சத்ரிய வேந்தன் - 24

சத்ரிய வேந்தன் - 24
0

சத்ரிய வேந்தன் - 24 – பகைமை படையினர்

சந்திர நாட்டின் மேற்கு பகுதியில் சில மலைக்குன்றுகள் இருந்தது. நாடு முழுவதும் விவசாயம் செழித்திருக்க, பல வயல்களையும் வரப்புகளையும் தாண்டி, புதர்கள் அடர்ந்த பகுதிகளைத் தாண்டி மலைக்குன்றுகள் இருந்தது.

பொதுவாக அந்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் சந்திர நாட்டு மக்கள் வயல் வரப்புகளைத் தாண்டி அந்த வழியே செல்வதில்லை. மேற்கு நோக்கி பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், அந்த மலைக்குன்றுகளை சுற்றிதான் பயணம் மேற்கொள்வார்கள். ஆகையால், அந்த மலைக்குன்றுகளும், அதனை சுற்றி இருக்கும் பகுதிகளும் சந்திர நாட்டு மக்களின் கால்தடங்கள் படாமல் இருந்தது.

அந்த மலைக்குன்றுகளே கார்முகிலனின் கூட்டத்தினரின் இரகசியம் காக்க பயன்பட்டு வருகிறது. ஆனால், அவர்கள் எந்த சதி திட்டத்தை செயல் படுத்துவதாக இருந்தாலும், நாட்டிற்குள் மக்களோடு மக்களாக கலந்தே செயல்படுத்துவர்.

அந்த மலைக்குன்றுகளில் இருக்கும் குகைகளை தமது வாசஸ்தலமாக கொண்டு தமது சதியாலோசனைகளை தீட்டி வந்தனர் சந்திர நாட்டின் பகைமைப் படையினரான கார்முகிலனின் கூட்டத்தினர்.

கார்முகிலன் சந்திர நாட்டினை ஆண்ட மன்னர் அருள் வேந்திரின் அத்தை வழி உறவினன். சந்திர நாடு வாரிசற்று இருக்கவே, அதனை அடைய எண்ணி, வெகுகாலம் முன்பே சந்திர நாட்டிற்கு வந்திருந்தான். அவனது வரவால் ஆரம்ப காலத்தில் அரசரும், அரசியாரும் மகிழ்ந்தனர்.

அவர்களுடைய எண்ணம் கூட, அவனை தயார்படுத்தி தம்முடன் வைத்துக்கொள்வோம் என்றவாறு தான் இருந்தது. அதற்காக அவனுக்கு வாள் வீச்சு பயிற்சி, வில் எய்தும் பயிற்சி என கொடுக்க முயற்சிக்க அவனுக்கு அது வரவில்லை என்றால்கூட பரவாயில்லை, ஆனால், அவனோ அதில் துளி கூட ஆர்வமோ, ஈடுபாடோ காட்டவில்லை.

வீரம் சார்ந்த பயிற்சிகளில் நாட்டம் இல்லை போலும் என்று எண்ணிய அருள் வேந்தர், மந்திரி சபையில் இணைத்துக்கொள்ள ஏதேனும் தகுதிகள் பொருந்துமா என்று பார்க்க, கார்முகிலனோ குருகுல வாசம் அறியாதவன். அவனுடைய தனித்திறமை எதுவென்று அவனுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கேனும் பட்டங்களோ, பாராட்டுகளோ பெற்றதாய்க் கூட நினைவில்லை.

எதற்கும் உபயோகப்படுவான் போல தோன்றவே இல்லை. இவனை நம்பி எப்படி நாட்டை ஒப்படைப்பது என்று எண்ணியவர், அவர் எண்ணத்தை கிளையிலேயே கிள்ளியும் எறிந்து விட்டார். அவன் எதற்கும் உதவாதவன் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவனுடைய செயல்பாடுகள் கூட சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அனைவரிடமும் அதிகாரம் செலுத்துவதும், அரண்மனை சொத்தினை அழிப்பதுமாக, அவனது செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த மன்னர் அவனை அரச அலுவல் எதிலும் ஈடுபடுத்துவதில்லை.

விருந்தினரை திரும்பி செல்லும்படி கூறுதல் நாகரிகமாகமோ, அரசகுல பண்பாகவோ இருக்காது என்பதினால் அவனை திருப்பி அனுப்பவும் வழியின்றி இருந்தனர். ஆனால், அவன் பிழைகளை சுட்டிக்காட்ட தயங்கியதே இல்லை. அதனை செய்யக்கூடாது என்று தடுக்கவும் தயங்கியதில்லை.

