மகனை கொன்ற தாய் - உண்மை சம்பவம்

மகனை கொன்ற தாய் - உண்மை சம்பவம்
0

images

இந்த உண்மை கதை அம்மா ஆவியாக வந்து தனது மகனை பலி தீர்க்கும் கதை. நடந்தது திருப்பூரில், இது நான் செவி வழி என் தோழியின் அம்மா உணர்ந்து சொன்னதை வைத்து எழுதியது.

திருப்பூர் - அவினாசி இணைக்கும் ஒரு வீட்டில் அப்போது அவர்கள் குடி இருந்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பெண்மணி வயது ஐன்பத்தி எட்டு இருக்குமாம். அவருக்கு இரு மகன்கள். முதல் பையனுக்கு ஒரு பெண். இரண்டாம் மகனுக்கு ஒரு பெண் ஒரு ஆண்.

இரண்டாம் மகன் வசதியில் அண்ணனை விட கீழ் இருக்க, எப்போதும் தன் தாயிடம் வந்து இந்த வீட்டை தன் பெயருக்கு எழுதி தருமாறு கேட்டு கொண்டே இருப்பாராம்.
ஒரு நாள் வார்த்தை முற்றி சண்டை பெரிது ஆனது. சொத்து முழுவதும் பிரித்து கொடுத்து விட்டேன் தானே? என் கணவன் எனக்கு என விட்டு சென்ற வீட்டின் வாடகை வாங்கி தானே என் செலவுகளை செய்கிறேன்? இதையும் கொடுத்து விட்டு என் செலவுக்கு என்ன செய்வேன்? உன் அண்ணாவிடம் பேசி நான் இறந்த பின் இந்த வீட்டை உனக்கே தர சொல்கிறேன் என கூறி இருக்கிறார்.

இந்த விஷயம் அறிந்த முதல் மருமகள் வீட்டின் பங்கை கேட்டு பிரச்சனை செய்ய, அவரின் மகன் ஒரு விபரீத முடிவு எடுத்தார். அது தான் தன் தாயை கொலை செய்வது. ஒரு சனிக்கிழமை அன்று இரவு அவர் அம்மாவுக்கு உணவுக்கு பின் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அவர் தூங்கியதும் ஒரு மணி அளவில் அவரை வீட்டின் முன் பக்கம் கார் பார்க்கிங் அடுத்து பழைய பொருட்கள் வைக்கப்படும் அறையில் அவரை தூக்கில் தொங்க விட்டு கொன்று இருக்கிறார். பின் எதுவும் தெரியாது போல, அவர் இல்லம் சென்று விட்டார்.

திருப்பூரில் சனிக்கிழமை இரவு தான் அனைவருக்கும் ஓய்வு. ஞாயிறு காலை நேரம் கழித்தே விழிப்பது வழக்கம். ஞாயிறு அன்று காலை பதினோரு மணிக்கு துணி துவைக்கும் அக்கா வர, பாட்டியை காணவில்லை என்று வீடு முழுக்க தேட, அவர் இல்லை. அந்த அக்காவின் அலறல் கேட்டு அனைவரும் கூட, அவரோ நாக்கு வெளி வந்து, தூக்கில் தொங்கி இருக்கிறார்.

அக்கம் பக்கம் விஷயம் தெரிந்து அனைவரும் ஒன்று கூட, அவர் மகன்கள் வர, காரியம் முடித்து எடுத்து சென்று விட்டனர். பின் ஊர் முழுக்க அவர் மூட்டு வலி தாங்காமல் தூக்கில் தொங்கி விட்டார் என கூறி விட்டனர். அதுவே பரவி போய் அனைவரும் நம்பியும் விட்டனர்.

