நீ இன்று நானாக 01

நீ இன்று நானாக 01
0

நீ இன்று நானாக!

( ஒருநாள் இறைவன் )

அத்தியாயம் – 01

துன்பம் துரத்தும்போது

எல்லாம் நீதான் என்று

கருணைவேண்டி துதிபாடல் பாடுபவன்

இன்பத்தில் திளைக்கும்போது

கண்டும் காணமல் வெறும் கல்

என வசைப்பாடி திரிவது

கடவுள் படைத்த மனித

மனதின் மனோபாவம் ….

“உனக்கு என்ன மூன்றுவேளை பூஜை பிரசாதம் என்ற பெயரில் விதவிதமா வெரைட்டிசாப்பாடு பால், தயிர், நெய் என்று காஸ்ட்லி பொருட்களில் குளியல் ஹும்…. பிரச்சனை என்றால் என்னவென்றே தெரியாமல்! யார் பிரச்சனையும் கண்டுகொள்ளாமல்! ஒரு ஓரமாய் இடம்பார்த்து உட்கார்ந்துவிட்டாய், ஆனால் நீ படைத்த நாங்கள் மட்டும் தினம் ஒரு பிரச்சனை பின் ஓடிக்கொண்டு இருக்கின்றோம், எங்களை மட்டும் படைக்கும் போதே பிரச்சனைகளை மூட்டையாக முதுகில்கட்டி அனுப்பிவிடுகின்றாய், ஒன்றை முடித்து நிமிரும் முன் மற்றொன்று முன் நின்று சிரிக்கின்றது, உன்னை மட்டும் நேரில் பார்க்க முடிந்தால் ஒரு நாள் நீ படைத்த பூமில் உன் சக்தியை இழந்து வாழ்ந்துகாட்டு என்று சவால் விடுவேன், அதற்கு பயந்துகொண்டு தான் கோவிலுக்குள் ஒழிந்திருகின்றாய் போல” என்று கோவிலில் நின்று இன்றும் தனக்கு வேலை கிடைக்காமல் போன விரக்தியில் வாய்க்கு வந்ததை புலம்பிகொண்டு இருந்தான் கிருபாகரன்.

“வெகுநேரமாய் உன்னை கவனித்துக்கொண்டு இருக்கின்றேன், அப்படி உனக்கு என்னதான் பிரச்சனை?” என்று குரல் கேட்டு திரும்பி பார்க்க, வெள்ளை உடையில் முகத்தில் பொலிவுடன் நின்றிருந்தார் ஒருவர். “யார் சார் நீங்கள் என்னை எதற்கு கவனித்தீர்கள்?” என்று சிடுசிடுப்புடன், வினவினான் கிருபா.

“எதற்காக…?” என்று புதிராய் புன்னகை செய்தவர், “எத்தனை நாட்கள்தான்… கொடுப்பதை உண்டுவிட்டு ஓரமாய் அமர்ந்திருப்பது, அதனால் தான் உனக்கு உதவலாம் என்று வந்தேன்”, என்றார் அவர்.

“என்னை படைச்சவனனே! என் பிரச்சனை தீர்க்க முடியாமல் அமைதியாகிவிட்டார், நீங்க வேறு காமெடி செய்துகொண்டு வழியைவிடுங்க சார்”, என்று அவரை சுற்றிக்கொண்டு சென்றான், கிருபா.

கோவில் வாசலில் பார்க் செய்திருந்த தனது வண்டியை தேடிசென்றவன், அதன் அருகில் கோவிலில் பார்த்தே அதே நபர் நிற்க கண்டு, ஒன்றும் விளங்காமல் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, “இந்த கோவிலுக்கு வேறுவாசல் இருக்கா என்ன?, இல்லை உங்களுக்கு மாஜிக்தெரியுமா? எனக்கு முன் இங்கு வந்து! அதுவும் சரியாய் என் பைக்கை கண்டுபிடித்து அதை மறைத்து நிற்கின்கிறீர்கள்?”, என்று குழப்பமாய் தலையை சொரிந்து கொண்டே, வினவினான் கிருபா.