இது போன்ற தருணத்தில், மன்னர் நோய்வாய்ப்பட, அதனை சாக்கிட்டு தனக்கு இளவரச பட்டம் சூட்டும்படி மன்னரை கார்முகிலன் வற்புறுத்த, அருள் வேந்தர் அடியோடு மறுத்துவிட்டார். அவர் மறுத்த கோபத்தில், அரண்மனையை விட்டு வெளியேறி சதி செய்ய தொடங்கிவிட்டான் கார்முகிலன்.

கார்முகிலனின் சதி ஒருபுறமென்றால், நாட்டு மக்களில் சிலர், “நம் நாடு! நம் உரிமை!” என போர்க்கொடி தூக்கியபடி புரட்சிப்படைகளை அமைத்து, நாட்டைக் கைப்பற்ற முயற்சித்தனர்.

இது போன்ற இக்கட்டான சூழலில்தான், மன்னர் அருள் வேந்தர் மருத தேசத்து அரசர் வீரேந்திர மருதரிடம் உதவி பெற்றது. தீட்சண்யரும் இரண்டு ஆண்டுகள் போராடி புரட்சி படைகளை முற்றிலும் அழித்து, கார்முகிலனின் கூட்டத்தை அழிக்க தொடங்கினார்.

அதற்குள்ளாகவே சந்திர நாட்டிற்கு மன்னர் கிடைத்துவிட, இப்பொழுது கார்முகிலனின் கூட்டத்தை அழிக்கும் பொறுப்பு ரூபன சத்ரியரிடம் வந்துவிட்டது.

** மலைக்குன்றுகளில் இருந்த குகையில் கார்முகிலனின் கூட்டத்தினர் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தின் நடுநாயகமாக இருந்த கார்முகிலனின் தோற்றம் சாதாரண உயரத்திலும், சற்றே பருத்த உடலுடனும், சிறிய அளவிலான கண்களுடனும், சற்றே இறுக்கமான முகத்துடனும் இருந்தது.

ஒரு கூட்டத்திற்கு தலைவனாகும் ஆளுமையும், தோற்றமும், வீரமும், அறிவும் எதுவுமே இல்லை என்கிற போதிலும், இத்தனை நாட்களாய் அரசாங்க பணத்தை ஏமாற்றி ஏதோ ஒரு வகையில் தமதாக்கிக் கொண்டு, அந்த பணபலத்தினால், ஒரு கூட்டத்தையும், இது போன்ற சூழல் வந்தால் தங்க வேண்டும் என்று ஒரு ரகசிய இடத்தையும் உருவாக்கி இருந்தான்.

அவன் செய் என்று சொல்வதை செய்து முடிக்கும் வரையிலும் அந்த கூட்டத்தினர் யாரும் ஓய மாட்டார்கள். அந்த அளவு அவர்களது வறுமையையும், இவன் பணத்தையும் தெளிவாக உபயோகப் படுத்தி மாற்றி இருந்தான். அவன் கூட்டத்தில் அறிவானவர்களும், வீரமானவர்களும் நிறைந்திருந்தனர்.

ஆரம்பத்தில் அந்த கூட்டடத்தின் நோக்கம், சந்திர நாட்டைக் கைப்பற்றி ஆட்சி அமைப்பதாகவே இருந்தது. சந்திர நாடு, மருத தேசத்தின் கீழ் இல்லாது இருந்திருந்தால், அதனை எப்பொழுதே நிறைவேற்றியும் இருப்பார்கள்.

அதற்கான முயற்சிகள் வெற்றியடையாததினால், பெரும்கோபம் கொண்ட கார்முகிலன், சந்திர நாட்டை அழிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தான். அவனுடைய சதிகளை அழித்து, சதியில் ஈடுபட்டவர்களை சிறைப்பிடித்து, அவனின் ஆள் பலம் குறைத்திருந்தார் மருத இளவரசர் தீட்சண்ய மருதர். அது மட்டுமின்றி சந்திர நாட்டிற்கு அரசனை தேர்ந்தெடுத்திரந்தார் மருத அரசர் வீரேந்திர மருதர்.

