நீ இன்று நானாக 02

நீ இன்று நானாக 02
0

அத்தியாயம் - 02

அவன் சத்தம் கேட்டு மேலே வந்த வீடு சொந்தகாரர், “நன்றாக மாட்டினாயா?, எடு என் வாடகை பணத்தை, என்னை பார்த்ததும் இங்கு வந்து ஒழிந்துகொண்டால் எனக்கு தெரியதென்று நினைத்தாயா?, மோப்பம் பிடித்தே கண்டுபிடிப்பேன்!”, என்றவர் கிருபாகரண் சட்டையை பற்றி கொண்டு, “வந்த புதிதில் ஆறுமாதம் கேட்கும் முன்பே வாடகை பணத்தை நீட்டினாய்!, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாய், அடுத்து உன் பின் வாடகைக்காக என்னை சுத்தவிடுகின்றாய்?”, என்று கோபமாய் கேட்டார், வீட்டு சொந்தகாரர்.

முன் பின் அறிந்திடாத நபர் முன் அவமானப்படுவதை தாங்கிகொள்ள முடியாமல், “சார் ப்ளீஸ் என் நிலைமையை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள், நாளை ஊரிலிருந்து அம்மா பணம் அனுப்பிவிடுவார்கள், நாளை கண்டிப்பாக உங்கள் பணம் உங்கள் கையிலிருக்கும், முதலில் கையை எடுங்கள் எல்லோரும் பார்கின்றார்கள்” என்று கெஞ்சலாய் கேட்டுகொண்டான், கிருபா.

“என்ன எல்லோரும் பார்க்கின்றார்களா?”, என்று சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, “யார் இருகின்றார்கள் பார்ப்பதற்கு!, இங்கு உன்னையும் என்னையும் தவிர யாரும் இல்லையே!”, என்றவரை, விசித்திரமாக பார்த்துவிட்டு, தனது வலது பக்கத்தில் இருந்தவரை திரும்பி பார்த்தான் கிருபா. முகத்தில் புன்னகை மாறாமல், “நான் விரும்பி காண வந்து உன்னைதான் கிருபா, உன் கண்களுக்கு மட்டும் தான் நான் தெரிவேன், என் குரல் உன் செவியை மட்டுமே எட்டும்!” என்றார் அவர்.

அவரின் வார்த்தையை நம்பாமல், வீட்க்காரரிடம் திரும்பி “இவர் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?, பேசியது உங்களுக்கு உண்மையிலேயே கேட்கவில்லையா?” என்று ஆச்சர்யமாய் வினவினான் கிருபாகரண்.

“ எதையாவது சொல்லி என்னை ஏமாற்ற பார்க்கின்றாயா?, பைத்தியம் போல ஏதாவது உளறினால் உன்னை விட்டுவிடுவேன் என்று நினைக்காதே!, அது கனவில் கூட நடக்காது, நாளை காலையில் மட்டும் பணம் என் கைக்கு வரவில்லையென்றால் அவ்வளவு தான்! மதியமே வந்து எல்லோர் முன்பும் உன் கழுத்தை பிடித்து வெளிய தள்ளுவேன், என்ன புரிகின்றா?, நான் இங்கு பேசிக்கொண்டிருகின்றேன் உனக்கு அங்கு என்ன வேடிக்கை?” என்று கிருபா பார்வை சென்ற திசையை கவனித்தவர், அங்கு ஒன்றும் இல்லாமலிருக்க, “இன்னும் என்ன நடிக்கின்றாய்?, காலையில் வருவேன்” என்று மிரட்டிவிட்டு சென்றார், வீட்டின் உரிமையாளர்.

அப்படியென்றால் நீ… நீங்கள் உண்மையில் கடவுள் தானா!, இதை எப்படி நம்புவது எந்த கடவுள் நீங்கள், உங்கள் பெயர் என்ன?”, என்று கேலியை வினவினான் கிருபா. “யார்யாருக்கு என்ன பெயர் விருப்பமோ! அந்த பெயரில் என்னை அழைப்பார்கள், சிலர் கையெடுத்து கும்பிடுவர், சிலர் மண்டியிட்டு வணங்குவர், பூஜை, ஜெபம், தொழுகை எல்லாம் என்னை வணங்கும் முறைதான்”, என்று சிரித்தார் இறைவன்.

