தமிழ் மதுராவின் சிறுகதைகள்

தமிழ் மதுராவின் சிறுகதைகள்
0

பெரியாச்சியம்மன்

ஓட்டை உடைசலுடன் வியாதிக்காரன் இருமுவது போல லொங்கடி லொங்கடி என்று நகர்ந்த பஸ் ஒரு வழியாக எங்கள் இருவரையும் அந்தக் குக்கிராமத்தில் இறக்கிவிட்டு அந்த மண்சாலையிலிருந்த புழுதியையம் கரியையும் எங்கள் கண்களில் சிதறவிட்டுக் கிளம்பியது.

நாங்கள் நாங்கள் என்றால் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை நான் பன்னீர் என்னுடைய தோழன் செவ்வாழை. நாங்கள் இருவரும் இறங்கியது மதுரையிலிருந்து ஒரு மணி நேரம் பஸ் பிரயாண தொலைவிலிருக்கும் செம்மலைக்கு. செம்மலைத்தான் செவ்வாழையின் சொந்த ஊர். அடுத்த பணி என்ன என்று தினவெடுத்த தோள்கள் கேட்டபோது விடையாக வந்ததுதான் செவ்வாழை சொன்ன தகவல். இறங்கி சிறப்பாக சம்பவத்தை முடிக்க வந்துவிட்டோம்.

“செவ்வாழை அப்பறம்… உங்க ஊரைப் பத்தி சொல்லு”

“ஒரு வாரமா பெரியாச்சியம்மன் கோவிலைப் பத்தி ஒரு வரி கூட விடாம சொன்னேன்ல… அதுக்கு மேல என்ன சொல்ல”

“உங்க உறவுக் காரங்களைப் பத்தி சொல்லு. அப்பத்தானே கலந்து பழக முடியும். கலந்து பழகுனாத்தானே சந்தேகம் வராது. சின்ன புள்ளைங்க இருந்தா சொல்லு மிட்டாய் கிட்டாய் தரலாம்”

“நிறுத்திக்கோ… நீ மைனர் பொண்ணை கற்பழிச்சுட்டு ஜெயிலுக்கு வந்ததெல்லாம் தெரியும். எங்க ஊரில் உன் வேலையைக் காட்டினா பெரியாச்சி சும்மா விடமாட்டா… அந்த மாதிரி நோக்கமிருந்தா சொல்லிடு இப்பயே நம்ம உறவை முறிச்சுக்கலாம்”

“என்னடா செவ்வாழை பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு… சரிடா நம்ம கூட்டு சேர்ந்து சம்பவத்தை சிறப்பா செய்யுறோம் அப்பறம் கிளம்புறோம் ஓகேயா?”

திருவிழா கிராமம் சொந்தக் காரர்களின் வருகையால் கலகலப்பாகவே இருந்தது. எங்களை அனைவரும் அன்பாக வரவேற்றனர். உணவு பிரமாதம். வெயில் தாழ செவ்வாழையை இழுத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினேன்.

இருவரும் நடக்கிறோம் நடக்கிறோம்… ஊரை விட்டு காட்டு பகுதியில் ரெண்டு கிலோமீட்டர் வரை நடந்துவிட்டோம் இருந்தும் கோவில் வரவில்லை.
“இது உங்க ஊர் கோவிலா இல்லை காட்டுக் கோவிலா… இவ்வளவு தூரம் நடக்க வைக்கிற”

“அந்த காலத்தில் எல்லாம் காட்டு பகுதிதான். திருவிழா சமயத்தில்தான் நடமாட்டமே இருக்கும். அதுக்கப்பறம் பூசாரி மட்டும் காலைல போயிட்டு இருட்டுறதுக்கு முன்ன திரும்பிடுவாரு”

வழியில் எங்கு பார்த்தாலும் ஆளுயரத்திலிருந்து இரண்டடி வரை அளவில் குதிரை பொம்மைகள். ஆங்காங்கே பாதி உடைந்தும், சாயம் போயும் மண்ணோடு மண்ணாகக் கலந்தும் சிதலமடைத்திருந்தது.

“இதென்ன இத்தனை குதிரை பொம்மை”

“இது மதுரை வீரனோடது”

“மதுரை வீரன் கோவிலும் இருக்கா”

“ஆமாம் பெரியாச்சியம்மனை காவல் காக்க வெள்ளையம்மா பொம்மியோட மதுரை வீரன பக்கத்தில் வச்சிருக்காங்க. திருவிழாவில் முதலில் மதுரை வீரனுக்கு பொங்க வச்சு மரியாதை செஞ்சு அனுமதி வாங்கிட்டுத்தான் பெரியாச்சிக்குப் படையல் போடுவாங்க”

பேசிக் கொண்டே கோவிலுக்கு வந்துவிட்டோம். வழியில் இருந்த குதிரை பொம்மைகளை பார்த்து பழைய கோவிலாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நன்றாகவே பராமரித்திருந்தார்கள். சுண்ணாம்பு அடித்து புது மெருகோடு சுத்தமாக இருந்தது கோவில்.
எங்களிடம் பூசாரி கதை சொன்னார் “அந்த காலத்தில் ஒரு ராஜாவும் ராணியும் கொடுங்கோலர்களா இருந்தார்களாம். ராணி மாசமா இருந்தப்ப ஒரு ஜோஸ்யக்காரன் பிறக்கப்போற குழந்தையால் உங்க உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டானாம். அதனால அந்தக் குழந்தையைக் கொன்னுடனும்னு முடிவு செஞ்சானாம் ராஜா. காட்டு வழில பயணம் செஞ்சப்ப ராணிக்கு பிரசவ வலி வந்துடுச்சு. அப்ப ராணிக்கு பிரசவம் பாத்தவதான் பெரியாச்சி.
குழந்தையை ராஜா கொல்லப் போறது தெரிஞ்சு ராஜாவைக் கொன்னவ, ராணியும் அதே முயற்சி செஞ்சதைக் கண்டு ராணியையும் கொன்னு குழந்தையைக் காப்பாத்தினாளாம். அன்னைலேருந்து அங்கிருந்த மக்களுக்கு தெய்வமா மாறிட்டா.
இதைப் பாருங்க குழந்தையைக் காப்பாத்த சொல்லி, குழந்தைகளை வருத்தினவங்களை தண்டிக்க சொல்லியும் எத்தனை பேர் பிரார்த்தனை செஞ்சுட்டு போயிருக்காங்கன்னு”

“இதெல்லாம் உண்மையா சாமி” நான் கேட்டது அவருக்குக் கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும்.

“என் பிள்ளையைப் பாத்துக்கோன்னு வேண்டிகிட்டா அந்தத் தாய் தகப்பன் கூட பிள்ளைகள் விஷயத்தில் தப்பான முடிவெடுக்க முடியாது. பெரியாச்சி அவங்களை சுட்டுப் பொசுக்கிடுவா”

ஆனால் கருவறையில் குத்துவிளக்கொளியில் பெரியாச்சியம்மனைப் பார்க்கும் போது தான் எதற்கும் பயப்படாத எனக்கே மனதோரம் ஒரு பீதி கிளம்பியது.

காலில் ஒரு ஆணை மிதித்துக் கொன்று, மடியில் ஒரு பெண்ணைப் படுக்கவைத்து அவளது வயிற்றைக் கிழித்து ரத்தத்தை முகமெங்கும் பூசி செந்தூர வண்ணத்தில் ஒளிர்ந்தது அம்மனின் முகம். அதற்கு நேர் மாறாக மென்மையாக ஒரு குழந்தையை இன்னொரு கரம் பிடித்திருந்தது.

“அப்பா… என்னடா இந்த சாமி இப்படி ரத்த மயமா இருக்கு. அந்த இருட்டில் பாக்கும்போது எனக்கே ஒரு மாதிரி திகிலா இருந்துச்சு”

“பயம்மா இருக்குல்ல… எனக்கும் அதேதான். ஏண்டா இந்த சம்பவத்துக்கு ஒத்துக்கிட்டோம். உன்கிட்ட ஏன் இந்த கோவிலைப் பத்தி சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்னு எனக்கே தெரியல” புலம்பினான்.

