த பின்னரும், ரூபன சத்ரியர் இந்த நாட்டின் முடிசூட பொறுத்தமற்றவர் என்று யாராலும் எண்ண இயலுமா? இது போன்ற காரணங்களை கலந்தாலோசித்ததாலே, ரூபனர் வேட்டையாட செல்ல எந்த தடையும் கூறவில்லை.

வேட்டையாட சென்ற தினம், மாலைப் பொழுதினில், சோலையூரில் தொடங்கும் கானகத்தின் எல்லை வழியாக மன்னரை விடுத்து, மன்னருடன் சென்ற மற்ற வீரர்கள் மட்டும் நாட்டிற்குள் வந்தனர். அனைவரின் முகத்திலும் வேதனையின் சாயலே நிறைந்திருந்தது. இந்த காட்சியைக் காண்பதற்கே தவம் இருந்ததைப் போன்ற நான்கு விழிகள், முன்தினம் போலவே தத்தம் குதிரைகளில், பாழடைந்த மண்டபத்தினை நோக்கி புறப்பட்டனர்.

மன்னர் இல்லாது நாடு திரும்பிய வீரர்களைக் கண்டதுமே, அரசபையினருக்கு பெரும் கலக்கம் சூழ்ந்தது. கதிரவனிடம் என்ன நடந்தது என்பதை விசாரித்து தெரிந்து கொண்டனர்.

“என்ன கதிரவா இப்படி கூறுகிறாய்? அரசருக்கு நாடு பழக்கம் ஆகும் வரையிலும், நீ அவருடனேயே இருக்க வேண்டும் என்பது மருத யுவராஜர் தீட்சண்யரின் கட்டளை அல்லவா? நீ ஏதோ சிறுப்பிள்ளைகளுக்கு கூறும் சமாதானம் போல, மன்னரின் வேகத்திற்கு எங்களால் பின்தொடர முடியவில்லை என்கிறாய். சரி பின் தொடராவிடினும், அவரைக் கண்டுபிடித்து அழைத்தாவது வந்திருக்க வேண்டும். அந்த பயங்கர வனத்தில் மன்னரை தனியே விட்டுவிட்டு வந்திருக்கிறாய்?” என்று தமது கோபம் முழுவதையும் செம்மையேறிய விழிகளாலும், வார்த்தைகளில் கூட்டிய அழுத்தத்திலும் வெளிப்படுத்தினார் தலைமை குரு.

“மன்னித்துவிடுங்கள் குருவே. நாங்களும் இயன்றவரை வனத்தில் தேடிப்பார்த்தோம். மன்னரைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஒருவேளை அவர் நாடு திரும்பியிருப்பரோ என்கிற எண்ணத்தில்தான் நாங்கள் திரும்பி வந்தோம்” என கூறிய கதிரவன் மிகவும் மனம் வருந்திக் கொண்டிருக்க, வருத்தத்தின் சாயல் அவன் முகத்திலும் பிரதிபலித்தது…

நடந்து முடிந்ததைப்பற்றி பேசி நேர விரயம் செய்வதில் பலன் இல்லை என்பதை உணர்ந்து, மன்னரை மீட்க மேற்கொண்டு செய்யவேண்டியதை கலந்தாலோசித்தனர். அதன்படி, மறுதினமே ஒரு படையை காட்டிற்குள் அனுப்பி மன்னரை தேடலாம் என முடிவு செய்தனர்.

இதோ, இன்று மன்னரை மீட்க படைகளை அனுப்பிவிட்டு, மிகுந்த கலக்கத்தோடு அரசபையில் அனைவரும் வீற்றிருந்தனர். “மருத தேசத்திற்கு செய்தி அனுப்ப வேண்டும் குருவே” என முதன்மந்திரியார் தலைமை குருவிடம் கூற.

“இன்றைய தினம் முழுவதும் பார்ப்போம். கானகத்திற்குள் சென்ற வீரர்கள் திரும்பட்டும்…” என்று முதன்மந்திரியார் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, தமது இராஜ கம்பீரமான நடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும், ஆளுமையான தோற்றத்துடனும் ரூபனர் அரண்மனை அரசபைக்குள் நுழைந்தார்.