அவர் இறந்து ஒரு வாரம் கழித்து, அவரின் நடமாட்டம் தெரிய ஆரம்பித்தது. அவர் இரவு ஒரு மணி ஆனால் அவர் வீட்டின் கார் பார்க்கிங் முன் நின்று இருப்பாராம்.
ஒரு நாள் என் தோழியின் அண்ணா படம் முடித்து வீடு வரும் போது, வாசலின் முன் நின்று இருக்கிறார். அவர் பயந்து போய் அவர் அம்மா, அப்பா ஃபோனில் அழைத்து விவரம் சொல்லி வீட்டிற்க்கு வெளியில் வர சொல்லவும், பாட்டி சிரித்து விட்டு, "உள்ள போ கண்ணு எதுக்கு பயம்?, இது என் வீடு தானே? இங்க இருக்கமா வேற எங்க போவேன் நான்? உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் என்று கூறவும், அந்த அண்ணாவின் வீட்டில் உள்ளோர் வெளியே வரவும் அவர் மறைந்து விட்டாராம்.

பின் ஒரு நாள் என் தோழியின் அம்மா, நான்கு மணிக்கு எழுந்து, வாசல் கூட்டும் போது, பின் இருந்து அழைத்து இருக்கிறார். அவரும் யார் அழைப்பது என்று பார்க்க, பாட்டி நின்று கொண்டு இருந்து இருக்கிறார்.

" வாசல் முழுக்க புல் வந்து கிடக்கு பாரு அதையும் புடிங்கி போட்டு கூட்டு" என்று ஏவி உள்ளார்.

தோழியின் அம்மா கொஞ்சம் தைரியம் ஆனவர் அவரை எதிர் கேள்வி கேட்டு இருக்கிறார்." இப்படி ஏன் செஞ்சீங்க அம்மா, என்ன வலி அப்படி? எங்க கிட்ட சொல்லி இருந்தா நாங்க உங்களை பார்த்துக்க மாட்டோம்?"

பாட்டி, " நான் எதுக்கு சாக போறேன்? எல்லாம் பேராசை புடிச்ச என் பையன் பண்ணது, அவனுக்கு பாடம் சொல்லி தர தான் இங்க இருக்கேன், உங்க யாரையும் எதுவும் செய்ய மாட்டேன். என் வீட்டை உங்க வீட பார்த்துக்கோங்க போதும்" என்று கூறி விட்டு மறைந்து போய் விட்டாராம்.

பின் அனைவருக்கும் அவர் இருப்பது தெரிய, அனைவரும் வீடு விட்டு காலி செய்து சொல்லாமல் சென்று விட்டனர். அக்கம் பக்கம் உள்ளோர் இரவு பன்னிரண்டு மேல் வெளியில் வருவது இல்லை. அதற்குள் அவர் வீட்டை தம்பி தனக்கே வேண்டும் என்று பிரித்து வாங்கி கொண்டு வந்து விட்டாராம்.

குடும்பத்தோடு அந்த வீடு மாறி உள்ளார்கள். முதல் நாள் எதுவும் இல்லை. இரண்டாம் நாள் பேரன், பேத்தி இருவரையும் அழைத்து இருக்கிறார். காலையில் தன் மருமகள் முன் நின்று சிரித்து இருக்கிறார். மூன்று நாள் பயந்து இருந்து விட்டு இரண்டாம் மருமகள், பேரன், பேத்தி அவரை விட்டு அவர்கள் வீடு சென்று விட்டனராம்.

அன்று இரவு அவர் தனியாய் இருக்கும் போது, அவரின் அம்மா வந்துள்ளார். இவருக்கும் அவர் அழைப்பது கேட்க, கதவை திறந்து பார்க்க, வாசலில் அமர்ந்து இருக்கிறார். அவருக்கு பயம் தோற்றி கொள்ள,

" என்ன அம்மா வேணும்? எதுக்கு இப்படி பேயா சுத்திட்டு இருக்க?"

“நீ தானே நல்லா இருந்த என்னை கொன்ன?”

