மொழி பொய்த்த உணர்வுகள் – 14

மொழி பொய்த்த உணர்வுகள் – 14
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 14

நமது எதிர்பார்ப்பின்படி அனைத்தும் நடந்தேறும் என்று எந்த அவசியமும் இல்லை. இங்கேயும் சூழல் அவ்வாறே! ருத்ரன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தான் செய்ய நினைத்தான். ஆனால், அவனுக்கிருந்த பதற்றத்தில் அது முடியவில்லை போலும்.

ருத்ரன் சௌபியின் சோர்ந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவள் நிமிர்வதாய் இல்லை. அவன் இப்பொழுது சாமாளித்தே ஆக வேண்டும் என புரிந்து, “அம்மா வாங்க வாங்க… எப்ப வந்தீங்க? எப்படி இன்டெர்ன் ஸ்டூடெண்ட்ஸ் நல்லா வேலை செய்யறாங்களா?” என்னும் கேள்வியை சற்று ஆர்ப்பாடமாக கேட்பதைப் போல கேட்டு அவர்களை நெருங்கினான்.

அவன் வந்ததை சௌபி முன்னமே உணர்ந்து விட்டாள். கோபத்தில் தான் அவன் முகத்தை பார்க்காமல் இருந்தாள். மற்ற இருவரும் அவனை அப்பொழுதுதான் கண்டனர். தலை திருப்பி அவர்கள் இருவரும் தான் பார்த்தனர். இவள் அசைந்தாளில்லை.

இன்னும் சாமளிக்கணும் போலயே என மனதிற்குள் எண்ணிய ருத்ரன், “சாரி ம்மா, புதுசா வர கஸ்டமர் கிட்ட பிராக்டிஸ் பண்ண முடியாது. அதான் உங்களுக்கு கார் வங்கனும்ன்னு சொன்னதும் யூஸ் பண்ணிக்கிட்டேன்” என மேலும் விளக்கம் தர,

மகனது தொடர் விளக்கத்திலேயே காவேரி புரிந்து கொண்டார் இது தனக்கானதில்லையென. அதோடு சௌபி வேறு சோர்ந்து, தலை கவிழ்ந்து இருக்கவும் தன் மகன் இன்று தோப்புக்கரணம் போட்டாலும் ஆச்சரியமில்லை என எண்ணம் வர அவருக்கு புன்னகை வந்தது. ‘வீட்டில் என்னை எப்படி படுத்துவான்? இப்போ முகத்தை பாரு, முகத்தை’ என்றுதான் காவேரிக்கு எண்ணம் வந்தது. ருத்ரனின் முகம் ஒருவித தவிப்பை காட்டியது. ஒருமாதிரி மாட்டிக்கொண்ட மனோபாவம். அவள் என்ன நினைப்பாள் என்னும் பதற்றத்தோடு இருந்தான். அந்த பாவனை காவேரிக்கு மிகவும் பிடித்திருந்தது.

காவேரி இருவரையும் காதலர்கள் என எண்ணிக் கொண்டிருக்க, இவர்கள் இருவரும் அதுதொடர்பாக எதையும் பேசியது கூட இல்லையென அவர் எப்படி அறிவார் பாவம். மகனின் திருமணத்தை காண ஏங்கும் சாதாரண அன்னையாய் இருந்தார்.

“என்னமா எதுவும் சொல்ல மாட்டீறீங்க?” என மீண்டும் ருத்ரன் கேட்க, அப்துலுக்கு தேர்வின் முடிவுகள் வரும் நேரம் தோன்றும் பதற்றமும், எதிர்பார்ப்பும். ஆவலோடு காவேரியின் முகம் பார்த்து நின்றான்.

மகன் சமாளிக்க முடியாமல் கஷ்ட படுவதை பார்க்கவே காவேரிக்கு சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், மேலும் அவனை சீண்டாமல், “நல்லா பண்ணுனாங்க பா. எனக்கு பிடிச்சது. ரொம்பப… பிடிச்சது” என பிடித்தத்தை சற்று அழுத்தி கூற, சௌபிக்கு சங்கடமாக இருந்தது என்றால் அந்த நிலையிலும் அன்னையின் வார்த்தைகள் ருத்ரனுக்கு மன நிறைவை தந்து உற்சாகத்தை கொடுத்தது.

