நீ இன்று நானாக 05

நீ இன்று நானாக 05
0

அத்தியாயம் - 05

யோசனையாய் நின்ற கிருபா, அட்சயன் அருகில் வந்து “இது எல்லாம் உன் வேலை தானே!, நீ செய்த தப்பை மறைக்க என் அம்மாவை வைத்து உனக்கு சாதகமாக பேசவைக்கின்றாய் அப்படித்தானே” என்றான். “தவறு செய்து விட்டு அந்த பலியை மற்றவர்கள் மீது போடுவது உங்கள் வழக்கம் கிருபா” என்று கேலியாய் பதில் தந்தான் அட்சயன்.

“என்னையே கிண்டல் செய்கின்றாயா?”, ஒருநாள் சாப்பாட்டிற்கு வெளியில் அலைந்து பார்த்தால் தான் நீ படைத்த மனிதர்கள் படும்பாடு புரியும், ஒரு வேலை கிடைக்க எவனவன் காலில் விழவேண்டும் என்று தெரியும் , இந்த நிமிடத்திலிருந்து நீ என்னுடன் இருக்க தேவையில்லை”, என்று தீர்மானமாய் கூறினான் கிருபா.

“ அதன் பின் உன் விருப்பம், சரியாய் இன்று இரவு உன்னிடம் உள்ள என் சக்திகள் மீண்டும் என்னிடம் திருப்பிவந்துவிடும்… மற்றொன்றை உன் நினைவில் நிறுத்திக்கொள்!, இன்று நீ செய்யும் அணைத்தும் உன் பொறுப்பு மட்டும் தான் அதற்கும் என் மீது பழிபோடக் கூடாது!”, என்று அட்சயன் அறிவுறுத்த, “இதைச்சொல்லியே நம்மை கிளீன்போல்ட் செய்து விடுகின்றான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே “சரி சரி நீ பேசிய எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், பெரிய மனது வைத்து உன்னை மன்னிக்கின்றேன், என்னுடனே இரு ” என்றான் கிருபா. “உங்கள் உத்தரவை மீறமுடியுமா? கிருபா”, என்று சிரித்தான் அட்சயன்.

“என்னம்மா வந்ததிலிருந்து பேசிக்கொண்டே இருக்கின்றீர்கள்! கொஞ்சம் சப்பாட்டையும் கண்ணில் காட்டுங்கள்” என்றான் கிருபா.

“ சாப்பாடு எல்லாம் இல்லை… இன்னும் என்ன இங்கு நின்று பேசிக்கொண்டிருக்கிறாய் முதலில் இந்த பணத்தை யாரிடம் சேர்க்கவேண்டுமோ சேர்த்துவிட்டு அதன்பின் என்னை வந்து பார் அப்போது தான் உனக்கு சாப்பாடு” என்றார் கஸ்தூரி.

“போறேன் போறேன், கடவுளாய் இருந்தாலும் சாப்பிட்டுக்கு என் பாடு திண்டாட்டம் தான் போல!” என்று வாய்க்குள் முணுமுணுத்த படி கிளம்பிச் சென்றான் கிருபா. “ஏம்ப்பா இன்றைய கடவுளே, இன்னும் எவ்வளவு நேரம் என்னை இப்படி நடக்க வைக்க போகின்றாய்?” என்று அட்சயன் சலித்துக்கொள்ள, “அட பொறுப்பா…. இந்த பணத்தை என்ன செய்யவேண்டுமென்று யோசிக்கின்றேன்?”, என்றான் கிருபா.

“உனக்கு தேவையில்லை என்றால் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடு” என்று யோசனை சொன்னான் அட்சயன். “தேவைப்படுபவர்கள்” என்று தனக்குள் கிருபா தீவிராமாய் யோசித்துக்கொண்டு நிற்க, “என்ன கிருபா கையில் கிடைத்த அளவில்லா பணத்தை இழக்க மணமில்லையா?” என்று அட்சயன் குரல் ஏளனமாய் ஒலித்தது.

“எனக்கு அடுத்தவர் பொருள் மீது என்றுமே விருப்பம் இருந்தது இல்லை” என்று கோபமாய் பதில் தந்தான் கிருபா. “தெரியும் தெரியும் உன்னை படைத்து இத்தனை ஆண்டுகளாக பார்த்துக்கொண்டு தானே இருகின்றேன் இதுகூட எனக்கு தெரியாதா என்ன? ஒருவேலை கைநிறைய பணத்தை கண்டதும் மனம் தடுமாறத் துவங்கி உனக்குள் இருந்த நல்லவனை அழித்துவிட்டு கெட்டவன் வெளிவந்து விட்டானோ! என்று நினைத்தேன்” என்று மேலும் வெறுபேற்றும் படி பதில் தந்தான் அட்சயன்.