அரசபையினர் அனைவரும் இதனை துளியும் எதிர்பார்க்காததால், மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் கலந்த முகபாவத்துடனும், பெரும் வியப்புடனும் தமது இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். அனைவரின் அதிர்ந்த தோற்றமே அவர்களுடைய கவலையை தெளிவுற உணர்த்த, அவர்களின் கவலைகளை போக்கும் வண்ணம் கம்பீரமான தோற்றத்துடன் அரசவைக்குள் நுழைந்து, தமது சிம்மாசனத்தில் ராஜ கம்பீரத்தோடு அமர்ந்து சபயோரையும் அமர சொன்னார்.

“அனைவரும் அமருங்கள். நான் நலமாக இருக்கிறேன். வழிமாறி மருத தேசம் சென்று விட்டேன். விடிந்ததும் புறப்பட்டு வந்துவிட்டேன். யாரும் கலக்கம் கொள்ள வேண்டாம்” என்று அவர்கள் கேள்வி கேட்கும் முன்னரே பதில் கூறியதன் பிறகே அனைவரின் முகத்திலும் நிம்மதி பரவியது.

மருத தேசத்தில் சமுத்திரா ஆற்று நீரினில் அடித்து சென்றதினை யாருக்கும் தெரியப்படுத்தாமல், ‘அரச ரகசியமாக’ காக்கப்பட்டது. அந்த ரகசியத்தைக் காக்கவே ரூபனரும், தீட்சண்யரிடம் கலந்தாலோசித்து இப்படி ஒரு காரணத்தை அரசவையில் கூறினார்.

அரசவையில் இருந்தவர்களும் அதிக கேள்விகளைக் கேட்காமல், மன்னர் திரும்பி வந்தத்திலேயே மனம் மகிழ்ந்தனர்.

** கானகத்தில் அமைந்துள்ள பாழடைந்த ஆலமர மண்டபத்தினுள் ( மண்டபத்தின் உள்ளே இருக்கும் பிரமாண்டமான ஆலமரத்தின் காரணத்தால் இப்பெயரால் அழைக்கப்பட்டது ), மிகுந்த குரோதத்துடன் அந்த கூட்டத்தின் தலைவனும், அவனைவிட நன்கு ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இருந்த மற்ற இரு தலைவர்களும் இருந்தனர்.

அந்த மண்டபத்தில் மிகவும் சொற்ப அளவிலான ஆபத்பாந்தவர்களே கூடியிருந்தனர். ஐந்து நபர்கள் மட்டுமே நேரடியாக இந்த முப்பெரும் தலைவர்களுடன் தொடர்பிலிருந்தனர். மற்ற கூட்டத்தினர் அனைவருக்கும் இந்த ஐந்து நபர்களில் ஒருவரை தெரியும் அவ்வளவே. இன்னும் சொல்லப்போனால், கூடத்திற்காக வேலை செய்யும் மற்றவர்களுக்கு, கூட்டத்திற்கு மொத்தமாக மூன்று தலைவர்கள் என்பது கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கு கூடியிருக்கும் இந்த ஐந்து ஆபத்பாந்தவர்களும், ஆஜானுபாகுவாக வீற்றிருக்கும் இரண்டு தலைவர்களுடைய தீவிர விசுவாசிகள். தலைவர்களுக்காக நாடு, நகரம், மனை, குடும்பம் அனைத்தையும் துறந்து வந்த மாவீரர்கள். முப்பெரும் தலைவர்கள் கட்டளையிட்டால் தம் உயிரையும் துட்சமென துறக்கும் அளவு அவர்கள் மீது மரியாதையையும், விசுவாசத்தையும் வைத்திருக்கிறார்கள்.

மூன்று தலைவர்களின் முகத்தில் இருந்த குரோத்ததைக் கண்டு, அந்த ஐந்து வீரர்களுக்கும் உள்ளுக்குள் குளிர் எடுத்தது. ‘நேற்று மாலை அனைவரும் கொண்ட மகிழ்ச்சி என்ன? செய்த ஆராவாரம் என்ன? தற்போது இருக்கும் நிலை என்ன?’ என்கிற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றியது.

