மொழி பொய்த்த உணர்வுகள் – 15

மொழி பொய்த்த உணர்வுகள் – 15
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 15

ஏற்கனவே கோபமாக இருப்பவளிடம் தான் கோபப்படுவது, எந்தவித எதிர்வினையை ஏற்படுத்தும் என ஓரளவு புரிந்ததால், ருத்ரன் முயன்று தனது கோபத்தை அடக்கி சௌபியிடம் சமாதானம் பேசலாம் என நினைத்தான்.

“சௌபி…” என ருத்ரன் சற்று மெலிதாக அழைக்க, என்ன முயன்றும் சிறு அதட்டல் தொனி அவன் குரலில் வெளிப்பட்டது. அதிசயித்திலும் அதிசயமாக, ருத்ரனின் கணிப்புக்கு எதிராக சௌபியிடம் அந்த அதட்டல் சற்று வேலை செய்தது.

“ஒன்னும் ஆகலை சார்” என்று மெலிதாக அவனது முந்தைய கேள்விக்கு பதில் கூறினாள். “என் அம்மா தான் வராங்கன்னு சொன்னா, நீங்க ரெண்டு பேரும் இன்னும் பயந்துப்பீங்க. அதான்…” என அவன்புற விளக்கத்தை அவன் சொல்ல வர, சௌபியோ அதை துளியும் கேட்க பிரியப்படாததால், “சார், நேரம் ஆயிடுச்சு நான் வீட்டுக்கு கிளம்பலாமா?” என அவனது விளக்கும் கூறும் முயற்சியை அழகாய் தவிர்க்கப் பார்த்தாள்.

அவளையே ஆழமாய் பார்த்தவன் அவள் நிலை புரியும் என்பதாலோ, இல்லை அவனுக்குள் குமிழியிட தொடங்கிய கோபத்தை அடக்க முடியாததாலோ, கிளம்பு என்பது போல கையால் மட்டும் சைகை செய்தவன், அதன்பிறகு அவளை துளியும் கண்டு கொள்ளாமல், தனது வேலையில் மூழ்கினான்.

சௌபியால் என்ன செய்ய இயலும் ஒருவித ஏமாற்றத்தோடும், இயலாமையோடும் அவன் அறையை விட்டு வெளியேறினாள். அவளுக்கும் அவள் குடும்பம் பற்றி தெரியுமே! பழமையில் ஊறியவர்கள். காதல் என்ற பேச்சிற்கே இடமில்லை.

காதல் அழகிய உணர்வு தான். மறுப்பதற்கில்லை. ஆனால், செல்லமாய் வளர்த்த தந்தையிடம், “நான் ஒருவரை நேசிக்கிறேன்” என சொல்ல துணியும் நொடி…? அதைப்பற்றிய சிந்தனை எழுந்தால் போதும், அவள் காதலை அவளே வளரவிடாமல் வெட்டி வீசி விடுவாள்.

ருத்ரனை அவளுக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுதிருந்து என தெரியவில்லை, ஏனென்றும் புரியவில்லை. ஆனால், அந்த பிடித்தம் மேற்கொண்டு வளர்வதற்குள் அவள் தனது பிராஜெக்டை முடித்துவிட்டு கோவை ஹூண்டாயை விட்டு சென்றுவிட வேண்டும் என்று மட்டும் ஓயாமல் உருப்போட்டுக் கொண்டிருக்கிறாள். ஏனென்றால் அவள் குடும்ப சூழலில் அவளால் காதல் என்ற ஒன்றை எண்ணிப்பார்க்கவே முடியாது.

அதனால் தான் ருத்ரனை தவிர்க்க நினைக்கிறாள். ஆனால், நேசம் இவள் மனதில் மட்டும் முளையிடவில்லையே! அவனின் மனதிலும் சேர்த்தல்லவா வளர்ந்து வருகிறது. அதைப்பற்றி சிந்திக்க மறந்தாளா? இல்லை சிந்திக்க பயந்தாளா? என்றுதான் தெரியவில்லை.

அடுத்து வந்த நாட்களில் ருத்ரன் சௌபியை தவிர்த்தானா? இல்லை சௌபி ருத்ரனை தவிர்த்தாளா என்று பிரித்தறிய முடியாதபடி நாட்கள் நகர்ந்தது.

