சத்ரிய வேந்தன் - 26

சத்ரிய வேந்தன் - 26
0

சத்ரிய வேந்தன் - 26 – அரண்மனை சீரமைப்பு

உற்றவன் நீயே

உணரா பொழுது ,

நீ உணரும் முன்பு

பிறரிடம் என்ன சொல்வேன் ?

உன் விழிகளால்

என் உயிர் பருகுகின்றாய்

உன் மென்னகையால்

வசியம் செய்தாய்

நடமாடும் பதுமையானேன் !

உன் நினைவுகளினால்

அந்தி மாலை வேளையில் நள்ளிருள்நாறி மலர்கள் மலர்ந்து மனம் வீசி, அந்த தோட்டம் முழுவதும் இதமான நறுமணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. இளவரசி சமுத்திர தேவிகை நள்ளிருள்நாறி மரத்தின் கீழே அமர்ந்தவாறு அந்த மலர்களை கைகளில் ஏந்தியபடி அமர்ந்திருந்தாள். இளம் பச்சை வர்ணத்தில் நீளமான காம்புகளுடன், மிக சிறியதாய் நான்கு வெண்ணிற இதழ்கள் கொண்டிருந்த அந்த சிறிய மலர்களின் நறுமணம் அவ்விடம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது.

ஏனோ மலர்களிலேயே பார்வை பதிந்திருந்தாலும், சமுத்திராவின் கவனம் அதில் பதியவில்லை. நாசியில் நிறையும் நறுமணமும் அவளுடைய சிந்தையை கலைக்கவில்லை.

இதுவரை அந்தப்புர தோட்டத்தில் அவள் தனித்து இருந்ததே இல்லை. சமுத்திரா இருக்கும் இடமே மிகவும் கலகலப்பாக இருக்கும். ஆனால், இப்பொழுதெல்லாம் என்ன செய்தாலும் மனம் முழுதும் ஆக்கிரமிக்கும் நினைவுகள், அதனை தடுக்க முடியாத இயலாமை என தனக்குள்ளே போராடிக் கொண்டிருந்தவளுக்கு தனிமை தேவைப்படுவது என்னவோ உண்மை. கடந்த சில தினங்களாக அவள் தனிமையை மட்டுமே நாடுகிறாள்.

மெல்ல தயங்கியபடி சமுத்திராவை நோக்கி வந்த அவளுடைய தோழிப்பெண் வள்ளி, சற்று தொலைவில் நின்றபடி, “இளவரசி…” என அழைத்து சமுத்திராவின் சிந்தையை கலைத்தாள்.

“வா வள்ளி… என்னவாயிற்று?” தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டு வந்த பின்னரும் வந்திருக்கிறாள் என்றால், ஏதோ முக்கிய விஷயம் என்று எண்ணி அவ்வாறு கேட்டாள்.

“அதனை நான் தான் கேட்க வேண்டும் இளவரசி” என்றாள் சிறிது பதற்றத்துடன். தான் கேட்பது முறையில்லை என்று தெரியும், இருந்தும் மனம் தாங்காமல் கேட்டிருந்தாள்.

புரியாத பார்வையை சமுத்திரா பார்க்க, “ஏன் கலக்கமாக இருக்கிறீர்கள் இளவரசி?” என்றாள் வருத்தத்துடன்.

“அவ்வாறெல்லாம் இல்லை வள்ளி” என்ற சமுத்திரா, வள்ளியின் முக கலக்கத்தைப் பார்த்தவள், மேலும் தொடர்ந்து, “அண்ணன் திருமணத்தை இப்பொழுது வேண்டாம் என்கிறார். சில மாதங்கள் சென்று திருமண பேச்சை எடுக்கலாம் என கூறி விட்டார்” என்றாள் மெல்லிய குரலில்.