சௌபி தலையை மேலும் குனிந்து கொள்ள, ருத்ரனுக்கு தாயின் வார்த்தைகளில் குதூகலம் எட்டிப்பார்த்தது. அவரருகே சென்று, “தேங்க்ஸ் மா” என மெல்லிய குரலில் கூறியவன், “வெல்டன் கைஸ். கிரேட் ஜாப்” என பாராட்டுதலாய் கூற, அப்துல் மகிந்து போய், “தேங்க்ஸ் சார்” என்றான் மலர்ந்த புன்னைகையோடு. அதற்கும் சௌபி அசைந்தாளில்லை.

சௌபி அமைதியாக இருந்ததை பார்த்த அப்துல், “ஹே சௌபரணி, சார் விஷ் பண்ணறாரு பாரு” என மென்குரலில் கூற, அவளுக்கா அவனைப்பற்றி தெரியாது, இத்தனை மாதங்களாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அவன் முதலாளியின் மகனாகவே இருந்தாலும், பினான்ஸ் டீம் தவிர மற்ற இடங்களில் நடப்பதை தெரிந்து கொள்வானே அன்றி, எதிலும் தலையிட்டதில்லை. அப்படிப்பட்டவனின் இன்றைய செயல்? சேல்ஸ் டீம்மிலிருந்து, ஹெட்ச் ஆர் டீம் வரை அனைத்திலும் உள்நுழைந்திருக்கிறான். காலையிலிருந்து இந்த உறுத்தல் எழும்போதெல்லாம் கவனம் சிதறும் வண்ணம் வேலை வந்துவிட்டது, அதாவது ருத்ரனின் அன்னை வந்துவிட்டார். அதனால் தான் அவளால் ஆராய முடியவில்லை. இவன் இவ்வளவு செய்ததற்கும் காரணம் இல்லாமல் இருக்குமா? நிச்சயம் இது அவள் தொடர்பானது என புரிந்தது. இன்னும் சொல்லப்போனால், அவனும், அவளும் தொடர்புடையது. இந்த குழப்பத்தில், பதற்றத்தில் இருப்பவள், இப்பொழுது நன்றி உறைக்கத்தான் முடியுமா?

அப்துலுக்கு கூட எந்த பதிலையும் கூறாமல் அப்படியே நின்றாள். அவள் பேசும் மனநிலையில் இல்லை என ருத்ரனுக்கு புரிந்தது. அவளை மேலும் கிளற வேண்டாம் என்று நினைத்தவன், “சரி நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என கூற,

அப்துல், “தேங்க்ஸ் சார், தேங்க்ஸ் மேடம்” என மலர்ந்த புன்னகையோடு விடைபெற, சௌபி சொல்லிக் கொள்ளாமல் எப்படி செல்வது என தவித்தவள், காவேரியிடம் மட்டும் “தேங்க்ஸ் மேடம்” என்று மென்குரலில் கூறியவள் நகர எத்தனித்தாள். காவேரிக்கு அவள் தன்னை அழைக்கும் முறையை ருத்ரனை கண்டதும் மாற்றியதில், எதுவோ நெருடியது. ‘அவ்வளவு கோபமா? இல்லை நான் தவறாக எடுத்துக் கொள்வேன் என்று எண்ணிக் கொண்டாளா? என்பது போல’ அவர் மனம் யோசிக்க, அவளின் கரங்களை பற்றி தடுத்தவர்,

“ஆன்டின்னே கூப்பிடுமா” என கூறினார் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில். பெரியவரை எப்படி மறுத்து பேச என்பதால், தலையை மட்டும் சரி என்பதாய் அசைத்தாள். ஆனால், அவ்வாறு அழைக்கவேயில்லை. சிறு தலையசைப்போடு மௌனமாகவே விடைபெற்றாள்.