இதனால் கார்முகிலன் மிகுந்த கோபத்துடன் இருந்தான். "நான் அமர வேண்டிய சிம்மாசனத்தில் வேறொருவனா? ஆளட்டும். அவனே ஆளட்டும். இப்பொழுது மக்களை ஆள்கிறான். இன்னும் கொஞ்ச நாட்களில் யாருமற்ற கானகத்தை ஆளட்டும்.

இந்த நாட்டு மக்கள் நாம் தரும் தொல்லை தாங்க இயலாமல், இந்த நாட்டை விட்டு அவர்களாகவே வெளியேற வேண்டும். வெளியேறாதவர்களையும் கொன்று குவித்துவிடுவோம். நான் ஆளாத நாட்டில் யாரும் வாழ கூடாது" என்று கோபத்தில் கர்ஜித்துக் கொண்டிருந்தான்.

“உங்கள் எண்ணம் போலவே அனைத்தும் நடந்தேறும் தலைவரே. இதுவரை நமது திட்டங்களுக்கு தடையாய் இருந்த தீட்சண்யர்தான் மருத தேசத்திற்கே திரும்விவிட்டாரே. இனி நமக்கு எல்லாம் விஜயம் தான்” என்று கூறினான் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

பாவம் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை, தீட்சண்யரிடம் இருக்கும் இணக்க முகம் கூட, ரூபனரிடம் இல்லையென்று. கடும்கோபம் என்றால், தீட்சண்யர் கடுமையான தண்டனையோடு நிறுத்திக் கொள்வார், அதே நிலையில் ரூபனர் என்றால் தலையை கொய்துவிட்டே மறுகாரியம் பார்ப்பார் என்று அவன் துளியும் அனுமானித்திருக்க வாய்ப்பில்லை.

“ஆம் தலைவரே. ரூபன சத்ரியர் பதவி ஏற்று இரு தினங்கள் ஆகிவிட்டது. நாம் நமது வேலைகளை இன்னும் தொடங்காமல் இருக்கிறோமே?” என்றான் இன்னொருவன்.

“ஏனடா மடையனே, அந்த தளபதியையும் வீரர்களையும் கொன்று குவித்தோமே… மறந்துவிட்டாயா” என்று உறுமினான் கார்முகிலன்.

“மன்னித்து விடுங்கள் தலைவரே. நான் நமது அடுத்த திட்டம் என்ன என்பதாகத்தான் கேட்டேன்” என்றான் அவன்.

“அதை ஏனடா என்னிடம் கேட்கிறீர்கள். மூடர்களே! நீங்கள் அனைவரும் அடிமுட்டாள்கள். திட்டங்களோடு என்னை வந்து சந்திக்காமல் என்னிடமே கேட்கிறீர்கள்?” என்று கோபமாக கத்தத் தொடங்கினான்.

கார்முகிலனின் தீய குணங்களில் முதன்மையானது அவனின் சுடு சொற்களே. இன்னும் கூறப்போனால், அதனாலேயே அவன் கூட்டத்தில் இருக்கும் பலரும் எப்பொழுது இந்த கூட்டத்திலிருந்து விடுபடுவோம் என்கிற எண்ணத்தில்தான் இருந்தனர்.

கார்முகிலன் மேலும் தொடர்ந்து, “சரி ஏதேனும் திட்டம் இருக்கிறதா? இல்லை இங்கே உண்ணும் உணவிற்காக இனிமேல்தான் உங்கள் புத்தியை வேலை செய்யப்போகிறீர்களா?”

இரவு பகல் பாராமல் இவனுக்காக உழைத்து, எந்த நேரம் சிறைத் தண்டனை கிடைக்குமோ? எப்பொழுது உயிர்விட நேருமோ? என்கிற அச்சத்தோடு அவனுக்காகவே வாழ்வையே அற்பணித்தால்… இவன் உண்பதைக் கூட சொல்லிக்காட்டுகின்றான். அவன் மீது கடும் எரிச்சல் வந்தபொழுதும் எதையும் வெளிக்காட்டாமல், பொறுமையாகவே பதில் கூறினார்கள்.

“திட்டம் தயாராக இருக்கிறது தலைவரே” என்றான் ஒருவன்.

“உயிர் சேதமா? பண நஷ்டமா? தீரா நோய் நொடிகளா?” இவற்றில் எந்த வகையில் தொல்லை தரலாம் என்பதுபோல கார்முகிலன் கேட்டான்.

