நீ இன்று நானாக 07

நீ இன்று நானாக 07
0

அத்தியாயம் - 07

கண்திறந்த பார்த்தவன், தன் படுக்கையில் படுத்திருக்க, “ ச்சே… எல்லாம் கனவு! ஆனால் உண்மையில் நடந்தது போல இருத்தது” என்று யோசனையாய் எழுந்து அமர்ந்தவன் மொபைல் அடிக்க எடுத்து காதில் வைத்து “ அம்மா இன்று எனக்கு ஒரு…” என்று கிருபா முடிபதற்குள் “ அந்த பணத்தை சேர்க்க வேண்டிய இடத்திள் சேர்த்தாயா? என்றார் கஸ்தூரி. “ எந்த பணம்?” என்று கிருபா புரியாமல் வினவ, “ என்ன எந்த பணம் என்கின்றாய், அதான் பைநிறைய கொண்டு வந்தாயே யாரோ சன்மானமாக கொடுத்தது” என்று விளக்கம் தந்தார்.

“நமக்கு வந்த அதே கனவு அம்மாவிற்கும் வந்தாதா என்ன? என்று குழம்பி தவித்தவன், “என்னுடன் வேறு யாரும் வந்தார்களா?” என்று விசாரித்தான் கிருபா. “ஆமாம் உன் நண்பன் அட்சயன் வந்தான், உன் மீது இருந்த கோபத்தில் ஒரு வாய்கூட சாப்பிடாமல் அனுப்பிவிட்டேன்,” என்று சங்கடமாய் கஸ்தூரி கூறிட, “அடுத்து வரும் போது படையலே போட்டு விருந்து வைத்துவிடுங்கள் அதற்கு முன் போனை வையுங்கள்” எனக்கு இண்டர்வியூவிற்கு கிளம்பவேண்டும்” என்று அழைப்பை துண்டித்தான் கிருபா.

“என்ன நடக்கின்றது, ஒரு கனவு எப்படி இரண்டு பேருக்கு வரும்!” என்ற குழப்பத்துடனே தன் காலைக்கடமைகளை முடித்து கிளம்பினான் கிருபா. “எல்லாம் என்னைச் சொல்ல வேண்டும் ஆள் தராதரம் பார்க்காமல் வீட்டில் குடிவைத்தேன் பார் எனக்கு இது தேவைதான்,” என்று கிருபா காதில் தெளிவாய் விழும்படி முனுமுணுத்து சென்றார், வீட்டு உரிமையாளர்.

இண்டர்வியூ நடக்கும் இடத்திற்கு வந்து காத்திருந்தவன் காதில் அங்கிருந்தவர்கள் பேச்சு விழுந்தது, “இங்கே பாரேன் நேற்று ஒரு தெருவில் கருகிய நிலையில் ஐந்து உடல்கள் கிடந்திருகின்றது, அதில் ஒரு பெண், அந்த இடத்தில் நெருப்பு பரவும்படி எந்த பொருளும் இல்லையாம், எப்படி நெருப்பு பற்றியது என்று போலீஸ் தனிப்படை அமைத்து விசாரித்துக்கொண்டு இருகின்றார்களாம்!, நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

முகம் வேர்த்து விருவிருக்க சட்டென்று எழுந்து நடந்த கிருபா, தனக்கான குழப்பத்தை தெளிவு படுத்திக்கொள்ள முன்பு சென்ற கோவிலின் சன்னதி முன் நின்று “என்ன நடக்கின்றது, நான் உணர்ந்தது கனவா? இல்லை நிஜமா?” என்று தன் குழப்பத்தை வினவினான்.

கல்லெனயிருந்த கடவுளின் முகத்தில் சிறு முறுவல் தோன்றி மறைந்ததாய் உணர்ந்த கிருபாவின் மனம் லேசானது, நடந்தது உண்மையா? பொய்யா? தெரியவில்லை ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முடிவிற்கு வந்துவிட்டேன் என்று கோவில் வாசலில் நிறுத்தியிருந்த தனது பைக் நோக்கி, சென்றான். யாரோ யாரையோ “தம்பி” என்று அழைக்கும் குரல் கேட்டு, “இந்த குரல் பழக்கப்பட்டது போல் இருக்கின்றது” என்று ஆர்வமாய் திரும்பி பார்த்தான் கிருபா. கோவில் சன்னதி முன் நின்றிருந்த ஒருவனை வெள்ளை உடை அணிந்த ஒருவர் அழைத்துக்கொண்டு இருந்தார். கிருபா தன்னை கவனிப்பதை அறிந்து அவன் புறம் திரும்பி அழகாய் சிரித்துவிட்டு மீண்டும் திரும்பிகொண்டார் அவர்.

கிருபா முகத்தில் தானாய் புன்னகை மலர, தான் தங்கிருந்த வீட்டிற்கு சென்று வீட்டு உரிமையாளரிடம் கூறிவிட்டு வீட்டை காலி செய்துவிட்டு தன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றான்.

