நிசப்த மொழி - 03

நிசப்த மொழி - 03
0

நிசப்த மொழி - 03

சுதர்ஷனின் சலிப்பான பதிலில் பூர்ணிதாவிற்கு புன்னகை தான் வந்தது. “பின்ன பொண்ணு போட்டோ பாக்கிறது அவ்வளவு சுலபம்ன்னு நினைச்சியாக்கும்?” என்று அவனிடம் கேட்டவள், தனது கைப்பேசியில் அவளது புகைப்படத்தையும், விவரங்களையும் புகைப்படங்களாக எடுத்துக் கொண்டாள்.

அவளது கேள்விக்கு ஒரு பதிலும் கூறவில்லை. அவன் எதுவும் பேசாமல் இருக்க, “என்ன?” என்றாள். “மூணு வருஷமா கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கிறோம். இப்போ தான் முதல் முறை என்னை நம்பி ஒரு பொண்ணு போட்டோவே கொடுத்து இருக்காங்க” என்றான்.

‘இவனுக்கு என்ன குறை? ஏன் இவனை புறக்கணித்தார்கள்?’ என்று தான் தோன்றியது அவளுக்கு. அவளே ஒரு காலத்தில் அவனை நிராகரித்தவள் என்பதை மறந்தாளோ?

‘உன்னை புறக்கணித்தார்களா?’ என்ற திகைப்புடன் பூர்ணிதா அவனை நோக்கவும்,

அவளின் விழிகளின் வழி அவள் கேள்வியை புரிந்து கொண்டவனோ, “அநாதையை நம்பி எவன் பொண்ணு தருவான்?” என்றான் ஏளனத்தில் உதடு பிதுக்கி. அவனது வார்த்தைகளில் கோபம் ஏறியது அவளுக்கு.

“என்ன பேச்சு பேசற? அநாதை அது இதுன்னு. அம்மா, அப்பா தான இல்லை. அதுவும் இப்ப சமீபமா. உனக்கு ஒரு அண்ணன் இருக்காங்க. சொந்த பந்தம் எல்லாரும் இருக்காங்க. கண்டதையும் பேசாத” என இறைஞ்சியவள், “ஆமா, இந்த கவர் எப்போ வாங்குன?” என்ற கேள்வியை எழுப்பினாள். ‘ஏன் இன்னும் பிரிக்கப்படவில்லை?’ என்ற அவளுடைய வினா தொக்கி நின்றது அந்த கேள்வியில்.

அவள் முதலில் பேசியதை ஒதுக்கியவன், தற்போதைய கேள்விக்கு பதிலாக, “இப்ப தான்” என்றான். “ஓ அதான் இன்னும் பிரிக்காம வெச்சிருக்கியா?” என்றவள் கேட்க,

“இன்னும் எதுவும் உறுதியா இல்லை. அவங்க பக்கம் சரின்னு சொல்லட்டும். அப்பறமா பாத்துக்கலாம்” என்றான் விட்டேரியாக. ‘இவர்கள் என்ன காரணம் சொல்லி நிராகரிக்கப் போகிறார்களோ?’ என்னும் சலிப்பு அவனுக்கு.

ஆனால், அதற்கெந்த அவசியமும் இல்லை. ஏனென்றால், கயல்விழிக்கு இவனை மிகவும் பிடித்துவிட்டது. தனக்கு தேவையானதை அடைந்து கொள்ளும் சாமர்த்தியம் அவளிடம் நிறையவே இருந்தது. வீட்டின் செல்லம் அவள். எங்கு எப்படி பேசினால், எப்படி சாதிக்கலாம் என்னும் நுட்பம் அறிந்த பெண். மொத்தத்தில் அந்த குடும்பத்தின் சுட்டி தேவதை. இவன் வாழ்வில் தன்னை அழகாய் நுழைத்துக் கொள்ளும் திறமையும், உறுதியான எண்ணமும் கொண்டவள் தான். அதை சுதர்ஷன் அறிய வாய்ப்பில்லையே!