தலை தாழ்த்தி, சோர்ந்து போகும் பெண்ணவளின் பின்னேயே ருத்ரனின் விழிகளும் பின்தொடர்ந்தது. “என்ன சார் வாய் தான் பேசுமா? இல்லை கை, கால் கூட பேசுமா?” என பரிகாசமான குரலில் காவேரி மகனை சீண்ட,

‘திட்டு மட்டும் விழுமா? இல்லை அடியும், உதையும் கூட கிடைக்குமா?’ என்பதை தான் அன்னை கேட்கிறார் என அவனுக்கு புரிய, “நீங்க வேற ம்மா…” என்றவன் வலக்கையை காற்றில் உதறியவாறு அன்னையின் முகம் பார்த்தான்.

சௌபியின் முகத்தில் இருந்த சோர்வு, இப்பொழுது ருத்ரனின் முகத்திலும் பிரதிபலித்தது. காவேரி அதை ஆச்சர்யமாய் பார்த்தவர், “உன் கேபின் போலாம் பா” என்றார் வரவேற்பில் மேற்கொண்டு இதைப்பற்றி பேச விரும்பாமல்.

பதில் கூட சொல்லாமல், ருத்ரன் முன்னே நடக்க, ‘இவ்வளவு நேசிக்கிறானா? அவள் மௌனம் இவனை நொடியில் மௌனமாக்கி விட்டது! அவளின் சோர்வு இவனிடம் அதற்குள் தொற்றிக் கொண்டது!’ என காவேரி வியப்பாய் எண்ணியபடி அவனை பின்தொடர்ந்தார்.

தனது கேபின் சென்றவன் தனக்கென இருக்கும் பிரத்யேக அறையினுள் நுழைய, அன்னையும் அவனை பின்தொடர்ந்தார். சோர்ந்து அமர்ந்திருந்த மகனிடம், பருக தண்ணீரை தந்தார் காவேரி. ருத்ரன் வேணாம் என மறுப்பாக தலையசைக்க,

“ஏன்டா மருமகளுக்கு ரொம்ப கோபம் வருமா? இப்படி பயப்படற! ஆனா, மருமகளை பாத்தா அப்படி தெரிலையே!” என கேலி பாதி, ஆச்சர்யம் பாதியாய் மகனிடம் கேட்க, அந்த நிலையிலும் ருத்ரனுக்கு புன்னகை தான் வந்தது.

அவர் கேள்வியை அந்தரத்தில் தொங்க விட்டவன், “எப்படிமா கண்டுபிடிச்சீங்க?” என கேட்க, “ஆமா பெரிய சீக்ரெட் ஆப்பரேஷன், இதைபோயி கண்டு வேற பிடிக்கிறாங்க. கொஞ்ச நாளாவே சந்தேகம், நேத்து அது இன்னும் அதிகமாச்சு. இன்னைக்கு கன்பார்ம் ஆயிடுச்சு” என வெகு சாதாரணமாய் கேலி புன்னகையுடன் கூற, அவனுக்கு சற்று வியப்பாய் தான் இருந்தது. அதை காட்டிக் கொள்ளாமல், “உங்களுக்கு கோபம் எதுவும் இல்லையே மா?” என சிறு தயக்கத்துடனே கேட்டான்.

“என்ன ஈஸ்வர்? கோபமா இருந்தா இப்படி இருப்பேனா? இத்தனை வருஷமா நீ இதுமாதிரி எதுவும் யோசிச்சதே இல்லையே! இப்போ உனக்கு இவ்வளவு பிடிச்சிருக்கும் பொண்ணை, எனக்கு பிடிக்காம போகுமா? இதுல கோபப்பட அவசியமே இல்லை. அதோட உங்க பெரியப்பா, மாமா பசங்க எல்லாரும் காதல் கல்யாணம் தானே!” என புன்னகை மாறாமலேயே காவேரி கூற,

“அப்பாவையும் சாமளிச்சிடுவீங்க தானே?” என அப்பொழுதும் தெளிவில்லாமல் ருத்ரன் கேட்டான். ‘எனக்கென ஒரு தொழிலை தொடங்கியே தீருவேன்’ என வீராப்பாய் பேசி அன்னையை தந்தையிடம் தூதுக்கு அனுப்பிய ருத்ரன் இல்லை இவன், முற்றிலும் வேறாய்! பெற்றோரின் ஒப்புதலுக்காய் முகம் பார்த்து நிற்கும் சிறுவனாய் இருந்தான். இந்த தோற்றமும், இந்தளவு பெற்றோருக்கு அவன் முக்கியத்துவம் தருவதும் காவேரியை இன்னும் இன்னும் கவர்ந்தது.

