நீ இன்று நானாக 06

நீ இன்று நானாக 06
0

அத்தியாயம் - 06

கடவுளே என்று மீண்டும் ஒரு கதறல் குரல் கேட்டு அவ்விடம் தோன்றினான் கிருபா, “ என்னமா, ஏன் இவ்வளவு வருத்தமாக இருகின்றீர்கள்?” என்று அக்கறையாய் வினவினான்.

“நீ யார் உன்னிடம் என் கஷ்டத்தை எதற்கு சொல்லவேண்டும்?” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு “ உனக்கு செய்கின்ற பூஜையில் என்ன குறைவைத்தேன், அவள் நூறு ரூபாய்க்கு மாலை வாங்கிப்போட்டால், நான் இருநூறு ரூபாய்க்கு மாலை வாங்கி உனக்கு சாற்றினேன், ஆனால் நீ எனக்கு என்ன செய்தாய், ஒன்றுமே செய்யவில்லை ஆனால் அவளுக்கு மட்டும் புது கார் வாங்கும் யோகம் கொடுத்திருகின்றாய்,” என்று தானாய் தன் புலம்பலை துவங்கினார் அந்த பெண்மணி.

கிருபாவிற்கு வந்த கோபத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை , “ கடவுள் என்ன மளிகைக்கடையா? வைத்திருகின்றார், எதையாவது கொடுத்து, விருப்பப்பட்டதை வாங்கிட, “ என்று தனக்குள் எழுந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, “ உங்களிடம் கார் இல்லையா?” என்றான். “ ஏன் இல்லாமல் என்னிடம் இரண்டு கார் உள்ளது!” என்று பதில் தந்தார் அந்த பெண்மணி. “ அப்புறம் எதற்கு அந்த அம்மா கார் வாங்கியதில் இத்தனை கடுப்பு என்று வினவினான் கிருபா. “ அது லேட்டஸ்ட் மாடல் கார் தம்பி, நான் வாங்க வேண்டும் என்று நினைத்தேன் என்னை முந்திக்கொண்டு வாங்கிவிட்டு என் முன்னாடியே ஒட்டிக்கொண்டு வந்து சீன் போடுகின்றாள்” என்று பொருமினால் அந்த பெண்மணி. என்ன சொல்வது என்றே புரியாமல் தலையில் அடித்துக்கொண்டு திரும்பினான் கிருபா.

இப்படியும் மனிதர்கள் இருகின்றார்கள் என்று நொந்தபடி கிருபா நிற்க, அவன் காதில் மெதுவாய் “கடவுளே என் பிள்ளைகளுக்காகவாவது என்னை காப்பாற்று!” என்று மூச்சுவிடவும் சிரமப்பட்டு பேசிய வார்த்தைகள் விழ உடனே அங்கு சென்று நின்றான் கிருபா.

ஒருவர் விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்க, அவரை சுற்றி ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது , அந்த கூட்டத்தை விலக்கி தள்ளிவிட்டு காயம் பட்டவரை நெருங்கிய கிருபாவின் கையை ஒருவர் பற்றித்தடுத்து, “வேண்டாம் தம்பி பக்கத்தில் போகாதீர்கள்!, இது ஆக்சிடென்ட் கேஸ், நீ தலையிட்டால் உன்னை சாட்சி சொல்லச்சொல்லி காலம் முழுவதும் கோர்ட் கேஸ் என்று அலையவிட்டுவிடுவார்கள், ஆம்புலன்ஸ்க்கு சொல்லிவிட்டார்கள் எந்த நேரத்திலும் வந்து விடும் வீனாய் உன் தலையை கொடுத்து மாட்டிக்கொள்ளாதே ” என்று இலவச அறிவுரை வழங்கினார் அவர்.

“ஒரு மனிதன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார் இந்த நேரத்திலும் உங்களுக்கு பிரச்சினை வருமென்று ஒதுங்கி நிற்கின்றீர்கள்” என்று கோபமாய் கூறிவிட்டு, காயம் கொண்டவரை தன் மீது மடிமீது தூக்கி வைத்துக்கொண்டு அவர் காயங்களை மெதுவாய் தொட்டுப்பார்த்தான் கிருபா.

