மொழி பொய்த்த உணர்வுகள் – 16

மொழி பொய்த்த உணர்வுகள் – 16
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 16

ருத்ரன் கூறிய வார்த்தைகளின் தாக்கத்திலிருந்து சௌபியால் வெளிவரவே இயலவில்லை. ‘அது யாரு அந்த அவ? எங்கிருந்து வந்தாளாம் புதுசா? இவருக்கு முத்தம் வேற கேக்குதாமாவா? அதுக்கு நான் வேற வேண்டிக்கணுமா? மாட்டேன், மாட்டேன்… மாட்டவே மாட்டேன். அதுக்கு நான் சாமாதானம் ஆகாமயே இருந்துக்கறேன்’ என அவளின் மனம் அவனை ஓயாது சாடிக் கொண்டேயிருக்க… இந்த களேபரத்தில் அவளுக்கு தெளிவாக புரிந்த ஒரு விஷயம், ருத்ரன் மீதிருப்பது வெறும் பிடித்தம் மட்டும் அல்ல, அது என்றும் அழியா நேசம் என்று.

நேசத்தை உணர்ந்ததும் ஏற்கனவே விலக நினைத்திருந்த முடிவை இன்னும் ஸ்திரமாக எடுத்தாள். இன்னும் சில தினங்கள் தானே என மனதை சமாதானம் செய்தாலும், அது கொண்ட வலி இரவின் இருள் மட்டுமே அறியும்.

கண்ணீர் சுமக்கும் தலையணைகள்…

மேகமாய் தவழ்ந்திருந்தால்,

இந்நேரம் பூமியில் பெருமழை பெய்திருக்கும்!!!

அந்த அளவு அழுகையில் கரைந்தாள். வலிகளை போக்க முடியாது என்பது நிச்சயம். வலிகளோடு பயணப்பட மனதை திசைதிருப்ப அவள் முயல, அதற்கு ஏதுவாய் அவள் கல்லூரியில் பிரிவு உபச்சார விழா ஏற்பாடாகியிருந்தது. தோழர் கூட்டத்தை பிரியும் தருணம்! வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் தருணம்! தித்திப்பாய் சில கண்ணீர் காவியங்கள்! நண்பர்கள் கூட்டத்தை எண்ணி மனதை திசை திரும்பினாள்.

சௌபிக்கு பேஃர் வெல் நடக்கும் தினத்தன்று தோழிகளோடு அளவளாவி விட்டு வீடு திரும்ப தாமதம் ஆகும் என்பதால் பேருந்தில் செல்லும்படி அவளது அன்னை சாந்தாமணியின் கட்டளை. ‘ஜாஸ்மின்…’ என அவளின் வாகனத்தை அவள் ஏக்கமாக பார்க்க, “தினமும் வண்டில தான போற, இன்னைக்கு சாயந்தரம் அண்ணனை உன்னை கூப்பிட வர சொல்லறேன். பூ வாங்கி வெச்சு இருக்கேன் வெச்சுட்டு கிளம்பு. பஸ் வந்துடும்” என சாந்தாமணி சற்று துரிதப்படுத்தவும் தலையில் மல்லிகை சரத்தை வைத்துவிட்டு கிளம்பினாள்.

இளம் பச்சை வண்ணத்தில் அடர் சிவப்பு வண்ண பார்டர் கொண்ட சில்க் காட்டன் புடவையில் தொங்கவிட்டு மல்லிகை சரத்துடன் பாந்தமாக கல்லூரி நிறுத்தத்தில் இறங்கியவள் அவளுடைய நட்பு பட்டாளம் வருவதற்காக ஏற்கனவே இருந்த இரண்டு தோழிகளோடு பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் வந்து சேர்ந்தனர். மற்றவர்களின் தோற்றத்தை புகழ்ந்தபடி, அனைவரோடும் சேர்ந்து கல்லூரி நோக்கி சௌபி நடக்க,

அதேநேரம் அலுவலகம் செல்வதற்காக வந்து கொண்டிருந்த ருத்ரன் அங்கிருந்த சிக்னலில் மாட்டியிருந்தான். இந்த சிக்னல் சற்று அதிக நேரம் காத்திருக்க வைக்கும் என்ற கடுப்போடு அவன் சுற்றிலும் பார்வையை ஓட்ட, நிச்சயமாக அங்கே சௌபியை எதிர்பார்க்கவேயில்லை. அதுவும் புடவையில் அவளைக் கண்டதில் அவனுக்கு இன்ப அதிர்ச்சி தான்.

