நிசப்த மொழி - 04

நிசப்த மொழி - 04
0

சோகத்தை எல்லாம் ஓரமாக வைத்து விடலாம். இதோ கயல்விழி வந்தாச்சு :slight_smile:

நிசப்த மொழி - 04

பூர்ணிதாவை சந்தித்த பிறகு சுதர்ஷனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓரளவு மனம்விட்டு பேசிவிட்டதால் வந்த தெளிவு அவனிடம். அவளின் சந்திப்பு தனக்குள் குமைந்து கொண்டிருந்தவனை சற்று மீட்டெடுத்தது என்று கூறலாம். கடவுளுக்கே அது மட்டும் போதவில்லை போலும். அவனை முழுவதும் மீட்டெடுக்கும் தேவதையை அவனிடம் அனுப்பி வைக்க எண்ணினார்.

நிசப்த மொழியாளின் வேண்டுதலை நிறைவேற்றும் மந்திரக்கோல், தேனியில் தனது மூத்த அண்ணன் பாலாவை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணா, நானும் மதுரைக்கு வரேன் ண்ணா. கூட்டிட்டு போங்களேன். ஏன் ஒரு தடவை கேட்கும்போதே சரின்னு சொல்லாம என்னை சுத்த விடறீங்க. அப்பறம் நான் அடம் பிடிக்கிறேன், நச்சரிக்கிறேன்னு சொல்ல வேண்டியது!” அண்ணனின் பின்னேயே நூல் பிடித்தபடி ஓடிய கயல்விழி தனது கோரிக்கையையும், செல்ல நச்சரிப்புகளையும் நிறுத்தவே இல்லை.

“பாப்பா சொல்லறதை கேளேன் டா. இப்ப எப்படி கூட்டிட்டு போக முடியும்?” என இயன்ற மட்டும் மறுத்தான் அண்ணன். அவனுக்கு தெரியாதா, தங்கை அங்கு வரவிருக்கும் காரணம்.

வெகுநேரம் போராடியவள், அவனிடம் பேசி பயனில்லை என்றுணர்ந்து இன்னொரு அண்ணனை நோக்கி ஓட்டமெடுத்தாள். “அருண் அண்ணா…” தேனொழுக அழைப்பதாய் எண்ணி பெரும் சப்தத்துடன் அருணின் அறையினுள் நுழைந்தாள்.

‘இவ பேரை சொல்லி கூப்பிட்டாலே அதிசயம். இதுல அண்ணன்னு சேர்த்து வேற கூப்பிடறாளே! இதுல என்ன வில்லங்கம் இருக்கோ?’ என பதறியவன், கெத்தாகவே, “ஹ்ம்ம் சொல்லு… சொல்லு…” என்றான் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டு.

அவனது கைகளிலிருந்து கைப்பேசியை பிடுங்கி ஓரமாக வைத்தவள், “அண்ணா… அண்ணா… அண்ணா…” என அவனை பிராண்ட, “ஐயோ! பாப்பா என்ன வேணும்ன்னு கேளேன், அதை விட்டுட்டு ஏன் இப்படி புதுசு புதுசா ஏதாவது பண்ணற” என அவள் செய்கையில் பயந்தவன் பதற,

“அச்சோ போங்கண்ணா” என சோபையாக தலை சரித்து சிரித்தாள். “இப்ப எதுக்கு தூங்கி எழுந்தவ மாதிரி சிரிக்கிற?” என சந்தேகம் கேட்டான் மூத்தவன்.

“அதுக்கு பேரு வெட்கம் தம்பி” என்று அருணிடம் கூறிவிட்டு, “ஏய் அடுத்து உங்க சின்னண்ணா?” என்றபடி உள்ளே நுழைந்தாள் பாலாவின் மனைவி மஞ்சுளா.

மஞ்சுளா தான் கொண்டு வந்த நீர்மோரை கொழுந்தனுக்கு கொடுக்க, “போங்க மதனி. நீங்க தான் ஒத்துக்கலை இல்லை. ஆனா, என் அருண் அண்ணன் அப்படி இல்லை. இந்த தங்கச்சி கேட்டா, எதையும் செய்வார். நான் வேணும்ன்னா இன்னைக்கு போன் தொடாம இருக்க சொல்லட்டா?” என பேரம் பேச,

உண்மையில் அருணால் அது முடியாது. அவன் மனைவி சரண்யா பிரசவத்திற்காக தாய்வீடு சென்றிருக்கிறாள். பெண் குழந்தை பிறந்து மூன்று வாரங்கள் ஆகி இருந்தது. மனைவியிடம் தினமும் நான்கைந்து முறையாவது பேசிவிடுவான். அதோடு, அவ்வப்பொழுது குழந்தையின் புகைப்படங்கள், குழந்தையின் சிணுங்கல்கள் எல்லாம் அவனது கைப்பேசியை நிறைத்த வண்ணம் இருக்கும். அவனைப்பார்த்து இவள் இப்படி சொல்லவும், “அம்மா, தாயே! பரதேவதையே! என்ன வேணும்ன்னு நேரடியா சொல்லு, இந்த டெமோ காட்டற வேலை எல்லாம் வேணாம்” என பதறிக்கொண்டு வணங்கினான் அவன்.

