சாலையில் தொலைந்த சிறுவன்

சாலையில் தொலைந்த சிறுவன்
0

நானும் எனது மாமாவும் ஒரு வேலை விஷயமாக எங்களது எங்களது ஊரின் அருகிலிருந்த டவுனுக்கு சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். இரு சக்கர வாகனத்தை நான் ஓட்டி வர பின்னால் அமர்ந்திருந்த எனது மாமா வழக்கம் போல ஊர் கதைகளைப் பேசியவண்ணம் வந்தார்.

மரங்கள் அடர்ந்த அந்த இருள் நேரத்தில் எங்களைத்தவிர வேறு ஒரு வாகனமும் இல்லை. வழக்கமாக இரவு பத்து மணிக்குள் வீட்டுக்குத் திரும்பிவிடும் பழக்கம் உள்ள இருந்தாலும் இந்த முறை சில காரணங்களால் நள்ளிரவாகி விட்டது. தடைகள் இல்லாத பயணம் சுவாரஸ்யமாகவே இருந்தது. அந்த சிறுவனைப் பார்க்கும் வரை.

அந்த இருள் நேரத்தில் ரோட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் கீழே அழுதபடி நின்ற சிறுவனின் அருகே நான் வண்டியை நிறுத்த எனது மாமா அவனிடம்

“யாரு தம்பி நீ. எதுக்காக இந்த ராத்திரி நேரத்தில் இங்க நிக்கிற”

பதில் பேசாமல் அந்த சிறுவன் மேலும் அழ

“உங்கம்மா எங்க”

“தெரியல… எங்கம்மாவைக் காணோம். அவங்களத்தான் தேடிட்டு இருக்கேன்”

இருவருக்கும் அவனைப் பார்த்ததும் பரிதாபமாகிவிட்டது.

“பக்கத்து கிராமத்து பய்யன்ன்னு நினைக்கிறேன். அங்க போயி கேட்டால் தெரியும். வண்டில ஏத்திட்டு போகலாமா” என்று எனது மாமா கேட்கவும் தலையாட்டினேன்.

“தம்பி எங்க கூட வர்றியா பக்கத்து ஊர்ல இறக்கி விடறேன்”

அந்த சிறுவன் சம்மதிக்கவும் மாமா அவனைத் தூக்கி வண்டியில் அமர வைத்தார்.

அவன் அமர்ந்ததும் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். திடீரென்று வண்டியில் ஒன்றரை டன் எடையை ஏற்றியது போல ஒரு குலுங்கு குலுங்கியது. எப்போதுமே எனக்கு எனது பைக்கின் திறனில் ஒரு கர்வமே உண்டு. ஆனால் இப்பொழுது முழு வேகத்தில் என்ஜினை உசுப்பி விட்டும் அது திணறியவண்ணம் சில அடிகள் மட்டுமே நகர்ந்தது.

“என்னடா ஆச்சு” என்று கேட்டவண்ணம் நான் திரும்பிப் பார்க்க அந்த சிறுவன் பாதங்கள் நாங்கள் எந்த இடத்தில் ஏற்றுக் கொண்டோமோ அதே இடத்தில் ஆணி அடித்தார் போல நின்றது ஆனால் அந்த இடத்திலிருந்து பைக் நகர்ந்திருந்த அந்தப் பத்தடி தூரத்திற்கு நீண்டிருந்தது.

“மாமா ஒரு நிமிஷம் பையனை இறக்கி விடுங்க” என்று அதிர்ச்சியுடன் சொல்ல.

அவரும் எனது குரலின் அவசரம் புரிந்தாற்போல இறக்கி விட்டார்.

“பைக்கில் ஏதாவது கோளாறா… நானும் இறங்கணுமா”

“ஐயோ நீங்க இறங்காதிங்க” என்றபடி வேகமாய் வண்டியில் வேகம் தர, வண்டி சீறிப் பாய்ந்தது.

“டேய் அந்தப் பய்யன்”

"திரும்பிப் பாக்காதீங்க மாமா… " என்று அவரை எச்சரித்தவண்ணம் அங்கிருந்து புயல் வேகத்தில் வீட்டை வந்தடைந்தோம்.

அன்று பார்த்ததை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அந்தப் பாதையில் இரவு நேரம் செல்வதையோ, இரு சக்கர வாகனத்தில் செல்வதையோ நானும் எனது மாமாவும் இன்றும் கூடத் தவிர்த்து வருகிறோம்.

1 Like

செம!!

2 Likes