சௌபியை வருடிய ருத்ரனின் விழிகள் வேலைநிறுத்தம் செய்ய, அவளை பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் விழிகள் மட்டும் தானே வேலைநிறுத்தம் செய்தது, உலகம் இல்லையே! அவள் அவனை கடந்து சென்றிருந்தாள். எட்டி எட்டி பார்த்தவனின் விழிகளில் அவள் அகப்படவேயில்லை. உயரத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது நூலறுந்த காற்றாடி போல் ஆனது அவனின் நிலை.

கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைப்பு விடுக்க… அவளுக்கான முதல் அழைப்பு அவன் எண்ணிலிருந்து. இவனிடம் மட்டும் தான் அவள் எண் இருக்கிறது. அவளிடம் இல்லை. ஆகவே அழைப்பை ஏற்றவள், “ஹலோ…” என இயல்பாய் தனது பேச்சை தொடங்கினாள்.

ருத்ரனோ எந்த முன்னுரையும், அறிமுகப்படலமும் இல்லாமல், “எங்க இருக்க?” என்றான் எடுத்ததுமே. அவனது குரலிலிருந்தே பேசுவது யாரென்று விளங்க அவளின் விழிகள் படபடத்தது. ‘இதுவரை இவன் அழைத்ததே இல்லையே! இப்பொழுது என்ன?’ என மனம் பதற கால்கள் அதன் வேலையை நிறுத்தியிருந்தது. தோழிகள் இவள் நின்று விட்டதால் திரும்பி பார்க்க, ‘ஒரு கால் பேசிட்டு வந்துடறேன்’ என்பது போல சைகை செய்தவள், எதிர்புறம் திரும்பி நடந்தாள்.

சௌபியிடம் இருந்து பதில் வராததை கண்டவன், “ஹலோ…” என சற்று அழுத்தமாக உச்சரிக்க, “நான்… நான் இன்னைக்கு காலேஜ் வந்தேன் சார், பேஃர் வெல் நடக்குது” என அவள் பதில் கூறும்போது அவன் பார்வை வட்டத்தினுள் மீண்டும் திரும்பி வந்திருந்தாள்.

அவள் சென்ற திசையையே சிறு ஏக்கத்தோடு பார்த்தபடி இருந்தவன், அவள் திரும்பி வருவாள் என நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அதில் அவன் மனம் மகிழ, “ஓ, ஒகே. உன் ப்ராஜெக்ட் முடிஞ்சுடுச்சல்ல. அதை வெரிபை பண்ணிட்டேன். அதபத்தி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ண தான்” என அழைத்ததன் காரணத்தை கூற,

“நாளைக்கு வந்துடுவேன் சார்” என மென்குரலில் பதில் தந்தாள். ‘இதற்காகவா அழைத்தான்?’ என்னும் குழப்பம் அவளுள். அதற்குள் ருத்ரன் காத்திருந்த சிக்னல் விழுந்திருக்க, இவன் சிறு ஏக்கப்பெருமூச்சுடன் காரை ஓட்டியபடியே ஏதோ சொல்ல வர, “ட்ரைவ் பண்ணறீங்களா சார்?” என ஹாரன் இரைச்சலை வைத்து கேட்டாள். அவளது குரல் சற்று கடினப்பட்டிருந்தது.

‘பாத்திருப்பாளோ!’ என அவன் யோசித்ததில் பதில் கூற மறந்திருந்தான். அவளோ பதில் வராததால் “ஹலோ…” என்றாள் சிறு அதட்டல் தொனியில்.

ருத்ரனோ வெகு நிதானமாக, “ஆமாம். ஏன்?” என கேட்டு வைக்க, சௌபிக்கு எரிச்சசலாக வந்தாலும் அதைப்பற்றி எதுவும் பேசாமல், “சரி நான் வெக்கிறேன் பை” என அவனது பதிலை எதிர்பாராமல் இணைப்பை துண்டித்தாள். என்னவோ அவனது செய்கை அதீத கோபத்தை உண்டாக்கியது.

அவள் குரலில் இருந்த பாவனையே அவளது எண்ணத்தை உணர்த்த சிறு புன்னைகையோடே காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தினான். ‘ஹே தஞ்சாவூர் பொம்மை… விட்டா திட்ட கூட செய்வ போல! தேறிட்ட…’ என செல்லமாய் வியந்தவன், அவளை மீண்டும் அழைத்தான்.

