சேதுபதி விஸ்வநாதனின் சிறுகதைகள்

சேதுபதி விஸ்வநாதனின் சிறுகதைகள்
0

ஏக்கம்

பச்சை பசேல் என்று வயல்வெளி நிறைந்த ஊர். அதிகாலை நேரத்தில் பறவைகள் தங்களின் உணவுக்காக கூட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த நேரம்.

கைகளில் தூக்குபோசியில் சோறும் வெங்காயமும் தலையில் வேலை உபகரணங்களையும் தூக்கி கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர் ஊர்மக்கள்.

தொலைபேசியும் தொலைகாட்சியும் இல்லாத அந்த நாட்களில் செவி வழிச் செய்திகள் சென்ற காலம்.

வயல்களில் வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருக்க நாட்டுப்புற பாடல்களால் மக்கள் களைப்பு தெரியாமல் வேலை செய்தனர்.

நண்பகல் வேலையில் வயலின் ஓரத்தில் நின்று ஒரு சத்தம். “கருப்பையா வேகமாக இங்க வா” என்று தபால்காரர் அழைத்தார்.

“ஏய்ய்ய்ய் கருப்பையா. இங்கே வாவோய்ய். தாபல்காரகவோ கூப்பிடுறாக” என்று மாறி மாறி சிலர் கூவ, கருப்பையா முகத்திலும் பார்வதியின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

வேகமாக வரப்புகளில் ஓடினர் இருவரும். “சின்ன புள்ளைங்க மாதிரி ரெண்டும் எப்படி ஓடுதுக பாரு” என்று சிலர் கேளி செய்தனர்.

“பின்ன என்னப்பா. அவக மவன் கிட்ட இருந்து கடுதாசி வந்தா சும்மா இருக்க முடியுமா?” என்று கூறினார் ஒருவர்.

மூச்சிரைக்க ஓடி வந்த இருவரும் தபால்காரரை பார்த்து, " ஐயா எம்புள்ள கடுதாசி போட்டுருங்கானா? எப்போ வரானாம்? சொல்லுங்கயா" என்று கருப்பையா கேட்க மூச்சு வாங்க பேசினார்.

“சாமி எம்புள்ள என்ன எழுதி இருக்கான்? சொல்லுங்க சாமி” என்று பார்வதியும் முகத்தில் ஆர்வம் பொங்க கேட்டாள்.

இவரின் நிலைமை பார்த்த தபால் காரருக்கு மனதில் பெரிய கவலையை உண்டாக்கியது.

“ஐயா சொல்லுங்க. ஏன் அமைதியா இருக்கீங்க” என்று கருப்பையா கேட்க,

“அது வந்து கருப்பையா” என இழுத்தார் தபால்காரர்.

“சொல்லுங்க சாமி. எம்புள்ள கடுதாசி போடலாயா?” என்று ஏக்கத்துடன் கேட்டாள் பார்வதி.

“உன் மவன் கிட்ட இருந்து கடுதாசி வரல கருப்பையா. பட்டாளத்து பெரிய ஆபிஸர் கிட்ட இருந்து தான் தந்தி வந்துருக்கு” என்று தபால்காரர் வாடிய முகத்துடன் கூற,

“எனக்கு எதுக்கு அவர் தந்தி அனுப்பனும்? என்ன ஐயா போட்டுருக்காரு?” என்று குழப்பத்துடன் கேட்டார் கருப்பையா.

“அது வந்து…, என்னை மன்னிச்சிடு கருப்பையா. நமது நாட்டு எல்லையில ரெண்டு நாளா பக்கத்து நாட்டு காரங்க கூட சண்டை நடந்துட்டு இருக்கு. அதுல உன் மவன சுட்டு கொன்னுட்டாங்க” என்று செய்தியை கேட்டதுமே,

“அய்யோ கடவுளே” என்று கதறிக்கொண்டு விழுந்தாள் பார்வதி.

தலையில் அடித்து கொண்டு “எல்லாம் போச்சே” என்று கத்த, வயலில் இருந்த அனைவரும் வேகமாக ஓடி வந்தனர்.

“ஏய் என்னப்பா ஆச்சு” என்று கேட்கும் முன்பே இருவரின் கதறலும் மற்றவர்களுக்கு உணர்த்தியது.

அருகில் இருந்தவரிடம், " பட்டாளத்துல செய்ய வேண்டிய காரியங்கள செஞ்சுட்டு நாளைக்கு காலையில உடம்பு இங்க வந்துருமுனு சொல்லிருக்காங்க‌. அதனால ஆக வேண்டியத பாருங்க" என்று சொல்லிவிட்டு தபால்காரர் கிளம்பினார்.

கருப்பையாவின் அலறலும் பார்வதியின் கதறலும் அனைவரையும் கலங்க செய்தது. விசயம் அனைவருக்கும் தெரிந்தது.
“பட்டாளத்துக்கு போன நம்ம கருப்பையா மவன் சங்கர் செத்துட்டான்” என பக்கத்தில் இருக்கும் ஊருக்கும் உறவினர்களுக்கும் கூறப்பட்டது.

இந்த விசயம் அவளின் மனைவி தேவிகாவிற்கும் சென்றடைந்தது.

“ஏய் தேவி‌. பட்டாளத்துக்கு போன உன் புருஷன் இறந்துட்டாருடி. தபால்காரவுக உன் மாமனார் கிட்ட சொன்னாராம்” என்று அழுதுகொண்டே பக்கத்துவீட்டு தோழி கூற,
அந்த நொடியில் தேவியின் கண்கள் ஒரு கணம் விரிந்து பின் மூடியது. அப்படியே சரிந்தாள் தேவிகா.

பதறிய போயி வீட்டுல இருந்தவங்க அவளை உலுக்கினர். அசையவில்லை. அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து முகத்தில் அடித்தனர். கண்களை திறந்தாள் தேவிகா.

“இல்ல. நீங்க பொய் சொல்லுறீங்க. அவர் என்னைய விட்டுட்டு போக மாட்டாரு” என்று அழ ஆரம்பித்தாள் தேவிகா. அருகில் இருந்தவர்களும் அவளை அணைத்து அழுதனர்.

அந்த நேரத்தில் கருப்பையாவும் பார்வதியும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். வீட்டினுள் நுழைந்த பார்வதி தேவியின் கைகளை பற்றி, " தேவி நாம மோசம் போயிட்டோம்மா. அந்த கடவுள் நம்மள ஏமாத்திடாரு "என்று அழுதாள்.

வீட்டின் முன் ஊரார் துக்கம் விசாரிக்க வந்தனர். வீட்டின் முன் பந்தல் போடப்பட்டது. வருபவர்களுக்கு தேநீர் உணவு தயாரானது ஒருபுறம்.

மகனிடம் இருந்து கடுதாசி வந்ததாக எண்ணியவர்களுக்கு மகனே பெட்டிக்குள் வைத்து வருகிறான் என்றால் அந்த வலி மிகவும் கொடுமையானது.

தேவிகா அழுது அழுது ஓய்ந்து போனாள். பார்வதியின் உடலிலும் சக்தியற்று போனது.

அந்த நேரத்தில் அனைவரையும் அமைதியாக்கும் ஒரு குரல் ஒலித்தது. அந்த குரல் வந்த திசையை நோக்கி அனைவருக்கும் நிசப்தமாக பார்த்தார்கள்…

மீண்டும் அனைவருக்கும் அழுக ஆரம்பித்தனர். இப்போது தன் மகன் இறந்துவிட்டான் என்பதை விட பார்வதிக்கும், தன் கணவன் இறந்துவிட்டான் என்பதை விட தேவிகாவின் மனதிலும் மிக பெரிய வலி ஏற்பட்டது.

தன் தந்தையின் முகம் காணாத குழந்தையும், தன் குழந்தையின் முகத்தை காண வருவதாக இருந்தவர் இறந்தவராக வருகிறாரே என்ற வலியும் தான் அதிகமானது.

ஆம். அந்த நிசப்தத்தை உருவாக்கிய குரல் சங்கரின் குழந்தையின் அழுகுரல்.
தன் தாய் ஏன் அழுகிறாள்? தாத்தா பாட்டி ஏன் அழுகிறார்கள்? ஊரார் ஏன் நம் வீட்டின் முன்பு கூடுகிறார்கள்? என்று எதுவும் தெரியாத அந்த குழந்தை தன் வயிற்றில் ஏற்பட்ட பசியை போக்க தாயிடம் பால் வேண்டி அழுகிறது.

பால் கொடுக்கும் நிலையில் அவள் இல்லை. பால் பெட்டியில் உணவு அருந்தவும் அந்த குழந்தை தயாராக இல்லை.

கையில் குழந்தையை தாங்கும் நிலையில் கூட தேவிகா இல்லை. அந்த செய்தி கேட்டத்தில் இருந்து வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. அனைவரும் அழைத்தும் தண்ணீர் கூட குடிக்கவில்லை.

தேவிகாவின் மடியில் குழந்தை வைக்கப்பட்டு அதற்கு தாய்ப்பால் குடிக்க வைத்தனர் சிலர். அந்த நொடியில் கூட தேவியின் வேதனை அதிகரித்து கொண்டே இருந்தது.

வெளியில் இருந்து பெரிய சத்தம் போட்டு கொண்டு, ‍"இதுக்கு தானா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். அய்யோ " என்று அழுது கொண்டே உள்ளே வந்தாள் தேவிகாவின் தாய்.

“அம்மாமாமாமா. அவரு என்னை விட்டு போயிட்டாருமா. நானும் போறேன்மா” என்று கதறினாள் தேவி

இருள் சூழ ஊரார் கலைந்து செல்ல தொடங்கினர்‌. உறவினர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மது அருந்துதல் துக்க வீட்டில் சகஜம் தானே. அப்போதும் சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால் தேவிகாவின் அழுகையும் பார்வதியின் அழுகையும் மட்டும் குறையவில்லை.

அப்படியே அந்த இரவு முடிந்தது.
நேற்று ஊரே வேலைக்கு சென்று கொண்டிருந்தது. இன்று அனைவருக்கும் சங்கரின் வீட்டில்.

பக்கத்து ஊரார், பட்டாளத்துக்கு தன் மகனை அனுப்பியவர்கள், பட்டாளத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பலர் வந்தனர். லீவுக்கு வந்தவர்களும் வந்திருந்தனர்.

காலை ஏழு மணிக்கு தீடீரென ஒரு சப்தம் கேட்டது. பெரிய வண்டி வரும் சப்தம்.

ஆம்.இராணுவ வாகனம். ஊரை நோக்கி வந்தது. ஊரின் தலைவாசலுக்கு அனைவருக்கும் ஓடி வந்தனர்.

வேகமாக இறங்கிய இராணுவ வீரர்கள் ஊராரை வாகனங்களில் ஏற தடுத்தனர்.

“அய்யோ இதுக்கு தானா உன்ன பெத்தேன்.உன்ன இப்படி ஊருக்குள்ள வர்ரதை பாக்க தானா நான் உயிரோட இருக்கேன்” என்று தலையில் அடித்து கொண்டு கூறினார் கருப்பையா.

ஊராரின் அழுகை. உறவினர்கள் கதறல் ஊரின் மறுமுனை வரை ஒலித்தது.

வண்டியின் கதவை திறக்க பலர் முற்பட்டனர். ஆனால் இராணுவ வீரர்கள் விடவில்லை. அப்போது சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு உயர் இராணுவ அதிகாரி ஒருவர், " தயவுசெய்து யாரும் சண்டை போடாதீங்க. சங்கர் இராணுவ வீரர். அவருக்கு இராணுவ மரியாதையுடன் அவரை இங்கு அழைத்து வந்து இருக்கோம். அப்படி தான் அவரின் உடலும் அவர் வீட்டில் கொண்டு வந்து வைக்கப்படும். அதனால யாரும் வண்டியில ஏற முயற்சி செய்ய வேண்டாம்" என்று கேட்டு கொண்டார்.

ஊராரும் அவரின் பேச்சுக்காக மரியாதை கொடுக்கவில்லை. சங்கரின் தியாகத்துக்காக அமைதிகாத்தனர்.

வாகனத்தின் கதவு திறக்கப்பட்டது. மீண்டும் அழுகையின் சத்தம் அதிகரித்தது. வண்டியில் இருந்து முதலில் இறங்கினான் ரவி.

சங்கரின் உடலை தாங்கி எட்டு வீரர்கள் இராணுவ முறையில் நடக்க, மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். அழுகை சத்தம் அதிகரித்தது கொண்டே இருந்தது.

தான் ஓடி விளையாடி, ரசித்து வாழ்ந்த ஊரில் பலரை அழ வைத்துவிட்டு நுழைகிறான் சங்கர்.

ஊர் பெண்கள இராணுவ வீரர்கள் முன் வந்து நெஞ்சில் அடித்து அழுதனர்.

கருப்பையாவை இருவர் தாங்கி பிடித்து, அழைத்து வருகின்றனர்.

இறந்த பின்னும் இராணுவ உடையில் மிடுக்காக தெரிந்தான் சங்கர்.

வீட்டின் அருகே அவன் வரும் வேலையில்,

“அய்யோ சங்கரு. உன்னை இப்படி பாக்க தானா பத்து மாசம் பெத்து வளத்தேன். இதுக்கா இந்த பாவி வயித்துல வந்து பொறந்த” என்று தன் வயிற்றை அடித்து அழுதாள்.

சங்கரின் உடல் வருவதை பார்த்த தேவிகா மீண்டும் மூர்ச்சையானாள்.
தன் ஆயுள் முழுவதும் உடன் வருவேன் என்று கரம் பிடித்தவன் இன்று கைவிட்டானே என்ற வலி அவளை மூர்ச்சையாக்கியது.

சங்கரின் உடல் அவன் வீட்டின் முன்பு பந்தலுக்கு கீழே வைக்கப்பட்டது. இராணுவ வீரர்கள் ஒரு ஓரத்தில் சென்று நின்றனர்.

மயக்கம் தெளிந்த தேவிகா சங்கரின் தலைமாட்டில் அமர வைக்கப்பட்டாள்.அவன் கால் பகுதியை தவிர்த்து, மற்ற பகுதிகளை பெண்கள் சூழ்ந்து அழுதனர்.

“நான் செஞ்ச பாவமோ என்னன்னு தெரியல. இப்படி எம்புள்ளைய பாக்க வஞ்சுட்டானே” என்று அழுதார் கருப்பையா. அவரின் சகோதரர்களும் கண்ணீருடன் கருப்பையாவை அணைத்தனர்.

“சாமி எந்திரிடா. ஊருக்கு வரதா சொன்னீயே.இப்படி வரதா சொல்லலையேடா” என்று பார்வதி அழுதாள்.

“என்னங்க எந்திரிச்சு என்னை பாருங்க. நான் உங்களை மச்சானு கூப்ட புடிக்குமுனு சொல்வீங்களே. எந்திரிங்க மச்சா. பாருங்க மச்சா. கடைசி வரைக்கும் இருப்பேன் சொல்வீங்களே. இப்போ என்னைய மட்டும் தனியா விட்டுட்டு போயிடீங்களே” என்று அவன் தலையை பிடித்து கொண்டு கதறினாள் தேவி.

“அக்கா அக்கானு சுத்தி சுத்தி வருவியே. உம்புள்ளைக்கு தாய்மாமன் நான் இருக்கேன். நீ எதுக்கு கவலைபடுறனு சொல்லி கேட்பியே. இனி யாருடா இருக்கா எம்புள்ளைக்கு” என்று அவள் குறையை கூறி அழுதாள் சங்கரின் அக்கா.

சங்கரின் நண்பர்கள் அவன் பிரிவை தாங்காமல் அழுதனர். ஊரார் வருத்தமாக நின்று இருந்தனர்.

தெரிந்தவர்கள் அவன் உடலுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினர்.

சுற்றி நின்ற இராணுவ வீரர்களும் மிகுந்த வருத்தத்துடன் இருந்தனர்.

ஆனால் அங்கும் பொறாமை இருக்கவே செய்தது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் மனதில் ஒரு பட்டாளத்தான் இறந்துவிட்டான் என்ற வலி இருந்தாலும், சங்கரை காணும் போது அவர்களுக்கு கிடைக்காத அந்த விருது அவனுக்கு கிடைத்தது என்று எண்ணி பெருமையும், வருத்தமும் பொறாமையும் இருந்தது.

ரவி இராணுவ உடையில் இருந்தாலும் அங்கு பலர் இருந்தாலும் தன் உயிர் நண்பனை பிணமாக கிடப்பதை அவனால் காண முடியவில்லை. அவன் நினைவுகளை நினைத்து கதறிக்கொண்டு இருந்தான்.

கிராமபுற இறப்பு ஆயிற்றே. ஒப்பாரி பாடலில் ஊரே கலங்கி இருந்தது.