“பாருங்க மதனி, எங்கண்ணன் எவ்வளவு ஆர்வமா கேக்கிறாங்கன்னு… அதுவும் எத்தனை பயபக்தியோடு பணிவா கேக்கிறார் பாருங்க” என கெத்தாக கயல்விழி கூற, மஞ்சுளாவும் அருணிடம் அவள் என்ன சொல்லப்போகிறாள் என ஆர்வமாக பார்த்திருந்தாள்.

“அண்ணா, அண்ணா, நானும் இந்த முறை பெரியண்ணன் கூட மதுரைக்கு போறேனே!” என ஆசையாக கயல்விழி கூற, நெஞ்சில் கைவைத்தான் மூத்தவன், “பாப்பா இதுக்கா எங்கிட்ட பஞ்சாயத்துக்கு வந்த, மதனி பாவம்… அண்ணங்க ரெண்டு பேரும் அதை விட பாவம். எங்களை விட்டுடு டா. போ போ வேற வேலை இருந்தா பாரு” என்க,

“மதனி அதென்ன ஓரவஞ்சனை. உங்க கொழுந்தனுக்கு மட்டும் மோர் தரீங்க. எனக்கும் கொண்டு வாங்க” என சம்மந்தமே இல்லாமல் மஞ்சுளாவிடம் சண்டைக்கு நின்றாள் இளையவள். அவள் சண்டைக்கான காரணத்தை அறிந்த அருணோ, “பாப்பா அதென்ன பழக்கம். போ… நீயே போய் குடி” என மறுக்கப் பார்த்தான். பின்னே, மதனி சென்றதும் இவள் மிரட்ட அல்லவா தொடங்கி விடுவாள்.

“விடுங்க தம்பி கொஞ்ச நாள் தானே, கல்யாணம் செஞ்சு போனதும் அங்க ஒண்டியா எல்லா வேலையும் செய்யணும்” என அவளுக்கு பரிந்துகொண்டு சமையலறை சென்றாள் மஞ்சுளா.

“என்ன லந்தா? ஏதோ மதனி முன்னாடி உன்னை மாட்டி விட வேண்டாம்ன்னு பாத்தா?” என கயல்விழி முறைக்க, “பாப்பா…” என பாவமாய் பார்த்தான் அண்ணன்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ மட்டும் என்னை அவங்களோட அனுப்பி விடலை. உன்னோட அழகு தேவதை நிர்மலா கதையை சரண்யா மதனி கிட்ட போட்டு தந்துடுவேன்” என அவனை மிரட்ட,

“இப்ப நீ மதுரைக்கு எதுக்கு போகணும்ன்னு சொல்லற?” என்றான் காரணத்தை தெரிந்து கொண்டே!

“அண்ணா, உங்களுக்கு தான் தெரியுமே!” என்றவள் மீண்டும் சோபையாக சிரிக்க, “பாப்பா இப்படி பண்ணுனா வெட்கம்ன்னு உனக்கு யாருடா சொல்லி தந்தா. பாக்க பயமா இருக்கு” என்றவன் முகத்தில் மிரட்சியை காட்ட, மஞ்சுளாவும் புன்னகைத்தபடியே உள்ளே நுழைந்திருந்தாள்.

“என்னோட படிச்சாலே நிர்மலா…ன்னு ஒருத்தி, அவ தான் இவ்வளவு அழகா… வெட்கப்படுவாண்ணா” என நீட்டி முழக்கி அவள் பதில் கூற, ‘இம்சை! இம்சை! இவ தொல்லை தாங்க முடியலையே!’ என மனதிற்குள் நொந்தான் அண்ணன்.

பிறகு மஞ்சுளாவிடம் திரும்பி, “மதனி, அண்ணன் எங்க இருக்கான்?” என கேட்க, “அங்க ரூம்ல தான் தம்பி. எதுக்கு கேக்கறீங்க?” என்றாள் கேள்வியும், ஆச்சர்யமுமாய். அதற்குள் கயல்விழி இவனை சமாளித்து விட்டாளா என்பதான பார்வை.