“ஆமாம் இளவரசி. இன்று காலையே வேங்கை நாட்டிற்கு தகவலும் அனுப்பி விட்டார்களே. இளவரசர் கூறுவதும் சரிதானே இளவரசி, அவரே இரண்டாண்டுகள் கழித்து இப்பொழுதுதான் நாடு திரும்பி இருக்கிறார். அவருடைய பணிகளில் ஒன்ற வேண்டும் அல்லவா? அதற்காகத்தானே நேரம் கேட்கிறார். சரி இதற்கு ஏன் நீங்கள் கவலையாக இருக்கிறீர்கள்?” அவளுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை. தமையனின் திருமணம் தள்ளிப்போவதற்கு யாரும் இவ்வளவு கவலை கொள்வார்களா என்று தோன்றியது. அதுவும் மருத தேசத்து இளவரசி இது போன்ற சிறு விஷயங்களுக்கு எல்லாம் வருந்த மாட்டாரே என்றவாறு எண்ணினாள்.

வள்ளியிடம் என்னவென்று கூறுவாள்? ரூபனரைக் காணாமல் இருக்க முடியவில்லை என்றா? எவ்வளவு முயன்றும் ஏதேனும் ஒன்று அவரை நினைவு படுத்தி விடுகிறதென்று எப்படி சொல்ல முடியும்? அண்ணனின் திருமண வைபவம் என்றால், கண்டிப்பாக ரூபனர் வருவார். அவரைக் கண் குளிர பார்த்துவிட முடியும் என்று நான் எண்ணியிருக்க, அண்ணன் திருமணத்தையே தள்ளி வைத்து விட்டார் என்றா?

இதெல்லாம் எப்படி அவளிடம் கூற, ஏனோ யாரிடமும் பகிரக் கூட இயலாத இந்த வலியும், வேதனையும் மனதை மென்மேலும் கனக்கச் செய்தது. பொதுவாக காதல் கதைகளை தோழிப்பெண்களிடம் பகிர்வார்கள்தான். ஆனால், அவளின் காதல் கதையின் தொடக்கமே, யாரும் அறியக்கூடாது என்றல்லவா தந்தையாரும், தமையனும் தீர்மானித்திருக்கிறார்கள்.

ஆனால், சமுத்திராவிற்கு அது ஒரு தடை இல்லை. ‘எனக்கு ரூபனரைக் காண வேண்டும் போல இருக்கிறது’ என்று கூறினாலே அவள் உள்ளத்தை தோழிப்பெண்கள் உணர்ந்து கொள்வார்கள்தான், ‘அவரை எப்படி தெரியும்? எங்கு சந்தித்தீர்கள்?’ என்று எந்த கேள்வியும் கேட்கவும் மாட்டார்கள். இருப்பினும் ஏனோ யாரிடமும் இதை பகிர்ந்து கொள்ள மனம் ஒப்பவில்லை.

அவள் சிந்தனையிலேயே வெகு நேரம் உழன்று கொண்டிருந்தாள். அவளுடைய பதிலுக்கு காத்திருந்த தோழி, இளவரசி பதில் கூறாதிருக்கவும், மறுபடியும் எப்படி அவளை அணுக என்று தவித்திருந்தாள். ஒரு தோழிப்பெண் இளவரசியிடம் அந்தளவு நெருக்கம் காட்ட தயக்கமாக இருந்தது.

நினைவுக்கு திரும்பிய சமுத்திரா, அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கூற என்று சிந்திக்க… வள்ளி அதற்கு இடம் தராமல் அவளுடைய மனநிலைமையை உணர்ந்து, “வெகு நேரம் ஆகிவிட்டது இளவரசி. இருள் சூழ தொடங்கி விட்டது. நாம் திரும்புவோமா?” என்று கேட்க, சம்மதமாய் தலை அசைத்த சமுத்திரா முன்னே சென்றாள்.

** தீப்பந்தங்கள் அந்த அறை முழுவதும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது. நன்கு விஸ்தாரமான அறை, அந்த அறையில் சந்திர நாட்டு வேந்தர் ரூபன சத்ரியரும், படைத்தளபதி கதிரவனும் மட்டும் தனித்திருந்தனர்.

“மக்களின் துயரை துடைத்த பிறகே நிம்மதியாய் இருக்கிறது கதிரவா. இந்த ஒருவார காலமாக வேறு எதிலுமே கவனம் செலுத்த இயலவில்லை” என்றார் ரூபனர்.