“எனக்கான பதில் கிடைக்கவில்லையே! பதில் தெரியாமல், நான் எப்படி செல்வது?” என்றார், அவர். “என்ன பதில் வேண்டும் உங்களுக்கு, எனக்கே தலைக்கு மேல் பிரிச்சனை இதில் சம்மந்தமே இல்லாமல் முன்னாடி வந்து நின்று பதில்கொடு பாப்கார்ன்கொடு என்று உளறிக்கொண்டு, என்னை தொந்தரவு செய்யாமல் கிளம்புங்கள் சார்” என்று சற்று கோபமாய் குரலை உயர்த்தி கூறினான் கிருபா.

புன்னகை மாறாமல் வழியை விட்டு விலகி நின்றவர் “எனக்கான பதில் கிடைக்கும் வரை உன்னை தொடர்ந்து கொண்டேயிருப்பேன் கிருபா!”, என்று சிரித்தார், அவர்.

வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றவன் தலையை மட்டும் திருப்பி பார்க்க, புன்னகை செய்து கொண்டு நின்றவர், உன் பின் வந்து கொண்டே இருப்பேன் என்பது போல செய்கை செய்திட கடுப்பானவன் “இவன் என்ன லூசா! இல்லை என்னை லூசாக்க பார்க்கின்றானா?” என்று தனக்குள் கூறிக்கொண்டே தான் தங்கியிருக்கும் இடத்தை நோக்கி வண்டியை செலுத்தினான், கிருபா.

செல்லும் வழியில், தனக்கு என்று வாங்கிச்சென்ற உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிட துவங்கியவன், “பார்க்க நல்ல தானே இருந்தான் பின் எதற்கு என்னிடம் அப்படி பேசினான்!, ஒரு வேலை நான் புலம்பியதை கேட்டு சாமியே எனக்கு உதவ இறங்கிவந்துவிட்டதா!” , என்று யோசித்தவன், தன் தலையிலேயே ஓங்கி அடித்துக்கொண்டு “சுற்றியிருக்கும் பிரச்சனையை நினைத்துக்கொண்டே இருப்பதால் மூளை குழம்பிவிட்டது போல, நான் பேசியதை ஓரமாய் நின்று கேட்டுக்கொண்டுயிருந்து என்னை கிண்டல் செய்கின்றான், பார்த்தாயா கடவுளே ரோட்டில போறவன் எல்லாம் என்னை கேலி செய்யும் நிலையில் என்னை வைத்து இருக்கின்றாய்!”, என்று மீண்டும் விட்ட புலம்பலை துவங்கினான் கிருபா.

“என்ன கிருபா என்னை அழைத்தாயா?” என்று கோவிலில் பார்த்தவரின் குரல் தனக்கு பின் கேட்க, “கதவை பூட்டிவிட்டு தானே வந்தேன்!”, என்று வாசலை பார்க்க அது பூட்டியது பூட்டிய படியேயிருந்தது, “அப்ப இந்த குரல் எங்கிருந்து வருகின்றது!” என்று மிரண்டு போய் குரல் வந்த திசையை திரும்பிப் பார்க்க அவன் தங்கி இருந்த அறையின் ஓரத்தில் கிடந்த சேரில் அமர்ந்திருந்தார் கோவிலில் பார்த்த அதே நபர்.

“யாரு சார் நீங்க பூட்டியிருகின்ற வீட்டுக்குள் எப்படி வந்தீர்கள்?” , என்று பயந்த படி சுவற்றின் ஓரம் பல்லி போல ஒட்டிகொண்டவன், “ஒருவேலை பேயா இருக்குமோ?, பேய் எல்லாம் கோவிலுக்குள் வராது என்று தானே சொல்லுவார்கள்”, என்று நடப்பதை நம்பமுடியாமல் தனக்குள் புலம்பிக்கொண்டே அருகிலிருந்து தனது இஷ்டதெய்வத்தின் புகைபடத்தை எடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு திருநீறு அள்ளி நெற்றியில் பட்டை அடுத்துகொண்டவன், “இங்க பாரு நீ யாரா இருந்தாலும் சரி எங்க ஊரு மதுரைவீரன் திருநீறு இது உன் மேலப்பட்டல் போதும்!” என்று கிருபாகரண் கூறிக்கொண்டு இருக்கும்போதே, எழுந்து வந்தவர் “இதை தான் சொல்கின்றாயா?”, என்றபடி கிருபாகரண், கையில் இருந்தை வாங்கிக்கொண்டு தனது உடல் மீது பூசிக்கொண்டவர், எனக்கு எப்போதும் இதன் வாசம் பிடிக்கும் கிருபா என்று சிரித்தார், அந்த புதியவர்.