“அதை விடு… திருவிழா அன்னைக்குப் போட்ட நகையெல்லாம் அன்னைக்கு முழுசும் அம்மன் கழுத்தில் இருக்குமே. காவலுக்கு யாராவது நிப்பாங்களா”

“அதான் மதுரைவீரன் இருக்காரே. வீரனை மீறி யாரும் எதுவும் செய்யமுடியாதுன்னு எங்க ஊரு ஆளுங்களுக்கு ஒரு நம்பிக்கை”

எகத்தாளமாக சிரித்தேன். நேத்து கூட கோவிலில் புள்ளையாருக்கு சூடம் காட்டிட்டு வர்ற நேரத்தில் மாரியாத்தாவோட மூக்குத்தியையும், தாலியையும் திருடிட்டு போயிட்டானாம். உலகம் அவ்வளவு வேகமா போயிட்டு இருக்கு. இதில் மதுரைவீரன், குதிரை வீரன்னு முட்டாள்தனமா பேசிகிட்டு.
ஆனால் இவனுங்க இந்த மாதிரி முட்டாளா இருக்குறதாலதான் நம்ம ஈஸியா கொள்ளையடிக்கப் போறோம்"

திருவிழா மறுநாள் சிறப்பாகவே நடந்தது. பெண்கள் குலவை சத்தமிட்டபடி பொங்கல் வைத்தனர். அவரவர் வசதிக்கேற்றபடி மண் பொம்மைகளை வாங்கி வைத்து அதற்கு அலங்கரித்து பூஜை செய்தனர்.
குதிரை பொம்மைகள் மதுரை வீரனுக்கு, கால்நடைகள் நலம் பெற மாடு பொம்மைகள், பூச்சி பொட்டுக்களால் தொல்லை ஏற்படக்கூடாதென்று பாம்பு, தேள் பொம்மைகள், வியாதிகள் குணம் பெற கண், கால் என்று மண்ணில் செய்த உருவங்கள், குழந்தை வரம் வேண்டி மண் பொம்மைகள் என்று பக்தர்கள் அனைவரும் சாமிக்கு ஏதோ தன்னாலானதை செய்தனர்.

அன்று இரவுதான் எங்களது வேட்டை நாள். ஆனால் கடைசி நேரத்தில் செவ்வாழை ஜகா வாங்கிவிட்டான்.
“எனக்கு பெரியாச்சியைப் பாதத்திலிருந்து பயக்குமாருக்குடா. அதுவும் நீ ரேப் பண்ணியே அந்தப் பொண்ணோட அம்மா அப்பா ஊருக்கு வந்து பெரியாச்சிகிட்ட வேண்டிட்டு போயிருக்காங்களாம். அதைக் கேட்டதிலிருந்தது வயத்தை கலக்குது. வேணாம் பன்னீரு”

“மூடு … எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்” என்றபடி இரவு வேட்டைக்குக் கிளம்பினேன். பௌர்ணமி சமயம் என்பதால் நிலவொளி தாராளமாய் இருந்தது. அந்த காட்டுப் பகுதிக்கு யார் வருவது என்று அனைவரும் எண்ணியதால் யாரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. பார்க்கும் இடத்திலெல்லாம் காலையில் காணிக்கையாக வைத்த பொம்மைகளைத் தவிர வேறொன்றும் இல்லை.

கோவிலுக்கு சென்றதும், அங்கு அம்மன் மேலிருந்த நகைகளை லவட்டியதும் இத்தனை சுலபமாக இருக்கும் என்று நானே எதிர் பார்க்கவில்லை.
வெளியே வந்தேன். சுவர் கோழியின் சத்தத்தையும், ஆந்தையின் அலறலையும் எங்கோ ஒலித்த நரியின் ஊளையையும் தவிர அச்சமேற்படுத்தும் வேறொன்றும் இல்லை. அப்படியே நடந்து கோவிலைத்தாண்டி மதுரைவீரன் கோவிலில் அடிஎடுத்து வைத்த சமயம் வீர்றென்று ஒரு ஒலி கட்டாரி பறந்து என் காதினை உரசியவண்ணம் சென்று மரத்தில் இறங்கியது.
சட்டென்று குனிந்தவன் அதன் பின் எதிர் திசையில் வளைந்து வளைந்து வேகமாக ஓடத் துவங்கினேன். என்னைப் பின் தொடர்ந்தது குதிரையின் குளம்படி ஓசை அதன் பின் கனைக்கும் சத்தம். முதலில் ஒலித்த ஒரு குளம்படி இரண்டு மூன்று என்று பெருகி பின்னர் நூறு குதிரைகள் சேர்ந்து ஓடி வருவது போல ஓசை கேட்க, அதற்கு மேல் போக வழியின்றி மலை ஆரம்பித்திருக்க பயத்துடன் திரும்பினேன். என்னை சுற்றி வளைத்தன நூற்றுக் கணக்கான குதிரைகள். அவற்றின் பின்னே தூரத்தில் தெரிந்த குதிரையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு ஒருவன். அவனைப் பார்க்கக் கூட முடியாது மயங்கி விழுந்தேன்.
மறுநாள் யாரோ முதுகில் சுளீரென அடிக்க முகம் சுளித்துக் கொண்டு எழுந்தேன்.
இரண்டு மூன்று பேர் அருகில் பேசிக் கொண்டிருந்தனர்.
“நேத்தும் கூட அம்மனோட நகையை மதுரை வீரன் சன்னதியிலிருந்து எடுத்திருக்காங்க. அப்ப யாரோ திருடன் வந்திருக்கான்னு தானே அர்த்தம்”
அவர்கள் பேசுவதைக் கூட கவனிக்க விடாமல் என் காதருகே சிறுவர்கள் சிலர் கத்தினர். எரிச்சலோடு கைகளால் அவர்களைத் தள்ளிவிட முயன்றால் கைகளை என்னால் அசைக்கவே முடியவில்லை. ஏன் கால்களைக் கூட, அவ்வளவு ஏன் மரக்கட்டை போல இருந்தேன். எனக்கு என்னாயிற்று.
சிறுவர்களோ எனது கேள்வியைப் பொருட்படுத்தாது “அப்பா நேத்து இருபது குதிரை தானப்பா இருந்தது இன்னைக்கு இருபத்தோரு குதிரை இருக்குப்பா. எப்படிப்பா புது குதிரை வந்தது. போன தடவையும் இப்படித்தான் நம்ம வச்ச குதிரைகளை விட அதிகமா நாலு குதிரை இருந்தது”

“வேண்டுதலுக்காக யாராவது சொல்லாம கொள்ளாம வந்து வச்சுட்டுப் போவாங்கடா… இருட்டப் போகுது வா கிளம்பலாம்” என்று கிளம்பினார்கள் அனைவரும்.

“இந்தக் குதிரையைப் பாத்தாலே ஆத்திரம் ஆத்திரமா வருது” என்றபடி என்னை ரெண்டு உதை உதைத்துவிட்டு சென்றாள் சிறுமி ஒருத்தி. உயிர் போகும் வலியில் என்னால் வாயைத் திறத்து கத்தக் கூட முடியவில்லை.
முகத்தின் ஒரு பகுதியிலிருந்த கண்களால் பக்கத்தில் பார்த்தேன் வரிசையாக மண் குதிரைகள் அப்படியே அசையாமல் நின்றிருந்தன. அவற்றுடன் நானும்.

1 Like

சிலிகான் மனது

தூ ரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி . பலவண்ண பூக்களிடமிருந்து எல்லா திக்கும் பரவிய நறுமணம் என்று காண்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம்.

இவைகளுக்கு மத்தியில் அந்த சூழ்நிலைக்குப் பொருந்தாதவாறு இருந்த மிகப் பெரிய அல்ட்ரா மார்டர்ன் கட்டிடம். ஆனால் இவ்வளவு பெரிய கட்டிடமிருந்தும் அங்கு ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.

அந்தக் கட்டிடத்தின் பன்னிரெண்டாவது மாடியிலிருந்து அவன் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கதைகளில் வரும் கதாநாயகர்களுக்கு இலக்கணம் போன்றிருந்தான். ஆறடி உயரம், அழகிய உருவம், கிரேக்க சிலை ஒவ்வொரு இஞ்சும் பார்த்துப் பார்த்து செதுக்கிய தேகம்.

