தர்மாவின் மாயமோகினி!

தர்மாவின் மாயமோகினி!
0

ஏஞ்சலின் டயானா அவர்களின் சிறுகதை

1 Like

கத்தரி வெயிலின் தாக்கம் பெரிதாய்த் தோன்ற காக்கையும் இரை தேட அஞ்சித் தன் கூட்டிலே ஒளிந்திருக்கும் ஒரு மதிய வேளையில்…

அந்த அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கூடத்திலே மதிய வகுப்பிற்கான ஆயத்த வேலையில் மூழ்கிப் போயிருந்தவனை தலைநிமிர்ந்து பார்க்க வைத்தது பியூன் சுப்புவின் குரல்…

“சார்… உங்களுக்குத் தபால் வந்திருக்கிறது… தலைமைஆசிரியர் கொடுக்கச் சொன்னார்…”

“சரிப்பா… வச்சிட்டுப் போ…”என்ற தர்மாவின் கண்கள் அந்த பிரவுன் நிற சீல் இடப்பட்ட உரையை உற்று நோக்கியது.

பிரித்துப் பார்த்ததில்… தனக்கு தரங்கம்பாடி என்ற இடத்திற்கு அருகில் ஒரு சிறிய கிராமத்திற்கு பணி இட மாறுதல் ஆகியிருப்பதும் ஓரிரு நாளில் அங்கே பணியில் சேர வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டான்.

‘தரங்கம்பாடி!..’

பெயர்க்காரணமே ‘ப்ளேஸ் ஆஃப் தி சிங்கிங் வேவ்ஸ்!’.1620 முதல் 1845 வரை டேனிஷ் காலனியாகத் திகழ்ந்தது. காவிரிஆற்றங்கரையின் அருகே அமைந்துள்ள அந்த நேர்த்தியான தாலுகாவின் பஞ்சாயத்து டவுண்களில் ஒன்றான ‘செம்பரனார்கோவில்’ பெயர்ப்பலகை அவனை வரவேற்றது.

அங்கிருந்து 16 கி.மீ தொலைவில் “சந்திரப்பாடி” என்ற சிறிய கிராமம் உள்ளது. அந்த ஊரின் அரசு உயர்நிலைப் பள்ளிக்குத் தான் அவன் மாற்றலாகி வந்திருந்தான்.

பால்காரனின் முகமே பார்த்திராமல் மில்க் பாக்ஸ்-இல் பால் பாக்கெட்டை எடுக்கும் நகரத்து இயந்திர வாழ்க்கைக்கு முரண்பாடாய் அப்பொழுது தான் கறந்திருந்த பாலைக் கலப்படமின்றி நுரைததும்ப கொண்டு செல்லும் பால்காரன் தவிர ஆளரவமில்லை.

ஊர்ப் பெரியவரின் வீட்டிற்கு விலாசம் கேட்கலாம் என்றால் புதிய மனிதனாய்த் தெரிந்ததால் என்னவோ எவரும் அருகில் வருவதாய் இல்லை. அனைவரின் கண்களிலும் ஏதோவொரு மிரட்சி. அருகேயிருந்த முட்செடிகளடர்ந்த பாதையைக் கடந்து தூரத்தில் தெரிந்த ஒரு டீக்கடையை நோக்கி சென்றான்.

“நாயரே! ஸ்ட்ராங்கா ஒரு டீ…” என்றவனிடம் “எந்தா சாரே! ஏது இவ்ளோ தூரம்?!” என்ற சேட்டனின் டீக்கடையில் பேப்பர் படிக்கக் கூட மறந்தும் ஒரு மனிதத் தலையில்லை.

“சேட்டா! நான் இங்கு அருகிலுள்ள சந்திரப்பாடி என்ற கிராமத்திற்கு புதிதாய் வந்திருக்கும் ஆங்கிலக் கல்வி ஆசிரியர். என்ன ஆச்சு?!ஊரே மயான அமைதியில் இருக்கே?!” என்றான்.