கிருபா கை பட்டவுடன் காயங்களின் வேதனை மறந்து மெதுவாய், “என்னை எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள் என் குடும்பமே உங்களை தெய்வமாய் வணங்கும் சார்?” என்று இறைஞ்சும் குரலில் வேண்டுதல் வைத்தார் காயம்பட்டவர்.

“உங்களுக்கு ஒன்றும் ஆகாது” என்று ஆறுதலாய் அவர் கரம் பற்றி கண்மூடி அமர்ந்தவன், மனதில் “இவர் உயிருக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது!” என்று விரல்களை சுண்டிட, எந்த மாற்றமும் நிகழாமலிருந்தது, மீண்டும் கண்மூடி அதையே திரும்ப நினைத்துக்கொண்டு விரல்களை சுண்டிட, கிருபாவின் கட்டளை பலிக்காமல், அவன் மடியிலேயே அவர் உயிர் பிரிந்தது, கனத்த இதயத்துடன், ஆம்புலன்ஸியில் உடலை ஏற்றி அனுப்பிவைத்துவிட்டு விரக்தியாய் சுற்றி இருந்தவர்களை கவனிக்க, சிலர் கண்டும் காணாதது போல ஒதுங்கிச்செல்ல, சிலர் தங்கள் மொபைலில் நடந்தவைகளை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

சுயநலமாய் வாழும் மனிதர்கள் மத்தியில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று விரத்தியாக , யாரும் இல்லாத வீதியில் தனிமையில் நடந்து சென்றான் கிருபா.

“அண்ணா அண்ணா காப்பாற்றுங்கள் அண்ணா பொறுக்கி பசங்கள் என்னை வம்பிலுக்கின்றார்கள்” என்று கிருபாவின் பின் வந்து ஒழிந்து கொண்டாள் ஒரு பெண். அவள் சொன்னது போலவே நான்கு அடியாட்கள் போன்ற தோற்றம் கொண்ட தடியன்கள் கிருபா முன் வந்து நின்று, “ஒழுங்கு மரியாதையாய் நீயே விலகிச்சென்றுவிடு, இல்லை எங்கள் முறையில் துரத்த வேண்டிவரும்” என்று ஒருவன் முன்னேறி அந்த பெண்ணின் கையைப்பற்ற முயல, அதனை தடுத்த கிருபா, “நானே பயங்கர கடுப்பில் இருக்கின்றேன், தேவையில்லாமல் என்னை வெறுப்பேற்றாமல் கிளம்பிச்செல்லுங்கள்” என்று எச்சரிக்கை விடுத்தான் கிருபா.

“பாருடா… ஒற்றை ஆளாய் இருந்துகொண்டு எங்களையே மிரட்டுகின்றாயா?” என்று ஒருவன் கை ஓங்கிக்கொண்டு வர, ஏற்கனவே உண்டான மனவிரக்தியுடன் கோபமும் சேர்ந்து கொள்ள, ஒரு நொடி கண்மூடி திறந்தான் கிருபா.

அவன் கண்ணில் உண்டான கோபத்தின் அனல் சுற்றியிருந்த அனைத்தையும் எரித்து சாம்பலாக்கியது, அதில் பயத்துடன் உதவி கேட்டு வந்த பெண்ணும் கருகி இறந்தாள், எல்லாம் எரிந்து கிடக்க சிறு கனலும் தீண்டாமல், அப்படியே நின்றான் கிருபா. தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று உணர்ந்த கிருபா, அதற்கு மேல் என்ன செய்வது என்று புரியாமலும் கலக்கத்துடனும் கடற்கரைக்கு சென்று அமர்ந்தான், சிறிது நேரத்தில் அவன் கண் முன்பே கடற்கரை மறைந்து , அவன் குடியிருந்த வீட்டில் அட்சயன் முன் அமர்ந்திருக்க கண்டு, தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு நாள் முடிந்துவிட்டது என்று புரிந்து கொண்டான், கிருபா.