திறந்திருந்த ஜன்னலின் வழியே வந்த காற்று அவனுடன் உறவாடி அவனது தலையைக் கலைத்தது. அந்த சில்லென்ற தென்றலை அனுபவிக்கவில்லை அவன். கதவைத் திறந்து யாரோ வரும் சத்தம் கேட்டு மெதுவாகத் திரும்பினான்.

அவன் எதிர்பார்த்தபடியே அவள் தான் உள்ளே நுழைந்தாள். அவள் என்றால் குழலி. அவனுக்குத் தெரிந்தவரை அவள் அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் ஆராய்ச்சியாளர். ஐந்தரை அடி உயரம், மாந்தளிர் உடல், நீள்வட்ட முகம், சிரிக்கும் போது குழி விழும் கன்னம். டாக்டர் ஈஸ்வரனின் ஆராய்ச்சியில் அவருக்கு உதவியாளினியாக இருக்கிறாள். அபார அறிவுத்திறம் கொண்டவள்.

குழலி தனது மானிட்டரை உயிர்பித்தாள்.

“இன்று நீ ரொம்ப லேட் குழலி”

“இல்லையே சரியான நேரம் தானே”

“இல்லை முன்னூற்றி எழுபது வினாடிகள் கிட்டத்தட்ட ஆறு புள்ளி பதினேழு நிமிடங்கள் தாமதமாக வந்திருக்கிறாய். ஏன்”

“வீட்டிலிருந்து நடந்து வர லேட்டாச்சு”

“உன் வீட்டிலிருந்து சரியான நேரத்துக்குக் கிளம்பி விட்டாய். அடுத்த பஸ்ஸை பிடித்திருந்தால் இன்னும் எட்டு நிமிடங்கள் அதிகமாகப் பிடித்திருக்கும்”

“நீ இந்த மாதிரி கேள்வி கேட்கக் கூடாது. இதெல்லாம் உன் டிசைனில் இல்லையே. எங்கிருந்து கத்துகிட்ட” அவனருகே சென்று அவனது சட்டைக் காலரை சரி செய்தாள். காது மடல்களில் தெரிந்த மாடல் நம்பரை ஒரு முறை சரி பார்த்தாள்.

“தெரியல… நம்ம ரெண்டு பேரும் பீச் போலாமா…”

குழலியின் முகத்தில் சிறு அதிர்ச்சி. “பீச்சா…”

“அன்னைக்கு யாருக்கும் தெரியாம சீக்ரெட்டா என்னைக் கூட்டிட்டு போனியே அதுமாதிரி இன்னொரு தரம் கூட்டிட்டு போறியா… நம்ம ரெண்டு பேரும் விரல்களை கோர்த்துட்டு அன்னைக்கு நடந்த மாதிரி நடக்கலாமா…”

“நீ தினமும் மெமரி எரேஸ் பண்ணும்போது அந்த நினைவுகளும் சேர்ந்து அழிஞ்சிருக்குமே…”

உதட்டைப் பிதுக்கினான். குழலியின் முகத்தில் பதற்றம். " ச்சே… தினமும் ப்ரோக்ராம் சரி பார்ப்பேனே. இது மட்டும் எப்படி மிஸ்சாச்சு "

வெளியே டாக்டர் ஈஸ்வரனின் காலடி சத்தம் கேட்டதும் தனது இருக்கைக்குத் திரும்பினாள்.

"ப்ளீஸ் ஈஸ்வரன் கிட்ட… "

“சொல்ல மாட்டேன் பயப்படாதே” உறுதியளித்தான்.

உள்ளே நுழைந்த ஈஸ்வரன் சற்றே குள்ள உருவமாக, வெள்ளிக் கம்பி முடியுடன், சற்றே பெரிய உருளைக்கிழங்கு போலிருந்தார்.

"குட்மார்னிங் குழலி… "

“குட்மார்னிங் டாக்டர்…”

“என்ன குழலி இன்னைக்கு உன்னோட பேவரெட் நெஸ்காபி தீர்ந்து போச்சா… ப்ரூ எடுத்துட்டு வந்திருக்க” என்றதும் வியப்புடன் பார்த்தாள் குழலி.

“எப்படி டாக்டர் என் கப்பிலிருக்கும் காப்பியைப் பார்த்தே அது என்னன்னு சொல்லிட்டிங்க”

“என் மோப்ப சக்தியை குறைச்சு எடை போடாதே… நேத்து நம்ம டீம் ராகவன் கொண்டு வந்த வத்தக் குழம்பை மோப்பம் பிடிச்சே என்னென்ன வத்தலைப் அவன் அம்மா போட்டிருக்காங்கன்னு கண்டுபிடிச்சுட்டேன்”

“நீங்க ஒரு ஜீனியஸ் ஸார்”. இந்த மோப்ப சக்தி இவளை வெகு சீக்கிரம் மாட்டிவிடப் போகிறது என்று நம்பினாள்.

அவளது கூற்றை ஒரு பெருமிதப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர் அவர்கள் உரையாடலை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தவனிடம் திரும்பினார்.

“என்ன பைய்யா நீ டெஸ்ட்டுக்கு ரெடியா…”

“என்ன டெஸ்ட் டாக்டர்”

“அதை பிறகு சொல்கிறேன்” என்சைக்ளோபீடியா வகையாரா தலையணை சைஸ் புத்தகங்களில் இருக்கும் வரிகள் நம்பர் அனைத்தையும் கேள்வி கேட்டு திருப்தியுற்றார்.

“நேற்று என்ன செய்தாய் பையா”

“எனக்கு நினைவில்லை”

“நினைவில்லையா இல்லை தெரியவில்லையா…”

“தெரியவில்லை”

“குட்… உன்னை அப்படித்தான் வடிவமைத்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இரவு பன்னிரண்டு மணிக்கு நீயே உனது மெமரியை எரேஸ் செய்துகொள்ளும்படி ப்ரோக்ராம் செய்துள்ளோம். வெல்டன் குழலி”

குழலி முகத்தில் இன்னமும் பதற்றம் மறையவில்லை.

“எதுக்காக இந்த டெஸ்ட்” அவன் ஈஸ்வரனிடம் கேட்டான்.

“மனிதர்கள் இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார்கள். அவர்களுக்குத் தேவையான கம்பனி அவர்கள் விரும்பும் விதத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். பெண்கள் விரும்பும் தோற்றத்திலும், அவர்கள் எதிர்பார்க்கும் குணாதிசயத்திலும் உன்னை உருவாக்கி இருக்கிறோம். அதே போல ஆண்கள் விருப்பத்திற்கேற்ப தனியாக ஒரு பெண் ரோபாட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்”

“இவை மட்டும்தானா”

“இது மட்டுமில்ல இன்னும் பல விஷயங்களுக்காக சிந்தித்து ஆபத்து காலத்தில் மனிதனை விடப் பிரமாதமாக யோசித்து செயலாற்றும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் எங்களது குழு மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறது”

"இந்த டெஸ்ட்டில் நான் பெயில் ஆனால் என்ன செய்வீர்கள் டாக்டர். எனது மாடல் டிஸ்கண்டினியு செய்யப்படுமா. என்னை டிஸ்மாண்டில் செய்திருவிங்களா… காயலான் கடையில் போடுவிங்களா… "

“பையா… நீதான் பாசாகிவிட்டாயே… இது எதுக்கும் இப்ப அவசியமில்லை. சந்தோஷமாக இரு”

“ஆனால் சந்தோஷப் படுவது எப்படி என்று தெரியவில்லையே…”

“இந்த நொடி என்ன செய்யணும்னு தோணுதோ அதை செய்”

“நன்றி டாக்டர் அப்போ நான் அன்னைக்கு மாதிரியே குழலியின் கைகளைப் பற்றி பீச்சில் நடக்க ஆசைப்படுறேன்”

"வாட்… " ஈஸ்வரனின் முகத்தில் அதிர்ச்சி.

“குழலி என்ன நடக்குது இங்கே… நான் என் ஆராய்ச்சிக்கு உன்னை உதவியா இருக்க சொன்னா நீ உன் மனசு தோணின என்னன்னமோ செய்திருக்க…”

“டாக்டர்…” குழலி அழுதுவிடுவதைப் போல இருந்தாள். ஈஸ்வரன் விட்டால் அவளைக் கொன்றே விடுவதைப் போலக் கோபத்தில் கொதித்தார்.