“பாப்பா தான் ஆசைப்படறாளே மதனி அதுக்குத்தான்…” என அருண் இழுக்க, “அதுக்குள்ள உங்களை சரி கட்டிட்டாளா? அப்படி மோர் எடுத்துட்டு வரதுக்குள்ள என்ன சொன்னா?” என்றவள் தனது சந்தேகத்தை வாய்விட்டே கேட்டு விட்டாள்.

“அத பிறகு பேசிக்கலாம். அண்ணனை கூப்புடுங்க மதனி” என அவசரமாக பேச்சை மாற்றினான் அருண். அவனின் செய்கையில் வாயிற்குள் புன்னகையை அதக்கிக்கொண்டாள் கயல்விழி. அதோடு இது அவளின் தேவை என்பதால் குடுகுடுவென பாலாவிடம் ஓடியவள், அருண் அழைப்பதை சொல்லி அவனை கையோடு அழைத்துக் கொண்டு அருணின் அறைக்கு வந்துவிட்டாள்.

அங்கு அருண் வேறு வழி இல்லாமல் தங்கைக்காக பேச, அண்ணனும், மதனியும் மறுக்க, இவன் மீண்டும் பேச, இறுதியில் மூவரும், “இப்ப மதுரைக்கு எதுக்கு?” என கயல்விழியிடம் கேள்வி கேட்டு நிறுத்தினர்.

“அது… வந்து…” என அவள் மென்னகையுடன் தயங்க, “பாரு பாப்பா, இத்தனை நாளா நாங்க கூப்பிட்டப்ப நீ வந்ததே இல்லை. இப்போ வரேன்னு சொன்னா அப்பாங்க கேள்வி கேட்பாங்க டா. அதுவும் உனக்கு கல்யாணம் பேசற இந்த நேரத்துல கண்டிப்பா விட மாட்டாங்க…” நிலைமையை விளக்க பாலா முயற்சிக்க,

“இல்லைண்ணா அங்க மதுரையில யாரு இருக்காங்க. வீடெல்லாம் வேற எப்படி போட்டு வெச்சிருப்பாங்களோ! புதுசா கட்டுனது வேற! என்ன பொருள் எல்லாம் இருக்கோ, என்னோவோ? அதான் போய் கொஞ்சம் ஒழுங்கு படுத்தி வெச்சுட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்” என்று சின்னவள் கூற, மற்ற மூவரும் வாயடைத்துப் போயினர்.

பின்னே, அவள் சென்று ஒழுங்கி படுத்தி வைக்கிறேன் என்று சொல்வது சுதர்ஷனின் இல்லத்தை. இந்த திருமண வரனையும் மற்ற வரன்களைப் போன்று சாதாரணமாகத் தான் தொடங்கினர். மணமகனுக்கு நெருங்கிய உறவு என்று பெரிதாக யாரும் இல்லை. தாய், தந்தை இப்பொழுது இல்லை. அண்ணனோடு சுமூக உறவு இல்லை. அதோடு அவன் தேனியில் வேலை பார்க்காமல் மதுரையில் வேலை பார்க்கிறான் என்பது போன்ற குறைகள் எல்லாம் இவர்களுக்கு உறுத்தலாகத் தான் இருந்தது.

ஆனாலும், அவனே அவன் சொந்த முயற்சியில் மதுரையில் ஒரு வீடு கட்டியிருக்கிறான் என்பதும், உறவு வட்டாரத்தில் அவனைப் பற்றி நல்லவிதமாக சொன்னதும், பூர்வீக சொத்தை விற்க ஒத்துழைக்கவில்லை என்பதும் அவன்மீது இருந்த மதிப்பை வெகுவாக உயர்த்தியது. அதனாலேயே பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு சென்றது.

நேரில் சென்று பார்த்த வந்த அந்த குடும்பத்தின் மூத்தவர்கள் இருவருமே திருப்தியாக தான் உணர்ந்தனர். அதோடு அன்றிரவே, இவர்களின் நெருங்கிய உறவினர் பையன் ஒருவன் தன் தந்தையுடன் இவர்கள் வீடு தேடி வந்து… சுதர்ஷனை கயல்விழிக்கு பார்ப்பதாக கேள்விப்பட்டதாக சொல்லி, ‘அவன் என் நண்பனின் நண்பன் தான். மிகவும் அருமையான பையன்’ என்றெல்லாம் ஆஹா, ஓஹோ என்று அவனது புகழ் பாடி, கொஞ்ச நஞ்சம் இருந்த தயக்கத்தையும் தூர விரட்டி விட்டான். அந்த பையன் மிகவும் நல்ல மாதிரி என்பதோடு, அந்த குடும்பத்தின் மீதும் இவர்களுக்கு பெருமதிப்பு என்பதால், அதன்பிறகு மறுபேச்சே இல்லை என்னும் நிலை. கிட்டத்தட்ட திருமணத்தை உறுதி செய்தது போன்று.