அவனுடைய சலிப்பில், “உனக்கென்ன குறை? உன்னை போய் பிடிக்காம போகுமா?” கடைசி வார்த்தைகள் ஸ்ருதி இறங்கி தான் வெளிவந்தது பூர்ணிதாவிற்கு. அவள் அவனை வேண்டாம் என்று சொல்லாமல் சொன்னவள் தானே!

அவனும் அதே எண்ணத்தோடு அவளை ஆழ்ந்து பார்க்க, அவள் மீண்டும் தடுமாறினாள். தனது தடுமாற்றத்தின் பொருட்டு தன்னையே நொந்து கொண்டவள், பேச்சின் திசையை அவனது திருமண விஷயத்தில் திருப்பும்படி, “ஆமா, பொண்ணு வீட்டுக்காரங்களை பார்க்க, நீ மட்டுமா வரது. அண்ணாவோட வந்திருக்க வேண்டாமா?” என்றாள். ஏதோ அவன் செய்த தவறை சாமர்த்தியமாக கண்டுபிடித்தது போன்ற பாவனை அவள் முகத்தில்.

“வந்தா கூட்டிட்டு வர மாட்டேனா?” என்று முகத்தில் ஒருவித பாவனையும் இல்லாமல் கூறினான்.

“ஏன்? ஏன் வரமாட்டாங்க? நீ அவங்க கல்யாணத்தை பாத்து பாத்து நடத்தி வெச்ச. உன்னோட சேமிப்பு எல்லாத்தையும் கொடுத்த. இப்ப உன் கல்யாணம் அவங்க நடத்தாம போய்டுவாங்களா என்ன?” அவளால் அவன் கூறியதை நம்பவே முடியவில்லை.

அம்மா, அப்பா இல்லாத பையன். குடும்பத்தின் மூத்தவனான அண்ணன் இந்த நிலையில் இவனை ஒதுக்கி வைக்க முடியுமா? அதுவும் அவன் திருமணத்திற்காக பெருமளவு தொகையை சேமித்து தந்த தம்பியை?

ஆனால், சில பொறாமை மனிதர்கள் சூழ்ந்த உலகம் இதுவாயிற்றே! அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நமக்கும் ஆசை தான். ஆனால், அது சாத்தியமில்லையே! சுதர்ஷனின் அண்ணன் பிரகாஷ் அவனின் மனைவியின் சொல் கேட்டு நடப்பவன். அதன்படி தற்பொழுது தம்பியின் பொறுப்பை ஏற்க விரும்பாதவன். மேலும் அவனை புறக்கணிப்பவன்.

அவளது நம்பாத பாவனையை பார்த்தவன், “இல்லை அவனுக்கு என்னை பிடிக்கலை” என்றான் கரகரப்பான குரலோடு.

“என்ன பிரச்சினை?” ஏதாவது குடும்ப தகராறாக இருக்கும் என்ற ஊகத்தில் வேகமாக கேட்டாள்.

“ஊருல இருக்க இடம் விக்கணும்ன்னு கேட்டான். நான் வேணாம்ன்னு சொன்னேன்” என்றான் இரத்தின சுருக்கமாக.

“அதுக்காக உன்னை கண்டுக்க மாட்டாங்களா? உனக்கு தேவையானதை செஞ்சு வெக்க மாட்டங்களா? உனக்கு யாரு பொறுப்பு?” என கவலையோடு பூர்ணிதா கேட்க,

“நான் என்ன குழந்தையா? என்னை நானே பாத்துப்பேன்” என்றான் சூடாக.

