சஹானாவின் அவனி(ளி)ன் புரிதல்

சஹானாவின் அவனி(ளி)ன் புரிதல்
0

அவ(னி) ளின் புரிதல்

ஏய் டைம் ஆச்சு எழுந்து போய் வேலைய பாரு… எனக்கு ஆபீஸ் க்கு டைம் ஆச்சி என்று காலை பொழுது சண்டையுடனே ஆரம்பமானது அவர்களுக்கு.

சுகன், ஆறடிக்கும் குறையாமல் இருக்கும் கட்டிளிங்காளை
அவன் கண்கள் தன்னை ஒருதரம் பார்க்காதா என்று ஏங்கிய பெண்கள் அனேகம்… ஆனால் அவன் கண்கள் சுப்ரஜாவை மட்டும் இமைக்காமல் பார்த்து காதல் வயப்பட்டது… அது பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. திருமணமான புதிதில் அனைத்து தம்பதிகளை போல சந்தோஷமாய் உலா வந்தனர் அந்த இளம் ஜோடிகள். அதில் அன்பின் இரண்டு வருடம் உருவாய் உருவானது சிசு… அதில் சுப்ரஜாவால் சரிவர வேலை செய்ய முடியவில்லை… அடிக்கடி வாந்தி, மயக்கம் என்றானது… அதனால் அடிக்கடி விடுப்பு எடுத்து கொண்டாள். அதில் நிறைய சம்பள பிடித்தம் ஆனது. என்ன தான் சுகன் அவளுடைய மேனேஜர் என்றாலும் அவனால் அவளின் சம்பள பிடித்ததை தடுக்க முடியவில்லை… பல கனவுகளுடன் இருந்தான் சுகன். அவன் சுப்ரஜாவை மனதார காதலித்து தான் கல்யாணம் செய்தான்… ஆனால் சில நிபந்தனைகளோடு…

சுகன், "ரஜா இங்க பாரு எனக்குனு சில ஆசைகள் இருக்கு… சொந்த வில்லா வாங்கனும் சோ உன்னோட சம்பளம் வீட்டு செலவுக்கு… என்னோட சம்பளம் நம்ம வீடு வாங்க ஓகே வா… அண்ட் இன்னொரு முக்கியமான விஷயம் பேபி வீடு வாங்கின பிறகு தான்… இதுக்கு எல்லாம் ஓகேன்னா கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லன்னா இரண்டு வருஷம் கழிச்சு…

சுப்ரஜா, "சுகன் கண்டிப்பா நான் இதுக்கு எல்லாம் ஒத்துக்கிறேன்… நீங்க நாம சந்தோஷமா, வசதியா வாழ தானே இதெல்லாம் கேக்குறீங்க… எனக்கு புரியுது… நான் உங்க நிபந்தனைகளுக்கு சம்மதிக்கிறேன்.

ஆனால் திருமணம் ஆன ஆறு மாதங்களுக்கு மேல் அவள் மாமியார், மற்ற உறவினர்கள் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று ஜாடை மாடையாய் கேட்க ஆரம்பித்தனர்… அப்பொழுது எல்லாம் சிரித்தப்படி அவர்களை கடந்து வந்து விடுவாள்… ஆனால் இதோ இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஓடி விட்டது… எத்தனை ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி இருப்பாள்? அதன் தாக்கமே அவள் தாயாகிய செய்தி அறிந்த பொழுது அவனின் வார்த்தைகள் காற்றில் கரைந்தன. அவன் நிபந்தனைகள் மீறி தாய் பாசம் மேலோங்கியது… சந்தோஷமாய் அவனிடம் தகவல் சொன்னாள்… அவன் முதலில் சந்தோஷமாய் உணர்ந்தாலும் அடு்த்த நொடி,

சுகன், " ரஜா இந்த குழந்தை இப்ப வந்தா நமக்கு செலவு அதிகமாகும்… என்ன பண்றது?

ரஜா," நோ சுகன் இதுக்கு மேல முடியாது… எல்லாரும் என்ன தான் கேள்வி கேக்குறாங்க… இதுக்கு ஒரு படி மேலே போய் அத்தை என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு உங்களுக்கு வேற பொண்ணு பார்க்க ஆரம்பிச்சி இருக்காங்க உங்களுக்கு தெரியுமா? என்னால குழந்தை பெத்துக்க முடியாதா? சொல்லு… நான் இவ்வளவு நாள் உன் பேச்ச கேட்டு தானே நடந்துக்கிட்டேன்னு… அட்லீஸ்ட் இந்த ஒரு விசயத்துல என் பேச்ச கேளுங்க ப்ளீஸ் என்று கெஞ்சி பார்த்தாள்… அவள் கெஞ்சல் அவனை ஏதோ செய்ய சரி என்றான்…

