நிசப்த மொழி – 01

நிசப்த மொழி – 01
0

வணக்கம் நட்புக்களே!

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல. முதல் அத்தியாயம் பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்…

சற்று சிறிய அத்தியாயம் தான். ஆனால், இதில் சொல்ல நினைத்த விஷயம் இவ்வளவு தான். தேவை இல்லாமல் பெரிது படுத்தவோ, இழுக்கவோ எனக்கு விருப்பம் இல்லை. kindly co operate dear readers :slight_smile:

பேரன்புடன்,
யாழ்வெண்பா

விநாயக பாத நமஸ்தே!!!

நிசப்த மொழி – 01

வெள்ளைத்தாளில் மணமேடை அலங்காரத்தை அதிசிரத்தையோடு வரைந்து கொண்டிருந்தான் சுதர்ஷன். அவனது கவனம் முழுவதும் வரைபடம் வரைவதிலேயே இருந்தது. மூழ்கி இருந்தான் என கூறலாம். அதை கலைக்க அவனது கைப்பேசி இசைத்தது. நொடியில் பிறழ்ந்த கவனம் கைப்பேசியில் படிய, அழைப்பது யாரென புரிந்தது.

தாமதம் செய்யாமல் அழைப்பை ஏற்றவன், “ஹலோ” என்றான் அமைதியான குரலில். சத்தியம் செய்தாலும் அவனை மதுரை வட்டாரக்காரன் என்று யாராலும் கூற இயலாது , எப்பொழுதுமே அப்படி ஒரு அமைதியை கடைபிடிப்பான். குரலிலும் சரி, செயலிலும் சரி. சிலர் அதனை நிதானம், பொறுமை என நினைக்க, வெகு சிலரோ அழுத்தம், அகம்பாவம் என நினைப்பார்கள்.

இவனது அமைதிக்கு எதிர்பதமாக, “எப்படி இருக்கீங்க தம்பி?” என்ற கம்பீர குரல் மறுமுனையிலிருந்து வந்தது. “நல்லா இருக்கேன். நீங்க?” என்றான் மரியாதையான குரலில்.

பின்னே அழைத்திருப்பது பெண் வீட்டினர் ஆயிற்றே! இவனுக்கு தற்சமயம் பார்த்திருக்கும் பெண் கயல்விழியின் தந்தை ரங்கராஜன் தான் பேசிக்கொண்டிருந்தார். இப்பொழுது தான் ஜாதகம் ஒத்து வந்திருக்கிறது. மற்ற பேச்சுவார்த்தைகள் எல்லாம் இன்னும் தொடங்கப்படவில்லை.

“நானும் நல்லா இருக்கேன் தம்பி. மதுரைக்கு ஒரு வேலை விஷயமா வந்தேன். இன்னைக்கு ராத்திரியே தேனி கிளம்பிடுவேன். நீங்க ஒரு எட்டு மதுரைக்கு வந்துட்டு போறீங்களா? நாம நேருல பாத்து பேசிப்போம்” என்றார் அடுத்தகட்ட நடவடிக்கையாக. புகைப்படத்தில் மணமகனை பார்த்தாலும் நேரில் ஒருமுறை பார்ப்பது போல வராதே!

‘தான் தனியாக சென்று என் திருமண பேச்சுவார்த்தை பேசுவதா?’ எண்ணும்பொழுதே மனம் கனத்தது அவனுக்கு. ஆனாலும், வேறு யார் பேசுவார்கள்? யார் உடன் வர இருக்கிறார்கள்? உடன்பிறந்த அண்ணனே அக்கறை காட்டாத பொழுது வேறு யார் காட்டி விடப்போகிறார்கள்? நிதர்சனம் புரிய, “சரிங்க. எங்க வரணும்?” என்று சந்திப்பு விவரங்களை கேட்டுக் கொண்டு அழைப்பை துண்டித்தான்.