“நீங்கள் நல்ல முறையில் நிலைமையை சமாளித்தீர்கள் அரசே. உங்களை எண்ணி பெருமை கொள்கிறேன்” என்று மனமார மகிழ்வு பொங்க கூறினான் கதிரவன்.

“எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது கதிரவா. மக்கள் கண்ணீரைக் கண்டதும் என்னால் எதையும் சிந்திக்க இயலவில்லை” என்றவர், மேலும் தொடர்ந்து, “உன்னிடம் ஒப்படைத்த பணிகள் என்னவாயிற்று?” என்றார்.

“மக்களின் சந்தேகம் சரிதான் வேந்தே. இது கார்முகிலன் கூட்டத்தினரின் வேலைதான்”

“ஆமாம் அவர்களின் இருப்பிடம் எங்கே? மொத்தம் எத்தனை நபர்கள் அவன் கூட்டத்தில் இருப்பார்கள்?”

“அந்த விவரங்களை இதுவரை கண்டறிய முடியவில்லை வேந்தே!” சற்று தயக்கத்துடன் கூறினான்.

“என்ன? ஏன் இத்தனை காலம் இப்படி கண்டறியாமல் தீட்சண்யர் விட்டிருக்க மாட்டாரே!” ரூபனரின் குரலில் சற்று அதிர்ச்சி தெரிந்தது.

"நாட்டில் புரட்சிப்படைகளின் ஆதிக்கம் பெரும் அளவில் இருந்தது அரசே. அப்பொழுது கார்முகிலனின் தொல்லைகள் கூட குறைவு எனலாம். அதுவும் சில சதிகாரர்கள் நாட்டு மக்களோடு மக்களாக இருந்து, தொல்லை தந்து வந்தனர்.

அவர்களை அழிப்பதே முதன்மை காரியமாக இருக்க, அதிலேயே தமது நேரம் முழுவதையும் இளவரசர் தீட்சண்யர் செலவிட்டார். இறுதியாக கார்முகிலன் கூட்டத்தினரை பற்றி தெரிந்து, அவர்களை களை எடுக்க தொடங்கிய நேரம், நீங்கள் மன்னராக நியமிக்கப் பட்டுவிட்டீர்கள்."

ஆம் இதெல்லாம் தீட்சண்யர் கூறியவைதான். ஆனால் இருப்பிடம் கூட தெரியாதிருக்கும் என்று ரூபனர் எண்ணியதில்லை.

கதிரவனே மேலும் தொடர்ந்து, “அன்றைய இரவில் காவல் பணியில் இருந்த வீரர்கள் என்ன கூறினார்கள் அரசே?”

“அவர்கள் நாட்டிற்குள்ளும், கோட்டைக்குள்ளும் தான் காவல் இருந்தார்களாம். விளைநிலங்களை கவனிக்கவில்லையாம்!” இதனை கூறும்பொழுதே அவருடைய எரிச்சல், பிடித்தமின்மை அனைத்தும் குரலிலும், முகத்திலும் தெளிவாக தெரிந்தது.

“அரசே! பொதுவாக அப்படி காவல் இருக்க மாட்டோம். இனி வேண்டுமாயின் அங்கேயும் ஆட்களை காவலுக்கு அனுப்பட்டுமா?” என்றான் தயக்கத்துடன்.

“இல்லை வேண்டாம் கதிரவா. எத்தனை இடங்களில் காவலுக்கு ஆட்களை வைக்க இயலும். ஆனால், காவலை சற்று அதிகரித்துவிடு. கண்டிப்பாக எல்லைகளில்” என்றவர், சற்று யோசனையுடன், “ஆமாம், கார்முகிலன் கூட்டத்தினர் சிலரை சிறையில் அடைத்திருப்பதாக தீட்சண்யர் கூறினாரே?” என்றார் கேள்வியுடன்.

“ஆம் அரசே இருக்கிறார்கள்.”

“நாளை அவர்களை காண செல்வோம்.”