ரவியை பார்த்த தேவிகா, “கூடவே இருந்து பாத்துப்பீங்களே அண்ணா. அவர விட்டு எங்க போனீங்க. ரவி இருக்கும் போது எனக்கு ஒன்னும் ஆகாது. அவன் இருக்கான் என்னை நல்லா பாத்துக்கனு சொன்னாரே. அவர சுடும் போது எங்க போனிங்க” என்று அவனை கேட்டு அழுதாள்.

“கூட இருந்தும் என்னோட நண்பன காப்பத முடியாத பாவி ஆயிட்டேன்மா” என்று அழுதான் ரவி.

மொத்த கூட்டமும் சங்கரின் இழப்பை எண்ணி சோகமாய் இருந்தது.

இந்த கூட்டத்திலும் துவக்கத்திலும் ஒருவர் மட்டும் ஆனந்தமாக இருந்தார்.

சங்கரின் குழந்தை தான் அந்த ஆனந்தமாவர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் தன் கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு முகத்தில் புன்னகையுடன் இருந்தது அந்த குழந்தை.

யாரு அழுதாலும் எழுந்து கேட்க முடியாத நிலையில் தான் சங்கர் இருந்தான்.ஆனால் அவன் உடல் மட்டும் அனைவரிடமும் ஏதோ சொல்ல முயன்றது.

கருப்பையாவுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவள் தான் மல்லிகா. ஆண் குழந்தை வேண்டும் என்று கோவில் கோவிலாக சென்று வேண்டி பிறந்தவன் தான் சங்கர்.

படிக்கும் காலத்தில் அருமையாக படித்தவன். சிறு வயதிலேயே திறமையாக படித்தவன். ஆனால் பதினான்கு வயதில் எல்லாருக்கும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவனுக்கும் ஏற்பட்டது. படிப்பில் நாட்டம் குறைந்தது.

எப்படியோ பன்னிரண்டு வரை முடித்துவிட்டான். மேலே படிக்க வைக்க வசதியில்லை கருப்பையாவுக்கு.

ஊரில் சண்டை போட்டுக்கொண்டு, பெரியவர்களை மதிக்காமல், வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி கொண்டு இருந்தான் சங்கர்.உடன் தனது நண்பன் ரவியும்.

“எலே கருப்பையா. உம்மவன் வாய்க்கா மேட்டுல பொண்ணுங்க கிட்ட வம்பிலுத்துட்டு இருக்கான். இன்னொரு தடவ சொல்ல மாட்டோம். பாத்து புள்ளைய பத்திரம் பண்ணிக” என்று சிலர் எச்சரிக்கை செய்தனர்.

“அம்மா சீக்கரம் சோறு போடுமா.வெளியே போகனும்” என்று சொல்லி வீட்டினுள் வந்தவனை அடித்து துவைத்தார் கருப்பையா.

“ஏன்டா எனக்குனு வந்து பொறந்த. செத்து ஒழி. என் மானத்தை வாங்க வந்த நாயி நீ” என்று அடித்தார் கருப்பையா.

பார்வதியோ, “அடிக்காதீங்க. நமக்கு அவன் கடவுள் கொடுத்த வரம், ஏதோ அவன் நேரம் சரியில்ல. சொன்னா புரிச்சுப்பான்” என்று சொல்லி கணவனை தடுத்தாள்.

ரவி வீட்டுலயும் இதே நிலைமை தான்.

இப்படியே சில நாட்கள் சென்றது.

மீண்டும் பிரச்சினை பெரிதாகியது. ரவியின் அப்பாவும் கருப்பையாவும் சேர்ந்து இருவரையும் திட்டிக்கொண்டு இருந்தனர்.

“இவனுகனால ஊர்ல நம்ம மானமே போச்சு கருப்பையா. இவனுகல பெத்ததுட்டு எவனெவனோ திட்டுறான் நம்மல” என்றார் ரவியின் அப்பா.

அப்போது சங்கர், “நாளைக்கு டவுன்ல பட்டாளத்துக்கு ஆள் எடுக்கறாங்க. நாங்க போறோம் அங்க” என்று சொல்ல

“ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து ஊரு பேரையே கெடுத்தீங்க. இப்ப நாட்டு பேரையும் கெடுத்துராதீங்க” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றனர்.

அப்பாவிடம் திட்டு வாங்காமல் இருக்க பட்டாளத்துக்கு சென்றவர்கள் தான் ரவியும் சங்கரும்.

இராணுவத்தில் சேர்ந்த இரண்டு வருடத்தில் சங்கருக்கு திருமணம் ஆனது. தேவிகாவின் கரம் பிடித்த சங்கரின் நாட்கள் இனிமையானவை. அவர்களின் காதலின் சாட்சியே அந்த குழந்தை.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு திருப்பிய சில நாட்களில் தேவிகா கருவுற்ற விசயத்தை தபால் மூலமே அறிந்தவன் சங்கர். மீண்டும் தன் மனைவியை பார்க்க வந்தான் அவள் எட்டு மாதமாக இருக்கும்.

அப்போது தேவிகா கேட்டாள், “என்னங்க எனக்கு பிரசவம் நடக்கும் போது நீங்க கூட இருக்கனும்” என்று,

“எனக்கு 15 நாள் தான் லீவு. பிரசவம் நடக்கறப்போ இருக்கறது கஷ்டம். ஆனா சீக்கிரம் என் மகனை பார்க்க வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு அவள் வயிற்றில் முத்தமிட்டான் சங்கர்.

பட்டாளத்துக்கு கிளம்பும் போது, தன் மனைவி வயிற்றை தொட்டு, “செல்லம் அப்பா இப்போ ஊருக்கு போறேன். சீக்கிரம் வந்து உங்களை பாக்கறேன். அம்மாக்கு அதிகம் கஷ்டத்த கொடுக்காம நல்லபடியா வெளிய வரனும். சரியா?” என்று சொல்லி விட்டு மீண்டும் முத்தம் கொடுத்தான் தன் மகனுக்கு.

அவன் கடைசியாக கொடுத்த முத்தம் அதுவே.

அப்போது வீட்டை விட்டு சென்றவன் இன்று தான் வந்திருக்கிறான் தன் மகனை காண முடியாத நிலையில்.

அப்போது அவன் உடல் சொல்ல நினைத்தது,

“அப்பா அழாதீங்க. என்னால நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுடீங்க. என்னால இந்த ஊருக்கு பிரச்சினை, அவமானமுனு சொன்னவங்க கிட்ட சொல்லுங்க, என் மகன் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தான் என்று”. ஆனால் அந்த சங்கரின் உடல் பேசும் வார்த்தைகள் யாருக்கும் புரியாது.

“அம்மா என்னை எப்பவும் விட்டு கொடுக்காம பேசுவ நீ. நான் எப்பவும் நல்லா இருக்கும்னு சொல்லுவ. கடைசி காலத்தில உன்னையும் அப்பாவையும் நல்லா பாத்துகனுமுனு சொல்லுவ. என்னை மன்னிச்சிடும்மா” என்று தன் தலைமாட்டில் அழுத அம்மா நோக்கி சொன்னது அந்த உடல்.

“அக்கா உனக்கும் உம்புள்ளைக்கும் நான் இல்லைனு கவலபடாத. எம்புள்ள இருக்கான். தைரியமா இருக்கா” என்றது.

“டேய் ரவி‌. சின்ன வயசுல இருந்து ஒன்னா இருந்தோம். ஒன்னா படிச்சோம். பட்டாளத்துக்கு போனோம். ஆனா உன்ன விட்டுட்டு இப்போ போயிட்டேன். என்மேல கோவப்படாதடா. என்னால தான் ரொம்ப நாள் நாட்டுக்கு வேலை செய்ய முடியல. நீ செய்யனும்டா” என்றது சங்கரின் பிரேதம், தன் ஆருயிர் நண்பன் அழுது கொண்டு இருக்கும் போது.

“தேவிகா. என்னோட வாழ்க்கைய அழகா மாத்துன. பட்டாளத்துல உன்னோட நினைவோட தான் இருந்தேன்‌. உன்னோட பிரசவ வலிய நான் அங்க அனுபவிச்சேன். உன்ன பாக்கனும்னு வர ஆசைப்பட்டேன். ஆனா இப்படி வருவனு எதிர்பார்க்கல” என்று சொல்ல நினைத்தான் சங்கர்,

“என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க மச்சா. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது. இல்லனா எந்திரிச்சு வாங்க மச்சா” என்று கண்கள் வீங்கி கருவளையம் உண்டாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டிருந்த தேவிகாவிடம்.

ஊருக்கு அவமானம், தொல்லை என்று சொன்ன பலரும் தலைகுனிந்து நின்றனர் அவன் உடல் முன்பு.

இறந்த கிடக்கும் அவன் உடல், ஊரார் வெட்கப்பட வைத்ததை எண்ணி கர்வத்துடனே இருந்தது.

சங்கரின் உடல் தன் குழந்தையை தேடியது. அப்போது நடந்த சம்பவம் எதர்ச்சையாக நடந்த விசயம் போல தெரியவில்லை.

அவன் உடல் தேடிய நேரத்தில், தன் குழந்தையை கையில் வைத்திருந்த பெண்மணி ஒருவர், சங்கரின் மார்பின் மீது படுக்க வைத்தார்.

தன் தந்தையின் மார்பு சூட்டை உணர்ந்து கொண்டது அந்த குழந்தை. அந்த நிமிடத்தில் ஒரு புன்னகை.

கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு சிரிப்புடன் அவன் மார்பில் விளையாடியதை கண்டு அங்கு கூடியிருந்த அனைவருமே ஒரு நொடி அமைதியாகினர் .

அதுவரை நீரை பார்க்காத கண்களும், கண்கள் நிரம்பாத கண்களும் கலங்கின. அனைவருக்கும் தொண்டை அடைத்தது.

பல இறப்புகளை கண்டுவிட்டு கண்ணீரை மறந்த இராணுவ உயர் அதிகாரியின் கண்களும் தாரை தாரையாக நீரை வார்த்தது.

மெதுவாக அந்த குழந்தை குப்புற விழுந்து, தன் தந்தையின் முகம் பார்த்து, “அப்பா. சொன்னா மாதிரியே சீக்கிரம் வந்துட்ட‌. நீ சொன்ன மாதிரி அம்மாவுக்கு வலி கம்மியா தான் கொடுத்தேன்” என்று சொல்லுவது சிரித்தது.

இதைவிட சங்கரின் உடலுக்கு வேறென்ன வேண்டும். தன் குழந்தையை தன் மார்பில் சுமக்க தானே ஆசைப்பட்டான் சங்கர். இப்போது கிடைத்துவிட்டது அந்த சுகம். ஆனால் அதை உணரும் நிலையில் தான் சங்கரின் உடல் இல்லை.

“பெத்த புள்ளைய இப்படி பாக்க நான் என்ன பாவம் பண்ணினனோ தெரியல. தம்புள்ளய பார்க்க முடியாம போக அவன் என்ன பண்ணினானு புரியல. இதெல்லாம் பார்த்துட்டு இன்னும் இந்த உசுரு இருக்குதே” என்று தலையிலும் மார்பிலும் அடித்து கொண்டு அழுதார் கருப்பையா.

“என்னங்க எந்திரிச்சு நம்ம புள்ளைய ஒரு முறை பாருங்க. ஊருக்கு போகும் போது என் வயித்துல முத்தம் கொடுத்துட்டு போனீங்களே. உங்க பையன் இப்போ உங்க நெஞ்சில இருக்கானே. தூக்கி கொஞ்சுங்க. கண்ணை தெறந்து பாருங்க மச்சா” என்று திக்கி திக்கி அழுதாள் தேவிகா.

ஆனால் சங்கரின் உடல் மட்டும் தான் அசையவில்லையே தவிர,அவனது உயிர் தன் குழந்தையை கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது,

ஊர் பெரியவர், “கருப்பையா நேரமாச்சு. பையன தூக்கலாம்பா” என்று கூற,

“நா விடமாட்டேன். என் புருஷன இந்த எடத்துல இருந்து கொண்டு போக விடமாட்டேன்” என்று கத்திக்கொண்டு அவனை இறுக அணைத்தாள் தேவிகா.

கடைசிவரை மகனின் காலடியில் கிடக்க நினைத்த பார்வதி, இப்போது மகனின் காலை பிடித்துக்கொண்டாள்.

சங்கரின் உடலை பிடித்து கொண்டவர்கள் நிர்பந்தமாக விலக்கப்பட்டனர்.

உறவினர்கள் உடலை தூக்கினார்கள். முன் வரிசையில் ரவி தாங்கினான். அக்னி சட்டியை கையில் ஏந்த வைத்து நடக்க வைத்தனர்.

பெண்கள் கதறி அழ, தன் உடலுக்கும் ஊருக்கும் உறவுக்கும் உள்ள தொடர்புகளை முடிக்க பயணப்பட்டான் சங்கர்.

அவன் ரசித்து மகிழ்ந்த ஊரின் மரங்கள், வீதிகள் குளம், வாய்க்கால், வயல்வெளி என்று அனைத்தும் அவன் உடலை வழியனுப்பியது.

இடுகாட்டில் அடுக்கி வைக்கப்பட்ட சிதையின் மேல் படுக்க வைக்கப்பட்டது சங்கரின் உடல்.

அப்போது தன் மேலதிகாரி சங்கரின் உடலுக்கு சல்யூட் அடித்தார்.

“என்னை திட்டியவர். சில நேரங்களில் அடித்தவர். தினமும் நான் சல்யூட் அடித்த எனது உயர் அதிகாரி. இன்று எனக்கும் சல்யூட் அடிக்கிறார். எனக்கு கிடைத்த விருதை எண்ணி பெருமை கொள்கிறார்” என்று கர்வம் கொண்டது சங்கரின் உடல்.

சக வீரர்கள் அவனது உடலுக்கு ராணுவ முறையில் இறுதி வணக்கம் செலுத்தினர்.
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களும் இறுதி மரியாதை செய்தனர்.

ஒரு இராணுவ வீரரின் இறுதி மரியாதையை முதல் முறையாக அந்த ஊர் மக்கள் பார்க்கின்றனர்.

அப்போது கர்வம் கொள்கிறது சங்கரின் உடல்.

சாமனியனுக்கு கிடைக்காத விருது.

கோடி கோடியாய் கொடுத்தாலும் கிடைக்காத விருது.

விமர்சனங்கள் செய்ய முடியாத விருது.

அனைத்து இராணுவ வீரனும் ஏங்கும் விருது.

இன்று சங்கருக்கும் கிடைத்தது.

ஆம் கூடி நின்ற இராணுவ வீரர்களை ஏங்க வைத்த அந்த விருது.

இராணுவ அதிகாரி சங்கரின் முன் நின்று அவன் இராணுவ உடையின் மேல் போர்த்தப்பட்ட நம் நாட்டின் தேசிய கொடியை எடுத்தார்.

இவ்வளவு நேரம் தன் உடலில் இந்த விருதை ஏந்தியபடி தன் தந்தையையும் குடும்பத்தையும் பெருமைபட செய்தான் சங்கர். ஆனால் அதன் பெருமை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஊராருக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டது வியப்பாக தான் இருந்தது அவன் உடல் வரும்பொழுது.

தேசிய கொடி மடிக்கப்பட்டு கருப்பையாவின் கைகளில் கொடுக்கப்பட்டது.

சங்கரின் உடல் தீயிற்கு அர்ப்பணிக்க தயாரானது.

தனக்கு கொள்ளிப்போட மகன் வேண்டும் என்று நினைத்து, கடவுளிடம் வேண்டி பெற்ற மகனுக்கு கொள்ளி போட எந்த தந்தையின் மனம் தான் ஏற்றுக் கொள்ளும்.

கருப்பையா கொள்ளி வைத்தார் கதறிக்கொண்டே.

அப்போது இருபத்தியொரு குண்டு முழங்க சங்கரின் உடலுக்கு இராணுவ மரியாதை செலுத்தியது.

நாட்டுக்காக தன்னுயிரை தியாகம் செய்தவன் உடல் சாம்பலாக தயாராகி கொண்டிருந்தது.

அனைவரும் வீட்டை பார்த்து நடக்க ஆரம்பித்தனர். புகையோ வானத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கருப்பையா அழுது கொண்டே நடக்கும் வேளையில் அவரின் கைகள் மகன் பெற்ற உயரிய விருதான நாட்டின் தேசிய கொடியை மார்போடு அணைத்தபடியே இருந்தது.

அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள் மனதில் அந்த விருதை தானும் வாங்க வேண்டும் என்ற விதை விதைக்கப்பட்டது.

 • சேதுபதி விசுவநாதன்
3 Likes

பத்தோட இதுவும் ஒன்னு

இதுவும் கடந்து போகும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண் நான்.

அப்படி தான் என் வாழ்க்கையும் இருந்தது. படிப்பு, வேலை எல்லாமே போராட்டம் தான் எனக்கு.