கட்டளைகள் எதுவும் எதிர்பார்க்காமல் ஈஸ்வரனை நெருங்கினான் அவன்.

“டாக்டர் குழலியை என் கண்முன்னாடி திட்டினால் என்னால் பொறுத்துக்க முடியாது”

“வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன்… நீ யாரு மேன் இதை சொல்ல”

“நான் விவேக். வயது முப்பது. குழலியோட பாய்பிரெண்ட்”

“ஓ காட்… குழலி இறந்து போன உன் லவ்வரின் நினைவுகளை என் அனுமதியில்லாம இவனுக்கு புகுத்தியிருக்க… இது ஒரு இல்லீகலான விஷயம்னு உன் மரமண்டைக்கு எப்படி உரைக்காம போச்சு”

பதற்றத்தில் குழலிக்கு அதீதமாக வியர்க்க ஆரம்பித்தது. “தெரியாம செய்துட்டேன் டாக்டர்… இப்ப என்ன செய்றது…”

“நாசமா போறது… இதுக்கு இந்த நினைவுகள் மட்டும் எப்படி மறக்காம இருக்கு”

“விவேக் பீச்சில் நடக்கும்போது கீழ விழுந்துட்டான் டாக்டர். அதில் அவன் தலைல லேசா அடிபட்டுச்சு. இந்த நினைவு அழியாம இருக்குறதுக்கு ஒரு வேளை அது காரணமா இருக்குமோ”

"டாமிட்… இதை ஏன் என்கிட்டே உடனே சொல்லல. உன்னையெல்லாம் யாரு வேலைக்கு வர சொன்னா… பேசாம படிச்சுட்டு குடும்பத் தலைவியா செட்டில் ஆக வேண்டியதுதானே… என் கழுத்தை அறுத்துட்டு… " காட்டுக் கத்தல் கத்தினார் ஈஸ்வரன்.

“இன்னொருவார்த்தை குழலியைப் பத்திப் பேசினால்” என்றவாறு ஈஸ்வரனின் அருகில் வந்த விவேக் அவரது கழுத்தைப் பிடித்தான்.

ஈஸ்வரனின் கண்களில் பீதி. “டாக்டர் இப்போது உங்கள் கண்களில் தெரியும் அந்த உணர்வுக்குப் பெயர்தான் பயமா…” என்றான்.

“குழலி டெர்மினேட்…” என்று கத்தினார் ஈஸ்வரன்.

“டாக்டர் டெர்மினேட் செய்தால் இவன் மட்டுமில்ல இந்த பில்டிங்கில் இருக்கும் எல்லா மாடல்களும் செயலிழந்து விடும்”

“பரவால்ல செய்டி” உறுமினார் ஈஸ்வரன்.

“அஸ் யூ செட் டாக்டர்” என்றபடி எமெர்ஜென்சிக்கு அமிழ்த்தும் டெர்மினேட் பட்டனை அழுத்தினாள் குழலி.

கண்களிலிருந்த சர்கியூட்டில் புகை வர அப்படியே சிலையானான் விவேக். தொப்பென கீழே விழுந்தார் ஈஸ்வரன்.

அங்கிருந்த கேமிரா முன் நின்ற குழலி தொடர்ந்தாள்.

"டீம் இன்னைக்கு டெஸ்ட் ரிசல்ட்டில் மாடல் 3 விவேக் பாஸ். காதல், வேகம், வீரம் எல்லாம் கரக்டான ப்ரோபோர்ஷனில் ப்ரோக்ராம் பண்ணிருக்கோம். அதுவும் காதல் உணர்வைத் தூக்கலாகவே கலந்திருக்கிறோம். பிடிச்ச பொண்ணுக்காக உண்மையை மறைக்கிறது, அவளுக்கு ஆபத்துன்னா போராடுறதுன்னு பெண்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பக்கா ட்ரீம் பாய். சோ இந்த மாடல் நல்லாவே விற்பனையாகும்.

மாடல் 4 ஈஸ்வருக்கு இந்த அளவுக்கு மோப்ப சக்தி தேவையில்லை. பயம் கரெக்ட்டா இருக்கு. மனிதர்களை மாதிரி சுயதம்பட்டம் அடிக்கிற குணம் இருந்தாலும் இன்னும் உணர்வுகளை சரியா ஹேண்டில் பண்ண முடியல. இந்த மாதிரி ஹை பிரஷர் போது அதோட சர்கியூட் சூடாகிடுது. சோ ரீமாடல் செய்து அடுத்த வார டெஸ்ட்டுக்கு தயார் பண்ணுங்க" என்றபடி தனது இருக்கையை நோக்கி நடந்தாள் அந்த ப்ராஜெக்ட்டின் ஹெட் குழலி.

1 Like

வில்லா 666

கு யில் கொஞ்சும், மரங்கள் அடர்ந்த பாதையில் நடப்பதே சுகானுபவமாக இருந்தது டயானாவுக்கு. எள் விழுந்தால் எண்ணெயாகும் அளவுக்கு ஜன நெருக்கடி மிகுந்த இந்த மாநகருக்கு அருகே இப்படி பசுமையான சோலைகள் நிறைந்த குடியிருப்பா… பணத்தால் எதையும் வாங்கலாம்… நீண்ட முயற்சிக்குப் பின் அது இப்போதுதான் அவளுக்குக் கை கூடியிருக்கிறது. குழந்தையை ப்ராமில் வைத்துத் தள்ளிய படியே குடியிருப்பை சேர்த்த தோட்டத்தில் காற்றாட நடந்தாள்.

“ஏம்மா… கொஞ்சம் நில்லு” என்றபடி வியர்க்க விறுவிறுக்க அவளருகில் வந்தார் அந்த வயதான பெண்மணி.

“நீதான் புதுசா 666ஆம் நம்பர் வீட்டுக்குக் குடிவந்தியா”

“ஆமாம் ஆன்ட்டி”

“எங்க யாருகிட்டயாவது விசாரிச்சுட்டு வந்திருக்கப்படாதோ… பாவம் கைக்குழந்தை வேற…”

“அதுக்கென்ன…”

“அந்த வீட்டில் ஒரு பொண்ணு இருந்தா. அவ வீட்டுக்காரன் வெளியூர்ல வேலை பாத்தான் போல. அவளுக்குக் குழந்தை இல்லை, சொந்தக்காரங்களும் இல்லை. ஒரு நாள் டிபிஷன்ல முட்டாள்தனமா தற்கொலை பண்ணிக்கிட்டா”

“ம்…” என்றாள் சுவாரஸியமின்றி.

“உனக்கு முன்னாடியே இதெல்லாம் தெரியுமா…”

“தெரியுமே… நான்தான் இந்த வீட்டுக்கு வரணும்னு அடம் பிடிச்சு வந்தேன்”

“அப்படியா…” அந்தப் பெண்மணிக்கும் அவளுடன் பேச சுவாரஸ்யமில்லை.

“உனக்கு இந்தப் பேய் பிசாசு நம்பிக்கை” தொடர்ந்து கேட்டார்.

“சுத்தமா கிடையாது…” என்று கூறி முற்றுப் புள்ளி வைத்தாள்.

“உனக்கு இல்லைன்னாலும் சொல்ல வேண்டியது என் கடமை அந்த வீட்டில் டக் டக்குன்னு என்னமோ சத்தம் கேட்குதுன்னு சொல்லிக்கிறாங்க”

“நீங்க கேட்கலை இல்லையா”

“நான் கேட்கல இருந்தாலும் ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று எச்சரித்துவிட்டு நடையைக் காட்டினார்.

டயானா அவர் சென்ற திசையைப் பார்த்து சிரித்துக் கொண்டாள். ப்ராமில் குழந்தை அஜயை வைத்துத் தள்ளியபடியே அவளது வீட்டை நோக்கி நடந்தாள்.

“என்ன ஒரு அழகான, அம்சமான வில்லா. இதை வாங்க பல நபர்கள் போட்டி போட்டு முடியாமல் கிளப்பி விட்டதே பேய் நாடகம். இந்தப் பொம்பளை இது மாதிரி எத்தனை பேருகிட்ட சொல்லுச்சோ” என்று புலம்பிய வண்ணம் வீட்டை அடைந்தாள்.