“பண நஷ்டத்தை கொடுப்போம் தலைவரே” என்று பதில் கூறினான்.

“சரி சரி திட்டத்தைக் கூறு” என்றான் சற்று எரிச்சலுடன்.

“இங்கே இருக்கும் வயல்களில் சேதம் உண்டாக்கலாம் தலைவரே”

“முழுதாக சொல்லி முடியேன். இடையில் இடையில் நிறுத்தி என்னை வேறு கோபப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டுமா?” என்று மீண்டும் எரிந்து விழுந்தான் கார்முகிலன்.

கார்முகிலன் பேசுவதற்கே இடம் தராமல், சிறிய இடைவெளி கிடைத்தாலும் சீறிக்கொண்டே இருக்க, சொல்லவந்தது கூட மறைந்துவிடும் போல இருந்தது. ஆகவே, வேகவேகமாக சொல்ல வந்ததைக் கூறினான்.

"வயல்களில் கடந்த ஆவணி மாதம் நடவு செய்யப்பட்டது தலைவரே. பயிர்களும் நன்றாக விளைந்து செழிப்பாக காணப்படுகிறது. இப்பொழுது மழைக்காலம் என்பதால் வயல்களில் வேலைமுடித்து வீடு திரும்பும் பொழுது வரப்பு வெட்டி வைத்துவிட்டு செல்வார்கள். நாம் இரவோடு இரவாக வயலின் வரப்புகளை மூடி விடுவோம். மழை நீர் வரப்பில் தேங்கினால் பெரும் நஷ்டம் உறுதி.

ஒரு நாள் பார்வையிட்டால் போதும். அன்றிரவே வேலைகளை தொடங்கிவிடலாம். நன்கு மழை பெய்யும் தினமாக இந்த வேலையினை செய்தால், நிச்சயம் பயிர்கள் சேதமடையும். பெரும் நஷ்டமடைவர்."

“நல்ல திட்டம். இதை தவறில்லாமல் செயல் படுத்தும் வழியைப் பாருங்கள்” என்று கார்முகிலன் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

அந்த திட்டத்தை செயல்படுத்த பகைமைக் கூட்டத்தினர் அனைவரும் கலந்தாலோசித்தனர்.

** வயலூரில் அமைந்துள்ள கரடுமலைக் கோயிலில், ஆறுமுகக்கடவுள் முருகரை மனமுருக தரிசித்துக் கொண்டிருந்தாள் மருத இளவரசி சமுத்திர தேவிகை.

இளவரசி சமுத்திர தேவிகை கடந்த ஓராண்டு காலமாக மருத தேசத்திலுள்ள மடங்களின் பொறுப்புகளையும், கோயில், குளங்களின் பொறுப்புகளையும், வைத்திய சாலைகளின் பொறுப்புகளையும் ஏற்றிருந்தார்.

அனைத்தையும் மேற்பார்வையிட்டு, மிக சிறப்பான பராமரிப்பைத் தந்து, அதன் தேவைகளை கவனித்து, புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து மிக சிறப்பாக தமது பணிகளை செய்துவந்தார்.

மகளின் பொறுப்புணர்விலும், ஆர்வத்திலும் அகம் மகிழ்ந்து போவார் மருத அரசர் வீரேந்திர மருதர்.

சில சமயங்களில் சமுத்திராவின் சமயோஜித புத்தியைப் பார்த்து வியந்து, “நீ ஆண் பிள்ளையாய் பிறந்திருந்தால், தீட்சண்யரை விடுத்து… நீ இளையவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று உனக்கே முடிசூட்டி மன்னராக ஆக்கியிருப்பேன்” என்பார் புன்னகையோடு.

அதைக்கேட்டு லலிதாம்பிகை அம்மையாரும், தீட்சண்ய மருதரும் சேர்ந்து புன்னகை புரிவார்கள். தீட்சண்யரும் தந்தையாருடன் சேர்ந்து, “தந்தையே ஏன் ஆண்பிள்ளைகள்தான் நாடாள வேண்டுமா? சமுத்திராவையே சிம்மாசனத்தில் அமர வைப்போம். நான் என் தங்கைக்கு படைத்தளபதியாய் இருக்கிறேன்” என்பார் தங்கையை பெருமையாக பார்த்தவண்ணம்.