ஆனால் நாளுக்கு நாள் அவள் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை… வாந்தி மயக்கம் என்று அவளை பாடாய் படுத்தி எடுத்தது… அது அவனுக்கு கோபத்தை தூண்டியது… குழந்தைக்காக அல்ல சம்பளத்திற்காக…

சுகன், "ஏய் நீ இப்படியே லீவ் எடுத்துக்கிட்டு இருந்தா பாதி சம்பளம் கூட வராது… அப்பறம் எப்படி இந்த மாச வீட்டு செலவ கவனிக்கிறது? இதுல ஸ்கேன், டெஸ்ட் அது இதுன்னு எவ்வளவு செலவு? ச்சே

ரஜா," சுகன் ஸ்டாப் இட், இந்த குழந்தை உங்களுக்கும் தான் சொந்தம்… சீ இந்த குழந்தைக்கு உண்டான செலவை என்னோட சொந்த உழைப்புல தான் பார்த்துக்கிறேன். நீ வீடு வாங்குற வரைக்கும் நான் காத்திருந்து தான் குழந்தை பெத்துக்கனும்ன்னா இந்த ஜென்மத்தில் முடியாது… நீ உங்க வீட்டுல உள்ளவங்களுக்குலாம் செய்யறதுக்கு நான் உழைச்சி கொட்டனுமா? இனிமேல் முடியாது… என் சம்பளம் எனக்கும் என் குழந்தைக்கும் தான்… உங்க வீட்டுக்கு இனிமேல் நீங்க வீட்டு செலவு நீங்க பாத்துக்கோங்க… அடுத்தவர்களுக்கு உழைச்சி கொட்ட நான் என்ன மிசினா?

சுகன், "யார பத்தி சொல்ற? என் வீட்டு ஆளுங்க உனக்கு அடுத்தவங்களா?

ரஜா," ஆமா, உங்களுக்கு வேற கல்யாணம் பண்ண பாக்குறாங்க… என்னை இந்த குழந்தைக்காக எவ்வளவு அசிங்கப்படுத்தி இருப்பாங்க? அதுக்கு எல்லாம் நீங்க ஒரு வார்த்தை பேசினீங்களா? உங்களாள தானே நான் அவ்வளவு பேச்சு வாங்கினேன்… ஒரு தடவையாவது நான் தான் குழந்தை இப்ப வேண்டாம்னு சொல்லி இருக்கேன்னு சொல்லி இருந்தா என்னை யாராவது கேள்வி கேட்டு இருப்பாங்களா? பொண்ணுங்க கிட்ட தானே எல்லாரும் குழந்தையை பத்தி கேக்குறாங்க என்னவோ உங்களுக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி என்று சொன்ன அடுத்த நொடி அவன் ஐவிரலும் அவள் கண்ணத்தில் பதிந்திருந்தது.

சுகன், "இன்னொரு வார்த்தை பேசின நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது… எனக்கு மட்டும் குழந்தை பெத்துக்குற ஆசை இல்லையா? நீங்க வசதியா இருக்க தானே இவ்வளவு உழைக்கிறேன்? நீயே புரிஞ்சிக்கலன்னா எப்படி? ச்சே… கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியே ரொம்ப நல்லவ மாதிரி பேசின… இப்ப என்னடான்னா உன் குடும்பம் என் குடும்பம்னு பேசுற? அப்போ சொன்னது எல்லாம் பொய்யா? நடிப்பா? இங்க பாரு இந்த குழந்தையை இதுக்கு மேல கலைக்க முடியாது… இன்பேக்ட் அதுல எனக்கு விருப்பம் இல்லை… ஒரு உயிர அழிக்குற அளவுக்கு நான் கொடுரமானவன் இல்ல… குழந்தைக்கு வேணும்றது உனக்கு வேணும்றது எல்லாம் நான் செய்யறேன் ஆனா கடமைக்காக தான், உன் மேல உள்ள காதல்னால இல்ல…

ரஜா, "ஓஓ அந்த அளவுக்கு போச்சா? ஓகே நோ ப்ராப்ளம்… குழந்தை எனக்கு ரொம்ப முக்கியம் அதுக்காக யார வேணும்னாலும் நான் பகைச்சிக்க தயார்… யாரா இருந்தாலும் எனறதில் சிறு அழுத்தம்…