“ அது எப்படி ஒன்றாகும், நல்லா குழப்புகின்றீர்கள்!”, என்றான் கிருபா. “அம்மா என்று எந்த மொழியில் அழைத்தாலும் ஒரு அர்த்தம் தானே கிருபா” என்று விளக்கம் தந்தார் இறைவன். “நல்லாவே கதை விடுகின்றீர்கள்!” என்று முன் இருந்தவரை தொட முயல, கைகள் எதையோ தீண்டுவது போல உணர்ந்தாலும் அது மனிதர்களின் உடல் இல்லை என்று தெளிவாய் தெரிந்து!, குளிரும், அனலும் சேர்ந்தது போல் இதுவரை அறிந்திடாத புதுஉணர்வாய் இருக்க, முன்பு இருந்தவர் உடல் சூரிய ஒளியை விட பலமடங்கு பிரகாசமாய் ஒளிர்ந்தது, “உண்மையில் கடவுளே தான்!, எனக்கு உதவத்தான் வந்தீர்களா? என்றவன், தன்னை மறந்து ஒரு நொடி கைகூப்பி நின்றான்.

“தான் இப்படி ஒரு சூழ்நிலையில் தவிப்பதற்கு முதல் காரணம் இந்த கடவுள் தான்” என்று மூளை அறிவுறுத்த, வேகமாய் கையை விலகிக்கொண்டு, “நீ கடவுள் தானே! என் பிரச்சனை என்னவென்று உனக்கு நன்றாக தெரியும் தானே!, பிறகு எதற்கு என் பின்னாடியே வந்து, என்ன பிரச்சனை என்ன பிரச்சனை என்று கேட்டு கொண்டு இருகின்றீர்கள்?, நீங்களாகவே என் பிரச்சனைகளை தீர்த்துவைக்கலாம் இல்லையா?, அதை விட்டு திடீரென முன் வந்து பயம் காட்டிகொண்டு, சின்ன பையன் பயந்துட்டேனா இல்லையா!, இந்த உலகத்தையே காக்கும் கடவுள் இப்படி சிறுபிள்ளை போல் விளையாடினால் எப்படி உன்னை நம்பி எங்கள் பிரச்சனையை சொல்வது?” என்று கேள்வி எழுப்பினான் கிருபாகரண்.

“அது சரி நான் போய் உலகத்தின் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிட்டு அதன் பின் உன்னிடம் வருகின்றேன்! அதுவரை என்னக்காக உன் தலைக்கு மேலிருக்கும் பிரச்சனைகளுடன் காத்துகொண்டியிரு நான் வருகின்றேன்?” என்று கிளம்பினர் இறைவன். “நல்ல விளையாட்டா இருக்கே சும்மா இருந்தவன் முன் வந்துவிடு இப்படி கிளம்பினால் எப்படி?, எனக்கு ஒரு வழி சொல்லிவிட்டு உங்கள் வழியை பார்த்து கிளம்புங்கள்! என்றான் கிருபா.

“என்ன செய்ய என்னிடம் உரிமையாய் சண்டை போடுபவர்களுடன் தானே நானும் உரிமையாய் விளையாட முடியும்!”, என்று சிரித்தார், இறைவன்.

“நல்லா விளையாடினாய் போ, வேறு யாரும் கிடைக்கவில்லை என்று உன் திருவிளையாடளை என்னிடம் காட்டவந்தாயா? , ஆமாம் என்னை பார்க்கவேண்டும் என்று எதற்கு தோன்றியது, நீ கடவுள் என்று தெரிந்தும் உங்களை கண்டு பயபடாமல், உன்னையே கேள்விகேட்டு கொண்டிருகின்றேன், இந்த பக்தியை பார்த்து வியந்து போய் தான் என்னை காண வந்தாயா?” என்று ஏளனமாய் சிரித்தான் கிருபா.