அன்று சொல்ல வந்ததை காதுகொடுத்து கூட கேளாமல் சென்றவள் மீது ருத்ரனுக்கு கடுங்கோபம். அதனால், அவனாக அவளை அணுகவேயில்லை. அவளது பிராஜெக்ட் வேலையை கூட அசோக் மூலம் தான் சரி பார்த்தான். இந்த ஒதுக்கத்தில் சௌபி ஒருவித வெறுமையை உணர்ந்தாள். என்னவென்று பிரித்தறிய முடியாத மனநிலையில் இருந்தாள். ஒருமாதிரி ஏக்கமாக, எதையோ மனம் எதிர்பார்ப்பது போல, சுற்றியுள்ள எதிலும் ஒரு பிடிப்பு வராதது போல… என்னவென்றே அவளால் வரையறுக்க முடியவில்லை.

ஒருவழியாக ருத்ரனின் பாராமுகம் தான் இதற்கு காரணம் என அவளுக்கு விளங்கி விட்டது. அவளுக்கு விளங்குவதற்குள் அவள் கல்லூரி முடியும் தருவாயே வந்திருந்தது. ஆம், அவளது பிராஜெக்ட்டும் முடிந்து, அந்த நிறுவனத்திலிருந்து கிளம்ப வேண்டிய நாளே நெருங்கிவிட்டது. இன்னும் மீறிப்போனால் ஒரு வாரம் தான் அவள் இங்கு வரமுடியும்.

அப்பொழுதுதான், அவளுக்கு அந்த அரிய சிந்தனை உதித்தது, கூடவே சிறிது ஞானோதயமும். ருத்ரனது பாரமுகத்தோடு அவளால் இங்கிருந்து விடைபெற முடியாது என்பதே அவளது அறிவுக்கு புரிந்த விஷயம். ஆக, இந்த சண்டையை கொஞ்சமே கொஞ்சம் முடித்துவிட்டு நல்லவிதமாகவே கிளம்பி விடலாம் என சிந்தித்தாள்.

நினைக்க மட்டும் தான் அவளால் முடிந்தது. எப்படி செயல்படுத்த என்று தெரியவில்லை. எல்லா சந்தேகத்திற்கும் அசோக்கே பதில் தந்துவிட, ருத்ரனை பார்க்க காரணம் கிடைக்காமல் திண்டாடினாள். இப்படியே நேரம் கடத்தினால் அவனிடம் பேசும் வாய்ப்பு கிடைக்காது என புரிந்தவள், அன்றையதினம் அலுவலகத்திலிருந்து கிளம்பும் முன்பு அவனை சந்திக்க சென்றாள்.

வெகுநேரம் போக்கு காட்டிய தைரியத்தை கட்டி இழுத்து தனதருகே வைத்தவள், ருத்ரனின் அறைக்கதவை மெலிதாக இருமுறை தட்டி, “எக்ஸ்க்யூஸ் மீ சார்” என மெலிதாக கதைவை திறந்து அதில் தலையை மட்டும் நுழைத்து கேட்டாள். பாலை தேடும் பூனை எட்டிப்பார்க்கும் தோரணை!

ருத்ரன் நிமிர்ந்து பார்த்தானா இல்லையா என சந்தேகமே வந்துவிட்டது சௌபிக்கு. “உம்மணாமூஞ்சி, உள்ள வான்னு கூப்பிட்டா குறைஞ்சா போயிடுவ!” என்னும் வார்த்தைகள் அவளது வாய்க்குள் அரைபட, ‘போ நான் உள்ளே வருவேன். என்னவோ பண்ணிக்க’ என்னும் வீம்போடு உள்ளே நுழைந்தாள். வீம்பு வந்தால் மட்டும் போதுமா? உள்ளே நடக்க கால்கள் சண்டித்தனம் செய்கிறதே! அரும்பாடுபட்டு உள்ளே நுழைந்தாலும் அவன் கண்டுகொள்ளவே இல்லை.

“உம்மணாமூஞ்சி நான் தானே கோபமா இருக்கணும்” என்று மீண்டும் மெலிதாக வார்த்தைகளை கடித்து துப்ப, அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். “ஹாங்… கேட்டுட்டானா?” என அவள் பேய் முழி முழிக்க,

அவனோ நிதானமாக தனது கைகடிகாரத்தை பார்த்துவிட்டு அவளை பார்க்க, அவளுக்கு அவனது எண்ணவோட்டம் புரிந்துவிட்டது. ‘ஓ, உங்க வீட்டுக்கு போக இன்னைக்கு நேரம் ஆகலையான்னு கேக்கிறாராமா?’ என மனதிற்குள் கேலி செய்தாலும், மறு வினாடியே, ‘அதுக்காக இன்னமும் கோபமா இருக்காறா?’ என அவன் மனதை சரியாக கணிக்க அவளுக்கு வருத்தமாக போய்விட்டது.