‘அச்சோ! வண்டி ஓட்டும்போது என்ன போன் வேண்டி கிடக்கு’ என சௌபி முணங்கியபடியே அழைப்பை ஏற்க, அவள் ஹலோ என சொல்லும் முன்பே, “இப்போ வண்டியை ஓரமா நிறுத்திட்டு தான் பேசறேன்” என்றான் சிரிப்பை கட்டுப்படுத்தியபடி.

அவனது கேலிச்சிரிப்பில் சுதாரித்தவளோ, ‘அச்சோ ஓவர் ரியாக்ட் பண்ணிட்டனோ!’ என நொந்தபடி, சாமாளிப்பதற்காக, “புரியலை சார்” என பாவமாக பதில் தந்தாள்.

அவனோ அதற்கும் சிரித்தபடி, “எனக்கு புரிஞ்சிடுச்சு” என விஷமமாய் கூற, சௌபி பேந்த பேந்த விழித்தாள். “எ… என்ன… புரிஞ்சுடுச்சு சார்?” என சௌபி திக்கித்திணறி கேட்டபடி, நெற்றியில் இருந்த வியர்வையை கைகுட்டையால் ஒற்றி எடுத்தாள்.

அவளது பதற்றத்தை துளியும் கண்டு கொள்ளாதவனோ, “நத்திங்” என வெகு வெகு இயல்பாய் பதில் கூற, அவளுக்கு அச்சோ என்றானது. ‘இன்னும் ரெண்டே நாள், என்னை கட்டுக்கோப்பா வெச்சுக்க கடவுளே!’ என அவசரமாக கடவுளை துணைக்கழைத்தாள்.

ருத்ரனது உரை அத்துடன் முடியவில்லை என்பதை உணர்த்தும் பொருட்டு, “நாளைக்கு என்ன பண்ணற… புடவை கட்டிட்டு ஆபிஸ் வர” என அவன் கூற, அதில் அதிர்ந்தவள், “என்னது?” என சற்று உரக்கவே கேட்டு விட்டாள். பின்னே இவன் இப்படி எல்லாம் நேரடியாக உரிமையெடுத்து கேட்டுக்கொண்டால், அவளுக்கு கை, கால்கள் எல்லாம் நடுங்கியது. வெளியில் கேட்கும் வாகன இரைச்சலைக் காட்டிலும் இதயத்தின் ஓட்டத்தில் கேட்க்கும் இரைச்சல் சற்று அதிகமாகவே அவளை மிரட்டியது.

நா வரண்டது போன்ற உணர்வில் படபடப்பு வேறு குறைவதாய் இல்லை. அவளது அதிர்ச்சியை இம்முறையும் கண்டு கொள்ளாதவன், “கட்டிட்டு வா!” என சிறு கட்டளையோடு அவளது பதிலை கூட எதிர்பாராமல் அழைப்பை துண்டித்து விட்டான்.

அதன்பிறகு அவள் கல்லூரி சென்றது, விழாவில் பங்கு கொண்டது, அவளது தோழிகளின் பிரிவுத்துயர் பேச்சு, மாலை அவளுடைய அண்ணன் வினோத்குமார் அழைக்க வந்தது என எல்லாம் இயந்திரகதியில் தான் நடந்தது. மனம் முழுவதிலும் ருத்ரனும், அவனோடானா பேச்சுக்களும், அவன் எடுத்துக்கொண்ட உரிமையுமே அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்ததால் எதிலுமே அவளால் ஒட்ட முடியவில்லை.

‘ஏன் இவ்வளவு தூரம் வளரவிட்டாய்?’ என மனம் சாட, இனி என்ன செய்வது என புரியாமல் தவித்தாள். இன்னும் இரண்டு நாட்கள் எப்படியேனும் தாக்குப்பிடிக்க வேண்டும் என ஓயாது உருப்போட்டவளுக்கு அதன் சிரமம் கண் முன்னே பூதாகரமாய் தோன்றி அச்சுறுத்தியது.

சுய அலசலில் அமைதியாக காரில் அமர்ந்து வந்து கொண்டிருந்தவள், அருகில் இருக்கும் அண்ணன் வினோத்தின் பதற்றத்தை கவனிக்க தவறி விட்டாள். அவன் இப்பொழுது ஒரு இக்கட்டில் இருக்கிறான். இதிலிருந்து மீண்டே ஆக வேண்டும் என்னும்படியான சூழல். அதன் தவிப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. இருந்தும் இவள் கண்டுகொள்ளவில்லை.