“என்னவாயிற்று நீங்கள் இருவரும் தானே நேற்று இந்நேரம் இங்கே வந்து, ‘கானகத்திற்குள் சென்ற மன்னர் திரும்பவில்லை. மன்னருடன் சென்ற மற்ற வீரர்கள் அனைவரும் எந்தவித சேதாரமும் இன்றி திரும்பி வந்துவிட்டனர்’ என்று கூறியது” என்று இறுகிய கோபமான முகத்துடனும், கூர் விழிகளுடனும் கூட்டத்தின் முதன்மை தலைவர் கேள்வி கேட்க,

தவறே செய்யாதவர்கள் கூட, அவருடைய ஆளுமையில் பயந்து நடுங்கி விடுவர். இவர்கள் இருவருக்கும் அதே நிலைமைதான். இருவருக்கும் நேற்றைய முன்தினம் நடந்த நிகழ்வுகள் கண்முன்னே நிழலாடியது.

நேற்றைய முன்தினம், சோலையூரில் இவர்கள் இருவரும் காத்திருக்க, காலையில் வேட்டைக்கு புறப்பட்ட படைகள், மாலை வேளையில் கானகத்திலிருந்து வெளிப்பட்டனர். அந்த கூட்டத்தில் மன்னர் இல்லாததைக் கண்டு, மகிழ்ந்தவர்கள் அந்த கூட்டத்தில் இருந்த வீரர்களையும் ஆராயும் பார்வை பார்த்தனர். அந்த வீரர்களின் முகத்தில் இருந்த கலக்கமும், கவலையும் அவர்களுக்கு வேண்டிய செய்திகளைக் கொடுக்க, உடனே தத்தம் குதிரைகளில் ஆலமர மண்டபத்திற்கு சென்றனர்.

ஆலமர மண்டபத்தில் இருக்கும் முப்பெரும் தலைவர்களிடமும் அவர்கள் கண்களால் கண்டதை தெரிவித்து, மேலும் அவர்களது யூகமாக, “நிச்சயம் மன்னர் கானகத்திற்குள் வழிதவறி சென்றிருப்பார். ஒரு இரவு சிவவனத்தில் தங்கி இருப்பது அசாத்தியமான காரியம். கண்டிப்பாக நாளை மன்னர் இறந்து விட்டார் என்கிற செய்தி கிடைக்கும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சிவவனத்தினைப் பற்றி அங்கிருந்தோர் அனைவருக்கும் தெரியுமாதலால், அவர்களும் அவ்வாறே நம்பினர்.

“அண்ணா என்னால் நம்பவே முடியவில்லை. நாம் எண்ணிய காரியம் எவ்வளவு விரைவில் நடந்துவிட்டது. வெகுநாட்களுக்குப் பிறகு நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்” என்று ஆராவாரமாய் அந்த கூட்டத்தின் முதன்மை தலைவர் கூற,

ஆஜானுபாகுவாக இருந்த, முதன்மை தலைவருக்கு மூத்தவர்களான மற்ற இரண்டு தலைவர்களும் அதே அளவு மகிழ்வோடு இருந்தனர்.

அந்த காட்சிகள் எல்லாம் கண்முன் விரிய, சிலையென நின்றிருந்தனர் அந்த இரண்டு வீரர்களும்.

“உங்களைத்தான் கேட்கிறேன்” என கர்ஜனையாக முதன்மை தலைவர் கத்தவும், அந்த நண்பகல் வேளையிலும் அந்த கர்ஜனை மிகுந்த நடுக்கத்தையும், பயத்தையும் கொடுத்தது.

“ஆம் தலைவரே, நாங்கள் கண்களால் பார்த்ததைத்தான் தெரிவித்தோம். ஆனால்… ஆனால்… அவர் எப்படி திரும்பி வந்தார்? இது எப்படி சாத்தியம்? என்பது எங்களுக்கு புரியவில்லை. அவர் வழிதவறி மருததேசம் சென்றுவிட்டதாக கேள்விப்பட்டோம்” என்று கூற,

முதன்மை தலைவரின் கோபம் பன்மடங்கு உயர்ந்தது. “அண்ணா இவனை இங்கிருந்து கிளம்ப சொல்லுங்கள். இவர்கள் அனைவரையும் இங்கிருந்து புறப்பட சொல்லுங்கள். மீண்டும் வரும் புதன்கிழமை வரட்டும்” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று சென்று அங்கிருந்த தூணின் பின்னால் சென்று மறைந்தான்.