“அப்ப உனக்கு நீயே தான் பொண்ணு பாத்துக்கணுமா? உங்க அண்ணாவால எப்படி இப்படி ஒதுக்க முடியுது?” மனம் ஆராமல் கேட்டவளின் விழிகளில் நீர் சுரந்திரந்தது. அவனது அண்ணனின் ஒதுக்கத்தை அவளால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் பெற்றவர்கள் இல்லாமல் இருக்கும் இந்த நிராதரவான நிலையில்.

“நான் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். அவன் பேசாதேன்னு சொல்லிட்டான்” என உணர்வுகள் ஏதுவுமற்ற குரலில் அவன் கூற, அவளுக்கு தான் அத்தனை தவிப்பாய் போனது. அவன் நலத்தை கூடவா எதிர்பார்க்க கூடாது மனம்? அவனை இந்த சூழலிலா கடவுள் நிறுத்தியிருக்க வேண்டும்?

“என்ன ஆச்சு?” என்றாள் மீண்டும். அதுமட்டும் காரணமாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றவில்லை அதனாலேயே மீண்டும் இந்த கேள்வி. ஆனால், உண்மையில் அந்த விஷயம் தான் முக்கிய காரணம்.

“சும்மா ஏன் அதையே கேக்கிற. விடு” என்று மீண்டும் சிடுசிடுத்தான்.

“சரி அம்மாக்கு என்ன ஆச்சுன்னு சொல்லேன்?” அதையாவது தெரிந்து கொள்வோம் என்னும் எண்ணத்தில் அவள் கேட்க,

“விடுன்னு சொன்னேன். என்னால மேனேஜ் பண்ண முடியும்” என இறைஞ்சினான். முடியுமோ, முடியாதோ நான் தான் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்ற பாவனையில் அவன் கூறுவதாகவே அவளுக்கு பட்டது.

அவன் அவளை உருகி உருகி நேசித்தபோதே அதிகம் பேசாதவன், இப்பொழுது நான்காண்டுகள் கழித்து வந்து நலம் விசாரிப்பவளிடம் பேசிடுவானா என்ன? ஆனால், அவளும் விடுவதாக இல்லை.

“அண்ணா கூட என்ன பிரச்சனை? பணமா? அண்ணியா?” அவன் சொல்லாமல் விட்ட விஷயத்தின் நாடியை பிடித்து கேட்டாள். நான்காண்டு திருமண வாழ்க்கை அவளுக்கும் குடும்பத்திற்குள் நடக்கும் பூசல்களை ஓரளவு புரிய வைத்திருந்தது. அதன் வெளிப்பாடு அவளது பேச்சிலும் எதிரொலித்தது.

அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன், “அண்ணியா இருக்கலாம். இதை இத்தோட விடு” என்றான் மீண்டும் அழுத்தமாக. கூடவே, “யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். நீ கேட்கவும் சட்டுன்னு சொல்லிட்டேன்” என்றும் சேர்த்து சொல்ல,

“தெரியும்” என்றாள் அவள். முன்பே அவன் ஓரளவு மனம்விட்டு பேசியது அவளிடம் மட்டும் தான். பிற தோழர்களிடம் எப்படியோ தெரியவில்லை. அவளிடம் அந்த மௌனமானவனுக்கு சற்று பேச்சு வரும்.

“என்ன தெரியும்?” என அவன் பார்க்க, “என்கிட்ட மனசுவிட்டு பேசறேன்னு தெரியும். ஆனா, முழுசா இல்லை” என்று கசப்போடு கூறியவள், ஒரு சிறு மௌனத்தின் பின், “அதுவும் சரிதான். இதுவரை உன்கிட்ட நான் பேசலை. இப்போ திடீர்ன்னு வந்து கேட்டா, உனக்கு என்கிட்ட சொல்லணும்ன்னு என்ன அவசியம்?" என்றாள் அவள். ‘எனக்கு கேட்க என்ன உரிமை இருக்கிறது?’ என்னும் அங்கலாய்ப்பு அவள் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது.