“ என்ன ரொம்ப பேசுகின்றாய், இன்று நான் தான் கடவுள் என்பது மறந்துவிட்டதா?” என்று கிருபா எச்சரிக்கை விடுக்க, “ இது என்ன நியாயம், நான் கடவுளாய் இருந்த போது உன் வாழ்வில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணமென்று உன் வசைமொழியில் எனக்கு அர்ச்சனை செய்வாய், நீ கடவுள் என்றதும், நான் பயந்து அமைதியாகி விடவேண்டுமா என்ன? என்னால் முடியாது, அது சரி, நான் யாருக்கும் எந்த நல்லதும் செய்யாமல் ஒதுங்கியிருந்ததாய் என்னை திட்டினாய், நீ கடவுளாய் மாறிய இந்த நேரத்திற்கு எத்தனை பேருக்கு உதவி செய்தாய், நீயும் சுயநலமாய் உனக்கு வேண்டிய பணத்தை கேட்கின்றாய், உன் வீட்டு கடனை அடைகின்றாய், உன் அம்மாவிற்கு வேண்டியதை செய்கின்றாய் அப்படியென்றால் நீயும் சுயநலமான கடவுள் தானே?” என்றான் அட்சயன்.

அட்சயன் வார்த்தைகள் எல்லாம் கிருபா மனதில் ஆழமாய் பதிந்து அவன் செய்ததவறினை உணர்த்தியது, “இனி இந்த தவறை செய்யக்கூடாது, தன்னிடம் இறைசக்தியிருக்கும் வரை தன்னால் இயன்ற உதவி செய்திட வேண்டும்” என்று தனக்குள் ஒரு தீர்மானம் எடுத்துக்கொண்டு, “நான் தங்கியிருந்த இடத்திற்கு போக வேண்டும்” என்று விரல் சுண்டினான் கிருபா. அடுத்த நொடி கிருபா வேலை தேடுவதற்காக குடியிருந்த வீட்டில் இருவரும் இருந்தனர்.

அறை முழுவதும் இரைந்து கிடந்த பணத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்தவன், ஊரில் உள்ள அனாதை ஆசிரமங்கள் முதியோர் இல்லங்கள் பெயரை பணமிருந்த கவர்களில் குறித்தான், இந்த பணம் எல்லாம் இதில் குறிப்பிட்டு உள்ள முகவரியில் இருக்கவேண்டும் என்று விரலை சுண்டினான், மறுநொடி அறையில் கிடந்த பணங்கள் மாயமாய் மறைந்தது.

எதையோ சாதித்த நிம்மதி மனதில் படற, “எதையும் எதிர்பார்க்காமல் அடுத்தவர்களுக்கு உதவுவதில் எவ்வளவு நிம்மதி என்று என்னால் இப்போது உணரமுடிகின்றது அட்சயன். நம் தேவைக்கு போக பணம் சேர்த்து என்ன சுகம் காண்கின்றோம், நான் கடவுளாய் இருக்கும் வரை என்னை யார் அழைத்து உதவி கேட்டாலும் அவர்களுக்கு தயங்காமல் உதவப் போகின்றேன், என்றான் கிருபா.

மர்மமாய் புன்னகை சிந்திய அட்சயன், “சரி உன் கடமையை நீ கவனி, என் வேலையை நான் பார்க்கின்றேன், நீ எப்படியும் பல இடம் சுற்றவேண்டியிருக்கும், நீ சென்றுவா நீ வரும் வரை உனக்காக நான் இங்கேயே காத்திருக்கின்றேன்”, என்றான் அட்சயன்.

“இப்போது தெரிகின்றது நாட்டில் மக்களுக்கு ஏன் பிரச்னை அதிகமாய் வருகின்றது என்று, பிறர் பிரச்சனை அறிந்துகொள்ள விரும்பாமல் நீ அமைதியாய் இருப்பதால் தான், மக்கள் பிரச்சனையோடு திரிகின்றனர்”, என்று சிடுசிடுத்துவிட்டு, கண்மூடி நிற்க, அடுத்த நொடி, ஒருவர் முன் சென்று நின்றான் கிருபா.

“என்ன சார் எதற்கு கூப்பிடீர்கள்?” என்று கிருபா வினவ, “நீ யார் உன்னை எதற்கு நான் கூப்பிட்டுப்போகின்றேன் ?” என்று முகம் திருப்பினார் அந்த முதியவர். “நீங்கள் என்னை அழைக்கவில்லை சார் கடவுளை கூப்பிட்டர்களே!” என்றான் கிருபா.

“நான் கடவுளை அழைத்ததை கேட்டு நீ வந்தாயா ?” என்று வெறுமையாய் சிரித்தவர், “எனக்கு இந்த உலகத்தில் வாழ விருப்பமில்லை அதனால் அவருடனே அழைத்து செல்லத்தான் கடவுளே! என்று புலம்பிக்கொண்டு இருந்தேன்”, என்று முதியவர் பதிலில் அதிர்ந்தவன், “என்ன சார் சொல்கிண்றீர்கள் உங்களுக்கு என்ன கஷ்டம் ?”என்றான் கிருபா.

