ப்ரிஜ்ராஜ் மஹால்

ப்ரிஜ்ராஜ் மஹால்
0

image%20(1) image

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் அமைத்திருக்கும் ப்ரிஜ்ராஜ் மஹால் எனும் அரண்மனையைப் பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம்.

இந்த அரண்மனையை பிரிட்டிஷ் அரசாங்கம் 1830ல் கட்டியது. அந்தக்காலத்தில் இது ஆங்கேலயர்களின் கெஸ்ட் ஹவுஸாகப் பயன்படுத்தப்பட்டது. மன்னர்கள், வைஸ்ராய்கள், பிரதம மந்திரிகள் பலரும் தங்கி இளைப்பாறும் இடமாக விளங்கியது. 1911ஆம் ஆண்டு தங்கிச் சென்ற குயூன் மேரி ராணி அவர்களும், பாரதப் பிரதமர் மறைந்த இந்திராகாந்தி அவர்களும் கூட இதில் அடக்கம்.

பிரிஜ்ராஜ் மஹாலின் அமானுஷ்யம் ஆரம்பித்தது 1857 என்கிறார்கள். எப்படி அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள் என்று வியக்கிறீர்கள் அல்லவா. சிப்பாய் கலக்கம் நடந்த சமயம் அது.

அந்த அரண்மனையில் அப்போது மேஜர் சார்ல்ஸ் பார்ட்டன் என்ற ஆங்கிலேய அதிகாரி வசித்து வந்தார். பார்ட்டனும் அவரது மகன்களும் கலவரக்காரர்களால் அந்த அரண்மனையில் கொல்லப்பட்டார்கள். அவர்களது உடலை மீட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் மரியாதையுடன் அடக்கம் செய்தது.

அதன் பின்னரே அங்கு அமானுஷ்யங்கள் ஆரம்பமாகின என்கின்றனர் அந்த ஊரில் வசிப்பவர்கள்.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து கோட்டாவின் மன்னரின் கட்டுப்பாட்டில் மஹால் வந்தது. அதன் பின்னர் 1970களில் புதுப்பிக்கப்பட்டு விடுதியாக மாற்றம் செய்யப்பட்டது.

மாற்றம் செய்யப்பட்ட விடுதியில் இன்றும் கூட இரவுகளில் பூட்ஸ் 'டக் டக்’கென ஓசை எழுப்ப யாரோ நடந்து வருவதும், அவ்வப்போது ஆங்கிலத்தில் உத்தரவு பிறப்பிக்கும் ஓசையும் கேட்கிறது என்று சிலர் சொல்ல, பார்ட்டனின் ஆவியை கண்ணால் பார்த்த கோட்டாவின் மகாராணி ‘ஒரு வயதான வெள்ளைக்கார அதிகாரி , கையில் ஒரு பிரம்பு, கம்பீர நடை, கண்களில் கண்டிப்பு’ என்று அவரது தோற்றத்தை வர்ணிக்கிறார்.

பார்ட்டனின் ஆவி இரவு நேரங்களில், அவர் கொலை செய்யப்பட்ட வரவேற்பறையில் பெரும்பாலும் காணப்படுவதாகவும் சொல்கின்றனர்.

நல்லவேளை மற்ற பேய்களைப் போல இந்த ஆவி பழிவாங்கவில்லை. ஆனால் வித்தியாசமாக ‘டோன்ட் ஸ்லீப், டோன்ட் ஸ்மோக்’ என்று காவலாளிகளைப் பார்த்து சத்தம் போடுகிறதாம். இரவு காவல் காக்கும் வேலையின் போது காவலாளிகள் யாராவது தூங்கிவிட்டால் ‘பளார்’ என்று ஒரு அடி அடித்து எழுப்பி விடுகிறதாம். இந்தப் பேயடி வாங்கியவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

இப்படி இறந்தும் கூட தான் கடைபிடித்த ஒழுக்கத்தை இன்னமும் தொடர்ந்து வரும் பார்ட்டன் வியப்புக்குரியவரே. சந்தர்ப்பம் கிடைத்தால் ப்ரிஜ்ராஜ் மகாலுக்கு சென்று வாருங்கள். பார்ட்டனை சந்திக்க முயல்பவர்கள் வேண்டுமானால் அவர் உலா வரும் நேரத்தில் பணியாளர் உடையை அணிந்து, உறங்கி 'பேயடி’யை முயற்சித்துப் பார்த்துவிட்டு தமிழ்பிக்ஷனுக்கு எழுதலாமே :slight_smile: !:slightly_smiling_face:

2 Likes