“என்ன கிருபா, நேற்று தான் வந்து சென்றாய் அதற்குள் திரும்ப வந்துவிட்டாய், இன்று இண்டர்வியூ என்னாயிற்று” என்று அக்கறையாய் விசாரித்தார், கஸ்தூரி. “ இனி நான் வெளியில் எங்கும் வேலை தேடிச்செல்லப்போவது இல்லை அம்மா, உங்களுடன் சேர்ந்து நம் நிலத்தில் விவசாயம் செய்யப்போகின்றேன்,இனி உங்களை தனியாக விட்டு எங்கும் செல்லமாட்டேன், ஊரில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாய் பாடம் சொல்லிக்கொடுக்க போகின்றேன், நம் ஊரில் உள்ள பெண்களுக்கு தற்காப்புகலை கற்றுத்தர ஏற்பாடு செய்யப் போகின்றேன்” என்று தனது திட்டங்களை வரிசையாய் அறிவித்தான் கிருபா.

மகனின் தீடீர் மாற்றம் கண்டு மனம் மகிழ்ந்தவாராய், “ உன் மனம் மாறியதில் ரொம்ப சந்தோசம் கிருபா, இதற்கு காரணம் அந்த அட்சயன் தம்பியாய் தான் இருக்கும், ஒரு நாள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா!” என்றார் கஸ்தூரி.

சில மாதங்கள் கடந்து…

ஊருக்குள் படித்து வேலையில்லாமல் திரிந்த இளைங்கர்களுக்கு விவசாயத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்து, அவர்களையும் இணைத்துக்கொண்டு விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்தி அதிக படியான விளைச்சலை கண்டான் கிருபா.

தன் அன்னையிடம் சொன்னது போல ஊருக்குள் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தான், பலநாள் மூடிக்கிடந்த பள்ளியை திறக்க ஏற்பாடு செய்தான், ஊரில் உள்ள பெண்களுக்கு தற்காப்பு கலை பயற்றுவிக்க, ஏற்பாடு செய்தான் அதன் படி, பல பெண்கள் கராத்தே, கற்று தங்களிடம் வாலட்டுபவர்களுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுத்தனர்.

தன் நிலத்தில் தானே விவசாயம் செய்த பயிர்களை கடவுள் முன் படைத்து கண்மூடி நின்றான் கிருபா. “படித்த படிப்பிற்கு தான் வேலை செய்வேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தாய், இது என்ன திடீர் மாற்றம்” என்று குரல் கேட்டு கண்திறந்து பார்த்த கிருபா, மகிழ்ச்சியில் முகம் மலர, “என்ன வாத்தியாரே! வந்து பரீட்சை வைத்து பாடமும் நடத்திவிட்டு, இப்படிக்கேட்டால் என்ன செய்வது?” என்றான் கிருபா. “ ஊருக்குள் நிறைய நல்லது செய்கின்றாய் போல, எல்லோரும் உன்னை நடமாடும் கடவுளாய் பார்க்கின்றனர், பார்த்துப்பா எனக்கு போட்டியாக வந்துவிடாதே!!” என்று சிரித்தார் அவர்.

“என்ன பொறமையா? இது உனக்கு பொருத்தமாய் இல்லையே!, என்ன தீடிரென்று என்னைப் பார்க்க கிளம்பி வந்துவிட்டாய் நாட்டை திருத்த போகவில்லையா? என்று கிண்டலாய் வினவினான் கிருபா.

“கொஞ்ச நாட்களாக உன் புலம்பல் இல்லாமல் இருந்ததா அதான் என்னவென்று பார்த்துவிட்டு செல்லலாம் என்று வந்தேன், சரி இன்னொரு முறை நீ இன்று நானாக விளையாடிப் பார்ப்போமா” என்றார் அவர்.

“போதும் சாமி ஒருமுறை பட்டதே போதும் உனக்கு ஒரு கும்பிடு, உன் திசைக்கு ஒரு கும்பிடு” என்று கிருபா தலைக்கு மேல் கைதூக்கி கும்பிடு போட, “நீ பிழைத்துக் கொள்வாய்!” என்று சிரித்த படி சன்னதியில் சென்று மறைந்தார் அவர்.

“என்ன ராசா, எதுக்கு இப்படி கை தூக்கி கும்பிடு போடுகின்றாய்,” என்று அருகில் வந்தார் கஸ்தூரி.

“வாழவைக்கும் கடவுளை வணங்குகின்றேன் அம்மா” என்று மனநிறைவுடன் சிரித்தான் கிருபா.

அவன் மாறவேண்டும்…

இவன் மாறவேண்டும்…

என்று பிறரின் மாற்றத்திற்காக

காத்திருக்காமல்

உன்னை நீ உணர்ந்து

உனக்குள் மாற்றத்தை

புகுத்திடு உலகம்

உனக்கேற்றதாய் அழகாய்

மாறிடும்…

இனி எல்லாம் சுபமே… சுகமே…

என்றும் நட்புடன்…

லதாகணேஷ்…