“அம்மா பாருங்கள் அம்மா. இவர்கள் இருவருக்கும் என்னைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. எப்பொழுதும் கேலிப் பேச்சுகள்தான்” என்று சமுத்திர தேவிகை தமது தாயார் லலிதாம்பிகையிடம் முகத்தை சுருக்கி வைத்துக்கொண்டு புகார் வாசிப்பாள்.

சமுத்திர தேவிகை ஆரம்பகால கட்டத்தில் இருந்தே, வைத்திய சாலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவாள். அதிலும் கோட்டைக்குள் இருக்கும் வைத்திய சாலையையும், கரடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் வைத்திய சாலையையும் கூடுதல் பொறுப்போடு பார்த்துக் கொள்வாள்.

கரடுமலை அடிவாரத்தில் இருக்கும் வைத்தியசாலையை சமுத்திராவின் அறிவுரைப்படி, சில மாதங்களுக்கு முன்பு விரிவு படுத்தி இருந்தார்கள். அதன்படி வைத்திய சாலைக்கு தேவையான பெரும்பாலான மூலிகை செடிகள் கரடு மலையில் கிடைத்த பொழுதிலும், வைத்திய சாலையின் அருகினில் மிகப்பெரிய தோட்டம் அமைத்து அதிலும் சில மூலிகை செடிகளை வளர்க்க சொல்லியிருந்தாள்.

அதுபோக யார் பார்வைக்கும் புலப்படாத வண்ணம், கரடுமலை கானகத்தில் சிறிதாய் ஒரு வைத்திய சாலை அமைக்கும்படியும் உத்தரவிட்டிருந்தாள். அந்த வைத்தியசாலை இருப்பது வெகுசிலருக்கே தெரியும். யாரையேனும் இரகசியமாக பாதுகாக்க வேண்டுமெனில் அந்த வைத்தியசாலையை உபயோகித்துக் கொள்வார்கள்.

அந்த ரகசிய வைத்திய சாலையில் யாரேனும் நோயாளிகள் இருப்பார்களாயின் அவர்களை அடிக்கடி மேற்பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருப்பாள் சமுத்திர தேவிகை. அதோடு அந்த இரகசிய வைத்தியசாலைக்கு செல்லும் பொழுது மட்டும் தன் அடையாளத்தை மறைத்து யாருமறியாமல் சென்று வருவதும் வழக்கம்.

சில வாரங்களின் முன்பு அந்த இரகசிய வைத்திய சாலையில் ஒரு பெண்ணை அனுமதித்திருந்தனர். அந்த இளம்பெண் உயிருடன் இருக்கிறாள். ஆயினும், சுயநினைவின்றி இருப்பதினால் இன்றுவரை அவள் யாரென்றும் தெரியவில்லை.

யாரேனும் வைத்தியசாலைக்கு அழைத்து வந்திருந்தால், அந்த பெண்ணின் விவரங்கள் தெரிய வந்திருக்கலாம். ஆனால், அந்த பெண்ணை வைத்திய சாலைக்கு அழைத்து வந்ததே சமுத்திரா எனும்பொழுது யாரிடம் விவரங்கள் பெற… அதுவும் அந்த பெண் சுயநினைவின்றி உயிருக்கு போராடியபடி இருக்கும்பொழுது கொண்டுவந்த காரணத்தினால் விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை.

அந்த பெண்ணை குணப்படுத்துவதற்காகத்தான் சிவன் மலை சித்தரைக் கூட வரவழைத்திருந்தாள். வேங்கை நாடு சென்றபொழுது முதன்மை வைத்தியர் கூறிய மூலிகைகளைத் தேடியதுகூட இந்த பெண்ணுக்காக தான்.

இப்பொழுதும் மாறுவேடத்தில் தமது முகம்தெரியாதபடி முந்தானையால் பாதி முகத்தை மறைத்தபடி, அந்த பெண்ணை சந்திப்பதற்காகத்தான் வந்திருந்தாள். கீழே வைத்தியசாலையிலும், மடத்திலும் அவள் இட்ட பணிகளை அவளுடன் வந்த வீரர்கள் செய்து கொண்டிருக்க, யாருமறியா வண்ணம் மாறுவேடத்தில் கரடுமலை ஏறியவள், மக்களோடு மக்களாக சென்று முருகப்பெருமானை தரிசித்தாள்.