“நான் பெற்ற பிள்ளைகளே என்னை பாரமாய் எண்ணி தவிக்க விட்டு சென்றுவிட்டனர், இனி நான் எதற்கு வாழவேண்டும்?, என் பேரன் பேத்தியை பார்த்து தூக்கி கொஞ்சிட பாக்கியம் இல்லாத வாழ்வு வாழ்ந்து என்ன செய்ய?”, என்று கவலையுடன் கூறினார் முதியவர்.

“உங்களிடம் இல்லாத வசதியில்லை என்று நீங்கள் இருக்கும் சூழ்நிலை பார்க்கும் போதே தெரிகின்றது, இருந்தும் உங்கள் மனம் உறவுகளின் அன்பிற்கு தான் ஏங்குகின்றது, உங்களை வேண்டாமென்று விட்டு சென்றவர்களை எண்ணி தவிப்பதை விடுத்து, உண்மையான அன்பிற்கு ஏங்கும் எத்தனையோ அனாதை இல்லங்கள் இருக்கின்றன, அங்கு சென்று உங்கள் பேரன் பேத்தியிடம் காட்டத்துடிக்கும் அன்பில் பாதியை காட்டினால் போதும், உங்கள் தனிமைக்கும் ஆறுதலாய் இருக்கும், அன்பிற்காக ஏங்கும் அவர்களின் மனமும் நிறையும்” என்று யோசனை சொன்னான் கிருபா.

சற்று அமைதியாய் யோசித்தவர், “நீ சொல்வதும் சரி தான் தம்பி அன்பு மறுக்கபடும் போது எத்தனை வேதனையாக இருக்கின்றது?”, இனி என்னை பிரிந்துசென்றவர்களை பற்றி கவலைகொள்ளாமல், நான் அன்பு காட்ட என்று புது சொந்தங்களை உருவாக்கி கொள்வேன்!” என்று நம்பிக்கையாய் கூறினார் பெரியவர்.

அவரின் மனதின் வேதனை தீர்த்த மறுநொடி மலர்ந்த புன்னகையுடன் அங்கிருந்து மறைந்தான் கிருபா. கண் முன் பேசிக்கொண்டு இருந்தவன் காற்றோடு காற்றாக மறைந்திட நடந்ததை நம்பிட முடியாமல் வியப்பில் மூழ்கிப் போனார் பெரியவர்.

அடுத்து சென்ற இடம் ஒரு மருத்துவமனை, ஆபரேஷன் தியேட்டர் வாசலில் ஒரு பெண்மணி கதறி துடித்துக் கொண்டிருந்தார், “என்னமா ஏன் இப்படி அழுகின்றாய்?” என்று ஆதாரவாய் வினவினான் கிருபா.

“ என் வீட்டுக்கார் உயிருக்கு போராடிக்கொண்டிருகின்றார் அண்ணா, ஆபரேஷன் செய்ய நிறைய பணம் கட்ட சொல்கின்றார்கள் அவ்வளவு பணத்திற்கு நான் எங்கு போவேன் , என்னிடம் கடைசியாய் இருந்த என் தாலியையும் விற்று மருந்துக்கு செலவழித்து விட்டேன், இனி விற்க கூட என் கையில் குண்டுமணி தங்கமில்லை” என்று கதறி துடித்தாள் அந்த பெண்.

“உனக்கு உதவ வேறு யாருமில்லையா மா?”, என்றவன் குரலில் சோகம் பிரதிபலித்தது. “நங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று என் வீட்டில் தான் அவரை கொலைசெய்ய முயற்சி செய்து இப்படி அடித்துபோட்டு உள்ளார்கள் அண்ணா” என்று மீண்டும் கண்ணீரில் கரைந்தாள்.

“இதோ வருகின்றேன்” என்று சென்ற கிருபா, சற்று நேரத்தில் திரும்பி வந்து,” இது ஹாஸ்பிடல் பில் பத்திரமாய் வைத்துக்கொள், இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆபரேஷன் துவங்கிவிடுவார்கள்” என்றான்.

“சரியான நேரத்தில் கடவுள் போல வந்து, யார் என்றே தெரியாத எனக்கு பணத்தை கொடுத்து உதவி செய்திருக்கின்ரீர்கள், உங்கள் உதவியை என்றும் மறக்கமாட்டேன்” என்று கைகூப்பி நின்றாள் அந்த பெண்.

மனம் லேசாகிட மலர்ந்த புன்னகை செய்த படி அங்கிருந்தும் மறைந்தான் கிருபா. இப்படி ஒருநொடி கூட தாமதிக்காமல் உண்மையில் உதவி வேண்டி அழைத்தவர்களுக்கு வழியச்சென்று உதவிவிட்டு அதில் மனநிறைவு அடைந்து கொண்டிருந்தான்.