" ஒரு பொண்ணு வெச்சுட்டு அவன் நல்லா இருக்கான், நான் தானே எதும் இல்லாம கஷ்டப்பட்டு இருக்கேன், உன்கிட்ட வீடு தானே கேட்டேன்? உன்னை வெளிய போன்னு எப்போ சொன்னேன்? நீ செத்த அப்புறம் தானே எனக்கு வீடு கிடைக்கும் சொன்ன? அதான் கொன்னு எடுத்துகிட்டேன்"

“என்ன என்னை கொல்ல போறியா? அப்பா இல்லாம நாங்க தவிச்சா மாதிரி என் பிள்ளைகளும் தவிக்கனுமா? யோசி?”

“நீ வாழ்ந்து முடிச்சு தானே போய் இருக்க? இனி எங்களை வாழ விடு”

“சரியா சொன்ன, உன்னை நான் கொல்ல தான் போறேன், இப்போ இல்ல, தூக்குல தொங்கி சீக்கிரம் எல்லாம் சாக விட மாட்டேன், இனி நிம்மதியா தூங்க முடியாது, நீயே தற்கொலை பண்ணிட்டு தான் சாக போற” என்று சொல்லி மறைந்து விட்டாராம்.

பின் அவருக்கு இங்கு படுத்தாலும் அவர் அம்மா தூக்கில் துடித்தது தான் கண் முன் வருமாம். அவர் எதேதோ செய்தும் பயனில்லை. இரவு தூங்காது அவர் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு கொண்டே இருப்பாராம். வீட்டில் அனைவரும் அவரை கோவில், மருத்துவம் என்று கூப்பிட்டு சென்று சென்று தோல்வியை மட்டுமே தழுவினர்.

தாய் கொன்ற பாவம் கோவில் சென்றால் போகுமா? அதை எந்த தெய்வம் மன்னிக்கும்? உடல் மெலிந்து, தூக்கம் தொலைத்து, இறுதியில் மரணம் வேண்டும் என்று அவரே வருந்தி அழைத்து, அதுவும் வராது போனது.
ஒரு நாள் கோவிலில் பூசாரியிடம் உண்மையை கூறி அழுது இருக்கிறார்.
தானே தூக்கில் தொங்காது தன் தாய் தன்னை தூங்க விட மாட்டார் என்று, அவர் அறையில் தூக்கில் தொங்கி உள்ளார். நிரந்தரமாக அவரும் தூங்கி விட்டார். இப்போதும் அந்த வீட்டில் அவரின் நடமாட்டம் இருப்பதாகவும், ஆனால் யாரையும் எதுவும் செய்வது இல்லை என்றும் கூறினார்.

அப்படி என்ன பணம் மேல ஆசை? அம்மா என்று கூட பார்க்காம, இத்தனை சண்டை இருந்தும் தன் மகன் குடுத்த பால் என்று அவரை நம்பி தானே குடித்தார்? தூக்கில் தொங்கி துடித்து? அவரை பெற்று எடுக்கும் போது துடித்த துடிப்பை விட இது வலித்து இருக்குமே? உயிர் கொடுத்த தாயை உயிர் எடுத்த மகனுக்கு சரியான தண்டனை தான். தன் மகனுக்கு தண்டனை கொடுத்த அவர், அவரின் மருமகளையோ, பிள்ளைகையோ எதுவும் செய்யவில்லை. அவர்கள் நன்றாக படித்து, வேலை கிடைத்து திருமணம் செய்து, அவர்களின் பிள்ளைகளோடு அதே வீட்டில் தான் இருக்கின்றனர். அவர்களுக்கு இவர் தெரிவதே இல்லை.
அவரின் கோவம் என்னை பொறுத்த வரை சரியே.

உங்களின் கருத்துக்களையும் கூறங்கள் சகோஸ்.

நன்றியுடன்

கௌரி முத்துகிருஷ்ணன் :purple_heart:

4 Likes

இதுபோல் செய்யும் மகன்கள் அதிகமாக தான் உள்ளார்கள்

1 Like

unmai than sago neengal sovadhum sariyae

இது போன்ற சம்பவங்கள் யாருக்கும் எங்கும் நடக்கக் கூடாது.

1 Like