அந்த வழியே தற்செயலாக வந்த தபால்காரர் இதைக் கேட்டதும் “வாத்தியாரய்யா… அந்த ஊருக்கா மாற்றலாகி வந்தீங்க?!.. அங்க புல் பூண்டு கூட செழிக்கிறதில்ல… எல்லாம் அந்த மீனாட்சியோட ஆவி பண்ற வேலை… நிறைவேறாத ஆசையோட அவ துர்மரணம் அடைஞ்சதால ஊரே சாபமாக் கெடக்கு… ஏன்னா… ஜனமெல்லாம் தெய்வமா மதிச்ச அவளோட மனச ஒருத்தன் மயக்கி வயிற்றில் கருவோடுஅவளைக் கைகழுவிட்டான்…அவன் வேற யாரும் இல்ல… இதுக்கு முன்னாடி அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கில வாத்தியாரா இருந்த சோமசுந்தரம் தான்… அவன் கூட போன வருஷம் அதே பள்ளியோட கழிவறையில பிணமாக் கெடந்தான்…
அதுக்கப்புறம் புள்ளைங்களக் கூட யாரும் படிக்கஅனுப்பல… இப்போல்லாம் நடு நிசியில அவ உருவத்தக் கண்டதா பல பேர் சொல்றாங்க!.. ஆமா… நீங்க எங்க தங்கப் போறதா சொன்னீங்க? “ என்றவரிடம்

“இந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவரின் பழைய பங்களாஅந்த கிராமத்துக்கு ஒதுக்கப்புறமா இருக்காமே… அங்கதான்…” என்றவனை உற்று நோக்கியவரிடம் ஒரு நெடிய பெருமூச்சு…

அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மேற்கே மெல்ல ஆதவன் விடைபெற ஆரம்பித்திருந்தான்.

“சாரே… அங்கோட்டுப் போகான் வண்டி ஒந்நும் இல்லா… ஆ காணுந்ந ஒத்தயடிபாதயில் கூடிப்போயால் ஒருரண்டு-மூன்னு மணிக்கூர் கொண்டு அங்கு ஏத்தாம்… சமயமாயி சாரே… ஞான் வீட்டுக்குப் போவா… பாக்யம் ஒண்டேல் நிங்ஙளே நாளே காலத்துக் காணாம்…” என்ற டீக்கடை நாயர் திரும்பிப் பார்க்காமல் தன் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு போனார்.

மீனாட்சி தான் ஊர்ப்பெரியவரின் மகளென்பதும் அந்த பங்களாவிலே தான் அவள் தீக்குளித்துசெத்துப் போனாளென்பதும் பாவம் தர்மா அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

நாயர் காட்டிய ஒற்றையடிப் பாதையை இரண்டரை மணி நேரத்தில் கடந்து அவர் கொடுத்திருந்த அந்த பங்களாவின் சாவியை இறுகப்பிடித்துக் கொண்டே வாசலில் வந்து நின்றவன் சருகுகளின் ஓசையில் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை உணர்ந்தான்.

ஒரு நொடியைக் கடப்பது ஒரு யுகமாகத் தோன்றியது. ஊரின் மையத்திலே தனியே வானுயர்ந்து நின்று கொண்டிருந்த மணிக்கூண்டு பனிரெண்டு மணியின் கடைசி ஒலியையும் அடித்து முடிக்க எங்கிருந்தோ நரிகள் ஊளையிடும் சத்தம் அவன் இரத்தத்தை உறைய வைத்தது.

மெல்லிய மல்லிகை மணம் காற்றிலே பரவியது…கொலுசின் ‘ஜல்…ஜல்…’என்ற ஓசை அவனை நெருங்கி வருவதாய்த் தோன்ற அவனது சர்வமும் பதறியது.

“வந்துட்டியா தர்மா!..உனக்காகத் தான் இத்தனை நாளாகக் காத்திருந்தேன்… உன் நண்பன் சாவின் மர்மம் கண்டறிய வந்தாயா?!.. அவனது லீலைகள் அனைத்தும் அறிந்திருந்தும் என்னை நேசிப்பதுபோல் அவன் ஆடிய கபடநாடகத்திற்கு உதவிய உன்னையும் அவன் போன இடத்திற்கே அனுப்பி வைக்கப் போகிறேன்…”என்ற ஆக்ரோசமான ஒலியோடு கலகலவென எட்டுத்திக்கும் அலறிய சிரிப்பும் ஈடுகொடுக்க உயிர் பிழைத்தால் போதும் என பின்னங்கால் பிடரியில் பட தலைதெறிக்க ஓட ஆரம்பித்தவனை…

… இடைமறித்து தடுத்து நிறுத்தியது…

டைரக்டரின் “ஃபென்டாஸ்டிக்… டேக் ஓகே…”என்ற குரல். மொத்த யூனிட்டும் “பெர்ஃபார்மன்ஸில் பின்னிட்டீங்க சார்…”என்று பொழிந்த வாழ்த்து மழையில் திக்குமுக்காடியவனாய் தன் கேரவனுக்குள் நுழைந்த ஆக்டர் தர்மா என்ற தர்மேந்திரனுக்கு அந்த ஏசியின் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது.