ரூபனர் உயிருடன் வலம்வரும் ஒவ்வொரு நொடியும் நெருப்புக்கூடையை உச்சந்தலையில் கவிழ்த்தது போன்று தகதக வென்று உடலும், மனமும் கொதிப்பதைப் போன்ற அவஸ்த்தை. அவனை மண்ணிற்குள் புதைக்கும் நாளே நிம்மதி அடைய முடியும். முதல் திட்டமே வெற்றி அடைய வேண்டும் என்றில்லைதான். ஆனால், இந்த முயற்சி தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் எழுந்த கோபமே, இப்பொழுது கட்டுக்கடங்காமல் இருக்கவே முதன்மை தலைவர் தன்னை சமன்படுத்த தனிமையை நாடியது.

தம்பியின் மனநிலையை தெளிவுற உணர்ந்த சகோதர்கள் இருவரும், ஆபத்பாந்தவர்களை அனுப்பிவைத்தனர். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட தம்பியின் மனநிலையில் தான் இருந்தனர். என்னதான் அவர்கள் இருவரும் மிகுந்த பலசாலிகளாக இருந்தாலும், பயன் ஏது? சில சமயம் பலம் மட்டும் போதாதே, அதிலும் இப்பொழுது ரூபனர் ஒரு அரசராக இருக்கிறார். அவரை வீழ்த்த வீரம் மட்டும் போதுமா? நல்லவேளை விவேகத்துடன் தமது சகோதரன் இருக்கிறான் என்கிற எண்ணம் ஒன்றே அவர்களை ஆறுதல் படுத்தியது.

மிகவும் கணத்த மனதுடன் அன்றைய பொழுதினை சகோதரர்கள் மூவரும் கழித்தனர். ரூபனரை கொன்றே தீர வேண்டும் என்கிற வெறி மட்டும் மனதிற்குள் பன்மடங்கு வளர்ந்து கொண்டே இருந்தது.

** இதை எதையும் உணரா ரூபன சத்ரியர் வெகு நாட்களுக்குப் பிறகு ஆனந்த சயனத்தில் இருந்தார். அவரின் மகிழ்வுக்கு காரணம் தன்மீது உரிமையைக் காட்ட ஒரு ஜீவன் இருப்பதனை எண்ணி மகிழ்ந்தபடியே உறக்கத்தை தழுவியிருந்த காரணத்தினால்.

ரூபனரின் மகிழ்வுக்கும், சலனமற்ற உறக்கத்திற்கும் காரணமான, மருத இளவரசி சமுத்திர தேவிகையோ, தமது உறக்கத்தை தொலைத்திருந்தாள்.

‘ஒரு மன்னருக்கேற்ற மிடுக்கும், தோரணையும், தோற்றமும் அனைத்தும் நிறைந்த முழுமையான ஆண்மகனை நான் எவ்வாறு மன்னர் என்று கணிக்க தவறினேன்’ என்று தான் அறிவினில் தவறிய தருணங்களை சிலநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தவள், அதன்பிறகு ரூபனரின் இயல்பை எண்ணி வியந்து கொண்டிருந்தாள்.

‘நான் என்னை யாரென்று அறிமுக படுத்திக் கொள்ளாத பொழுதும், அவர் ஒரு நாட்டை ஆளும் வேந்தனாய் இருந்த பொழுதும், நான் இட்ட பணிகளை இன்முகத்தோடு செய்தாரே! அவர் விழிகள்… இல்லை இல்லை அதனைப் பற்றி சிந்திக்கவே கூடாது. அந்த தீர்க்கமான பார்வையை எதிர்கொண்டால் சுற்றமும் மறந்து விடுகிறது’ என்றவாறு எண்ணிக்கொண்டிருந்தவளின் மனம் முழுவதும் ரூபனரே நிறைந்திருந்தார்.

‘அவர் எப்படி அவருடைய அடையாளத்தை மறைக்கலாம்? ஏன் என்னிடம் கூறினால் என்னவாம்? நான் அவரை என்ன செய்துவிட போகின்றேனாம்?’

இவ்வாறு ரூபனரின் மீது கோபமும், காதலும், நேசமும், தனது அறியாமையையும் எண்ணி அன்றைய தூக்கத்தை வெகுநேரம் இழந்தாள் இளவரசி சமுத்திர தேவிகை.

