திருமதி ராஜி - பயண கட்டுரை

திருமதி ராஜி - பயண கட்டுரை
0

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இந்த கட்டுரையில் நாம பார்க்க போறது ஆறகளூர் அப்படின்னு ஒரு ஊரு. இது எங்க ஊரு சேலத்து பக்கத்தில் ஆத்தூர் செல்லும் வழியில் இருக்கும் தலைவாசல் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் தான் ஆறகளூர்.

நம்ம சேலத்தில் இருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்து இந்த ஊரை அடையலாம் இந்த ஊரில் இருக்கும் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது இது 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இதன் சிறப்பு என்னவென்றால் இதில் உள்ள அஷ்ட பைரவர்

அஷ்டமி அன்னைக்கி இங்கு பண்ண வர பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பலர் கலந்து கொள்வார்கள். மூலவர் பெயர் காமநாதீஸ்வரர், அம்மன் பெரியநாயகி.

இந்த ஊர் ஆறு, அகழியால் சூழப்பட்டு இருந்ததால் ஆறகளூர்னு சொல்றாங்களாம். சிவன் இங்கு வந்தது தனிக்கதை. வஷிஷ்ட முனிவர் திருவண்ணாமலைல இருக்குற மாதிரி ஜோதி வடிவ சிவதரிசனம் வேண்டி பிரதிஷ்டை செஞ்சு சிவதரிசனம் பெற்றதாகவும், அந்த லிங்கம் மண்ணில் புதைந்து வெகு காலம் கழித்து ஒரு சிற்றரசன் கனவில் தோன்றி சிவன் தான் இருக்கும் இடத்தை சொல்லியதாகவும் சொல்கிறார்கள். சிவலிங்கத்தை மண்ணில் இருந்து தோண்டி எடுத்தபோது கிடைத்த புதையலில் தான் இந்த கோவிலே கட்டியதாக சொல்கிறார்கள்.

பைரவர்கள் சிறப்பு பற்றி சொல்லும்போது சிவபெருமான், அந்தகன் அப்படின்னு சொல்லும் அசுரனையும் அவனது படையையும் அழிக்க திசைக்கு எட்டு பைரவர்களாக மொத்தம் அறுபத்தி நான்கு பைரவர்களை அனுப்பியதாக சொல்றாங்க.

image

அஷ்டன்னா எட்டு அதனால் ஒவ்வொரு திசைக்கும் ஒரு பைரவரா எட்டு பைரவர்கள் இருக்காங்க. இதே மாதிரி காசியிலும் இருக்காம். வடநாட்டில் பல இடங்களில் அஷ்ட பைரவர் இருக்குறதாவும் தெற்கில் இந்தக் கோவில் மட்டும்தான் இருக்கிறதால இங்கு வந்து பைரவரை தரிசிச்சா காசிக்கு போன புண்ணியம் கிடைக்கும்னும் என்னோட உறவினர் சொன்னார்.

முக்கியமா தேய்பிறை அஷ்டமியில் இரவு நடக்கும் பூஜை இங்க சிறப்பு வாய்ந்தது. பலர் கலந்துக்குவாங்க என்பதால் நாங்களும் அந்த பூஜையில் கலந்து கொள்ள விரும்பினோம். இரவு நேர பூஜை என்பதால் சேலத்திலிருந்து மெதுவாத்தான் கிளம்பினோம். ஒரு மணி நேரத்தில் ஆறகழூர் போய்டலாம்னு நினைச்சதுதான் காரணம். ஆனாலும் அன்னைக்கு கூட்டம் அதிகம் இருக்கும்னு நினைக்கல. அதனால கோவிலுக்குப் போயி சேர எதிர்பார்த்த நேரத்தை விட அதிகமாகவே ஆயிடுச்சு.

கோவிலில் மிக அதிகக் கூட்டம். பன்னிரண்டு மணிக்கு நடக்கும் பூஜையில் ஆயிரக்கணக்கான பேர் கலத்துக்கிட்டாங்க. நீண்ட நேரம் பூஜையில் கலந்து கொண்டது, இரவு நேரம் வேறு அது எங்களைப் போன்ற வயதானவர்களுக்குக் கலக்கம் தந்தாலும் அதுவும் ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது.

குழந்தைப் பேறு, கல்யாணம், வேலை வேண்டி பலர் அந்த அஷ்டபைரவர் சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டனர். கார்த்திகை மாசம் நடக்கும் கார்திகாஷ்டமி இன்னும் சிறப்பு ஏனென்றால் அன்று தான் பைரவர் அவதரித்த பைரவாஷ்டமி. அன்று யாகம் இன்னும் ஸ்பெஷல். அன்று தரிசித்தால் நம்ம நினைத்தது நடக்கும்னு அந்த ஊர்க்காரங்க சொன்னாங்க. அதனால் கூட்டமும் இன்றை விட அதிகமா இருக்கும்னு சொன்னாங்க.

இன்றே எங்களால் சமாளிக்க முடியவில்லை. கார்த்திகை என்று கூட்டத்தில் நெடுநேரம் உட்கார எங்களால் எந்த அளவு இயலும் என்று தெரியவில்லை. அதனால் இது போன்ற பூஜைகளுக்கு உடலில் வலு இருக்கும்போதே கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து சில நாட்கள் கழித்து பகல் வேளையில் அதே கோவிலுக்கு நாங்கள் சென்றபோது கூட்டம் மிகக் குறைவு. இறைவனையும், பைரவர்களையும் ஆறுதலாக தரிசித்துத் திரும்பினோம். அது எனக்கு மிகவும் நிம்மதியைத் தந்தது.

நானும் எனது குடும்பத்தினரும் பெரும்பாலும் கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வது வழக்கம். அதையே பயணக்கட்டுரை என்று சொல்வேன். என் மகள் பயண அனுபவத்தைக் கேட்ட பொழுது மதுரை, காஞ்சி, சிதம்பரம், தஞ்சை இவை போன்ற கோவில்களை விட அருகில் இருக்கும் கோவில்களை சொல்வது என்று தீர்மானித்தேன். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். ஒரு வேளை சேலம் வரும் வாய்ப்பு கிடைத்தால் பைரவரையும் தரிசித்து வாருங்கள்.

1 Like

வாசகர்களே! கட்டுரையைப் படித்து விட்டீர்களா…

உங்களது வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்

  • வாக்களிக்கிறேன்
  • வாக்களிக்கவில்லை

0 voters