ஏதோ ஒரு அமானுஷ்யம் அவனது நினைவலைகளைப் பின்னோக்கி இழுத்துச் செல்ல… ‘மாயா!.. பளிங்கு போன்ற நிலாமுகம்… மென்மையாய் உதடுகள் குவித்துஅவள் மெல்ல புன்னகைக்கையில் படைத்தவனும் சற்று இடறித்தான் போவான்!’…

உயிருக்கு உயிராய் நேசித்து காதலுக்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர்களின் அன்பில் சிறிய கீற்றாய் விரிசல் விழ ஆரம்பித்தது அவனது வாரிசைஅவள் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறியதும்…

தன் சினிமா எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற குழப்பமும் புகழ் மழையில் நனையத் தவித்த ஏக்கமும் ஒருசேர்ந்த அத்தருணத்தில் அவனும் சற்று குழம்பித்தான் போனான்…

மனிதனின் மனம் சற்று வித்தியாசமானது… புதிரானதும் கூட…தற்கொலைக்கும் கொலைக்கும் தேவைப்படுகின்றஅந்தக் கடைசி ஒருநொடி தைரியம் இவனுக்குள்ளும் வேர்விட… கண்மூடித் திறக்கையில் அவன் அருமைக் காதலியோ இரத்த வெள்ளத்தில்!..

அவளது மரணத்தைத் தற்கொலை தான் எனப் போலீசாரையும் மற்றவர்களையும் நம்பவைத்தாலும் அவனது மனசாட்சி அவனை விடுவதாய் இல்லை…

திடீரென்று அவனது முதுகுத் தண்டுவடத்தில் ஆயிரம் கூர்மையான ஊசிகள் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு… சுற்றிலும் அவள் ரெகுலராய் உபயோகிக்கும் பாடி ஸ்ப்ரேயின் நறுமணம்… கிசுகிசுப்பாய் அவன் காதில் ஒருவிசும்பல்…

“உன்னை விடமாட்டேன் தர்மா!.. உன் உயிர் நண்பனும் நீசெல்லும் இடத்திற்கேவருவான்… கவலைப் படாதே!”என…

நேரமாகியும் கேரவனிலிருந்து வெளியே வராதவனைப் பார்க்கக் கதவைத் திறந்தான்… அவனதுஉயிர் நண்பனும் கிட்டத்தட்ட மேனேஜராய் அவனது கால்ஷீட் அனைத்தும் பார்த்துக் கொள்பவனும் தர்மாவின் காதலி விஷயத்தில் அவனை மூளைச்சலவை செய்ததில் பெரும்பங்கு வகித்தவனுமான அபிலாஷ்!..

அங்கே மார்பை இறுகப் பிடித்தபடி நாசியிலே இரத்தம் வழிய தரையிலே சரிந்து கொண்டிருந்தான் தர்மா என்ற தர்மேந்திரன்!..

விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அவனது உதடுகள் உச்சரித்த கடைசி வார்த்தை

….“மாயா!..”

3 Likes

வாவ் சகோ அருமை நல்ல பயம் காட்டி விட்டிங்க, :cold_sweat: ஆனா இந்த மாறி ஆளுங்களுக்கு இப்படி தான் தண்டனை குடுக்கணும். :angry: மிக அருமை சகோ :purple_heart:

2 Likes

மிக்க நன்றி சகோ…:heartpulse::blush:

2 Likes

Super sissy… Thigil count down starts…

3 Likes

Thank you so much Sis…

2 Likes

எழுத்து நடை அருமை நிலா. திகிலாகவே இருந்தது.

2 Likes

மனமார்ந்த நன்றிகள் @TamilMadhura சகோ… :blush::heartpulse::pray:

2 Likes

Semma. Want more such stories. Inda jorner stories niraya venum mathura

2 Likes