விடியலில் மிகுந்த சோர்வுடன் இருந்த சமுத்திர தேவிகையைக் கண்ட சமுத்திராவின் தோழி வள்ளி, அவளிடம் “என்ன இளவரசி! நேற்றிரவு நீங்கள் சரியாக உறங்கவில்லையா?”

“ஏன் வள்ளி? என்னவாயிற்று?” தன்முகம் தனது அந்தரங்கத்தை வெளிப்படுத்துவதில் அவருக்கு துளியும் விருப்பம் இல்லை. அவ்வாறு இருக்க கூடாது, என் முகத்தை வைத்து இவள் கணித்திருக்க கூடாது என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.

ஆனால், அவளின் எண்ணத்தை பொய்பிக்கும் படியாக, “உங்கள் விழிகளிலும், முகத்திலும் சோர்வு தெரிகிறதே, அதனைப் பார்த்துதான் கேட்டேன்” என்றவள் மேலும் தொடர்ந்து, “தந்தையாரும், சகோதரரும் சிவவனம் சென்றது தொடர்பாக என்ன கூற்றுவார்கள் என்கிற கவலையா இளவரசி? உங்களை காணவில்லை என்றதும் எவ்வளவு பதறிவிட்டார்கள் தெரியுமா?”

“ஆம் வள்ளி. அவர்களுக்கு வேதனையை தந்துவிட்டேன்” என்ற சமுத்திராவின் குரலிலும் வேதனை அப்பட்டமாக தெரிந்தது.

‘என்ன மடத்தனம் செய்கிறேன்? அவர் ஏற்கனவே கவலையில் இருக்க, நான் அவரை திசைதிருப்பாமல் அவருடைய வேதனையை அதிகரிக்கின்றேனே!’ என மனதிற்குள் தன்னைத்தானே வசைபாடிய வள்ளி, சமுத்திராவை இயல்புக்கு திருப்பும் பொருட்டு, “இன்று அரண்மனை ஜோதிடர் வருகிறார் இளவரசி” என்றாள் தகவலாக.

“என்ன இன்றே வருகிறார்களா? நேற்றைய முன்தினம்தான் சிவவனத்தில், அங்கு சென்றதற்காக வசைமொழி வாங்கினேன். அங்கே தமையனை சமாளிப்பதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. அதற்குள் அடுத்த தொல்லையா?”

வள்ளி தம்மையும் அறியாமல் சிரித்துவிட, “என்ன வள்ளி எதற்காக சிரிக்கின்றாய்?”

“அன்றே கூறினேன் அல்லவா? இன்று தப்பிக்க எண்ணுகிறீர்கள் மீண்டும் மாட்டிக்கொள்ள மாட்டீர்களா என்று. இப்பொழுது பாருங்கள் அவர்களின் வசை மொழிகளில் இருந்து தப்பிக்க சிவவனம் சென்று, அங்கும் ஒரு வம்பை இழுத்துவிட்டு…” என்று தம்மையும் அறியாமல் அவள் சிரிக்க,

“நான் சிவவனம் சென்றதற்காகவோ, ஆற்று நீரினில் அடித்து சென்றதற்காகவோ வருந்தவே போவதில்லை வள்ளி” என்று மென்னகையுடன் கூற,

அவளின் முகம் தீடிரென ஒளி பெறவும், அவளையே கூர்ந்து நோக்கியவாறு, “இளவரசி தங்கள் முகம் திடீரென்று ஒளிர்வதைப் பார்த்தால்…”

“அதுபோல எல்லாம் ஒன்றும் இல்லை. சரி நான் தந்தையாருடன் பேசிவிட்டு வருகிறேன்” என்றவாறு மருத அரசர் வீரேந்திர மருதரை நோக்கி சென்றாள்.

அவள் செல்வதற்கும் அரண்மனை ஜோதிடர் வருவதற்கும் சரியாக இருக்கவே, குடும்பம் சகிதமாக திருமணத்திற்கான பொருத்தம் பார்த்து, திருமண வைபோகத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது. அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

அரண்மனை ஜோதிடரை வழி அனுப்பிய பிறகு, தந்தையையும், தமையனையும் எதிர்கொள்ளவே சமுத்திரா மிகவும் தயங்க, வீரேந்திர மருதர், “வீட்டின் பெரிய மனிதர்கள் இதனை மட்டும்தான் என்னிடம் மறைத்தீர்களா? இல்லை இன்னும் இருக்கிறதா?” என்றார் முகத்தில் கடினத்தன்மையுடன்.

