சேதுபதி விசுவநாதனின் 'மொழியில்லா வலிகள்' கவிதைத் தொடர்

சேதுபதி விசுவநாதனின் 'மொழியில்லா வலிகள்' கவிதைத் தொடர்
0

சேதுபதியின் ‘மொழியில்லா வலிகள்’ கவிதைத் தொடர்

மொழியில்லா வலிகள்-பாகம் 1

கானகத்தின் நடுவிலே
கருங்குயிலின் ஓசையிலே
கணவனுடன் இணைந்திடவே
கருவாக வந்தாயே

மசக்கை என்று அறிந்துவிட
மாதங்கள் ஏழு கடந்தினேனே
மகிழ்ச்சியாக உனை ஈன்றிடவே
மந்தியாய் கர்வம் கொண்டேன்

வானரத்தின் மறுவுருவாய்
வயிற்றினுள் தோன்றியவனே
வசந்தத்தை தந்தாயே
வாழ்க்கையின் வழிகளிலே

மார்மீது அணைத்தவாறே
வனத்தினிள் திரிந்தேனே
வழியெங்கும் உனைகாக்க
உறுதியாய்‌ இருந்தேனே

தரையில் நீ இறங்கிவிட
தனியாய் உணர்ந்தேனே
தன்னுடனே வைத்துகொள்ள
தினமும் நினைத்தேனே

மரமேறிய பொழுதெல்லாம்
மனதினுள் பயம்வந்திட
மந்தியின் மகனென்று
மனதினுள் தேற்றினேன்

உண்ணும் நேரமெல்லாம்
உன்முகம் ரசித்திட
உரிமையுள்ள அன்னையாய்
உன்னோடு நகர்த்தினேன்

விளையாடிய கணத்திலே
விழுந்துவிட நேர்ந்திடுமோ
விழுதுகளை வேண்டியே
வனத்திலே‌ வலம் வந்தேனே

உறுமும் புலியிடமும்
ஊளையிடும் நரியிடமும்
கொடிய மிருகத்திடமும்
காத்திடவே கலங்கினனே

கருப்புநிற சாலையில்
கட்டுக்கடங்க வேகத்தில்
கடந்திடும் வண்டிகள்
கலக்கியது இதயத்தை

கானகத்தின் இடையிலே
களவாடும் சாலையிலே
கவனமாய் செல்வாயே
கடந்திடும் வேளையிலே

வேகமாய் வந்தவனோ
வேடிக்கையாய் இருந்துவிட
விளையாடிய உன்னுயிரும்
விதிகளின் கரங்களிலே

தேடிய நேரத்திலே
தெய்வத்தை வேண்டிடவே
தேம்பிய முகத்தினிலே
தெரிந்துகொண்டேன் உன்னுருவை

ஆசையாய் வளர்த்தமகன்
அழிவுகொண்டு இறந்துவிட
அன்னையாய் என்னிதயம்
அழிந்திடவே நினைத்ததே

ஆருயிராய் இருந்தவனே
அவனியில் பிரிந்திட
அழுது கதறியே
அலம்பும் என்னுதடுகள்

ஆறறிவு கொண்டவனின்
அலட்சியத்தால் வந்துசென்ற
அகத்தினுள் வலிகளோ
அழுகையின் மொழிகளாய்

மொழி புரியாத மனிதனும்
மனத்தினுள் அறிவான்
வலி நிறைந்த மனதின்
வலிகளின் மொழிகளை

கண்ணிமையாய் இருந்த
கண்ணனும் பிரிந்திட
காடுகளின் வழிகளிலே
கனரகம் வேண்டுமோ?

***வலிகள் தொடரும்

மொழியில்லா வலிகள்-பாகம் 2

பால்வடிந்த மார்பினிலே
பாரங்களும் வந்ததடா
பாவிகளும் உன்னுயிரை
பாராமல் எடுத்திடவே

செல்லும் வழியெங்கும்
செல்லமே உன்நினைவே
செந்நிற குருதியிலே
சென்றுவிட்ட உன்முகமே

வனத்தின் ஓசையிலே
வாழ்வுமது ஓடிடுதிதே
வளியின் அசைவினிலே
வலிகளும் கூடிடுதே

வானரத்தின் பாஷையிலே
வரவில்லை உன்குரலும்
வந்துவிட்ட விதியெண்ணி
வாழ்க்கையுமே கதறிடுதே