தன்னை நோக்கி மர்மமாய் புன்னகை செய்த கடவுளை நோக்கி, கோபமாய், “உனக்கு சவால்விட்டது தப்புதான் அதற்காக இப்படி எனக்கு வரம் தருவது போல தந்து உன் பகையை தீர்திருகுக்க கூடாது, இன்று என் கண்முன்பே எந்த தவறும் செய்யாத இரு அப்பாவி உயிர் போனது அதற்கு நான் தான் காரணம் என்ற எண்ணமே இனி வாழ்நாள் முழுவதும் என்னை கொள்ளாமல் கொன்றுவிடும்” என்று வேதனை தாங்காமல் இன்று நடந்த அனைத்தையும் கூறி அரற்றினான் கிருபா.

“இன்று நடந்தவற்றில் எதை உன் தவறென்று புலம்புகின்றாய், கை நிறைய பணம் கிடைத்தும் தவறான வழியில் செல்லாமல் நியாமான விஷயங்களுக்கு கொடுத்தாய், தன் மகனே கொடுத்தாலும் தவறான வழியில் கிடைத்த பணம் என்று எண்ணி தொட்டுக்கூட பார்க்காத உன் அம்மா , ஆனால் உங்களைப்போல எல்லோரும் நியாமாய் நடப்பதில்லையே கிருபா, அதில் உன் தவறு என்ன?, உன் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியை கண்டு மனம் பொறுக்காத வீட்டு உரிமையாளர் உன்னை வார்த்தைகளால் காயப்படுத்தினார், உண்மையில் மக்களின் மனநிலை இப்படிதான் உள்ளது கிருபா, அடுத்தவர் மகிழ்வை மனநிறைவுடன் ஏற்க முடியவில்லை, தங்கள் மகிழ்ச்சி மட்டுமே வாழ்கை என்று சுயநலமாய் வாழத் துவங்கிவிட்டனர், நீ சொன்ன முதியவர், மகன் மனதில் பாசம் மறந்து பணத்தின் மீது ஆசை பிறந்ததற்கு நீ காரணமா? இல்லை அவனை படைத்த நான் காரணமா? நம் இருவருமே இல்லை, குழந்தையாய் தவழ்ந்திடும் பொழுது உண்டான பாசம், வளர்ந்து தனகென்று ஒரு குடும்பம் வந்ததும் பெற்றவர்களை மறந்து பணத்தின் பின் ஓடச்செய்த அவனின் அயல்நாட்டு மோகமும், பணமெனும் தாபமும், சுயநலமும் தான் காரணம்” என்று கிருபாவின் மனநிலையை சரிசெய்தார் இறைவன்.

“விலங்குகள் சிங்கம், புலி கரடி என்று பல இனங்களாக பிரிந்து கிடக்கின்றன, இருந்தும் அதன் இனத்திற்குள் இணக்கமாய் தானே வாழ்கின்றன, ஆனால் ஒரே இனமாய் ஒற்றுமையாய் வாழவேண்டிய மனிதப்பிறவிகள், ஜாதி மதம் இனம், மொழி என்று பிரிவினை கொண்டு சிதறிக்கிடப்பதன் காரணம் நானா?. உயிரை படைத்தது அனுப்பும் போதே, நீ இந்த இனம் குளம் என்று பிரித்தா? படைகின்றேன், இல்லை என்னை இந்த முறையில் தொழுதால் தான் ஏற்பேன் என்று சொல்கின்றேனா? உண்மையான அன்புடன் படைக்கும் ஒரு மலரைக்கூட மனநிறைவுடன் தானே ஏற்கின்றேன்!, தங்கள் கௌரவத்தை காத்திட பிறர் உயிர் குடிக்கும் இனவெறியை இவர்களுக்குள் விதைத்தது நானில்லையே கிருபா, அவர்கள் செய்யும் கொடூர செயலுக்கு நான் எங்கனம் பொறுப்பு ஆவேன்”

“அது சரி நீ சொல்வது போல் இது அனைத்திற்கும் நீ காரணமில்லை, ஆனால் அந்த விபத்தில் அடிபட்டவர் அவரை ஏன் என்னால் காப்பாற்ற முடியவில்லை, “ என்றவன் குரலில் கோபம் குறைந்து வேதனை நிறைந்திருந்தது.