கழிவிரக்கத்தில் கரைந்து என்ன பயன்? ‘என்னை யார் விட்டு சென்றாலும் என் வாழ்க்கை நகர்ந்து தானே ஆக வேண்டும்?’ என்னும் முடிவை ஸ்திரப்படுத்திக் கொண்டான். அவ்வப்பொழுது உருப்போடும் விஷயம் தான். வாழ்க்கை ஒன்றும் குளத்தில் இருக்கும் நீர் இல்லையே! தேங்கி நிற்க. ஆற்றுத்தண்ணீர் போல நகர்ந்து கொண்டே இருக்க வேண்டுமே!

பெருமூச்சை வெளியேற்றி விட்டு, குளியலறை சென்றுவிட்டான். அவனது சிறிய வீடும் அவனைப் போன்றே அமைதியாய் இருந்தது. ஒற்றை படுக்கையறை கொண்ட வீடு. சமீபத்தில் தான் வங்கியில் கடன் வாங்கி கட்டி முடித்திருந்தான்.

அவன் வரைந்து பாதியில் விட்டிருந்த மணமேடை அலங்காரம் பேரழகாய் இருந்தது. அது நகராமல் இருக்க பேப்பர் வெயிட்டினை வைத்திருந்தான். சுதர்ஷன் வேலை செய்வது வெட்டிங் ஹால் டெகரேஷன் கம்பெனி என்பதால், இது போன்று அடிக்கடி வரைய வேண்டி இருக்கும். ஒரே மாதிரி மணமேடை அலங்காரத்தையே அமைக்க முடியாதே! மக்களும் புதிது புதிதாய் விரும்புபவர்கள் ஆயிற்றே! இவனுக்கும் இயல்பிலேயே வரைவதில் ஆர்வம் அதிகமாதலால் பலவிதமான அலங்காரங்களை வரைவான். அதற்கு மிகுந்த வரவேற்பும் இருந்தது.

குளித்து முடித்து வந்தவன் அனாதரவாய் விட்டுச்சென்ற வரைபடத்தை எடுத்து ஒரு கோப்பினுள் வைத்தான். ரங்கராஜன் கூறியிருந்த கோவிலுக்கு அவர் சொன்ன நேரத்திற்கு சென்று சேர்ந்திருந்தான்.

அவனைப்பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டவர், “வாங்க தம்பி, நாங்களும் இப்போ தான் வந்தோம். சரியா நீங்களும் வந்துட்டீங்க” என அந்த கோவிலின் உரிமையாளர் போல அவர் வரவேற்க, அவரது ஆளுமையிலும், தோரணையிலும் மனதோடு புன்னகைத்துக் கொண்டான்.

வெளியிலும் மரியாதை நிமித்தம் புன்னகைத்தவன், உடன் இருந்தவரையும் பார்த்து புன்னகைத்து வைத்தான். உண்மையில் அவனுக்கு என்ன பேச, எப்படி பேச்சை தொடங்க என தெரியவில்லை.

அவன் தயக்கம் உணர்ந்தவரோ, “இவர் என் பெரியண்ணன் தம்பி. பேரு சாமிநாதன்” என அறிமுகம் செய்ய, “வணக்கம் சார்” என்றான் சிறியதாய் புன்னகையை உதிர்த்து. “படிச்சதெல்லாம் எங்க தம்பி?” என சாமிநாதன் கேட்க, “அதெல்லாம் மதுரைல தான் சார்” என்றான்.

“மதுரையில சொந்தமா வீடு வேற கட்டி இருக்கீங்க போல தம்பி?” சற்று தோண்டி துருவும் விதமாக கேள்விகளை அடுக்கினார்கள். பெண் வீட்டார்கள் இதுபோன்று கேட்பார்கள் என்பது அவனுக்கும் தெரியும். ஆகவே, நிதானமாகவே பதில் தந்தான்.

அதோடு இந்த சம்மந்தம் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு காரணமே அவனாக கட்டி முடித்திருக்கும் வீடு தான் என்று அவனுக்கு நன்கு தெரியும். ஏனென்றால் முன்பு வந்தவர்கள் எல்லாம் பூர்வீக சொத்து, அண்ணன், தம்பிக்கும் இடையே இருக்கும் சுமூகமற்ற உறவு, தேனியில் வீடு இருக்க மதுரையில் ஏன் வேலை செய்கிறீர்கள்? இங்கு எங்கள் பெண் எப்படி வாடகை வீட்டில் இருப்பாள்? என்பது போன்ற கேள்விகளை மட்டுமே பிரதானப்படுத்தி இருக்க, அதன் பொருட்டே வீடு கட்டி இருந்தான்.

இருவரும் மாறிமாறி விசாரணை செய்து கொண்டிருக்க, சுதர்ஷன் அனைத்திற்கும் பொறுமையாக பதில் தந்து கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த கேள்விகள் எல்லாம் வராமல் இல்லை. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பிரதானப்படுத்தி அவனை சங்கடப் படுத்தவில்லை. பெண்ணின் தந்தையைக் காட்டிலும் பெரியப்பா சற்று நிதானமானவராகவும், தெளிவானவராகவும் தோன்றினார். விவரங்களை எல்லாம் மனனம் செய்து கொண்டு போய் வீட்டில் இருப்பவர்களிடம் கூறுவார்களோ என்று அவனுக்கு தோன்ற மீண்டும் மனதோடு புன்னகைத்துக் கொண்டான்.

அனைத்து பேச்சுவார்த்தையும் அவர்களுக்கு ஓரளவு திருப்தி போலும். “சரி தம்பி, எங்களோடது கூட்டுக் குடும்பம். எல்லார்கிட்டயும் கலந்தாலோசிக்கணும். ஒருமுறை தேனியில இருக்கிற உங்க பூர்வீக வீட்டுக்கும், மதுரையில நீங்க கட்டி இருக்க வீட்டுக்கும் வந்து பார்க்கிறோம். இதுல எங்க குடும்ப தகவல், பொண்ணு பத்தின தகவல் எல்லாம் இருக்கு. உங்க பக்கம் விசாரிக்கணும்ன்னா விசாரிச்சுக்கங்க” என்று ஒரு கவரை தந்தார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்து தரும் முன்பு எவ்வளவு யோசிக்கிறார்கள்? என்று எண்ணியபடியே,

“சரிங்க சார்” என்று அவர் தந்த கவரை வாங்கிக்கொண்டவனிடம், “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. உங்க பக்கம் எல்லாம் எடுத்து நடத்த…?” என ரங்கராஜன் இழுக்க, “உங்களுக்கு எல்லாம் திருப்தி ஆன பிறகு சொல்லுங்க, பெரியப்பா, மாமா யாரையாவது முன்ன நிக்க சொல்லறேன்” என்றான் முகத்தில் எந்தவித பாவனையுமின்றி. என்னமுயன்றும் மனக்கசப்பு அவனை புன்னகைக்க விடவில்லை. அண்ணன் நிற்க மாட்டான் என்பது எப்படி இருந்தாலும் குறை தானே! அதை என்ன காரணம் சொல்லி விளக்க முடியும்? அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. யாருமற்ற தன் நிலை அவனுக்கு பிடிக்கவேயில்லை.

அவர்கள் விடைபெற்று சென்ற பிறகும் ஆலய பிரகாரத்திலேயே ஒரு ஓரமாக அமர்ந்து விட்டான். என்ன வாழ்க்கை இது பிடிப்பே இல்லாமல்? என்ற எண்ணம் அவனது மனதை மிகவும் தளர்வடைய செய்திருந்தது.

யாரிடமும் அதிகம் மனம் விட்டு பேசாததாலோ என்னவோ மிகவும் மனபாரமாய் உணர்ந்தான். யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் ஓரளவு குறையலாம். ஆனால் தனக்கென்று அப்படி யார் இருக்கிறார்கள்? பெருமூச்சோடு தன்னிலையை எண்ணி, தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தான்.

தனக்குள் மூழ்கி இருந்தவனின் செவிகளில், “எப்படி இருக்க?” என்றொரு பெண்ணின் குரல் விழ, அந்த குரல்… அந்த குரலின் உரிமையானவள்… அதை எண்ணும்போதே அவனுள் ஏதேதோ உணர்வுகள் முட்டி மோதி மேலெழுந்து அவனை மூச்சடைக்க செய்தது.

2 Likes

Really Good start akka :purple_heart:

1 Like

thanks a lot dear :slight_smile:

1 Like