கதவைத் திறந்து உள்ளே வந்ததும் அந்த சத்தம் கேட்டது ‘டக் டக்’ என்னவாயிருக்கும் என்றபடி ஒவ்வொரு அறையாகப் பார்த்தவள் வீட்டின் பின் கதவு சரியாகத் தாள் போடாமல் காற்றில் அடிப்பதைக் கண்டு அதனை இழுத்துத் தாள் போட்டபின் விழுந்து விழுந்து சிரித்தாள்.

"பேயாவது பிசாசாவது… அந்தம்மாவுக்கு ஒரு விஷயம் தெரியல… அவ தற்கொலை செஞ்சு செத்து போனதே எனக்கும் அவ கணவனுக்கும் குழந்தை பிறக்கப் போகுதுன்னு தெரிஞ்சப்பறம் தான். இன்னொரு விஷயம் இந்த ரகசிய உறவை அவ கிட்ட போட்டுக் கொடுத்ததே நான்தான். அவ செத்ததும் கல்யாணம் செய்துட்டு இந்த பங்களாவுக்கே குடிவர அவரை போர்ஸ் பண்ணதும் நான்தான்.

இது புரியாம என்னை எச்சரிச்சுட்டுப் போறா…

பேய் வந்து கதவைத் தட்டுதாம்… நல்ல கட்டுக்கதை… இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்துட்டு வில்லாவைக் காலி பண்ணிடுவேனா"

மீண்டும் அடக்கமாட்டாத சிரிப்பு அவளைத் தொற்றிக் கொண்டது.

அப்போது மறுபடியும் அந்த சப்தம் கேட்டது ‘டக் டக்’.

இன்று அதன் மூலகாரணத்தைக் கண்டறிந்துவிடும் நோக்கத்துடன் சத்தம் வரும் திசையை ஊகித்து நடந்தாள். அது அவளை இழுத்து சென்றதோ யாரும் உபயோகப்படுத்தாத பின் கட்டு அறைக்கு. அதன் கதவைத் திறந்தாள். சுற்றிலும் கண்ணாடி பாதிக்கப்பட்ட சுவர். ஏதோ ஒரு கண்ணாடி சுவற்றிலிருந்துதான் அந்த சத்தம் கேட்கிறாற்போலத் தோன்றியது.

ருள் கவிழ்ந்த இரவு நேரம். “டிரிங் ட்ட்ரிங்” என்று அலறியது லேண்ட் லைன்.

மெதுவாக நடந்து சென்று போனை எடுத்தாள்.

“ஹாய் டியர். கிளம்பிட்டேன். டின்னர் ரெடியா”

மறுபடி அந்த சத்தம் ‘டக் டக்’ அவளின் பார்வை அந்த அறையில் விழுந்து மீண்டது.

“எதுவும் சமைக்கலைன்னா விடு ரெண்டு பேரும் ரொமான்டிக் டின்னர் போலாம்” மறுமுனையில் கொஞ்சினான் கணவன்.

“அப்பவே ரெடி. ரொமான்டிக் டின்னர் வீட்டிலேயே வச்சுக்கலாமே”

“வந்துட்டே இருக்கேன் டார்லிங்”

இருமுனையிலும் முத்தங்களால் போன் எச்சிலானது.

வீட்டை அலங்கரித்தவள் தன்னையும் அழகுபடுத்திக் கொண்டாள்.

குழந்தை வீறிட்டு அழத் தொடங்கினான். அவனருகே சென்றவள் மெதுவாக ஒரு பூவைத் தொடுவது போல தனது விரலால் பஞ்சுக் கன்னங்களை வருடினாள். அவளைப் பார்த்து முறுக்கிக் கொண்டான் அவன்.

"கோபமா… என் ராசால்ல… இந்த அம்மாட்ட கோச்சுப்பியா… "

குழந்தையுடன் ஆசையாக விளையாடினாள். சற்று நேரம் சென்றவுடன் குழந்தை அவளிடம் அமைதியாக இருந்தது. தன்னைக் கண்ணாடியில் பார்த்தவள் கழுத்தில் முக்கியமான ஒன்று குறைவதை உணர்ந்தாள்.

"தாலி… "

இடைவிடாது தொடர்ந்து சத்தம் கேட்கவும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் அந்த அறைக்கு விரைந்தாள்.

அறைக் கதவைத் திறந்ததும் சுற்றிலும் இருக்கும் கண்ணாடியில் அவளது பிம்பம் தெரிந்தது கையில் குழந்தையுடன். ஆனால் ஒரு கண்ணாடியில் மட்டும் அவள் தனியாக. கண்ணாடியில் தெரிந்த அவள் வேகமாக கண்ணாடியை உடைத்து விடும் வெறியுடன் உள்ளிருந்து தட்டினாள்.

கண்ணாடிக்கு வெளியே இருந்தவளிடம் ஒரு வெற்றி புன்னகை. வெளியே இருந்தபடியே கண்ணாடிக்குள் கைவிட்டு பிம்பத்தின் கழுத்திலிருந்த தாலியைப் பிடிங்கி வெளியே எடுத்து நிதானமாக அணிந்து கொண்டாள்.

“என் புருஷனை எடுத்துட்டு வட்டியோட திரும்பத் தந்தத்துக்கு தாங்க்ஸ்”

குழந்தையை அணைத்துக் கொண்டவள் “நீ வாடா கண்ணா… அப்பா வர்ற நேரமாச்சு” என்றபடி கதவை இழுத்து சாத்தினாள்.

1 Like

பிக் பாஸ்

kamal-haasan_640x480_71493808262
செ ன்னையின் புகை மூடிய தார் ரோட்டின் நடுவே, அந்த ஷேர் ஆட்டோ தனது பயணத்தைக் தொடர்ந்தது. நிறைமாசமான கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மூச்சு வாங்க நடப்பதைப் போல, பிதுங்கி வழிந்தோடும் பயணிகளை சுமந்து கொண்டு, திணறித் திணறி மறைமலைநகருக்கு அருகே நெருங்கியது.

வாரக் கடைசியில் காணாமல் தவறவிட்ட பிக்பாசில் உலகநாயகனைக் கண் இமைக்காமல் ஆர்வத்தோடு பார்த்தவண்ணமிருந்த திரிபுரசுந்தரியை நாலாபுறமிருந்தும் ஆட்கள் நெருங்கினார்கள். சுந்தரி தன்னைக் கத்தியால் குத்தியவர்களைக் கூட மன்னித்து விடுவார் ஆனால் கமலைப் பார்க்க இடையூறு செய்தவர்களை எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டார்.

இதை நம்பவில்லை என்றால் அவரது கணவர் கேசவனைக் கேளுங்கள். அவர் தெரியாமல் செய்துவிட்ட ஒரு பிழைக்காக இன்றும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அது என்ன தவறு என்று விரைவில் சொல்கிறேன்.

வெற்றிலை வாடை, பவுடர் வாடை, திருநீற்றின் மணம், வியர்வை நாற்றம், சென்ட்டின் மணம் என்று கலந்து கட்டி வீசிய மணங்களால் திருபுரசுந்தரிக்குக் குமட்டியது. ஆட்டோ
ஓட்டுனரிடம் பாய்ந்தார்

“டேய் தங்கராசு… இத்தனை ஆளுங்களை ஏத்தாதேன்னு நானும் சொல்லிட்டே இருக்கேன். நீ கேட்கமாட்டிங்கிற… இன்னொருத்தரம் இது மாதிரி நடந்தது கவர்ன்மென்ட்டுக்கு எழுதிப் போட்டுருவேன் பாத்துக்கோ”
சோடாபுட்டிக் கண்ணாடியை சரி செய்தவாறு மிரட்டினாள் .

“மினி பஸ் உடுறேன்னு அஞ்சு வருஷமா டபாய்ச்சுட்டு இருக்காங்களே… முதல்ல அத்தைக் கேளு… அப்பறம் என்னைக் கேட்கலாம்” தெனாவெட்டாய் பதில் சொன்னான் தங்கராசு.