ஒருவரின் மரணத்தை இறைவன் கூட தடுத்து மாற்ற முடியாது கிருபா, அவன் விதி முடித்து உயிர் பிரியவேண்டும் என்பது விதி அதை மாற்ற உன்னாலும் முடியாது என்னாலும் முடியாது, ஆனால் இன்று இறந்தவரைப் போல பலர் தங்களுக்கு விதிக்கப்பட காலம் முடியும் முன்பே துர்மரணம் கண்டுள்ளனர் கிருபா, அடிபட்டு கிடப்பவனை காத்திட முயலாமல், தன்கென்னவந்தது என்று ஒதுங்கிச்செல்பவர்கள் தான் அதிகம், எங்கு காயம்பட்டவரை காப்பாற்ற சென்றால் தங்களுக்கு பிரச்சனை வந்துவிடுமோ? என்று மனிதாபிமானம் மறந்து சுயநல இயந்திரங்களாக மனிதர்கள் மனிதர்கள் மாறியதற்கு யார் காரணம்?” , என்றார் இறைவன்.

இது எல்லாவற்றிகும் விளக்கம் தந்தாய் கடைசியாய் அந்த பெண்ணின் மரணத்திற்கும் என்ன விளக்கம் சொல்லப்போகின்றாய் ? நீ சொன்னது போல மற்ற அனைத்திற்கும் நீ நான் காரணமில்லை என்றால், அந்த அப்பாவி பெண் மரணத்திற்கு யார் காரணம்?” என்று விளக்கம் கேட்டான் கிருபா.

“அதற்கு இங்கு நடக்கும் அநியாயங்கள் தான் காரணம், இன்று முழுவதும் உன் மனதில் உண்டான வெறுப்பு தான் அளவில்லா கோபத்தின் காரணம், சாமானிய மனிதன் கோபம் கொண்டாலே, சம்மந்தமில்லத நபர்கள் பாதிக்கபடுகிறனர், இந்த உலகத்தையே படைத்து பாதுகாத்திடும் கடவுளின் கோபம் எப்படி இருக்கும், அக்கிரமங்கள் அதிகமாகி நல்வர்கள் பாதிக்கபடும் போது எனக்கு உண்டாகும் கோபம் தான் இயற்கை சீற்றங்களாக வெளிப்பட்டு பல உயிர்களை பறித்து விடுகின்றது” என்று வேதனை குரலில் கூறனார் இறைவன்.

இறைவன் கொடுத்த விளக்கத்தை அமைதியாய் கேட்டு நின்ற கிருபா, இருகைகூப்பி நின்று “நீ எதற்காக என்னை தேர்ந்தெடுத்து வந்தாய் என்று எனக்கு புரியவில்லை, ஆனால் நடந்தவைகளிலிருந்து நான் ஒன்றை தெளிவாய் புரிந்து கொண்டேன், எங்கள் கஷ்டத்திற்கு காரணம் நீ இல்லை நாங்கள் கொண்ட ஆசைகளும், அலட்சியமும் தான், மாற்றம் வேண்டியது உன்னிடம் அல்ல, எங்களிடம் தான் ஒவ்வொரு மனிதனும் மனதளவில் மாற்றத்தை உணர்ந்தால் தான் இந்த உலகம் புனித பூமியாய்மாறும் என்று தெளிவாய் புரிந்துகொண்டேன்” என்றவன் கண்மூடி கண்ணீர் வடித்து நின்றான் கிருபா.