அள்ளிக்கொண்ட நாட்களிலே
அடிவயிற்றின் பாரமது
அளவிடவே முடியவில்லை
அளித்திட்ட ஆனந்தத்தை

கொஞ்சிய நாட்களெல்லாம்
கொல்கிறதே இதயத்தை
கொணர்ந்த அன்னையின்
கொடுமையான நகர்வினிலே

நினைவுகளின் மொழிகளோ
நித்தமும் கேட்டிடுதே
நிம்மதியை தொலைத்துவிட
நிர்க்கதியாய் நானுமிங்கு

விழுதுகளின் வெறுமையது
விழிநீரில் உறைந்திடுதே
விழுகின்ற கனத்தினிலே
விடியலையும் முடித்திடுதே

தொந்தரவு என்றுசொல்லி
தொலைவினிலே நாமிருக்க
தொடர்கின்ற மனிதர்களும்
தொடர்புகளை அறிவரோ

அறிவினிலே ஆறிருந்தும்
அடிமனதில் ஈரமில்லை
அலும்பும் என்குரலும்
அறிந்திருக்க வழியுமில்லை

கனரகத்தின் சத்தமது
காதுகளில் கேட்டிடவே
காடுகளின் அமைதியுமே
காணாமல் போனதடா

கானகத்தின் வழிகளை
கால்தடமும் பதிந்துவிட
கனத்துடனே பல்லுயிரும்
கண்ணீரின் சுவடுகளில்…

*****வலிகள் தொடரும்

மொழியில்லா வலிகள்-பாகம் 3

பதிந்துவிட்ட காலடியோ
பயந்தினை தந்திடவே
பதுங்கியே வாழ்கின்றோம்
பயணிக்கிற காட்டினிலே

வண்டியின் இரைச்சலும்
வருகின்ற திசையெங்கும்
வனத்தின் ஓசைகளும்
வழிமாறி செல்கிறதே

நாட்களும் நீண்டிடவே
நடந்தவை மறையவில்லை
நானும் மரத்திடவே
நகர்கிறது வாழ்க்கையடா

காலத்தின் கோளத்தில்
கவலையின் உச்சமதை
காதலாய் வானரமும்
கலைத்திடவே போராடிடுதே

மந்தியின் வலிகளுக்கோ
மருந்தாக என்னவனும்
மயக்கத்தை தெளித்திடவே
மண்டியிட்டான் கடவுளிடம்

மறதியின் வழிகளிலே
மன்னவன் சொல்லுனிலே
மறுபடியும் வேண்டுகிறேன்
மகனாய் உன்னுயிரை

மாற்றத்தின் தோட்டத்தில்
மறுமுறையும் மசக்கையானேன்
மந்தியின் இதயத்தில்
மகிழ்ச்சி உதயமாகிட!!

கிட்டாத வரமொன்று
கிடைத்ததோ என்வயிற்றில்
கிறங்கி நிற்கிறேன்
கீழ்வயிறு கனத்தினிலே

கருவினுள் மறுமுறையும்
கண்ணனவன் செனித்திடவே
கவிப்புகளும் குறைந்ததடா
கசப்பான வாழ்க்கையிலே

உன்முகத்தை கண்டுவிடவே
உயிரை பிடித்துக்கொண்டு
உலவிகிறேன் நித்தமும்
உயிர்போகும் காட்டினிலே

கவனமுடன் ஏழுதிங்கள்
கடத்திடவே எண்ணுகிறேன்
காலனின் வேதத்தில்
கணக்குகளும் மாறக்கூடதென

****வலிகள் தொடரும்

மொழியில்லா வலிகள்-பாகம் 4

திங்கள் ஏழுதனை
திண்ணமாய் கடந்திடவே
திரிகிறேன் காட்டினிலே
தீண்டிட கூடாதென

உப்பிய வயிறுனிலே
உன்னுயிரும் மறுமுறையே
உண்டான மகிழ்ச்சியிலே
உலவுகிறேன் மரத்திலேயே

அலைகளையின் கோரத்திலே
அமைதியாய் வளர்கின்ற
ஆழ்கடல் முத்துபோல
அன்னையாய் உனைக்காப்பேனடா

வானரத்தின் அன்பினிலே
வசந்தங்கள் தோன்றிடுதே
வாழ்க்கையின் அர்த்தமோ
வருகின்ற உனக்காக