“தந்தையே…” என்று சமுத்திரா ஆரம்பிக்க அதனை முடிக்க விடாமல்,

“உன்னுடைய வயதையும் தாண்டி, சிந்திக்கும் உனது புத்திக்கூர்மையை இந்த நாடே போற்றும் சமுத்திரா. ஆனால், உன்னுடைய சிந்தனையை எதில் செலுத்த வேண்டும் என்பதை, நீ முன்யோசனையின்றி செயல்படுதல் நல்லதல்ல. இனி அதிக கவனம் எடுத்துக்கொள்.”

அவர் பேசபேச ஏதோ குற்றம் செய்த சிறு குழந்தையைப் போன்று முகம் வாடத்தொடங்கி விட்டது இளவரசி சமுத்திராவுக்கு.

‘ஆரம்பித்துவிட்டாளா… முகத்தை தொங்க போட, இனி நான் எப்பொழுது இவள் செய்த அதிஅற்புதமான செயல்களுக்கு இவளை கடிந்து கொள்வது?’ என்றவாறு மனதிற்குள் சமுத்திராவை கருவிக்கொண்டிருந்தார் தீட்சண்யர்.

மருத மகாராணி லலிதாம்பிகை தேவியார் உதவி செய்ய இடைப்புக நினைக்க, “தேவி இவர்கள் செய்த காரியத்திற்காக நீ பரிந்து பேசாதே புரிகிறதா?” என்றார் முயன்று வரவழைத்த பொறுமையுடன்.

லலிதாம்பிகை தேவியார் மிகவும் மென்மையான குணம் கொண்டவர். அவரிடம் கடிந்து பேச யாருக்கும் மனம் வராது. அரசரும் அதற்கு விதிவிலக்கானவர் இல்லை.

ஆனால் தந்தையார் தமது தாயாரை தேவி என்றழைக்கவும், நினைவுகள் தம்மையும் அறியாமல் ரூபனரிடம் சென்றுவிட்டது. “அவரும் என்னை அப்படித்தானே அழைத்தார். ஆனால் ஏன்?” என்று மனதில் எண்ணங்கள் ஓட, அதனை தடை செய்யும் விதமாக,

தமது மக்கட் செல்வங்கள் தலை குனிவதையும் வருத்தம் கொள்வதையும் பொறுத்துக்கொள்ள முடியாமல், “என்ன நீங்கள் இதை எப்படி அவர்கள் தெரிவிப்பார்கள். சமுத்திராவிற்கே விஷயம் தெளிவாக தெரிந்திருக்காது. அதோடு தீட்சண்யரைப் பற்றிய விஷயங்களை அவன் தானே கூற வேண்டும். இவள் கூறினால் புறம் கூறுவதைப் போன்று தவறாகதா?” என்று லலிதாம்பிகை தேவியார் சொல்லிக் கொண்டிருக்க,

தீட்சண்யரின் மனதில் பிரளயமே வந்தது. ‘தாயே அவளைக் காப்பதாக நினைத்து என்னை இழுத்து விடுகிறீர்களே!’ என்று மனதிற்குள் வருந்திக் கொண்டிருந்தார். ஆனால், தேவியார் தொடர்ந்து,

“பின் தீட்சண்யரின் விஷயமும் வேறு. அவனுக்கே நிச்சயமாக தெரியாத ஒரு விஷயத்தை நம்மிடம் எப்படி தெரிவிப்பான்? நீங்கள் இருவரையும் இப்படி கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு, வேங்கை நாட்டு மன்னர் தசர வேந்திரிடம் கலந்தாலோசித்து திருமண வேலைகளை தொடங்குங்கள்” என்றார்.

“உன்னை உடன் வைத்துக் கொண்டு இவர்களை கடிந்து கொள்ள நினைத்தால் எனக்கு வெற்றி கிடைக்குமா? ஆனால் எப்பொழுதும் சாந்தமாய் இருக்கும் உன்னை பேச வைக்க வேண்டுமெனில் உன் புத்திரர்கள் போதும் தேவி” என்று மனம் நிறைய மகிழ்வோடு கூறினார் மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதர்.

1 Like