“ஆங்!.. எனக்குத்தான் தெரியுமே நீ பேயாயிருக்க வாய்ப்பில்லையென்று பேயாய் இருந்தால் கோவிலுக்குள் எப்படி வருவீர்கள்?, பேய்க்கு கால் வேற இருக்காது” என்று நடுக்கத்தை வெளிக்காட்டாமல், குனிந்து அவர் காலை பார்க்க அது மனிதர்களின் பாதம் போல சாதரணமாய் இல்லாமல் வித்தியாசமாய், பளபளவென்று ஜொலித்தது.

தன் கண்ணையே நம்ப முடியாமல், “இது கனவு இது கனவு மட்டும் தான்! கண் விழித்து பார்க்கும் போது எல்லாம் மறைந்துவிடும்” என்று கண்ணை மூடி கொண்டு தனக்குத்தானே கூறிக்கொண்டே தனது கன்னத்தில் தட்டி முழிச்சுக்கோ, என்றான் கிருபாகரண்.

“நல்ல வேடிக்கை தான், என் முன் வரமாட்டாயா?, என் பிரச்னைகளை தீர்க்க மாட்டாயா? என்று வேண்டுவது, கண்முன் வந்து நின்றால் கண்ணை மூடிக்கொண்டு கனவு என்று பிதற்றுவது!” என்று ஏளனம் கலந்து சிரித்தார், அவர். “என்ன நான் வேண்டிகொண்டேனா!, தினமும் அந்த கடவுளை தான் என் உரிமையான திட்டுக்களால் அர்ச்சனை செய்து கொண்டு இருகின்றேன், அவரே வரவில்லை வெயிட் நீங்கள் என்ன சொன்னீர்கள்?, கடவுளா! நீங்கள் தான் எங்களை படித்த கடவுளா?” என்று முன் நின்று இருந்தவரின் தலை முதல் கால் வரை மேலும் கீழுமாய் பார்த்தவன், “யாரை ஏமாற்ற பார்க்கின்றீர்கள் எங்கள் ஊரில் பேய், பிசாசை கூட நேரில் பார்த்து விடலாம், ஆனால் கடவுளை ஹிஹி… வாய்பில்லை ராஜா அதுக்கு வாய்ப்பேயில்லை, கடவுளை கண்டவர் ஒருத்தர் கூட இல்லை, அவர் இருக்கும் பிஸியில் அவரை கனவில் பார்ப்பதே பெரிய விசயம், இதில் நான் கஷ்டமென்று புலம்பியதும் என் புலம்பலை கேட்டு எனக்காக வானத்திலிருந்து குதுச்சு வந்துட்டார்!”, என்று மெதுவாய் நகர்ந்து வாசல் கதவை திறந்து கொண்டு வெளியேறி கதவை வெளிப்பகமாய் பூட்டிவிட்டு படியிறங்கி செல்ல முயன்றவன் , வீட்டு சொந்தக்காரர் வருவதை கண்டு, அவர் பார்க்கும் முன் வந்த வேகத்தில் மொட்டைமாடிக்கு சென்று மறைந்து கொண்டான், கிருபாகரண்.

வீடு வெளியில் பூட்டியிருப்பதை கண்டு திரும்பி சென்றுவிடுவார், என்று நிம்மதி பெருமுச்சு விட்டவன், திடீரென நினைவு வந்தவனாக, “அடடா அந்த ஆளை உள்ளேயே விட்டு பூட்டிவிட்டு வந்தேனே சத்தம்போட்டு காட்டிக்கொடுத்துவிட்டால் என்ன செய்வது?” என்று கழகத்துடன் காதை கூர்மையாக தீட்டி கொண்டு கீழே எதுவும் பேசும் சத்தம் கேட்கின்றதா?, என்று கவனிக்க துவங்க, தனக்கு பின்னிருந்து தோளில் கைவைத்து, “பேசிக்கொண்டு இருக்கும்போதே ஏன் கிளம்பினாய் கிருபா?”, என்று குரல் கேட்டு தூக்கிவாரிப்போட பயத்தில் அலற துவங்கினான், கிருபா.