சிறுவயதிலே அப்பா இல்லாமல் அம்மாவின் கடின உழைப்பால் ஏதோ கொஞ்சம் படித்தவள். வறுமை காரணமாக வேலை.

அப்படி வேலைக்கு சென்று சில வருடங்களுக்கு பிறகு அன்றொரு நாள் எப்போதும் போலவே வீட்டிற்கு திரும்பி வந்த கொண்டிருந்தேன்.
போக்குவரத்து வரத்து நெரிசல் காரணமாக அன்று இரவு நேரம் பத்து மணியை கடந்தது. அம்மாவிடம் சீக்கிரம் வந்துருவேனு சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன்.

ஒரு கார். வாடகைக்கு கார் ஓட்டுபவர். என் ஊரை தாண்டி சில கிலோமீட்டர்கள் தொலைவில் தான் அவர் வீடு உள்ளது. ஆனால் பேசியது இல்லை. பார்த்துள்ளேன். அவருக்கும் என்னை தெரியும்.

“என்னம்மா இந்த நேரத்தில இங்க நிக்குற?” என்று அவர் கேட்க,

“இல்லனா. பஸ் லேட் ஆயிடுச்சு. அதான் இங்க நிக்குறேன். கடைசி பஸ்ஸுக்கு வையிட் பண்ணிட்டு இருக்கேன் அண்ணா” என்று கூறினேன்.

“சரி. வாம்மா. நான் உங்க ஊரை தாண்டி தான் போகனும். நான் இறக்கி விட்டுடுறேன்” என்று அவர் கூறினார்.

“வேணாம் அண்ணா. உங்களுக்கு எதுக்கு சிரமம். பஸ் வந்துரும் அண்ணா. நீங்க போங்க. நான் பாத்துக்கிறேன்” என நான் சொல்ல,

“ஏம்மா. நேரம் என்ன ஆச்சு. இந்த நேரத்தில இங்க தனியா நிக்கலாமா? நான் தெரியாத ஆளா? ஏன் பயப்படுற” என்று கேட்டார். “வாம்மா. நம்ம கார்ல பின்னாடி ஏறுமா. பத்திரமா வீட்டு முன்னாடியே இறக்கி விட்டுடுறேன்” என்று கூறினார்.

“தெரியாத நபரா இவர். நமக்கு தெரிந்த முகம். நல்ல மனிதர். அவர் கூறுவதும் சரியே. நேரம் நடு இரவை தொட சென்று கொண்டிருந்தது” என்ற எண்ணம் என்னுள் இருக்க காரில் ஏறினேன்.

மெதுவாக பேச்சுகொடுக்க தொடங்கினார். “ஏம்மா எங்க வேலை பாக்குற?” என்று கேட்க,
“துணிக்கடையில சேல்ஸ் கேர்ள் அண்ணா” என்று கூறினேன்.

அப்படியே பேச்சுக்கள் தொடர்ந்தது. காரும் ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தது. 20 கிலோமீட்டர்கள் பயணம். காடுகள் அதிகமாக நிறைந்த பகுதிகளில் தான் பயணம். ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் தூரத்தில் தான் ஒவ்வொரு ஊரும் இருக்கும்.

சரியாக என் ஊருக்கு இரண்டு ஊருக்கு முன்னாடி திடீரென கார் நின்று ஆஃப் ஆனது. மனதில் திடீர் பயம் ஏற்பட்டது. அவர் ஸ்டார்ட் பண்ணி பார்க்க வண்டி ஸ்டார்ட் ஆகவே இல்லை.

“அண்ணா என்ன ஆச்சு? ஏன் கார் நின்னுருச்சு” என்று நான் பதட்டத்துடன் கேட்டேன்.

" என்ன ஆச்சுனு தெரியலயேமா. நீ காருக்குள்ளயே இரு. நான் பாத்துக்கிறேன்" என்று சொல்லி இறங்கி போனார்.

அடர்ந்த முற்புதர்கள் நிறைந்த பகுதி. நடு இரவு. பயம் ஏறிக்கொண்டே சென்றது. அவரும் யாருக்கோ போன் செய்து பேசிக்கொண்டு இருந்தார். காருக்குள் இருப்பதால் ஒரு நிம்மதி இருந்தது.

அப்போது எதிரில் வெளிச்சம் தோன்ற, ஒரு பயம் மேலும் ஆட்கொண்டது.
அது ஒரு கார். மெதுவாக நான் இருந்த காரின் அருகில் வந்து நின்றது.

அப்போது என்னை அழைத்து வந்தவருடன் நன்றாக பேச தெரிந்தவர் தான் போல என்று நினைத்து கொஞ்சம் பயம் நீங்கியது.

இறங்கியவர் காரில் ஏதோ முன்புறம் பார்த்து கொண்டிருக்க மேலும் இருவர் இறங்கினர். அதில் ஒருவர் என் ஊர்காரர் தான்.

என் ஊர்காரர் நான் இருந்த காரின் கதவை நீக்கி என்னிடம், " பாப்பா. இவன் கார் ரிப்பேர் ஆயிடுச்சு. வாம்மா நம்ம காருல கொண்டு போயி வீட்டுல விட்டுடறேன். இந்த நேரத்தில ரோட்டுல நிக்கற காருல பொண்ணு இருக்கறது சரியில்ல" என்று கூறி அழைத்தார்.

நம்ம ஊருகாரர். நன்கு தெரிந்தவர் ஆயிற்றே. நான் இறங்கி என்னை ஏற்றி வந்த கார் காரரிடம் “அண்ணா ரொம்ப நன்றி. சாரி அண்ணா. என்னால உங்களுக்கும் சிரமம். நான் அவர் காரில் ஊருக்கு போயிக்கிறேன் அண்ணா. கோச்சுகாதீங்க அண்ணா” என்று சொன்னேன்.

“பரவாயில்லமா. நான்தான் நீ இருக்கற. பத்திரமா உன்ன கூட்டிட்டு போக வரச்சொன்னேன்” என்று அவர் சொல்ல, என் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.

" ரொம்ப தேங்க்ஸ் அண்ணா"என்று சொல்லி விட்டு அந்த காரை நோக்கி நகர்ந்து சென்றேன். அப்போது என் பின்னால் ஒருவர் வேகமாக என்னை பிடித்து என் வாயை கையில் மூடி தள்ளி செல்ல, உடன் இருந்தவரும் வேகமாக தூக்கினார்.

ஒரு முற்புதரின் நடுவில் தூக்கி வீசப்பட்டேன்.
நால்வரும் என் அருகில் வர, அப்போது தான் புரிந்தது, இவர்கள் நால்வரும் சேர்ந்து தான் ப்ளான் பண்ணி இருக்கிறார்கள் என்று.

“அண்ணா ப்ளீஸ் அண்ணா. என்னை விட்டுடுங்க அண்ணா. நான் போகனும் அண்ணா. ப்ளீஸ்” என்று அழுதுகொண்டே அவர்களின் காலில் விழுந்தேன்.

“அண்ணா உங்கள நம்பி தானே கார்ல ஏறினேன். என் வீட்டு கஷ்டத்தை கூட இவ்வளவு நேரம் சொன்னேனே அண்ணா. ப்ளீஸ் அண்ணா. விட்டற சொல்லுங்க அண்ணா” என்று என்னை அழைத்து வந்தவரிடம் கெஞ்சினேன்.

"அடபோடிங்க… உன்ன காருல ஏத்துனதே இன்னைக்கு நாங்க என்ஜாய் பண்ண தாண்டி"என்று சொல்லி என் முடியை பிடித்து இழுத்து தள்ளினார்.

“உங்க எல்லோரு காலுலயும் விழறேன். ப்ளீஸ். உங்க தங்கச்சியா என்னை பாருங்க. எனக்கு அப்பா இல்லை. எனக்கு எதாவது ஆச்சுன்னா என் அம்மாவும் நானும் செத்து தான் போகணும் அண்ணா. ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அழுகை அதிகமானது.

“உன்ன மாதிரி தூக்கிட்டு வந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி தான் அழுதாங்க. பாவ புண்ணியம் பார்த்தா எங்களுக்கு சுகம் கிடைக்காது” என்று என்னை காரில் அழைத்து வந்தவர் கூறினார்.

“உங்க அம்மாவும் ஒரு பொண்ணு தான. என் நிலைமைய நினைச்சு பாருங்க. கெஞ்சி கேக்கறேன்” என்று கதறினேன்.

“ஹேய் நிறுத்துடி. சும்மா கத்திட்டு இருக்காத. ஒன்னும் மாற போறது இல்ல. நீயா சம்மதிச்சா! யாருக்கும் தெரியாம எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுல கொண்டு போயி விட்டுடுவோம்.இல்லைனா நாளைக்கு அசிங்கம் ஆயிடும்.நீ இப்போ எவ்வளவு கத்தினாலும் யாரும் வர மாட்டாங்க. நாங்க இங்க நிக்கறது கூட யாருக்கும் தெரியாது. ஒழுங்கா சொல்லறத கேளு” என்று மிரட்டினார் என் ஊர்காரர்.

“அண்ணா ப்ளீஸ். நான் உங்க ஊரு பொண்ணு. எங்க வீட்டு கஷ்டம் உங்களுக்கு நல்லாவே தெரியும் அண்ணா.நீங்களே இப்படி பண்ணலாமா?. விட்டுருங்க அண்ணா. உங்க காலுல கூட விழறேன்‍” என்று சொல்லி என் ஊர்க்காரர் காலை பிடித்தேன்.

உடனே ஒருவர் என்னை தள்ளிவிட்டு " என்னடா இவகிட்ட போயி பேசிக்கிட்டு இருக்க. இதுக்கு தான் வந்தோமா? சீக்கிரம் முடிச்சுட்டு வீட்டுக்கு போகலாம்டா" என்று சொல்லிவிட்டு என் அருகில் வந்தார்.

அவரை தள்ளிவிட்டு நான் ஓட முயற்சித்த போது மற்றவர்களால் சிறைபிடிக்கபட்டேன்.
நான்கு ஆண்கள் நடுவில் நான் ஒரு பெண்.
என் உடைகள் கிழித்தெறியப்பட்டது.

நான் விட்டுடுங்க. ப்ளீஸ் என்று கதறிய எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. அந்த கடவுளின் காதிலும் என் கதறல்கள் விழவில்லை. எந்த கடவுளும் துணியும் தரவில்லை.

அவர்களின் இச்சைக்கு என் உடம்பு பலியானது.வெறிபிடித்த நால்வரின் காம பசிக்கு என் உடல் உணவாகி கொண்டிருந்தது.

என் கதறல்கள் எவரின் செவிக்கும் எட்டவில்லை. அவர்களின் குறிக்கோள் அவர்கள் இச்சை மட்டுமே.

என் உறுப்பில் உதிரம் கொட்டிய நாள் முதல் என் அன்னையிடம் கூட காட்ட மறுத்த என் உடலை, என் அனுமதியின்றி சில காமபேய்கள் திருடுகின்றனர். பெண்ணாய் பிறந்துவிட்டேனே. உடலில் வலிமையற்று படைத்துவிட்டான் ஆண்டவன்.

போராட கூட வலிமையற்று கிடந்தேன். கடவுள் ஆணை பலமாக படைத்ததன் காரணம் என்னவோ?. ஆனால் இன்று என் கற்பு கொள்ளை போய்விட்டது.

கடைசியில் குப்பை போல அங்கேயே தூக்கி வீசப்பட்டேன். அவர்கள் வந்த வேலை முடிந்தது. என்னை அங்கேயே விட்டு சென்றவர்கள் என்னை கொன்று விட்டு சென்றிருக்கலாம்.

அரை உயிருடன் அங்கேயே கிடந்தேன். விழித்து பார்த்தேன். என்னை சுற்றி சற்று இரைச்சல். புது இடம். அப்போது தான் சுய நினைவுக்கு வந்தேன்‌. நான் இருப்பது மருத்துவமனை. என் அம்மா என்னருகில் அழுது கொண்டு இருந்தார்.

நான் உயிரோடு காப்பாற்றபட்டேன் என்று புரிந்தது. ஆனால் ஏன் இந்த உயிர் என்னிடம் உள்ளது என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.

சிறிது நேரத்தில் மூன்று போலீஸ் மற்றும் டாக்டர் ஒருவர் வந்தனர். என் அம்மா அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

என்னிடம் " நேற்று இரவு என்ன நடந்ததுனு சொல்லுமா. யாரா இருந்தாலும் கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுத்திடலாம்" என்று ஒரு போலீஸ் சொல்ல மற்றொருவர் நான் கூறுவதை எழுத தயாரானார். இன்னொருவர் என்னை படம் பிடித்தார்.

புழுவை போல மனம் துடிக்கிறது. என் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.பேச முடியவில்லை.

ஆனால் போலீஸ் அதிகாரி விடவில்லை. “தைரியமா சொல்லுமா. யாருக்கும் பயப்படாத. அங்க என்ன நடந்துச்சுனு சொல்லு?” என்று மீண்டும் கேட்டார்.

வெளியில் சொல்ல கூடிய விசயமா அது.
“சார் என்னை எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ்‌. நீங்களாவது புரிஞ்சுக்கோங்க சார்” என்று அழுதேன். ஆனால் அவர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை. சட்டம் என்று உள்ளதாக சொன்னார்.

“கற்பழிப்பு நடக்கும் முன்பு தடுக்காத சட்டம் எதுக்கு? எத்தனை பேர் இந்த தவறை செய்தபின் தண்டிக்கபட்டு இருக்கின்றனர்?” என்று கத்தினேன்.

டாக்டர் குறுக்கிட்டு “ஏம்மா கத்துற? சத்தம் போடாத” என்று என்னை பார்த்து சொல்லிவிட்டு, " சார் இப்போ தான் பொண்ணு எந்திரிச்சு இருக்கு. ரெஸ்ட் எடுக்கனும் சார். நாளைக்கு என்குவரி வச்சுக்கலாமே" என்று கூறினார்.

“மேடம் எங்களுக்கு நிறைய கேஸ் இருக்கு டாக்டர். டெய்லியும் இந்த மாதிரி பத்து நடக்குது. பத்தோட இதுவும் ஒன்னு . சீக்கிரம் என்குவரி முடிக்கனும் டாக்டர்” என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

அவர்களுக்கு அவர்கள் பிரச்சினை. என் உடல் வலிமையும் மனதின் வலியையும் அவருக்கு எப்படி தெரியும். அவரும் ஒரு ஆண்மகன் தானே.

நமக்கு தெரிந்தவர், நம்ம ஊருக்காரர் என்று நினைத்து காரில் ஏறியது தவறா? என்று தோன்றியது.

பெண்ணாய் பிறந்தது தவறா ?

பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டனர். பல துறைகளில் சாதித்துவிட்டனர். பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று மேடையில் ஏறி பல கைதட்டல் வாங்கியவர்கள் கண்ணுக்கு ஏனோ என்னை போன்று கற்பை கொள்ளை கொடுத்த பெண்களை பற்றி பேச விரும்புவது இல்லை.

ஆணை உடலால் பலமாக படைத்தது கடவுள் குற்றமா?

ஆணிடம் பெண்மையை மதிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்காத இந்த சமூகம் தவறா?

பெண் என்றாலே ஆபாசமாக காட்டும் ஊடகங்கள் மீது குற்றமா?

அந்த காலம் முதல் பெண் என்றாலே காமத்தை தனிக்க தான் கூறிவிட்டு சென்ற முன்னோர்களின் குற்றமா?

நீயும் ஒரு பெண் வயிற்றில் தான் பிறந்துள்ளாய் என்று புரிய வைக்காத ஒரு பெண்ணின் குற்றமா?

இது போன்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் வலியும் அவமானமும் எனக்கும் என் அம்மாவுக்கும் தான்.

நானும் அம்மாவும் மாறி மாறி அழுதுகொண்டு இருந்த வேலையில் நர்ஸ் வந்து என்னிடம், “போலீஸ் நாளைக்கு என்குவரிக்கு வருவாங்க. நீ சொல்லி தான் ஆகனும்” என்று வருத்தமாக சொல்ல,

“எப்படி அக்கா சொல்வது. என் உடலை கொள்ளையடித்தவர் செய்ததை வெளியில் சொல்ல முடியுமா? ப்ளீஸ் அக்கா. என்னை வெச ஊசி போட்டு கொன்னுறுங்க. எனக்கு வாழ பிடிக்கல. ப்ளீஸ்” என்று கதறினேன்.

“அதெல்லாம் முடியாதுமா. நாளைக்கு நீ சொல்லனும். ஆனா உண்மைய சொல்லாத. பஸ் ஸ்டாப்ல இருந்தேன். தீடீர்னு யாரோ என் மூக்குல துணிய வச்சு அமுக்குனாங்க. முழிச்சு பார்த்தா இங்க இருக்கேனு சொல்லிடு” என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்தார்.