வினோத்தின் காதலி ராகிணியின் இல்லத்தில் அவளுக்கான திருமண பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டார்கள். இவ்வளவு சீக்கிரம் இதுபோல தொடங்குவார்கள் என இருவருமே நினைக்கவில்லை. ராகிணியின் அக்காவிற்கு கடந்த சில வருடங்களாய் வரன் தேடி, சமீபத்தில் தான் நல்ல வரன் வந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் கூட ஏற்பாடாகியிருந்தது. எனவே, ராகிணிக்கு இன்னும் ஓரிரு வருடங்கள் கழித்து தான் திருமண பேச்சை தொடங்குவார்கள் என இவர்கள் எண்ணியிருக்க, அவளுடைய பெற்றோர்களோ, “மூத்த பொண்ணுக்கே மூணு வருஷம் இழுத்திடுச்சு. இருபத்தியாறு வயசுல தான் கல்யாணம் அமைஞ்சிருக்கு. ரெண்டாவது பொண்ணுக்காச்சும் காலகாலத்துல செஞ்சிடணும்” என சொல்லி மூத்தவளின் திருமணம் முடிந்த கையோடு ராகிணியின் ஜாதகத்தை பதிய திட்டமிட்டிருக்கின்றனர்.

இப்பொழுது என்ன செய்ய என புரியாத நிலையில் வினோத் இருந்தான். சௌபியின் திருமணம் முடிந்த பிறகு வீட்டில் பேசலாம் என அவன் எண்ணியிருக்க, இப்படி ஆகும் என அவன் நினைக்கவேயில்லை. ராகிணி வேறு, “என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. எங்க அக்கா கல்யாணம் முடிஞ்சதும் வீட்ல வந்து பேசிடுங்க. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என தினமும் புலம்ப தொடங்கியிருந்தாள். அதில் வினோத்திற்கு இன்னமும் பயம் வந்தது. வீட்டில் எப்படி பேச்சை தொடங்க என புரியாமல் தவித்தான்.

அண்ணனையும், தங்கையையும் இப்படி தவிக்க விட்டவன் வெகு இயல்பாய் தனது வேலையில் மூழிகியிருந்தான். ஆம், சௌபியின் கவலைக்கு மட்டுமல்ல வினோத்தின் கவலைக்கும் ருத்ரன் தான் பிரதான காரணம். ஏற்கனவே சௌபியின் குடும்ப சூழலை விரல் நுனியில் வைத்திருப்பவன் என்பதால், அவன் வீட்டில் சம்மதம் பெற்றதும் மேற்கொண்டு எப்படி அணுக என ஏற்கனவே திட்டம் தீட்டியிருந்தான்.

அதன்படி அவன் திட்டத்தின் அடுத்த பகுதி தான் வினோத், ராகிணியின் திருமணம். காதலை எதிர்க்கும் பெற்றவர்கள் ஒரு பிள்ளையின் காதலை, கலப்பு திருமணத்தை ஒப்புக் கொண்டால், இன்னொரு பிள்ளையின் திருமணத்தையும் அதிக எதிர்ப்பு இல்லாமல் ஒப்புக் கொள்வார்கள் தானே! அதை கருத்தில் கொண்டே, ராகிணியின் அக்காவிற்கு நல்ல வரன் அமையும்படி ஒரு திருமண ஏஜென்சி மூலம் ஏற்பாடு செய்திருந்தான். அவர்கள் மூலமாகவே அடுத்த மகளான ராகிணியின் ஜாதகத்தையும் கேட்க வைத்திருக்க… அவ்வளவு தான் அவன் வேலை முடிந்தது.

ருத்ரன் எண்ணியதுபோலவே ரோகிணி பயம் கொள்ள, அவள் வினோத்தை படுத்த… இப்பொழுது வினோத் குழம்பி தவித்தான்.

அனைத்தும் ருத்ரன் திட்டப்படி தான் இதுவரை சென்றது. மேற்கொண்டும் செல்ல வேண்டுமே? அது அவன் கையில் மட்டும் இல்லையே!

4 Likes

akka rombha nalla poguthu ruthran kadhalukkum serthu vela seiya aarambhichutaru :heart_eyes::heart_eyes::heart_eyes::purple_heart:

1 Like

Thanks gowri…

Un anbu mazhaiyil ruthran nanaigiran… :two_hearts:

1 Like