“அவர்கள் இதுவரை எந்த தகவலும் கூறியதில்லை அரசே. பல தண்டனைகளை கொடுத்துப் பார்த்துவிட்டோம். அனைவரின் பதிலும் மௌனம் என்பதாகவே இருக்கிறது” என்றான் ஆற்றாமையுடன்.

“இருக்கட்டும். நானும் அவர்களை பார்த்தால்தான் ஒரு தீர்மானத்திற்கு வர இயலும்” என்றார் திடமாக.

“ஆகட்டும் அரசே. உங்களிடம் வேறொரு விஷயமும் கேட்க வேண்டுமே” என்றான் தயக்கத்துடன்.

“என்னிடம் என்ன தயக்கம்? என்னவென்று கேள். இதற்கெல்லாமா அனுமதி எதிர்பார்ப்பாய்?”

“அரசே கடந்த வாரம் நீங்கள் வயல்வெளிகளை மேற்பார்வை பார்க்க சென்ற பொழுது, அங்கே சர்பம் வந்ததாக கேள்விப்பட்டேனே?” என்று தயக்கமாக இழுத்தான். ஏனெனில், இரண்டு முறை சர்பம் வந்திருந்தது. அதுவும் ரூபனர் மேற்பார்வையிட சென்ற வேளையில் மிகவும் சரியாக வந்திருந்தது.

இரண்டுமே மிகக்கொடிய விஷ சர்பங்கள். மந்திரிகளுக்கு சந்தேகமே வந்துவிட்டது. ‘யாரோ மன்னரின் உயிர் பறிக்க செய்து கொண்டிருக்கும் சதி’ என உறுதியாக நம்பி மன்னரிடமும் தெரிவித்தார். ஆனால், அவர் அதனை நம்பவும் இல்லை, ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவும் இல்லை. அதனாலேயே, மிகவும் தயங்கியபடி இதனை கதிரவன் கேட்டான்.

“என்ன கதிரவா? வயல் வரப்பு என்றிருந்தால், சர்பங்கள் சாதாரணமாக வருவது தானே? அதுவும் ஊரைத்தாண்டி இருக்கும் வயல் வரப்புகள் அங்கே அப்படி வராமல் இருந்தால்தான் அதிசயம். மந்திரிப்பெருமக்கள் தான் இதனை எண்ணி பெரிதாய் கவலை கொண்டார்கள் என்றால், நீயுமா?” என்றார்.

ரூபனருக்கு இதில் துளியும் சந்தேகம் இல்லை. மந்திரிப்பெருமக்களோ கார்முகிலனின் கூட்டத்தை சந்தேகித்தனர். கதிரவனுக்கும் அவர்கள் மீதே சந்தேகம்.

ஆனால், இந்த செயல்கள் தற்செயலாக நடந்ததில்லை. அதேசமயம் கார்முகிலன் கூட்டத்தினரும் இதனை செய்யவில்லை. இதனை செயல்படுத்தியது ஆலமர மண்டபத்தில் பதுங்கியிருக்கும் முப்பெரும் தலைவர்கள் கூட்டத்தினரே. ஆனால், இதனை யாராலும் யூகிக்க கூட இயலவில்லை என்பதே அவர்களுடைய திறமை.

“அரசே ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? சரி நீங்கள் சொல்வது போலவே இருக்கட்டும். சந்திர நாட்டின் இரண்டாண்டு கால தவம் நீங்கள். உங்களுக்காக இல்லாவிடினும் எங்களுக்காகவேணும் நீங்கள் சற்று அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான் கதிரவன்.

“என்ன கதிரவா. எதற்காக இவ்வளவு வருந்துகிறாய்? இனி நான் கவனமாக இருக்கிறேன். நீ வருத்தம் கொள்ளாதே” என்றார் புன்னகையோடு.

அடுத்த நாள், சிறையில் அடைந்திருந்த கார்முகிலன் கூட்டத்தினரை காண, படைத்தளபதி கதிரவனோடு ரூபனரும் சென்றார். அனைவரையும் பார்த்த பொழுதே உணர்ந்து கொண்டார், அவர்கள் பல்வேறு சித்ரவதைகளை அடைந்திருக்கின்றனர் என்று.