கொல்லென்று சிரிப்பொலி எழுந்தது அங்கு. எரிச்சல் மேலும் அதிகமாகியது திருப்புரசுந்தரிக்கு.

“அது இல்லாத பாவத்துக்குத் தானே உன்கிட்ட தண்டம் அழுதுட்டு தினமும் உயிரைக் கைல பிடிச்சுட்டு வர்றோம். அவன் விடுறப்ப விடட்டும்… ஆனால் உன் பணத்தாசைல இப்படி வழிய வழிய ஏத்தி எங்க எல்லாரையும் ஒரேடியா சொர்க்கத்துக்கு அனுப்பிடாதே” சுட சுட தந்துவிட்டு தனது ஸ்டாப்பில் இறங்கினார்.

காகிதத்தை சாலையில் வைத்தால் நெருப்பில்லாமலேயே பற்றிக் கொள்ளும் போல வெயில் கொளுத்தியது. சுற்றிலும் பொட்டல் காடு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டிடங்கள். அதில் சற்று அதிநவீனமான இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று “பரமு ரிசர்ச் லேப்” என்று பெயர்ப்பலகை பெரிதாகப் பளிச்சிட்டது. ஆசுவாச மூச்சு விட்டபடி கட்டிடத்தினுள் சென்றார்.
வெங்கடேஸ்வரன் ஐஐடி ரிசர்ச் பிரிவின் ஆராய்ச்சியிலேயே தனது இளமையைத் தொலைத்துவிட்ட விஞ்ஞானி. முப்பது வருடங்களாக என்னவோ ஆராய்ச்சி செய்து வருகிறார்.

தான் வேலைசெய்த தனியார் நிறுவனத்தை மூடிவிட்டதால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த ரிசர்ச் லேபில் குமாஸ்த்தா வேலைக்கு சேர்ந்திருந்தார் சுந்தரி.

“மேடம்… நாளைக்கு வெங்கடேஸ்வரன் சாரோட ப்ரேசெண்டேஷன் இருக்கு. அவரோட பிஏவுக்கு ஆக்சிடென்ட் ஆனதால மெடிக்கல் லீவ் போட்டிருக்காங்க. அதனால நீங்க இந்த வேலைகளை செஞ்சுடுங்க” என்றபடி லிஸ்டை நீட்டினார் மேனேஜர்.

‘ஒரு ரூபா கொடுத்துட்டு பத்து ரூபாவுக்கு வேலை வாங்குவானுங்க’ மனதினுள் திட்டியபடி “டாக்குமெண்ட் எல்லாம் தாங்க பவர் பாயிண்ட்டில் போட்டுத் தரேன்” என்றார்.

“எல்லாம் கான்பிடென்க்ஷயல் விஷயம். சாரோட ஆபிஸ் ரூமில் எல்லாம் இருக்கும். அங்க போய் உங்க வேலைகளைத் தொடருங்க” என்றதும் ஆடி அசைந்து அங்கு சென்றார்.

‘சே… இன்னும் பிக் பாஸ் முழுசும் பாக்கல. கமல் அந்த சூலியை வாங்கு வாங்குன்னு வாங்குறார். அதைப் பாக்க முடியாமல் இங்க வந்து மாட்டிகிட்டேனே. என் தலையெழுத்து. அன்னைக்கு மட்டும் எங்க அப்பாவை எதிர்த்துட்டு ராஜ்கமல் ஆபிஸ் போயிருந்தா என் நிலமை இப்படியா இருந்திருக்கும்’ பெருமூச்சு விட்டபடி கம்பியூட்டரை உயிர்ப்பித்தார்.

1985ஆம் வருடம். சென்னை ஏர்போர்ட். திருமணம் முடிந்து சிங்கப்பூர் செல்லும் மணப்பெண்ணை வழியனுப்ப பெரிய உறவினர் கும்பல் ஒன்றுதிரண்டு ஏர்போர்ட்டை ஆக்கிரமித்திருந்தது. அதில் ஒரு ஓரமாக சிகப்பாக, நீட்டு முடியுடன், கண்ணாடிக்குள் தெரிந்த பெரிய கண்களுடன், நீல நிறப் புடவையில் விமான நிலையத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் திரிபுரசுந்தரி. அந்தக் கூட்டத்தில் பளிச்சென்று அழகாகத் தெரிந்த அவரை மறுமுறை திரும்பிப் பார்க்காமல் சென்றவர் குறைவு.

"கமல் வர்றாரு, கமல் வர்றாரு’ என்று சத்தம் கேட்க, ஆர்வத்தோடு தேடினாள் திரிப்புரசுந்தரி. தங்கம் போல நிறத்தில், குறும்புப் பார்வையுடன் தன்னிடம் கை குலுக்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு கை கொடுத்தபடி வேக நடை போட்ட உலக நாயகனைக் கண்ட கணம் அப்படியே உறைந்தாள். தன்னை அறியாமல் அவர் கையைப் பிடித்து குலுக்கி "சார் சார், நான் உங்க பரம ரசிகை சார். உங்க படம் ஒவ்வொண்ணும் மூணு தரமாச்சும் பாத்துடுவேன். எங்கப்பாகிட்ட சினிமா பைத்தியம்ன்னு அடி கூட வாங்கியிருக்கேன். ஜப்பானில் கல்யாணராமன் படத்தை சீக்கிரம் முடிங்க ஸார் " என்றாள்.

“அப்படியா…” என்று சில வினாடிகள் பார்த்துவிட்டு தனது உதவியாளரிடம் ஏதோ சொன்னார். பின்னர் கண்ணிலிருந்து மறைந்துவிட்டார்.

அவர் உதவியாளர் அவளை அழைத்து “கமல் சார் விக்ரம்னு புது படம் ஒண்ணு எடுக்கப் போறார். அதில் மூணு ஹீரோயின். ஜப்பானில் கல்யாணராமன் ராதா நடிக்கிறதால, விக்ரம்ல அம்பிகா. அதுதவிர இன்னும் ரெண்டு புதுமுகம் புக் பண்ணலாம்னு இருக்கோம். உனக்கு நடிக்க விருப்பம் இருந்தா புதன்கிழமை ஆபிஸ் வந்து பாரும்மா. மேக்கப் டெஸ்ட் எடுத்துடலாம்” என்று சொன்னதும் ஜிவ்வென்று பறப்பதை போலிருந்தது.

ஆனால் விதிவசமாய் அதே புதன்கிழமை கேசவன் வீட்டில் சுந்தரியைப் பெண்பார்த்து, திருமணம் நிச்சயம் செய்துவிட்டு சென்றார்கள். தன்னைத் திருமணம் என்ற சிறையில் தள்ளி வாழ்க்கையைப் பாழாக்கிய கணவரிடம் மஹா கோபத்தில் இருந்தார் சுந்தரி.

இத்துடன் பிளாஷ்பேக் முடிந்தது. ஆராய்ச்சிக் கட்டுரையை ஸ்பெல் செக் பண்ணியவள் அதில் இருந்த விஷயங்களைக் கண்டு நம்பமுடியாமல் திகைத்தாள். அதன் சாராம்சமாவது

‘இது நான் சமர்ப்பிக்கும் ‘இறந்த காலப்பயணம்’ பற்றிய கட்டுரை. இப்போது கம்பியூட்டர் யுகத்தில் ஸ்னாப்ஷாட் எடுப்பதை போல நானும் முப்பது வருடங்களுக்கு முன்னர் சில நிகழ்வுகளை ஸ்நாப்ஷாட் எடுத்து வைத்துள்ளேன். இந்த மெஷினில் அமர்ந்து கதவை மூடிக் கொண்டு, அந்த ஸ்நாப்ஷாட்டைத் திரையில் போட்டுவிட்டால் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றுவிடலாம்.’

உதாரணமாக ஒரு வீடியோ ஒன்றை இணைத்திருந்தார். அதில் இருந்தது நடிகர் கமலின் ஆபிஸ் முன்பு முப்பத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஸ்நாப்ஷாட். சரியாக சொன்னால் திரிபுரசுந்தரியை மேக்கப் டெஸ்ட்டுக்கு அழைத்திருந்த தினம். அதைக் கண்டதும் இழந்த அதிர்ஷ்டம் மீண்டும் கிடைத்ததை போல சந்தோஷத்தில் குதித்தாள்.