இதற்கு உபயம் பூர்ணிதா தான். கோவிலிலிருந்து சென்றதுமே, கணவனிடம் விஷயத்தை கூறி, ‘ஏதாவது உதவ வேண்டும் போல இருக்கிறது’ என்று கேட்டிருக்க, திவாகரனும், அவளின் கைப்பேசியில் இருந்த பெண்ணின் விவரங்களைப் பார்த்து, அந்த ஊரில் தனக்கு இருக்கும் நண்பனை பிடிக்க, நல்லவேளை அவனும் கயல்விழியின் உறவினன்.

திவாகரன் ராஜாவிடம் பேச வேண்டிய விதத்தில் பேசியதில், இப்பொழுது ராஜா தனது தந்தையுடன் கயல்விழியின் வீட்டில்.

அனைத்தும் பூரண திருப்தி உறுதி என்னும் நிலையிலேயே கயல்விழியிடம் அவளின் விருப்பம் அறிந்து கொள்ள புகைப்படம் காட்டப்பட்டது. இத்தனை நாட்களாய் நடந்த பேச்சு வார்த்தைகளில் அவன்மீது மதிப்பும், பிடித்தமும் வந்திருக்க, அந்த புகைப்படத்தில் இறந்தவனின் இறுக்கமான முகம் அவள் மனதை முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டது.

அப்பொழுதே முடிவெடுத்து விட்டாள். அவன்தான் அவளுக்கு எல்லாம் என்று. ஆனால், அவள்தான் அவனுக்கு எல்லாமுமாய் மாறப்போகிறாள் என்பதை காலம் முன்பே தீர்மானித்திருந்தது.

அவள் மனதை அப்பொழுதே தன் தமையன்கள் இருவரிடமும் கூறிவிட்டாள். இனி பெற்றவர்கள் மறுக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது அவர்களின் பொறுப்பு என்பதாக. அவர்களும் அவளது மகிழ்ச்சிக்கே முன்னுரிமை தந்தார்கள். அதோடு மறுக்கவும் காரணம் எதுவும் இல்லையே. ஏற்கனவே உறுதி தானே!

இந்த நிலையில், இப்பொழுது திடீரென கயல்விழி அதிக உரிமை எடுத்து அடுத்த கட்டத்திற்கு செல்ல, அதுவும் பேச்சு வார்த்தை தற்பொழுது தான் தொடங்கியிருக்கும் இந்த நிலையில்… இப்பொழுது அவர்கள் என்ன மாதிரி உணர்வார்கள்? மூவரும் சிலையென இருக்க, “ஏன் இப்படி ஷாக் ஆகறீங்க?” என கயல்விழி தான் உலுக்கினாள்.

“இதெல்லாம் ரொம்ப தப்பு டா. நல்லா இருக்காது” என பொறுப்பாக அறிவுரையை வழங்கினர். அவளோ முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு, “நீங்க கூட தான், பொண்ணு பாத்துட்டு வந்ததும் மதனிங்க கூட, ஊரெல்லாம் சுத்துனீங்க. நான் என்ன அவரைப் பாக்கணும், அவர்கிட்ட பேசணும்ன்னா கேட்டேன். ஏதோ வீட்டை ஒழுங்கு படுத்தி வைக்கணும் கேக்கறேன். அதுக்கு கூட ஹெல்ப் பண்ண மாட்டீறீங்க” என சிணுங்கலாக கூற,

‘அடிப்பாவி, பிளாக்மெயில் பண்ணறதை எப்படி முகத்தை பாவமா வெச்சுட்டு பண்ணறா பாரு?’ என மனதிற்குள் குமைந்தான் அருண்.

அவள் பேசியதில் மீண்டும் ஷாக் ஆன பாலாவும், மஞ்சுளாவும், ‘இவளை கூட வெச்சுட்டு இருக்கறது எம்புட்டு கஷ்டம்’ என மனதோடு நொந்தனர். பின்னே, மூன்று வயதில் குழந்தையே இருக்கிறான். இன்னும் இவள் இதை சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறாளே!

அனைவரின் பிடியும் அவளிடம். அதோடு, அவள் பிடிவாதமும் வீடு அறிந்ததே! வேறு வழி இல்லாமல் அவளை உடன் அழைத்து செல்ல ஒப்புக்கொண்டனர் பாலாவும் அவன் மனைவியும். கூடவே, பெற்றவர்களை சமாளிக்கும் மாபெரும் வேலையை எதிர்கொள்ளவும் மூவரும் ஆயத்தமாயினர்.

1 Like

வாவ் செம்ம அக்கா சூப்பர் கயல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு

1 Like

thank u gowri ma :slight_smile:

1 Like