இதன் பின் இருவர் என் அருகில் வந்து பேசினர். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் இருந்து வருகிறோம் என்று கூறினார்கள். முகத்தை காட்ட மாட்டோம். நடந்ததை கூறுங்கள் என்று கூறினார்கள்.

என் கற்பு கொள்ளை போனதை இவர்கள் செய்தியாக வெளியிட கேட்டு வருகின்றனர். பகிர வேண்டிய விசயமா இது?. விடாமல் அவர்கள் கேட்க, நான் கோவத்தில் திட்டினேன்.

என்னை தீண்டிய வர்களுக்கு உடல் பசி என்றால், இவர்களுக்கோ ஊடக பசி. பெண்ணின் வலிகளை இந்த சமூகம் புரிந்து கொள்ளவது எப்போது?

பொழுதும் புலர்ந்தது. போலீஸும் வந்தனர்.
நர்ஸ் கூறியது போல கூறினேன். என் பேச்சில் பொய் இருப்பதை உணர்த்தும் அந்த அதிகாரி மேலே தொடராமல் விட்டுச் சென்றார்.

நான்கு நாட்களுக்கு பிறகு இரவில் ஊருக்குள் சென்றோம் நானும் அம்மாவும்.
இரவோடு இரவாக துணிகளை எடுத்துக் கொண்டு வெளியூரில் பிழைக்க சொந்த ஊர் விட்டு அழைத்து வந்துவிட்டார் அம்மா.

யாரோ செய்த தவறுக்கு உலகம் என்னை தவறாக பேசும். அதனால் யாருக்கும் சொல்லாமல் ஊரை காலி செய்தோம்.

இருமுறை தற்கொலை முயற்சி. மரணம் கூட என்னை பழிவாங்கியது. “நீ இல்லாம நான் மட்டும் இருந்து என்ன செய்ய போறேன்” என்ற அம்மாவின் வரி(லி)கள் தற்கொலை எண்ணத்தை தகர்த்தது.

ஆனாலும் என்னுள் எரிந்து கொண்டிருக்கும் வலி மட்டும் குறையவே இல்லை.

ஒரு வருடம் கழிந்தது. இன்றைக்கும் மனதில் வலித்து கொண்டிருக்கும் அந்த நாள்.

தினமும் அழுகையுடன் செல்கிறது என் தூக்கத்தின் இரவு வாழ்க்கை.

ஒரு நாள், வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பேருந்து பயணம். அருகில் இருந்த ஒரு பெண் படித்து கொண்டிருந்தார் ஒரு வார இதழை.

ஊடகத்தின் பசி. ஒரு பெண்ணின் கற்புகொள்ளை பற்றி எழுதி இருந்தார்கள். படித்தவர் அதை பற்றி என்னிடம் கூறிக்கொண்டு வந்தார்.

அப்போது அருகில் இருந்த இன்னொரு பெண் கூறினார். “அடபோங்க மேடம். இது மாதிரி வாரத்துல ஊருக்கு பத்து நடக்குது. பத்தோட இதுவும் ஒன்னு . மாதவிடாய் காலத்தில நம்மளோட வலியும், நாம படுற அவஸ்தையும் அவங்களுக்கு எங்க தெரியபோகுது.பொண்ணா பொறந்தது ஒரு சாபக்கேடு” என்று சொல்லிவிட்டு ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

அன்று போலீஸ் அதிகாரி சொன்ன அதே வார்த்தைகள்.

பெண்களின் வளர்ச்சி பற்றி மேடையில் பேசியதர்க்கு பதிலாக, இந்த மாதிரி கொடுமைகள் பற்றி பேசி இருந்திருக்கலாம்.

சட்டங்கள் கடுமையாக இருந்திருந்தால் என்னை போன்றவர்கள் கற்பு பறிபோகி இருக்காது.

பெண்ணுக்கு கற்பு முக்கியம் என்று சொன்னவர்கள், அதை பாதுகாக்க வேண்டும் என்று ஆண்களிடம் சொல்லவில்லை. ஆணிற்கும் கற்பு உண்டு என்று சொல்ல மறந்தும் போனார்கள்.

பெண் என்றாலே வெறும் சதையாக தான் இந்த சமூகம் நினைக்குதே. பெண்ணுக்கு வலிகளை ஏற்கனவே ஆண்டவன் கொடுத்துள்ளார் என்பதை மறந்துவிட்டனர் பெண்களும்.

வலிகளோடு வழிகளை தேடி நான் தினமும் பயணிக்கிறேன். வசந்த காலம் மறைந்து போன என் வாழ்க்கையில்.

ஆண்களை பெற்ற பெண்களே!!!.

தயவுசெய்து உங்கள் பிள்ளைகளுக்கு பெண்ணின் வலிகளை கூறிவிடுங்கள்.

எதிர்காலத்தில் என்னை போன்றில்லாமல், ஒரு பெண்ணின் கற்பாவது காப்பாற்றபடட்டும்…

1 Like

சூரியன் தனது கதிர்களை புல்வெளிகளின் பாய வைத்து கொண்டிருந்த நேரம். பறவைகள் தங்களின் உணவுக்காக கூட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் பரபரப்பாக வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கும் மனிதர்கள் சென்று கொண்டிருந்த வீதியில் குடிசை வீட்டில் இருந்து சத்தம் வந்தது.

" சீக்கிரம் சாப்பாடு கூடைய எடுத்துட்டு வாடி. நேரமாச்சு" என்று கத்திக்கொண்டே வேக வேகமாக வெளியே வந்தான் செல்வம்.

“இதோ வந்துட்டேன். நீங்களே போட்டுட்டு போனா என்னவாம் உங்களுக்கு” என்று கடிந்து கொண்டே எடுத்து வந்தாள் மேகலா.

“எல்லாம் எங்கப்பன சொல்லனும். உன்ன போயி என் தலையில கட்டி வச்சுட்டு, அந்தாளு போயி சேர்ந்துட்டாரு. இப்போ நா தானே அவஸ்தை படுறேன்” என்று சொல்லிட்டே கூடைய வாங்கிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் செல்வம்.

“ஆமா ஆமா. இவருக்கு அரண்மனைல இருந்து சம்மந்தம் வந்துச்சு. இவரு என்னமோ எனக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி பேசுறாரு?. நான் மட்டும் இல்லைனா உங்களுக்கு கல்யாணமே ஆயிருக்காது” என்று அவன் செல்லும் திசையை பார்த்து சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் மேகலா.

தினமும் வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற கஷ்டத்தில் இருவரின் வாழ்க்கை சென்றாலும், இருவருக்கும் இடையே உள்ள காதலும், இதுபோல செல்ல சண்டையும் குறைந்ததே இல்லை.

அந்த காதலின் அடையாளமாக பிறந்தவன் தான் அபிமன்யு.

அபிமன்யுவை அப்படி வளர்க்க வேண்டும் இப்படி வளர்க்க வேண்டும் என்று எண்ணியபடியே தான் அவர்களின் ஒவ்வொரு நாளும் கடந்தது.

செல்வம் வேலைக்கு சென்ற இடத்தில் புதிதாக ஒரு முதியவர் வேலைக்கு வந்து இருந்தார். அவரை பார்த்தவுடன் செல்‍‍வத்துக்கு ஒரு இனம் புரியாத ஏக்கம் அவனுள் தொற்றிக்கொண்டது.

வேலையை பார்க்க ஆரம்பித்தான். நண்பகல் வெயில் நேரம். வியர்வை வழிந்து கொண்டிருந்தது. மண்ணில் வியர்வை துளி பட்டவுடன் காய்ந்து போனது.

“எல்லோரும் சாப்பிட போங்கப்பா” என்று ஒருவர் சொல்ல, எல்லாரும் வேகமாக சாப்பாடு கூடையை நோக்கி சென்றார்கள்.

அப்போது அந்த பெரியவர் மட்டும் தனியாக அமர்ந்து கொண்டிருக்க, அவரை நோக்கி சென்று அருகில் அமர்ந்தான் செல்வம்.

“ஐயா ஏன் இங்க வந்து உக்காந்துட்டு இருக்கீங்க? வாங்க சாப்படலாம்” என்று அழைத்தான் செல்வம்.

“இல்லப்பா. பசிக்கல. நீ சாப்புடுபா” என்று அவர் கூறினாலும், அவரின் உடலில் தெரிந்த சோர்வும், கண்களில் தெரிந்த பசியும் செல்வத்திடம் அவரை காட்டிக்கொடுத்து விட்டது.

“ஐயா இன்னைக்கு ஒருநாள் என்னோடு சாப்புடுங்க” என்று செல்வம் வற்புறுத்தியும் அந்த பெரியவர் சாப்பிடவே இல்லை. தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு வேலை செய்ய தயாரானார்.

மனமில்லாமல் தன் வயிற்றை நிரப்ப தான் கொண்டு வந்த உணவை உண்டான் செல்வம்.

ஆனால் அந்த பெரியவர் மிக சோர்வுடனே வேலை செய்வதை பார்த்த செல்வத்திற்கு மனசு ரொம்ப வலித்தது.

வேலை முடிந்து சம்பளம் வாங்கும் போது முதியவர் மிகவும் கலைத்து போயிருந்தார்.செல்வமும் சம்பளம் வாங்கிய பின் முதியவரிடம் “அய்யா எங்க தங்கி இருக்கீங்க? கொண்டுவந்து விடவா?” என்று கேட்டான்.

பெரியவரின் முகத்தில் ஒரு சிறு புன்னகை. ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்களும் வலிகளும் நிறைந்தே இருந்தது.

பதில் ஏதும் கூறாமல் நகர்ந்தார் பெரியவர்.

குழப்பத்திலேயே வீட்டிற்கு சென்றான் செல்வம். அவனுள் ஏராளமான கேள்விகள் மனதை தட்டிக் கொண்டே இருந்தது.

வீட்டை அடைந்தான் செல்வம். அப்போது அபிமன்யு அழுதுகொண்டு இருப்பதை பார்த்த செல்வத்திற்கு கோவம் தலைக்கேறியது.

“ஏன்டி பையன் அழறது கூட தெரியாம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கத்தி கொண்டே சமையலறை நோக்கி சென்றான் செல்வம்.

அங்கே வேண்டா வெறுப்பாக சமைத்துக் கொண்டிருந்தாள் மேகலா.

“ஏண்டி எம்புள்ள அங்க அழுதுட்டு இருக்கான். இங்க நீ எதுவும் தெரியாம சமச்சுட்டு இருக்கியா?” என்று கோபத்துடன் கேட்டான் செல்வம்.

“உம்புள்ளைக்கு பக்கத்து வீட்டு டீவில பிரியாணிய பாத்துட்டு வந்து வாங்கி கொடுனு கேட்கறான். என்ன செய்ய நானு” என்று குரலில் வலியை கொடுத்தாள் மேகலா.

பேசாமல் வெளியே வந்த செல்வம் தன் மகனை தூக்கி"ஏண்டா தங்கம் அழகுற?" என்று தனக்கு எதுவுமே தெரியாதது போல் மகனிடம் வினவினான் செல்வம்.

"அப்பா எனக்கு பிரியாணி வேணும்பா. அம்மா கிட்ட கேட்டா அடிக்கிறாங்க"என்று தேம்பி அழுதுகொண்டே சொன்னான் அபிமன்யு.

“அழுகாத டா செல்லம் நாளைக்கு அப்பா உனக்கு பிரியாணி வாங்கிட்டு வர்றேன்” என்று சொன்னான் செல்வம்.

தன் அழுத குழந்தையை சமாதானம் செய்துவிட்டு நாளை எப்படி வாங்குவோம் என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் செல்வம்.

அன்று இரவு பொழுது அவனுக்கு தூரமாய் இருந்தது. அந்த பெரியவரின் சிரிப்பும் தன் மகனின் அழுகையும் அவனுக்கு ஏதோ உணர்த்திக் கொண்டே இருந்தது.

“வாங்க சாப்பிடலாம்” என்று மேகலா கூப்பிட ஏதோ ஒரு வெறுமையுடன் வந்து அமர்ந்தான் செல்வம். பக்கத்தில் அபிமன்யு வந்தமர்ந்தான்.

தன் கணவனின் முகத்தில் இருக்கும் அந்த வருத்தத்தை மேகலாவால் உணரமுடிந்தது.

“என்னங்க ஆச்சு?ஏன் இப்படி இருக்கீங்க?” என்று மேகலா கேட்க,

“ஒன்னும் இல்லடி.நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று சாப்பாட்டை பிசைந்தான் செல்வம்.

மேகலா எதுவும் பேசாமல் தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்தாள்.

தனக்கு நாளைக்கு பிரியாணி கிடைக்கும் என்ற ஆசையில் இன்று அபியின் வயிறு நிறைந்தது.

சீக்கிரம் தூங்கினான் அபிமன்யு.

“நீங்க பாட்டுக்கு நாளைக்கு பிரியாணி வாங்கிட்டு வர்றேன் சொல்லிட்டீங்க. நாளைக்கு எப்படி வாங்கிட்டு வரபோறீங்க?” என்று கேட்டாள் மேகலா.

“தெரியலடி. என் பையன் அழும் போது பாக்க முடியல. அதான் வாங்கிட்டு வர்றேனு சொல்லிட்டேன்” என்று மெதுவாக சொல்லும் போது செல்வத்தின் மனநிலையை உணர்ந்தாள் மேகலா.

“இன்னைக்கு ஒரு பெரியவர பாத்தேன்.அவரோட வெறுமையான சிரிப்பு எதையோ சொல்லுச்சுடி” என்று செல்வம் சொல்ல,

“யாருங்க அவரு? எங்க பார்த்தீங்க? எதுக்கு சிரிச்சாரு?” என்று கேட்க மேகலா கேட்க,

“நாளைக்கு சொல்றேன்” என்று சொல்லி உறங்க சென்றான் செல்வம்.

பொழுதும் புலர்ந்தது. பரபரப்பாக வேலைக்கு கிளம்பிய வேலையிலும் செல்வம் முகத்தில் ஒரு ஏக்கம். மேகலாவை பார்த்தான். அவள் கண்கள் உடனே தூங்கி கொண்டிருந்த அபிமன்யுவை ஒருகணம் பார்த்தது.

மேகலாவின் பார்வையை உணர்ந்தவன் “இன்னைக்கு இருக்கற வைத்து சமையல் செய். நாளைக்கு சமாளிக்கவும் கொஞ்சம் எடுத்து வச்சுட்டு சமையல் பண்ணு” என்று சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினான்.

மேகலாவும் தன் அன்றாட வேலைகளை செய்ய சென்றாள்.

வேலை செய்யும் இடத்திற்கு வந்த உடனே செல்வத்தின் கண்கள் அந்த முதியவரை தான் தேடியது. அவர் இருக்கும் இடத்தை அறிந்து அவர் அருகில் சென்றான்.

பெரியவரும் செல்வத்தை பார்த்துவிட்டு ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்த, அதில் ஒரு நம்பிக்கை தெரிந்தது.

வேலை தொடங்கியது. பெரியவரை அடிக்கடி பார்த்தான் செல்வம். நேற்றைவிட கொஞ்சம் தெம்பாகவும் மகிழ்ச்சியாகவும் அவர் இருப்பதை உணர்ந்தான்.

மதிய உணவு நேரம். அந்த பெரியவர் செல்வம் இருக்கும் இடத்திற்கு கையில் ஒரு உணவு பொட்டலத்துடன் வந்தார்‌.

ஒரு சிறு புன்னகையுடன் இருவரும் அமர்ந்து உண்ண தொடங்கினர்.அப்போது பெரியவரை பார்த்து, “ஐயா நீங்க எங்க இருந்து வர்றீங்க? நேத்து ஏன் சாப்பிட கூப்பிட அப்போ வரலை?” என்று கேட்க,

பெரியவரோ சிரித்துவிட்டு, “தம்பி நான் நாலு பசங்களுக்கு அப்பா. இன்னைக்கு அனாதை” என்று சொல்லி விட்டு சாப்பிட்டார்.

“ஐயா பசங்க இறந்துட்டாங்களா?” என்று செல்வம் கேட்க, “கிட்டத்தட்ட அப்படி தான்” என்று பெரியவரின் பதிலில் வாயடைத்து போனான்.

“தம்பி மன்னிச்சுக்க. நேத்து நீ சாப்பிட கூப்பிட.ஆனா இதுவரைக்கும் நான் அப்படி சாப்பிட்டது இல்லைப்பா” என்று பெரியவர் சொல்ல, செல்வத்திற்கு புரிந்தது.

சாப்பிட்டு பின்னர், வேலை தொடங்கியது. உச்சி வெயிலிலும் உழைக்கும் வர்க்கம் தன் குடும்பத்தின் பசியை போக்க வெந்து கொண்டு இருந்தது.