முருகப்பெருமானை தரிசித்ததும், இரகசிய வைத்திய சாலைக்கு யாரும் அறியா வண்ணம் சென்றாள். அங்கே சித்தரைக் கண்டதும், அவரிடம் ஆசி பெற்றவள், சிறிது நேரம் அந்த பெண்ணைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

“குழந்தாய், நீ எதற்காக இவளை ரகசியமாக பாதுக்காக்க முடிவு செய்தாய்? அதோடு அவளுடைய உறவினர்களையும் இன்னும் தேடாமல் இருப்பதன் காரணம் என்ன?” என்று சித்தர் சமுத்திராவிடம் கேட்க,

"சுவாமி, அவளைக் கண்ட தருணம் அவ்வாறு. அந்த பெண் சுயநினைவின்றி இருப்பதைப் பார்த்ததும் அவளைக் காப்பற்ற வேண்டும் என்பதே முதன்மையாக பட்டது.

அதோடு ஒரு இளம்பெண் இப்படி ஒரு இக்கட்டில் இருக்கும் பொழுது, அவளை நோயாளியாக அனைவரின் பார்வையில் வைக்க விருப்பம் இல்லை. அதனால்தான் இங்கே இந்த இரகசிய வைத்திய சாலையை உபயோகப் படுத்திக் கொண்டோம்.

அவள் சுயநினைவின்றி கிடைத்த இடத்திலுள்ள சுற்றுப்புற கிராமங்களில் எல்லாம் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதுவரை யாரும் இளம்பெண்ணைக் காணவில்லை என்று கூறவில்லை. ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் கூறினார்கள்.

அவர்கள் குடும்பத்தை வரவழைத்து, இந்த பெண்ணை மலை அடிவாரத்திற்கு மாற்றி அவர்களிடம் காட்டினால், ‘இவள் இல்லையம்மா. அவளுக்கும் இவள் வயது தான் இருக்கும். உயரம், நிறம் கூட இந்த பெண்ணைப் போன்றுதான்’ என்று அந்த அம்மாள் கதறி அழுததை இன்றும் மறக்க இயலவில்லை" என்று கூறினாள் அந்நாளின் நினைவில் சோகம் இழையோடிய குரலில்.

பிறகு தன்னை மீட்டுக்கொண்டு, “சித்தர் பெருமானே! தங்கள் தான் இந்த பெண்ணினைப் பற்றி கண்டறிய உதவி புரிய வேண்டும். அன்று கதறிய பெற்றவர்களைப் போல தானே, இவளுடைய பெற்றோர்களும் இவள் இல்லாமல் வருந்திக் கொண்டிருப்பார்கள்” என்று கவலையோடு கூறினாள்.

"நீ கவலை கொள்ள வேண்டாம் குழந்தாய். இவள் சேரவேண்டிய இடத்தினில்தான் சேர்ந்திருக்கிறாள். அதோடு இவளைப் பெற்றவர்களும் இந்த உலகினில் இல்லை. இந்த பெண் விரைவில் குணம் அடைந்து விடுவாள். இவளை இனி எப்பொழுதும் உன் உடனேயே வைத்துக்கொள்.

இன்னும் சொல்லப்போனால், இவளை உன்னுடன் வைத்துக் கொள்வதே இவளுக்கு பாதுகாப்பு. இந்த பெண்ணைப் பற்றிய உண்மைகளை நீ அறிய நேர்ந்தாலும், யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே. அவளாகவே அவளைப் பற்றி கூறினால் மட்டும் கேட்டுக்கொள். மற்றபடி நீயாக அவளிடம் எதையும் விசாரிக்க வேண்டாம்.

இவள் மூலம் தெரிய வரும் விஷயங்கள் தான், வருங்காலத்தில் வரும் பெரும் துன்பத்திற்கு முடிவு கிடைக்க உதவியாய் இருக்கும்" என்று கூறினார்.

இவர்கள் இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட மற்றவர்கள் அதிசயித்து போயினர். ஏனென்றால் சித்தர் இதுவரை யாரிடமும் அதிகம் பேசியது இல்லை. அப்படி இருக்கையில், சமுத்திராவிடம் இத்தனை நேரம் பேசினால் அதிசயிக்காமல் இருக்க இயலுமா?

அன்று ரூபன சத்ரியரிடம் இவர் இன்னும் அதிகமாய் பேசி இருந்ததை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.