இன்னும் கூறப்போனால் அவர்களை பார்ப்பதற்கு நோயாளிகளைப் போன்று, மிகவும் உடல் மெலிந்து, சோர்ந்து, பலவீனமாக இருந்தனர். அவர்கள் உடலில் அதிக காயங்கள் இருந்தது. "இவ்வளவு சித்ரவதைக்குமா இவர்கள் வாயைத் திறக்கவில்லை?’ ரூபனர் அவர்களின் நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் கேட்டார்.

“ஆம் அரசே. இவர்கள் கூட்டத்தினர் இருவரை இவர்களின் முன்னிலையில் துடிக்க துடிக்க கொன்று கூட பார்த்தாயிற்று. இறந்தவர்களும் வாய் திறக்கவில்லை. அவர்களின் வேதனையை நேரில் கண்ட இவர்களும் வாய்திறக்கவில்லை” என்றான் கதிரவன்.

‘என்ன விசுவாசம்? கடும் பயிற்சி இல்லாமல் இது சாத்தியமாகாது’ என்று மனதிற்குள் எண்ணி வியந்து கொண்டார்.

“என்ன அரசே என்ன சிந்திக்கிறீர்கள்?” என்றான் கதிரவன்.

“ஒன்றும் இல்லை கதிரவா. நாம் செல்வோம்” என்று திரும்பிவிட்டனர்.

** ஆலமர மண்டபத்தில், முப்பெரும் தலைவர்கள் தங்களுக்குள் ஆலோசனையில் ஈடு பட்டிருந்தனர்.

“என்ன தம்பி எதற்காக இப்படி பதுங்கி ஒதுங்கி அவனை கொல்ல முயற்சி செய்கிறோம். அதுவும் இத்தனை பொறுமையாக?” என்றான் இரண்டாவது தமையன்.

“அண்ணா நாம் யார் என்று கண்டறியக்கூடாது. ஒருமுறை கண்டறிந்து சுதாரித்து விட்டாலும், பிறகு நம்மை அழிப்பது அவர்களுக்கு மிகவும் எளிது” என்றான் இளையவனான அந்த கூட்டத்தின் தலைவன்.

தமையன்கள் இருவரது முகமும் தெளியாததைக் கண்டு, இளையவனே மேலும் தொடர்ந்து, "எனக்கும் அவனை என் கைகளினால் துடிக்க துடிக்க கொல்ல வேண்டும் என்றுதான் ஆவலாக இருக்கிறது. ஆனால் என்ன செய்ய அண்ணா நமது நிலைமையும், அவன் நிலைமையும் அப்படி இருக்கிறது.

இப்பொழுது நாம் என்ன சிந்தித்து செயல்பட்டாலும், அவனை கொல்ல முயற்சிக்கும் தருணம், சிறு தடங்கல் வந்தாலோ அல்லது அவர்களிடம் நேரடியாக மாட்டி விட்டாலோ, அதன் விபரீதம் என்னவென்று சிந்தித்து பாருங்கள்.

நாம் இதுவரை இழந்தது போதாதா? இனி நான் யாரையும் இழக்க தயாராய் இல்லை. நாம் எடுக்கும் முயற்சிகள் இன்று பலனளிக்காமல் போகலாம். அவன் எத்தனை முறை தப்புவான்? எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நிச்சயம் விரைவினில் அவனது உயிரைக் கொல்வோம்" என்றான் தீர்க்கமாக.

“நீ கூறுவதும் சரிதான். நீ கூறியதைப் போல பொறுமையாகவே செயல்படுத்துவோம். உயிரை எண்ணி கூட கவலை இல்லை. ஆனால், அவன் உயிர் போகும் முன்பு நாம் இறந்து விட்டால்? இல்லை அது நடக்கக்கூடாது. அவன் உயிர் பிரிந்தால் மட்டுமே நமக்கு நிம்மதி” என்றான் மூத்த தமையன்.

“சரி தம்பி. நீ கற்றவன், நீ கூறுவது சரியாகத்தான் இருக்கும். சரி நம்முடைய அடுத்த திட்டம் என்ன? அவன் ஒவ்வொரு முறையும் நம் திட்டத்தில் பிழைக்கும் தருணம் எனது வெறி ஏறிக்கொண்டே செல்கிறது” என்றான் இரண்டாம் தமையன்.