மாலை நேரத்தில் சம்பளத்திற்காக காத்திருந்த அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி.

ஆம். சம்பளம் தரும் மேஸ்திரி வண்டியில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று செய்தி மட்டும் வந்தது.

அனைவருக்குமே அவருக்கு அடிபட்டதை நினைத்து வருத்தம் கொள்ளவில்லை. காரணம் அனைவருக்குமே இன்று இரவும் நாளைய பொழுதும் உணவுக்காக தேவைப்படும் சம்பளமே.

செல்வத்தின் மனம் அப்போது தனது மகனுக்கான இன்றைய ஆசையை எப்படி தீர்ப்பது என்பது தான்.

மற்றவரின் முகத்தில் தெரிந்த கஷ்டத்தை விட செல்வத்தின் முகத்தில் ஏற்பட்ட கவலையின் வலியை அந்த பெரியவர் கண்டுகொண்டார்.

“ஏன்பா? என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு கவலைபடுற?” என்று பெரியவர் கேட்க,

“இல்லைங்க ஐயா. என் மகனுக்கு இன்று பிரியாணி வாங்கிட்டு வர்றேனு சொல்லி இருந்தேன். ஆனா இப்போ…??” என்று இழுத்தான் செல்வம்.

“இவ்வளவு தானா விசயம். இந்தா பிடி” என்று இன்றைய உணவுக்காக தான் வைத்திருந்த பணத்தை செல்வத்தின் கைகளில் திணித்தார் பெரியவர்.

“வேண்டாமுங்க ஐயா” என்று செல்வம் மறுக்க,

“ஏன்பா தம்பி?. இந்த புடி. குழந்தை பொக்குனு போயிடும்” என்று கூறினார் பெரியவர்.

“இல்லைங்க ஐயா. இந்த காசு நீங்க சாப்பிட வச்சு இருக்கறதுங்க” என்று செல்வம் சொல்ல,

“அட போப்பா. எனக்கு ஒரு பேரன் இருந்தா தர மாட்டனா?. நீங்க முதல இத புடி” என்று மீண்டும் அவன் கைகளை மீறி சட்டைப்பையில் திணிக்க முயன்றார் பெரியவர்.

“உங்களுக்கு நான் மகனாக இருந்தால், என் பசியை விட உங்கள் பசியையே முக்கியமாக நினைப்பேன் ஐயா. ஒரு தந்தையாக மகனுக்கு வாங்கி தர முடியாததற்கு நானே வலிகளை ஏற்க வேண்டும்” என்று செல்வம் கூறினான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. சொன்னா கேளுப்பா” என்று பெரியவரும் வீம்பாய் இருந்தார்.

“ஐயா உங்களை பட்டினி போட்டுவிட்டு என் மகனின் ஆசையை நிறைவேற்றினால், என் மனசு என்னை நிம்மதியாக இருக்க விடாது. மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லி விட்டு வேகமாக நடையை கட்டினான் செல்வம்.

வீட்டுக்கு செல்லும் வழியில் கனத்த மனதுடனே இருந்தான் செல்வம்.

அதேநேரத்தில் வீட்டில் அபிமன்யு ஆனந்தமாக இருந்தான்.

“அம்மா!!! அம்மா!!!. எப்போமா அப்பா வருவாரு?” என்று அபிமன்யு கேட்க,

“கொஞ்ச நேரத்தில என் செல்லக்குட்டிக்கு பிரியாணி வாங்கிட்டு சீக்கிரம் வந்துருவாருடா செல்லம்” என்று சொல்லி அபிமன்யுவின் கன்னத்தை கிள்ளி சிரிக்க,

“ஹைய்யா. ஜாலி ஜாலி” என்று துள்ளி குதித்து கொண்டு இருந்தான் அபிமன்யு.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.

“அம்மா இன்னும் அப்பாவ காணல. எப்போ வருவாரு” என்று மீண்டும் கேட்க,

“உனக்கு பிரியாணி வாங்கிட்டு வரதுனால தான்டா செல்லம் அப்பா வர நேரமாகுது” என உண்மை தெரியாமல் தன் மகனின் ஆசையில் மேகலாவும் மூழ்கி இருந்தாள்.

வீட்டினுள் நுழைந்தான் செல்வம்.

“அம்மா… அப்பா வந்துவட்டாரே…” என்று கத்திகொண்டே செல்வத்தின் அருகில் சென்றான் அபிமன்யு.

அந்த சத்தம் கேட்டவுடன் செல்வத்திற்கு மனதில் இடி விழுந்தது போல தோன்றியது.

தன் மகனின் ஆசையை எப்படி இல்லை என்று சொல்வது, அவனை எப்படி சமாளிப்பது என்று ஏராளமான கேள்விகளை அந்த நொடியில் நினைத்தான் செல்வம்.

செல்வத்தின் தொடைகளை இறுக்கி அணைத்து பிடித்த அந்த பிஞ்சு கைகளுக்கு தெரியவில்லை தன்னை அப்பா இன்று ஏமாற்றிவிடுவாரென்று.

முகத்தில் மகிழ்ச்சியுடன் செல்வத்தின் அருகில் நெருங்கிய மேகலாவின் பார்வை, செல்வத்தின் கண்களை கவனிக்க தவறவில்லை.

“என்னங்க ஆச்சு?” என்று அவள் கேட்கும் முன்பே, “அப்பா பிரியாணி எங்கப்பா?” என்று அபிமன்யுவின் ஆனந்த குரல் செல்வத்தின் நெஞ்சில் முள்ளாய் இறங்கியது.

கீழே அமர்ந்தான் செல்வம். தன் மகனின் கைகளை பற்றி, அந்த பிஞ்சு விரல்களில் முத்தம் கொடுத்தான். அப்போது செல்வத்தின் கண்களில் குளம் போல கண்ணீர் தேங்கியது.

அதன் காரணம் தெரியாமல், “சீக்கிரம் பிரியாணி எடுப்பா.!!. பசிக்குது” என்று சொல்லும்போது அவன் கண்களில் நீர் வழிந்தது.

தன் மகனின் கைகளில் செல்வம் முத்தம் கொடுக்கும் போதே நடக்க இருப்பதை உணர்ந்து கொண்டாள் மேகலா.

எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்த செல்வத்திற்கு தொண்டைகுழி வறண்டது. பேச்சு வரவிடாமல் அடைத்தது.

மேகலா அபிமன்யுவை தூக்க முற்பட்டாள். ஆனால் செல்வம் விடவில்லை. அபிமன்யுவும் விடவில்லை.

திக்கி திக்கி, “அப்பானால இன்னைக்கு பிரியாணி வாங்கிட்டு வரமுடியலப்பா” என்று கண்கள் கலங்க சொன்ன செல்வத்திற்கு அடுத்த இடி தயாராக இருந்தது.

அதை கேட்டவுடன் அபிமன்யு பேசவில்லை. கண்கள் கலங்கியது. முகம் வாடியது.

அதை பார்க்க பார்க்க செல்வத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேகலாவிற்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டு இருந்தாள்.

பாவம் மேகலா. தன் கணவனை சமாதானம் செய்வதா! இல்லை தன் குழந்தையை சமாதானம் செய்வதா! என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள்.

சில நொடிகளில் சீறி பாய்ந்தது அபிமன்யுவின் வார்த்தைகள். “போ. பேசாத. நீ ஏமாத்திட்டில. இனி உன்கூட பேசமாட்டேன். உன் பேச்சு க்காா” என்று சொல்லி சத்தமாக அழ ஆரம்பித்தான்.

எந்த தந்தைக்கும் வரக்கூடாத நிலைமை. சத்தமில்லாமல் அழுதுகொண்டு இருந்தான் செல்வம்.

அழுத குழந்தையை தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் சென்று சமாதானம் செய்ய ஆரம்பித்தாள் மேகலா.

ஆனால் பிஞ்சு மனதில் ஏற்பட்ட வலி ஆயிற்றே. சமாதானம் ஆக மறுக்கிறது.

“செல்லம் இன்னைக்கு அப்பா கடைக்கு போறதுக்குள்ள கடைக்காரன் வீட்டுக்கு போயிட்டானாம்” என்று மேகலா சொல்ல அபிமன்யுவோ சமாதானம் ஆகவில்லை.

“அப்பா உன்ன ஏமாத்துவாரா? கடைக்காரன் போயிட்டான் சாமி” என்று சொல்லி கொண்டே அவன் கண்களில் இருந்த நீரை துடைத்தாள்.

மேலும் ஏதேதோ சொல்லி மகனின் அழுகையை நிறுத்திவிட்டாள் மேகலா.

ஆனால் வெளியில் கலங்கி நிற்கும் கணவனை சமாதானம் செய்வது எப்படி என்று தெரியவில்லை.

“இன்னைக்கு அப்பா வாங்கிட்டு வரல. நாளைக்கு கட்டாயம் வாங்கிட்டு வருவாரு” என்று சமாதானம் சொல்லி விட்டு ஆக்கி வைத்த சோறை வைத்து அபிமன்யுவின் வயிற்றை நிறைத்தாள் மேகலா.

அதற்கு இரண்டு மணிநேரம் தேவைப்பட்டது.

மேகலா அபிமன்யுவை தூங்க வைத்துவிட்டு, செல்வத்தின் அருகில் வந்து போது இன்னுமும் அழுதுகொண்டு இருந்தான் செல்வம்.

“என்னங்க நீங்களும் குழந்தை மாதிரி அழுதுகிட்டு இருக்கீங்க!” என்று தனது கணவனை சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

ஆனால் செல்வத்தின் மனமோ வலிகளில் இருந்து மீள மறுத்தது.

“என்னங்க என்ன ஆச்சு? ஏன் வாங்கிட்டு வரல?” என்று மெதுவாக கேட்டாள்.

தொண்டை வறண்டு இருந்தது. பேச முடியவில்லை. அவனின் வாடிய முகமும், சிவந்த கண்களும் வலியின் அர்த்தங்களை கூறியது.

சமையலறை சென்று தண்ணீர் எடுத்து கொண்டு வந்தாள் மேகலா. தண்ணீர் குடித்துவிட்டு சொம்பை கீழே வைத்துவிட்டு மேகலாவின் முகத்தை பார்த்தான். கண்களால் மன்னிப்பு கேட்டான்.

இன்று மாலை நடந்தவற்றை அனைத்தையும் மேகலாவுக்கு சொன்னான் செல்வம்.

இங்கே இவைகள் நடக்கும் வேளையில், அங்கே பெரியவரின் மனதில் செல்வம் பற்றியும், அவன் மகன் பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

செல்வத்திற்கு மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய்விட்டது மேகலாவிற்கு.

“சாப்பிட வாங்க. சாப்டுட்டு தூங்குங்க. நாளைக்கு வாங்கிட்டு வாங்க” என்று அழைத்தாள் மேகலா.

“எனக்கு பசிக்கல. நீ சாப்டுட்டு தூங்கு” என்று சொல்லிவிட்டு படுத்தான் செல்வம்.

அவனின் கைகளை பிடித்து உலுக்கி, “என்ன ஆச்சுன்னு இப்போ பட்டினியோட தூங்க போறிங்க” என்று வலுக்கட்டாயமாக சாப்பிட அழைத்தாள் மேகலா.

“பசிக்கலனு சொன்னா உனக்கு புரியாதா? நீ தின்னுட்டு தூங்கு. என்னைய விடு” என்று கத்திவிட்டு படுத்தான் செல்வம்.

இதை கூறும் வேளையில் கண்களில் கண்ணீரோடு கூறினான்.

“அதைவிடுங்க. இன்னுமும் ஏங்க அழறீங்க?. நாளைக்கு சம்பளம் வந்துடும். நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று தேற்றினாள் மேகலா.

“நாளைக்கு வாங்கிக்கலாம் தான். ஆனால் இன்று என் மகனுக்கு கொடுத்து வாக்கை காப்பாற்ற முடியாத ஒரு அப்பனா அவனை பார்க்கும் போது இதயத்தில ஈட்டி இறங்குற மாதிரி இருந்துச்சு” என்று செல்வம் கூறினான்.

தன் கணவனின் வலிகளை நன்றாக உணர்ந்தாள் மேகலா.

“சின்ன வயசுல எங்கப்பா சந்தைக்கு போயிட்டு நைட்டு லேட்டா தான் வருவாரு. அப்போ வீட்டில கரண்ட் கிடையாது. நானும் என் தங்கச்சியும் அவருக்காக காத்துகிட்டு இருப்போம்” என்று தனது சிறுவயது நினைவுகளை மேகலாவிடம் கூற ஆரம்பித்தான் செல்வம்.

ஏற்கனவே கூறியவைகள் தான்.ஆனால் தற்போது அவனின் வலிகளில் அவை புதிதாக வேறொரு கோணத்தில் இருந்தது.

“சந்தையில இருந்து வரும்போது எதாவது வாங்கிட்டு வருவாரு. அது எதுவா இருந்தாலும் சாப்பிடுவோம்” என்று அவளின் முகத்தை பார்த்து கூறினான் செல்வம்.

“சில நாட்கள் எங்களுக்கு ஊட்டி விடுவாரு எங்கப்பா. அந்த நேரத்தில மட்டும் எங்கப்பாவோட முகத்தில அப்படி ஒரு சந்தோசம் இருக்கும்” என்று சொல்லிவிட்டு மேகலாவின் கண்களை ஏக்கத்துடன் பார்த்தான் செல்வம்.

மேகலாவிற்கு செல்வத்தின் வலியும் ஆசையும் இப்போது மேலும் கஷ்டத்தை கொடுத்தது.

அழுதுகொண்டே, “விடுங்க. நாளைக்கு வாங்கிட்டு வாங்க” என்று கூறி தனது கண்களை துடைத்துக் கொண்டாள் மேகலா.

“அதில்லடி. சில நாட்கள் எங்கப்பா கிட்ட எதாவது சொல்லி விடுவோம். ஆனா வாங்கிட்டு வர மாட்டாரு. அப்போ நாங்க மூஞ்சிய தூக்கி வச்சுக்குவோம். அப்போ தெரியல அப்பாவோட கஷ்டம். இப்போ தெரியுது” என்று கூறும்போது செல்வத்தின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

“என்னங்க. அதில இருந்து வெளிய வாங்க. அபி சாப்டு தூங்கிட்டான். இப்போ நேரமாச்சு. நீங்களும் சாப்டுங்களே” என்று அழுதுகொண்டு கேட்டாள் மேகலா.

“சில நாட்கள் அப்பா காசில்லபானு சொல்வாருடி. அப்போ தெரியல. இப்போ அதை என் மகன் கிட்ட சொல்ல கூட என்னால முடியலடி” என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான் செல்வம்.

தன் கணவனின் கண்ணீரை துடைத்து விட்டு தன் தோளில் சாய்த்து கொண்டாள் மேகலா.

“என்னங்க. சொன்னா கேளுங்க. நம்ம பையனை நல்லா வளர்க்கலாம். அவனுக்கு எல்லாமே நீங்க கொடுப்பிங்க” என்று கூறி தனது கணவனை தேற்றினாள் மேகலா.

நள்ளிரவை தாண்டி செல்வத்தின் குமுறலும் மேகலாவின் ஆறுதலும் சென்றது.

மனதின் வலியில் வயிற்றின் பசியை மறந்தான் செல்வம்.

கணவனின் வலியில் தன் பசியை மறைத்தாள் மேகலா. காலையில் வேலைக்கு செல்லும் போதே இரண்டு நாட்கள் சமாளிக்க வேண்டும் என்று செல்வம் கூறியதால் மதிய உணவை துறந்தாள் மேகலா.

வீட்டுக்கு வெளியே போயி கஷ்டப்படுற கணவனுக்கு தானே அதிகமாக உணவு வேண்டும் என்று மதியம் சாப்பிடாமல் இருந்துவிட்டாள்.

இவர்களின் வலியிலும், காதலிலும் சாப்பாட்டு பாத்திரத்தின் கனமும் குறையாமல் இருந்தது.

பொழுதும் புலர்ந்தது. அபிமன்யு செல்வத்திடம் சரியாக பேசவில்லை.

இரவு மிஞ்சிய சாப்பாட்டை தண்ணீர் ஊற்றி சாப்பிட்டுவிட்டு மகனின் செயலில் மனமுடைந்து வேலைக்கு சென்றான் செல்வம்.

செல்வம் பணியை துவங்கினான். உணவு வேளையில் பெரியவரை தேடினான்.அவரும் செல்வத்தை தேடினார்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

செல்வத்தின் முகத்தில் தெரிந்த வாட்டத்தை வைத்தே நடந்தவற்றை ஊகித்தார் பெரியவர்.

“என்னப்பா. நேத்து பையன் கோவுச்சுக்கிட்டானா” என்று பெரியவர் கேட்க,

“ஆமாங்க ஐயா. நேத்து அவனை பார்க்கவே முடியல” என்று சோற்றை பிசைந்து கொண்டே கூறினான் செல்வம்.