சுகன்," சீ ரஜா காலையில ஆபிஸ் போகறதுக்கு நீ தான் வேலை செய்யனும்… பிகாஸ் என்னால காலையில எதுவும் செய்ய முடியாதுனு உனக்கே தெரியும்… ஈவினிங் நான் செய்யறேன். மத்தபடி இந்த ஹாஸ்பிடல், ஸ்கேன் அது இதுன்னு என்ன எங்கையும் கூப்பிடாத… எனக்கு அதுல விருப்பம் இல்ல… முதல் குழந்தை வயித்தல இருக்கும் போது நான் என்ன என்னவோ செய்ய நினைச்சேன்… ஆனா நான் நினைச்சத முடிச்சிட்டு தான் இதெல்லாம் அப்படின்னு ஒரு குறிக்கோளோட இருந்தேன்… ஆனா நீ என் ஆசையெல்லாம் புதைச்சிட்ட… என்று அவளை கத்தி விட்டு வெளியே சென்று விட்டான்.

அன்றிலிருந்து இப்படித்தான் எதற்கெடுத்தாலும் கோபம் வெறுப்பு இது மட்டுமே அவன் முகத்தில் இருந்தது ஆசையாக ஒருநாள் கூட பார்க்கவில்லை, பேசவில்லை.

சுப்ரஜாவிற்கு தான் மனது நிலையாக இல்லை… இந்த குழந்தை பிறந்த பிறகு இவன் அதை ஆசையாக கையில் ஏந்துவானா? என் மேல் இருந்த பாசம் உண்மையாகவே குறைந்து விட்டதா? என்று யோசித்து கொண்டே உட்கார்ந்து இருந்தவளுக்கு தொண்டை அடைத்தது, அழுகை பீறிட்டது… இத்தனை நாள் கட்டுபடுத்தி வைத்த அழுகை வெடித்தது…

அந்த அழுகையிலேயே சாப்பிடாமல் உறங்கியவளுக்கு இன்று காலை அவன் அழைப்பது காதில் சரியாக விழவில்லை… அவன் இரவு வந்த போது அவள் உறங்கி கொண்டிருந்ததால் அவன் அவள் பசியோடு உறங்கி இருக்கிறாள் என்று தெரியவில்லை…

சுகன், "ஏய் சுப்ரஜா எழுந்திரு… டைம் ஆச்சு உனக்கு தான் லீவ் எனக்கில்லை… எழுந்து பிரேக்பாஸ்ட் பண்ணு இன்னைக்கு மீட்டிங் வேற இருக்கு.

அவள் தள்ளாடியபடி எழுந்து போனாள்… தட்டு தடுமாறி அவனுக்கான உணவை அவள் மேடேறிய வயிற்றை பிடித்து கொண்டு செய்து முடித்தாள்… அவள் உணவை எடுத்து கொண்டு வந்த நேரம் வயிற்றில் தாங்காத வலி வர அவள் அலறினாள் , அந்த அலறலில் சப்த நாடியும் அடங்கியது சுகனுக்கு…

சுகன், "ரஜா என்னம்மா என்ன ஆச்சு? வலிக்குதா? ஏதாவது பேசுடா எனக்கு பயமா இருக்கு… நான் உன்ன இனிமேல் திட்டமாட்டேன்… உன் இஷ்டம் போல எத்தனை குழந்தை வேணும்னாலும் பெத்துக்கலாம்… ப்ளீஸ்டி கண்ண திறந்து பாரு… என்று கண்ணீர் விட்டு கொண்டிருந்தான்…

அவளுக்கு அவனின் அழுகை வலித்தாலும் இரவு உண்ணாமல் இருந்தது அவளின் கண்களை திறக்க முடியாமல் செய்தது…

அதற்கு மேலும் தாமதிக்காது மருத்துவமனையில் சேர்த்தான்… அரை மணி நேரம் கழித்து செவிலியர் வந்து உங்களை டாக்டர் கூப்பிடறார் என்று அழைத்து விட்டு சென்றார்…

சுகன், "டாக்டர், ரஜா எப்படி இருக்கா? பேபி நல்லா இருக்குல?