“ஈஸ்வர், உங்க அப்பா இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டாரு. அதான் அவங்க அண்ணன் பசங்களுக்கே லவ் மேரேஜ் தானே!” என காவேரி மகனுக்கு விளக்கினார். அவருடைய கணவரை பற்றி அவருக்கு தெரியாதா? அவரால் எந்த தடையும் வராது என்பதால் தானே மகன் காதலிக்கிறான் என்ற சந்தேகம் வந்ததுமே கணவரிடம் பகிர்ந்து கொண்டார்.

அன்னையின் பதிலில் சிறு ஆசுவாசம் வந்தாலும், “ஹ்ம்ம் நான் பிசினஸ் மட்டும் பண்ண கூடாது” என்றான் மெல்லிய சலிப்போடு. என்ன பேசுனாலும் அவனோட விஷயத்துக்கு சரியா வந்துடறான் என புன்னகை வந்தது அந்த அன்னைக்கு. “என்னமோ அவர் சொன்னா நீ கேக்கிற மாதிரி தான். அதான் உனக்கு பிடிச்ச மாதிரி தொழிலை ஆரம்பிச்சுட்டியே!" என மகனின் தற்போதைய தொழிலை சுட்டிக்காட்டி காவேரி கூற, மெலிதாக புன்னகைத்தான். “நானா சொந்தமா எதையாவது பண்ணனும் மா. எனக்கு அதுதான் விருப்பம், ஆசை லட்சியம் எல்லாமே!” என்று தனது பழைய பல்லவியை புன்னகை மாறாமல் பாடினான்.

“உன் எண்ணப்படி நடக்கட்டும் பா” என வாஞ்சையோடு கூறிய காவேரியின் முகத்தில் அத்தனை நிறைவு. சொத்தை அழிக்கும் வாரிசுகளை அவர் வயதிற்கு எத்தனை கண்டிருப்பார்? ஆனால், மகனோ ஓரளவு சொத்து இருந்தும், நல்லபடியாக நடந்து கொண்டிருக்கும் தொழில் இருந்தும் தன் முயற்சி வேண்டும் என நினைக்கிறான், சுயத்தை நிலைநாட்ட வேண்டும் என ஏங்குகிறான். இதைவிட அவருக்கு வேறென்ன வேண்டும்?

என் குழந்தையை கஷ்டம் தெரியாமல் வளர்த்து இருக்கிறேன் என்று கூறுவதில் என்ன பெருமை? எந்த கஷ்டம் வந்தாலும் சமாளித்து சாதித்திடும் வண்ணம் வளர்த்திருக்கிறேன் என்பதில் தானே பெற்றோருக்கு பெருமை, மகிழ்ச்சி, மனநிறைவு எல்லாமும். காவேரியின் மனம் அந்த மகிழ்வில் தான் இருக்கிறது.

ஆனாலும் என்ன செய்ய மகனின் அருமை கணவருக்கு புரிவதில்லையே! தந்தை யாரேனும் பாதை வகுத்து தந்தால் பயணிப்பவர். இதுவரையிலும் அவ்வாறே! மகனையும் அப்படியே இருக்க சொன்னால் அவனால் முடியுமா? அதிலும் அவன் எண்ணங்கள் முற்றிலும் வேறாய் இருக்கும்பொழுது? மகன் எப்பொழுதுமே புதிய பாதையை கட்டமைத்து அதில் பயணம் செய்யவே விரும்புபவன் ஆயிற்றே!

இருவருக்குமான முரண்பாடுகள் மட்டும் காவேரிக்கு மெல்லியதாய் உறுத்திக் கொண்டே இருக்கும் விஷயம். அதற்கான தீர்வு மட்டும் கிடைத்துவிட்டால் அவர் அலைப்புறுதல் இன்றி பூரண மகிழ்வோடு இருப்பார்.