‘எப்படியாவது சாமாதானம் பேசிடணும்’ என நினைத்தவள், என்ன செய்ய, எப்படி பேச்சை தொடங்க என புரியாமல் தவிப்பாய் நின்றிருக்க, ருத்ரனோ அவளை துளியும் கண்டுகொள்ளாமல் தனது வேலையில் ஆழ்ந்து கொண்டான். அதைப்பார்த்து அவளுக்கு பதற்றம் வடிந்து எரிச்சலானது.

சிறிது நேரம் நின்றவள், அவனும் எதுவும் பேசாதிருக்க, அவளுக்கும் எப்படி சமாதானம் செய்ய என புரியாததால்… அந்த நிசப்தம் அவளுக்குள் ஒருவித இயலாமையை தருவது போலஉணர்ந்தாள். மனம் சோர இனி இங்கு நிற்பது வீண் என உணர்ந்ததாளோ என்னவோ பேசாமல் அங்கிருந்து நகர பார்த்தாள். அவள் திரும்பி சில எட்டுக்களை வைக்க, அவனிடத்திருந்து எழுந்து வந்தவன் அவளது வழியை மறைத்து நின்றான். அப்பொழுதும் அவன் எதுவும் பேசவில்லை.

ருத்ரன் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி சௌபியையே பார்த்திருக்க, அவனது தொடர் மௌனம் அவளுக்கு பிடிக்கவேயில்லை. அவனை பேச வைக்கும் முயற்சிக்காக அவனோடு ஒரு ஒப்பந்தத்தை போட திட்டம் தீட்டினாள். அவள் எதையோ தீவிரமாக சிந்திக்கிறாள் என ருத்ரனுக்கு புரிந்தாலும் அவளாக பேசட்டும் என அமைதியாகவே காத்திருந்தான்.

“நீங்க கோபமா இருக்கீங்க… ஆனா, நா… நான் கூடத்தான்… கோபமா இருக்கேன்” என சௌபி தொடங்க, ருத்ரன் அவளையே குறுகுறுவென பார்த்தான். ‘அப்படியா?’ என்பது போன்ற பார்வையில், சில நொடிகள் தடுமாறி பின் மீண்டும் தொடர்ந்தாள்.

“சரி விடுங்க கோபமா இருக்கறத பத்தி எதுக்கு பேசிட்டு…” என அவளே விட்டுக்கொடுப்பவள் போல பேசிவிட்டு, “வேணும்னா ஒன்னு செய்யலாம். நாம சமாதானம் ஆகிடலாம்” என இருவருக்கும் இடையில் நடக்கும் பனிப்போரில் சமாதான புறாவை அவள் பறக்க விட,

அப்பொழுதும் அவன் அவளை பார்த்துக்கொண்டே இருந்தானே தவிர எதையும் பேசவேயில்லை. சௌபியோ மீண்டும் அவளே தொடர்ந்து, “வேணும்னா ஒரு டீல் வெச்சுக்கலாம்” என்க, சற்று சுவாரஸ்யமாய் அவள் முகத்தில் படிந்தது அவன் பார்வை. கூடவே, ‘அதையும் நீயே சொல்’ என்பது போல பாவனை.

‘இந்த லுக் விடறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என கடுப்பாக வந்தாலும் தனது ஒப்பந்த திட்டத்தை விளக்கத் தொடங்கினாள். “அது என்னன்னா… நீங்க எதாவது ஆசைப்படுவீங்களாம். நான் அது நடக்கணும்ன்னு கடவுள்கிட்ட உங்களுக்காக வேண்டிப்பேனாம்” என தனது திட்டத்தை கூற, அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் ருத்ரன் சிரித்து விட்டான்.

அவனது கேலிசிரிப்பில் பின்வாங்காமல், “நான் நிஜமாவே வேண்டிப்பேன் சார். உங்க ஆசையும் நிறைவேறும். பிளீஸ் ஏதாவது ஆசைப்படுங்களேன்” என அவனை சமாதானம் செய்யும் முயற்சியில் அவளையும் அறியாமல் சற்று உரிமையோடான கொஞ்சல் மொழியிலேயே கேட்க, அந்த குரலுக்கு மறுப்பு தெரிவிக்க மனம் வராததால், மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தவன் விழிகளை மூடிக்கொண்டான்.