“பயம்… நீ எதற்கு என்னை கண்டு பயப்படப் போகின்றாய் கிருபா, உன் மனம் அறிந்து இதுவரை எந்த தவறும் செய்தில்லை, தாங்கள் செய்வது தவறென்று தெரிந்து செய்பவர்களே! நம்மை படைத்த இறைவன் ஒருவன் தங்களை கவனித்துக்கொண்டே இருக்கின்றான், நாம் செய்யும் தவறுகளுக்கு சரியான தண்டனை தருவான் என்று பயமோ! குற்றவுணர்வோ சிறிதுமின்றி நான் நிறைந்திருப்பதாய் நம்பும் புனித தளத்தில் வைத்தே தவறு செய்கின்றார்கள்!”, என்று வெறுமையாய் புன்னகை சிந்தியவர். “:வேறு என்ன கேட்டாய் பக்தியா?, நான் கடவுள் என்று உணர்ந்ததும் உடனே போலியாய் என் காலில் விழுந்து உன் தேவைகளை நிறைவேற்றி கொள்ளத்துடிக்காமல், ஒருநொடி தன்னை மறந்து என்னை வணங்கி நின்றாய் பார்!, அதில் உள்ளது உண்மையான பக்தி!”, என்றவரை இடைமறித்து, “அப்படியென்றால் நீ என் பிரச்சனையை தீர்க்க வரவில்லையா!, உன் கதையை புலம்ப தான் வந்தாயா?”, என்றான் கிருபாகரண்.

“இல்லை என் குமுறலை சொல்லவோ! உன் குறைகளை கேட்கவோ! வரவில்லை, நீ எனக்கு ஒரு சவாலை முன் வைத்தாய் மறந்துவிட்டதா?, ஒரு நாள் நான் படைத்த உலகில் என் சக்திகளை இழந்து வாழ்ந்து காட்ட சொன்னாய் தானே!, அந்த சவாலை ஏற்க தான் வந்தேன், அது மட்டும் இல்லை உனக்கும் ஒரு பரீட்சை வைத்துப்பார்க்க நினைத்தேன்!, அதில் நீ வெற்றி பெற்றால், உன் வாழ்வின் புது பாதைக்கான வழி கிடைக்கும்”, என்றார் இறைவன்.

“என்ன பரீட்சையா?, படிக்கும் போதே அதை சரியாய் செய்து பாஸ் ஆகியிருந்தால் என் நிலை ஏன் உன்னிடம் புலம்பும்படியிருக்க போகின்றது!, அது சரி இதற்கு நீங்கள் நேரடியாகவே உன் பிரச்சனைகள் தீர்க்கவேமுடியாத ஒன்று என்று சொல்லிவிடலாம்”, என்றான் கிருபா.

மெலிதாய் முகம் மலர்ந்தபடி “உன் நிபந்தனையை நான் ஏற்கின்றேன், ஒரு நாள் முழுவதும் என் தெய்வசக்திகளின்றி சாதாரண மனிதனாய் வாழ்கின்றேன்!, என் நிபந்தனை என்னவென்றால் அந்த ஒரு நாள் நீ நானாக வேண்டும், அதாவது ஒருநாள் என் இடத்தில் நீயிருக்க வேண்டும்!” என்று நிபந்தனை விடுத்தார் கடவுள்.

“அட இவ்வளவு தானா! நான் பரீட்சை என்றதும் பயந்துவிட்டேன், கரும்பு தின்ன கூலியா?, எனக்கு சம்மதம், நான் தான் கடவுள் என்றால் நான் என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம் இல்லையா?” என்று சந்தேகம் கேட்டான் கிருபா.

“நாளை நீ செய்யும் எந்த செயலையும் யாரும் தடுக்க முடியாது, என்னையும் சேர்த்து தான், அதே போல் நீ உன் செயல்களில் வரும் பலன்களும் உன்னை மட்டுமே சேரும்!, இந்த நொடியில் இருந்து நீ நானாக!”, என்று கூறிய அடுத்த நொடி, ஒளிவெள்ளத்தில் மிதந்தவர் சாதாரண மனிதர்களை போல் மாறிருந்தார், கிருபா வழக்கம்போல் இல்லாமல் தனக்குள் ஏதோ புதிதாய் உணர்ந்தவன், இந்த நொடியில் இருந்து “நான் தான் கடவுள்!”, என்று மகிழ்ச்சியில் குதித்தவன், “நான் சென்று வருகின்றேன், சாதாரண மனித வாழ்கை எப்படியிருக்கும் என்று அனுபவப்பாடத்தை கற்றுக்கொள்ள என் அனுதாபமான வாழ்த்துகள் மனிதனே!” என்று சிரித்தான் கிருபா என்னும் இன்றைய கடவுள். “ உனக்கும் என் வாழ்த்துக்கள் கடவுளே!”, என்று கூறி சிரித்தார் அவர்.