வேகமாய் அந்த மெஷின் இருக்கும் அறைக்கு சென்று குறிப்பிட்ட வீடியோவைப் பிளே செய்து ஸ்நாப்ஷாட்டை ஓடவிட்டு கடந்தகாலத்துக்கு சென்று அந்த இடத்தை அடைத்தாள்.

வாசலில் காவல்காரன் “யாரும்மா நீ என்ன வேணும்…” அலட்சியமாய் கேட்டான்.

“பிக் பாஸைப் பாக்கணும்”

“பாஸா… என்னமோ கொள்ளைக் கூட்டத் தலைவன் மாதிரி சொல்ற. இது கமல் சார் ஆபிஸ்”

“தெரியும். 2017லில் அவர்தான் தமிழ்நாட்டுக்கே பிக் பாஸ். உனக்கெங்கே தெரியப்போகுது.
அவர்தான் என்னை ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு வர சொல்லிருக்கார். அதை மட்டும் சொல்லு போ” என்றார் அதிகாரமாக. பின் பந்தாவாக வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்தார்.

திகைப்போடு பார்த்தவண்ணம் உள்ளே சென்று “சார் புது படத்தில் அம்மா வேஷம் எதுவும் இருக்கா சார். ஒரு அம்மா உங்களை பாக்க வந்திருக்கு” என்றான் குழப்பத்தோடு.

அவன் சொன்னது காதில் விழ, ‘அம்மா வேஷமா’ திகைத்தபடி ஆபிசில் தெரிந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தாள் திருப்புரசுந்தரி. அவளை சுற்றிலும் 1980களில் இருக்க தன் உருவம் மட்டும் 2017லேயே இருப்பதைக் கண்டு அவளது கண்கள் இருட்ட ஆரம்பித்தது.

“ஹலோ என்னாச்சு ஆன்ட்டி… இந்த பெரியம்மா மயக்கம் போட்டுட்டாங்க. டாக்டரைக் கூப்பிடுங்க” என்று கமல் சொன்னதைக் காதில் கேட்டவாறே மயங்கி விழுந்தாள்.

அதே நேரம், 2017லில் தன் ஆராய்ச்சி மாணவர்களிடம் வெங்கடேஸ்வரன் 'ஸ்னாப்ஷாட்னுறது போட்டோ மாதிரிதான் அதில் பழைய விஷயங்கள் தெரிஞ்சாலும் அதைப் பாக்குற, இயக்குற நமக்கு வயசாறதில்லையா… அதனால நம்ம அதே வயசில்தான் இருப்போம்.

என்ன சொல்ல வரேன்னா … எனக்கு இப்ப எழுவது வயசாறது. நான் அம்பது வருஷத்துக்குப் பிந்தி பயணம் செய்தாலும் இதே எழுவது வயசில்தான் இருப்பேன். என் வயசு மாறாது, குறையாது. இதை மறக்காமல் அந்த டாக்குமெண்ட்டில் சேர்த்துடுங்க’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

1 Like

ஸ்வன்னமச்சா

ன் பெயர் பவன். என்னைப் பற்றிய விவரங்கள் போகப் போக நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள். இதை நீங்கள் படிக்கும் நேரம் தாய்லாந்தின் சுபன்புரியின் அழகைத் தனது காமிராவில் சுட்டுக் கொண்டிருந்தேன். விண்ணைத் தொட்டு நின்ற புத்தரையும், மண்ணில் அவர் பொற்பாதங்களைத் தொட்டு வணக்கும் பக்தர்களையும் மற்றவர்களையும், அந்த ஊரின் சிறப்பை ஒரு கைடிடம் சொல்லச் சொல்லிக் கச்சிதமாகக் கவர் செய்தேன். இந்த கைடை குறிப்பாகப் பிடித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது அவனது பூர்வீகம். அவனது பெயர் நமக்கு அந்நியம் என்பதால் கைட் என்றே குறிப்பிடுகிறேன்.

“நீங்க சினிமாவா” கைட் ஆர்வமாய் கேட்டான்.

“இல்ல டிவி”

“எந்த டிவி?”

“சாட்ரன் டிவி. அதில் ‘ஊர் சுற்றலாம் உலகம் பார்க்கலாம்னு’ ஒரு நிகழ்ச்சி. அதில் உங்க ஊர் அங்கே நடக்குற சுவாரஸ்யமான விஷயங்களை கவர் செய்றோம்”

“உங்க ஊரை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க”

“எங்க ஊர் தெரு முதற்கொண்டு சுத்திக் காமிச்சாச்சு. இனிமே புதுசா காமிக்கணும்னா வீடு வீடாத்தான் காமிக்கணும். அதையும் சில கலையுள்ளம் கொண்ட ஆண்கள் காமிராவை வீட்டாளுங்களுக்கே தெரியாம வச்சு உலகத்துக்கே காமிக்கிறாங்க. அதனால எங்களுக்கெல்லாம் பெருசா வேலையில்லை”

அவன் விழித்தான்.

“அது கிடக்குது… நீ இந்த ஊரிலோ இல்ல சுற்றுப் புறத்திலோ நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லு. நிறைய பணம் தரேன்”

பையைத் திறந்து ஒரு கற்றை நோட்டை அவன் கைகளில் திணித்தேன். கைட் விழிகள் பிதுங்கி வெளியில் தெறித்து விழாத குறை.

"உனக்கு ஏதாவது தெரியுமா? நல்ல தகவலா இருந்தா இதைப் போல இன்னொரு மடங்கு தரேன். புதையல், அமானுஷ்யம் இந்த மாதிரி… " தூண்டில் போட்டேன் .

அவன் முகத்தில் யோசனை.

“உனக்கு எதுவும் பிரச்சனை வராம பார்த்துக்கிறேன்… இங்க ஏதாவது அந்த மாதிரி சுவாரஸ்யமான விஷயம் இருக்கா?”

“இருக்கு… இங்க பக்கத்தில் ஒரு கிராமம் இருக்கு. அங்க வீடுங்க எல்லாம் ஆத்து மேல கட்டிருப்பாங்க… அந்த ஆறோட கரையில் ஒரு கோவில் இருக்கு. அங்க பெரும் புதையலைப் புதைச்சு வச்சிருக்காங்களாம். அது என்னன்னு யாருக்குமே தெரியாது”

“இது உண்மையா”

“சத்தியம்… எங்க ஊர் பக்கமிருக்கும் ஆளுங்க எல்லாருக்கும் அது தெரியும்”

“தோடா… இதானே வேண்டாம்னு சொல்றது. புதையலை நீங்க இத்தனை நேரம் விட்டா வச்சிருப்பீங்க?”

“நிறைய பேர் முயற்சி பண்ணாங்க. ஆனால் பேயடிச்சு செத்துட்டாங்க. அந்த பயத்தில் யாருமே கிட்ட போறதில்லை.”

“பேயாவது பிசாசாவது. அந்த பேரை சொல்லிட்டு மனுஷன் அடிச்சுருப்பான்”

“இல்ல நிஜம்மாவே பேய்தான். செத்தவங்க எல்லாருக்கும் தலைல அடி. எதோ பெரிய ஆயுதத்தை வச்சு அடிச்ச மாதிரி முகமே சிதறி இருக்கு. ஆனால் அந்த ஆயுதம் என்னென்ன கண்டு பிடிக்க முடியல”

“சரி… இன்னைக்கு சாயந்தரம் என்னை அங்க கூட்டிட்டு போற”

"நானா… "

“வந்தா இதை மாதிரி இன்னும் மூணு கட்டு பணம் தருவேன்”

“சரி… ஆனால் தூரத்தில் காமிச்சுட்டு வந்துடுவேன்”

ஒத்துக் கொண்டேன்…

நான் வந்த காரியம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று நினைக்கவே இல்லை. அந்த புதையலைத் தேடித்தான் வந்தேன். யாரும் வாயைத்திறக்க முன்வராத போது தானாய் மாட்டிக் கொண்ட ஆடு. அவனை சமாதனப் படுத்த ஒரு சாமியாரிடம் பேய் தடுக்கும் தாயத்து என்று அவன் சொன்ன ஒன்றை வாங்கி கட்டிக் கொண்டோம்.