“தெரியும்பா.அதான் உன் கையில காசை கொடுத்தேன். உன் பையன விட உனக்கு தான் வலி அதிகமாக இருந்திருக்கும்” என்று பெரியவர் சொல்லும் போது நிமிர்ந்து அவரின் முகத்தை பார்த்தான் செல்வம்.

“என்னப்பா அப்படி பாக்குற. நாலு பசங்களுக்கு அப்பா நான். உன்னோட இந்த வலியை கூட புரிஞ்சுக்க முடியாதா என்னால?” என கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.

“நேத்து என் அப்பாவோட வேதனையை உணர்ந்தேனுங்க ஐயா” என்று செல்வம் கூறும்போது அவனின் அப்பா மீது இப்போது வரும் பாசத்தை உணர்ந்தார் பெரியவர்.

“இன்னைக்கு சம்பளம் கொடுத்தா பாருப்பா. இல்லையினா என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு. வேற எதாவது சாப்பிட வாங்கிட்டு போ. இன்னைக்கு நீ அழுதா!” என்று சொல்லி விட்டு தன் கைகளை கழுவ எழுந்து சென்றார் பெரியவர்.

நாலு பசங்களுக்கு அப்பா. இன்னைக்கு ஒருவேளை சாப்பிட்டுக்கு வேலை செய்து சாப்பிட வேண்டிய நிலைமை என்று நினைத்து கொண்டு தன் வயிற்றை நிரப்பினான் செல்வம்.

மதியம் வேலை செய்யும் போது அவனுக்கு தன் தந்தையின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.

“டேய் செல்வா. நீ சம்பாதிச்சு எனக்கும் உன் ஆத்தாளுக்கும் சோறு போட வேண்டாம். உன்னை நீ காப்பாத்திகிட்டாலே போதும்” என்று தன் தந்தை அடிக்கடி கூறுவதை எண்ணினான் செல்வம்.

தன் தந்தை அப்படி கூறும் போதெல்லாம் “யோவ் இப்படி பேசிபுட்டு சோறு கேட்டு வீட்டுக்கு வந்தா? உனக்கு ஒரு பருக்கை சோறு கூட போட மாட்டேன்” என்று கூறிய வார்த்தைகளால் தன்னையே நொந்து கொண்டான் செல்வம்.

வேலை முடிந்தது. சம்பளத்திற்காக காத்திருந்தனர் அனைவரும். செல்வமும் பெரியவரின் அருகில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

மேஸ்திரி வந்தார்.அவரை பார்த்த பின்புதான் செல்வத்தின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

அனைவரும் வரிசையாக நிற்க, இரண்டு நாட்கள் சம்பளமும் கொடுக்கப்பட்டது.

காசை கையில் வாங்கிய பின் செல்வத்திற்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அவன் முகத்தில் கண்டார் பெரியவர்.

“ஐயா. இன்னைக்கு என் பையன ஏமாத்த மாட்டேன்” என்று சொல்லிவிட்டு விரைந்தான் பிரியாணி கடைக்கு.

“அன்னே ஒரு பிரியாணி” என்று சொல்லி செல்வம் காசை நீட்ட,

பிரியாணி கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.

கைகளில் பிரியாணி பொட்டலம் வாங்கிக்கொண்டு ஆனந்தத்தில் சில தூரம் நடந்தான் செல்வம்.

தீடிரென்று நின்று திரும்பி கடையை பார்த்தான்.

நேத்து நாமாலும் சாப்பிடல. மேகலாவும் சாப்படல. முந்தா நேத்தே சொன்னோம் " இன்னைக்கு சமாளிக்கனுமுனு" என்று நினைத்து பார்த்தான் செல்வம்.

“அண்ணே இன்னொரு பிரியாணி கட்டுங்க” என்று சொல்லி வாங்கிக்கொண்டு தன் ஆசை மனைவிக்கு கொடுக்க சென்றான் செல்வம்.

செல்லும் வழியில் செல்வத்தின் மனதில் அச்சம் குடிகொண்டது.

“அபிமன்யு சாப்டுருப்பானோ? தூங்கி இருப்பானோ?” என்ற பயமே அது.

கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தான். “சாமி கடவுளே. எம்புள்ள இந்நேரம் சாப்பிட்டு இருக்க கூடாது. மேகலா அவனுக்கு ஊட்டி விட்டுருக்க கூடாது” என்று வேண்டிக்கொண்டே நடையை துரிதப்படுத்தினான் செல்வம்.

நேரம் செல்ல செல்ல நடையும் பயமும் அதிகமாகியது. கிட்டத்தட்ட ஓடும் நிலையில் நடந்தான் செல்வம்.

வீட்டினுள் நுழைந்தான் செல்வம். தன் மகனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள் மேகலா.

“பையனுக்கு சாப்பாடு கொடுக்காத!” என்று கத்திகொண்டே வேகமாக வந்து தட்டை புடுங்கினான் செல்வம்.

“என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்துறீங்க?. புள்ளைக்கு சோறு ஊட்ட போகும் போது தான் தட்டை புடுங்குவீங்களா?” என்று கடிந்து கொண்டாள் மேகலா.

மூச்சிரைக்க பேசினான் செல்வம், “ஏய் நேத்து தான் எம்புள்ளைய ஏமாத்திட்டேன். இன்னைக்கு வாங்கிட்டு வந்துட்டேன்” என்று சொல்லி பிரியாணி பொட்டலத்தை நீட்டினான்.

“ஹைய்யா. சூப்பர் அப்பா” என்று சொல்லி எழுந்து தன் தந்தை கழுத்தை இறுக்கி முகத்தில் முத்தமழை பொழிந்தான் அபிமன்யு.

தன் மகனின் முத்தத்தின் மகிழ்ச்சியில் செல்வத்தின் மனதில் அமிர்தம் உண்டது போல இருந்தது.

இந்த மகிழ்ச்சிக்காக தானே காத்திருந்தான் செல்வம். கண்கள் குளமாகியது ஆனந்தத்தில்.

பொட்டலத்தை பிரித்து தன் கைகளால் மகனுக்கு ஊட்ட ஆரம்பித்தான் செல்வம்.

அந்த நிமிடங்கள் அவன் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இருவரின் முகத்தையும் மகிழ்ச்சியையும் ரசித்து கொண்டு இருந்தாள் மேகலா.

சாப்பிட்டு முடித்ததும் தன் கைகளால் மகனின் வாயை துடைத்துவிட்டு அபிமன்யுவின் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தேன் செல்வம்.

ஆகா!!!. என்ன ஒரு சந்தோசம். இது தான் தந்தையின் பாசமா? என்று நினைத்தான் செல்வம்.

வயிறு நிறைய உண்ட அபிமன்யுவை தூங்க வைத்துவிட்டு செல்வத்திற்கு சாப்பாடு எடுத்து வைத்தாள் மேகலா.

“என்னங்க சந்தோஷப்பட்டது போதும். வந்து சாப்புடுங்க” என்று அழைத்தாள் மேகலா.

வந்து அமர்ந்தான் செல்வம். அருகில் தனக்கு கொஞ்சமாக சாப்பாட்டை போட்டுக் கொண்டு அமர்ந்தாள் மேகலா.

இருந்ததே கொஞ்சம் தான் அவளுக்கு.

செல்வம் மேகலாவை பார்த்தான்.அவளும் பார்த்தாள்.

அவளின் தட்டை எடுத்து சாப்பாட்டை தன் தட்டில் கொட்டி பிசைந்தான் செல்வம்.

மேகலா கோவம் கொள்ளவில்லை. தன் கணவனுக்கு பசிக்கிறதோ என்றே எண்ணினாள்.

சில நொடிகளில் அவள் முன் பிரியாணி பொட்டலத்தை நீட்டினான் செல்வம்.

“என்னங்க இது” என்று மேகலா கேட்டாள்.

“உனக்கும் ஒரு பொட்டலம் வாங்கிட்டு வந்தேன். சாப்புடுடி” என்று கண்களில் காதல் வடிய கூறினான் செல்வம்.

“எனக்கு எதுக்கு பிரியாணி?. நீங்க சாப்புடுங்க” என்று சொல்லிவிட்டு செல்வத்தின் தட்டை இழுத்தாள் மேகலா.

“ஏய். இத நான் சாப்புட்டுகறேன்டி. நீ நேத்தும் சாப்படல. இன்றைக்கும் ஒழுங்கா சாப்டு இருக்க மாட்ட. அதனால நீ பிரியாணி சாப்டு” என்று சொல்ல,

“நீங்க தான் வேலைக்கு போறீங்க. நீங்க நல்ல சாப்பாடு சாப்புடுங்க” என்று மேகலா கூறினாள்.

இருவருக்கும் காதல் சண்டை மலர்ந்து கொண்டு இருந்தது.

இறுதியில் மேகலாவே வென்றாள்.

செல்வம் பிரியாணி பொட்டலத்தை பிரித்தான்.

ஒரு கை சோறு எடுத்து மேகலாவின் முன்பு நீட்டினான் செல்வம்.

“சாப்புடுடி. நான் ஊட்டிவிடுறேன்” என்று சொல்லி கொண்டே அவள் வாயருகே கைகளை கொண்டு செல்ல,

மேகலாவின் கண்களில் நீர் தளும்பியது.

திருமணமான புதிதில் கூட மேகலாவிற்கு செல்வம் ஊட்டியதில்லை.

முதல்முறையாக தன் கணவனின் கைகளால் உணவு சாப்பிட போவதை நினைத்து மகிழ்ச்சியில் கண்கள் கலங்க, பிரியாணியை சாப்பிட்டால் மேகலா.

அப்போது செல்வத்தின் மனதில் தோன்றியது. இது தான் காதலோ என்று.

தானும் உணவை எடுத்து தன் கணவனுக்கு ஊட்டினாள் மேகலா. சற்றும் தாமதிக்காமல் வாங்கினான் செல்வம்.

தன் மகனின் ஆசையில் இன்று எத்தனை ஆனந்தங்கள் செல்வத்திற்கும் மேகலாவிற்கும்.

இருவரும் அன்று தன் கைகளால் சாப்பிடவில்லை.

அன்றைய இரவு காதலிலும் மகிழ்ச்சியிலும் முடிந்தது.

‘தன் மகனின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியும், தன் மனைவிக்கு ஊட்டிய மகிழ்ச்சியும், தனக்கு தன் மனைவி ஊட்டிய மகிழ்ச்சியும்’ செல்வத்தின் இதயத்தில் சிற்பமாக பதிந்தது.

2 Likes

இந்த உயிர் எப்போது போகும் என்று யாருமே அறியோம். உயிர் நீக்க சந்தர்ப்பம் அதிகம் என்று தெரிந்தும் ராணுவத்தில் இணைபவர்கள் உண்மையிலேயே தியாகிகள் தான். அந்த மனது எல்லோருக்கும் வந்து விடாது.

சங்கர் எனும் இந்த இளைஞனால் தங்கள் ஊருக்கு அவமானம் என்றிய ஊர் மக்கள் ராணுவ வீரனான அவன் தியாகத்தின் முன்னே தலை கவிழ்கிறார்கள்.

ஒரு ராணுவ வீரனின் குடும்பத்தின் வலியையும் பெருமிதத்தையும் அவர்கள் கடந்து செல்ல வேண்டிய பாதையையும் அழகாகக் காட்டி விட்டீர்கள் சகோ.

மனதின் ஆழத்தை ஆட்டிப் பார்க்க வல்ல அருமையான ஒரு சிறுகதை. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் .

2 Likes

ரொம்ப நல்ல இருந்தது அண்ணா அழ வெச்சுடீங்க :purple_heart:

1 Like

பொறுப்பற்று வாழ்வில் உயரிய நோக்கமற்று திரியும் இரண்டு நண்பர்கள் விளையாட்டாய் சென்று சேர்கின்ற இடம் அவர்களைப் பக்குவப்படுத்தி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கும்படி செய்கிறது - அதுவே நம் தலையாய இராணுவப் பணி!

இத்தகைய சிறப்புக்குரிய பணிதனில் நாமும் இணைந்திட மாட்டோமா என்ற ஏக்கத்தினை ஏற்படுத்துகிறது நம் கதையின் நாயகன் சங்கர் வீரமரணம் அடைந்த பின்னரும் அவரது திருவுடல் பெற்றிடும் மரியாதைகள்!

இருப்பினும் பெற்றோராய் தம் பிள்ளையின் இழப்பிற்காய் கதறிடும் பொழுதில் கருப்பையாவும் பார்வதியும் நம்மையும் கண்கலங்க வைக்கின்றனர்.

சங்கரின் மனைவி தேவிகாவின் இழப்போ ஈடுசெய்ய முடியாதது! பால் மறவாத பச்சிளம் குழந்தையின் பசியாற்றவும் சுயநினைவின்றி அவள் நிற்கதியாய் இருக்கையில் நம் மனதும் கனத்துப் போகிறது.

நிஜம் புரியாமல் தந்தையின் உயிரற்ற உடலோடு கொஞ்சி விளையாடும் அந்தப் பிஞ்சு உள்ளத்தைப் போல இக்கதையின் முடிவில் சோதனைகள் கண்டும் அஞ்சாமல் பட்டாளத்தின் மேன்மையை நம் இதயங்கள் உணரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!

இத்தகைய அர்த்தமுள்ள படைப்பினை உருவாக்கியமைக்கு வாழ்த்துக்கள் சகோ @Yaazhi_Stories!:ok_hand::+1:

2 Likes

மிக்க நன்றிங்க அக்கா.ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வடமாநிலத்தில் ஒரு பெண் இராணுவ அதிகாரி இறந்த போது அவரின் மார்பில் குழந்தை படுத்து சிரித்துக்கொண்டே இருந்த நிகழ்வை படித்தேன். அந்த நிகழ்வின் வெளிப்பாடே இந்த கதை

2 Likes

மிக்க நன்றிங்க சகோ

2 Likes

நன்றிங்க அக்கா.

1 Like

மிகவும் அருமை சகோ… தொடர்ந்து சிறப்பான படைப்புகள் அளித்திட வாழ்த்துக்கள்!

2 Likes

எத்தனையோ கதைகள் வாசிக்கிறோம்… ஆனால் குறிப்பாக அவற்றுள் சில மட்டும் நம் மனதின் ஆழம் வரை ஆட்டிப்பார்க்க வல்லது.

மிகைப்படுத்திக் கூறுவதாய் எண்ண வேண்டாம். ஒரு தந்தையின் இரவுகள்’ என்னும் இச்சிறுகதை தங்களின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாய் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனின் மனநிலையை மிகத் தத்ரூபமாக கதையின் நாயகன் செல்வம் பிரதிபலிக்க, தன் கணவனுக்கு ஏற்ற மனையாளாய் தன் பசியைத் தியாகம் செய்வதிலாகட்டும் கணவனின் சோகம் தீர்க்க முற்படுவதிலாகட்டும் பெண் என்பவள் இப்படித் தான் குடும்பத்தைத் தாங்க வேண்டும் என உணர வைப்பவள் மேகலா!

குழந்தை அபிமன்யு வாசிப்பவரைத் தன் பால்ய காலத்திற்கு நிச்சயம் அழைத்துச் செல்வான். கதையில் வரும் பெரியவர் சிறிது நேரமே வந்தாலும் நம் மனதில் நிற்கக் கூடியவர்!

அருமையான கதைக்களத்தினை மிக அழகாக வார்த்தைகளில் கோர்த்திருக்கிறீர்கள்.

இங்கு நான் ரசித்த வரிகளைப் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். அத்தனை வலிமை அந்த வரிகளில்!

“உச்சி வெயிலிலும் உழைக்கும் வர்க்கம் தன் குடும்பத்தின் பசியைப் போக்க வெந்து கொண்டு இருந்தது”

எந்த தகப்பனுக்கும் வரக்கூடாத நிலை என செல்வம் எண்ணும் அவ்வேளையில் தன் தந்தையை நினைத்து செல்வம் அழுதிடும் போதிலும், செல்வத்தின் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டு அபிமன்யு முத்த மழை பொழிகின்ற போதிலும், முதல் முறையாக செல்வம் காதலை உணர்கின்ற தருணத்திலும் கண்கலங்க வைத்து விட்டீர்கள்.

மிக அருமை சகோ… வாழ்த்துக்கள்…

2 Likes

மிக்க நன்றிங்க சகோ.