“உளறாதே!” என்றான் அதட்டலாக. அவள் அவனை முறைத்து பார்க்கவும்,

“போடி… அதான் விட்டுட்டு போயிட்டயல்ல” என்று நிதானமிழந்த நிலையில் வார்த்தைகளை விட்டு விட்டான். என்னவோ ஒரு ஆத்திரம், தனிமைத்துயர், கோபம், ஆற்றாமை. அது அவளிடம் வெடித்திருந்தது.

‘யார் விட்டு சென்றாலும் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டு தானே இருக்க வேண்டும்’ என்று முன்பு சுதர்ஷன் எண்ணியதன் முதன்மை காரணம் பூர்ணிதாவே! அதன்பிறகு தான் மற்றவர்கள்.

அவனது சொல்லில், அதை அவன் உதிர்த்த விதத்தில் அவளுக்கு விழிநீர் பெருகியது.

அதையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆத்திரத்தில் வார்த்தையை விட்டுவிட்டோம் என்று புரிந்து மனம் நொந்தான். “சாரி… ஏதோ கோபத்தில…” என அவன் கூறவர, மென்மையாய் தலையசைத்தாள்.

“நான் உனக்கு எதுவும் நம்பிக்கை தந்தேனா? இல்லைதானே!” என்று கேட்டுவிட்டு அவன் முகம் பார்த்து நின்றாள். தவிப்பான பாவனை! அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவள் சொல்வதும் உண்மை தான் அவள் எப்பொழுதுமே அவனைவிட்டு விலகி இருக்கத்தான் பார்ப்பாள்.

“ம்ப்ச்… எனக்கு எதுவுமே இல்லைன்னு ஒரு ஆதங்கம். அதான் அப்படி பேசிட்டேன் போல. மத்தபடி மனசுல இருந்து இல்லை. எனக்கு… என்ன சொல்ல? ஹ்ம்ம் எனக்கு ஒரு மாதிரி அழுத்தமாவே இருக்கு. எனக்குள்ள தொலைஞ்சு போயிடுவேன் போல. ஒரு மாதிரி ஏமாற்றமா, எதையும் யோசிக்க விடாம, ஒருமாதிரி பரிதவிப்பா… என்ன சொல்ல… எனக்கு… என்னால… சரி விடு. ரொம்ப சாரி. மனசு வருத்தப்படாத” என்று எங்கோ தொடங்கி, எப்படியோ பயணித்து என்ன சொல்வதென்றே தெரியாமல், அவனது நிலையை வார்த்தைகளால் விளக்க தெரியாமல் முடித்தான்.

அந்த நிலையில் அவனை யார் பார்த்தாலும் அவன்மீது இரக்கம் சுரக்கும். ஆனால், அவனுக்கு வேண்டியது இரக்கம் இல்லை. ஒரு உறவு! அவன்மீது உரிமை கொண்டு, அவனும் உரிமையாய் கொண்டாட ஒரு உறவு. திகட்ட திகட்ட இல்லாவிடிலும், திட்டியேனும் பாசத்தை பொழியும் ஒரு உறவு. அவன் தேவையை அவனே தெளிவுற புரியாமல் தான் இருந்தான்.

சுதர்ஷனின் நிலை பூர்ணிதாவிற்கு நன்றாகவே புரிந்தது. தங்களை பிரித்து வைத்த விதியை நொந்து என்ன பயன்? அவள் வாழ்க்கை ஒரு அழகான சிறு கூட்டில் பொருந்தி போயிருக்கும் இந்த தருணத்தில் அப்படி எண்ணிப்பார்க்க கூட அவளுக்கு மனம் ஒப்பவில்லை.

கடந்து போனவைகளா இப்பொழுது முக்கியம்? அவன் அவலநிலை மாறுவது தானே அவசியம். ஏதாவது மந்திரக்கோல் கிடைக்காதா? மனம் குரங்கென்பதை நிரூபிக்கும் வகையில் அவளது எண்ணங்கள் எங்கெங்கோ தாவியது.