அதன்பிறகு மகனிடம் தனக்கு பிடித்த கார் மாடல்கள் இரண்டை பற்றி காவேரி கூற, மகன் அதன் சிறப்பம்சங்களை சொல்ல வந்தான். “போதும் போதும் நீ வெச்ச அப்ரண்டீஸ் இத்தனை நேரம் புளியை தேச்சு குத்துவிளக்கை விளக்கற மாதிரி விளக்கோ விளக்குன்னு விளக்கிட்டான். இனி நைட் உங்க அப்பா வேற விளக்குவாரு. என்னை விட்டுடுங்க. அப்பனும், மகனும் எதையாவது வாங்கி தாங்க. ஆனா வெள்ளை கலரு மட்டு வேணாம்” என காவேரி முடிக்க, ருத்ரன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“சரி சரி விளக்கம் தரலை மா… இதென்ன புதுசா? வெள்ளை கலர் வேணாம் சொல்லறீங்க. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!” என தாயை யோசனையுடன் பார்க்க, அவரோ, “மருமக லிஸ்ட்ல இருக்குதல்ல” என பட்டென பதில் தந்தார்.

ருத்ரன் புரியாமல் பார்க்க, “வெள்ளை மட்டும் வேணாம் ஆன்ட்டி டேக்ஸி மாதிரி இருக்கும்னு மருமக தான் டா சொன்னா” என மாமியாராய் புது அவதாரம் எடுத்த காவேரி கூற, ருத்ரன் தலையை மட்டும் ஆட்டினான் மெல்லிய புன்னகையோடு.

அதன்பிறகு காவேரி சென்றுவிட, ருத்ரனுக்கு வேலைகள் இழுத்துக் கொண்டது. மனதினோரம் சௌபியின் சோர்ந்த முகம் நினைவில் ஆடிக்கொண்டே இருக்க, அவளை எப்படி சமாளிக்க என தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தான். மாலை தொடங்கிய நேரத்தில் வேலைகளை ஓரளவு முடித்தவன், அவளை கேபின் வரசொல்லி அழைப்பு விடுக்க,

காலையில் சோர்ந்த சௌபியின் முகம் இன்னமும் தெளியவில்லை. அவளையே ஆழ்ப்பார்த்தவன், “என்ன ஆச்சு?” என நேரடியாக கேட்க, அமைதியாகவே நின்றாள். அவன்மீது கோபம் தான். ஆனால் அதை காட்ட வேண்டும் என்று தோன்றவேயில்லை. அவனை ஒதுக்கி வைத்தல் நலம் என்று ஓயாமல் ஆர்ப்பரிக்கிறது அவள் மனம். அதீத சிரமத்தோடு தான் என்றாலும் ஒருவழியாக அவள் அதை கடைபிடிக்கிறாள்.

சௌபியின் கோபத்தை எதிர்பார்த்தவன், நிச்சயம் இந்த நிராகரிப்பை எதிர்பார்க்கவில்லை. மீண்டும் சற்று அழுத்தத்துடன், “என்ன ஆச்சுன்னு கேட்டேன்” என்க, அதற்கும் அவளிடம் எவ்வித மறுமொழியும் இல்லை.

சௌபியின் மனம் அவனுக்கும் ஓரளவு புரிந்திருந்தது தானே! அதனால் தான் அவர்கள் தொடர்பான விஷயத்தில் மேற்கொண்டு முயற்சித்தான். முதலில் தன் வீட்டில் இருப்பவர்களை சரி கட்டலாம் என நினைக்கும்போதே இவளிடம் சிக்கிக் கொண்டான். அதற்காக தாராளமாக கோபம் கொள்ளலாம் தான். ஆனால், இப்படி மௌனமாய் இருந்து அலட்சியப்படுத்துவது? நிராகரிப்பது? அவனுக்கு துளியும் பிடிக்கவில்லை. அவளது செய்கையில் மெலிதாய் கோபம் வேறு எட்டி பார்த்தது. முயன்று அடக்கினான்.

சரி சமாதானம் பேசுவோம் என ருத்ரன் முடிவெடுக்க, சௌபி அதற்கு அனுமதி தரும் எண்ணத்தில் இல்லை.

3 Likes