அவன் விழிகள் மூடியதிலிருந்து மீண்டும் திறக்கும்வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனிடம் ஏதோ ஈர்ப்பு இருக்கிறதோ என சந்தேகமே வந்துவிட்டது. அவன் விழிகள் திறந்ததும் எப்படி மீண்டளோ, “ஏதாவது ஆசை பட்டீங்களா சார்?” என சட்டென கேட்டுவிட்டாள். அவனது விழிகள் மூடி, இதழ்கள் அசைந்ததை பார்த்து விட்டதால் அவளையும் மீறி வார்த்தைகள் வெளிவந்திருந்தது.

“ஹ்ம்ம்” என்ற சப்தம் மட்டும் ருத்ரனிடமிருந்து பதிலாய் வந்தது. அந்த குரலில் இருந்த கேலியை கண்டுபிடித்திருந்தால் அவள் மேற்கொண்டு எதையும் கேட்டே இருக்க மாட்டாள். ஆனால், அவளுக்கிருந்த ஆர்வம் அதை விடவில்லை.

“என்ன சார் ஆசைப்பட்டீங்க?” என்று மீண்டும் ஆர்வத்தில் கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள். ‘அது எதற்கு உனக்கு? அவங்க ஆசை நிறைவேறனும்ன்னு வேண்டிக்கிறது மட்டும் தான உன் வேலை’ என மனம் குட்டு வைக்க, அவள் காலம் தாழ்த்தி சுதாரிக்கும் நேரம், அவன் திருவாய் மலர்ந்திருந்தது.

“ரொம்ப நாளா அவகிட்ட கிஸ் வாங்கிடனும் பாக்கறேன்… ம்ம்ம் ஹ்ம்ம்… கொடுக்கவே மாட்டீங்கறா? அதான் இந்த வாரத்துக்குள்ள ஒரு கிஸ் வாங்கிடனும்ன்னு வேண்டியிருக்கேன். எனக்காக பிரே பண்ணிக்குவ தானே! என் ஆசை நிறைவேறிடுமல்ல” என ருத்ரன் கேட்க,

‘இப்படியும் பேசுவானா இவன்? அதுவும் இவ்வளவு பேசுவானா?’ என்றெல்லாம் எண்ணவே தோன்றவில்லை சௌபிக்கு. எங்கே அவள் மூளை தான் எப்பொழுதோ மழுங்கி போனதே அவனது பதிலில். அவளது பிரபஞ்சத்தை அவ்வப்பொழுது வேலை நிறுத்தம் செய்ய வைத்து விடுகிறான் அவன்.

ஆனால், இம்முறை வேண்டுமென்றே தான் செய்தான். நொடியில் வாடிய அவள் முகம், சிரமப்பட்டு இயல்பாய் காட்டிக்கொள்ள அவள் செய்த பிரம்ம பிரயத்தனம் என எதுவும் தப்பவில்லை அவனது கூர்விழிகளில். ஆனால், அவனது இதழ்களில் தவழ்ந்த விஷம புன்னகையை கவனிக்கும் மனநிலையில் சௌபி இல்லை.

“என்ன பதிலே காணோம்” என மீண்டும் ருத்ரன் சீண்ட, “கண்டிப்பா நடக்கும் சார்…” என முணுமுணுத்தவள் “நான் வரேன் சார்” என்றதோடு அவனது முகத்தை கூட பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

செல்லும் அவளையே புன்னகையோடு பார்த்திருந்த ருத்ரன், “என் மேல அவ்வளவு பொஸஸிவ்வா?” என மெலிதாக கேட்டு வைத்தான். எப்பொழுதோ அறையை தாண்டி சென்றவளை நிச்சயம் இந்த வார்த்தைகள் தீண்டியிருக்காது. ஆனாலும் அவன் இதழோரத்தில் அழகிய புன்னகை.

ருத்ரன் அவளிடம் பேசாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தாலும் அவனது திட்டத்தின் அடுத்த கட்டத்தை எப்பொழுதோ தொடங்கியிருந்தான். அவன் கோபம் அவளை பாதிக்கும் என்பதே அவன் எதிர்பாராத நிகழ்வு. கூடவே அவளது நேசமும், உரிமையும் சேர்த்து மனதினுள் தித்திப்பாய் ஒரு தூரலை பொழிய விட்டு சென்றது. அந்த தூரல் அவனது மகிழ்வை பல மடங்கு பெருக்கியது.

3 Likes