டாக்டர், "உட்காருங்க மிஸ்டர். சுகன்.
கேக்குறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க இவ்வளவு நாள் இல்லாத அக்கறை இன்னைக்கு மட்டும் ஏன்? இவங்க பிரகநண்ட் ஆனதிலிருந்து நீங்க இவங்க கூட ஒருதரம் கூட வந்திலில்லையே…அவங்க சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட பார்க்காதவருக்கு இப்ப என்ன ஆச்சு? இரண்டு வருடம் கழிச்சி கரு உண்டாகி இருக்கு அதுக்கான மகிழ்ச்சி உங்க மனைவி கிட்ட நான் பார்க்கல… மாறாக செக் அப்க்கு வரும்போது எல்லாம் ஒரு வித சோகம் தான் இருக்கும்… ஆனா அது எல்லாம் ஸ்கேன்ல குழந்தையை பார்த்த பிறகு போய்டும்… நான் கூட கேட்டு இருக்கேன்… ஏன் உங்கள கூட்டிக்கிட்டு வரலன்னு? அதுக்கு உங்க மனைவி நீங்க ஊரிலேயே இல்லன்னு சொன்னாங்க… அவங்க மனசு எவ்வளவு வலிச்சிருந்தா நீங்க பக்கத்துல இருக்கும் போது இப்படி சொல்லி இருப்பாங்கன்னு யோசிங்க… உங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னு எனக்கு தெரியாது… பட் இந்த மாதிரி டைம்ல உங்க வெறுப்பையே, இல்ல கோகத்தையோ அவங்க மேல காட்டாதீங்க. போங்க உங்க மனைவிக்கு ஸ்கேன் பண்ண போறாங்க போய் இப்பவாவது உங்க குழந்தையை பாருங்க.

உள்ளே அவள் இன்னும் மயக்கத்திலையே தான் இருந்தாள்… அவள் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டவன் ஏன்டி இப்படி பண்ண? ஏன் சாப்பிடாம இருந்த? நான் சண்டை போட்டேன் தான்… அது ஒரு கோபம் என்னால இன்னும் வீட்ட வாங்க முடியல, உன்னை அதுல கூட்டிக்கிட்டு போய் உட்கார வைக்க முடியலைன்னு ஒரு வருத்தம் அதோட வெளிப்பாடு தான் உன்கிட்ட காட்டிட்டேன்… நான் நம்ம குழந்தை பெரிய வீட்டுல நல்ல வசதியோட பிறக்கனும்னு நினைச்சேன்… இது தப்பா சொல்லு… என்ற பொழுதே அவள் கண் விழித்தாள்…

ரஜா, "சுகன், சுகன் ப்ளீஸ் என்கிட்ட பழைய மாதிரி பேசுங்க, நீ பேசாம நான் முச்சடைத்து செத்துடுவேன் போல இருக்கு என்ற போது அவன் அவளை அணைத்திருந்தான்.

சுகன்," ப்ளீஸ் மா நீ இந்த மாதிரி பேசாத… நான் பண்ணது தப்பு தான்… வசதியா வாழ நினைச்சேனே தவிர உன் சந்தோஷத்தை கவனிக்கல…என்னை மன்னிச்சிடு… உன் சந்தோஷம் இந்த குழந்தை தான்… அது எனக்கு நல்லா புரிஞ்சது… என் சந்தோஷம் நீ தான்… உன்கிட்ட ஒழுங்கா பேசாம நான் மட்டும் சந்தோஷமா இருப்பேனா? என் உலகமே நீ தான்டா… இன்னொரு தடவை இந்த மாதிரி என்ன பயமுறுத்தி பார்க்காத என்னால முடியல… ஆனா குழந்தை வந்த அப்பறம் நீ என்ன ஒதுக்கிட மாட்டியே? என்று அவளுக்கு உணவை ஊட்டியபடியே கேட்டான்.

ரஜா," கண்டிப்பா மாட்டேன்… ஏன்னா நீங்க தான் என் முதல் குழந்தை… சுகன் நான் பண்ணதும் தப்பு தான்… உங்க கிட்ட அந்த மாதிரி பேசி இருக்க கூடாது…என்னை மன்னிச்சிடுங்க…

அதன் பின்பு ஸ்கேன் செய்த போது தன் குழந்தையின் அசைவுகளை பார்த்து மெய்சிலிர்த்து போனான்…

பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகளே இல்லை… புரிதல் கணவன் மனைவி உறவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது… ஒருவர் மற்றொருவரை புரிந்து கொண்டால் அங்கே சண்டைக்கு இடமேது… இங்கேயும் அதே நிலை தான்…

வீட்டிற்கு வந்தவர்களுக்கு அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த பாசம் முத்தமாய் பொழிந்தது… முத்தத்தில் ஆரம்பித்தது அடுத்த நிலைக்கு செல்ல அங்கே ஊடல் முடிந்து கூடல் இன்பமாய் அரங்கேறியது…

முற்றும்.

சஹானா.

1 Like

அருமையான கதைகளம். அழகான கதை நடை

1 Like

Rombha Alagan kadhai sahana, ella coupleskum thevaiyana message. :purple_heart:

Thanks sissy

Thanks sissy :heart: