நிசப்த மொழி - 02

நிசப்த மொழி - 02
0

வணக்கம் நட்புக்களே!

இந்த கதை சற்று உணர்வு குவியலாகத்தான் பயணிக்கும். என்னாலும் அதனை தாங்க இயலவில்லை தான். இந்த அத்தியாயத்தை மீண்டுமொரு முறை படித்து சரி பாக்கும் பொழுது, விழிகள் கூட கலங்கி விட்டது சுதர்ஷனின் நிலையை எண்ணி. பூர்ணிதாவோடு என்னுடைய எதிர்பார்ப்பும் அவனின் நலன் மட்டுமே!!! அவனுக்காக எனது பிரார்த்தனைகளோடு… இந்த அத்தியாயம்.

இந்த சோகம் மெல்ல மெல்ல குறைந்து விடும் என்பது போலத்தான் என் மனதில் இந்த கதை பயணிக்கிறது. ஆக யாரும் வருந்த வேண்டாம் :slight_smile:

உங்களது கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். குறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்துங்கள் :slight_smile:

அன்புடன்,
யாழ்வெண்பா

நிசப்த மொழி - 02

அவளின் காதல் கடிதம்

தூரிகை தீண்டாத காகிதம்…

அவளின் காதல் மொழி

ஒலிகளற்ற நிசப்தம்…

ஆலய வழிபாட்டிற்கு வந்த பூர்ணிதா சுதர்ஷனை கண்டதும், அவனை அங்கே எதிர்பாராததால் விழி விரித்து நின்றுவிட்டாள். நிச்சயம் அவனை இந்த இடத்தில் அவள் எதிர்பார்க்கவில்லை. நான்காண்டுகள் கழித்து இன்று தான் பார்க்கிறாள். நீண்டநாட்கள் பிரிந்த குழந்தையை கண்டதும் தாய் தன் பார்வையாலே வருடி நலனை சரிபார்ப்பாளே! அப்படியாகத்தான் இப்பொழுதும் அவனை தலை முதல் கால் வரை அவசரமாக ஆராய்ந்தாள்.

அவனை முழுவதும் வருடிய பார்வை நிலைகுத்தி நின்ற இடம் அவனது முகம். அதன்பிறகு, அவளது விழிகள் அதன் இயக்கத்தை மறந்ததோ என்னவோ, இமைக்க மறந்து அவனையே பார்த்தபடி அசையாது நின்றிருந்தாள்.

அவள் மகிழ்வாக இருக்கிறாள். அழகான, அன்பான குடும்பம். ஆக, இப்பொழுது அவளின் எதிர்பார்ப்பு அவனுடைய மகிழ்ச்சி தான். அவன் எப்படி இருக்கிறான்? அவனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது? என்பது மட்டுமே அவள் அறிய வேண்டியது. இத்தனை நாட்களும் அவளுக்கு இந்த எண்ணங்கள் எழும் தான். ஆனால், இத்தனை நாட்களாக புறக்கணித்தவளால், வெறுமனே வேண்டுதல்கள் மட்டும் வைத்தவளால், இன்று அவனை நேரில் கண்டதும் புறக்கணிக்க முடியும் போல தோன்றவில்லை.

அவனது முகத்திலேயே பார்வையை நிலைகுத்தி வைத்ததாலோ என்னவோ அவளுக்கு அந்த வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. தொய்வான முகம். நிராதரவான தோற்றம். எப்பொழுதுமே அவனது முகம் நிச்சலனமாகத்தான் இருக்கும். ஆனால், இன்று இன்னும் ஏதோ குறைவது போல… எந்த களையும், துறுதுறுப்பும் இல்லாதது போல. அவள் மனம் கனத்தது.

அவனை இந்த நிலையில் பார்த்த பிறகு, வெறுமனே கடந்து போக அவள் மனம் ஒப்பவில்லை. அவனைப்பற்றி அறிந்து கொள். அவன் என்ன செய்கிறான், எப்படி இருக்கிறான் என்று தெரிந்து கொள் என அவளின் மனம் தனது விண்ணப்பங்களை அவளிடம் ஓயாது அணிவகுத்து அனுப்பிக் கொண்டிருக்க, அதை அவளால் புறக்கணிக்கவே முடியவில்லை. அந்த கனத்தை தாங்கவே முடியாமல் தவித்துப்போனாள்.

மனம் உந்தித்தள்ள அதை புறக்கணிக்கவே இயலாமல் படப்படப்போடு குழந்தையை கணவனிடம் நீட்டியவள், “ஏங்க, சுதர்ஷன்… நான் போய் பேசவா?” என அதீத தயக்கத்துடன் திக்கித்திணறி கேட்டுவிட்டு கணவனின் முகம் பார்த்து நின்றாள். அவளுக்கே அது சரியா? தவறா? என்று தெரியவில்லை. மனதின் குடைச்சலும், பாரமும் தாங்க முடியாமல் தான் கேட்டிருந்தாள்.

திவாகரனாலும் அவளுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது போலும். “ஒருத்தங்க கிட்ட பேசறதுல எதுவும் தப்பிருக்கா?” என்ற பதில் கேள்வியின் மூலம் அவனுடைய சம்மதத்தை மறைமுகமாக வழங்கினான். புரிதல் ஒரு வரம். அந்த வரம் தந்தவனை நன்றி சொல்லி தள்ளி நிறுத்தும் பந்தம் அல்ல அவர்களது. இருவரும் மனமொத்த, ஆத்மார்த்த தம்பதிகள்.

திவாகரன் சம்மதம் தந்ததும், சிறுபிள்ளையின் பூரிப்போடு பூர்ணிதா சுதர்ஷனை நோக்கி விரைந்திருந்தாள். “எப்படி இருக்க?” இந்த இரண்டு வார்த்தைகளை அவனின் பக்கவாட்டில் நின்று கேட்பதற்கே அவளின் மொத்த தைரியமும் வடிந்து விடும் போலிருந்தது. இப்பொழுது ‘இவன் என்ன நினைத்துக் கொள்வானோ?’ என்னும் தவிப்பு அவளுள் வந்து ஒட்டிக்கொண்டது.

திடீரென்று கேட்ட தன்னவளின் குரலில் சுதர்ஷனின் உடலில் எதுவோ ஒன்று தலை முதல் கால் வரை பரவியது. அவனுள் ஏதோ ஒருவித நடுக்கம் தோன்றி மறைந்தது. ‘அவள் தானா?!?’ மனம் அதிர, அதன் படபடப்பு அதிகரிக்க, அசைய முடியாத கற்சிலைபோல மாறியிருந்தான். ஒருகணம், அவனால் அந்த நொடியை நம்பவே முடியவில்லை.

உறுதிப்படுத்திக் கொள்ள திரும்பியவனின் முன்னே, அவள் தான் நின்றிருந்தாள். மிகுந்த தவிப்பான பாவனையுடன். சற்றே கலங்கிய விழிகளுடனும், கலக்கமான முகத்துடனும். ‘என்னவாயிற்று இவளுக்கு?’ என்று அவனது புருவங்கள் முடிச்சிட்டன. மனமும் கலங்கியது. அவனது நிராதரவான நிலையிலும், அடுத்து என்ன செய்வது என அறியாத சூழலிலும், யாருமற்ற தனிமையில் கலங்கி தவிக்கும் இந்த நேரத்திலும்… அவள் நலனே அவனுக்கு பிரதானமாய்ப் பட்டது. ஆயிரம் இருந்தாலும் அவன் போற்றி பாதுகாக்கும் நேசம் அவள் தானே!

எதுவுமே பேசாமல் திரும்பிப் பார்த்தவனிடம், மீண்டும் திக்கித்திணறி, “எப்படி இருக்க…?” என்னும் கேள்வியை மீண்டும் எழுப்பினாள் பூர்ணிதா. பேசுவது இத்தனை சிரமமாக இருக்கும் என்று அவள் நினைத்ததே இல்லை. இப்பொழுது, ஒவ்வொரு வார்த்தை உதிர்க்கவும் திண்டாடிப்போனாள்.

அவளையே ஆழ்ந்து பார்த்தவனின் விழிகள், ‘நீயில்லாமல் எப்படி இருந்துவிடப் போகிறேன்?’ என அவளிடம் கேட்டது. அவள் இதயம் படபடக்க, தொண்டை அடைத்தது. அவனோ, “ஹ்ம்ம் ஓகே” என்ற பதிலை கூறியபடி, “நீ…?” என்றான் அவளின் நலனை அறியும் பொருட்டு.

அவள் சொல்லித்தான் அவளது தற்பொழுதைய நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் நிலை அவனுக்கு இல்லை. சமூக வலைத்தளங்களில் அவளும், அவள் கணவனும் பதிவிடும் சிறுசிறு பதிவுகளை கூட விட்டு வைக்க மாட்டான். அறிந்தவர், தெரிந்தவர்கள் மூலம், அவளது நலனை அறிந்து கொண்டே இருப்பான். அவனுடைய மகிழ்ச்சியின், நிம்மதியின் ஆணிவேரே அவள் மகிழ்வு தான். அவனை உயிர்ப்போடு வைத்திருக்கும் விஷயமும் அதுதான்!

பூர்ணிதா ‘யாருடன் வந்திருக்கிறான்?’ என்பது போல சுற்றிலும் பார்வையை ஒட்டியபடி, அவனிடம் மீண்டும் கேட்க மனதினில் ஒத்திகை பார்த்த கேள்வி, “எப்படி இருக்க?” என்பதனையே! ஏனென்றால் முன்பு அவன் கூறிய பதிலில் உண்மையும் இல்லை. அது நம்பும்படியும் இல்லை.

ஆனால், மீண்டும் அதையே கேட்க இயலாதே என்னும் எண்ணத்தில், “யார் கூட வந்த?” என்று கேட்டாள். “நான் மட்டும் தான்…” என்றான் ஒற்றைவரியில்.

அவன் எப்பொழுதுமே மௌனமாகத்தான் இருப்பான். அதிகம் யாரிடமும் பேச மாட்டான். ஆண் நண்பர்களிடம் எப்படியோ? தோழி என்ற வட்டாரத்தில் அவளைத்தவிர யாரும் இருந்ததில்லை. அவளிடம் மட்டும் விதிவிலக்காய் சற்று அதிகம் பேசுவான். இப்பொழுது நான்காண்டுகள் பிரிவோ இல்லை அவளது திருமதி என்கிற அடையாளமோ அவனை மொத்தமாக தள்ளி நிறுத்தியிருந்தது.

இப்படி ஓரிரு வார்த்தைகளில் அவன் பதில் கூற, அவளுக்கு தவிப்பு அதிகமானது. ஏற்கனவே, அவனிடம் பேசுவது சரியா? தவறா? என்று புரியாமல் குழம்பியவள், அவனது இப்படியான பதிலில் மிகவும் பரிதவித்தாள். அவளுக்கும் அவனிடம் பேசி பழக ஆசை எல்லாம் இல்லை. அனைத்தும் மறக்க முயற்சிப்பவனிடம் எந்த நினைவுகளையும் தூண்டிவிடும் எண்ணம் இல்லை. ஆனாலும், அவன் நிலை அறிய வேண்டியதிருக்கிறதே! அவளுடைய மனம் அதை ஓயாமல் அறிந்து கொள்ள சொல்லி நித்தமும் போராடுகிறதே! அதற்கு அவனிடம் பேசித்தானே ஆக வேண்டியதாய் இருக்கிறது.

சுதர்ஷன் தான் முதலில் நேசிக்கத் தொடங்கினான். வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ளாமலேயே பூர்ணிதாவே புரிந்து கொண்டாள். அப்பொழுதிலிருந்து ஏதாவது சண்டையிட்டு அவனிடம் பேசாமல் இருப்பதே அவளுக்கு வேலையாய் இருந்தது.

என்னதான் சண்டை என்றாலும் அதிகம் நீடித்ததில்லை. சில மாதங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கிவிடும். பிறகு அவளாகவே “இதெல்லாம் ஒத்து வராது. எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க” என்று நேரடியாகவே சொல்ல தொடங்கி விட்டாள். அவன் காதலை பகிரும் முன்பே, திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்பது போல பேசிய அதிமேதாவி அவள்.

ஆனால், ஒருநாளும் அவளால், “உன்னை எனக்கு பிடிக்கவில்லை” என்று சொல்லி புறக்கணிக்க முடிந்ததில்லை. அது ஆழ்மனதில் அவள் சேமித்து வைத்திருந்த ரகசியம். அதை திறந்து பார்க்கும் எண்ணம் அவளுக்கு இருந்ததே இல்லை. ஏனென்றால் விடை என்னவாக இருந்தாலும் இது நடக்க வாய்ப்பில்லை என்பதை அவள் தெளிவாக அறிந்தது தானே!

ஆனாலும், அவளின் ஆள் மனதில் ஒரு அடியாளத்தில் அவன் கேள்விக்கான பதில் இருக்கத்தானே செய்யும். அவனை பிடிக்குமா? பிடிக்காதா? என்ற கேள்விக்கான பதிலை, அந்த புதையலை இதுவரை அவள் திறந்து பார்த்ததே இல்லை. அதன் பதில் என்னவாக இருந்தாலும், இது நடக்க வாய்ப்பில்லையே!

அவனுக்கும் அவள் நிலை தெரியும். அதனால் தானோ என்னவோ நேரடியாக அவன் காதலை அவளிடம் சொன்னதேயில்லை. சொல்லி அவளை சங்கடப்படுத்துவானேன் என்பது அவனது எண்ணம்.

அப்படி போற்றி பாதுகாத்து வெளியிட முடியாமல் தவித்த நேசம், குறைந்தபட்சம் அவன் நலத்தை கூடவா எதிர்பார்க்கக் கூடாது. அதை அறிந்து கொள்ள வந்தால், பிடிகொடுத்து பேச மாட்டேன் என்கிறானே என்ற தவித்துப் போனாள்.

அதே தவிப்புடன், “நான் உன்கிட்ட பேசக்கூடாதா? பேசறது தப்பா?” என அவனிடமே நியாயம் கேட்டாள். அவள் எங்கே அறியப்போகிறாள் அவள் தானாக வந்து பேசியதில் மனபாரம் குறைந்ததைப் போன்று அவன் உணர்கிறான் என்று. அவளை நேரில் கண்டதும் ஏதோ தீமைகள் எல்லாம் விலகியதைப் போன்று உணர்கிறான் என்று.

இப்பொழுது அவளுடைய கேள்வியில் சுதர்ஷனுக்கு கோபம் தான் கிளர்ந்தது. ‘அவள் அவனிடம் பேசக்கூடாதா?’ என்ன அனர்த்தமான கேள்வி இது. மனம் தவித்தது அவனுக்கு. ‘என்ன கேட்டுவிட்டாள் இவள்?’ என்பதாக.

அவன் போற்றி பாதுகாக்கும் நேசம் அவள். அவள் தான் எல்லாம் என்று எண்ணியிருந்தவனிடம், விதி வலிக்க வலிக்க அவனிடமிருந்து அவளை பிரித்தெடுத்து நான்காண்டுகள் ஆகிறது. தனக்கே, தனக்கான உரிமை என்று எண்ணியிருந்த ஒன்றை, உனக்கு இது கிடையவே கிடையாது என்று வலுக்கட்டாயமாய் பறிக்கப்பட்ட வலியும், வேதனையும் இன்னமும் அவன் மனதில் ஆறாது இருக்கிறது. அவனைப்பார்த்து இப்படி கேட்டுவிட்டாளே என்று சினந்தான்.

அவளது கேள்வி பிடிக்காத பாவனையில், “ம்ப்ச்” என்றான் வலது கையை காற்றில் அசைத்தபடி. அவள் கேள்வியில் இருந்த அபத்தம் பிடிக்காத முக பாவனை. கூடவே, ‘என்ன கேள்வி இது?’ என்றொரு எரிச்சல்.

இது போன்ற செய்கைகள் அவனது வழக்கம் தான். ஓரிரு வார்த்தைகள் பேசுவான். மற்றபடி அவனது எண்ணவோட்டத்தை விளக்குவது அவனது முகபாவனைகளும், உடல்மொழிகளும் தான். முன்பு அவளிடம் மட்டும், சற்று மனம்விட்டு பேசுவான். இப்பொழுது மீண்டும் பழைய நிலை தான்.
அவனது பாவனைகளிலேயே புரிந்து கொண்டாள், அவள் அவனிடம் பேசிக் கொள்ளலாம் என்று. அவளுக்கும் அவனிடம் பேச வேண்டியது இருக்கிறதே! அவனது அனுமதி அவளுள் நிம்மதியை பரப்பியது.

ஆசுவாசமாய் மூச்சு விட்டவளின் விழிகளில் அவன் கரங்களில் இருந்த கவர் விழுந்தது. கரங்களைப் பார்த்து, “கையில் என்ன?” என்று கேட்டாள். கூடவே, “ஆமா, இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என அவன் முதல் கேள்விக்கு பதில் தரும் முன்பே பொறுமையின்றி அடுத்த கேள்வியை அடுக்கி விட்டாள்.

அந்த கவரையே அவள் பார்த்தபடி இருக்க, எதுவும் பதில் கூறாமல் கரங்களில் இருந்த கவரை அவளிடம் நீட்டினான். இன்னும் பிரிக்கப்படாமல் இருந்தது. அதனைப்பிரித்து பார்த்தாள். ஒரு பெண்ணின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமும், அவளுடைய விவரங்கள் அடங்கிய தாள்களும் இருந்தது.