மீண்டும் மனதை இழுத்து பிடித்து சற்று நிதானித்து யோசித்ததில், அவனது பிரச்சனைகளின் ஆணி வேர் அவளுக்கு பிடிபட்டது. அவன் தனக்குள் சுருங்கிக் கொள்வது தான் காரணம் என்று எண்ணியவள் அவனிடம், “நீ முதல்ல மனசு விட்டு யார்கிட்டயாவது பேசு. உனக்குள்ளேயே வெச்சுக்க வெச்சுக்க தான் அழுத்தம் அதிகமாகும். இறுகி போவ. உன்னை கட்டிக்க போற பொண்ணுகிட்ட ஆச்சும் இனிமே மனசு விட்டு பேசி பழகு. உன் மனைவியை முதல்ல உன்னோட தோழியா பாரு" என்றாள் அறிவுரையாக.

‘திருமணத்திற்கு எந்த பெண் காத்திருக்கிறாள் நான் மணப்பதற்கு? முதலில் அவள் வரட்டும் பிறகு பார்த்துக் கொள்வோம்’ என்ற எண்ணத்தோடு, மௌனமாய் அவளை பார்த்திருந்தான்.

அவன் எதுவும் பதில் கூறாததால், “உனக்குன்னு ஒரு வாழ்க்கை நல்லபடியா சீக்கிரம் அமையும். கண்டதையும் குழப்பிக்காத” என்று அவனுக்கான அவளது கனவை, வேண்டுதலை அவனிடம் ஆறுதலாக கூறினாள். ஆருடம் போல அவள் கூறியது, அவனது மனதை சற்று இதமாக்கியது. தனக்கென யாருமில்லை என்னும் எண்ணம் விரைவில் மாறிவிடும் என்று மனம் நம்பியது.

காதல், நேசம் எல்லாம் நலத்தை எதிர்பார்க்கும் என்றால், அவளுடைய நேசமும் அதைத்தானே எதிர்பார்க்கிறது. காதலித்து இருவரும் உயிரை விட அவளுக்கு மனமில்லை. அவர்கள் ஊரில், அவர்கள் வட்டாரத்தில், அவர்கள் சமூகத்தில் ஆணவ கொலைகள் அதிகம். அதைப்பார்த்து, கேட்டு வளர்ந்தவள் அவள். ஆக, ஆரம்பத்திலேயே அவனது மனதில் நம்பிக்கை துளிர்விடும் முன்பே இவள் விலகி விட்டாள். அவன் உயிர் அவளுக்கு அதிமுக்கியம். இன்றும் அவன் நல்வாழ்வு அனைத்தையும் விட அவளுக்கு மிக மிக முக்கியம். தனக்கு அமைந்ததைப்போன்று ஒரு நல்ல வாழ்க்கை அவனுக்கும் அமைய வேண்டும் என்பது மட்டுமே அவளது ஆசை, பிரார்த்தனை, எதிர்பார்ப்பு எல்லாம். இது இவனை தற்பொழுது கண்ட பிறகு இல்லை. ஆரம்பம் முதலே இதே எண்ணமும், வேண்டுதலும் தான்.

அவனது மனநிலையை அவளால் இயன்றவரை தேற்றி அவனை விட்டு விலகி சென்றாள். இனி என்று சந்திப்போம் என்பது தெரியாததால் அவளது விழிகள் அவனை நிறைத்துக் கொண்டது. மறுமுறை அவனை காணும் சமயம் அவன் வாழ்க்கையை வண்ணமயமாய் மாற்றி விடு இறைவா என்று தன் மனதோடு நிசப்த மொழியினில் பிரார்த்தித்தவள், அவனிடமிருந்து வெகுதூரம் விலகி சென்றிருந்தாள்.

1 Like

too good akka. you are in ur form. kayal seekiram va ma

1 Like