2 Likes

en appovada nyabagaththai thurupi thandhu irukeenga sago, en appa hotel vechu irundhar enaku briyani na uyir, daily weekly once appa suda parcel anupuvaru veetuku, school vitu vandhathum adhan… maraka mudiyadha natkal, appavae sila neram ooti viduvar. avar kaiyil vangi sapidaradhu rombha sandhosam. ippo appa kaiyil sappadanum pola iruku… ponga sago enna ala vechutae irukeenga. unga varigalil avlo uyirottam :purple_heart:

1 Like

samugathukku thevaiyana padhivu akka ithu, manasu ganama iruku kadhai padichu, pathodu ithum onnu andha vari valikudhu :purple_heart:

1 Like

திருநங்கையுடன் ஓர் இரவு

images(7)_1555013134319

இது ஒரு வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம்.

எங்க ஊருக்கு போறதுக்காக பஸ் ஸ்டாண்டில உக்காந்துட்டு இருந்தேன்.
இரவு 10 மணிக்கு மேல இருந்ததால கடை ஏதும் இல்ல. 10 பேரு கூட இல்ல அந்த பஸ் ஸ்டாண்டில.

ரொம்ப அலுப்பா இருந்துச்சு. தூக்கம் வந்துச்சு. ஆனா தூங்கல. பஸ் போயிருச்சுனா என்ன பண்றதுன்னு அரை தூக்கத்தில உக்காந்துட்டு இருந்தேன்.

யாரோ என் பக்கத்தில உக்காந்த மாதிரி இருந்துச்சு. யாருனு திரும்பி பார்த்தேன். ஒரு திருநங்கை.

தலை நிறைய மல்லிகை பூ. கண்களில் மை. லிப்ஸ்டிக். கை நிறைய வளையல். காலில் மணி அதிகம் வைத்த கொலுசு.

என்னையவே பாத்துட்டு இருந்துச்சு.

எனக்கோ பயம். என்னடா இது இப்படி பாக்குனு. என் ஃப்ரெண்ட்ஸ் சில பேரு சொல்லி இருக்காங்க.

“டேய் மச்சி, அலி கிட்ட தனியா சிக்குனா ரேப் பண்ணிருவாங்கடா. சில பேர ரேப் பண்ணி கொன்னுருக்காங்கனு” சொல்லி கேட்டு இருக்கேன்.

அது ஞாபகம் வந்ததும் இன்னும் பயம் அதிகமாயிடுச்சு.

தீடீரென அந்த அரவாணி என்கிட்ட “காசு இருந்தா கொடு” என்று கைதட்டி அவுக பாணியில கேட்டுச்சு.

எனக்கோ மூஞ்சி வெளுத்து போச்சு. பயந்துகிட்டே பேசாம அவங்களோட முகத்த பாக்க, “என்ன பாக்குற?. ஏதாவது சொல்லு” என்று கேட்டாங்க.
மனசுக்குள்ள பயம் இருந்தாலும் "என்னக்கா சொல்லனும். உனக்கு எதுக்கு சும்மா காசு தரனும்"னு கேட்டேன்.

“நீ ஒன்னும் சும்மா தர வேணாம். இன்னைக்கு நைட்டு புல்லா என்கூட என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா காசு கொடு” என்று அது சொன்ன உடனே இன்னும் பயம் அதிகமாயிடுச்சு எனக்கு.

எப்படி தோனுச்சுனு தெரியல. சட்டுன்னு " நா உங்கள அக்கான்னு கூப்டேன். நீங்க ஏன் என்னை தப்பு பண்ண கூப்டறீங்க அக்கா?"என்று கேட்க,

அவங்களோ நல்லா சிரிச்சுட்டு “என் கூட படுக்கறவங்கல முக்காவாசி பேரு என்னைய அக்கானு தான் கூப்டுவாங்க” என அவங்க சொல்ல,

தப்பிக்கறத்துக்காக "அக்கா ப்ளீஸ். உங்கள அக்காவா நினைக்கிறேன். தயவு செஞ்சு மறுபடியும் இப்படி கேட்காதீங்க அக்கா. கஷ்டமா இருக்கு"னு சொன்னேன். என் மனத்திற்கு தெரியும் நான் சொன்னது பொய் தான் என்று.

அவரின் கண்களில் நீர் தோன்றியது. ஏனோ சிறிது நேரம் என் கண்களை பார்த்தவள் எழுந்து செல்ல சடாரென்று அவள் கையை பிடித்து இழுத்தேன்.

அப்போது என்னை கடந்த. நபர் ஒருத்தர் “நைட் ஆயிட்டா பஸ் ஸ்டாண்டில நிறைய பேரு நாக்க தொங்க போட்டுட்டு சுத்துரானுங்க” என்று சொல்லி கொண்டே நகர்ந்தார்.
அது காதில் விழுந்தாலும் மனதில் பதியவில்லை. அப்போது என்னுள் தோன்றியது அவரின் அழுகை மட்டும் தான்.

"ஏன் அழுதிங்க?. அக்கா எதுக்கு இப்போ எந்திரிச்சு போறிங்க"னு கேட்டேன்.

“கைவிடுடா. நான் போகனும்” என்று அவர் சொல்ல,

"முடியாதுக்கா. நீங்க சொன்னா தான் விடுவேன்"என்று சொல்லி இன்னும் கைகளை அழுத்தி இழுக்க அமர்ந்தார்.

எனக்குள் இருந்த பயம் போயிருச்சு.
"ஏன்கா எந்திரிச்சு போனிங்க"னு கேட்ட அப்போ அழ ஆரம்பிச்சாங்க.

ஏன்கா அழறீங்கனு நான் கேட்டுகிட்டே இருந்தேன்.

அவங்க அழுகைய நிறுத்தவும். அவங்களோட ஃப்ரெண்ட் (இன்னொரு திருநங்கை) வந்தாங்க.

அவங்க “என்னடி ஆச்சு. எதுக்கு அழுதுருக்க. என்ன பண்ணான் இவன்” என்று கட்டை குரலில் கேட்க, மீண்டும் பயம் தோன்றியது.

"ஒன்னும் இல்லடி"என்று சொல்லி விட்டு என்னை பார்ததார்.

“நான் ஏன் அழுதேனு தான உனக்கு தெரியனும்” என்று என்னை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன்.

“என்னோட பேரு சுவேதா. என்னை சீண்டி பாத்தவங்க, வெரட்டி அடிச்சவங்க தான் அதிகம். அக்கான்னு கூப்டு கிண்டல் பண்ணினாங்க தான் அதிகம். நீ உரிமையோட பேசும் போது எனக்கு ஏதோ கஷ்டமா இருந்ததுச்சு” என்று சொன்னாங்க.

இதுவரைக்கும் யாரும் என்னை உடன்பிறப்பா‌ பாக்கல. நீ கூட விளையாட்டு பண்றன்னு தான் நினைச்சேன். ஆனா நீ சீரியஸா சொன்ன உடனே கஷ்டமா போயிடுச்சு" என்று சொல்ல, எனக்கு அப்படியே தூக்கிவாரி போட்டுச்சு.

அமைதியாய் இருந்தேன். அவர் தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவரின் தோழியும் அருகில் அமர்ந்தார்.

“என்னோட பேரு நிஷாந்த. என்னோட 13 வயசுல எனக்குள் இருக்கற பெண்மை குணம் வெளியே வர ஆரம்பிச்சது. தங்கச்சி ஓட டிரெஸ்ஸை எடுத்து போட ஆரம்பிச்சேன். அம்மா அப்பா ரெண்டு பேருமே அடிச்சாங்க. என் வீட்டிலயே அடைச்சு, ஏதோ ஒரு தெருநாய பாக்கற மாதிரி அருவருப்பா பாக்க ஆர்ம்பிச்சாங்க. ஒரு நாள் அப்பா என்கிட்ட வந்து வீட்டை விட்டு ஓடிரு.இல்லனா கொன்னுடுவேனு சொன்னாரு” என்று சொல்லி கொண்டே அவரின் கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்து போது அவரின் தோழியும் தன் கண்ணீரை தரையில் சிந்திக்கொண்டு இருந்தார்.

என் மனம் கனமாக மாறிக்கொண்டே இருந்தது.

"டீவி முன்னாடி இருந்த பணத்தை எடுத்துட்டு கொஞ்ச டிரஸோட வெளியே வந்துட்டேன். எங்க போனாலும் என்னை ஏதோ ஒரு மாதிரி பாத்தாங்க. அதோட அர்த்தம் அப்போ எனக்கு புரியல"னு சொன்னாங்க.

அதோட அர்த்தம் எனக்கு புரிஞ்சுது.

“அநாதையா நின்னப்போ சில பேரு சீண்டி பார்த்தாங்க. சில பேரு கைதி மாதிரி பாத்தாங்க. இன்னும் சிலபேரு அடிச்சு கூட விரட்டினாங்க. ரோட்டு ஓரத்தில படுத்து தான் தூங்கிவேன். அப்படி தூங்கும் போது தான் 3 பேரு என்னை தூக்கிட்டு போயி அவங்க பசிய போக்கீட்டு ஒரு எடத்துல தூக்கி வீசிட்டு போனாங்க” என்று சொல்லும் போது அவரின் குரலில் ஏற்பட்ட அந்த நடுக்கத்தை உணர முடிந்தது.

என்னால் பேச முடியவில்லை. என் கண்கள் மட்டும் குளமாக இருந்தது.

மேலே பேசிய அவங்க “நான் எந்திரிக்க கூட முடியாம கிடந்த அப்போ தான் இவ தான் என்னை பாத்துட்டு அவங்க இடத்துக்கு தூக்கிட்டு போனா. இன்னைக்கு நீங்க சொல்ல கூடிய ஒம்போது, உஷ்ஷு, அலி இந்த மாதிரி பல பெயரு சொல்ல கூடிய எங்களோட ஒடுக்கப்பட்ட சமூகத்தை பார்த்தேன். இத்தனை பேர் இங்க நம்மல மாதிரி இருக்காங்களானு ஆச்சரியம் பட்ட அந்தநேரத்தில வேணி அம்மா கிட்ட கூட்டிட்டு போயி மருந்து போட்டா இவ. இவ பேரு சுதா. என்னோட உயிர்தோழி. அன்னைக்கு இவ இல்லன்னா நான் இப்போ இல்ல” என்று சொல்லும் போது உதட்டில் ஒரு சிறு புன்னகை.

“அக்கா உங்க பேரு என்னக்கா” என்று நான் கேட்ட அப்போ அவரை‌ மனப்பூர்வமாக என் சகோதரியாக ஏற்று இருந்தேன்.

"கொஞ்ச நாள் கழிச்சு நானும் கைதட்டி பிச்சை எடுக்க போனேன். ஏன்னா அங்க இருக்கவங்களுக்கு தனியா தங்களோட தேவைகள பாத்துகறதே ஒரு போராட்டம் தான்.

கைத்தட்டி காசு கேக்கும் போதெல்லாம் மனசு முழுசும் அவ்வளவு வலியாக இருக்கும். என்ன பண்றது?
வயிறுனு ஒன்னு இருக்கே" என்று சொன்னார்.

“எங்களுக்கு வேலை தர யாரும் முன்வரவில்லை. ஓடி ஓடி அலைந்தாலும் அசிங்கமா பேசி வெளிய விரட்டி அடிச்சுருவாங்க” என்று சொன்னார் சுதா அக்கா.

“நாங்க எங்க போனாலும் எங்களுக்கு மதிப்பு இல்லை. மரியாதை கேட்கவில்லை. மனிதனாக நடத்த தானே கேட்கிறோம்” என்ற போது அவரின் குரலில் கோவத்தை காண முடிகிறது.

மீண்டும் தொடர்ந்த சுவேதா அக்கா " நான் முதலில் வேலை தேடி தான் சென்றேன். ஆனா யாருமே வேலை தரல. அடிச்சு துரத்துனாங்க. இன்னும் சில பேரு தப்பா நடந்துக்க பார்த்தாங்க. என்னடா இது வாழ்க்கைனு அழுத நாட்கள் அதிகம்" என்று கூறும் போது அவரின் முகத்தை கண் சிமிட்டாமால் பார்த்து கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நாள் கழிச்சு பிச்சை எடுத்தேன். வயிறு நிரம்பவில்லை. சென்ற இடத்திலெல்லாம் நான் திருநங்கை என்று தெரிந்தும் கூட அவர்களின் காம பசிக்காக நெருங்கினார்கள். தற்போது நான் ஒரு விபச்சாரியாக சுத்திட்டு இருக்கேன்" என்று சொல்ல அவரின் கண்ணில் வலியும் வேதனையையும் உணர முடிந்தது.

“எங்களுக்கு சாகுறதுல இஷ்டம் இல்ல. வாழ்வும் வழியில்ல. கடைசியா உடம்ப வித்து சாப்புட நிலமைக்கு வந்துட்டோம்பா” னு சுதா அக்கா சொல்ல அவரின் கைகளை பற்றினார் சுவேதா அக்கா…

ஏதோ நினைத்தவனாய் நான் “உங்க கஷ்டத்த போலீஸ் கிட்ட சொல்லலாமே. படிக்க பள்ளிக்கூடம் போகலாமே” என்று கேட்க அவர்களின் முகத்தில் குழப்பம் நிலவியதை காண முடிந்தது.

" எங்க இனத்துக்கு அந்த மரியாதை இல்ல. போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ள கூட விடமாட்டாங்க. சில நேரத்தில ப்ராத்தல் கேஸுல சும்மா இருக்கும் போது புடிச்சுட்டு போவாங்க. எங்களுக்கு என்னைக்குமே பாதுகாப்பா அரசாங்கமும் இல்ல. சட்டமும் இல்ல" என்ற கோபம் சுதா அக்காவின் வார்த்தையில் தெறித்தது.

" படிக்க எல்லாருக்கும் தான் ஆசை இருக்கு. ஆனா பள்ளி கூடத்துல சேத்துக்கனுமே. திருநங்கைகள் பள்ளிகூட படிச்சா ஸ்கூல் பெயர் கெட்டு போயிடுமுனு சேத்திக்க மாட்டாங்க"என்று சுவேதா அக்கா சொல்ல,

“அப்படி சேத்திகிட்டாலும் அவங்க படுற கஷ்டத்த சொல்ல முடியாதுப்பா” என்று சுதா அக்கா கூறினார்கள்.

“இந்த பொறப்பு எடுத்துட்டு பள்ளி கூடத்துல சேத்துனா கிளாஸ்ல தனி பெஞ்சு தான். யாரும் சேத்திக்க மாட்டாங்க. சின்ன வயசுல ப்ரெண்டா இருந்தவங்க கூட போக போக மாறிடுவாங்க. பாத்ரூம் போறது தான் பிரச்சினையே” என்றார் சுதா அக்கா.

" பள்ளி கூடத்துல பொண்ணுங்கல கிண்டல் பண்ணினா வாத்தியார் அடிப்பாரு. ஆனா எங்கள கிண்டல் பண்ணுறான்னு சொன்னா கூட எங்கள தான் திட்டுவாங்க" என்று சுவேதா அக்கா சொன்னார்கள்.

" பொண்ணுங்க எங்கள அருவருப்பா பாக்கறதும், பசங்க இடுப்ப புடுச்சு கிள்ளுறதும்னு பல கஷ்டத்த அனுபவிக்கறாங்க எங்க இனத்துக்கு ஆளுங்க". என்று சொன்னாங்க.

நாம இந்த சமூகத்தில இவங்கள எப்படி நடத்தீருக்கறோமுனு நல்லா புரிஞ்சுக்க முடிந்தது.

" எங்களுக்கு பாதுகாப்பு எங்கயுமே இல்ல. பிச்சை எடுக்கறத விட உடம்பு வித்து சாப்பிட்டா தான் ரெண்டு வேளையாவது வயிறு நிரம்பும். நாங்க இப்படி வந்துட்டோம்" என்று சுதா குரலை தாழ்த்தி சொன்னாங்க.

அந்த ஒரு நிமிடம் என் தொண்டை அடைத்தது. பேச முடியவில்லை.
மூவரும் அமைதியாக இருந்தோம்.

சரியா அந்த நேரத்தில் ஒருவர் வண்டியில் டீ வித்துட்டு வந்தாரு.
" அண்ணா இங்க வாங்க" என்று நான் சத்தமிட,
என்னருகே வந்து வண்டியை நிறுத்தி விட்டு அவர்களை பார்த்தார். என்னையும் பார்த்தார். அவரின் முகத்தை சுழித்து கொண்டார்.

“அண்ணா மூனு டீ” என்றேன்.

மூனு கப்பில் டீ பிடித்தார். நான் இரண்டை எடுத்து கொண்டு அவர்களிடம் கொடுத்து விட்டு எனக்கான டீயை வாங்கினேன்.

காசு கொடுத்த பின் வண்டில ஏறி உட்கார்ந்தவர் என்னை நோக்கி “தம்பி இதுக கூட ரொம்ப நேரம் இருக்காத. உன்ன அதுக இனத்துக்கு மாத்திரும். இல்லனா ரேப் பண்ணிடும்” என்று சொல்லிவிட்டு வேகமாக வண்டியை எடுத்துட்டு போனார்.

அது அவர்களின் காதிலும் விழுந்தது.