தனது கைப்பேசியில் அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்துக் கொண்டாள். பெண் அழகாக இருந்தாள். பூர்ணிதாவின் கண்களுக்கு பேரழகாய் தெரிந்தாள். அதையே அவனிடமும் வாய்விட்டு கூறியவள், பேச்சை வளர்க்க வேண்டுமே! இல்லையெனில் இந்த மௌனமானவனிடம் இருந்து எதையும் தெரிந்து கொள்ள இயலாதே என்பதனால், “யார் தந்தாங்க?” என்றாள் கேள்வியாக. உடனேயே எதையோ யோசித்தவளாய், “அம்மா அனுப்பி வெச்சாங்களா? என்ன கோவில்ல போய் சாமிகிட்ட வெச்சு பிரார்த்தனை பண்ணிட்டு பாக்க சொன்னாங்களோ?” அதற்காகத்தான் கோவில் வந்திருப்பான் என்ற அனுமானத்தில் ஆவல் பொங்க அவள் கேட்க,

தாயைப் பற்றி பூர்ணிதா கேட்டதுமே, சுதர்ஷனின் மனம் கலங்கி விட்டது. தாயின் நினைவில் விழிகளும்.

அவனது கலங்கிய விழிகளும், அந்த கவரில் எந்தவித விலாசமும் இன்றி வெற்றிடமாய் இருந்ததும் அவளுக்குள் எதையோ உணர்த்த, அவளது அனுமானத்தில் அவளுமே கலங்கிப் போனாள். அவன் எதை சொல்லிவிடக் கூடாது, என்று அந்த சில நொடி மௌனத்திலும் ஓயாது பிரார்த்தித்தாளோ அதே விஷயம் அவளுடைய செவிகளில் இடியாய் விழுந்தது.

“அம்மா இப்போ இல்லை” என்ற சுதர்ஷனின் குரல் அவளது செவிகளில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட, என்ன முயன்றும் நிற்காமல் விழிநீர் சுரந்தது.

அழுத விழிகளை துடைத்தவாறே, “அம்மாக்கு என்ன ஆச்சு” என கேட்க, ‘இப்போ அதைப்பத்தி பேசாதே!’ என்று இறைஞ்சலாக அவளைப் பார்த்தான்.

சிறிது நொடிகள் மௌனத்தில் கரைந்தது. முயன்று தனக்குள் அழுகையை விழுங்கினாள். இன்று விட்டால், இனி சுதர்ஷனை காணும் வாய்ப்பு எப்பொழுது கிடைக்குமோ? அதற்குள்ளாக அவனின் சூழலைப் பற்றி, அவன் நலத்தைப் பற்றி தெளிவாக பேசிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவள் “சாரி…” என்றாள் மென்குரலில். சிறு தலையசைப்பு மட்டுமே அவனிடமிருந்து விடையாய் வந்தது.

பேச்சை அவளுக்கு வேண்டிய திசையில் மாற்றும் விதமாக, “இந்த கவரை யார் தந்தாங்க?” என்று கேட்டாள். எப்படியும் இடைத்தரகர்களாகத்தான் இருக்கும் என்று அவளுக்கு தெரியும். இருந்தும் அவனது திருமணம் தொடர்பான பேச்சை தொடங்க வேண்டுமே!

“பொண்ணு வீட்டிக்காரங்க தான் ஏன்?” என்று பதில் கேள்வி கேட்டான்.

தனது அனுமானம் தவறான ஏமாற்றம் அவள் முகத்தில். கூடவே, “புரோக்கர் தரலையா?” என கேட்க,
“ஆமா பொண்ணு போட்டோ எல்லாம் தருவாங்களா? நினைப்பு தான். புரோக்கர் ஜாதகம் மட்டும் தந்து கொஞ்சம் விவரம் சொன்னாரு. அவ்வளவுதான். இந்த பொண்ணு வீட்ல ஜாதகம் பார்த்து, என்னைப்பத்தி விசாரிச்சு, என்னை நேர்ல பாத்து கேள்வியா கேட்டு… அப்பறமா இதை தந்தாங்க” என்றான். அவளிடம் பேசி விட்டான் வழக்கம்போல. வந்ததிலிருந்து அவன் பேசியதில் சற்று நீளமான விளக்கம் இதுதான். அவளுக்கு அதுவே சற்று நிம்மதியை தந்தது.

அவன் முகத்தில் இருக்கும் களைப்புக்கும், சோர்வுக்குமான காரணத்தை கண்டறிந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது. சற்றே ஆசுவாசமானாள்.

1 Like

story nalla iruku, but rombha ilukkara madhiri iruku, adhaiyae suthi suthi vara feel…

1 Like

oh sari da… actually nan eluthuna epi miss agiduchu… avasarama one hour la marubadiyum eluthunen… so ena viten, ena sonene therila… tension agiten… next epi kavanama iruken… intha epi mudinja marubadi edit panaren…

1 Like

ok akka…

1 Like