“கவைப்படாதீர்கள் அண்ணா. இந்தமுறை அவனைப் பற்றியும் அவன் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்து கொண்டு திட்டம் தீட்டுவோம். மறுபடியும் மறுபடியும் தோல்வியை தழுவுவதில் எனக்கும் பிடித்தம் இல்லை” என்றான் இளையவன்.

ரூபனர் அழிவது மட்டுமே குறிக்கோளாக இருக்க, அதனை ரகசியமாக செய்து முடிக்கும் வழியைத்தான் அவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

** கார்முகிலன் சந்திர நாட்டின் அரண்மையிலேயே பல காலம் வசித்திருந்ததால், அவனுக்கு அரண்மையில் ரகசிய சுரங்க பாதைகள் அனைத்தும் அத்துபடியாக இருந்தது. எதிர் அணியினருக்கு இரகசியங்கள் தெரிந்திருப்பது முறையல்ல என்பதால், ரூபன சத்ரியர் ரகசிய வழிகளை எல்லாம் அடைத்து, வேறு சில முக்கிய பாதைகளை மட்டும் அமைக்கும் பணியை நியமித்திருந்தார்.

இந்த திட்டத்தை மருத யுவராஜர் தீட்சண்யரிடம் கூறியபொழுது, தீட்சண்யர் ரூபனரை வெகுவாக பாராட்டினார். நண்பனை எண்ணி கர்வம் கொண்டது அவர் உள்ளம்.

அவரின் மகிழ்ச்சியை உணவருந்தும் தருணம் அவருடைய தந்தையார் வீரேந்திர மருதரிடம் பகிர, அங்கே உணவினை அளந்து கொண்டிருந்த சமுத்திராவின் செவிகளிலும் தெளிவாக விழுந்தது.

‘நல்ல முன்னேற்றம் தான்!’ என்று சமுத்திராவிற்கு மனம் மகிழ்ந்தது.

தீட்சண்யர் மருத தேசத்தின் பணியில் மூழ்க, ரூபன சத்ரியர் சந்திர நாட்டின் அரச அலுவல்களில் மூழ்கினார். அரண்மனையில் சுரங்க பாதை மாற்றி அமைப்பதற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததினால், ரூபன சத்ரியர் அருகினில் இருந்து மேற்பார்வை செய்ய வேண்டி இருந்தது. அதனால், அவரால் மருத தேசம் செல்லவே இயலவில்லை.

ஆனாலும் மனதின் ஓரத்தில் ‘விரைவில் மருத தேசம் செல்ல வேண்டும்’ என்று ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருக்க, கட்டுமானப்பணிகளை துரித்தப்படுத்தினார்.

எவ்வளவு முயன்றும் மூன்று மாதங்களுக்கு மேல் இழுக்க அந்த மூன்று மாதங்களும் அவருடைய மனம் தீயாய் சுட்டது என்னவோ உண்மை.

இதற்கிடையில் முப்பெரும் தலைவர்களின் சூழ்ச்சி ஒருபுறம், கார்முகிலனின் சதி மறுபுறமுமாக இருக்க, சில சமயங்களில் முப்பெரும் தலைவர்களின் சதியையும் கார்முகிலன் செய்ததாகவே எண்ணிக் கொண்டனர் ரூபனரும், அரசபையினரும்.

பல சமயங்களில் முப்பெரும் தலைவர்கள் தாங்கள் மன்னரைக் கொல்ல சூழ்ச்சியோ, சதியோ செய்வதை யாரையும் உணர கூட விட்டதில்லை. அனைத்தையும் விபத்து போலவே நடத்தி வந்தனர்.

சந்திர நாட்டில் ரூபனருக்கு எதிராக அவரை அழிப்பதற்காக ஒரு சதி கூட்டத்தினர் இருப்பதே யாருமே அறிந்திருக்கவில்லை. ஏன் அப்படி ஒரு யூகம் கூட யார் மனதிலும் இல்லை.