அதன் பின்னரே வற்றாத ஜீவநதி ஓடும் ஆற்றையும், அதில் படகு வீட்டில் தங்கியிருக்கும் மக்களையும் அறிமுகப் படுத்தினான். போட்ட வேஷத்துக்காக அவர்களை சில வீடியோகளையும், புகைப்படத்தையும் எடுத்தேன். அதற்கு அவர்கள் மட்டும் காரணமில்லை. அந்தக் கும்பலில் தென்பட்ட அழகான பொம்மைப் பெண்களையும் படம்பிடித்துக் கொண்டேன். வாவ் இவளுங்களை எல்லாம் கண்ணாடியில் செஞ்சாங்களா… இப்படிப் பளபளக்கும் பட்டுமேனியா… என் மனது சபலப்பட்டது. புதையலுடன் சேர்த்து யாராவது ஒரு பெண்ணையும் கடத்திவிட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் விழுந்தது.

தனியாக மாட்டிக் கொண்ட ஒருத்தியை மடக்கி பெயரைக் கேட்டேன் “ஸ்வன்னா” என்றாள். அவள் கண்களில் என் மேலிருந்த மயக்கத்தைக் கண்டறிந்தேன்.

“ராத்திரி இந்த ஊரை விட்டுப் போறேன். என் கூட வந்துடுறியா… டவுனில் பணக்கார வாழ்க்கைன்னா என்னன்னு காமிக்கிறேன்”

ஒரு வினாடி யோசித்தவள் “அந்தப் பெரிய மரத்துக்கு கொஞ்ச தூரம் தள்ளி ஆறு இருக்கும். அங்க உனக்காகக் காத்திருப்பேன்” என்றாள்.

இரவு கைடும் நானும் அந்த கோவிலை வந்தடைந்தோம்.

தூரத்தில் காண்பித்தான் அவன். “இங்க பாரு இப்ப கூட மோசமில்லை… நீ எனக்குப் பணம் கூடத் தர வேண்டாம். இப்படியே வா நம்ம ரெண்டு பேரும் ஓடிப் போயிடலாம்”

“போகலாமே… இந்த புதையலை ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துட்டு போகலாம்”

“ஐயோ நான் வரல”

ஆசை காட்டி, பயம் காட்டி அவனை சம்மதிக்க வைத்தேன். பெரிய மரத்தை சுற்றியிருந்த புதரை இருவரும் சேர்ந்து வெட்டினோம். கொத்துக் கொத்தாய் வேரோடு வேராய் ஊர்ந்த பாம்புகளை நான் சுட்டுக் கொன்றேன். அப்படியும் தப்பிய ஒரு பாம்பு கைடைக் கடிக்க, உயிருக்கு பயந்து கத்தினான். சாகட்டும் ஒரு புல்லட் எனக்கு மிச்சம்.

மரத்தில் வேரோடு வேறாய் ஒன்று டார்ச் ஒளி பட்டு மின்னியது. மண்வெட்டியால் ஈர மண்ணை வெட்டி, உள்ளே தென்பட்ட பொருளை துடைத்துவிட்டு டார்ச் வெளிச்சத்தில் பார்த்தேன்.வாவ்! மரகத ராமர் அனுமர் சிலை. கிரீடம் தங்கத்தில் வைரம் பதித்திருந்தது.

ராமா! இந்த முட்டாள்களுக்கு அருள் புரிந்தது போதும். இனி எனக்கு மட்டும் அருள் புரி.

இறக்கும் தருவாயிலிருந்த கைடிடம் சிலையைக் காட்டினேன்.

“இந்த சிலையை எடுத்துட்டேன். இப்ப என்ன செத்தா போயிட்டேன். இந்த மாதிரி மூட நம்பிக்கையாலதான் காசெல்லாம் புதைஞ்சே கிடக்கு”

“சிலையை எடுக்கலாம். ஆனால் நீ இந்த எல்லையைத் தாண்ட முடியுதான்னு பாரு” என்றபடி மூச்சை நிறுத்தினான். சிலையை எடுத்து எனது பையில் போட்டுக் கொண்டேன்.

இதை மாதிரி எத்தனை சாபத்தைப் பாத்திருப்பேன். இதெல்லாம் நினைச்சு பயப்படுற ஆள் நானில்லை.

கிளம்பும்போது சபலம் தட்ட… ஸ்வன்னா காத்திருக்கிறேன் என்று சொன்ன நதிக்கரை பக்கமாக நடந்தேன். அவளைக் காணவில்லை. பச்… எதிர்பார்த்ததுதான்.

கிளம்ப நினைத்தபோது யாரோ நதியிலிருந்து கையை ஆட்டியது போலிருந்தது. அருகில் சென்றால் ஸ்வன்னாதான்.

“நட்ட நடு ராத்திரி ஆத்து தண்ணில நிக்கிறாயே… குளிரல”

“இந்த நேரத்தில் ஆறு சூடா இருக்கும். இறங்கித்தான் பாரேன்”

பெண்கள் எனது மிகப் பெரிய பலவீனம். இந்த அழகி பட்டு இதழ்களால் குளிக்க அழைக்கும்போது மறுத்தால் நான் ஒரு ஆண்மகனா?

உடனே இறங்கினேன்.

“உனது காரியத்தை முடித்துவிட்டாயா” நிதானமாகக் கேட்டாள்.

“என்ன காரியம்”

“ராமர் சிலையைத் திருடும் வேலையைத்தான் சொல்கிறேன்”

“கனா கண்டாயா… ராமர் சிலை இங்கு ஏது”

“உன்னை பயமூர்த்த விரும்பவில்லை. ஆனால் ஹனுமானின் தோழமை ஒன்று ராமர் சிலையை இங்கு கொண்டு வந்து பாதுகாத்து வருவதாக ஐதீகம். அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு”

"அந்த தோழி பாம்புகளை எல்லாம் கொன்னுட்டேன். நான் எத்தனையோ தவறு செஞ்சிருக்கேன். அதுக்கெல்லாம் தண்டிக்காத இந்த சாமி சின்ன சிலையை திருடினதுக்கா கொல்லப் போகுது?

அதுவும் பேய் வந்து கொல்லும்னு அந்த கைட் சொன்னான். அதனாலதான் இந்த கயிறு எல்லாம் கட்டிட்டு வந்தோம். நீ என்னடான்னா சாமியோட பிரென்ட்னு சொல்ற" சிரித்தேன்.

"அது பேய் இல்லை… " என் அவள் என் அருகில் அந்த ஆற்று நீரில் நின்றபடியே உடலை அசைத்தாள் பின்னாலிருந்து எழுந்த ஒன்று ஓங்கி என் தலையில் அடித்த வேகத்தில் என் மண்டை ரெண்டாகப் பிளந்தது.

தண்ணீரிலிருந்து ஜம்ப் பண்ணிக் கரையில் அமர்ந்தவள் உடல் இடுப்புக்குக் கீழே மீனாக இருந்தது.

"நான்தான் அனுமன் பூஜித்த இந்த ராமர் சிலையை பாதுகாத்து வர்றேன். தவறுகளின் எண்ணிக்கை அதிகமாகி மரணம் சம்பவிக்கும் நேரம் வருபவர்கள் மட்டுமே இந்த இடத்தைக் கண்டுபிடித்து வருவார்கள்.

என் முழு பெயர் சொர்ணமச்சை. கடற்கன்னி"

என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக சென்றுக் கொண்டிருந்தது. கடைசியாக நான் கண்ட காட்சியில் சொர்ணமச்சையின் இடுப்புக்குக் கீழே மறுபடியும் கால்கள் வந்திருக்க மெதுவே அந்த சிலையை எடுத்துச் சென்று மரத்தினடியில் வைத்தாள். வினாடியில் அந்த மரத்தை சுற்றி புதர் மண்டியது மரத்திலிருந்து கொத்துக் கொத்தாய் பாம்புகள் அந்தப் புதரில் விழுந்தன.

பொக்கிஷத்தை மச்சக்கன்னி கூட பாதுகாப்பாளா? புதையலை பாம்பும் பூதமும் மட்டும் தான் பாதுகாக்கும்னு சொன்ன மடையன் தலையில் இடி விழ.

1 Like