நீ இன்று நானாக 04

நீ இன்று நானாக 04
0

அத்தியாயம் - 04

“வாப்பா உள்ளே வா! ஏன் வாசலிலேயே நிற்கின்றாய்” என்று அக்கறையாய் உள்ளே அழைத்துச்சென்று, “நீ என்ன செய்கின்றாய், நீயும் வேலை படித்த படிப்பிற்கேற்ற வேலை தேடிக்கொண்டு இருக்கின்றாயா?” என்று சலித்துக்கொண்டே வினவினார் கஸ்தூரி.

“இல்லைம்மா நான் விவசாயம் பார்க்கின்றேன்!” என்றான் அட்சயன். அவன் பதிலில் மனம் மகிழ்ந்த கஸ்தூரி “நல்லது உனக்காவது விவசாயத்தை காக்க வேண்டும் என்று தோன்றியதே!” என்றார் பாராட்டுதலாய்.

“இது என்ன புதுக்கதை நீ எப்போதிருந்து இங்கு வந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தாய்!” என்று அட்சயன் காதில் கிருபா கிசுகிசுக்க, “ நான் காலம் காலமாய் செய்து கொண்டிருப்பதை தான் சொன்னேன் கிருபா என்ன புரியவில்லையா?, என் செயலின் அர்த்தம் என்றைக்கு எல்லோருக்கும் புரிந்துள்ளது என் செயலின் காரணம் அறிய துவங்கினால் உங்கள் வாழ்வில் பிரச்னையே இல்லையே!” என்று சிரித்தவர், “நான் உயிர்களை விதைக்கிறேன், அவ்வப்போது இயற்கை சீற்றங்கள் கொண்டு களை எடுக்கின்றேன், உயரினங்களின் காலம் முடியும்போது அறுவடை செய்கின்றேன், அப்படி என்றால் நானும் ஒரு விவசாயி தானே! என்றார் அட்சயன்.

“உன்னிடம் போய் கேள்வி கேட்டு அதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று எண்ணினேன் பார் என்னை சொல்லவேண்டும்” என்று அலுத்துக்கொண்டான் கிருபா. அறைக்குள் சென்று திரும்பியவன், கையில் ஒரு பையுடன் வந்து, “இது நிறைய பணம் இருக்கின்றது அம்மா, உங்கள் தேவைக்கு வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் வேண்டும் என்றாலும் கேளுங்கள் தருக்கின்றேன்” என்ற மகனை சந்தேகமாய் பார்த்து, “நீ வரும்போது கையில் எதுவும் இல்லாமல் தானே வந்தாய் இப்போது எப்படி இந்த பணம் வந்தது?” என்று சந்தேகமாய் வினவினார் கஸ்தூரி.

“அது அப்படித்தான் அம்மா”!, என்றவன் கையில் இருந்த பையை தன் அன்னை கையில் திணிக்க அதை வாங்க மறுத்தவர், “உனக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது?, சென்னையில் வேலை தேடுகின்றேன் என்று பொய் சொல்லிவிட்டு தப்பான தொழில் ஏதும் செய்கிறாயா?” என்று கோபமாய் வினவினார் கஸ்தூரி.

“என்னம்மா என்னைப்போய் இப்படி சந்தேகப்படுகிறாய், நான் என்றைக்காவதுஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டது உண்டா?, உண்மையில் இது எனக்கு சொந்தமான பணம் தான்!”, என்றான் கிருபா.

"எனக்கு உன் மீது நம்பிக்கையில்லை இத்தனை நாள் வேலை கிடைக்கவில்லை என்று என்னிடம் பணம் வாங்கி செலவழித்துக்கொண்டு இருந்தாய், இப்போது திடீரென்று வந்து பை நிறைய பணத்தை தருகின்றாய், உன்னை எப்படி நம்பமுடியும்? தவறான வழியில் வந்த பணம் எதுவும் எனக்குத்தேவையில்லை உழைத்து உண்ண இன்னும் என் உடம்பில் தெம்பு உள்ளது உன் பணம் எனக்குத்தேவையில்லை “என்று வெடுக்கென்று பதில் தந்தார் கஸ்தூரி.

“சரி உங்களுக்கு பணம் வேண்டாம், வேற என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அதை நான் இப்போது நிறைவேற்றி தருகின்றேன்” என்று ஆர்வமாய் வினவினான் கிருபா.

விசித்திரமாய் பார்த்து “உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? உன் பணமே வேண்டாம் என்கின்றேன், அதில் வரும் எதுவும் எனக்குத் தேவையுமில்லை, விவசாயம் பார்க்க எனக்கென்று சிறு நிலம் உள்ளது என் வருவாய்க்கு அதுவே போதுமானது, தவறான வழியில் பணம் சம்பாதித்து தான் முன்னுக்கு வருவேன் என்று நீ பிடிவாதம் செய்தால் நீ எனக்கு மகனும் இல்லை நான் உனக்கு அம்மாவும் இல்லை” தயவுசெய்து கிளம்பி விடு என்றார் கஸ்தூரி.

“சரி சரி உடனே கோபம் கொள்ளாதே கஸ்தூரி, இது உண்மையில் தவறான வழியில் வந்த பணமில்லை, என்ன பார்க்கின்றாய் எடுத்துச் சொல்” என்று அட்சயனை துணைக்கு அழைத்தான் கிருபா.

“ ஆமாம் அம்மா இது கிருபாவிற்கு சன்மானமாக கிடைத்த பணம்” என்றான் அட்சயன்.

“இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாய் கிடைக்காது அறிவுரை தவிர, ஒருவன் சும்மா தருகின்றான் என்றால் அதற்கு பின் பல காரணங்கள் இருக்கும்” என்றார் கஸ்தூரி. “உங்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன் என்று தெரியவில்லை அம்மா, இது எதுவும் தவறான வழியில் வந்த பணம் இல்லை, சரி உனக்கு பணம் வேண்டாம் பொருளும் வேண்டாம், உன் வாழ்நாள் ஆசை என்று ஏதாவது இருக்கும் அல்லவா அதை கூறு இப்போது நிறைவேற்றி வைக்கிறேன்” என்றான் கிருபா.

“கண்மூடி திறக்கும் முன் என் தேவைகளை நிறைவேற்ற நீ என்ன கடவுளா?” என்று அசட்டையாக பதில் தந்தவர், “சரி இவ்வளவு சொல்கின்றாய் அதனால் என் விருப்பத்தை கூறுகின்றேன்!, முதலில் தவறான வழியில் கிடைத்த இந்த பணத்தை உனக்கு கொடுத்தவரிடமே திருப்பிக்கொடுத்துவிட்டு நேர்மையான வழியில் சம்பாதிக்கும் வழியை பார், அதுதான் உன்னை பெற்ற எனக்கு நீ செய்யும் மரியாதை பணம் காசு இல்லை என்றாலும் கொஞ்சம் மரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதை கெடுத்துவிடாதே!” என்று கண்டிப்பு குரலில் கூறினார் கஸ்தூரி.

“இந்த பணம் பற்றிய பிரச்சினையைவிடுங்கள், இது தவறான வழியில் வந்ததில்லை எனக்கு சொந்தமானதும் இல்லை இது யாருக்கு சேர வேண்டுமோ அவர்களிடம் நானே சேர்த்துவிடுகிறேன், இது உங்கள மீது சத்தியம்” என்றவன், ஒருநொடி தயங்கி “உங்களிடம் நான் எப்படி சொல்லி புரியவைப்பேன்! எனக்கும் கடவுளுக்கும் ஒரு டீலிங் உள்ளது, இன்று நான் என்ன கேட்டாலும் அவர் தருவார்!” என்று பாதி உண்மையை கூறிய மீதியை மறைத்தான் கிருபா.

“இன்று உனக்கு என்னவோ ஆகிவிட்டது என்னென்னவோ உளறுகிறாய்!” என்று கஸ்தூரி பயத்துடன் சென்று வீட்டின் சாமிபடத்தின் முன் இருந்த திருநீரை கொண்டுவந்து, கிருபா நெற்றியில் பூசிவிட்டவர் “அப்பா வீரப் ஐயனாரே தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை, இப்படி கண்ட நேரத்தில் வந்து என்னென்னவோ உளறுகின்றான்” என்று புலம்ப துவங்கினார்.

“உன்னைத் திருத்தமுடியாது” என்று தலையில் அடித்துக்கொண்டவன், “நீயாக எதுவும் கேட்க வேண்டாம் உனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும்!” என்று சாமி படத்தின் முன் நின்று இருகை கூப்பி “கடவுளே இந்த பூமியில் எல்லோரையும் விட விவசாயிகள் தான் அதிகம் கஷ்டத்தில் உள்ளார்கள், அவர்கள் கஷ்டத்தை போக்க காலம் தவறாது மழை பெய்திட அருள் செய் பருவ காலங்கள் அதன் பணியாய் சரியாக செய்ய கருணை காட்டு” என்று விரலை சுண்டினான் கிருபா.

“கிருபா மழை கடவுள் தரவேண்டும் சரி, அவர் கொடுப்பதை ஒழுங்காக சேர்த்து வைக்க தெரியாமல் தடுமாறும் மனிதனை என்ன செய்யவேண்டும்” என்றான் அட்சயன்.

“சப்போர்ட்டு… கொடுக்கின்றவர் சரியாக கொடுத்தால்! நாங்களும் சரியாக சேர்த்து வைப்போம்!” என்றான் கிருபா. “கெடுப்பவனை விடுத்து, கொடுப்பவனை பலித்தால் பாவம் கிருபா!” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டான் அட்சயன். “நீ பேசதே! எங்களுக்கு எல்லாம் தெரியும், இன்று நான் தான்…” என்று சொல்லத் துவங்கியவன், பாதியில் நிறுத்தி “இன்று நான் தான் உனக்கு முதலாளி மறந்துவிடாதே!” என்று எச்சரிக்கையுடன் முடித்தான் கிருபா.

பயந்தவன் போல வாயில் கைவைத்து அட்சயன் நிற்க, ”அந்த பிள்ளையை ஏன்டா மிரட்டுகின்றாய்!, அது சொன்னதில் என்ன தப்பு இருக்கின்றது, எங்க காலத்தில் எல்லாம் மழை காலம் பொய்க்காமல் பொழியும், மழைநீரை சேர்த்துவைக்க ஏறி குளம் எல்லாம் ஊர்ஊருக்கு நிறையவே இருந்தது, இப்போது குளம் எங்கு என்று தேடவேண்டி தானே உள்ளது, எல்லாவற்றையும் பிளாட் போட்டு விற்று கட்டிடமாய் எழுப்பிவிட்டு, மழைக்காலத்தில் வெள்ளம் வருகின்றது! என்று புலம்பவேண்டியது, ஒழுங்காய் கிடைக்கும் மழைநீரை சேர்த்து வைக்க அணைகட்டி தடுக்காமல் கடல் நீரோடு கலக்கவிட்டு வெயில் காலத்தில் தண்ணீருக்கு பக்கத்து மாநிலத்திடம் கையேந்த வேண்டியது, தவறை எல்லாம் நம் மீது வைத்துக் கொண்டு கடவுளை குற்றம் சொல்ல வேண்டியது!”, என்று கஸ்தூரி கோபமாய் விளக்கம் தந்தார்.