சந்தோஷ வாழ்வினிலே
சங்கடங்கள் வந்திடுமோ
சறுக்கிய நிகழ்வுகளால்
சந்தேகம் வந்திடுதே

வனத்தின் நிறங்களோ
வழிமாறி செல்கிறதே
வந்துவிட்ட மனிதர்களால்
வறுமையின் தோன்றிடுதே

மரங்களும் குறைந்திடவே
மசக்கைக்கு பயங்களடா
மறுமையிலே வந்தவனை
மறுமுறையும் பிரிவேனோ

என்னுள்ளே வளர்ந்துவிட்ட
என்னவனின் திருவுருவம்
எட்டிவர பாக்குதடா
என்னுதிர வழியினிலே

மறுபடியும் ஒருமுறை
மன்னவனே பிறந்துவிட்டாய்
மந்தியின் விழியினிலே
மகிழ்நீரும் வடியுதடா

மார்போடு அணைத்தே
மரங்களுக்கு தாவுகிறேன்
மட்டற்ற ஆனந்தத்தில்
மறக்கிறேன் என்னுயிரை

நெஞ்சமுதம் ஊட்டிடவே
நெகிழ்கிறேன் என்மகனே
நெறிமுறையில் இருப்பிடமும்
நெளிந்ததை மறுந்துவிட்டு

தரம்கெட்ட சமூகத்திலே
தன்னுயிரை கொடுத்தாவது
தரணியிலே வளர்த்திடுவேன்
தாயாய் காத்திடுவேன்

குறுகிபோன வனத்தினிலே
குறுவலம் வந்திடுவோம்
குறைக்கின்ற ஓசைகளில்
குறுநகை பூத்திடுவோம்

நிலபிடி கொள்கையிலே
நிர்க்கதியாய் நிற்கின்றோம்
நிலையறியா மூடர்களின்
நிம்மதியான உறக்கத்திலே

****வலிகள் தொடரும்

மொழியில்லா வலிகள்-பாகம் 5

சுதந்திரமாய் இருப்பிடத்தில்
சுற்றித்திரிந்திடும் வேளையிலே
சுழலகின்ற விழிகளிலே
சுகமாய் இருக்குதடா

மார்விட்டு நீயிறங்க
மனமகிழ்ச்சி போனதடா
மறுமுறையோ என்றெண்ணி
மனசுக்குள் வலிக்குதடா

இதயத்தோடு வைத்துக்கொள்ள
இயற்கைநியதி விடவில்லை
இறங்கிவிட்டாய் தரையினிலே
இயல்புநிலையும் மாறிடுதே

சக இன குரங்கிடனே
சந்தோஷமாய் ஆடிடவே
சங்கடங்கள் குறைந்ததடா
சந்தித்த மனதினிலே

இறக்கிவைக்க பார்க்கிறேன்
இயன்றவரை பாரத்தினை
இமையாக காத்திடுவேன்
இன்னுயிரும் உள்ளவரை

விடுமுறை நாட்களிலே
வீண்பொழுதை கழித்திடவே
விளையாட வந்திடுமே
விஷயெண்ணம் கொண்டகுழு

வேசம்கொண்ட மனதிர்களோ
வேகமாய் சென்றிடவே
வேதனைகளும் தோன்றிடுதே
வேர்களின் வழிகளலே

வரமாக வந்தவனே
வாகனத்தில் செல்வானோ
வருங்காலம் மறுபடியும்
வருத்தங்கள் தந்திடுமோ

உதிரத்தில் பிறந்தவனின்
உதிரத்தை கண்டுவிட
உள்ளத்திலும் எண்ணவில்லை
உயிரின் வலிகளாக

நித்தமும் தவிக்கிறேன்
நினைவுகளின் மொழிகளுடன்
நித்திரையும் பொய்க்கிறதே
நிலையற்ற காட்டினிலே

கானத்தின் நடுவினிலே
கறுப்புநிற சாலையிலே
கஷ்டங்களின் நொடிகளிலோ
கடவுளும் கண்முன்னே

கல்லிதயம் வேண்டுமென
கடவுளிடமும் கேட்கின்றேன்
கடந்திடும் பொழுதினிலே
கல்லறைகள் வேண்டாமென…

*****வலிகள் தொடரும்