அவர்களின் அருகில் மீண்டும் அமர்ந்த போது சிரித்துக்கொண்டே சுவேதா அக்கா சொன்னாங்க “எங்கள இப்படி தான் இந்த உலகம் பாக்குது. எங்களுக்கும் வலி, உணர்வுகள், மனசு இருக்குதுன்னு யாருமே புரிஞ்சுக்க மாட்டீராங்க” என கூறினார்.

“அக்கா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்று கேட்க,

“கேளுப்பா‍” என்று சுதா அக்கா சொன்னாங்க.

நான் உடனே என் பாக்கெட்டில இருந்து 500 ரூபாவை எடுத்து நீட்ட, அவர்களின் முகம் சுருங்கியது.

“உங்க தம்பி கொடுக்கறக்கா. வாங்கிகோங்க ப்ளீஸ்” என்று சொல்ல அதை அப்படியே என் பாக்கெட்டில் திணித்தார் சுவேதா அக்கா.

“வேண்டாம்ப்பா. நீ இப்போ எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க மாட்டோம்” என்று சுவேதா அக்கா சொன்னாங்க.

"அதான் ஏன்? நான் உங்க தம்பி தானே. வாங்கிக்கோங்க"என்று கூற,

" உன்னால நாளைக்கு பட்டினி தான் நாங்க.ஆனா மனசுல நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கு" என சொல்லி விட்டு பெருமூச்சு விட்டார் சுதா அக்கா.

ஆனா அவங்கள தப்பா நினைச்சு, தப்பிக்க தான் அக்கா என்று நான் சொன்னதை நினைத்து போது மனசு மீண்டும் உறுத்துச்சு.

அப்போது ஒரு பெரிய வெளிச்சம்.
மூவரும் வெளிச்சம் வந்த திசைநோக்கி பார்த்தோம்.
ஒரு பேருந்து வேகமாக வந்து நின்றது.

சுவேதா அக்கா என்னை பார்த்து “உன் ‌ஊருக்கு போற பஸ்ஸா?” என்று கேட்டார்.
ஆமாம் என்று தலையசைத்தேன்.

“பாத்து போயிட்டு வா” என்று சொல்லிவிட்டு என் தலைமேல கைய வச்சு “நல்லா இருப்ப நீ” என்று இருவரும் ஆசிர்வாதம் செய்து விட்டு கிளம்பினார்கள்.

இரண்டு எட்டி தான் வச்சுருப்பாங்க. சட்டென்று திரும்பி சுவேதா அக்கா என்னை பார்த்து “உன் பேரு என்ன?” என்று கேட்க “பாரதி” என்றேன்.

“ஆணும் பெண்ணும் சமம் என்று சொன்ன பாரதி கூட மூன்றாம் இனத்தை மறந்துவிட்டாரே” என்று கூறி விட்டு நகர்ந்தார்கள்.

இருட்டில் அவர்கள் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தேன்…

பேருந்து பயணம் செய்யும் போதெல்லாம் சுவேதா அக்காவும் சுதா அக்காவும் தான் ஞாபகம் வருகிறார்கள்.

        - சேதுபதி விசுவநாதன்
1 Like

சுவடுகள் தெரியவில்லை

“ஏலே வேலுச்சாமி. வெளியே வாயா” என்று ஒரு குரல் வெளியிலிருந்து வந்ததை உணரந்த வேலுச்சாமி பயத்துடனே எழுந்து வெளியே வந்தார்.

புல்லட் பைக்கும், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து ஆறடி உயரம் கொண்ட இளைஞன் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்தார்.

“கடன் வாங்குன காசும் வரல. அதுக்கு வட்டியும் வரல. என்னதான்யா நினைச்சுட்டு இருக்க?” என்று அதட்டிய குரலுக்கு,

"ஐயா சாமி. பொறுத்துக்கோங்க. இந்த வெள்ளாமல எதுவும் நிக்கல.அடுத்த வெள்ளாம வந்ததும் கொடுத்தறனுங்க"என்று பயந்துகொண்டே கூறினார் வேலுச்சாமி.

“இததானயா இரண்டு வருசமா சொல்லுற. ஒழுங்கா காசுக்கொடு இல்லனா நிலத்த கொடு” என்று இளைஞனோ சத்தமிட,

கண்களில் நீர் தேங்க பேச முடியாமல் நின்றார் வேலுச்சாமி.

“ஐயா கொடுத்தறேனுங்க. ஒரு ரெண்டு மாசம் பொறுத்துக்கோங்க. எங்கயாவது வாங்கி கொடுத்தறேன்” என்று வேலுச்சாமி சொல்ல,

“என்னது ரெண்டு மாசமா? யோவ் விளையாடுறியா? நீயே இப்பவோ அப்பவோனு இருக்கற. ஒழுங்கா நாளைக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு போ!” என்று சொன்னான் இளைஞன்.

“ஐயா எனக்குனு இருக்கறது இந்த பூமியும், இந்த குடிசையும் தானுங்க. இதையும் கொடுத்துட்டு நான் எங்க போவேன் சாமி” என்று கண்ணீருடன் வேலுச்சாமி கேட்க,

“யோவ். உனக்கு பொண்டாட்டியும் இல்ல, புள்ளயும் இல்ல. நாளைக்கே நீ பொசுக்குனு போயி சேர்ந்துட்ட நான் யார்கிட்ட பணம் வாங்குறது? மரியாதையா வந்து எழுதி கொடு. இல்லனா நாளைக்கு நிலமும் இருக்காது. நீயும் இருக்க மாட்ட” என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் கிளம்பினான்.

அதே இடத்தில் அழுதுகொண்டே கீழே விழுந்தார் வேலுச்சாமி.

"உறவுகளும் கைவிடவே
உடையவளின் கரம்பிடித்தான்
உயிரணுவின் போராட்டத்தில்
உதிரத்தில் பிறந்தவனும்
உயிரை கொடியில் மரணிக்க
உயிரானவளும் உறைந்துவிட்டாள்
உலகை விட்டு மறைந்துவிட்டாள்"

தன் மகனையும் மனைவியையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று தன் சாவுக்காக ஏங்கிக் கொண்டு வாழ்ந்த மனுசன் வேலுச்சாமி.

நிலமும் மாடும் தான் தன் உறவாக எண்ணி வாழ்ந்தவர்.

ஓராண்டுக்கு முன்பு அந்த மாட்டையும் கடனுக்காக (பறி)கொடுத்துவிட்டார்.

மழையும் பொய்த்து விட, நிவாரணம் என்று அரசு கொடுத்ததை அதிகாரிகள் திருடி விடவும் வழியின்றி தவிக்கிறார் வேலுச்சாமி.

உணவு கூட உண்ணாமல் அழுதுகொண்டே இரவு பொழுதை கடந்துவிட்டார்.

பொழுதும் புலர்ந்தது.

ஒரு முடிவோடு அந்த இளைஞனின் வீட்டுக்கு சென்றார் வேலுச்சாமி.

“வாயா வாயா. உனக்காக தான் காத்துகிட்டு இருந்தேன். இந்த பத்திரத்தை படுச்சுட்டு கைநாட்டு போடு. அப்புறம் ஏமாத்தி வாங்கிட்டனு சொல்ல கூடாது ல” என்று கடன் கொடுத்தவன் சொன்னான்.

“நிலத்தை எழுதி கொடுத்துடறேனுங்க. ஆனா ஒரு உதவிங்க” என்று அவர் கேட்க,

“என்ன இன்னும் காசு வேணுமா?” என்று அவனும் கேட்க,

“இல்லைங்க ஐயா! அது என்ன உதவின்னா!” என்று அவர் இழுக்க,

“நீ என்ன கேட்க வரன்னு தெரியுதுயா. நீ அங்கேயே தங்கிக்க, அந்த நிலத்துலயே வேலை பாரு. சம்பாதிச்சு உன் பொழப்ப ஓட்டிக்க. நிலத்தை வாங்கிட்டு அடிச்சு தொறத்துற ஆளு நான் இல்ல. சந்தோஷமா எழுதிக்கொடு” என்று அந்த இளைஞன் சொல்ல, ஒரு நிமிடம் திகைத்து நின்றனர் வேலுச்சாமி.

சிறிது நிதானித்த வேலுச்சாமி, “ஐயா இந்த பூமி சின்ன வயசுல கஷ்டப்பட்டு நான் உழைச்சு வாங்குனதுங்க. ஊருக்கே சாப்பாடு போட்டவன் நான். இன்னைக்கு என் போறாத காலம் இந்த நிலையில கொண்டு வந்து விட்டுறுச்சு”

“எனக்கு ஒரே ஒரு ஆசை தானுங்க. இந்த மண்ணு தான் எனக்கு சோறா இருந்துச்சு. நான் செத்த அப்புறம் மண்ணுக்கு சோறா இருக்கனுமுனு நெனைச்சேன். அதனால” என்று இழுத்தவரின் கண்களில் கண்ணீரை கண்டான் இளைஞன்.

அவன் உள்ளம் இறக்கம் கொள்ளவில்லை.
"யோவ் நீ செத்து உன்னைய அங்க புதைச்சு சுடுகாட மாத்த சொல்லுறியா? நான் வேற‌ யாருக்கும் நிலத்தை விக்க வேண்டாமா?, ஒழுங்கா எழுதிக்கொடு. போனா போகுதுன்னு இருந்துக்கனு சொன்னா! ரொம்ப ஓவரா போற"என்று அந்த இளைஞன் திட்டிவிட,

எதுவும் பேச முடியாமல் கைநாட்டு வைத்து எழுதி கொடுத்தார் வேலுச்சாமி.

“யோவ் இந்தா 5000. செலவுக்கு வச்சுக்க. இது உன் நிலத்துக்கான காசு தான்” என்று இளைஞன் நீட்ட,

“வேணாம் சாமி. நீங்க தங்க இடம் கொடுத்து இருக்கீங்க. அது என் நிலம் அல்ல. அதனால் வாடகையா நினைச்சு வச்சுக்கோங்க சாமி” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டை நோக்கி நடந்தார் வேலுச்சாமி.

நடை தளர்ந்து வயதிலும் கூட நெஞ்சை நிமிர்த்தி மெல்ல மெல்ல, கண்களில் நீர் வழிய நடந்தார்.

குடிசையில் இருந்து நீரை குடித்து விட்டு தன் நிலத்தில் வேம்பு மர நிழல் படும் இடத்தில் போயி அமர்ந்தார் வேலுச்சாமி

சிறிது நேரம் கண்ணீர் வடிய கதறி அழுதார்.

தனக்கு துணையாக இருந்த நிலமும் போனதை எண்ணி எண்ணி மிகவும் உடைந்து போனார் வேலுச்சாமி.

“யோவ் பெருசு இந்த நிலத்தை இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதி கொடுத்திருந்தா இந்நேரம் அதுல கிடைக்கிற காச வச்சு ஏதோ பொழப்ப ஓட்டி இருக்கலாம்” என்று அந்த இளைஞன் சொன்னது ஒவ்வொரு நிமிடமும் வேலுச்சாமி காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

இந்த மண்ணுதான் சோறு போட்டுச்சு. இதை வித்து புட்டு கிடைக்கிற காசுல தான் நான் சோறு தின்னு வாழனும்னு அவசியமே இல்லை. அதுக்கு செத்தே போயிடலாம் என்று அவர் நினைத்து கொண்டு தன் வயல்வெளி முழுவதும் மெல்ல மெல்ல சுற்றி வருகிறார்.

காய்ந்து போன நிலத்தில் கட்டியாக மாறிய மண்ணை நினைத்தும், தான் இனிமேல் இதில் விவசாயம் செய்ய முடியாது என்றதையும் நினைத்து கதறி அழுதார்.

அவரின் கதறல் யாருக்கும் கேட்கவில்லை. ஆம் ஊரே காலி செய்துவிட்டு வெளியூர் சென்று பிழைக்க போன போது இவர் மட்டும் நிலத்தில் வேலை செய்தார்.

குடும்பம் இல்லை.ஊரார் இல்லை. நிலமும் இல்லை. அனாதையாக இருந்த கிழவனுக்கு இனி யார் தான் துணையோ?

வரப்பின் மீது அமர்ந்த வேலுச்சாமி நீண்ட நேர அழுகைக்கு பின்னர் தான் நேற்றே எடுத்த முடிவை செய்ய ஆயத்தமானார்.

மண்வெட்டி எடுத்து நிலத்தின் ஓரத்தில் ஓரடி ஆழம் கொண்ட குழியை வெட்டினார்.

அதில் படுத்துக்கொண்டு மேலே இருந்த மண்ணைக் கொண்டு தன்னுடைய உடம்பை மூடினார்.

கையும் முகமும் மட்டுமே மண்ணால் மூடாமல் இருந்தது.

சில நிமிடங்கள் கடவுளிடம் வேண்டினார். தன் இளைய பருவம் முதல் இந்த மண்ணோடு தான் கொண்ட காதலை நினைத்து பார்த்தார்.

தன் மனைவியின் மடியில் படுத்துக்கொண்டு அந்த வேப்ப மரத்தின் கீழே கதை பேசியதை நினைத்து பார்த்தார்.

ஒவ்வொரு பொழுதுகளை கடக்கும் போதும் இந்த நிலத்தில் தானே இருந்தோம். இப்போது இந்த நிலத்தோடே போவோம் என்று முடிவுக்கு வந்துவிட்டார்.

ஆனால் இது இப்போது அடுத்தவர் நிலம் என்ற எண்ணம் அவரை விட்டு செல்லவில்லை. தவறு என்று தெரிந்தும் செய்ய துணிந்தார்.

நிலத்தின் மீது அவ்வளவு காதல் அவருக்கு.

ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்தார். தன் வாயில் போட்டார். தன் முகத்தின் மீதும் மண்ணை அள்ளி போட்டார்.

கைகள் மட்டும் வெளியே இருக்க தன் மண்ணாசையில் மண்ணோடு மன்னராக முடி சூடி உயிரை கொடுத்தார்.

வாயில் இருந்த மண் தொண்டையில் இறங்காமல் மூச்சு விட முடியாமல் மெல்ல மெல்ல உயிர் பிரிந்தது. சந்தோஷமாக உயிர்விட்டார்.

இருப்பினும் அடுத்தவர் நிலம் ஆச்சே. நாளைக்கு வந்து எடுத்து வெளியே எறிந்து விட்டால் என்ற எண்ணமும் மனதின் ஓரத்தில் இருந்தது.

உயிர் உடலைவிட்டு சென்ற பின்னர் சில நிமிடங்கள் கழித்து சூறைக்காற்று வீசியது.

மேகம் கருகியது. மழை பெய்தது.

பெருமழை. யாருமே எதிர்பார்க்காத வகையில் காற்றுடன் மழை.

அந்த நிமிடம் தொடங்கி அடுத்த நாள் காலை வரை பெய்தது.

வயலில் தண்ணி தேங்கி ஓட, வேலுச்சாமியின் உடல் இருந்த இடத்தில் மண் நிரம்பியது.

இந்த மழையை தானே இரண்டு ஆண்டுகளாக கேட்டார் இவர். அப்போது பெய்து இருந்தால் இப்படி நடந்து இருக்காதே.

வாழும் போதாவது சந்தோஷம் தரவில்லை. செத்த பின்னராவது சந்தோஷமா இருக்கட்டும் என்று நினைத்து பெய்ததோ இந்த மழை.

வேலுச்சாமியின் ஆசை நிறைவேறியது சில துக்கங்களுக்கு பின்னர்.

ஒருவேளை அவர் இறந்திருந்தால் அவரை பார்க்க ஒருவரும் வந்திருக்க மாட்டார்கள். அனாதை பிணமாக சென்று இருப்பார்.

இன்று அவருக்கு அவரே இறுதி சடங்கை செய்துகொண்டார்.

அதே நேரத்தில் உணவு உற்பத்தி செய்யும் ஒரு உயிரும் சென்றுவிட்டது. இனி என்ன செய்வோம் என்று நினைக்க வைத்துவிட்டும் சென்றுவிட்டார்…

ஆனால் அந்த நிமிடம் அவர் அங்கு இருந்ததற்கான சுவடுகள் எதுவும் இல்லாமல் சென்றுவிட்டார்.

காலியான நிலம் மட்டுமே இருந்தது.

"பெய்யாத மழையன்று
பொய்திட்ட வேளையிலே
செய்யாத வேலையதை
செய்ததே இந்நாளில்

வேண்டிய நேரத்தில்
வேலுச்சாமிக்கு கிடைக்காமல்
வெந்துதணியும் போதினிலே
வெற்றிகண்டு என்ன பயன்

சோற்றுக்கு வழியுண்டு
சேற்றிலே காலுள்ளவரை
செத்தவிட்ட நிலத்தினிலே
சேகரிப்போம் சிலவற்றை"

         -சேதுபதி விசுவநாதன்